எளிய காயகற்பம் - சிவனார் வேம்பு கற்பம்

Author: தோழி / Labels: , ,

சிவனார் வேம்பு என்பதை பலரும் வேப்ப மரத்தின் வேறோர் பெயராகவே நினைத்திருக்கின்றனர். சிவனார் வேம்புக்கும் வேப்ப மரத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறு வகையான தாவர குடும்பத்தினை சேர்ந்தது. இதன் உயிரியல் பெயர் Indigofera aspalathoides என்பதாகும். சித்த மருத்துவத்தில் இதனை சிவனார் வேம்பு, இறைவன் வேம்பு என அழைப்பர். மிகவும் மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் எளிய கற்ப வகை ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் அமுத கலைஞானம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

காணப்பா யின்னுமொரு கற்பங் கேளு
கறுப்பான சிவனார்தன் வேம்பினோடு
தோணப்பா வாலுளவை சமனாய்க் கூட்டி
சுவறயிடித்துப் பூப்புடத்தில் தயிலம்வாங்கி
வீணப்பா சீரகமுஞ் சர்க்கரையுங் கூட்டி
மீறாம லேகலந்து காற்களஞ்சி கொள்ளு
ஆணப்பா யிருவேளை மண்டலந்தான் கொள்ள
அய்யமுடன் வாதபித்த மகன்று போமே.

போகாத குட்டமொடு சுரப்பு தேமல்
புகழான கடிவிஷங்கள் பதினெட்டு வண்டு
யேகாத யெலிகடி திமிர்வாத சூலை
யெழும்பாத பாம்புகடி யெல்லாம் போகும்
ஆகாத மேனியுள்ளே யழுக நாற்றம்
அடங்கிப் போய்த் திரையற்று அமுர்த தேகம்
வாகான சிரங்குகுட்டம் தீர்ந்து சென்னி
வச்சிரம்போ லிருக்குமடா தேகந்தானே.

சிவனார் வேம்புடன், வாலுளுவையை சமனாக சேர்த்து நன்கு இடித்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை பூப்புடம் இட்டு தைலம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தைலத்திற்கு சமனாக சீரகமும், சர்க்கரையும் சேர்த்து காற் கழஞ்சி அளவு அருந்த வேண்டுமாம். 

இவ்வறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தினால் வாதமும் பித்தமும் நீங்குவதுடன், தீராத குட்டம் , சுரப்பு, தேமல், கடிவிஷங்கள் பதினெட்டும், எலிக்கடி, திமிர்வாத சூலை, தீராத பாம்புக் கடி, சிரங்கு , சென்னி அனைத்தும் நீங்குவதுடன் உடலில் இருக்கும் நாற்றம் எல்லாம் நீங்கி நரை திரை அற்று உடல் வச்சிரம் போல் ஆகும் என்கிறார் அகத்தியர்

இத்துடன் எளியவகை காயகற்ப வகைகள் பற்றிய தொடர் தற்காலிகமாய் நிறைவுற்றது. பிரிதொரு தருணத்தில் சித்தர் பெருமக்கள் அருளிய மற்றபிற காயகற்ப வகைகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

குறிப்பு: வாலுளுவை என்பது ஒரு மூலிகைச் செடி. இதனை ஜ்யோதிஷ்மதி என்றும் அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் Celastrus paniculatus

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


எளிய காயகற்பம் - கையாந்தகரைக் கற்பம்

Author: தோழி / Labels: , ,

கையாந்தகரை,  கையான், கரிசாலை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படும் இந்த மூலிகைக்கு கரிசலாங்கண்ணி என்ற பெயரே பலருக்கும் பரிச்சயமான பெயர். இந்த மூலிகை எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்று. இன்றும் கூட நகரம் தாண்டிய ஊர் புறங்களில் அன்றாட சமையலில் இந்த மூலிகை இடம் பெறுகிறது.

எளிய வகை கற்பங்களின் வரிசையின் இன்று கருவூரார் அருளிய கையாந்தகரைக் கற்பம் பற்றி பார்ப்போம்.  இந்த தகவல் "கருவூரார் வாதகாவியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...

சொல்லுவே னின்னமோர் கற்பமப்பா
சுகமாங்கை யாந்தகரைச் சமூலம் வாங்கிச்
சொல்லுவேன் ஞாயிறுடன் பூசங்கூடில்
சுகமான நாள்தனிலே யுலர்த்திக் கொண்டு
சொல்லுவேன் சூரணஞ்செய் வெருகடிதான்
தோன்றிடவே காடியிலே குழைத்துத் தின்பாய்
சொல்லுவேன் பத்தியங்கேள் கத்திரிக்காய்
சூழ்பாகற் காய்கடுகு ஆகாதென்னே.

ஆகாது மற்றதெல்லா மாகுமப்பா
அப்படியே ஒருமாதங் கற்பங் கொண்டால்
வேகமுடன் சகலவியா திகளுந்தீரும்
விருப்பமுடன் மாசம்ரெண்டு சாப்பிட்டாக்கால்
தாகமுடன் பதினெட்டுக் குட்டந் தீரும்
சரிமூன்று மறுமூன்றுந் தாங்கொண்டாக்கால்
பாகமுடன் வியாதிக ளெல்லாந் தீர்ந்து
பண்ணோடே சங்கீதம் பாடுவானே.

பாடுவான் பதினெண்பா ஷையிலும் நன்றாய்ப்
பண்பான சுரக்கியானம் பாடுவார்காண்
தேடுகின்ற மலைசெடிகள் தங்கிவாழ்வான்
சிறப்பாகத் தான்பத்து மாதங்கொண்டால்
கோடுபெற்ற முந்நூறு வயதிருப்பான்
குமரனாய்ப் பதினாறு வயதுபோல
நீடுபெற ஒருவருடங் கொண்டா யானால்
நிசமாய் ஆயிரவருடம் நிற்பாய் நேரே.

பூச நட்சத்திரம் வரக்கூடிய ஒரு ஞாயிற்க்குக் கிழமை நாளில் கையாந்தகரை சமூலம் எடுத்து, அதனை அன்றைய தினமே காயவைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சூரணமாக செய்து சேமித்துக் கொள்ளவும். தினமும் இந்த சூரணத்தில் வெருகடி அளவு எடுத்து காடியில் குழைத்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு மாதம் உண்ண வேண்டும் என்கிறார்.

இவ்வாறு ஒரு மாதம் தொடர்ந்து உண்டால் சகல வியாதிகளும் தீருமாம்.  இரண்டு மாதம் தொடர்ந்து உண்டு வந்தால் பதினெட்டு குட்டமும் தீருமாம். மூன்று மாதம் உண்டால் வியாதிகள் எல்லாம் தீர்த்து பண்ணுடன் இசை பாடும் திறனும் சித்திக்குமாம் அத்துடன் பதினெண் மொழிகளில் பாடும் சித்தியும் உண்டாகுமாம். பத்துமாத காலம் தொடர்ந்து உண்டால் பதினாறு வயது குமரன் போல் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார். இந்த கறபத்தை ஒரு வருடம் தொடர்ந்து உட் கொண்டால் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழலாம் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே....

