நீரழிவு நோய்க்கும் மருந்து?

Author: தோழி / Labels: , ,

நமது உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதையே நீரிழிவு என்கிறோம். அடிப்படையில் இது ஒரு உடல் குறைபாடே தவிர பலரும் நினைப்பதைப் போல நோய் இல்லை.

தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த குறைபாட்டினை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிரந்தர தீர்வு என்று எதுவும் இதுவரை அறியப் படவில்லை. இத்தகைய நீரிழிவு பற்றி நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.

யாகோபு தனது “யாகோபு வைத்திய சிந்தாமணி” நூலில் இந்த நீரழிவிற்கு ஒரு தீர்வினை காணமுடிகிறது.

வன்னியிலை யுடனேதா னத்திப்பிஞ்சும்
வகையாக நிழலுலர்த்திச் சூரணித்து
நன்னயமா யெருமைப்பால் தன்னிற்போட
நலமான பாலதுவுந் தோய்ந்து போகும்
சொன்னதிதை நல்லெண்ணெய் தன்னிற்சேர்த்து
சுகமாக மூவிரண்டு நாள்தான் கொள்ள
முன்னுரைத்த நீரிழிவு சலரோகங்கள்
முழுதுமே போகுமென்று மொழிந்தவாறே.

- யாகோபு.

வன்னிமரத்தின் இலை, அத்திப் பிஞ்சு இவை இரண்டையும் நிழலில் உலர்த்திப் பொடித்து சூரணமாகச் செய்துகொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த சூரணத்தை எருமைப் பாலில் போட்டால் பால் துவைந்து போய் விடுமாம். துவைந்த அந்தப் பாலுடன் நல்லெண்ணெய் சேர்த்து ஆறுநாள் உட்கொள்ள நீரிழிவு சலரோகங்கள் யாவும் போகும் என்கிறார். இந்த மருந்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 

இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை என்பதால், தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.

இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே!, தகவல்கள் ஆய்வுக்குட்பட்டவை!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


விஷக்கடி வைத்தியம்

Author: தோழி / Labels: , , ,

இன்று நம்முடைய பேச்சு வழக்கில் இருக்கும் "கை வைத்தியம்", "பாட்டி வைத்தியம்" போன்றவைகள் பெரும்பாலும் சித்தர் பெருமக்கள் தங்களுடைய நூல்களின் வழியே சொன்னவைதான். இம் மாதிரி வைத்திய முறைகள் இன்றும் நகரம் தாண்டிய கிராமப் புறங்களில் வெற்றிகரமாக நடைமுறையில் பயன்படுத்தப் படுகிறது.

பாம்புகள், தேள், விஷ வண்டுகள் போன்றவை கடித்தால் அதற்கான வைத்திய முறைகளை போகர் தனது "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பாரப்பா புகையிலயு மயிலிரகினொடு
பண்பான வெள்ளெருக்கன் வேருங்கூடி
சீரப்பா சுருட்டிபுகை குடித்தாயானாற்
சிறப்பான கொட்டுவிஷ்ந் தீருந்தீரும்
சாரப்பா வுப்பதனைப் பொடித்துவைத்துச்
சார்வான பூரமது கொளுத்திவைத்து
நேரப்பா கண்சிரட்டைக் கொண்டுமூடி
நிலையாகக் கடித்தவிடங் கட்டப்போமே.

போமென்ற குரும்பியையுந் தடவிக்கட்டப்
பொல்லாத கொட்டுவிஷம் போகும்போகும்
நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால்
நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும்
வாமென்ற சடைச்சிவே ரரைத்துத்தின்ன
வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்
ஆமென்ற சீந்திற்றண்டின் பாலையுண்ண
வறியாத விஷங்களெல்லாம் வாங்கும்பாரே.

பாரென்ற வேலியதன் சாற்றையுண்ணப்
பதினெட்டு எலிவிஷமும் பரக்கும்பாரு.

புகையிலையுடன் மயிலிறகின் நடுவில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவைகளைச் சேர்த்து சுருட்டி புகை குடிக்க விஷங்கள் நீங்குமாம். 

விஷக்கடி வாயில் உப்பை பொடியாக இடித்து வைத்து அதன் மேல் பூரத்தை சூடாக்கி வைத்து மூன்று கண்ணுடைய தேங்காய் சிரட்டையால் மூடி அதனை கட்டிவைத்துவிட விஷம் நீங்குமாம்.

விஷக்கடி வாயில் குரும்பியை தடவி துணியால் கட்டிவைக்க விஷம் நீங்குமாம். 

சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்து தின்றாலும், சீந்தில் தண்டில் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்குமாம்.

கொடிவேலிச் சாற்றை உண்ண பதினெட்டு வகை எலிவிஷங்கள் நீங்கும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


வசிய திலகம்!

Author: தோழி / Labels: ,

கடுமையான யோகங்கள், தியானங்கள் செய்யும் போது, மனிதர்கள் மற்றும் விலங்கினங்களினால் இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு வகையான வசிய திலகத்தை சித்தர் பெருமக்கள் பயன்பாட்டில் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக சிவயோகம் செய்திடும் போது இத்தகைய திலகத்தை அணிந்து கொண்டனர் என்கிற தகவல் இராமதேவர் அருளிய "இராமதேவர் சிவயோகம்" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த பாடல்கள் பின்வருமாறு..

ஆமப்பா சிவயோகத் திருக்கும்போது
அருளான திலர்தவகை யொன்றுகேளு
நாமப்பா சொல்லுகிறோ மண்டத்தோட
நலமான மரமஞ்சள் கஸ்தூரிமஞ்சள்
தாமப்பா சாதிக்காய் சாதிப்பத்திரி
தாழம்பூத் தாளுடனே சந்தனமும்பூவுங்
காமப்பால் கல்மதமுங் கஸ்தூரிகோவுங்
களங்கமற்ற புழுகுடனே கற்ப்பூரங்கூட்டே.

கூட்டப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்
குறிப்பாக வோரிடையா யெடுத்துக்கொண்டு
நாட்டப்பா கல்வமதிற் பொடித்துக்கொண்டு
நலமான பழச்சாறும் பன்னீர்வார்த்து
ஆட்டப்பா வடிமிளகு போலேமைந்தா
வரைக்கையிலே புழுகிட்டு அரைத்துநன்றாய்
நீட்டப்பா கயிரதுபோல் நீட்டிக்கொண்டு
நிழலுரத்திப் பதனமதாய் வைத்தக்கொள்ளே.

கொள்ளுகிற விதமென்ன வென்பாயாகிற்
குணமாகச் சிவயோகத் திருக்கும்போது
நல்லுருவாய்த் திலர்தமதை யெடுத்துக்கொண்டு
நாட்டப்பா குருபதிமேற் றிலர்தம்போடச்
சொல்லுகிற மந்திரந்தா னொன்றுகேளு
சுருக்கடா சுவாவென்று திலர்தம்போட்டு
உள்ளுறவா யிடுதயத்தின் மனதைநாட்டி
உம்மெனவே தம்பித்து வொடுங்கிநில்லே.

ஒடுங்கியந்த வொடுக்கமதி லொடுங்கிநில்லு
வுலகத்தி லுள்ளவர்க ளுன்னைக்கண்டாற்
படிந்துவுந்தன் பாதத்திற் பணிவாரையா
பக்குவமாய்ப் பிணியாளர் பணிந்துகண்டால்
நடுங்கிமிகப் பணிந்தோடும் பிணிகளெல்லாம்
நலமான சிவயோகச் செந்தீப்பட்டு
மடிந்துவிடும் பிணிகளெல்லா முலகிலுள்ளோர்
மண்டினிற்பா ருன்சமுகங் கண்டிலாரே.

மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிபத்திரி, தாழம்பூ இதழ், சந்தனம், முப்பூ, காமப்பால், கல்மத்தம், கஸ்தூரி, கோரோசனை, புனுகு, கற்பூரம் ஆகிய பதின்மூன்று சரக்குவகைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். மேலும் அதனுடன் பழச்சாறும் பன்னீரும் சேர்த்து மீண்டும் மைப் போல அரைக்க வேண்டுமாம் அப்போது மிளகு நிறத்தில் அந்த கலவை கிடைக்கும். இந்த கலவையுடன் மேலும் ஒரு பங்கு புனுகு சேர்த்து நன்கு அரைத்து கயிறுபோன்று நீளவடிவாக உருட்டி நிழலில் உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

சிவயோகம் செய்யும் போது முன்னர் சேமித்த கலவையில் சிறிது எடுத்து புருவமத்தியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டுமாம். அப்போது பார்க்கும் மக்கள் எல்லோரும் பணிந்து வணங்கிச் செல்வார்களாம். அத்துடன் மனிதர்கள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினமும் எந்தவித இடையூறும் செய்யமாட்டார்கள் என்கிறார் இராமதேவர். 

ஆச்சர்யமான தகவல்தானே....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க.


தொடர்ந்து ஓடும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உபாயம் ஒன்றினை புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலத்திரட்டு" என்னும் நூலில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஒருவன் இளைப்பில்லாமல் தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருக்கலாம் என்கிறார்.

அந்த பாடல் பின்வருமாறு....

விழுதியை வாயில் மெண்ணு தின்று
விட்டடக்கிக் கொஞ்சம் தாடையிற் சண்ணு
பழுதர வோடவே ளுபாரி லென்னாளும்
பத்தாலு மிளைப்பில்லைப் பரிந்து பண்ணு

புலிப்பாணி.

கையளவு விழுதி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று சுவைத்து அதில் ஒரு பகுதியை விழுங்கிய பின்னர் மீதி இருப்பதை தாடையில் அதக்கி வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தொடர்ந்து ஓடலாமாம். இப்படி ஓடுவதால் களைப்பு, இளைப்பு என எதுவும் தோன்றாது என்கிறார்.

நவீன கால ஓட்டப் பந்தயங்களில் பல்வேறு செயற்கை மருந்துப் பொருட்கள் களைப்பில்லாமல் ஓடுவதற்கு துணை புரிகிறது. ஆர்வமுள்ளோர் இந்த விழுதி இலையை ஆய்வுக்குட்படுத்தி அதன் தன்மைகளை வெளிக் கொண்ரலாமே!

வேறொரு தகவலுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை  ஆங்கிலத்தில் வாசிக்க...சதுரகிரியில் சித்தர்களை நேரில் தரிசிக்க.....

Author: தோழி / Labels: , ,

சதுரகிரி மலையில் சித்தர்களை நேரில் தரிசிக்கும் முறை ஒன்று கோரக்கர் அருளிய ரவிமேகலை என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

அந்த தகவல் பின்வருமாறு..

பக்தியுட னெனதுகோர குண்டாப் பாறை
பருநீருஞ் சுனையருவிப் பாய்ச்சல் புத்தேன்
நித்தியமும் நிறைந்திருக்கும் மலையின் சாரல்
நீரோடுங் கால்புனல்வாய் யருவிப் பக்கல்
சித்தர்களைக் கண்டிடவென் பாறை யுற்றுச்
சிதறாமல் நானோதும் மந்திரத்தை
முக்திபெறக் கண்மூடி நாற்பத் தைந்துநாள்
முயங்காம லிருந்துதோத் திரமும் பாரே.            

தீமையைக் குகையிருக்கும் சித்தர் முத்தர்
தீவிரமாய் உனக்குவரம் தருவார் வந்து
ஊமையென்ற சங்குமையம் உதிக்கக் காட்டி
உண்மையுடன் ஓர்மொழியை உபதே சிப்பார்
ஆமையெழுத் தானதோ ராதி பீடம்
ஆதார மென்றபரை நாட்டாஞ் சொல்வார்
தூமையென்ற கதிகோடு அமுதர் பானத்
தூடாடுஞ் சோதிநிலைச் சொரூப மீவார்.   

சதுரகிரி மலைச் சாரலில், சுனையருவிக்கு அருகில் உள்ள புனல்வாய் அருவிப் பக்கமாய் கோரக்கர் குண்டா என்றொரு பாறை இருக்கிறது.அந்த பாறைக்கு வந்து தான் சொல்லியுள்ள மந்திரத்தை நாற்பத்தி ஐந்து நாள் கண்மூடி இருந்து செபித்து வந்தால் சித்தர்களை தரிசிக்கலாம் என்கிறார்.  

தொடர்ந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திரத்தை செபிக்க மந்திரம் சித்திக்குமாம். மந்திரம் சித்தியடைந்ததும் குகையில் இருக்கும் சித்தர்கள்  காட்சி தந்து "ஊமை" என்று அழைக்கப்படும் சங்கு மையத்தை விழிப்படைய செய்து குரு உபதேசமும் செய்வார்கள் என்கிறார். பின்னர் ஆமை எழுத்தை பீடமாக கொண்ட ஆதாரத்தை நாடும் வழிமுறைகளையும் சொல்லி சோதி நிலைச் சொரூபமும் தருவார்களாம்.

இத்தனை சிறப்பு பொருந்திய இந்த மந்திரத்தை வார்ச்சடையை உடைய ஆத்தாள் தனக்கு சொல்லியதாகவும் அதனை தான் உலகத்தாருக்கு சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.
         
வாச்சடை யாளத்தா ளுரைத்த மந்திரம்
வழங்கிடுவேன் வையகத்தில் வஞ்ச மின்றி
நேர்பெறவே ஓம். பசு.பரபதிபக்ஷ  ராஜ
நிரதிசய சித்ரூப ஞான மூர்த்தோய்
தீர்க்க நேத்ராய, கண, கம், கங், கெங், லங்
லிங், லங், லா, லீலம், ஆவ், பாவ்,ஆம்,ஊம்
பார்கவ்விய சோதிமய வரப்பிர சன்ன
பாத தரிசியே கோரக்கர் சரணாய நமஸ்து.     

ஓம் பசுபரபதிபக்ஷ ராஜநிரதிசயசித்ரூப ஞானமூர்த்தாய தீர்க்கநேத்ராய கணகம்கங் கெங்லங் லிங்லங் லாலீலம் ஆவ்பாவ் ஆம்ஊம் பார்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன பாத தரிஸ்ய கோரக்க சரணாய நமஸ்து.
                 
