சித்தமருத்துவமும், நட்சத்திர பலன்களும் - அசுவினி, பரணி

Author: தோழி / Labels: , ,

நமது முன்னோர்கள்  வகுத்த சோதிட இயல் கோள்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டது. ஒன்பது கோள்கள், அவற்றுள் பன்னிரெண்டு ராசிகள், அதன் ஊடே 27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் என பிரிக்கப் பட்டு அதனூடே பலா பலன்கள் கூறப் பட்டிருக்கின்றன. 

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் நோயாளியை மருத்துவரிடம் கொண்டு வரும் நேரம், அல்லது நோயாளியின் இடத்துக்கு மருத்துவரை அழைத்துப் போக ஆட்கள் வரும் நேரத்தை வைத்து நோயின் தன்மையை கணித்து அதற்கு தக்க சிகிச்சையை அளிக்க இந்த சகுன சாத்திரம் உதவியிருக்கிறது. இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி வைத்திய சாரம்" நூலில் அருளிய தகவல்களையே இனி வரும் நாட்களில் காண இருக்கிறோம். இன்றைய பதிவில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்கள் நடக்கும் காலத்தில் ஒருவர் நோய் வாய்ப் பட்டிருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தானென்ற அசுபதிநாள் முதற்காலப்பா 
தயவான ஒன்பதுநாள் சுரமே தீரும்
தேனென்ற ரெண்டாங்கால் கொல்லுமப்பா
திரமான பத்தாநாள் மரணமாவான்
கோனென்ற மூன்றாங்கால் பதினைந்தாகும்
குணமாக நாலாங்கால் மரணஞ் செய்யும்
வானென்ற பரணிதனில் முதற்கால் மூன்று
வளமான ரெண்டாங்கா லேழாமென்னே.
என்னவே மூன்றாங்கால் பதினைந்தாகும்
எளிதில்லா நாலாங்கால் பதினைந்தாகும்

- புலிப்பாணி சித்தர்.

அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டாகி இருந்தால் ஒன்பது நாட்களில் அந்த சுரம் நீங்கி விடுமாம்.

அசுவினி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பத்தாவது நாளில் அவருக்கு மரணம் உண்டாகுமாம்.

அசுவினி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் பதினைந்து நாட்களில் அந்த நோய் குணமாகுமாம்.

நான்காம் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அவருக்கு மரணம் சம்பவிக்குமாம்.  

பரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஒருவருக்கு நோய் உண்டானால் அது மூன்று நாட்களில் குணமாகுமாம்.

இரண்டாம் பாதத்தில் நோய் உண்டானால் அது ஏழு நாட்களில் குணமாகுமாம். பரணியின்

மூன்றாம் பாதம் நோய் கண்டால் பதினைந்து நாட்களில் குணமாகுமாம்.

நான்காம் பாதமானால் பதினைந்து நாளில் நலமாகுமாம். 

நாளைய பதிவில் கிருத்திகை / கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திர பலன்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...சித்த மருத்துவமும், சகுன சாத்திரமும்

Author: தோழி / Labels: ,

ஆயகலைகள் எனப்படும் அறுபத்தி நாலு கலைகளில் பன்னிரெண்டாவதாய் "சகுன சாஸ்திரம்" குறிப்பிடப் படுகிறது. சகுன சாஸ்திரம் என்பது நம்முடைய சுற்றுச் சூழல், வானிலை, கோள்களின் அமைப்பு, பறவைகளின் ஒலி, விலங்குகளின் செயல்பாடுகள் போன்றவைகளை முன்னிறுத்தி சொல்லப் படுவது.

சகுனம் பார்க்கும் வழக்கம் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்தற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. வெளியூர் பயணங்கள், சுப காரியங்களை துவக்குவது, தொழில் துவங்குவது, மருத்துவம் பார்ப்பது, போருக்கு கிளம்புவது என வாழ்வின் பல்வேறு செயல் பாடுகளில் சகுனம் பார்க்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 

சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரை சகுன சாத்திரம் என்பது இருவகைப்படும் ஒன்று நோயாளியை மருத்துவரிடம் அழைத்து வரும் நேரம் மற்றும் அப்போதைய சூழ்நிலை விபரங்களை கொண்டு நோயை அல்லது நோயின் தன்மையை கணிப்பது. மற்றது நோயாளியின் இருப்பிடத்திற்கு மருத்துவரை அழைக்க வருபவரின் நடவடிக்கைகள்,அவர் வந்த சூழ்நிலை போன்றவற்றை வைத்து நோயின் தன்மை மற்றும் நோயாளியின் நிலையை கணிப்பது.

சித்தர் பெருமக்களும் இத்தகைய தகவல்களை அருளியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் காணக் கிடைக்கும் தகவல்களையே இந்த தொடரில் நாம் பார்க்க இருக்கிறோம். இவை அசுவதி துவங்கி ரேவதி வரையிலான இருபத்தி ஏழு நட்சத்திரங்களும், அவற்றின் பாதங்களும் நடைபெறும் நேரத்தில் ஒருவர் நோய்வாய் பட்டிருந்தால் அந்த நோய் பற்றிய தெளிவும், தீர்வும் அருளப் பட்டிருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அருளப் பட்ட இந்த தகவல்கள் நமக்கு ஆச்சர்யமாகவும், அபத்தமாகவும் தென்படலாம். ஆனால் இவற்றின் பின்னால் இருக்கும் காரண காரியங்கள் நாம் அறியாதவை, ஆய்வுக்குட்பட்டவை. எனவே இனி வரும் நாட்களில் இந்த தொடரில் பகிரப்படும் தகவல்களை வழமை போல ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

சோதிடம் பற்றிய ஆரம்பத் தெளிவு இல்லாதவர்கள், தயவு செய்து இது தொடர்பாய் நான் முன்னரே எழுதியிருக்கும் பதிவுகளை வாசித்து விட வேண்டுகிறேன். இந்த இணைப்பில் சோதிடம் தொடர்பான பதிவுகளை வாசிக்கலாம்.

நாளைய பதிவில் முதல் இரண்டு நட்சத்திரங்களான அசுவினி மற்று பரணி நட்சத்திரங்களில் நோய்வாய்ப் பட்டவர்கள் பற்றிய தெளிவுகளை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


சித்தமருத்துவமும், சோதிடமும்..!

Author: தோழி / Labels: ,

நமது உடலானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளினால் ஆன கலவை. இவற்றில் வாதம் என்கிற காற்று, பித்தம் என்கிற நெருப்பு, கபம் அல்லது சிலேத்துமன் என்கிற நீரின் விகிதங்கள் ஒவ்வொரு உடலிலும் மாறுபடும். காற்றின் விகிதம் உடலில் அதிகமிருப்பின் அதனை வாத உடம்பு என்றும், நெருப்பின் விகிதம் அதிகமிருந்தால் அதனை பித்த உடலென்றும், நீரின் அளவு மிகுந்திருந்தால் கப உடலென்றும் நமது முன்னோர்கள் பகுத்துக் கூறியிருக்கின்றனர்.