இந்த கற்பம் உண்ணும் காலங்களில் கத்தரிக்காய் பாகற்காய் கடுகு ஆகியவைகளை விலக்கிவிட வேண்டுமாம்.

குறிப்பு : காடி என்பது புளித்த நீர். சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது. வெருகடி என்பது ஐந்து விரல்களையும் குவித்து எடுக்கும் பிடி அளவு ஆகும்.  கரிசலாங்கண்ணி மூலிகை பற்றிய விரிவான தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


நூற்றாண்டு வேம்பின் கற்பம்

Author: தோழி / Labels: , ,

எளிய வகை கற்பங்களின் வரிசையில், இன்று சட்டை முனி சித்தர் அருளிய கற்பவகை ஒன்றினை பார்ப்போம். நூற்றாண்டு கண்ட அல்லது கடந்த வேப்ப மரத்தின் பட்டையைக் கொண்டு செய்யும் இந்த கற்பம் "நூற்றாண்டு வேம்பு கற்பம்" எனப் படுகிறது. இந்தத் தகவல் சட்டை முனி சித்தர் அருளிய "சட்டைமுனி கற்பவிதி" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

ஆமப்பா யிதுகடந்து நூற்றாண்டின் வேம்பை
அப்பனே பட்டையைத்தான் வெட்டிவந்து
ஓமப்பா மேற்பரணை சீவிப்போட்டு
ஊத்தமனே நிழலுலர்த்தி யுலர்ந்தபின்பு
தாமப்பா விடித்துநன்றாய்ச் சூரணமே செய்து
சூதகமாய்க் கருங்குன்றிச் சாறுவார்த்து
தேமப்பா யேழுதிரம் பாவனை செய்து
திறமாக நிழலுலர்த்தா யுலர்த்திடாயே.

உலர்ந்த பின்பு யெட்டிலொன்று கற்கண்டுகூட்டி
உத்தமனே யிருகழஞ்சி யிருநேரங் கொள்ளு
மலர்ந்துநின் றலையாமல் மண்டலந்தான் கொள்ளு
மைந்தனே வயிரம்போ லிருகுந் தேகங்
கலந்துநின்ற நாடியெல்லா மிருகுமேறி
கண்துலக்க முண்டாகி அழுந்துந் தேகம்
நலந்திகழும் நரைதிரைகள் பிலமுங்கெட்டு
நமனுக்கு நமனாவான் நன்றாய்ப்பாரே.

நூறுவயதினைக் கடந்த வேப்பமரத்தின் பட்டையினை வெட்டி எடுத்து, அதன் மேற் பரணை சீவி நீக்கி விட்டு, சதைப்பகுதியை நிழலில் நன்கு  உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சூரணமாக செய்து அதற்கு சம அளவில் கருங்குன்றிச் சாறு விட்டு வெய்யிலில் உலர்த்தி, மீண்டும் கருங்குன்றிச் சாறு விட்டு வெய்யிலில் உலர்த்த வேண்டும் இவ்வாறு ஏழு தடவைகள் செய்து சேமித்துக் கொள்ள வேண்டும். அந்த சூரணத்தில் இரு கழஞ்சி அளவு எடுத்து அதில் எட்டில் ஒரு பங்கு கற்கண்டு சேர்த்து அந்தி சந்தி என இரு வேளையாக ஒரு மண்டலம் உண்ன வேண்டுமாம்.

இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர தேகம் வைரம் போல் இறுவதுடன், எல்லா நாடிகளும் இறுகி, கண் பார்வை அதிகரித்து, நரை திரை நீங்கும் என்று சொல்கிறார். மேலும் இந்த கற்பத்தை உண்டவர்கள் எமனுக்கும் எமனாக இருக்கக்கூடியவர்கள் என்கிறார் சட்டைமுனி சித்தர்.

குறிப்பு: ஒரு மண்டலம் - 48 நாட்கள். ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும். அந்தி சந்தி என்பது சூரியன் உதயமாகும் மற்றும் மறையும் நேரத்தை குறிப்பதாகும். பகலும் இரவும் சந்திக்கும் பொழுதினையே அந்தி, சந்தி என குறிப்பிடுவர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


எளிய காயகற்பம் - நெல்லிமுள்ளி கற்பம்

Author: தோழி / Labels: , ,

பொதுவில் காயகற்பங்களைக் குறித்து மிகையான புரிதல்கள் நம்மிடையே இருக்கிறது. நாம் வாழும் நாட்களில் உடல் நலிவின்றி பொலிவோடும், வலுவோடும் வாழத் துனை புரிபவை என்கிற அளவில் மட்டுமே கற்பங்களை அணுகிட வேண்டும். இன்றைய நவீன மருத்துவம் உடல் ஆரோக்கியத்திற்காக முன் வைக்கும் சத்து மாத்திரைகளைப் போன்றவையே கற்பங்கள்.

நமது உடலில் உள்ள குறைபாடு அல்லது தேவைக்கு ஏற்ப இந்த கற்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உட்கொண்டால் அதுவே நஞ்சாகவும் மாறிவிடும் ஆபத்திருக்கிறது.  இந்த தொடரின் நோக்கம் நமது முன்னோர்கள் இத்தகைய அரிய பல தகவல்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை பகிர்வது மட்டுமே. எனவே இவற்றை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவர் தரும் பரிந்துரைக்கேற்ப எடுத்துக் கொள்வது அவசியம்.

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. "திரிபலா" என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று.  கருநெல்லி, அருநெல்லி என இரு வகை நெல்லிக்காய் உண்டு. இவை வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்காது என்பதால் இவற்றை காய வைத்து வற்றலாக பயன் படுத்துவர். இதனையே "நெல்லிமுள்ளி" என்பர். 