நாளைய பதிவில் வேறொரு தகவலோடு சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தேரையர் அருளிய பற்பொடி

Author: தோழி / Labels: ,

பற்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் முதுமொழி "ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி" என்பதுதான். நமது முன்னோர்கள் பல் துலக்க இந்த இரண்டு மரத்தின் குச்சிகளைத்தான் பயன்படுத்தி வந்தனர் என்பதாகவே நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் இரு குச்சிகளைத் தாண்டிய பற்பொடிகளையும் நம் முன்னோர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர். அவற்றை பற்பொடி என்பதை விடவும் ஒரு மருந்துப் பொருளாக கருதி பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

சித்தர் பெருமக்கள் இத்தகைய பல்வேறு அரிய பற்பொடிகளைப் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாகவே அருளியிருக்கின்றனர். இத்தகைய பற்பொடிகளை தொடர்ந்து பயன் படுத்தினால் நமது பற்கள் வலிவும், பொலிவும் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தேரையர் அருளிய பற்பொடி ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் “தேரையர் வைத்திய காவியம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போகுந் தந்த வியாதிக் கொருமுறை
ஆகுஞ் சீன மரக்குடன் துத்தமும்
தாகுந் தான்றி தனிக் கடுக்காயுடன்
வாகு மாசிக்காய் வாகாய் விராகனெடெ.

எடுத்து கும்ப மெழிலா யரைத்துமே
கடுத்து மண்டலங் கருதியே தேய்த்திட
அடுத்த தந்த மசையும் பல் லுக்குத்து
முடுத் தப்பாமல் முடுகியே யோடுமே.

சீன அரக்கு, மயில்த் துத்தம், கடுக்காய், மாசிக்காய் ஆகியவற்றை தலா ஒரு விராகன் எடை அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்கு பொடியாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ள பற்பொடி தயார்.

இந்த கலவையைக் கொண்டு ஒருமண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து பல் துலக்கிவர பல் அசைவு, பல் வலி, முரசு சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார். இந்த சரக்குகள் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகர் கண்ட விநாயகரின் சமாதி !

Author: தோழி / Labels: ,

பிள்ளையார் ஆதியில் காணாபத்யம் என்கிற பிரிவின் முழு முதற்கடவுளாய் விளங்கியவர், பின்னாளில் ஷண்மதங்களும் ஒரே குடையின் கீழ் இந்து மதமாய் மலர்ந்த போது இந்து மதத்தின் முழு முதற்கடவுளான சிறப்புடையவர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு செயலையும் விநாயகரை முன்னிறுத்தி அவரை பணிந்தே துவங்குகின்றனர். சித்தர் பெருமக்கள் விநாயகரை எவ்வாறு போற்றித் துதித்தனர் என்பது பற்றிய விவரங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். 

இன்றைய பதிவில் விநாயகரின் சமாதி பற்றிய ஒரு தகவலை பார்க்க இருக்கிறோம். ஆம்!, முழு முதற்கடவுளான விநாயகரின் சமாதியேதான், போகர் தனது "போகர் 7000" ம் என்ற நூலில் இந்த விவரங்களை பகிர்ந்திருக்கிறார். எங்கே என துல்லியமாய் விவரம் கேட்பவர்கள் பாடல் எண் 4900 முதல் 4910 வரையிலான பாடல்களை பார்த்து தெளியலாம். 

பதிவின் நீளம் கருதி போகர் விநாயகரின் சமாதியை தரிசித்த காட்சியை விவரிக்கும் நான்கு பாடல்களை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

தந்தாரே இன்னமொரு மார்க்கம்சொல்வேன்
தயவான புலிப்பாணி மைந்தா கேளு
சொந்தமுடன் அடியேனும் குளிகைகொண்டு
துப்புரவாய் மேருகிரி தன்னில்சென்றேன்
அந்தமுடன் பதின்மூன்றாம் வரையில்சென்று
அவ்வரையில் விநாயகரைக் காணேன்று
விந்தையுடன் அடியேனும் மனதூவந்து
விருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேந்தானே.

தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர்
தண்மையுடன் குருதனையே நினைந்துகொண்டு
தேனான பதின்மூன்றாம் வரையில்சென்றேன்
தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண
கோனான தும்பிக்கையுடைய மாண்பன்
கொற்றவனாம் கணபதியாம் என்றசித்து
மானான மகதேவகன் என்னுஞ்சித்து
மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே.

காணவே விநாயகரின் சமாதிகண்டேன்
கருவான சமாதியது மூடவில்லை
பூணவே அங்குசமும் ஒத்தைக்கொம்பும்
புகழான யானைமுகம் சமாதிபூண்டு
ஊணவே பூமிதனில் சமாதிபூண்டு
உறுதியுடன் இருகரமும் ஏந்திக்கொண்டு
மாணவே வெகுகாலம் இருந்தசித்து
மகத்தான மூன்றுயுகம் கண்டசித்தன்.

சித்தான சித்துமுனி விநாயகந்தான்
சிறப்பான மேருகிரி தன்னிலப்பா
முத்தான பதின்மூன்றாம் வரையில்தானும்
முனையான குளிகையினால் கண்டுஉவந்தேன்
பத்திதரும் நெடுங்காலம் இருந்தசித்து
பாருலகில் சாத்திரத்தின் முதலாம்சித்து
வெத்திபெறும் விநாயக சித்தர்தம்மை
வேகமுடன் மேருவரைதனில் பார்த்திட்டேனே.

களைப்பே இல்லாமல் தொடர்ந்து பயணம் செய்யும் குளிகையை செய்து அதனை பயன்படுத்திடும் முறையை தான் வசிட்ட முனிவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும், அதன் படி அந்த குளிகையை உருவாக்கிய பின்னர், குருவான காலங்கிநாதரை நினைத்து வணங்கியபடி மேரு மலையின் பதின் மூன்றாம் பகுதியில் உள்ள விநாயகரின் சமாதியை காணச் சென்றதாக குறிப்பிடுகிறார்.

குருவருளினால் அந்த மேருமலையில் பதின்மூன்றாம் பகுதியில் விநாயகரின் சமாதியை கண்டதாகவும், அந்த சமாதியானது மூடப் படாமல் திறந்து இருந்ததாகவும் அங்கே அங்குசமும், ஒற்றைக் கொம்பும் யானைமுகமுமாக சமாதி நிலையில் விநாயகர் பூமியில் இருக்கக் கண்டேன் என்கிறார். மூன்று யுகமும் கண்ட சித்தனான விநாயகர் நான்காம் யுகத்தில், உறுதியாக இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டு  சமாதி நிலையில் இருக்கிறார் என்கிறார்.

இந்த தகவல்களை போகர் தனது சீடரான புலிப்பாணிக்கு சொல்வதாக பாடல்கள் அமைந்திருக்கிறது. 

சித்தர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக யாரும் விரிவான கட்டுரைகளோ அல்லது ஆய்வுகளோ செய்திருந்தால் அது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.மிளகு கற்பம் (புதியது)

Author: தோழி / Labels:

நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை அருளியிருக்கின்றனர்.இவை யோக கற்பம், மருத்துவ கற்பம் என இரு வகையில் அடங்கியிருக்கிறது. மருத்துவ காயகற்பங்கள் சிலவற்றை ஏற்கனவே சில பதிவுகளின் ஊடே பகிர்ந்திருக்கிறேன். அந்த வகையில் முன்னரே மிளகு கற்பம் ஒன்றினை பகிர்ந்த நிலையில் இன்று  அகத்தியர் அருளிய மற்றொரு மிளகு கற்பம் பற்றி பார்ப்போம்.

இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....

கேளடா கற்பமொன்று சொல்வேன்மைந்தா
கிருபையுள்ள மாதுரதி யமுர்தந்தன்னை
கேளடா வாங்கியொரு கரகத்திட்டு
கெணிதமுடன் பருமிளகாய் யெடுத்துக்கொண்டு
கேளடா அமுர்தரசத் தேனில்நன்றாய்க்
கெட்டியுடன் சட்டமதா யூறவைத்து
கேளடா நீரறவே யூறிற்றானால்
கேள்வியென்ன அந்திசந்தி ஐந்துகொள்ளே.

