திரிகடுகம் - மிளகு

Author: தோழி / Labels: , ,

திரிகடுகம் பற்றிய தொடரில் இன்று மிளகு பற்றி பார்ப்போம். பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் வரை தமிழர்கள் உணவில் கார்ப்பு(காரம்) சுவைக்கு மிளகையே பயன்படுத்தினர். ஆம் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் தற்போதைய மிளகாய் இந்திய துணைக் கண்டத்தில் போர்ச்சுக்கீசியர்களினால் அறிமுகமானது. மிளகைப் போல உறைப்புத் தன்மையுடன் விளங்கியதால் அந்த பயிருக்கு மிளகாய் என்கிற பெயர் வந்தது. இது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி. ஆங்கிலத்திலும் கூட இன்றுவரை மிளகாயை, மிளகின் ஆங்கிலப் பெயரான Pepper என்றே அழைக்கின்றனர்.

பழந்தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மூன்று முக்கியப் பொருட்களில் மிளகும் ஒன்று. மற்றவை முத்து, மயிற்பீலி. சங்க நூல்கள் மிளகினைக் கறி என்றே குறிப்பிடுகின்றன. உணவில் மிளகு அதிகமாய் சேர்க்கப் பட்டதால் பின்னாளில் தாவர உணவும், இறைச்சி உணவும் கறி என்கிற பெயரையே பெற்றது. மூடை மூடையாக தங்கத்தைக் கொடுத்து மிளகை வாங்கிப் போனதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று மிளகின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி 

"உழவு நட்பில்லாத நிலமும், மிளகு நட்பில்லாத கறியும் வழவழ" என்ற முதுமொழி மூலம் நமது உணவில் மிளகின் பங்கு எத்தகையது என்பதை அறியலாம். இது ஒரு கொடிவகை தாவரம். உயர்ந்து வளரும் மரங்களின் மீது அல்லது பந்தற்கால்களின் மீது மிளகுக் கொடி தழைத்துப் படரும். பயிர் செய்த மூன்றாம் வருடம் முதல் காய்க்கத் தொடங்கும். காய்கள் சிவப்பு நிறம் அடைந்த உடனே பறித்து வெயிலில் உலர்த்துவார்கள். காயக் காயத் தோல் சுருங்கிக் கறுத்துவிடும். கொதிக்கிற நீரில் ஊறவைத்துக் காய வைப்பதும் உண்டு. தோலோடு இருப்பது சாதாரணக் கறுப்பு மிளகு. தோல் நீக்கியது வெள்ளை மிளகு. வாசனைக்காகவும், காரத்துக்காகவும், மருந்துக்காகவும் மிளகு பயன்படுத்தப்படுகிறது.

சித்தர்களின் பாடல்களில் இந்த மிளகிற்கு பல்வேறு பெயர்கள் பரிபாஷையாக குறிப்பிடப் பட்டிருக்கின்றன. இந்த விவரங்களை போகர் தனது "போகர் நிகண்டு" என்னும் நூலில் பின் வருமாறு பட்டியலிடுகிறார்.

முளகினுடப் பேர்தனையே விளம்பக் கேளு
முதிர்ந்து நின்றத் திரை போக்கி மரிசியாகும்
வளகினுட வலசமுமா தீட்சணமுமாகும்
மகத்தானது வன்மாஞ் சியாமமாகுங்
குளகினுட மூஷ்ணமாம் பத்துவ நேஷங்
கோலக மாஞ்சரநுந் தனியுமாகும்
வளகினுட வாதத்தை யறுக்குகின்ற
மகத்தான முளகுக்கு நாமமாமே.

முதிர், திரைபோக்கி, அரிசி, வலசம், தீட்சணம், வன்மாஞ்சி, சியாமம், உஷ்ணம், பத்துவனேஷம், மஞ்சரம், தனியம் என்பன மிளகின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர்

பொதுவில் உணவில் உள்ள நச்சுத் தன்மையையும், உடலில் உண்டாகும் நச்சுத் தன்மையை முறிக்க பயன்படும் அருமருந்து மிளகு. இதைத்தான் நம் முன்னோர்கள் “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்றனர். பதார்த்த குண விளக்கம் என்னும் நூலில் இரண்டு வகையான மிளகு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவை கருமிளகு, வெள்ளை மிளகு. வெள்ளை மிளகினால் கிரகணி, கப வாதம், சுரம், கீழ்ப்பிரமேகம் ஆகியவை நீங்குமாம்.

"பதார்த்த குண விளக்கம்" எனும் நூல் மிளகின் மருத்துவ குணங்களை பின்வருமாறு பட்டியலிடுகிறது.. 

சீதசுரம் பாண்டு சிலேஷ்மங்கி ராணிகுன்மம்
வாத மருசிபித்த மாமூல - மோதுசந்தி
யாசமபஸ் மார மடன்மேகங் காசமிவை
நாசங் கறிமிளகி னால்.
                                         
கோணுகின்ற பங்கவலி குய்யரோ கம்வாத
சோணிதங்க ழுத்திற்குட் டோன்றுநோய்-காணரிய
காதுநோய் மாதர்குன்மங் காமாலை மந்தமென்றீ
ரேதுநோய் காயிருக்கு லீங்கு.

மிளகினால் குளிர்சுரம், பாண்டு, கபம், கிரகணி, குன்மம், வாயுஅரோசகம், பித்தம், மூலம், சந்நியாசம், அபஸ்மாரம், பிரமேகம், இருமல, பங்குவாதம், குய்யரோகம், வாதசோணிதவாதம், களநோய், செவிவலி ரத்தகுன்மம், காமிலம், அசீரணம் போன்றவை நீங்குமாம். 

சித்தர்களின் மருத்துவத்தில்  மிளகின் பங்களிப்பு மகத்தானது. அவற்றை பட்டியலிட தனியொரு தொடரே எழுதிடலாம். அத்தனை தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. இந்த தொடருக்கு தேவையான இந்த அறிமுகத்துடன் பதிவினை நிறைவு செய்கிறேன். நாளைய பதிவில் திரிகடுகத்தின் மூன்றாவது பயிரான "திப்பிலி" பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

6 comments:

jana said...

miga arumayana pathivzu

Inquiring Mind said...

அருமையான பதிவு.. என்னுடைய நண்பன் நாம் மிளகாய் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வான்.. இப்பொழுது அவன் சொன்னதை முழுமையாக உணர்கிறேன்.

sogakumaran said...

Vanakkam, sukku thayarikkum murai thangal solliyathu poll allamal veru muraium errukindrathu, anal athu sari ya thavara endru eannakku puriya villai.Nallla muttriya engiyai sutham seithu, sunnambu kuzambil puthaithu vaithu viduvargal, 9 natkalukku piragu athi eaduthu veillil kayavaithu, nangu kaintha pin athi thattinal athan mel thol uthirnthu vidum, athuvay suthamana SUKKU, ethu sariya thavara, Engikku mel thol vizam, enbargal. thavaraga errupin mannikkavul,. ashok

Gnanam Sekar said...

அருமையான தகவல் பதிவு .நன்றி

Saravanan said...

தோழி,
தங்களின் இந்த முயற்சிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னை போன்றோர்களுக்கு கிடைத்த இறையருளும் குருவருளும் பாக்கியமாக கருதுகின்றேன் தங்களின் இந்த வலைப்பதிவை. மீண்டும் கோடானு கோடி நன்றிகள்.தங்களின் இந்த சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Guru pala mathesu said...

மயிற்பீலி ?விளக்கம் தேவை நட்பே!

Post a Comment