எளிய வகை கற்பங்களின் வரிசையில் இன்று நெல்லிமுள்ளி கற்பம் பற்றிய போகரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த தகவல்கள் போகர்  "போகர் 7000" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

வயிரமாம் நெல்லிமுள்ளி தன்னைவாங்கி
மருவநன்றாய் இடித்துச் சூரணமேஆக்கி
அயிரமாம் அபிரகச் செந்தூரந்தான் 
அதற்கெட்டுப் பங்குக்கோர் பங்குசேர்த்துச்
துயிரமாந் தேந்தனில் குழைத்தேஉண்ணு
சுகமான மண்டலந்தான் உண்டாயானால் 
கயிரமாங் காயமது கருய்ங்காலிக்கட்டைக்
கனல்போலச் சோதியாய்க் காணும்காணே

நன்கு காய்ந்த நெல்லிமுள்ளியை நன்கு இடித்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அச்சூரணத்திற்கு எட்டில் ஒருபங்கு அபிரகச் செந்தூரத்தை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேனைக் குழைத்து பாக்களவு தினமும் உண்ண வேண்டுமாம். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டு வந்தால் உடலானது கருங்காலிக் கட்டையை எரித்தால் வரும் தணல் போல் சோதியாகும் என்கிறார். மேலும் காய சித்தியும் உண்டாகும் என்கிறார்.

குறிப்பு : அபிரக செந்தூரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..எளிய காயகற்பம் - அதிமதுர அமுரி கற்பம்

Author: தோழி / Labels: ,

அதி மதுரம், தற்போது நம்மில் பலரும் மறந்துவிட்ட மூலிகை. இனிமையான சுவையும், குளிர்வு தன்மையும் கொண்ட இந்த மூலிகை, ஒரு செடி வகைத் தாவரம். இதன் தண்டு மற்றும் வேர்கள் மருந்தாக பயன்படுகிறது. இதற்கு அதிங்கம், இரட்டிப்பு மதுரம், அஷ்டி, மதூகம் என வேறு பல பெயர்களும் உண்டு.

எளிதில் கிடைக்கக் கூடியதும், விலை மலிவானதுமான இந்த அதிமதுரத்தைக் கொண்டு கற்பம் ஒன்றினை செய்யும் முறையினை புலஸ்தியர் அருளியிருக்கிறார். இந்த தகவல்கள் "புலஸ்தியர் கற்பம் 300" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

அனல்கொண் டதுதான் அகலவுமே
அதிமது ரத்தோடு வேர்க்கொம்பும் 
கனவோ டிடவு மிளகையுமே
கருதி விடுசரி சமன்கூட்டிப்
புனல்சூழ்ந் திடவே வறுத்திடித்துப்
பொடியாச் சூரணம் புகல்வீராய்
இனமா யமுரி பின்னீரில் 
எடுத்து காற்கழஞ் சிடுவீரே

இடுவா யமுரி தனிலுண்ண
இருவினையாலெய் திடும்நோய்கள்
நடுவனை யாலன் னசித்தோடும் 
நமனுங் கருகி நடுங்கிடுவான்
படும்பா டதிசய விதமறியாப்
பகர்வாய் பாணஞ் சரமாறி
விடுவாய் மதிரச பாணமதால் 
விதியை வெல்லுமிவ் வஸ்திரமே

அதிமதுரம், வேர்க்கொம்பு என்று அழைக்கப்படும் சுக்கு, மிளகு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அவற்றை நன்கு வறுத்து இடித்து சூரணமாக செய்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த சூரணத்தில் காற்கழஞ்சு எடுத்து அமுரியில் குழைத்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டுமாம். 

இப்படி ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டால் இரு வினைகளால் ஏற்படும் நோய்கள் நீங்குவதுடன், எமனும் நெருங்க நடுங்குவான் என்கிறார். இந்த காயகற்பமானது விதியை வெல்லும் அஸ்திரம் என்றும் புலஸ்தியர் சொல்கிறார்.

குறிப்பு : அமுரி பற்றிய விவரங்களை முந்தைய பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.

உடல்நலக் குறைவினால் கடந்த வாரம் பதிவுகளை வலையேற்ற இயலவில்லை.  குருவருளினால் இப்போது சுகம். மின்னஞ்சல் மற்றும் முகநூல் குழுமங்களின் ஊடே நலம் விசாரித்த அத்தனை நட்புகளுக்கும் நன்றி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


எளிய காயகற்பம் - "விடத்தலைக் கற்பம்"

Author: தோழி / Labels: ,

எளிய கற்ப வகைகளை தொகுத்துப் பகிரும் முயற்சியில் இன்று விடத்தலை கற்பம் பற்றி பார்ப்போம்.விடத்தலை என்பது மரவகையைச் சேர்ந்த மூலிகை.இதனை சனியின் அம்சமாகவும் குறிப்பிடுவர். விடத்தலை மரத்தின் பட்டையை வைத்து கற்பம் செய்திடும் முறை ஒன்று யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்தியசிந்தாமணி" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

வாருகேள் விடத்தலையின் பட்டைவாங்கி
மகிழ்வாகக் காயவைத்துப் பலமும்நாலு
தேருகேள் வன்னியத்தின் பதங்கந்தன்னைச்
செயமாக யிடைசமமாய்ச் சேர்த்துமல்லிச்
சாறுவிட்டுக் கடிகையைந்து அரைத்துக்காய்ந்து
சமமாகக் கருந்தேன்வார்த் துண்டை செய்து
பேருகேள் சிமிழ்வைத்துக் காலைமாலை
பேணியிதை யுண்டுவரப் பெருமைகேளே.

உண்டிடவே மண்டலந்தா னந்திசந்தி
உறுதிபெறச் சடைறுகித் தங்கம்போலாம்
கண்டவுடன் விந்திருகி மணிபோலாகும்
கடல்புக்கும் பித்தமறும் கபத்தைப்போக்கும்
பண்டுபோல் நீயிருக்கக் கற்பமாகும்
பத்திவரு முத்திதரும் பலிக்குஞ்சித்தி
கொண்டுவா அண்டரென மதிப்பாருன்னைக்
கொடியவினை களைப்போக்குங் கூறினோமே.

விடத்தலையின் பட்டையை நன்றாகக் காய வைத்து, அதில் நான்கு பலம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இதனுடன் சம அளவாக லிங்கப்பதங்கம் சேர்த்து மல்லிச்சாறு விட்டு ஒரு கடிகை நேரம் அரைத்த பின்னர் அதனை காய வைத்து அதனுடன் கருந்தேன் (கொம்புத்தேன்) சேர்த்து உண்டைகளாக செய்து சிமிழில் அடைத்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் அதனை அந்தி சந்தி என இரு வேளையும் ஒவ்வொரு உண்டை வீதம் ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டுமாம். இப்படி உண்டு வர உடல் இறுகித் தங்கம் போல் ஆகுமென்கிறார். விந்து இறுகிமணி போல ஆகுமாம் அத்துடன் பித்தம், கபம் ஆகியவை நீங்கிவிடுமாம். கொடிய வினைகள் நீங்கி பக்தியும் முக்தியும் கைவரப் பெறுவதுடன் காயசித்தியும் உண்டாகும் என்கிறார்.