கொள்ளையிலே கபமகலும் வாசியேறும்
குருவான பதிதனிலே தீபங்காணும்
சுள்ளையிலே யகப்பட்ட பாண்டம்போலே
சோர்வான தத்துவங்கள் சுத்தமாகும்
பிள்ளையிலே உங்களைப்போல் பிள்ளையுண்டோ
பிலமான அமுர்தரசங் கொண்டதாலே
உள்ளெழுந்த மந்திரத்தின் சித்தியாலே
உத்தமனே சக்கரம்நின் றாடும்பாரே.

நல்ல பெரிய மிளகாக பார்த்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமாம். அந்த மிளகு மூழ்கும் வரை தேனை ஊற்றி, அந்த பாத்திரத்தை மூடி ஒன்றினால் மூடி விட வேண்டும். மிளகானது தேனை முழுவதுமாக உறிஞ்சி, பாத்திரத்தில் தேன் வற்றிப் போன நிலையில் அந்த மிளகை எடுத்து பத்துப் பங்காகப் பிரித்துக் கொள்ள வேண்டுமாம். இதனை அந்தி சந்தி வேளைகளில் ஒவ்வொரு பங்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார்.

இவ்வாறு ஐந்து நாட்கள் உண்டால், கபம் நீங்கி வாசி மேல் நோக்கி ஏறுவதுடன் புருவமத்தியில் ஒளி தென்படுமாம். அத்துடன் சூளையில் சுட்ட மண் பாண்டம் போல் நமது உடல் சுத்தியடைந்து உறுதியாகும் என்கிறார் அகத்தியர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...மிருக வசியம்

Author: தோழி / Labels:

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்கிற தத்துவத்தின் வழி நின்ற சித்தர் பெருமக்களில் பெரும்பாலானோர் மனித நடமாட்டம் அற்ற காடுகள், மலைகளையே தம் உறைவிடமாய் கொண்டிருந்தனர்.அங்கு வாழும் வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி அவற்றோடு இனைந்து வாழ்ந்திட பல உத்திகளை புழக்கத்தில் வைத்திருந்தது அவர்தம் பாடல்களின் ஊடே நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. முன்னரே இது பற்றிய தகவல்களை சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று கருவூரார் அருளிய மிருக வசியம் ஒன்றினைப் பார்ப்போம்.

கருவூரார் தனது இந்த உத்தியை "மிருக ஆக்ருசணம்" என்கிறார். ஆக்ருசனம் என்பது மாதிரீகத்தின் அட்ட கர்மங்களில் ஒன்று, அதாவது ஒருவரை முற்றிலுமாய் ஆக்கிரமித்து தனக்கு அடிபணியவோ அல்லது இணக்கமானவராய் இருக்கச் செய்வதாகும்.  

"கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் இந்த மிருக வசியம் பற்றிய தகவல் பின்வருமாறு காணக் கிடைக்கிறது..

தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால்
சுத்திசெய்து கிழக்குமுகம் நோக்கித்தானும்
மாற்றமுடன் கலைக் கொம்பால் கெல்லிக் கொண்டு
மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று
சொல்லியே வாங்கிதன் வாயிற்போட
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி
அழைத்துடனே மிருக ஆக்ருசணமுமாமே

- கருவூரார்.

தனியாக முளைந்திருக்கும் குப்பைமேனிச் செடி ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து, அந்த செடி இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு நோக்கி இருந்தவாறு, கலைமான் கொம்பினைக் கொண்டு மண்ணைத் தோண்டி வேரினை எடுக்க வேண்டும் என்கிறார்.

இப்படி தோண்டும் போது  "துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமாம். இப்படி சேகரித்த வேரை பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.தேவை ஏற்படும் போது அந்த வேரை வாயில் அடக்கிக் கொண்டு மிருகங்களைக் அழைக்க அவை நன்கு பழகிய மிருகங்கள் போல் நம்மிடம் வரும் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...அகத்தியர் அருளிய ஆசனங்கள் - கோமுகாசனம், சவாசனம்.

Author: தோழி / Labels:

கோமுகம் என்றால் பசுவின் முகம். இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்த்தால் பசுவின் முகம் போல் தெரியும் என்பதால் இந்த பெயர் பெறுகிறது. 

"அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இந்த்க ஆசனத்தைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஆமப்பா கோமுகா சனத்தைக்கேளு
அங்கமுடன் முழங்கால்மேல் முழங்கால்போட்டு
தாமப்பா பாதம்ரெண்டில் கையையூணித்
தானிருக்க கோமுகா சனமதாச்சு


தரையில் அமர்ந்து காலை நீட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுக் காலை மடக்கி வலதுக் காலின் அடியில் விட்டு வலதுப் பக்க புட்டத்தோடு ஒட்டியவாறு வைக்க வேண்டும். வலதுக் காலை மடக்கி இடதுக் காலின் மேல் கொண்டு வந்து இடதுப் பக்க புட்டத்தோடு ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

மெதுவாக மூச்சினை உள்ளிழுத்தவாறு வலதுக் கையைத் தூக்கி முதுகின் பின்புறமாக மடக்கிக் கொள்ள வேண்டும். இடதுக் கையை கீழ் வாட்டமாக மடித்து வலதுக் கை விரல்களை கொக்கி போல் பிடித்துக் கொள்ளவும் (அப்படிக் கைகளை பிடிக்க முடியாதவர்கள் பழகும் வரை தற்காலிகமாக துணியை இரண்டு கைகளுக்கும் நடுவில் பயன்படுத்தலாம்)

இந்த நிலையில் அமர்ந்து பின்னர் மூச்சை மெல்ல வெளியேற்றவும். பின் கை மற்றும் கால்களை மாற்றி ஆசனத்தை பழகலாம். துவக்கத்தில் ஒரு நிமிடம் தொடங்கி நாளடைவில் ஐந்து நிமிடம் வரை பழகலாம்.

கைகள், விரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டை, முதுகு, அடி வயிறு அனைத்தும் பலப்படும். நுரையீரல் விரிவடைதால் உள்ளிழுக்கப்படும் பிராணவாயு முழுமையாக உபயோகிக்கப்படுகிறது. கால்களில் ஏற்படும் தசை பிடிப்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வாயு பிடிப்புகளில் இருந்து நிவாரண அளிக்கிறது 

சவாசனம்

உயிரற்ற அல்லது உணர்வற்ற பிணம் போல உடலை தளர்த்த உதவும் ஆசனம் என்பதால் இந்தப் பெயர் பெறுகிறது. எத்தனை ஆசனங்கள் பழகினாலும் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம் என்கிற வகையில் இந்த ஆசனம் முக்கியத்துவம் பெறுகிறது. சவாசனம் செய்தால் மட்டுமே மற்ற ஆசனங்கள் செய்த பலன் உடலுக்கு கிட்டும்.

பேணவே சவாசனத்தைச் சொல்வேன்
பேணிமனங் கொண்டபடி படுக்கனன்று
பூணவே ஒன்பதுக்கும் விபரஞ்சொன்னேன்
பூரணமா யிருந்துநீயும் மேன்மைகாணே.

விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் நீட்டி படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளவும். கண்களை தளர்வாக மூடிக்கொள்ளவும். இந்த நிலையில் பாதம் துவங்கி மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, மார்பு, கழுத்து,முகம் இவைகள் ஒரு நேர்கோட்டில் இருத்தல் அவசியம். 

உடலை எத்தனை தளர்த்த முடியுமோ அத்தனை தளர்த்தி அதாவது இறந்து போனவரின் உடல் எவ்வாறு அதுபோல உடலைசலனமின்றி 3 முதல் 5 நிமிடம் வரை இருக்க வேண்டும். இந்த சமயத்தில் மூச்சு மெலிதாகவும், சீராகவும் இருத்தல் அவசியம். மனதை வெறுமையாக்கி சிந்தனை எதுவும் இல்லாமல் வைத்திருக்க பழகவேண்டும். 

இந்த ஆசனம் உடல் களைப்பையும், மனச் சஞ்சலத்தையும் போக்கப் பயன்படுகிறது. தசைகள் புத்துணர்வு பெறும். ஆசனங்கள் செய்யும்போது சோர்வு ஏற்பட்டால் இடையிடையே சவாசனம் செய்யலாம். மனோசக்தி வளரும். உடல் நாடி நரம்புகள் நமது ஆளுகைக்கு வந்துவிடும். மனம் ஒருமைப்படுத்தப்படும்.

குறிப்புதனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

இத்துடன் ஆசனங்கள் பற்றிய தொடர் நிறைவடைகிறது. அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...அகத்தியர் அருளிய ஆசனங்கள் - பத்ராசனம், பாதஹஸ்தாசனம்.

Author: தோழி / Labels:

அகத்தியர் அருளிய ஆசனங்களின் வரிசையில் இன்று பத்ராசனம் மற்றும் பாதஹஸ்தாசனம் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

பத்ராசனம்

பத்ரம் என்றால் அனுகூலம். இதனை பழகுவோர் உடலுக்கு அனுகூலமான பலன்களை தரும் ஆசனம் என பொருள் கொள்ளலாம். இந்த ஆசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா பத்திரா சனத்தைகேளு
பதிவாக வஜ்ஜிரதிலிருந்து காலைரெண்டும்
காரப்பா நன்றாகதானகட்டி பிரகாலிலமர்ந்து
கண்ணறிந்து தானோக்க ஆசனமுமாச்சு

வஜ்ராசனத்தில் அமர்ந்து முடிந்தளவு கால்களை அகட்டி கைகளை முன் பக்கம் ஊன்றி, அப்படியே குதிகால்களில் அமர்ந்து கால் விரல்களை உயர்த்திக் கொள்ளவும்.சில வினாடிகள் இந்த நிலையிலிருந்து பிறகு கால் விரல்களை தளர்த்தி பழைய நிலைக்கு வர வேண்டும்.

கால் விரல்கள், தொடைகள், கால்கள், கால்மூட்டுகள் வலுப்பெறும்.  மனம் ஒருமுகப்படுவதற்கு உதவும். தியானம் பழக ஏற்ற ஆசனம். மூட்டுவாதத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். முதல் சக்கரமான மூலாதார சக்கரத்தை இந்த ஆசனம் தூண்டி விடும். 

பாதஹஸ்தாசனம்

பூணடா பாதஹஸ்தா சனத்தைக்கேளு
பூரணமாய் நின்றுநீயும் பாதம்நோக்கி
தாமப்பா குனிந்துநீயும் பாதம்பற்றி
தானிருக்க பாதஹஸ்தா சனமுமாச்சு.

நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.

தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. 

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

தொடரும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...அகத்தியர் அருளிய ஆசனங்கள் - வஜ்ராசனம், புஜங்காசனம்.

Author: தோழி / Labels:

அகத்தியர் அருளிய ஆசனங்களின் வரிசையில் இன்று வஜ்ராசனம் மற்றும் புஜங்காசனம் பற்றி பார்ப்போம்.

வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம் அல்லது வலிமை என பொருள் கொள்ளலாம். நமது உடலிற்கு வயிரம் போல் உறுதி தரும் ஆசனம் என்பதால் இப் பெயர் பெறுகிறது. இதனை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

சாரப்பா வஜ்ஜிர ஆசனத்தைக்கேளு
சங்கையுடன் பரடுமேல் பரடுபோட்டு
சேரப்பா புட்டத்தில் குதிகால்வைத்து
செம்மையுடன் தானிருக்கத் திறந்தானாமே.

முதலில் உடலை தளர்த்தி கால்களை நீட்டிவாறு அமர வேண்டும். பிறகு ஒரு காலை மடித்து அந்த குதிகால் புட்டப் பகுதியைத் தொடுவதுபோல அமர வேண்டும். அதே போலவே மற்றொரு காலையும் மடித்துக் கொள்ள வேண்டும்.குதிகால்களை ஒரு பீடம் போலக் கருதி, புட்டத்தை அதன் மீது பதித்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

முதுகுத் தண்டு வளையாத விதத்தில் நேராக அமர்ந்த பின்னர், கைகள் இரண்டையும் முழங்கால்கள் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மூச்சை இயல்பான ஓட்டத்தில் வைத்திருக்க வேண்டும்.சில வினாடிகள் இந்த நிலையிலிருந்து பிறகு கால்களை விலக்கிப் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இந்த ஆசனம் முழங்கால்களின் மூட்டுகள் நன்றாக அசைந்து மென்மையாகச் செயற்படுவதற்கு இது உதவுகிறது.திரும்பத் திரும்ப இந்த ஆசனத்தைச் செய்யும் போது முழங்கால்கள் நல்ல உரம் பெற்ற நிலையில் கீல்வாயு போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் இருக்கின்றன.பிறப்பு உறுப்புகளுக்கு கூடுதலாக குருதி பாய்கிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

புஜங்காசனம்

புஜங்கம் என்றால் பாம்பு. இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்ப்பதற்கு பாம்பு படம் எடுத்தாற் போல் தெரியும். இந்த ஆசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

நாமப்பா புஜங்கமென்ற ஆசனத்தைக்கேளு
நாட்டமுடன் இருகாலும்நீட்டி கைகளூன்றி
ஓமப்பா தலையுடன்உந்திவரை உயர்த்திக்கொண்டால்
உத்தமனே புஜங்கமென்ற வுறுதிபாரே.

குப்புறப்படுத்து கைகளை உடலுடன் ஒட்டியவாறு வைத்துக் கொள்ளவேண்டும். படுத்தவாறே கைகளை உயர்த்தி தோள்பட்டை அருகே ஊன்றிக் கொள்ள வேண்டும். பின்னர் மெல்ல தலையை உயர்த்தவும். வயிறு முதல் கால் வரை தரையில் ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு கழுத்துக்குக் கீழும், தோள்களுக்கு மத்தியிலுள்ள முதுகுத் தண்டையும் இயன்ற அளவு வளைக்க முயலவும். முழங்கால்கள் ஒட்டியே இருக்க வேண்டும்.

இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடம் வரை இருந்த பின்னர் வயிறு, மார்பு, தலை என ஒவ்வொரு நிலையாக மீண்டும் முதல் நிலைக்கு மெல்ல வரவும்.இந்த ஆசனத்தை பழகிடும் போது முதுகெலும்பு, தோள்பட்டை, அடிவயிறு பலப்படும். மார்பு நன்றாக விரிவடையும். ஊளைச்சதை கரைந்து உடல் எடை குறைக்கலாம்.. முதுகெலும்பின் வளையும் தன்மை அதிகரித்து இளமை காக்கப்படும். குண்டலினி சக்தியும் விழிப்படையும்.

