எளிய காயகற்பம் - "கடுக்காய் கற்பம்"

Author: தோழி / Labels: , , , ,

கடுக்காய் என்பது மரவகையைச் சேர்ந்த மூலிகை. முதிர்ந்த கடுக்காய் கறுத்த பழுப்பு நிறத்தில் கெட்டியான ஓட்டுடன் நடுவில் கொட்டையுடன் கூடியதாக இருக்கும்.சித்த மருத்துவத்தின் பிரதான மருந்துகளில் கடுக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. கடுக்காயின் மகத்துவத்தை உணர தேரையரின் இந்த பாடல் உதவும்.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்
கோலை ஊன்றி குறுகி நடப்பவன்
கோலை வீசி குலுக்கி நடப்பனே! 

- தேரையர்.

கடுக்காய் பல்வேறு விதங்களில் மருந்தாக பயன்படுகிறது. கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டைப் பகுதி நஞ்சாக கருதப் படுவதால் அதனை நீக்கி ஓடு மற்றும் சதைப் பகுதி மருந்துக்கு பயன்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க கடுக்காயை கற்பமாய் செய்யும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அதனை இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆச்சென்று கடுக்காய்தான் வருஷமொன்று
அப்பனே அதின்முறையை சொல்லக் கேளு
வாச்சென்று கடுக்காயைத் தகர்த்துக் கொண்டு
வளமாக அமுரியிலே ஊறப் போட்டு
காச்சென்று மறுநாள்தான் காயப் போட்டு
கணக்காகப் பத்துமுறை சுத்தி செய்யே
சுத்திசெய்த கடுக்காய் தான் செங்கடுக்காயாச்சு
சுகமான கடுக்காய்தான் முறையைக் கேளு

பத்தியுடன் இடித்து வடிக்கட்டி மைந்தா
பாங்கான கரகமதில் பதனம் செய்து
கொள்ளடா காலையிலே வல்லாரை கொள்ளு
கொண்டபின் மதியமதில் அமுது கொள்ளு
நேசமுடன் அமுதுகொள்ளு சிறு பயறு கொள்ளு
நேர்மையுள்ள சர்க்கரையும் பழமுங் கொள்ளு

வாசமுள்ள பதார்த்தமெல்லா மகிழ்ந்து கொள்ளு
துள்ளடா கடுக்காயை மாலைதன்னில்
தூளில் வெருகடி யளவாய்த் துணிந்து கொள்ளு
மகத்தான கடுக்காய்தான் வலுவாய்ப் பாரு
பாசமுடன்நா முரைத்த படியே கொண்டால்
பலிக்குமடா காயசித்தி யோகந்தானே.

கடுக்காயை துண்டுதுண்டாக நறுக்கி அமுரியில் ஒரு நாள் ஊறவைத்து எடுத்து, மறுநாள் காயவைத்து எடுக்க வேண்டுமாம். இப்படி இந்த செயலை பத்து தடவை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். ஆக, ஒரு நாள் ஊற வைத்து மறு நாள் காய வைக்கும் செயலை தொடர்ந்து பத்து முறை  செய்யும் போது கடுக்காய் சுத்தியாகி "செங்கடுக்காய்" ஆகுமென்கிறார்.இந்த செங்கடுக்காயை நன்கு இடித்து சலித்து சேகரித்துக் கொள்ள வேண்டும்.

காலை வேளையில் வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு. பகலில் சோற்றுடன் சிறுபயறுசேர்த்து உண்ண வேண்டுமாம். பின்னர் மாலை வேளையில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கடுக்காய் தூளில் வெருகடி அளவு உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து ஒருவருடம் உண்டால் காயசித்தி கைகூடும் என்கிறார். 

இந்த கற்பத்தினை உண்ணும் ஒரு வருட காலம் வல்லாரை, சோறு, சிறுபயறு, சர்க்கரை, பழங்கள், வாசனை உள்ள பொருட்கள் போன்றவைகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.

குறிப்பு : அமுரி என்பது நமது சிறுநீர்தான். சில பிரத்யேக உடல் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை குறிப்பிட்ட காலம் கடுமையாய் கடைபிடித்து உடலை பழக்கிய பின்னர், வெளியேறும் சிறுநீரே அமுரி எனப்படுகிறது. இதனை சுத்தி செய்து மருந்தாக பயன்படுத்துகின்றனர். அமுரியை சித்த மருத்துவத்தில் சிவநீர் என்றும் சொல்லுவர். இதன் சிறப்பை திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

- திருமூலர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்பிற்கு நன்றி...

Shivam said...

Very useful. I need to try.

nantu2411 said...

சூரணம் என்பதன் அர்த்தம் என்ன தோழி?
எ.கா: வல்லாரை சூரணம்?

Nithilan said...

can u please give the link for அமுரி page.. i really wanna knw abt அமுரி..

Post a comment