பூட்டினை உடைக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: , ,


சித்தர்கள் அருளிய ஜால வித்தைகள் வரிசையில் இன்று பூட்டினை உடைக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். 

ஆம்!, பூட்டினை உடைக்கும் ஜாலம்தான். எதற்காக பூட்டை உடைக்க வேண்டும்?, அதற்கான அவசியம் ஏன் வந்தது என்பதெல்லாம் நமக்கு ஆர்வத்தினை தூண்டும் கேள்விகள். போகர் அருளிய இந்த ஜாலவித்தைக்கு "கருடன் குஞ்சு வித்தை" என்று பெயர். 

பூட்டுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு?, பதில் போகர் அருளிய "போகர் 700"  என்ற நூலில் இருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

வாங்கியே மந்திரத்தினாலே மைந்தா மகத்தான
இலை கசக்கி விலாங்காணி தன்னில்
ஓங்கியே பிழிந்திடவே தெறிக்கும் இன்னம்
உரைக்கின்றேன் கருடனிட குஞ்சு பார்த்து
ஓங்கியதன் கால் விலங்கிட்டப் புறம் போனால்
உள்ள பெருங்கருடன் கந்து மூலி கொண்டு 
தாங்கியே எடுத்து வந்த கூட்டில் வைக்கத்
தலை தெறிக்கும் குஞ்செல்லாம் பறந்து போமே

பறந்துபோம் அக்கூண்டை எடுத்து வந்து
பாங்கான தணல் மூட்டிப் பார்த்தாயானால்
சிறந்ததொரு மூலிகைதான் வேகாது நிற்கும்
சிவசிவா எடுத்து அதனைப் பதனம்பண்ணு
கறந்திட்ட பால்போல் வெள்ளையாய்ச் சொன்னேன்
காட்டாதே தலைதெறிக்கும் இன்னம் ஒன்று

குஞ்சுடன் இருக்கும் கருடனுடைய கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து, தாய் கருடன் இல்லாத நேரத்தில் கருடனின் குஞ்சின் காலில் விலங்கிட்டுவிட்டு தூரமாகச் சென்று கவனிக்க வேண்டுமாம். தாய்க் கருடன் கூட்டிற்கு வந்து குஞ்சின் நிலமையை பார்த்துவிட்டு, வெளியே பறந்து சென்று, மூலிகை ஒன்றை எடுத்து வந்து கூட்டில் வைக்குமாம் அப்போது விலங்கானது தெறித்துப் போகுமாம். அப்போது குஞ்சு தாய்க் கருடனுடன் சுதந்திரமாய்ப் பறந்து போய்விடுமாம்.

குஞ்சுகள் பறந்து போனதும் அக்கூட்டை பத்திரமாக எடுத்து வந்து எரிக்கவேண்டும் என்கிறார். அப்படி எரித்தால் அந்த குறிப்பிட்ட மூலிகையைத் தவிர மற்றதெல்லாம் எரிந்து போய்விடுமாம். அப்போது அந்த மூலிகையை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டுமாம். அந்த மூலிகையைப் பயன்படுத்தி எந்த உலோக பூட்டுக்களையும் தகர்க்கலாம் என்றும் மேலும் அந்த மூலிகையை வைத்து பல சித்துக்கள் செய்யலாம் என்றும் சொல்கிறார்.

இதொரு தகவல் பகிர்வே....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நோயின்றி வாழ...

Author: தோழி / Labels: , ,

உயிரினங்களுக்கு உணவே பிரதானம். எதை உண்கிறோம், எப்படி உண்கிறோம் என்பதில்தான் உடலுக்கு வலுவும் நோவும் வருகிறது. இந்த எளிய உண்மையை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். இது தொடர்பான தெளிவான தீர்வுகள் நம்மிடம் ஏராளமாய் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உணராது உடலையும், உயிரையும் வருத்திக் கொள்கிறோம் என்பது நகைமுரண்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கருத்தினை வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபேர் இரையான்கண் நோய்.

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும், அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.