மேலும் முதுகுத் தண்டு, மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புகளை தூண்டி சிறப்பாக செயல்பட வைக்க இந்த ஆசனம் உதவுகிறது.

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

தொடரும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய ஆசனங்கள் - மயூராசனம்.

Author: தோழி / Labels:


மயூரம் என்றால் மயில். இந்த ஆசனத்தில் இருக்கும் பொழுது பார்த்தால் மயில் நிற்பது போல் தெரியும் என்பதால் இந்த பெயர் பெற்றது.மிகவும் நிதானமாக கவனத்துடன் பழக வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனத்தைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

காணவே மயூரா சனத்தைக்கேளு
கருணையுடன் கைரெண்டுந் தரையிலூன்றி
ஊணவே முழங்கையை உந்தியிலேவைத்து
உகந்து நின்ற சிம்மமபோல் உறுதிகொள்ளு

- அகத்தியர்.

முதல் மண்டியிட்டுக் குதிகால் மீது நிமிர்ந்து உட்கார வேண்டும். இதன் பிறகு இரண்டு கை விரல்களும் கால்பக்கமாய் இருக்கும் வகையின் தரையில் அழுத்தமாய் பதிக்க வேண்டும். பின்னர் மெதுவாய் உடலை முன்னே சரித்து வயிற்றுப் பகுதியை முழங்கைகளின் மேல் தாங்கிய பின்னர் ஒவ்வொரு காலாக மெதுவே பின்னோக்கி நீட்டிட வேண்டும்.இந்த நிலையில் முழங்கைகள் மேல் தொப்புளின் அடிப்பகுதியில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் எடை இரண்டு முழங்கைகளிலும் சீராக பரவும் படி இருத்தல் அவசியம். 

இப்போது கால்களை மெல்ல மெல்ல மேலே உயர்த்தி, உடலை முன்னோக்கி சாய்த்தால் படத்தில் உள்ளதைப் போல நிலை இருக்கும். உடலை மெதுவாக முன்னால் நீட்டினால் கால்கள் உயரக் கிளம்பும். தரைக்கு இணையாக உடல் அமைந்த பிறகு தலையாக உயர்த்தி அண்ணாந்து பார்க்க முயல வேண்டும். இந்த நிலையில் பத்து முதல் பதினைந்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெல்ல மெல்லத் தொடக்க நிலைக்கு வர வேண்டும்.

மண்டியிட்டு அமர்ந்திருக்கும்போது காற்றை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.கைகளை விரித்து உள்ளங்கைகளைத் தரையில் அமர்த்தும் சமயம் காற்றை வெளிவிட வேண்டும்.கால்களைப் பின்னால் கொண்டு செல்லும் சமயம் மூச்சை உள்ளுக்கு இழுத்து வயிற்றைக் கெட்டியாக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆசனத்தை எந்த அளவுக்கு நிதானமாகவும் அவசரப்படாமலும் செய்கிறோமோ அந்த அளவுக்குப் பயன் அதிகமாகக் கிடைக்கும். துவக்கத்தில் உதவிக்கு யாரேனும் கூட இருப்பது அவசியம். 

இந்த ஆசனத்தின் மூலம் முக்கியமாக மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் மலச்சிக்கல், மூலநோய், நீரிழிவு போன்ற பிணிகள் வராமல் தடுக்கலாம். தொந்தி கரைந்து வயிறு தட்டையாகும். பொதுவாக உடலில் உள்ள அதிகப்படியான தசைகள் கரைந்து உடல் கட்டாக அமையும். இந்த ஆசனத்தின் மூலம் கல்லீரலின் செயற்பாடு வலுவடையும். குடல்கள் நன்றாக அழுத்தப்படுவதால் அவற்றின் இயக்கம் சீரடையும். மணிக்கட்டுகளும் முன் கைத் தசைகளும் வலிமை பெறும். இந்த ஆசனத்தின் பலன் துரித காலத்திலேயே தெரியும். 

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

தொடரும்.அகத்தியர் அருளிய ஆசனங்கள் - முத்ராசனம்.

Author: தோழி / Labels:

பத்மாசனத்தை தொடர்ந்து இன்று அகத்தியர் அருளிய முத்ராசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

காணடா ஆசனத்தை விரித்துச் சொல்வேன் 
கருவாக முத்ர ஆசனத்தைக் கேளு
தோணடா பத்மாசனதில் இருந்துகொண்டு
தானாக பின்னோக்கி கரங்கள்கோர்த்து
முத்தாக முன்னோக்கி குனிந்துகொள்ள
மயங்காதே முத்ர ஆசனமுமாச்சு

- அகத்தியர்.

பத்மாசனத்திற்காக என்ன நிலையில் அமர்ந்திருந்தோமோ, அதே நிலையில் அமர்ந்து முத்ராசனத்தை செய்ய வேண்டும். பிறகு கைகளை முதுகுப் பக்கமாகக் கொண்டு வந்து, வலது கை மணிக்கட்டுப் பகுதியை இடது கையால் பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பிடிப்பு இலேசாகவும், இலகுவாகவும் இருக்க வேண்டும். முரட்டுத் தனமான பிடிப்பு கூடாது. இவ்வாறு கைகளைப் பிணைத்துக் கொண்ட பிறகு நிதானமாகவும் மெதுவாகவும் முன்புறம் குனிய வேண்டும். நன்றாகக் குனிந்து முன்னாலிருந்து தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். பிறகு பழையபடி பத்மாசன நிலைக்கு வந்துவிட வேண்டும்.

முன்புறம் குனியும் போது மூச்சைத் இயல்பான கதியில் தாராளமாக வெளிவிட வேண்டும். நிமிரும் போது சீரானகதியில்மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும்.இந்த ஆசனத்தைச் செய்யும் சிலர் கைகளைப் பின்புறம் கட்டுவதற்குப் பதிலாக, கைகளால் கால்களின் கட்டை விரலைப் பற்றியவாறு குனிந்து நிமிருவது உண்டு. ஆசனம் பழகும் போது கவனம் சிதறாமல் ஒரு முகமாய் மூச்சை கவனித்து செய்து வர வேண்டும்.

யோக முத்திராசனம் செய்வதன் காரணமாக ஜீரண உறுப்புகளின் செயற்பாடுகள் தூண்டப்பட்டு குடல் இயக்கும் சீராகிறது. நீடித்த மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த ஆசனத்தை பழக தீர்வு கிடைக்கும். இடுப்பு, வயிற்றுப் பாகங்கள் உறுதியகி, பொலிவான அமைப்பைப் பெறவும் இது உதவுகிறது.

முக்கியமாய் வயிற்றில் புண்(Ulcer) அல்லது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகுவலி உடையவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

நாளைய பதிவில் மயூராசனம் பற்றிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.


அகத்தியர் அருளிய ஆசனங்கள் - பத்மாசனம்.

Author: தோழி / Labels:

ஆசனங்கள் என்பவை உடலும் மனமும் சார்ந்த அறிவின் இயல். உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேணிப் பாதுகாக்க எண்ணற்ற ஆசனங்களை நமது முன்னோர் நமக்கு அளித்துச் சென்றிருக்கின்றனர். அவற்றின் சிறப்பை உணர்ந்து தொடர்ந்து பழகுவோர் உயர்வான எண்ணப் போக்குடனும், பொலிவான உடலோடும் நம் மத்தியில் வாழும் ஆவணங்களாய் இருக்கின்றனர்.