முக்குற்றம் எனப்படும் இந்த மூன்று கூறுகளின் விகிதங்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் போதே நமது உடலில் நோய் உருவாகிறது. வாதம் என்கிற காற்றின் தொடர்பாய் என்பது நோய்களும், பித்தம் என்கிற நெருப்பின் தொடர்பாய் நாற்பது நோய்களும், கபம் என்கிற நீர் தொடர்பாய் தொன்னூற்றியாறு நோய்களும் இருப்பதாக சித்தர் பெருமக்கள் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.சித்த மருத்துவமே இந்த அடிப்படையில்தான் இயங்குகிறது.இந்த விவரங்களை பல பதிவுகளின் ஊடே முன்னரே எழுதியிருந்தாலும் கூட, நமது மருத்துவத்தின் அடிப்படையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இத்தகைய உடலில் தங்கியிருக்கும் உயிரை காத்து வளர்க்கும் மருந்தே  நாம் உட்கொள்ளும் உணவு. எனவேதான் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற விதி இன்றளவும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாய் இருக்கிறது. நோய்க்கு மருந்து தருவதை விடவும் நோய்க்கான காரணம் அறிந்து மருத்துவம் செய்வதும் சித்த மருத்துவத்தின் சிறப்புகளில் ஒன்று.

எல்லாம் சரிதான்!, நோயை எப்படி அறிவது?

நவீன மருத்துவம் நோயை கண்டறிய இரண்டு அடிப்படை உத்திகளை கொண்டிருக்கிறது. அவை பொதுவான அறிகுறிகள் (signs), மற்றும் உணர்குறிகள் (symptoms) என்பனவாகும். சித்த மருத்துவத்திலும் இவை கையாளப் படுகிறது. ஆனால் இதைத் தாண்டிய மூன்றாவது ஒரு வழியும் சித்த மருத்துவத்தில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றியதே இந்த  தொடர்.

நோயைக் கண்டறியவும், அதற்கான தீர்வுகளை காண மூன்றாவது வழியாக சோதிடம் பழந்தமிழரின் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா!!. சித்த மருத்துவத்தில் சோதிடம் என்பது மூலிகைகளை பறிக்க வேண்டிய நேரத்தைக் கணிப்பது முதல் நோய் ஆரம்பித்த நேரத்தை கணக்கில் கொண்டு நோய் குணமாகும் கால அளவை தீர்மானிப்பது வரை நீண்டிருக்கிறது. இதனை சித்தர் பெருமக்கள் "சகுன சாத்திரம்" என்கின்றனர்.

அதென்ன "சகுன சாத்திரம்"?, அதை எப்படி பயன்படுத்தினர்?

விவரங்கள் நாளைய பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


.....தவிர்க்க இயலாத காரணங்களினால்

Author: தோழி / Labels:

கடந்த ஐந்து நாட்களாய் இங்கே கடும் மழை. அதன் எதிரொலியாய் தொடர் மின் வெட்டு, சீரற்ற மின் விநியோகத்தினால் கணினி பழுது என அடுத்தடுத்த சோதனைகள். இந்த வார பதிவுகள் யாவும் கணினியில் முடங்கியிருப்பதால் கடந்த இரண்டு நாட்களாய் பதிவுகளை வலையேற்ற இயலவில்லை. எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பதிவுகள் வழமை போல தொடரும். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன். 

அனைவருக்கும் விஜயதசமித் திருநாள் வாழ்த்துக்கள்.


திரிகடுக பேதிக்குளிகை

Author: தோழி / Labels: , , , , ,

சித்தர்களின் மருத்துவத்தில் குளிகை என்ற பெயருக்கு தனியிடம் உண்டு. தற்போது அலோபதி மருத்துவம் முன் வைக்கும் மாத்திரைக்கு இணையாக குளிகையைச் சொல்லலாம். ஆம்!, ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தினை வில்லையாகவோ அல்லது உருண்டையாகவோ உருட்டி காய வைத்து பயன்படுத்துவதுண்டு. இதனையே நாம் குளிகை என்கிறோம்.

திரிகடுக மூலிகைகளைக் கொண்டு இத்தகைய குளிகை ஒன்றினை தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் ஆருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மாறிப்போம் இன்னம் ஒரு திரிகடுகபேதி
மகத்தான குளிகை ஒன்று வகையாய்ச் சொல்
தேறிப்போம் மிளகிடையே ரைந்தும் கூட்டித்
திறமான சுக்கு திப்பிலியும் ஓமம்
கூறிப்போம் ரோகிணியும் கூர்மத்தோடு
கோஷ்டமுடன் எல்லாம் ஓரிடையாய்க் கூட்டி
ஆறிப் போம் சுத்தி செய்த வாசிமைந்து
அப்பனே பழச்சாற்றால் அரைத்திடாயே.

அரைத்துமே மிளகளவாய் உருட்டிக் கொண்டே
அய்யனே நிழலுலர்த்தி முலைப்பாலில் தான்
உரைத்தீயக் குழந்தைகட்கு பேதியாகும்
உத்தமே சன்னி சுரம் சீதசுரம் கூட
இரைத்திடுமே இடுப்புவலி உள்ள தெல்லாம்
இன்பமுடன் தான் தீரும் வேண நோய்கள்
கரைத்துமே வெந்நீரும் சாதம் உண்ண
கனமான பேதி நிற்கும் கண்டு பாரே.

மிளகு, சுக்கு, திப்பிலி, ஓமம், கடுகுரோகணி, ஆமை ஓடு, கோஷ்டம் ஆகியவற்றை வகைக்கு ஐந்து விராகன் எடையாக எடுத்துக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாறு விடு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை மிளகு அளவு உருண்டைகளா உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். இதுவே திரிகடுக பேதிக்குளிகை என்கிறார்.  

இக்குளிகையை தாய்ப்பாலில் உரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க பேதியாகுமாம் அத்துடன் சன்னிசுரம், சீதசுரம், இடுப்பு வலி ஆகியவையும் குணமாகுமாம். தேவையான அளவு பேதியானதும் வெந்நீர் கலந்த சோற்றை உண்ணக் கொடுக்க பேதியாவது நின்றுவிடும் என்கிறார்.

ஐந்து விராகன் என்பது தற்போதைய அளவுகளில் 17.5 கிராம் ஆகும். பத்து விராகன் ஒருபலம் ஆகும்.

இதைப் போல திரிகடுகம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


திரிகடுக நெய்

Author: தோழி / Labels: , , , , ,

திரிகடுக நெய் தயாரிக்கும் முறை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்தப் பாடல் பின்வருமாறு...