உடலுக்கு ஒத்து வராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய் வருகிறது. இதையும் வள்ளுவ பெருந்தகை நறுக்கென சொல்லியிருக்கிறார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம் மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

இத்தனை தெளிவான வரையறையை என்றைக்கோ நம் முன்னோர்கள் தீர்மானமாய் சொல்லியிருந்தாலும் இதன் தெளிவுகள் நம்மில் பலருக்கும் தெரியாதவை., அத்தகைய சில நோயணுகா விதிகளை தொகுப்பதே இன்றைய பதிவின் நோக்கம். தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்ட தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி பாடல்களை தவிர்த்திருக்கிறேன். பாடல்களை பின்னூட்டத்தில் வெளியிடுகிறேன்.

தேரையர் அருளிய நோயணுகா விதிகள்.

மலசலங்களை அடக்காமலும், பெண் போகத்தை விரும்பாமலும், உண்ணும்போது காய்ச்சிய நீரையும், பசுமோரை அதிகமாகவும், நெய்யை உருக்கியும் உண்பவர்கள் பேரைச் சொன்னாலே வியாதிகள் நீங்கிவிடும் என பொது விதியாக சொல்கிறார்.

மேலும்...

பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை  உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.

பகலில் உறங்குவதும், தன்னை விட வயதில் மூத்த மாதரை சேர்வதும், இளவெயிலில் உலவுவதும், மலசலங்களை அடக்குவதும், சுக்கிலத்தை அடுத்தடுத்து விடுவதும் உடலுக்கு தீமையைக் கொடுக்கும் என்கிறார். 

இடதுகையை கீழாக வைத்து படுப்பதும், புளித்த தயிரை உண்பதும், பெண்களுடன் மாதத்திற்கு ஒருதடவை மட்டுமே சேர்வதும் உடலுக்கு நன்மையை கொடுக்கும். 

மூல நோயை உண்டாக்கும் பதார்த்த வகைகளை தவிர்க்க வேண்டும். முதல் நாள் சமைத்த கறியை ஒரு போதும் உண்ணக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் உண்பதும், உணவு உண்டதும் பகலில் உறங்குவதும், பசிக்காது உணவு உண்பதும் உடலுக்குத் தீமையைக் கொடுக்கும்.

மிகுந்த தாகம் உண்டானாலும் உணவு உண்ட பின்னரே நீர் அருந்த வேண்டும். அதன் பின்பு அருந்தக் கூடாது. உணவு உட்கொண்ட பின்னர் சிறிது தூரம் நடத்தலும். ஒன்றரை மாதத்திற்கு ஒருதடவை நசியஞ் செய்துக் கொள்வதும், மாதத்திற்கு நான்கு தடவைகள் சவரஞ்செய்து கொள்வதும், மூன்று நாட்கொரு தரம் கண்களுக்கு மையிட்டுக் கொள்வதும் நன்மையை கொடுக்குமாம். 

கருணைக்கிழங்கைத் தவிர மற்றய எந்த கிழங்குகளை உண்பதும், நள்ளிரவில் கஸ்தூரி முதலிய வாசனாதி திரவியங்களையும், பூக்ககளையும் பயன்படுத்துவதும், பெண்கள் நடக்கும் போது பறக்குந் தூசி நம் மீது படும்படி நெருங்கிச் செல்வதும் தீமையைக் கொடுக்குமாம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மரங்களின் நிழல் இவைகளில் தங்குவது கூடாதாம், உட்கொண்ட உணவு  சீரணிக்கும் காலத்தில் புணர்ச்சி செய்வதும், நகத்திலிருந்து தெறிக்கும் நீரும், தலை முடியில் இருந்து தெறிக்கும் நீரும் நம்மீது படுமாறு அவைகள் தெறிக்கும் இடத்தில் இருப்பதும் தீமையைக் கொடுக்கும்.

மாலை நேரத்தில் உணவு உண்பதும், உறங்குவதும், மலசலம் கழித்தலும், புணர்வதும், அழுக்கேறிய ஆடைகளை நீக்குவதும், தலை சீவுவதும் தீமையைக் கொடுக்கும். மேலும் இந்த மாலை நேரத்தில் பசுவையும், முன்னோர்களையும், குருவையும் வணங்கி நிற்பது நன்மையைத் தருமாம்.

இத்தகைய நியதிகளை கடைப்பிடித்து வாழ்பவர்கள் இருக்கும் இடத்தில் எமனுக்கு வேலை ஒன்றும் இருக்காது என்கிறார் தேரையர்.