குறிப்பு : ஒரு பலம் என்பது சற்றேறக் குறைய 35 கிராம். ஒரு கடிகை என்பது 24 நிமிடம். மேலே சொன்ன மூலிகை சரக்குகள், நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


எளிய காயகற்பம் - "கடுக்காய் கற்பம்"

Author: தோழி / Labels: , , , ,

கடுக்காய் என்பது மரவகையைச் சேர்ந்த மூலிகை. முதிர்ந்த கடுக்காய் கறுத்த பழுப்பு நிறத்தில் கெட்டியான ஓட்டுடன் நடுவில் கொட்டையுடன் கூடியதாக இருக்கும்.சித்த மருத்துவத்தின் பிரதான மருந்துகளில் கடுக்காய் முக்கிய இடம் வகிக்கிறது. கடுக்காயின் மகத்துவத்தை உணர தேரையரின் இந்த பாடல் உதவும்.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்
கோலை ஊன்றி குறுகி நடப்பவன்
கோலை வீசி குலுக்கி நடப்பனே! 

- தேரையர்.

கடுக்காய் பல்வேறு விதங்களில் மருந்தாக பயன்படுகிறது. கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டைப் பகுதி நஞ்சாக கருதப் படுவதால் அதனை நீக்கி ஓடு மற்றும் சதைப் பகுதி மருந்துக்கு பயன்படுகிறது. இத்தனை சிறப்பு மிக்க கடுக்காயை கற்பமாய் செய்யும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அதனை இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆச்சென்று கடுக்காய்தான் வருஷமொன்று
அப்பனே அதின்முறையை சொல்லக் கேளு
வாச்சென்று கடுக்காயைத் தகர்த்துக் கொண்டு
வளமாக அமுரியிலே ஊறப் போட்டு
காச்சென்று மறுநாள்தான் காயப் போட்டு
கணக்காகப் பத்துமுறை சுத்தி செய்யே
சுத்திசெய்த கடுக்காய் தான் செங்கடுக்காயாச்சு
சுகமான கடுக்காய்தான் முறையைக் கேளு

பத்தியுடன் இடித்து வடிக்கட்டி மைந்தா
பாங்கான கரகமதில் பதனம் செய்து
கொள்ளடா காலையிலே வல்லாரை கொள்ளு
கொண்டபின் மதியமதில் அமுது கொள்ளு
நேசமுடன் அமுதுகொள்ளு சிறு பயறு கொள்ளு
நேர்மையுள்ள சர்க்கரையும் பழமுங் கொள்ளு

வாசமுள்ள பதார்த்தமெல்லா மகிழ்ந்து கொள்ளு
துள்ளடா கடுக்காயை மாலைதன்னில்
தூளில் வெருகடி யளவாய்த் துணிந்து கொள்ளு
மகத்தான கடுக்காய்தான் வலுவாய்ப் பாரு
பாசமுடன்நா முரைத்த படியே கொண்டால்
பலிக்குமடா காயசித்தி யோகந்தானே.

கடுக்காயை துண்டுதுண்டாக நறுக்கி அமுரியில் ஒரு நாள் ஊறவைத்து எடுத்து, மறுநாள் காயவைத்து எடுக்க வேண்டுமாம். இப்படி இந்த செயலை பத்து தடவை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். ஆக, ஒரு நாள் ஊற வைத்து மறு நாள் காய வைக்கும் செயலை தொடர்ந்து பத்து முறை  செய்யும் போது கடுக்காய் சுத்தியாகி "செங்கடுக்காய்" ஆகுமென்கிறார்.இந்த செங்கடுக்காயை நன்கு இடித்து சலித்து சேகரித்துக் கொள்ள வேண்டும்.

காலை வேளையில் வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டு. பகலில் சோற்றுடன் சிறுபயறுசேர்த்து உண்ண வேண்டுமாம். பின்னர் மாலை வேளையில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கடுக்காய் தூளில் வெருகடி அளவு உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து ஒருவருடம் உண்டால் காயசித்தி கைகூடும் என்கிறார். 

இந்த கற்பத்தினை உண்ணும் ஒரு வருட காலம் வல்லாரை, சோறு, சிறுபயறு, சர்க்கரை, பழங்கள், வாசனை உள்ள பொருட்கள் போன்றவைகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.

குறிப்பு : அமுரி என்பது நமது சிறுநீர்தான். சில பிரத்யேக உடல் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை குறிப்பிட்ட காலம் கடுமையாய் கடைபிடித்து உடலை பழக்கிய பின்னர், வெளியேறும் சிறுநீரே அமுரி எனப்படுகிறது. இதனை சுத்தி செய்து மருந்தாக பயன்படுத்துகின்றனர். அமுரியை சித்த மருத்துவத்தில் சிவநீர் என்றும் சொல்லுவர். இதன் சிறப்பை திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

- திருமூலர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


எளிய காயகற்பம் - "அமுர்தசஞ்சீவி கற்பம்"

Author: தோழி / Labels: , ,

எளிய வகை காயகற்பங்களின் வரிசையில் இன்று சட்டை முனி சித்தர் அருளிய கற்பவகை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள்  "சட்டைமுனி கற்பவிதி" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இந்த காயகற்பத்திற்கு சீந்தில் கற்பம் என்றொரு பெயரும் உண்டு. சீந்தில் என்பது கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதற்கு அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி என வேறு பெயர்களும் உண்டு. இவற்றில் சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என மூன்று வகைகள் உள்ளது. இந்த காய கற்பத்திற்கு பொற்சீந்தில் சிறப்பானது.

சொல்லுகிறேன் பொற்சீந்தி யானால் நன்று
துலங்காது கிடைக்காவிட்டால் நல்லசீந்தி
அல்லலுற்நேறார் மேற்றோலை யுரித்துப் போடு
யுடித்தண்டாய்க் கொண்டுவந்து கிழித்துப்போட்டு
நல்லுறவே யுலர்ந்தபின்பு இடித்துத்தூளாய்
நலமாக நாலிலொன்று சர்க்கரையுங் கூட்டி
ஒல்லுறவே தினந்தோறுங் கழஞ்சிகொள்ளு
ஓராத மண்டலமு முண்டுதேறே.

சேரப்பா சுரதோச மெல்லாமாம் போகுஞ்
செமறிய மேகமென்ற தெல்லாம் போகும்
வாறப்பா கபாலத்தில் வெடம்டை போகும்
வற்றி நின்ற தாதுவெல்லா மருவியூரும்
வேறப்பா அஸ்திசுரம் வெட்டை போகும் 
மெய்நிறைந்த நாடியெல்லா மமுர்தமாகும்
பேரப்பா சீந்திச்சார் வேறே யில்லைப்
பேரே அமுர்தசஞ் சீவிகற் பமாமே.

