திரிகடுகம் - திப்பிலி

Author: தோழி / Labels: , ,

திரிகடுக வரிசையில் இன்று மூன்றாவது பயிரான திப்பிலி பற்றி பார்ப்போம். மிளகை விடவும் காரமும், உறைப்புத் தன்மையும் கொண்ட திப்பிலி ஒரு செடித்தாவரம். மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக் கிடைக்கிறது. இந்தச் செடியின் காய்தான் நாம் பார்க்க இருக்கும் திப்பிலி ஆகும். இது முள் போல நீண்டிருக்கும். இந்த செடியின் வேரை நன்கு உலர்த்தி எடுத்து மருத்துவத்தில் பயன்படுத்துவது உண்டு, அதனை கண்ட திப்பிலி என்பர். இது தவிர இந்த செடியின் கனிகள் மற்றும் முதிர்ச்சியடையாத பூங்கதிர்களை பறித்து உலர்த்திப் பயன்படுத்துவதும் உண்டு இதனையே "அரிசித் திப்பிலி" என்கின்றனர். இப்படி இந்த செடியின் காய், கனி, பூங்கதிர்கள், வேர் என ஒவ்வொன்றும் மருத்துவப் பயன்களை கொண்டது.

மனித உடலின் மூன்று கூறுகளான வாதம், பித்தம், கபம் என்கிற மூன்றில், கபத்தை உருவாக்கவும் அகற்றவும் திப்பிலி பயன்படுகிறது. ஆம், பச்சைத் திப்பிலி உடலில் கபத்தை உண்டாக்கும். உலர்ந்த திப்பிலியோ உடலில் இருக்கும் கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. சித்தர்களின் மருத்துவத்தில் திப்பிலி தனி மருந்தாகவும், மற்ற மூலங்களோடு சேர்ந்து கூட்டு மருந்தாகவும் நல்ல பலனைத் தருகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய இந்த திப்பிலியின் மகத்துவம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாமல் போனது வருந்தத் தக்கது. 

திருமூலரின் திருமந்திரத்தில் திப்பிலி பற்றிய குறிப்பு ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தப் பாடல் பின்வருமாறு...

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே

சித்தர்களின் பாடல்களின் ஊடே திப்பிலிக்கு பல்வேறு பரிபாஷை பெயர்கள் கூறப் பட்டிருக்கிறது. இதனை போகர் தனது "போகர் நிகண்டு" எனும் நூலில் தொகுத்துக் கூறீயிருக்கிறார்.

திப்பிலியின் பேர்தனையே செப்பக் கேளு
தீட்சண தண்டுலகமாகு ன்றமாகும்
பப்பிலிபாளாக்கி யாம் சபலமாகும்
பெருத்த சவுண்டிசியமாமுபகுல்லிய மாகும்
வப்பிலியாம் வையதெக்க கோலனாமம்
வாதகுன்மத் திரிதோஷ நாசனியுமாகும்
கப்பிலியாங் கோழைதனை யறுக்குன்ஞ் சூதன்
கருதியதோர் திப்பிலியின் நாமமாமே.

தண்டுலகம், குன்றம், பாளாக்கி, சபலம், சவுண்டிசியம், முகுபல்லியம், வையதெக்கம், கோலன், வாதகுன்ம திரிதோஷ நாசனி, கோழைதனை அறுக்கும் சூதன் என்பன திப்பிலியின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர்.

திப்பிலியின் பொதுவான மருத்துவ பயன்பாட்டினை "பதார்த்த குண விளக்கம்" என்னும் நூல் பின் வருமாறு பட்டியலிடுகிறது.. 

இருமல் குன்ம மிரைப்பு கயப்பிணி
ஈளை பாண்டு சந்நியாச மரோசகம்
பொரும லூதை சிரப்பிணி மூர்ச்சை
நோய்பூரிக் குஞ்சல தோஷம் பிலீகமும்
வரும லப்பெருக் கோடு மகோதரம்
வாத மாதிமுத் தோஷஞ் சுரங்குளிர்
பெரும லைப்புரி மேகப் பிடகமும்
பேருந் திப்பிலிப் பேரிங் குரைக்கவே.
                                       
ஆசனநோய் தொண்டைநோ யாவரண பித்தமுத
னாசிவிழி காதிவைநோய் நாட்புழுநோய்-வீசிடுவி
யங்கலாஞ்ச னஞ்சிதையு மம்பா யழிவிந்துப்
பொங்கலாஞ்சீர் நங்கையர்கோட் போல்.

திப்பிலியால், காசம், கபகுன்மம், சுவாசம், ஷயம், கோழை, பாண்டு, சந்நியாசம், அருசி, வயிற்றுப்பிசம், வாயு, சிரஸ்தாபம், மூர்ச்சை, நீரேற்றம், பீலிகநோய், அதிசாரம், பெருவயிறு, திரிதோஷம், நடுக்கல்சுரம், மேகக்கட்டி, குதரோகம், நெஞ்சுநோய், ஆவிருத பித்தம், பீநசம், விழிநீர்க் கம்மல், கர்ணநாதம், கிருமி, முகத்தில் எழும்புகின்ற கருத்தமச்சம், கருமை செம்மை நிறமுள்ள மச்சம் இவை போக்குவதுடன் நீர்த்த சுக்கிலத்தை இறுக்குமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

6 comments:

jana said...


தோழி தங்களின் இந்த பதிவை வாசித்த உடன் , திரிபலா மற்றும் திரிகடுகு பயன் படுத்த ஆரம்பித்துவிட்டோம்

தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி

Srinivasan Rajagopalan said...

Nice. In the long run pl try to publish as a book. You can even add in preface ' therindathum, therivippadum' to avoid contraversy in publishing.

Gnanam Sekar said...

நல்ல அருமையான விளக்கம் . நன்றி

Unknown said...

yes you can publish this as a book.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விளக்கம்...

நன்றிங்க...

YAGOBU SIDDAR@FACEBOOK.COM said...

பயனுள்ள தகவல் , மனிதகுலத்திற்கு பிரயோசனமான தகவல்
நன்றி : தோழி ,
www.herbs4male.com (தமிழில்)

Post a Comment