பாரமுடன் திரிகடுகு நெய்யைமைந்தா
பாடுகிறேன் திரிகடுகு திரிபலையோ டாறே.
ஆறுடனே கொடிவேலி வேரின்பட்டை
ஆறிய நிலவாமணக்கன் வேரும்
வீறுடைய மரமஞ்சள் பொற்கொன்றைக்காயும்
வெற்றிபுரி அதிவிடையங் கடுகுரோணி
வாறுகேள் மஞ்சள் மரமஞ்சள் பின்னும்
வட்டத்திருப்பி மலைதாங்கிவேரும்வகைக்கு மைந்தா
மீறாமல் விராகன் மூன்றரை யாத்தூக்கி
விரைந்தாட்டி நாழிநெய்யிற் கலக்கிக் காய்ச்சே.
காய்ச்சு முன்னே கள்ளிப்பால் உழக்குவிட்டுக்
கருத்தாக வடித்துநீ மடிக்கச்சொல்லு
வீச்சான குன்மமுதல் குட்டந் தீரும்
வெண்குட்டம் பாண்டு விசக்கடியுந் தீரும்
வாச்சிருந்த சூலைபோம்உன் மத்தம்போம்

- அகத்தியர்.

திரிகடுகு என்கிற சுக்கு, மிளகு, திப்பிலி, திரிபலை என்கிற நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்  என்கிற இந்த ஆறு பொருட்களுடன் கொடிவேலி வேரின் பட்டை, ஆமணக்கு வேர், மரமஞ்சள், பொன்கொன்றைக் காய், அதிவிடை, கடுகுரோகிணி, மஞ்சள், மலைதாங்கி வேர் ஆகியவற்றை வகைக்கு மூன்றரை விராகன் வீதம் எடுத்து சுத்தம் செய்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையுடன் ஒரு நாழி அளவு நெய்யும், கள்ளிப்பால் ஒரு உழக்கும் சேர்த்து அடுப்பில் இட்டு நன்கு காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.  இதுவே திரிகடுக நெய்.

இந்த நெய்யால் குன்மம் முதல் குட்டம் வரையும், வெண்குட்டம், பாண்டு , சூலை, உன்மத்தம் ஆகிய நோய்கள் குணமாவதுடன் விஷக் கடிக்கும் சிறந்த மருந்து என்கிறார் அகத்தியர்.

திரிகடுக தொடர் நாளையுடன் நிறைவடையும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..திரிகடுக லேகியம்

Author: தோழி / Labels: , , , ,

சமஸ்கிருத மொழியில் அவலேஹம் என்கிற சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும்.

திரிகடுக மூலிகைகளைக் கொண்டு இத்தகைய லேகியம் ஒன்றினை தயாரிக்கும் முறை அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மந்தமொடு மூலத்தின் வாயுதீரும்
மைந்தனே புளி கையும் ஆற்றச் சொல்லு
அந்தமுடன் இன்னம் ஒரு லேகியம் கேள்
அன்பான திரிகடுகு பலம் தான் ஒன்று
சொச்தமுடன் சீரகமும் கிராம்பு ஏலம்
துரிதமுடன் சீரகமும் கிராம்பு ஏலம்
துரிதமுடன் வகைக்கு அரைப்பலமே வாங்கி
விந்தையாய்ச் சுத்தி செய்து சூரணித்து
லிதமான பனவெல்லம் பலம்தான் அஞ்சே.

அஞ்சாகும் பாகுபோல் காய்ச்சிக் கொண்டு
அப்பனே சூரணத்தைப் பாய்ச்சிக் கிண்டே
மிஞ்சாமல் நெயுழக்கு அரைக்கால் தேற்றான்
விட்டும் அதை லேகியம்போல் கிண்டி வாங்கிலக்
கொஞ்சமாய் கொட்டைப்பாக்களவு மைந்தா
குணமாக இருவேளை இருபதுநாள் கொள்ளு
நெஞ்சாரத் தீருகிற வியாதி கேளு
நிலையான வாதமொடு வாய்வும் போமே

வாயுவொடு உஷ்ணமும் பித்தவாய்வும்
வயிற்றுவலி கடுப்புபுளி எரிச்சல்பேதி
தேயுவென்ற அக்கினி மாந்தம் வாந்தி
தீராத வஸ்தி சுரம் அஸ்திவெட்டை
பாயுறதோர் பொருமல் என்றவாயுக்கிராணி
பறக்குமடா லேகியத்தில் அயச்செந்தூரம்
பேயுமன்றிப் பணவிடைதான் கூட்டிஉண்ணப்
பெலமான வாயுவெல்லாம் புரண்டு போமே

திரி கடுகான சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றை தலா ஒரு பலம் எடுத்து அத்துடன் சீரகம் கிராம்பு, ஏலம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து, அந்த கலவையைச் சுத்தி செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் பனை வெல்லம் ஐந்துபலம் எடுத்து பாகுபோல் காய்ச்சி, அதில் முன் செய்து வைத்த சூரணத்தைச் சேர்த்துக் கிண்டிட வேண்டுமாம். இந்த நிலையில் நெய் நூறு மில்லியும், தேன் பதினைந்து மில்லியும் சேர்த்துக் நன்கு கிண்டி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் இருபது நாட்கள் தொடர்ந்து உண்டுவர வாதம் மற்றும் வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, அக்கினி மாந்தம், வாந்தி, அஸ்தி, சுரம், அஸ்தி வெட்டை, கிராணி வாய்வு ஆகியவை குணமாகும் என்கிறார்.

நாளைய பதிவில் திரிகடுக நெய் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


திரிகடுக காயகற்பம்!

Author: தோழி / Labels: , , , , ,

திரிகடுகம் உடலையும், உயிரையும் காக்கும் எளிய அருமருந்து. நமது முன்னோர்களின் வாழ்வில் இந்த மருந்து இரண்டற கலந்திருந்தது. கால ஓட்டத்தில் நாம் மறந்துவிட்ட நமது மேலான அடையாளங்களில் இதுவும் ஒன்று. இதன் காரணமாகவே திரிகடுகம் தொடர்பான தகவல்களை  இரண்டாவது வாரமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

சுக்கு மிளகு திப்பிலி என்கிற மூன்று மூலகங்களை சூரணமாகவும், பல்வேறு வகையிலும் மருந்தாக பயன்படும் தகவலை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் திரிகடுகத்தைக் கொண்டு உடலை பேணும் கற்பம் ஒன்றினை தயாரிக்கும் முறையினை இன்று பார்ப்போம். இந்த காயகற்பம் தயாரிக்கும் முறை கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

இந்த கற்பத்தை "திரிகடுக கற்பம்" என்கிறார் கருவூரார்.