சிறப்பான ஆசனங்கள் பல இருந்தாலும் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" எனும் நூலில் ஒன்பது ஆசனங்களை முன்னிறுத்துகிறார்.

சித்தமுடன் நேமவகை பத்துக்கண்டு
தெளிந்துசிவ யோகமது திற்மாய்நிற்க
வெத்தியுள்ள ஆசனந்தா னொன்பதப்பா
விபரமுடன் சொல்லுகிறேன் விரும்பிக்கேளு
பத்தியுள்ள பாதகஸ்தங்கோ முகமும்பத்மம்
பதிவான புஜங்கபத்திரம் முத்ரமொடுவச்சிரம்
முத்தியுள்ள மயூரமொடு சவமதுவுமைந்தா
முதலான நவக்கிரகம் ஒன்பதுஆசனமே.

ஆசனமாய் நின்றதொரு ஒன்பதையுங்கண்டு
அதிலிருந்து தவசுசிவ யேகாஞ்செய்தால்
பூசணமாய் நின்றிலங்கு மாசனந்தான்மைந்தா
புத்தியுட னாசனமே லிருந்துகொண்டு
வாசனையாய் மனதுகந்து வாசிபார்த்து
மனமகிழ்ந்து சிவயோக நிலையில்நின்று
நேசமுடன் பிரணாயஞ் செய்துகொண்டு
நிச்சயமாய்க் கற்பூர தீபம்பாரே.

அவை முறையே....

பத்மாசனம், பத்திராசனம், கோமுகாசனம், மயூராசனம், புஜங்காசனம், முத்ராசனம், வச்சிராசனம், பாதகஸ்தாசனம், சவாசனம்.

இந்த ஒன்பது ஆசனங்களையும் அறிந்து உணர்ந்து பழகி தவசு மற்றும் சிவயோகம் செய்தால் புருவமத்தியில் கற்பூர தீபம் போன்ற ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அனைத்தும் சித்தியாகும் என்கிறார்.

இன்று அகத்தியர் அருளிய முதலாவது ஆசனமான பத்மாசனம் பற்றி பார்ப்போம்.

பத்மாசனம்

பத்மம் என்றால் தாமரை. தாமரையின் இதழ்கள் போல் கால்களை மடித்து வைத்திருப்பதால் இப் பெயர் பெறுகிறது. நீரிலேயே இருந்தாலும் அதில் முழுகாமல் இருக்கும் தாமரையைப் போல உலக சுகங்களில் முழுகாமல் காப்பாற்றும் ஆசனம் எனவும் பொருள் கொள்ளலாம்.

உறுதியுள்ள பத்மமதை சொல்லக்கேளு
உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேற்றி
சுருதியுடன் கைரெண்டும் முழந்தாள்வைத்து
சுத்தமுடன் தன்னகத்தை சுகமாய்ப்பார்க்க
பரிதியுள்ள பத்மாசன மிதென்று
பதிவான வேதாந்தப் பெரியோரெல்லாம்
வரிதியுடன் யெக்கியமா முனிதான்சொல்ல
மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே.


சமமான தரையில் ஜமக்காளம் போன்ற ஏதாவது ஒரு விரிப்பை மடித்துப் போட்டு உட்கார வேண்டும். பிறகு கால்களை நன்றாக நீட்டித் தளர்த்திக் கொள்ள வேண்டும்.முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்க வேண்டும். பிறகு அதே போன்று இடது காலை படிய மடித்து வலது தொடையின் மீது வைக்க வேண்டும். குதிகால்கள் இரு புறமும் அடி வயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல அமைவதுதான் சரியான நிலையாகும்.

முதுகைச் நன்றாக நிமர்த்தி, கை விரல்களைச் சின் முத்திரையில் இரு முழங்கால்களின் மீது நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கண்கள் மூக்கு நுனியைக் கூர்மையாக நோக்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிட நேரம் இருந்த பிறகு மெதுவாகக் கால்களை விடுவித்து முதலில் இருந்த தளர்வு நிலைக்கு வர வேண்டும்.

இந்த ஆசனத்தில் ஈடுபட்டிருக்கும் போது கவனம் சிதறாமல் பழக வேண்டும். துவக்கத்தில் குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்த கால அளவை அதிகரித்துக் கொள்ளலாம். தியான நிலைக்கு மிகவும் வசதியான ஆசன முறை இது. மனதை ஒரு நிலைப் படுத்துவதற்கான பயிற்சிக்கும் இந்த ஆசனம் நல்ல முறையில் பலனைத் தரும்.

நமது நுரையீரலின் இயக்கத்தை ஊக்கப்படுத்தவும், முழங்கால் மூட்டுகள் தொடர்பான பிணிகளை விலக்கவும், தொடைப் பகுதி மற்றும் குதிகால் நரம்புப் பகுதியும் இதனால் வலிவடையும். உடலிலும் மனதிலும் சுறுசுறுப்பான உணர்வு மேலாட இது உதவும்.பத்மாசன முறையில் பயிற்சி பெற்றுவிட்ட பிறகு தரையில் உட்கார வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பத்மாசன அடிப்படையிலேயே அமருவது நல்ல வழக்கமாக இருக்கும்.

குறிப்பு : தனது வேலைகளுக்கு இடையே எனது வேண்டுகோளை ஏற்று சிரமம் பாராது தொடருக்குத் தேவையான ஆசனங்களின் செயல்முறை படங்களை தந்துதவிய நண்பர் திரு. தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி. 

தொடரும்.


ஆசனங்கள் - தகுதியும், உணவும்

Author: தோழி / Labels:

ஆசனங்களை யார் செய்யலாம்?, அதற்கான தகுதிகள் என்ன?, எப்போது செய்யலாம்?, எப்படி செய்யலாம்?, இதற்கான முன் தயாரிப்புகள் என்ன?.... என்பதைப் பற்றிய அறிமுகமே இன்றைய பதிவு.

யோகாசனப் பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டுமே உரியது, பெண்களுக்கானது இல்லை என்றொரு கருத்து உண்டு. பெண்களின் இயல்பான மென்மைத் தன்மை மாறி உடல் முரட்டுத்தனமும், கடினத்தன்மையும் அமைந்து விடும் என்ற காரணங்களையும் சிலர் முன் வைப்பதுண்டு. இவை யாவும் அறியாமை காரணமாகக் கூறப்படும் கருத்துக்கள் ஆகும். குருவின் வழிகாட்டுதலோடு யாரும் இதனை பயிற்சி செயயலாம். மனதை ஒரு நிலைப் படுத்தி கற்றுக் கொள்ளும் ஆர்வமும், தளராத முயற்சியுமே ஆசனங்களை கற்றுக் கொள்ளத் தேவையான அடிப்படைத் தகுதிகள் ஆகும். 

இந்தக் கலையை வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அணுகும் எண்ணப்போக்கு வருந்தத் தக்கது. நமது உடலையும், மனதையும் ஒரே புள்ளியில் குவியச் செய்யும் அனுபவமே ஆசனங்கள். இதன் மூலமாக நமது உயிராற்றலையும், உடல் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் ஆசனங்களின் சிறப்பு. ஒருவரின் உடல் அமைப்பு, வாழ்வியல் சூழல், உடலியல் தேவைகளைப் பொறுத்து ஆசனங்களை தெரிந்தெடுத்து பழகலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நிலையில் குருவின் வழிகாட்டுதல் மகத்தானதாகிறது.