பொற்சீந்தில் கொடி கிடைத்தால் மிகவும் சிறப்பானது. எனினும் அது அது கிடைக்காத பட்சத்தில் நல்ல சீந்தில் கொடியின் அடித் தண்டினைத் தேர்வு செய்து அதன் மேல்தோலை உரித்து நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு காயவைத்து சூரணமாக செய்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் தினமும் அந்த சூரணத்தில் கழஞ்சி அளவு எடுத்து, அதற்கு நான்கில் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஒரு மண்டலம் உண்டால் சுரதோஷங்கள் , மேகம், கபால வெட்டை, அத்திசுரம், வெட்டை ஆகியவை நீங்குவதுடன், தாது விருத்தியும், நாடியமிர்தமும் உண்டாவதுடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.

இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

குறிப்பு: மூலிகைவளம் திரு.குப்புசாமி அவர்கள் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய அரிய தகவல்களை தனது வலைப்பதிவில் விரிவான விளக்கங்களுடன் சேகரித்து வைத்திருக்கிறார். இந்த இணைப்பில் அவரது பதிவுகளை வாசிக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


எளிய காயகற்பம் - "ஓரிலைத் தாமரைக் கற்பம்"

Author: தோழி / Labels: , ,

நோயை தீர்ப்பதை விடவும் நோய்க்கான காரணத்தை அறிந்து அதனை தீர்ப்பதில்தான் சித்த மருத்துவம் கவனம் செலுத்துகிறது. நம் உடலை வளர்க்கத் தேவையான உணவையே மருந்தாகச் சொல்வதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. இந்த வகையில் உடலை நோய் அணுகாமல் பொலிவுடன் காத்து, மாறா இளமையுடனும், வலிவுடனும் இருக்கச் செய்ய சித்தர்கள் அருளிய பல்வேறு கூறுகளில் ஒன்றுதான் கற்ப வகைகள். 

சித்தர்கள் பல நூறு வகையான கற்ப வகைகளை நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். நம் முன்னோர்களின் இந்த அரிய  செல்வங்களின் பெருமையை உணராமல், அவற்றை போற்றிப் பாதுகாத்து மேம்படுத்த தவறிவிட்டோம்.இந்த கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் எளிமையான கற்ப வகைகளை தொகுக்கும் தொடர் முயற்சியாக இனி வரும் நாட்களில் சில கற்பவகைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த கற்ப வகைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் சரக்குகள் யாவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியவை. அலோபதி மருந்துகளோடு ஒப்பிடுகையில் விலையும் மலிவுதான். தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழி காட்டுதலோடு இந்த கற்பவகைகளை பயன்படுத்திட வேண்டுகிறேன்.

இனி இன்றைய பதிவில் "ஓரிலைத் தாமரைக் கற்பம்" பற்றி பார்ப்போம்.இந்த தகவல் "போகர் 7000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஏமமாம் ஓரிலைத்தா மரைச்சமூலம்
இடித்துமே சூரணித்துவெருகடி நெய்யில்கொள்ளச்
சோமமாய் உடம்பில் நின்ற வேகமெல்லாம்
சிதைந்துமே விட்டுப்போம் சிறுநீரில்தானும்
காமமாய் குளிர்ந்துவிடும் கண்புகைச்சல் 
காமாலை வறட்சியொடு கடியபித்தம்
வாமமாய் போய்விடுமண் டலந்தான்கொள்ளு
மகதான ரோகம்மாறி காயசித்தியாமே

ஓரிலைத் தாமரை சமூலத்தை (சமூலம் என்பது ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை, காய், பூ, விதை என அனைத்தும் சேர்ந்தது) எடுத்து நன்கு காயவைத்து இடித்து சூரணமாகச் செய்து, சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் வெருகடி(வெருகு என்பது காட்டுப்பூனை. அதன் பாதம் பதியும் அளவு வெருகடி எனப்படும். சித்த மருத்துவத்தில் வெருகடி என்பது ஒரு அளவையாக குறிக்கப் படுகிறது.) அளவு எடுத்து நெய்யில் குழைத்து ஒருமண்டலம் தொடர்ந்து உண்ண வேண்டுமாம். 

இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து உண்டால் கொடிய நோய்கள், பித்தம், வறட்சி, காமலை, கண் புகைச்சல் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார். மேலும் நமது உடம்பில் இருக்கும் தீயவை எல்லாம் சிதைவடைந்து சிறுநீருடன் வெளியேறிவிடுமாம். அத்துடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.   

நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல குருவருள் அனைவரின் வாழ்விலும் நன்மையை கொண்டு வந்து சேர்க்க பிரார்த்திக்கிறேன்.


சித்த மருத்துவமும் நட்சத்திர பலன்களும் - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels: , ,

கடந்த ஒன்பது பதிவுகளின் ஊடே சித்த மருத்துவத்தில் சகுன சாத்திரம் எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பற்றியும், 22 நட்சத்திரங்களின் பலன்களைப் பற்றியும் பார்த்தோம். பலருக்கும் இந்த தொடர் சலிப்பூட்டுவதாகவும், அலுப்பினை தருதாகவும் இருந்திருக்குமென நினைக்கிறேன். நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கும் இம் மாதிரி தகவல்கள் குறிப்பிட்ட சிலரைத் தாண்டி மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவற்றின் நம்பகத் தன்மை குறித்து நமக்குள் கேள்விகள் எழுந்தாலும் இவற்றை முற்றாக புறக்கணித்து விட முடியாது. இதன் பின்னாலிருக்கும் கூறுகள் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.

இன்றைய பதிவில் மீதமிருக்கும் ஐந்து நட்சத்திரங்களுக்கான பலன்களையும், எந்தெந்த கிழமைக்கு என்னென்ன நட்சத்திரம் ஆகாது என்பதைப் பற்றிய புலிப்பாணிச் சித்தரின் தெளிவுகளை பார்ப்போம்.

விதமான அவிட்டமுதல் கால்தானொன்பான்
நீச்சப்பா ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நிசமான மூன்றாங்கால் முப்பத்திரண்டே
இரண்டான நாலாங்கால் முப்பத்தொன்பான்
நிசமான சதய முதற்கால் தானேழு
வண்டான ரெண்டாங்கால் பத்தாம்பாரு
வளமான மூன்றாங்கால் நாள்தானாலு
திண்டான நாலாங்கால் நாள்தா னைந்து
திறமான பூரட்டாதி முதற்கால் சாவு
கொண்டான ரெண்டாங்கால் பதினாறாகும்
குணமான மூன்றாங்கா லெண்பத்தொன்றே
ஒன்றான நாலாங்கால் நாற்பத்தொன்று
ஒளிவுத்திரட்டாதி முதற்கா லேழு
நன்றான விரண்டாங்கால் பதினெட்டாகும்
நலமான மூன்றாங்கா லேழாம்பாரு
குன்றான நாலாங்கா லிருபத்தெட்டாம்
குணமான ரேவியு முதற்கால் சாவு
அண்டான ரெண்டாங்கால் பதினொன்றப்பா
அடைவான மூன்றாங்கால் பதினெட்டாம்
ஆமேதான் நாலாங்கால் லிருபத்தாறு
அடைவான மரணமென்ன நாள்தான் சொல்வேன்

- புலிப்பாணிச் சித்தர்.