அற்புதமா தாகவொரு - மருந்து 
அறைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும்
கற்பமொன்று விள்ளுகிறேன் -  நல்ல
கற்றாழைஞ் சொறெடுத்து விஸ்தாரமாய் வெருகடி
திரிகடுகு பொடிபண்ணி - வெருகடி
தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே
பிரட்டியே தின்றுவரக் - காயம்
பிலக்குமப்பா நரை திரைமாறும்
சித்தருக்குச் சித்தனப்பா - பர
தேசியர்க்குப் பர தேசிகனாம்
ஞானிக்கு ஞானியப்பா - அஞ்
ஞானிக்கஞ் ஞானியாய்த் தோணுமப்பா
இல்லத்துக் கில்லனுமாய்க் - கோடிவய
திருப்பான் பதினாறு வயதது போல்

கற்றாழை சோற்றில் வெருகடி* அளவு எடுத்து அதனுடன் திரிகடுக சூரணத்தை வெருகடி* அளவு சேர்த்து நன்றாக பிரட்டிக் உண்ண வேண்டுமாம். இப்படி சாப்பிட்டு வர நரைதிரை மாறி உடலும் உறுதியாகுமாம். மேலும் அத்தகையவர்கள் சித்தருக்கு சித்த்னாகவும், பரதேசிகளுகு பரதேசியாகவும், ஞானிகளுக்கு ஞானியாகவும், இல்லறத்தாருக்கு இல்லறத்தானாக சிறந்து பலகாலம் பதினாறுவயது போல் வாழலாம் என்கிறார்.

எல்லாம் சரிதான், எத்தனை நாட்கள்? எந்த வேளையில் உண்பது?

இதுவொரு வருடங் கொண்டால் - இவனுக்
கிப்பிறவி போகப்பிற் பிறவியில்லை
தேவலோகம் நாகலோகம் - முழுதும்
தேவ னிவனென்றே செப்பலாகும்
நேராகவே தோன்றும் - மல
நீர்விட்ட இடங்களில் வர்ணம்பேதிக்கும்
அமிர்தம் ரசத்தைக்கட்டும் - அவன்
அவனியிற் பேர்பெற்ற சித்தனப்பா

இந்த கற்பத்தினை காலை அல்லது மாலை வேளையில் தொடர்ந்து ஒருவருடம் உண்ண வேண்டுமாம். அப்படி உண்பதால் இனி பிறப்பே இருக்க மாட்டாது என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் உலகில் பெயர் பெற்ற சித்தனாக இருப்பார்கள் என்கிறார்.

நாளைய பதிவில் திரிகடுக லேகியம் பற்றிய தகவலை பார்ப்போம்.

* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கு மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..திரிகடுக சூரணம்

Author: தோழி / Labels: , , , , ,

திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. "சுக்கு", "மிளகு", "திப்பிலி" என்பவையே அந்த மூன்று மருந்துகள். இந்த மூன்றின் சிறப்பையும், மருத்துவ குணங்களையும் இது வரை பார்த்தோம்.

இந்த மூன்று பொருள்களையும்  கொண்டு திரிகடுக சூரணம், திரிகடுக லேகியம், திரிகடுக குளிகை, திரிகடுக நெய், திரிகடுக குடிநீர் என பலவகையான மருந்துகளை தயாரிக்கும் முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு அருளியிருக்கின்றனர்.

இன்றைய பதிவில் திரிகடுக சூரணம் பற்றி பார்ப்போம்.

சித்தர்களின் மருத்துவத்தில் சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்திய பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் சம எடை எடுத்து நன்கு உலர்த்தி, உரலில் இட்டு இடித்து பொடியாக்கி அதனை சலித்து எடுத்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.இப்படி சூரணமாக்கிய மருந்தினை நோயாளியின் உடல்நிலை, நோயின் தன்மையை பொறுத்து தண்ணீரிலோ, தேனிலோ, அல்லது வேறேதுவும் வகையிலோ உண்ணக் கொடுப்பர். 

அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் திரிகடுக சூரணம் பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் பின்வருமாறு விளக்குகிறார்.

தவறிப்போம் திரிகடுகு சூர ணத்தால்
தருவான மந்தமுடங்க ழிச்சல் தீரும்
தவறிப்போந் தேனிலே கொண்டா யானால்
தருகாது சந்நிசீத ளங்கள் தானுந்
தவறிப்போம் பனைவெல்லங்கூட் டியே யுண்ண
தன்மையுள்ள வயிற்றுநோய் தானே தீருந்
தவறிப்போஞ் சகலநோய தனைக் கண்டால்
தருகாது வைத்தியன்பேர் சொல்லு முன்னே.

சுக்கு, மிளகு, திப்பிலி, சம அளவில் எடுத்து செய்த சூரணத்தால் மாந்தம், கழிச்சல் ஆகியவை தீருமாம். இந்த சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டால் ஜன்னி நோய்கள், குளிரினால் உண்டாகும் நோய்கள் அணுகாது என்றும், இச்சூரணத்துடன் பனைவெல்லாம் சேர்த்துச் சாப்பிட வயிற்று நோய்கள் தீருமாம். அத்துடன் சகலநோய்களும் இச்சூரணத்தைக் கண்டால் அணுகாது என்றும் சொல்கிறார். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


திரிகடுகம் - திப்பிலி

Author: தோழி / Labels: , ,

திரிகடுக வரிசையில் இன்று மூன்றாவது பயிரான திப்பிலி பற்றி பார்ப்போம். மிளகை விடவும் காரமும், உறைப்புத் தன்மையும் கொண்ட திப்பிலி ஒரு செடித்தாவரம். மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக் கிடைக்கிறது. இந்தச் செடியின் காய்தான் நாம் பார்க்க இருக்கும் திப்பிலி ஆகும். இது முள் போல நீண்டிருக்கும். இந்த செடியின் வேரை நன்கு உலர்த்தி எடுத்து மருத்துவத்தில் பயன்படுத்துவது உண்டு, அதனை கண்ட திப்பிலி என்பர். இது தவிர இந்த செடியின் கனிகள் மற்றும் முதிர்ச்சியடையாத பூங்கதிர்களை பறித்து உலர்த்திப் பயன்படுத்துவதும் உண்டு இதனையே "அரிசித் திப்பிலி" என்கின்றனர். இப்படி இந்த செடியின் காய், கனி, பூங்கதிர்கள், வேர் என ஒவ்வொன்றும் மருத்துவப் பயன்களை கொண்டது.

மனித உடலின் மூன்று கூறுகளான வாதம், பித்தம், கபம் என்கிற மூன்றில், கபத்தை உருவாக்கவும் அகற்றவும் திப்பிலி பயன்படுகிறது. ஆம், பச்சைத் திப்பிலி உடலில் கபத்தை உண்டாக்கும். உலர்ந்த திப்பிலியோ உடலில் இருக்கும் கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. சித்தர்களின் மருத்துவத்தில் திப்பிலி தனி மருந்தாகவும், மற்ற மூலங்களோடு சேர்ந்து கூட்டு மருந்தாகவும் நல்ல பலனைத் தருகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய இந்த திப்பிலியின் மகத்துவம் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாமல் போனது வருந்தத் தக்கது. 

