திரிகடுக பேதிக்குளிகை

Author: தோழி / Labels: , , , , ,

சித்தர்களின் மருத்துவத்தில் குளிகை என்ற பெயருக்கு தனியிடம் உண்டு. தற்போது அலோபதி மருத்துவம் முன் வைக்கும் மாத்திரைக்கு இணையாக குளிகையைச் சொல்லலாம். ஆம்!, ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தினை வில்லையாகவோ அல்லது உருண்டையாகவோ உருட்டி காய வைத்து பயன்படுத்துவதுண்டு. இதனையே நாம் குளிகை என்கிறோம்.

திரிகடுக மூலிகைகளைக் கொண்டு இத்தகைய குளிகை ஒன்றினை தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் ஆருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மாறிப்போம் இன்னம் ஒரு திரிகடுகபேதி
மகத்தான குளிகை ஒன்று வகையாய்ச் சொல்
தேறிப்போம் மிளகிடையே ரைந்தும் கூட்டித்
திறமான சுக்கு திப்பிலியும் ஓமம்
கூறிப்போம் ரோகிணியும் கூர்மத்தோடு
கோஷ்டமுடன் எல்லாம் ஓரிடையாய்க் கூட்டி
ஆறிப் போம் சுத்தி செய்த வாசிமைந்து
அப்பனே பழச்சாற்றால் அரைத்திடாயே.

அரைத்துமே மிளகளவாய் உருட்டிக் கொண்டே
அய்யனே நிழலுலர்த்தி முலைப்பாலில் தான்
உரைத்தீயக் குழந்தைகட்கு பேதியாகும்
உத்தமே சன்னி சுரம் சீதசுரம் கூட
இரைத்திடுமே இடுப்புவலி உள்ள தெல்லாம்
இன்பமுடன் தான் தீரும் வேண நோய்கள்
கரைத்துமே வெந்நீரும் சாதம் உண்ண
கனமான பேதி நிற்கும் கண்டு பாரே.

மிளகு, சுக்கு, திப்பிலி, ஓமம், கடுகுரோகணி, ஆமை ஓடு, கோஷ்டம் ஆகியவற்றை வகைக்கு ஐந்து விராகன் எடையாக எடுத்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாறு விடு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை மிளகு அளவு உருண்டைகளா உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். இதுவே திரிகடுக பேதிக்குளிகை என்கிறார்.  

இக்குளிகையை தாய்ப்பாலில் உரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க பேதியாகுமாம் அத்துடன் சன்னிசுரம், சீதசுரம், இடுப்பு வலி ஆகியவையும் குணமாகுமாம். தேவையான அளவு பேதியானதும் வெந்நீர் கலந்த சோற்றை உண்ணக் கொடுக்க பேதியாவது நின்றுவிடும் என்கிறார்.

ஐந்து விராகன் என்பது தற்போதைய அளவுகளில் 17.5 கிராம் ஆகும். பத்து விராகன் ஒருபலம் ஆகும்.

இதைப் போல திரிகடுகம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

1 comments:

S.Puvi said...

தகவலுக்கு நன்றி தோழி

Post a Comment