அவிட்டம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஒன்பது நாட்களில் குணமாகும். 

அவிட்டம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகும். 

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தியிரண்டு நாட்களில் குணமாகுமாம்.

அவிட்டம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தொன்பது நாட்களில் குணமாகுமாம். 

சதயம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகும். 

சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் குணமாகும். 

சதயம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் நான்கு நாட்களில் குணமாகும். 

சதயம் நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் நோய் கண்டால் ஐந்து நாட்களிலும் நலமாகுமாம். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினாறு நாட்களில் குணமாகும். 

பூரட்டாதி நட்சத்திரத்தின் முண்றாம் பாதத்தில் நோய் கண்டால் எண்பத்தொரு நாட்களிலும் நலமாகுமாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் நாற்பத்தியொரு நாட்களிலும் குணமாகுமாம். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகுமாம். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களில் குணமாகும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் குணமாகும். 

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் இருபத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

ரேவதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம். 

ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பதினோறு நாட்களில் குணமாகும்.

ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களில் நலமாகுமாம்.

ரேவதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் இருபத்தி ஆறு நாட்களில் நலமாகுமாம். 

இனி ஒவ்வொரு கிழமைக்கும் ஆகாத நாட்களை பற்றிய புலிப்பாணிச் சித்தரின் தெளிவை பார்ப்போம். 

வாமேநீ அருக்கனாள் பரணியாகா
வளமான திங்கட் சித்திரையு மாகா
தாமேநீ செவ்வாய்க்கு முத்திராடந்
தயவான புதனுக்கு மஸ்தமாகா
நாமேநீ குருநாள்தான் கேட்டையாகா
நலமான புகர்நாள் பூராடந் தீதே.
தீதான சனிநாள் ரேவதியுமான
தீங்குவரு மிந்நாளில் நோய்கள் கண்டால்
வாதான நமனுக்கே அறுதியாகும்
வந்தநோய் தீராது கொல்லுங் கொல்லுந்
தானான வயித்தியரே நூலைப் பார்த்துத் 
தயவாக வைத்தியங்கள் செய்யவேணும்
கோனான போகருட கடாட்சத்தாலே
கொற்றவனே புலிப்பாணி சொன்னேன் பாரே

- புலிப்பாணிச் சித்தர்.

ஞாயிற்றுக் கிழமை பரணி நட்சத்திரம் ஆகாது.
திங்கட்கிழமை சித்திரை நட்சத்திரம் ஆகாது.
செவ்வாய்கிழமை உத்திராட நட்சத்திரம் ஆகாது.
புதன்கிழமை அஸ்த நட்சத்திரம் ஆகாது.
வியாழக்கிழமை கேட்டை நட்சத்திரம் ஆகாது.
வெள்ளிக் கிழமை பூராடம் நட்சத்திரமும் ஆகாது.
சனிக்கிழமையில் ரேவதி நட்சத்திரம் ஆகாது.

இந்த கெட்ட நாட்களில் நோய்கள் உண்டானால் எமன் நெருங்கும் நாளாகும் என்கிறார். இந்த தகவல்களை குருநாதர் போகருடைய கடாட்சத்தினால் புலிப்பாணியாகிய தான் கூறுகிறேன் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
சித்தமருத்துவமும்,நட்சத்திர பலன்களும் - விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் ஒருவருக்கு நோய் உண்டான தினம், அல்லது நோயாளியை வைத்தியரிடம் அழைத்து வரும் தினம் அல்லது நோயாளியின் இருப்பிடத்திற்கு வைத்தியரை அழைக்க வந்தவர் வந்த தினம் ஆகியவைகளை வைத்து குறிப்பிட்ட நோயாளியின் நோய் மற்றும் அதன் தன்மைகளை கணித்தறியும் முறை சித்த மருத்துவத்தில் இருக்கிறது. இதனை "சகுன சாத்திரம்" என்றனர்.

அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் காணக் கிடைக்கும் இத்தகைய தகவல்களையே இந்த தொடரின் நெடுகில் பார்த்து வருகிறோம். அந்தவரிசையில் இன்று விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கான பலன்களை பார்ப்போம்.

எழிலான விசாக முதற்கால்தா னொன்பான்
தட்டான ரெண்டாங்கால் நாந்தான் மூன்று
தயவான மூன்றாங்கால் நாற்பதாகும்
பட்டான நாலாங்கால் எண்பத்தொன்று
பாங்கான அனுஷமுதற் கால்தான்சாவு
சிட்டான ரெண்டாங்கா லிருபதப்பா
செயலான மூன்றாங்கால் தொண்ணூறுறென்னே
என்னவே நாலாங்கால் நாற்பதாகும்

எழிலான கேட்டை முதற்கால்தான் சாவு
நன்னவே ரெண்டாங்கா லிருபதப்பா
நாயகனே மூன்றாங்கால் முப்பத்தொன்று
வன்னவே நாலாங்கா லெண்பத்திரண்டு
வளமான மூல முதற்கால்தான் சாவு
அன்னவே ரண்டாங்கா லொன்பதாகும்

அடைவான மூன்றாங்கால் நாள்தான் பத்து
பத்தான நாலாங்கால் பதினெட்டாகும்
பண்பான பூராட முதற்கா லொன்பான்
சித்தான ரெண்டாங்கால் மரணஞ் செய்யுஞ்
செயலான மூன்றாங்கால் நாள்தான் பத்து
வித்தான நாலாங்காலும் பத்துநாலு
விதமான உத்திராட முதற்கா லேழு
நித்தான ரெண்டாங்கா லிருபதாகும்

நேரான மூன்றாங்கா லைம்பதாச்சே
ஆச்சப்பா நாலாங்கால் நாற்பதாகும்
அடைவான ஓணமுதற் பதினொன்றப்பா
பேச்சப்பா ரெண்டாங்கால் பத்துநாளாம்
பேதமில்லை மூன்றாங்கால் நாள்தானெட்டு
வீசப்பா நாலாங்கால் மரணம் செய்யும்


விசாகம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எண்பது நாட்களில் நலமாகும். 

விசாகம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் மூன்று நாட்களில் சுகமாகும். 

விசாகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் உண்டானால் நாற்பது நாட்களில் குணமாகும். 

விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் எண்பத்தொரு நாட்களில் அந்த நோய் தீருமாம். 