திருமூலரின் திருமந்திரத்தில் திப்பிலி பற்றிய குறிப்பு ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தப் பாடல் பின்வருமாறு...

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே

சித்தர்களின் பாடல்களின் ஊடே திப்பிலிக்கு பல்வேறு பரிபாஷை பெயர்கள் கூறப் பட்டிருக்கிறது. இதனை போகர் தனது "போகர் நிகண்டு" எனும் நூலில் தொகுத்துக் கூறீயிருக்கிறார்.

திப்பிலியின் பேர்தனையே செப்பக் கேளு
தீட்சண தண்டுலகமாகு ன்றமாகும்
பப்பிலிபாளாக்கி யாம் சபலமாகும்
பெருத்த சவுண்டிசியமாமுபகுல்லிய மாகும்
வப்பிலியாம் வையதெக்க கோலனாமம்
வாதகுன்மத் திரிதோஷ நாசனியுமாகும்
கப்பிலியாங் கோழைதனை யறுக்குன்ஞ் சூதன்
கருதியதோர் திப்பிலியின் நாமமாமே.

தண்டுலகம், குன்றம், பாளாக்கி, சபலம், சவுண்டிசியம், முகுபல்லியம், வையதெக்கம், கோலன், வாதகுன்ம திரிதோஷ நாசனி, கோழைதனை அறுக்கும் சூதன் என்பன திப்பிலியின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர்.

திப்பிலியின் பொதுவான மருத்துவ பயன்பாட்டினை "பதார்த்த குண விளக்கம்" என்னும் நூல் பின் வருமாறு பட்டியலிடுகிறது.. 

இருமல் குன்ம மிரைப்பு கயப்பிணி
ஈளை பாண்டு சந்நியாச மரோசகம்
பொரும லூதை சிரப்பிணி மூர்ச்சை
நோய்பூரிக் குஞ்சல தோஷம் பிலீகமும்
வரும லப்பெருக் கோடு மகோதரம்
வாத மாதிமுத் தோஷஞ் சுரங்குளிர்
பெரும லைப்புரி மேகப் பிடகமும்
பேருந் திப்பிலிப் பேரிங் குரைக்கவே.
                                       
ஆசனநோய் தொண்டைநோ யாவரண பித்தமுத
னாசிவிழி காதிவைநோய் நாட்புழுநோய்-வீசிடுவி
யங்கலாஞ்ச னஞ்சிதையு மம்பா யழிவிந்துப்
பொங்கலாஞ்சீர் நங்கையர்கோட் போல்.

திப்பிலியால், காசம், கபகுன்மம், சுவாசம், ஷயம், கோழை, பாண்டு, சந்நியாசம், அருசி, வயிற்றுப்பிசம், வாயு, சிரஸ்தாபம், மூர்ச்சை, நீரேற்றம், பீலிகநோய், அதிசாரம், பெருவயிறு, திரிதோஷம், நடுக்கல்சுரம், மேகக்கட்டி, குதரோகம், நெஞ்சுநோய், ஆவிருத பித்தம், பீநசம், விழிநீர்க் கம்மல், கர்ணநாதம், கிருமி, முகத்தில் எழும்புகின்ற கருத்தமச்சம், கருமை செம்மை நிறமுள்ள மச்சம் இவை போக்குவதுடன் நீர்த்த சுக்கிலத்தை இறுக்குமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


திரிகடுகம் - மிளகு

Author: தோழி / Labels: , ,

திரிகடுகம் பற்றிய தொடரில் இன்று மிளகு பற்றி பார்ப்போம். பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் வரை தமிழர்கள் உணவில் கார்ப்பு(காரம்) சுவைக்கு மிளகையே பயன்படுத்தினர். ஆம் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் தற்போதைய மிளகாய் இந்திய துணைக் கண்டத்தில் போர்ச்சுக்கீசியர்களினால் அறிமுகமானது. மிளகைப் போல உறைப்புத் தன்மையுடன் விளங்கியதால் அந்த பயிருக்கு மிளகாய் என்கிற பெயர் வந்தது. இது நம்மில் பலருக்கும் தெரியாத செய்தி. ஆங்கிலத்திலும் கூட இன்றுவரை மிளகாயை, மிளகின் ஆங்கிலப் பெயரான Pepper என்றே அழைக்கின்றனர்.

பழந்தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மூன்று முக்கியப் பொருட்களில் மிளகும் ஒன்று. மற்றவை முத்து, மயிற்பீலி. சங்க நூல்கள் மிளகினைக் கறி என்றே குறிப்பிடுகின்றன. உணவில் மிளகு அதிகமாய் சேர்க்கப் பட்டதால் பின்னாளில் தாவர உணவும், இறைச்சி உணவும் கறி என்கிற பெயரையே பெற்றது. மூடை மூடையாக தங்கத்தைக் கொடுத்து மிளகை வாங்கிப் போனதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று மிளகின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி 

"உழவு நட்பில்லாத நிலமும், மிளகு நட்பில்லாத கறியும் வழவழ" என்ற முதுமொழி மூலம் நமது உணவில் மிளகின் பங்கு எத்தகையது என்பதை அறியலாம். இது ஒரு கொடிவகை தாவரம். உயர்ந்து வளரும் மரங்களின் மீது அல்லது பந்தற்கால்களின் மீது மிளகுக் கொடி தழைத்துப் படரும். பயிர் செய்த மூன்றாம் வருடம் முதல் காய்க்கத் தொடங்கும். காய்கள் சிவப்பு நிறம் அடைந்த உடனே பறித்து வெயிலில் உலர்த்துவார்கள். காயக் காயத் தோல் சுருங்கிக் கறுத்துவிடும். கொதிக்கிற நீரில் ஊறவைத்துக் காய வைப்பதும் உண்டு. தோலோடு இருப்பது சாதாரணக் கறுப்பு மிளகு. தோல் நீக்கியது வெள்ளை மிளகு. வாசனைக்காகவும், காரத்துக்காகவும், மருந்துக்காகவும் மிளகு பயன்படுத்தப்படுகிறது.

சித்தர்களின் பாடல்களில் இந்த மிளகிற்கு பல்வேறு பெயர்கள் பரிபாஷையாக குறிப்பிடப் பட்டிருக்கின்றன. இந்த விவரங்களை போகர் தனது "போகர் நிகண்டு" என்னும் நூலில் பின் வருமாறு பட்டியலிடுகிறார்.

முளகினுடப் பேர்தனையே விளம்பக் கேளு
முதிர்ந்து நின்றத் திரை போக்கி மரிசியாகும்
வளகினுட வலசமுமா தீட்சணமுமாகும்
மகத்தானது வன்மாஞ் சியாமமாகுங்
குளகினுட மூஷ்ணமாம் பத்துவ நேஷங்
கோலக மாஞ்சரநுந் தனியுமாகும்
வளகினுட வாதத்தை யறுக்குகின்ற
மகத்தான முளகுக்கு நாமமாமே.