ஆசனங்கள் செய்வதற்கான காலமும் இடங்களும்...

ஆசனங்களை பழகுவதற்கு என சில தெளிவான வரையறைகளை நமது முன்னோர் கூறியிருக்கின்றனர். ஆனால் இன்றைய பரபரப்பான வர்த்தகச் சூழலில் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது வருத்தமான ஒன்று. இதற்கு பல்வேறு சமாதானங்களை செல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வசந்த காலம் எனப்படுகிற சித்திரை, வைகாசி மாதங்கள் யோகாசனப் பயிற்சியைத் தொடங்குவதற்கான சிறந்த காலம் என்றும், அதையடுத்து ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களும் சிறந்த காலம் என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காலங்களில் பயிற்சியை துவங்குவதே சிறப்பு.

நதி, குளம், ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளின் கரையோரப் பகுதிகள் ஆசனங்களை பழக சிறந்த இடம் என்கின்றனர். கிருமிகள், பூச்சிகள் அண்டாத தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே தர்ப்பாசனம் அல்லது புலித்தோல் அல்லது மான் தோல் விரித்து அதன் மீது அமர்ந்து ஆசனங்களைச் செய்தல் வேண்டும். இவை கிடைக்காதவர்கள் வெள்ளைக் கம்பளத்தை பயன்படுத்தலாம். வீட்டில் பழகுவோர் தலைவாசலுக்கு நேராக அமர்ந்து பயிற்சிகளைச் செய்யக் கூடாது. வாசலுக்குச் சற்றுத் தள்ளியிருந்து செய்ய வேண்டும்.அந்தச் சூழ்நிலையில் துர்நாற்றம் ஏதும் வீசாத வகையில் சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபமிட வேண்டும்.

ஆசனப் பயிற்சிகள் முடிந்த பிறகு வியர்வை முற்றிலும் அடங்கும்வரை அமைதியாக இளைப்பாறுதல் அவசியம். பிறகு மெல்லிய சுத்தமான துணியினால் உடலைத் தேய்த்துத் துடைக்க வேண்டும். மேலும் பயிற்சியின் போது மூச்சை உள்ளுக்குள் இழுப்பதையும் வெளியே விடுவதையும் சீரான கதியில் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக மூச்சு மூக்கின் வழியே நடைபெற வேண்டும்.

ஆசனம் பழகுவோருக்கான உணவுகள்.

ஆசனப் பயிற்சியை துவங்கிய பின்னர் உண்ணும் உணவின் அளவு மிதமானதாக அதாவது அரை வயிறு கொள்ளும் அளவுக்கே இருக்க வேண்டும். அதிக சூடும், ஒரேடியாக குளிர்ந்தும் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அவசரமில்லாமல் நிதானமாக உணவை நன்கு மென்று உண்ண வேண்டும். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வாயு சஞ்சாரத்திற்கென உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பழைய மெல்லிய அரிசிச் சாதம், கோதுமைப் பண்டங்களான ரொட்டி, பூரி, ஹல்வா, சோளத்தினால் செய்யப்பட்ட ரொட்டி மற்றும் பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, வாழைக்காய், வாழைப் பூ, வாழைத் தண்டு, இளம் கத்திரிக்காய், கிழங்கு வகைகள். பழ வகைகள், நெய், பால், நெல்லிக்காயினால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் போன்ற உணவு வகைகளை உண்ணுவது உத்தமம்.

கசப்புச் சுவை மிக்க பொருட்களை விலக்க வேண்டும். உப்பு, காரம் மிகவும் குறைவாக உபயோகிக்க வேண்டும். தயிர் உபயோகிப்பதை விலக்கலாம். அவசியம் என்று தோன்றினால் நீர் மோராகப் பயன்படுத்தலாம். விரைவில் செரிமானமாகாத காய்கறிகள் பரங்கிக்காய், வெங்காயம், மாம்பழம் போன்றவற்றை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு அதிகமான குளிர்ச்சியையும், மித மிஞ்சிய சூட்டையும் உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களை முடிந்த மட்டில் தவிர்க்க வேண்டும்.

தொடரும்...


ஆசனம் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels:

ஆசனம் என்ற சொல்லுக்கு இருக்கை, அசையாத இருப்பு நிலை என்றெல்லாம் பொருள் கூறப்படுகிறது. ஆசனம் என்பது வடமொழிச் சொல். தமிழில் இதனை "ஆதனம்" என்றே திருமூலர் குறிப்பிடுகிறார். நம்மில் பலருக்கும் ஆசனம் என்பதை விடவும் யோகாசனம் என்கிற பதமே பரிச்சயமானது. இது குறித்து யோகம் பற்றிய முந்தைய பதிவுகளில் விளக்கியிருப்பதால் தொடருக்கு தேவையான தகவலை மட்டும் இங்கே தொட்டுச் செல்கிறேன்.

யோகம் என்கிற உயர் வாழ்வியல் லட்சியத்தின் எட்டு படி நிலைகளில் மூன்றாவது படி நிலைதான் ஆசனம். இதை திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 

இயமம், நியமம், ஆதனம் (ஆசனம்), பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன யோகத்தின் எட்டு படிநிலைகளாகும். இதனையே அட்டாங்கம் என்று விவரிக்கிறார் திருமூலர்.

முதல் படிநிலையான இயமம் என்பது ஒருவர் தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க விதிகளைப் பற்றி சொல்கிறது. இரண்டாவது படிநிலையான  நியமம் குரு வணக்கத்தையும், இறை பக்தியையும் வலியுறுத்துகிறது. மூன்றாவது படிநிலைதான் நாம் பார்க்க இருக்கும் இந்த ஆதனம்(ஆசனம்).

முதல் இரு நிலைகளில் தேறிய பின்னரே மூன்றாவது நிலையான ஆசனம் பழகிட வேண்டும். ஆனால் பணத்தை முன்னிருத்தும் இன்றைய  அவசர யுகத்தில் முதல் இரு நிலைகளின் முக்கியத்துவத்தை யாரும் கவனிப்பதில்லை அல்லது வலியுறுத்துவதில்லை என்பது வருந்தத் தக்கது. மன இயக்கம் ஒழுங்கில் வந்த பின்னரே உடல் இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வரும் ஆசனம் பழகிட வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பலனையும் நாம் பெறமுடியும் என்கிற அடிப்படையை புரிந்து கொள்ளவது அவசியம்.

சரியான இருக்கை அல்லது ஒரு நிலையில் நிற்றல் என்று பொருள்படும் இந்த ஆசனங்கள் மற்றும் அவற்றின் பலன்களை குறித்து சித்தர் பெருமக்கள் விரிவாகவே தங்களின் நூல்களில் விளக்கியிருக்கின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் அகத்தியர் அருளிய 'அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் ஒன்பது ஆசனங்களையே பார்க்க இருக்கிறோம்.தேர்ந்த குரு ஒருவரின் வழிகாட்டுதலில் இவற்றை பயிற்சி செய்வது சிறப்பு.

இந்த ஆசனங்களை யார் பழகலாம், அதற்கு என்ன தகுதிகள் தேவைப் படும். எந்த இடத்தில், எந்த சமயத்தில் ஆசனம் பழக வேண்டும். இப்படி ஆசனங்களை பழகுவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது பற்றிய விவரங்களோடு நாளைய பதிவில் தொடர்கிறேன்.