அனுஷம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் இறப்பு உண்டாகுமாம். 

அனுஷம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் நலமாகுமாம். 

அனுஷம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் தொண்ணூறு நாட்களில் நலமாகுமாம்.

அனுஷம் நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் நோய் கண்டால் நாற்பது நாட்களில் நலமாகுமாம். 

கேட்டை நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம். 

கேட்டை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் குணமாகும். 

கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தி ஒன்று நாட்களில் குணமாகும். 

கேட்டை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் எண்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம். 

மூல நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் உண்டாகுமாம். 

மூல நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் எண்பது நாட்களில் குணமாகுமாம். 

மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களிலும் குணமாகுமாம்.

மூல நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் நோய் கண்டால் பதினெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோய் கண்டால் ஒன்பது நாளில் குணமாகுமாம். 

பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் மரணம் சம்பவிக்குமாம்.

பூராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் குணமுண்டாகும். 

பூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் நலமாகுமாம். 

உத்திராட நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் ஏழு நாட்களில் நலமாகும். 

உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் இருபது நாட்களில் நலமாகும். 

உத்திராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் ஐம்பது நாட்களிலும் குணமாகுமாம்.

உத்திராட நட்சத்திரத்தின் நாலாவது பாதத்தில் நோய் கண்டால் முப்பத்தொன்பது நாளில் நலமாகுமாம். 

திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோய் கண்டால் பதினோரு நாட்களில் குணமாகும்.

திருவோண நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் பத்து நாட்களில் நலமாகுமாம். 

திருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் எட்டு நாட்களில் நலமாகுமாம். 

திருவோண நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் மரணம் நிகழுமாம். 

பதிவின் நீளம் கருதி மீதமுள்ள தகவல்களை நாளைய பதிவில் நிறைவு செய்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை சகுன சாத்திரம் என்பது இருவகைப்படும் என்றும் அதன் மூலம் நோயாளியின் நிலையை கணிப்பது பற்றிய தகவல்களை இந்த தொடரின் ஊடே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாய் இன்றைய பதிவில் பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரங்கள் நடக்கும் நாட்களில் ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அதற்கான தெளிவுகள் மற்றும் தீர்வுகள் எத்தகையதாய் இருக்கும் என்பதை பார்ப்போம். 

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

குணம்பூர முதற்கால்தான் சாவுமாகும்
தேனான ரெண்டாங்கா லிருபத்தைந்தில்
சிறப்பான மூன்றாங்கா லிருபத்தாறே.
ஆறான நாலாங்கா லெண்பத் தொன்றாம்
அடைவான வுத்திரந்தான் முதற்காலெட்டு
வீறான ரெண்டாங்கால் முப்பதாகும்
விதமான மூன்றாங்கா லைம்பத்திரண்டாந்
தீரான நாலாங்கால் மரணமாகும்
திறமான அஸ்தமுதற்கால் தானெட்டு
கூறான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
குணமாக மூன்றாங்கா லிருபத்தெட்டே
எட்டான நாலாங்கா லெண்பத்தி ரெண்டு
எளிதான சித்திரையு முதற்கா லொன்பால்
நெட்டான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நேரான மூன்றாங்கால் பன்னிரெண்டு
கிட்டான நாலாங்கால் நாற்பத்தொன்று
கெதியான சோதி முதற்கா லீராறு
குட்டான ரெண்டாங்கால் மரணஞ் செய்யுஞ்
குணமான மூன்றாங்கா லெண்பத்தெட்டே
எட்டான நாலாங்காற் பன்னி ரண்டு

- புலிப்பாணி சித்தர்.

பூரம் நட்சத்திரத்தின் முதற்பாத்தில் உண்டானால் மரணம் சம்பவிக்குமாம். 

பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் இருபத்தைந்து நாட்களில் குணமாகுமாம். 

பூரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் இருபத்தாறு நாட்களில் குணமாகுமாம்.

பூரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் எண்பத்தியோரு நாட்களில் நலமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எட்டு நாட்களில் குணமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் முப்பது நாட்களில் குணமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின்மூன்றாம் பாதமானால் ஐம்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம். 

உத்திரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் மரணம் சம்பவிக்குமாம். 

அஸ்த நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் எட்டு நாட்களில் குணமாகுமாம்.  

அஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.  

அஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் இருபத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

அஸ்த நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் எண்பத்திரண்டு நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் முதற் பாகத்தில் நோய் கண்டால் ஒன்பது நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதமானால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம். 

சித்திரை நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் நாற்பத்தியொரு நாட்களில் நலமாகுமாம். 

சுவாதி நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம். 

சுவாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதமானால் மரணம் சம்பவிக்குமாம்.  

சுவாதி நட்சத்திரத்தின்மூன்றாம் பாதமானால் எண்பத்தி எட்டு நாளில் குணமாகுமாம்.

சுவாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதமானால் பன்னிரண்டு நாட்களில் நலமாகுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...சித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம்

Author: தோழி / Labels: , ,

நோயாளிகள் மருத்துவரிடம் வரும் நேரத்தைக் கொண்டு நோயின் தீவிரம் அதன் தன்மையை கணிக்கும் முறை சித்த மருத்துவத்தில்  இருப்பதைப் பற்றி கடந்த வாரத்தின் பதிவுகளின் ஊடே பார்த்தோம். அதன் தொடர்ச்சியாய் இன்று புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம் ஆகிய நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களுக்கான பலன்களை பார்ப்போம்.

இந்த தகவல்கள் யாவும் புலிப்ப்பாணிச் சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

ஆமப்பா நாலாங்கால் மரணஞ் செய்யும்
ஆடைவான பூசமப்பா முதற்காலேழு
சேமப்பா ரெண்டாங்கால் பனிரண்டாகும்
சுகமான மூன்றாங்கா லொன்பதாகும்
காமப்பா நாலாங்க லிருபத்தேழு
கனிவான வாயிலிய முதற்கா லொன்பான்
வாமப்பா ரெண்டாங்கால் இருபதாகும்
வளமான மூன்றாங்கால் தொண்ணூறுதானே.
தானான நாலாங்கால் முப்பத்தொன்பான்
தயவான மகமுதற்கால் மரணஞ் செய்யும்
வானான ரெண்டாங்கால் முப்பதாகும்
வளமான மூன்றாங்கால் எண்பத்தைந்து
கூனான நாலாங்கால் நாள் தானைந்து

- புலிப்ப்பாணிச் சித்தர்.

புனர்பூசம் நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது ஏழு நாட்களில் குணமாகுமாம். 

புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது பத்து நாட்களில் குணமாகுமாம். 