முதிர், திரைபோக்கி, அரிசி, வலசம், தீட்சணம், வன்மாஞ்சி, சியாமம், உஷ்ணம், பத்துவனேஷம், மஞ்சரம், தனியம் என்பன மிளகின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர்

பொதுவில் உணவில் உள்ள நச்சுத் தன்மையையும், உடலில் உண்டாகும் நச்சுத் தன்மையை முறிக்க பயன்படும் அருமருந்து மிளகு. இதைத்தான் நம் முன்னோர்கள் “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்றனர். பதார்த்த குண விளக்கம் என்னும் நூலில் இரண்டு வகையான மிளகு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவை கருமிளகு, வெள்ளை மிளகு. வெள்ளை மிளகினால் கிரகணி, கப வாதம், சுரம், கீழ்ப்பிரமேகம் ஆகியவை நீங்குமாம்.

"பதார்த்த குண விளக்கம்" எனும் நூல் மிளகின் மருத்துவ குணங்களை பின்வருமாறு பட்டியலிடுகிறது.. 

சீதசுரம் பாண்டு சிலேஷ்மங்கி ராணிகுன்மம்
வாத மருசிபித்த மாமூல - மோதுசந்தி
யாசமபஸ் மார மடன்மேகங் காசமிவை
நாசங் கறிமிளகி னால்.
                                         
கோணுகின்ற பங்கவலி குய்யரோ கம்வாத
சோணிதங்க ழுத்திற்குட் டோன்றுநோய்-காணரிய
காதுநோய் மாதர்குன்மங் காமாலை மந்தமென்றீ
ரேதுநோய் காயிருக்கு லீங்கு.

மிளகினால் குளிர்சுரம், பாண்டு, கபம், கிரகணி, குன்மம், வாயுஅரோசகம், பித்தம், மூலம், சந்நியாசம், அபஸ்மாரம், பிரமேகம், இருமல, பங்குவாதம், குய்யரோகம், வாதசோணிதவாதம், களநோய், செவிவலி ரத்தகுன்மம், காமிலம், அசீரணம் போன்றவை நீங்குமாம். 

சித்தர்களின் மருத்துவத்தில்  மிளகின் பங்களிப்பு மகத்தானது. அவற்றை பட்டியலிட தனியொரு தொடரே எழுதிடலாம். அத்தனை தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. இந்த தொடருக்கு தேவையான இந்த அறிமுகத்துடன் பதிவினை நிறைவு செய்கிறேன். நாளைய பதிவில் திரிகடுகத்தின் மூன்றாவது பயிரான "திப்பிலி" பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..திரிகடுகம் - சுக்கு

Author: தோழி / Labels: , ,

சுக்கு, மிளகு, திப்பிலி என்கிற மூன்றும் இணைந்ததே திரிகடுகம் என்றும், அவற்றின் மகத்துவம் பற்றியும் நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த மூன்று பயிர்களில் முதலாவதாய் அறியப் படும் சுக்கு பற்றி இன்று பார்ப்போம்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை வேக வைத்து உலர்த்தினால் கிடைப்பதுதான் சுக்கு. இஞ்சி நிலத்தின் அடியில் விளையும் கிழங்கு வகைத் தாவரம். இதனை "வேர்கொம்பு" என்றும் அழைப்பதுண்டு. ஆக, உலர்ந்த இஞ்சிதான் சுக்கு. தானே உலர்ந்தால் வெகுவாக சுருங்கும் என்பதால் வேகவைத்து உலர்த்தி எடுக்கிறார்கள். இந்தியாவிலும், சீனாவிலும் இன்னபிற ஆசிய நாடுகளிலும் இஞ்சி பெருமளவில் பயிராகிறது.

இந்த இஞ்சியில் மாங்காய் இஞ்சி என்று ஒரு வகை இருக்கிறது, இது மஞ்சள் வகையைச் சேர்ந்தது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கிழங்கு இஞ்சியை விட சொற்ப அளவு காரமாயும், மாங்காய் வாசனையுடனும் இருக்கும்.மஞ்சள் பயிரைப் போல பார்வைக்கு அழகாயிருக்கும். இந்தவகை இஞ்சிக்கிழங்கு ஊறுகாய்க்கு ஏற்றது, வழக்கமான இஞ்சியை விட நார் குறைவானது. இந்த இஞ்சியில் இருந்து சுக்கு தயார் செய்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்தர் பெருமக்களின் பாடல்களில் இந்த சுக்கு பல்வேறு பெயர்களுடன் பரிபாஷையாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி போகர் தனது  "போகர் நிகண்டு" எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சுக்குனுடப் பேர் தனையே சொல்லக் கேளு
சுண்டியாங்கால் வீதம் விசுவமாகும்
முக்குனுட நாகமாம் பேக்ஷமுமாகும்
முக்கிரமாங் கற்பத்திரஞ் சிறுங்கின் பேர்
நக்கினுட தாத்திரிபஞ் சாதகமுமாகும்
சாங்கமா யுறப்புமாங் கசப்புமாகும்
பக்கினுடத் திறிதோஷ மானியாகும்
பரிபாஷை நாமமெல்லாஞ் சுக்குக்காமே.

சுண்டியம், விசுவம், நாகம், பேஷம், முக்கிரமம், கற்பத்திரம், சிறுங்கி, தாத்திரிபம், சாதகம், உறைப்பு, கசப்பு, திரிதோஷம், மானியம் என்பன சுக்கின் பரிபாஷை பெயர்கள் என்கிறார் போகர். 

சுக்கின் மருத்துவ குணம் பற்றி "பதார்த்த குண விளக்கம்" எனும் நூல் பின்வருமாறு விளக்குகிறது.

வாதப் பிணிவயி றூதற் செவிவாய்
வலிதலை வலிகுலை வலியிரு விழிநீர்
சீதத் தொடுவரு பேதிப் பலரோ
சிகமலி முகமக முகவிடி கபமார்
சீதச் சுரம்விரி பேதச் சுரநோய்
தெளிபடு மெனமொழி குவர்புவி தனிலே
யீதுக் குதவுமி தீதுக் குதவா
தெனும்விதி யிலைநவ சுறுகுண முனவே

சூலைமந்த நெஞ்செரிப்பு தோழமேப் பம்மழலை
மூல மிரைப்பிருமன் மூக்குநீர் - வாலகப
தோஷமதி சாரந் தொடர்வாத குன்மநீர்த்
தோஷமா மம்போக்குஞ் சுக்கு.

