எளிய காயகற்பம் - கையாந்தகரைக் கற்பம்

Author: தோழி / Labels: , ,

கையாந்தகரை,  கையான், கரிசாலை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படும் இந்த மூலிகைக்கு கரிசலாங்கண்ணி என்ற பெயரே பலருக்கும் பரிச்சயமான பெயர். இந்த மூலிகை எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்று. இன்றும் கூட நகரம் தாண்டிய ஊர் புறங்களில் அன்றாட சமையலில் இந்த மூலிகை இடம் பெறுகிறது.

எளிய வகை கற்பங்களின் வரிசையின் இன்று கருவூரார் அருளிய கையாந்தகரைக் கற்பம் பற்றி பார்ப்போம்.  இந்த தகவல் "கருவூரார் வாதகாவியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...

சொல்லுவே னின்னமோர் கற்பமப்பா
சுகமாங்கை யாந்தகரைச் சமூலம் வாங்கிச்
சொல்லுவேன் ஞாயிறுடன் பூசங்கூடில்
சுகமான நாள்தனிலே யுலர்த்திக் கொண்டு
சொல்லுவேன் சூரணஞ்செய் வெருகடிதான்
தோன்றிடவே காடியிலே குழைத்துத் தின்பாய்
சொல்லுவேன் பத்தியங்கேள் கத்திரிக்காய்
சூழ்பாகற் காய்கடுகு ஆகாதென்னே.

ஆகாது மற்றதெல்லா மாகுமப்பா
அப்படியே ஒருமாதங் கற்பங் கொண்டால்
வேகமுடன் சகலவியா திகளுந்தீரும்
விருப்பமுடன் மாசம்ரெண்டு சாப்பிட்டாக்கால்
தாகமுடன் பதினெட்டுக் குட்டந் தீரும்
சரிமூன்று மறுமூன்றுந் தாங்கொண்டாக்கால்
பாகமுடன் வியாதிக ளெல்லாந் தீர்ந்து
பண்ணோடே சங்கீதம் பாடுவானே.

பாடுவான் பதினெண்பா ஷையிலும் நன்றாய்ப்
பண்பான சுரக்கியானம் பாடுவார்காண்
தேடுகின்ற மலைசெடிகள் தங்கிவாழ்வான்
சிறப்பாகத் தான்பத்து மாதங்கொண்டால்
கோடுபெற்ற முந்நூறு வயதிருப்பான்
குமரனாய்ப் பதினாறு வயதுபோல
நீடுபெற ஒருவருடங் கொண்டா யானால்
நிசமாய் ஆயிரவருடம் நிற்பாய் நேரே.

பூச நட்சத்திரம் வரக்கூடிய ஒரு ஞாயிற்க்குக் கிழமை நாளில் கையாந்தகரை சமூலம் எடுத்து, அதனை அன்றைய தினமே காயவைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சூரணமாக செய்து சேமித்துக் கொள்ளவும். தினமும் இந்த சூரணத்தில் வெருகடி அளவு எடுத்து காடியில் குழைத்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு மாதம் உண்ண வேண்டும் என்கிறார்.

இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து உண்டால் சகல வியாதிகளும் தீருமாம்.  இரண்டு மாதம் தொடர்ந்து உண்டு வந்தால் பதினெட்டு குட்டமும் தீருமாம். மூன்று மாதம் உண்டால் வியாதிகள் எல்லாம் தீர்த்து பண்ணுடன் இசை பாடும் திறனும் சித்திக்குமாம் அத்துடன் பதினெண் மொழிகளில் பாடும் சித்தியும் உண்டாகுமாம். பத்துமாத காலம் தொடர்ந்து உண்டால் பதினாறு வயது குமரன் போல் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார். இந்த கறபத்தை ஒரு வருடம் தொடர்ந்து உட் கொண்டால் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழலாம் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே....

இந்த கற்பம் உண்ணும் காலங்களில் கத்தரிக்காய் பாகற்காய் கடுகு ஆகியவைகளை விலக்கிவிட வேண்டுமாம்.

குறிப்பு : காடி என்பது புளித்த நீர். சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது. வெருகடி என்பது ஐந்து விரல்களையும் குவித்து எடுக்கும் பிடி அளவு ஆகும்.  கரிசலாங்கண்ணி மூலிகை பற்றிய விரிவான தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

9 comments:

R.T.அமுதன் said...

தோழி புளித்த நீர் என்றால் அரிசி கழுவிய நீரா அல்லது வேறு நீரா தயவு செய்து தெளிவுபடுத்தவும். நான் இதை போகர் ஆசியுடன் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன் ....

La Venkat said...

அன்புள்ள தோழி,
"மிளகு கர்ப்பம் புதியது" பற்றி
நாட்டு மருந்து கடையில் இருந்து வெள்ளை மிளகை வாங்கி வந்து சுத்தமான தேனில் போட்டு மூடி விட்டேன். இத்தனை நாள் முயற்சித்த்து பார்த்து விட்டேன். ஆனால் மிளகு தேனை உரியவில்லை. என்ன செய்வது. ஏதோ பிழை உள்ளது. ஆனால் தெரியவில்லை.
நேரம் இருந்தால் உதவவும்.
தோழன்,
வெங்கட்

La Venkat said...

அன்புள்ள தோழி மற்றும் அனைவர்க்கும்,
தோழி எழுதிய "வேம்பு கர்ப்பம்" http://www.siththarkal.com/2012/01/blog-post.html பகுதியில் குறிப்பிட்ட கார்த்திகை மாதம் மிருகசீரிடம் (30.11.2012 நாளை) மற்றும் பூசம் (03.12.2012). விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்து பார்த்து அனுபவத்தை பகிரலாம். தேதிகள் சரியா என தோழி / தெரிந்தவர்கள் பார்த்து கூறவும்.
தோழன்,
வெங்கட்

raja said...

தோழி,

1. எனக்கும் இதே சந்தேகம்தான்!!! (R.T.அமுதன் அவர்களின் சந்தேகம்)

2. இருவகைகளில்...மஞ்சளா!!! அல்லது வெள்ளையா.....

தோழி said...

@R.T.அமுதன்

காடி என்றால் புளித்த நீர். இதனை பல வழிகளில் தயாரிக்கலாம். எனினும் சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் அரிசியில் இருந்து தயாரிக்கப் படும் காடி நீரே பயன்படுத்தப்படுகிறது.

R.T.அமுதன் said...

நன்றி தோழி

தோழி said...

@raja

எந்த வகையான கரிசாலையை பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் பாடலில் இல்லை. எனவே இது தொடர்பில் தேர்ந்த சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை பெறுவதே சரியானது.

raja said...

நன்றி தோழி...........

Antonybaskar said...

Nalla thoru thagaval. Nandri

Post a comment