எளிய விதிகள்தானே, யாரும் பின்பற்றலாம். நவீன மருத்துவமும் தற்போது இத்தகைய கருத்துக்களையே முன்மொழிகிறது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

பிற்சேர்க்கை

நண்பர்களே,

இன்றுடன் சித்தர்கள் ராச்சியம் வலைப்பதிவு தனது 700 வது பதிவினை நிறைவு செய்கிறது. முன்னெப்போதும் சொல்லி வந்ததைப் போலவே இத்தனையும் உங்கள் அனைவரின் அன்பினாலும், ஆதரவினாலும், மேலான குருவின் வழிகாட்டலினாலுமே சாத்தியமாயிற்று.

குருவருள் அனுமதிக்கும் வரை இந்த முயற்சி தொடர்வேன் என்பதை மட்டும் கூறி, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாபநிவர்த்தி தேவைப்படாத ஒரு.....

Author: தோழி / Labels: , , ,

சித்தர்களை பொறுத்த வரையில் குருநாதர் மட்டுமே தூய்மையானவர், உயர்வானவர், முழுமையானவர். அவரை தவிர்த்த மற்ற எல்லாமே மேம்படுத்த வேண்டியவை என்கிற தீவிரமே அவர்களை தேடலை நோக்கி உந்தியது. தாங்கள் அணுகும் ஒவ்வொரு கூறிலும் உள்ள குறைகளை களைந்து மேம்படுத்திடவே அவர்கள் முனைந்தனர் என்றால் மிகையில்லை. இதனை சாப நிவர்த்தி என அழைத்தனர். சித்தரியலில் இது தனியொரு பிரிவாகவே இருக்கிறது. இந்த சாபநிவர்த்தியின் பட்டியல் சிறிய பொருட்களில் துவங்கி மனிதர்கள் வரை நீளுகிறது.

இரசவாதம் மற்றும் மருத்துவத்தில் மூலிகை சாபநிவர்த்தி என்பது ஒரு பெரும் பிரிவு. தேவையான மூலிகையை பூமியில் இருந்து பறிப்பதற்கு முன்னர் செய்திட வேண்டிய முன் தயாரிப்புகளை சாபநிவர்த்தி எனலாம். காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம். பிற செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இவை இரண்டு வகைப்படும், மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். சாப நிவர்த்தி செய்யாது பயன்படுத்தினால் அவை பலனளிக்காது என வலியுறுத்திக் கூறுகின்றனர்.

எதிலும் விதிவிலக்கு இருக்கும்தானே, ஆம்!, ஒரே ஒரு மூலிகை மட்டும் சாபநிவர்த்தி செய்யாமல் பயன்படுத்தலாமாம். அதைப் பற்றியதே இன்றைய பதிவு.

அது என்ன மூலிகை?

இந்த மூலிகை பற்றிய விவரம் கருவூரார் அருளிய "கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு..

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு
செகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்
சுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்
சொல்லவொண்ணா ஆச்சரியம் இறுகுந்தேகம்
சுத்தியென்ற அருக்கனிலே காப்புகட்டிச்
சொல்லடா மந்திரத்தைச் சூட்டுறேனே.

சூட்டுகிறேன் ஓம்வச்சிர ரூபிசூரி
சூரி மகாவீரி சுவாகா வென்று
நாட்டுகிறேன் சமூலமே பிடுங்கிவந்து
நன்றாகச் சூரணம்செய் சீனிநேரே
ஊட்டுகிறேன் கலந்துமண் டலந்தாந்தின்னு
ஒரு நூறு இருபதுமோ வொருநாளும்
மாட்டுகிறேன் பத்திரத்தை வாயிலிட்டு
மைந்தனே மலைகளெல்லாம் நோருக்கலாமே.

நொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்
நூறூழி அளவுவரை இருக்கலாகும்
நோருக்கலாம் எந்தெந்தத் தொழில்கள்தானும்
நோக்காதே மற்றுமொரு கற்பமேனும்
நொறுக்கலாஞ் சத்துருவும் வியாதிதானும்
நுணுக்கமே உலகத்தோர் காணாரப்பா
நொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க
நோக்காதே தேவதைகள் போற்றும்பாரே.

உலகத்தில் மூலிகை எல்லாவற்றிற்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. அதனை அறிந்தவர்கள் இந்த மூலிகையை அப்படியே பயன்படுத்துவார்கள் என்கிறார் மேலும் உலகத்தில் இதன் பெருமை அதிகம் என்றும் சொல்கிறார்.