விலாக்குத்தல், அஜீரணம், நெஞ்செரிச்சல், தோஷகுணம், புளியேப்பம், வெப்பம், ஆசனநோய், சுவாசம், காசம், ஜலபீநசம், நீரேற்றம், பேதி, வாதகுன்மம், ஜலதோஷம், சீதகிரணி, வாதநோய், வயிற்றுப்பிசம், செவிகுத்தல், முகநோய், சிரநோய், குலைவலி, கபஸ்ராவம், சீதபேதி, பலவித அரோசகம், அலிமுகப்பாண்டு, வயிற்றுக்குத்தல், கபசீதசுரம் முதலாகப் பல சுரங்கள் நீங்குமாம். பொதுவில் சுக்கினால் இந்த நோய்க்குத்தான் மருந்தாகும் என்பதை விட சகலவிதமாய உடற் கோளாறுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் என குறிபிடுகின்றது.

இத்தனை பெருமைகளை தன்னகத்தே கொண்டது சுக்கு. இன்னும் சொல்வதானால் ஒரு முதுமொழியைக் கூறி இந்த பதிவை நிறைவு செய்யலாம்.

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளுமில்லை”

நாளைய பதிவில் "மிளகு" பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


திரிகடுகம் ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels: ,

திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.

"சுக்கு","மிளகு","திப்பிலி" என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து. திரிகடுகம் போலவே திரிபலா என்கிற ஒன்றும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததுதான் திரிபலா. திரிகடுகத்தை மும்மருந்து என்றும், திரிபலாவை முப்பலை என்றும் அழப்பர்.

திரிகடுகத்தின் மகத்துவம் பற்றி சொல்ல வரும்போது தமிழ் இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "திரிகடுகம்" பற்றி கூறியே ஆகவேண்டும். நல்லாதனார் என்பவர் இயற்றிய இந்த நூலின் பெருமையை பழந்தமிழ் பாடல் ஒன்று பின்வருமாறு சொல்கிறது.

     உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
     அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
     திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
     மருவு நல்லாதன் மருந்து.

உடலில் இருக்கும் நோய்களை அகற்றும் சக்தி திரிகடுகம் என்ற மருந்துக்கு இருக்கிறது அதைப்போல நல்லாதன் என்றவர் எழுதிய திரிகடுகம் என்னும் நூலுக்கு மனதின் சஞ்சலங்களான அக நோயை நீக்கும் தன்மை உள்ளது என்கின்றனர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று அறங்கள் சொல்லப்படுகின்றன. இதை பின்பற்றி நடப்போர் உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி பெருவாழ்வு வாழமுடியும்.

எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் "பிங்கலந்தை" என்கிற பிங்கலநிகண்டுவிலும் திரிகடுகம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இது தவிர சித்தர் பெருமக்கள் பாடல்களிலும் திரிகடுகம் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றுதான் திருக்குறள் என்பதும் கூடுதல் தகவல். திருக்குறளின் தரத்துக்கு இனையாக வைத்துப் போற்றப் பட்ட நூல் திரிகடுகம். உடலையும், மனதையும் சீர்படுத்தி மேம்படுத்தும் இந்த திரிகடுகங்களில், உடலை வளர்க்க உதவும் திரிகடுகம் பற்றியே இனிவரும் நாட்களில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..கடைசி வரை.....!

Author: தோழி / Labels: ,

சைவ சித்தாந்தத்தில் மூன்று அடிப்படை கூறுகள் முன் வைக்கப் படுகின்றன. அவை "இறைவன்", "உயிர்கள்", "பாசம்" என்பதாகும். இந்த மூன்றும் நிலைத்திருப்பவை, தனித்துவமானவை. இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை மறக்கவும், மறைக்கவும் கூடியவை மூன்றாவது கூறான பாசம் என்கின்றனர். இந்த பாசத்தை மலம் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த மலத்தை மூன்றாக பிரித்து கூறுகின்றனர். அவை முறையே ஆணவம், கன்மம், மாயை என்பதாகும்.

மனிதன் தன் வாழ்வின் நெடுகே இந்த மும்மலங்களின் ஊடேதான் வாழ்கிறான். இப்படிப் பட்ட மனிதனின் வாழ்வு அல்லது அறிவு குறையுள்ளதாகிறது. இந்த மும்மலங்களை அறுத்தெறிந்து பேரருளான இறை நிலையோடு ஒன்றுவதன் மூலம் பிறவா பேரின்பநிலையை எய்துவதே தம் உயிரின் நோக்கம் என்பதாக சித்தர் பெருமக்களும் கூறியிருக்கினர்.

அந்த வகையில், அந்த திசையில் நம்மைச் செலுத்தும் பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒன்றினை இன்று பார்ப்போம்.

மக்கள் பெண்டிர் சுற்ற மருமக்கள் மற்றவர்
மாளும் போது கூட அவர் மாள்வதில்லையே
தக்க உலகனைத்தும் தந்த கர்த்தனைத்
தாவித்தாவி துதித்து நின்று ஆடு பாம்பே!

- பாம்பாட்டிச் சித்தர்.

மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என பேரன்பினாலும், பெரும் பாசத்தால் கட்டுண்டு ஓருவருக்கொருவராய் வாழ்வதெல்லாம் இந்த உயிர் இருக்கும் மட்டும்தான், உயிர் போன பின்னர் அவர்கள் எவரும் நம்மோடு வருவதில்லை, வரப்போவதுமில்லை. சில நாள் துக்கம், அது தரும் நினைவுகளும் அதன் தாக்கங்களும் நாட்கள் நகர நகர மரத்தோ அல்லது மறந்தே போய்விடுவதுதான் நிதர்சனம்.

இப்படி நிலையில்லாத இந்த மும்மலங்களின் ஊடே சிக்கிடாமல் அவற்றை களைந்து, மனதை ஒருமுகமாக்கி பரம்பொருளை தினம் இடைவிடாமல் துதித்து, அதன் நினைவிலேயே வாழ்வதுதான் உயிரின் இலட்சணமும், இலட்சியமும் என்கிறார்.

இந்த உயரிய தத்துவ கேள்வியைத்தான் கவியரசர் கண்ணதாசன் 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ' என தனது பாடலில் நறுக்குத் தெறித்தார் போல கேட்டிருப்பார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..கதவைத் திற!

Author: தோழி / Labels: ,

பிறப்பை அறுத்து என்றும் பிறவா பேரின்ப நிலையான முக்தி நிலையை எய்துவதை முன் வைத்தே சித்தர் பெருமக்களின் தேடல்கள் அமைந்திருந்தன. அந்த பயணத்தின் ஊடான அனுபவங்களையே நூல்களாக்கி தமது சீடர்களுக்குத் தந்தருளினர். அப்படிப் பட்ட நூல்களின் வழியே பயணிப்பதுதான் நமது வலைப் பதிவின் நோக்கமும் கூட...

அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம், ஆனால் வழியும், இலக்கும் ஒன்றான ஒன்றில் ஒன்றுவதையே முன்னிருத்துகிறது. அப்படியான பயணத்தின் துவக்க நிலைக்கான அனுபவத்தையே இன்று பார்க்க இருக்கிறோம். ஆம்!, பாம்பாட்டிச் சித்தரின் அனுபவம்தான் அது...

பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான்
பெருமருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந்து ஆடாய் பாம்பே!

- பாம்பாட்டிச் சித்தர்.

பிறப்பும், இறப்பும் இல்லாத பிறவா பேரின்ப நிலையை அடைய வேண்டுமானால் முதலில் மனதின் பூட்டைத் திறந்து அங்கே நிறைந்திருக்க்கும் அழுக்குகளை அகற்றி, நிரந்தர ஜோதியான இறையுணர்வு நிரம்பிட, நிறைந்த சிந்தனையுடன் மனதை திறந்தே வைக்கக் கூறுகிறார்.

பூட்டைத் திறந்தால்தான், கதவைத் திறக்க முடியும். மனம் பூட்டுப் போன்றது. பூட்டைத் திறக்கும் சாவிதான் மேலான குருநாதரின் தொடர்பு. அவரது அருளினால் பூட்டுத் திறந்து விடும். பின் அவரது நல்ல அறிவுரைகள் நெறிப்படுத்துவதால் சிந்தைக் கதவும் திறந்து விடும். இறைவன் எளிதாக உள்ளே நுழைந்து விட்டால் எல்லாப் பிறப்பும் நீங்கி விடும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மந்திர சித்திக்கு உருத்திர காயத்திரி ஹோமம்!

Author: தோழி / Labels: ,

தீ வளர்த்து செய்யும் சடங்குகள் குறித்த தகவல்கள் வேதங்கள் துவங்கி பல்வேறு ஆகமங்களின் ஊடே காணக் கிடைக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் இதுவரையில் சித்தர் பெருமக்கள் அருளியவைகளை மட்டுமே பார்த்து வருகிறோம். வேள்வி, யாகம்,ஹோமம், ஓமம் என பல பெயர்களால் வழங்கப் படும் இந்தத் தீச்சடங்கு குறித்த அறிமுகங்களையும் அவற்றின் வகைகளையும் ஏற்கனவே பல பதிவுகளின் ஊடே பகிர்ந்திருப்பதால், நேரடியாக உருத்திர காயத்திரி ஹோமம் பற்றி பார்ப்போம். 

புதியவர்கள் ஹோமம் பற்றிய பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசித்து விட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.

கேளப்பா வட்டஓம குண்டஞ்செய்து
கிருபையுட னாலரசு சமித்தைவாங்கி
சூளப்பா குண்டமதில் தீவளர்த்து
சுத்தமுடன் பசுவின்நெய் வாங்கிமைந்தா
மேளப்பா குருபதத்தில் மனதைவைத்து
வேதாந்த ருத்திரகாயத்திரிசொல்லி
ஆடப்பா நூத்தெட்டு ஆகுதியேசெய்ய
ஆரியென்ற ருத்திர காயத்திரிசித்தே.                

சித்தமுடன் சித்திபெற யிதுவேமூலஞ்ச்
செகத்தோர்க்கு யிந்தமுறை செப்பாதேகேள்
பக்தியுள்ள மந்திரங்கள் பலிக்கவென்றால்
பாலகனே யிந்தமுறை ஓமம்பண்ணு
சுத்தமுடன் சதகோடி மந்திரமெல்லாஞ்
சுருக்காத் தன்வசமே சித்தியாகும்
புத்ததியுடன் சித்தமதா யிருந்துகொண்டு
பூரணமா யஷ்டாங்க யோகம்பாரே.   

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம்.பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த ஹோம குண்டத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.


ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறியவாறே தீயை வளர்க்க வேண்டும்.

தீ வளர்ந்த பின்னர் அதில் ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை போட்டுக் கொண்டே உருத்திர காயத்திரியைச் சொல்ல வேண்டுமாம். இப்படி 108 தடவை மந்திரம் சொல்லி ஆலமரம் மற்றும் அரச மரத்தின் குச்சிகளை போட உருத்திர காயத்திரி மந்திரம் சித்தியாகும் என்கிறார் அகத்தியர்.

இந்த உருத்திர காயத்திரி சித்தியானால் உலகிலுள்ள நூறுகோடி மந்திரங்கள் எல்லாம் விரைவாக சித்தியாகும் என்றும், நாம் சொல்லும் மந்திரங்கள் யாவும் விரைவில் பலிக்குமாம். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.

எல்லாம் சரிதான், உருத்திர காயத்திரி மந்திரம் தான் என்ன?

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.

- அகத்தியர்.

சித்தர்களால் காலங்காலமாய் மிகவும் இரகசியமாக பாதுகக்கப்பட்ட உருத்திர காயத்திரி மந்திரம் "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா" இதுவே என்கிறார். நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..கருநெல்லி கற்பம்

Author: தோழி / Labels: , , ,

சித்தர்கள் அருளிய கற்ப வகைகளின் வரிசையில் இன்று "கருநெல்லி கற்பம்" பற்றி பார்ப்போம். எளிமையான இந்த கற்ப வகையினைப் பற்றிய குறிப்பு அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

கற்பங்களைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும் ஏற்கனவே பல்வேறு பதிவுகளின் ஊடே பகிர்ந்திருக்கிறேன். அவற்றை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இனி அகத்தியர் அருளிய கருநெல்லி கற்பம் பற்றி பார்ப்போம்.

காணவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
கருநெல்லிப் பழமைந்தின் சாருவாங்கி
பேணவே அதுக்குநிகர் தேனுங்கூட்டி
பிரியமுடன் அந்திசந்தி மண்டலங்கொள்ளு
பூணவே வாசியது பொருந்திநின்று
பூரணமாய்த் தேகமது சித்தியாகும்
ஊணவே தேகமது சித்தியானால்
ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே.

- அகத்தியர்.

ஐந்து கருநெல்லிப் பழங்களில் இருந்து சாறு எடுத்து, அதன் எடைக்கு சம அளவில் சுத்தமான தேன் கலந்து உண்ண வேண்டுமாம். இப்படி தினமும் இரு தடவை அந்தி சந்தி வேளைகளில் உண்ண வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கு காலையில் ஐந்து பழம், மாலையில் ஐந்து பழமென இரண்டு தடவை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட கூறுகிறார்.

இப்படி ஒரு மண்டலம், அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டுமாம். ஒரு நாளைக்கு பத்துக் கரு நெல்லி பழங்கள் வீதம், நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் நானூற்றி எண்பது பழங்கள் தேவைப்படும். எனவே இந்த பழங்கள் கிடைக்கும் காலத்தில் இந்த கற்பத்தினை முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு ஒருமண்டல காலம் தொடர்ந்து உண்டால், சுவாசம் சீரடைந்து தேக சித்தியும் கிட்டுமாம். தேக சித்தி கிடைத்த பின் உடலுக்கு எந்த தீங்கும் உண்டாகாது என்றும் சொல்கிறார். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 

வாய்ப்புள்ளவர்கள் இந்த எளிய கற்பத்தினை முயற்சிக்கலாமே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..