எளிய காயகற்பம் - "ஓரிலைத் தாமரைக் கற்பம்"

Author: தோழி / Labels: , ,

நோயை தீர்ப்பதை விடவும் நோய்க்கான காரணத்தை அறிந்து அதனை தீர்ப்பதில்தான் சித்த மருத்துவம் கவனம் செலுத்துகிறது. நம் உடலை வளர்க்கத் தேவையான உணவையே மருந்தாகச் சொல்வதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. இந்த வகையில் உடலை நோய் அணுகாமல் பொலிவுடன் காத்து, மாறா இளமையுடனும், வலிவுடனும் இருக்கச் செய்ய சித்தர்கள் அருளிய பல்வேறு கூறுகளில் ஒன்றுதான் கற்ப வகைகள். 

சித்தர்கள் பல நூறு வகையான கற்ப வகைகளை நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். நம் முன்னோர்களின் இந்த அரிய  செல்வங்களின் பெருமையை உணராமல், அவற்றை போற்றிப் பாதுகாத்து மேம்படுத்த தவறிவிட்டோம்.இந்த கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் எளிமையான கற்ப வகைகளை தொகுக்கும் தொடர் முயற்சியாக இனி வரும் நாட்களில் சில கற்பவகைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த கற்ப வகைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் சரக்குகள் யாவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியவை. அலோபதி மருந்துகளோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவுதான். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழி காட்டுதலோடு இந்த கற்பவகைகளை பயன்படுத்திட வேண்டுகிறேன்.

இனி இன்றைய பதிவில் "ஓரிலைத் தாமரைக் கற்பம்" பற்றி பார்ப்போம்.இந்த தகவல் "போகர் 7000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஏமமாம் ஓரிலைத்தா மரைச்சமூலம்
இடித்துமே சூரணித்துவெருகடி நெய்யில்கொள்ளச்
சோமமாய் உடம்பில் நின்ற வேகமெல்லாம்
சிதைந்துமே விட்டுப்போம் சிறுநீரில்தானும்
காமமாய் குளிர்ந்துவிடும் கண்புகைச்சல் 
காமாலை வறட்சியொடு கடியபித்தம்
வாமமாய் போய்விடுமண் டலந்தான்கொள்ளு
மகதான ரோகம்மாறி காயசித்தியாமே

ஓரிலைத் தாமரை சமூலத்தை (சமூலம் என்பது ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை, காய், பூ, விதை என அனைத்தும் சேர்ந்தது) எடுத்து நன்கு காயவைத்து இடித்து சூரணமாகச் செய்து, சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் வெருகடி(வெருகு என்பது காட்டுப்பூனை. அதன் பாதம் பதியும் அளவு வெருகடி எனப்படும். சித்த மருத்துவத்தில் வெருகடி என்பது ஒரு அளவையாக குறிக்கப் படுகிறது.) அளவு எடுத்து நெய்யில் குழைத்து ஒருமண்டலம் தொடர்ந்து உண்ண வேண்டுமாம். 

இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து உண்டால் கொடிய நோய்கள், பித்தம், வறட்சி, காமலை, கண் புகைச்சல் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார். மேலும் நமது உடம்பில் இருக்கும் தீயவை எல்லாம் சிதைவடைந்து சிறுநீருடன் வெளியேறிவிடுமாம். அத்துடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.   

நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல குருவருள் அனைவரின் வாழ்விலும் நன்மையை கொண்டு வந்து சேர்க்க பிரார்த்திக்கிறேன்.Post a Comment

8 comments:

Unknown said...

மிக அருமையான தொடர் .......மிக்க நன்றி.... தங்களுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.....

Blogger said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு தகவல்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Unknown said...

Deepawali vaazhthukkal. Neengal Ingu irundhaal palar sandhoshappaduvargal. Anaal adu suyanalam. Vazhga Darshini

Unknown said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

Remanthi said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

Nantakumar said...

Dear friends,

Maha Skanda Shasti is here. Time to celebrate the grace and love of our lord going to shower on us for this 6 holy days.

Aum Sharavanabhava

Author said...

NERVILIA ARAGOANA - ஓரிலைத் தாமரை

Post a comment