புனர்பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் அந்த நோயானது பதினெட்டு நாட்களில் குணமாகுமாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் கண்டிருந்தால் மரணம் சம்பவிக்குமாம். 

பூசம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் உண்டானால் ஏழு நாட்களில் குணமாகுமாம். 

பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் பன்னிரண்டு நாட்களில் குணமாகுமாம். 

பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் உண்டானால் எண்பது நாட்களில் குணமாகுமாம். 

பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் உண்டானால் இருபத்தேழு நாட்களிலும் குணமாகுமாம். 

ஆயிலியம் நட்சத்திரத்தின் முதற் பாத்தில் நோய் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் நலம் கிடைக்குமாம்.

ஆயிலியம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் இருபது நாட்களில் நலம் கிடைக்குமாம்.

ஆயிலியம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் தொண்ணூறு நாட்களில் நலம் கிடைக்குமாம்.

ஆயிலியம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோய் ஏற்பட்டால் முப்பதொன்பது நாட்களில் குணமாகிவிடுமாம். 

மகம் நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் நோய் கண்டால் மரணம் உண்டாகுமாம். 

இரண்டாம் பாதத்தில் நோய் கண்டால் முப்பது நாட்களில் குணமாகுமாம். 

மூன்றாம் பாதத்தில் நோய் கண்டால் அது குணமாக எண்பத்தைந்து நாட்கள் ஆகுமாம். 

நாலாம் பாதத்தில் நோய் கண்டால் அந்த நோய் ஐந்து நாட்களிலும் குணமாகுமாம். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...சித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - மிருகசீரிடம், ஆதிரை

Author: தோழி / Labels: , ,

நண்பர்கள் பலர் தங்களூடைய நட்சத்திரத்திற்கு என்ன பலன் என அறிய ஆவலாய் இருப்பதாய் மின்னஞ்சல் வழியேயும், நேற்றைய பதிவில் பின்னூட்டமாகவும் தங்களின் ஆவலை வெளியிட்டிருந்தனர். இந்த சாத்திர பலன்கள் தனிப்பட்டவர்களுக்கானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். சித்த மருத்துவத்தில் சகுன சாத்திரம் என்பது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் வரும் நோயாளியின் நோய்த் தன்மையை கண்டறிவதற்காக பயன்பட்டது. 

இன்றைய பதிவில் மிருகசீரிடம் மற்றும் ஆதிரை நட்த்திரங்கள் நடைபெறும் நாட்களில் நோயுற்றிருப்பவர்களுக்கான பலன்களை பார்ப்போம். இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

முத்தான மான்றலையின் முதற்காலப்பா
முப்பது நாளான பின்பு தீரும்பாரு
சித்தான ரெண்டாங்கா லிருபத்தெட்டு
திரமான மூன்றாங்கால் பதினைந்தாமே.
ஆமேதான் நாலாங்கால் முப்பத்தைந்து
ஆடைவான ஆதிரைநாள் முதற்கா லொன்பான்
தாமேதான் ரெண்டாங்கால் மரணமாகும்
தயவாக மூன்றாங்கால் நாள்தான் பத்து
வாமேதான் நாலாங்கா லிருபத்தைந்து

- புலிப்பாணி சித்தர்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் முப்பது நாட்கள் கடந்த பின்னர் நலமாகுமாம். 

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் இருபத்தியெட்டு நாட்களில் நலமாகுமாம். 

மிருகசீரிடம் நட்சத்திரத்தின்மூன்றாவது பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் பதினைந்து நாட்களில் நலமாகுமாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின்நான்காம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் முப்பத்தைந்து நாட்களில் குணமாகுமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் ஒன்பது நாட்களில் குணமாகுமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாத்தில் உண்டானால் மரணமும் சம்பவிக்குமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் பத்து நாட்களில் நலமாகுமாம். 

ஆதிரை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நோயுற்றிருந்தால் அந்த நோய் இருபத்தி ஐந்து  நாட்களிலும் நலமாகுமாம்.

அடுத்த பதிவில் புனர்பூசம் மற்றும் பூசம் நட்சத்திரங்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...சித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - கார்த்திகை, ரோகிணி

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் இந்த நட்சத்திரங்களின் பலன்கள் எந்த அளவுக்கு உதவியாக இருந்தது அல்லது இந்த தகவல்களின் உண்மைத் தன்மை எத்தகையதாய் இருந்தது என்பது பற்றிய தகவல்கள் நம்மிடையே இல்லை. நம்மிடம் எஞ்சியிருக்கும் இம் மாதிரித் தகவல்களைக் கொண்டு இவற்றின் பின்னால் புதைந்திருக்கும் தகவல்களை மீட்டெடுக்க யாரேனும் முன் வந்தால் அதுவே இந்த சிறு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்.

இன்றைய பதிவில் கார்த்திகை/கிருத்திகை நட்சத்திரம் மற்றும் ரோகிணி நட்சத்திரங்கள் நடக்கும் நாட்களில் ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அதற்கான தெளிவுகள் மற்றும் தீர்வுகள் எத்தகையதாய் இருக்கும் என்பதை பார்ப்போம். இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

நன்னவே கார்த்திகைக்கு முதற் காலானால்
நலமான ஒன்பதாம்நாள் தீரும்பாரு
பன்னவே ரண்டாங்கால் பத்தேயாகும்
பண்பான மூன்றாங்கால் பதினைந்தாகும்
அன்னவே நாலாங்கால் நாற்பத்தெட்டு
அடைவாக ரோகணியும் பத்தே.
பத்தான ரெண்டாங்கால் பதினெட்டாகும்
பண்பான மூன்றாங்கால் எண்ணுன்கப்பா
பெத்தான நாலாங்கால் எண்பத்திரண்டு
பேதமில்லை தீர்ந்துவிடு மின்னங்கேளு

- புலிப்பாணி சித்தர்.

கார்த்திகை நட்சத்திரத்தின் முதற் பாதத்தில் ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் ஒன்பது நாளில் குணமாகுமாம். 

கார்த்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால் பத்து நாட்களில் சரியாகுமாம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால் அந்த நோய் நாற்பத்தெட்டு நாட்களிலும் குணமாகுமாம். 

ரோகிணி நட்சத்திரத்தின் முதற்பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் பத்து நாளில் குணமாகுமாம்.

ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் பதினெட்டு நாட்களில் குணமாகும்.

ரோகிணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் முப்பத்திரண்டு நாட்களில் குணமாகும். 

ரோகிணி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் ஒருவர் நோயுற்றிருந்தால், அந்த நோய் எண்பத்திரண்டு நாட்களில் நலமாகுமாம். 

நாளைய பதிவில் மிருக சீரிடம் மற்றும் ஆதிரை நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் நோய் கண்டால் அதற்கான தெளிவு மற்றும் தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...