நத்தைச் சூரியைத் தினமும் உட்கொண்டால் உடல் இறுகுமாம். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரியை பிடுங்க வேண்டுமாம் அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்துச் பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சமன் அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்டால் அதிக வலிமை உண்டாகும் என்கிறார்.நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகுமாம்.

நத்தைச் சூரி விதையை எடுத்துத் தினமும் சாப்பிட்டு வர நீண்ட நெடுங்காலம் வாழலாம் என்கிறார். அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகுமாம். வேறு எந்த கற்ப மருந்துகள் தேவைப்படாது,வியாதிகளும், எதிரிகளும் நெருங்காது வாழலாம் என்கிறார்.இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். என்று சொல்லும் இவர், நத்தைச் சூரியைத் தலையில் வைத்துக் கொள்ள தேவதைகளும் போற்றுவார்கள் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மரணத்தை வெல்லும் வேம்பு கற்பம்!

Author: தோழி / Labels: ,

நமது உடலானது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து கூறுகளால் ஆனது என்பதை முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். உடலில் இவை விரவியிருக்கும் விகிதங்களைப் பொறுத்து உடலை வாதம், பித்தம், சிலேத்துமம் என மூன்று வகையாக நமது முன்னோர்கள் பகுத்திருக்கின்றனர்.. இந்த விகிதங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே நோயாக வெளிப்படுகிறது. இதை கவனித்து சரி செய்யாத பட்சத்தில் நோய் முற்றி கடைசியில் மரணம் நிகழ்கிறது. 

மரணம், இதை நம்மில் யார்தான் விரும்புவோம். மரணத்தோடு போராடுவதே நம்முடைய வாழ்க்கை என்று சொல்கிறவர்களும் உண்டு. ஒரு வகையில் இதுவும் உண்மைதான். மரணத்திற்கு எதிரான போராட்டத்தை மனித குலம் காலம் காலமாய் செய்து கொண்டுதான் இருக்கிறது. இறுதி வெற்றி மரணத்திற்குத்தான் என்றாலும் அதைத் தள்ளிப் போடுவதில் நவீன அறிவியலின் துணையோடு நாம் கணிசமாய் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

இப்படி வெல்லவே முடியாத மரணத்தையும் வெல்ல முடியும் என்று உலகிற்குச் சொன்னவர்கள் நம் சித்த பெருமக்கள். இந்த மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் வழிவகையினை சித்தர்கள் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இவை இரண்டு வகைப்படும் அவை மருத்துவ காயகற்பங்கள், யோக காயகற்பங்கள் என அறியப் படுகின்றன. இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள்/ தேவையுள்ளோர் அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இன்றைய பதிவில் அத்தகைய மருத்துவ காயகற்பம் ஒன்றினைப் பார்ப்போம். போகர் தனது "போகர் 7000" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார். 

சஞ்சீவி யாகுநூற் றாண்டின் வேம்பைச்
சதைப்பட்டை வெட்டி வந்து நிழல் உலர்த்தித்
துஞ்சீவி இடித்துச் சூரணமே செய்து
சுத்தமாங் கருங்குன்றிச் சாறு வாங்கிப்
பஞ்சீவி ஐந்துவீசைப் பாவனமே பண்ணிப்
பரிதிமுன் பரப்பிவடி கட்டிக் கொண்டு
நஞ்சீவி கற்கண்டு நாலில் ஒன்று சேர்த்து
நலமாக மண்டலந்தான் கொண்டி டாயே.

- போகர்.

கொண்டிட்டால் வயிரம்போ லிறுகுந்தேகம்
குறிப்பான கண்ணிரண்டுஞ் சிவப்புமாகும்
உண்டிட்டால் ஊழிவினைப் பயனும்போகும்
உகாந்தமாங் கற்பவரை யிறுகுந்தேகம்
நண்டிட்டா னரம்பதுவு முறுக்குமாகும்
நரதிரையு மாறிப்போம் ஞானமுண்டாம்,
ஒண்டிட்டால் யோகத்தி லுறுதியாகும்
ஒருக்காலுஞ் சாவில்லை உண்மைதானே.

- போகர்.

