திரிகடுகம் - சுக்கு

Author: தோழி / Labels: , ,

சுக்கு, மிளகு, திப்பிலி என்கிற மூன்றும் இணைந்ததே திரிகடுகம் என்றும், அவற்றின் மகத்துவம் பற்றியும் நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த மூன்று பயிர்களில் முதலாவதாய் அறியப் படும் சுக்கு பற்றி இன்று பார்ப்போம்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை வேக வைத்து உலர்த்தினால் கிடைப்பதுதான் சுக்கு. இஞ்சி நிலத்தின் அடியில் விளையும் கிழங்கு வகைத் தாவரம். இதனை "வேர்கொம்பு" என்றும் அழைப்பதுண்டு. ஆக, உலர்ந்த இஞ்சிதான் சுக்கு. தானே உலர்ந்தால் வெகுவாக சுருங்கும் என்பதால் வேகவைத்து உலர்த்தி எடுக்கிறார்கள். இந்தியாவிலும், சீனாவிலும் இன்னபிற ஆசிய நாடுகளிலும் இஞ்சி பெருமளவில் பயிராகிறது.

இந்த இஞ்சியில் மாங்காய் இஞ்சி என்று ஒரு வகை இருக்கிறது, இது மஞ்சள் வகையைச் சேர்ந்தது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கிழங்கு இஞ்சியை விட சொற்ப அளவு காரமாயும், மாங்காய் வாசனையுடனும் இருக்கும்.மஞ்சள் பயிரைப் போல பார்வைக்கு அழகாயிருக்கும். இந்தவகை இஞ்சிக்கிழங்கு ஊறுகாய்க்கு ஏற்றது, வழக்கமான இஞ்சியை விட நார் குறைவானது. இந்த இஞ்சியில் இருந்து சுக்கு தயார் செய்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்தர் பெருமக்களின் பாடல்களில் இந்த சுக்கு பல்வேறு பெயர்களுடன் பரிபாஷையாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி போகர் தனது  "போகர் நிகண்டு" எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சுக்குனுடப் பேர் தனையே சொல்லக் கேளு
சுண்டியாங்கால் வீதம் விசுவமாகும்
முக்குனுட நாகமாம் பேக்ஷமுமாகும்
முக்கிரமாங் கற்பத்திரஞ் சிறுங்கின் பேர்
நக்கினுட தாத்திரிபஞ் சாதகமுமாகும்
சாங்கமா யுறப்புமாங் கசப்புமாகும்
பக்கினுடத் திறிதோஷ மானியாகும்
பரிபாஷை நாமமெல்லாஞ் சுக்குக்காமே.

சுண்டியம், விசுவம், நாகம், பேஷம், முக்கிரமம், கற்பத்திரம், சிறுங்கி, தாத்திரிபம், சாதகம், உறைப்பு, கசப்பு, திரிதோஷம், மானியம் என்பன சுக்கின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர். 

சுக்கின் மருத்துவ குணம் பற்றி "பதார்த்த குண விளக்கம்" எனும் நூல் பின்வருமாறு விளக்குகிறது.

வாதப் பிணிவயி றூதற் செவிவாய்
வலிதலை வலிகுலை வலியிரு விழிநீர்
சீதத் தொடுவரு பேதிப் பலரோ
சிகமலி முகமக முகவிடி கபமார்
சீதச் சுரம்விரி பேதச் சுரநோய்
தெளிபடு மெனமொழி குவர்புவி தனிலே
யீதுக் குதவுமி தீதுக் குதவா
தெனும்விதி யிலைநவ சுறுகுண முனவே

சூலைமந்த நெஞ்செரிப்பு தோழமேப் பம்மழலை
மூல மிரைப்பிருமன் மூக்குநீர் - வாலகப
தோஷமதி சாரந் தொடர்வாத குன்மநீர்த்
தோஷமா மம்போக்குஞ் சுக்கு.

விலாக்குத்தல், அஜீரணம், நெஞ்செரிச்சல், தோஷகுணம், புளியேப்பம், வெப்பம், ஆசனநோய், சுவாசம், காசம், ஜலபீநசம், நீரேற்றம், பேதி, வாதகுன்மம், ஜலதோஷம், சீதகிரணி, வாதநோய், வயிற்றுப்பிசம், செவிகுத்தல், முகநோய், சிரநோய், குலைவலி, கபஸ்ராவம், சீதபேதி, பலவித அரோசகம், அலிமுகப்பாண்டு, வயிற்றுக்குத்தல், கபசீதசுரம் முதலாகப் பல சுரங்கள் நீங்குமாம். பொதுவில் சுக்கினால் இந்த நோய்க்குத்தான் மருந்தாகும் என்பதை விட சகலவிதமாய உடற் கோளாறுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் என குறிபிடுகின்றது.

இத்தனை பெருமைகளை தன்னகத்தே கொண்டது சுக்கு. இன்னும் சொல்வதானால் ஒரு முதுமொழியைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்யலாம்.

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை”

நாளைய பதிவில் "மிளகு" பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

5 comments:

kavinsandron said...

nandri

S.Menaga said...

பயனுள்ள பதிவு,நன்றி!!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி... தொடர்கிறேன்...

jaisankar jaganathan said...

அருமை. அற்புதம். அபாரம்.


கலக்கிட்டீங்க. திப்பிலின்னா என்னன்னு சொல்லும் நாளை ஆவலுடன் எதிர்பாக்குறேன்

Srinivasan Rajagopalan said...

Lovely useful information

Post a Comment