அகத்தியர் அருளிய ஆசனங்கள் - மயூராசனம்.

Author: தோழி / Labels:


மயூரம் என்றால் மயில். இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்த்தால் மயில் நிற்பது போல் தெரியும் என்பதால் இந்த பெயர் பெற்றது.மிகவும் நிதானமாக கவனத்துடன் பழக வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனத்தைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

காணவே மயூரா சனத்தைக்கேளு
கருணையுடன் கைரெண்டுந் தரையிலூன்றி
ஊணவே முழங்கையை உந்தியிலேவைத்து
உகந்து நின்ற சிம்மமபோல் உறுதிகொள்ளு

- அகத்தியர்.

முதல் மண்டியிட்டுக் குதிகால் மீது நிமிர்ந்து உட்கார வேண்டும். இதன் பிறகு இரண்டு கை விரல்களும் கால்பக்கமாய் இருக்கும் வகையின் தரையில் அழுத்தமாய் பதிக்க வேண்டும். பின்னர் மெதுவாய் உடலை முன்னே சரித்து வயிற்றுப் பகுதியை முழங்கைகளின் மேல் தாங்கிய பின்னர் ஒவ்வொரு காலாக மெதுவே பின்னோக்கி நீட்டிட வேண்டும்.இந்த நிலையில் முழங்கைகள் மேல் தொப்புளின் அடிப்பகுதியில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் எடை இரண்டு முழங்கைகளிலும் சீராக பரவும் படி இருத்தல் அவசியம். 

இப்போது கால்களை மெல்ல மெல்ல மேலே உயர்த்தி, உடலை முன்னோக்கி சாய்த்தால் படத்தில் உள்ளதைப் போல நிலை இருக்கும். உடலை மெதுவாக முன்னால் நீட்டினால் கால்கள் உயரக் கிளம்பும். தரைக்கு இணையாக உடல் அமைந்த பிறகு தலையாக உயர்த்தி அண்ணாந்து பார்க்க முயல வேண்டும். இந்த நிலையில் பத்து முதல் பதினைந்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெல்ல மெல்லத் தொடக்க நிலைக்கு வர வேண்டும்.

மண்டியிட்டு அமர்ந்திருக்கும்போது காற்றை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.கைகளை விரித்து உள்ளங்கைகளைத் தரையில் அமர்த்தும் சமயம் காற்றை வெளிவிட வேண்டும்.கால்களைப் பின்னால் கொண்டு செல்லும் சமயம் மூச்சை உள்ளுக்கு இழுத்து வயிற்றைக் கெட்டியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆசனத்தை எந்த அளவுக்கு நிதானமாகவும் அவசரப்படாமலும் செய்கிறோமோ அந்த அளவுக்குப் பயன் அதிகமாகக் கிடைக்கும். துவக்கத்தில் உதவிக்கு யாரேனும் கூட இருப்பது அவசியம். 

இந்த ஆசனத்தின் மூலம் முக்கியமாக மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் மலச்சிக்கல், மூலநோய், நீரிழிவு போன்ற பிணிகள் வராமல் தடுக்கலாம். தொந்தி கரைந்து வயிறு தட்டையாகும். பொதுவாக உடலில் உள்ள அதிகப்படியான தசைகள் கரைந்து உடல் கட்டாக அமையும். இந்த ஆசனத்தின் மூலம் கல்லீரலின் செயற்பாடு வலுவடையும். குடல்கள் நன்றாக அழுத்தப்படுவதால் அவற்றின் இயக்கம் சீரடையும். மணிக்கட்டுகளும் முன் கைத் தசைகளும் வலிமை பெறும். இந்த ஆசனத்தின் பலன் துரித காலத்திலேயே தெரியும். 

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

தொடரும்.
Post a Comment

4 comments:

Unknown said...

அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தொடர் இது.. நீங்கள் தொடருங்கள்... நான் விடாமல் துரத்தி வாசிக்கிறேன்! :)

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

Unknown said...

நல்லதொரு பதிவு . நன்றி

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் விளக்கம் மயூராசனம் குறித்து அமைந்தது மிகவும் போற்றத்தக்கது .மிக்க நன்றி .

Post a comment