நூறு வயதைக் கடந்த வேப்ப மரத்தினை சஞ்சீவி வேம்பு என்று குறிப்பிடுகிறார் போகர். இந்த சஞ்சீவி வேம்பின் சதைப் பிடிப்பான பட்டையை வெட்டி எடுத்து, அதனை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை இடித்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்த சூரணத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்கும் வரை கருங்குன்றி மூலிகை சாறுவிடவேண்டுமாம். பின்னர் அதை வெய்யிலில் வைக்க சாறானது வற்றிப் போகும் என்கிறார். 

சாறு வற்றியபின்னர் மீண்டும் மூழ்கும் வரை கருங்குன்றி மூலிகை சாறுவிட்டு சாறு வற்றும் வரை வெய்யிலில் வைக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஐந்து தடவைகள் வைத்து பின் சூரணத்தை எடுத்து வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனுடன் நாலில் ஒரு பங்கு கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நாற்பத்தி எட்டு நாட்கள் உட் கொண்டால் உடம்பு உறுதியாகும், கண்கள் சிவப்பாகும், ஊழ் வினைகள் போகும், நரம்புகள் முறுக்கேறிப்போகும், நரை திரை அனைத்தும் நீங்கி ஞானம் உண்டாகும். யோகம் செய்வதற்கான உறுதியான மனநிலை எற்படும் என்று சொல்லும் இவர் இதனை உண்டவர்களுக்கு ஒரு நாளும் மரணம் இல்லை என்றும் சொல்கிறார். இந்த கற்ப முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

Author: தோழி / Labels: , ,

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. 

பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.


ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம். 

இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer)  தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது. 

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.

புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு...

தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே

மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும் என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திதிகள் - பிற்சேர்க்கை

Author: தோழி / Labels:


கடந்த எட்டு பதிவுகளின் ஊடாக பதினைந்து திதிகளைப் பற்றியும் அவற்றிற்கான அகத்தியரின் பலன்களையும் பார்த்தோம். இந்த தொடரின் நெடுகே இரண்டு நண்பர்கள் மின்னஞ்சல் ஊடே எழுப்பிய கேள்விகளுக்கான எனது புரிதலை இன்று பகிர விரும்புகிறேன். திதி என்பதோ, அல்லது திதிகளின் பெயர்களோ தமிழ் வார்த்தைகள் இல்லை. அவை யாவும் வடமொழியைச் சேர்ந்தவை. அவற்றையே அகத்தியர் தனது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் "நிலவின் பிறை தினம்" என பொருள் கொள்ளலாம்.ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப் பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப் பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

அவை முறையே...

பிரதமை - ஒருமை
துதியை - இருமை
திரிதியை - மும்மை
சதுர்த்தி - நான்மை
பஞ்சமி - ஐம்மை
சஷ்டி - அறுமை
சப்தமி - எழுமை
அஷ்டமி - எண்மை
நவமி - தொண்மை
தசமி - பதின்மை
ஏகாதசி - பதிற்றொருமை
துவாதசி - பதிற்றிருமை
திரையோதசி - பதின்மும்மை
சதுர்த்தசி - பதினான்மை
பவுர்ணமி - நிறைமதி
அமாவாசை - மறைமதி

என்பனவாகும்.

மேலும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் படும் திதிகளின் பண்புகளுக்கும், சித்தர்கள் கூறிடும் பண்புகளுக்குமான வித்தியாசங்கள் ஆய்வுக்குரியவை. வழக்கத்தில் உள்ள பஞ்சாங்கத்திற்கும், சித்தர்கள் அருளிய பஞ்சாங்கத்திற்குமான ஒரு சிறிய வேறுபாட்டினை மட்டும் இங்கே குறிப்பிட்டுக் காட்டிட விரும்புகிறேன்.

பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப் படுகிறது.  இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது.இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறதுஅது பற்றி விளக்கப் புகுந்தால் இந்த வலைத் தளத்தின் நோக்கம் திசை மாறிவிடும் என்பதால் இத்துடன் இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

வேண்டுகோள்: நண்பர்களே, சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவின் தகவல்கள் பிறமொழி நண்பர்களின் வாசிப்புக்காக வேண்டி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதை தாங்கள் அறிவீர்கள். அந்த வரிசையில் இன்று நூறாவது பதிவு மொழிபெயர்க்கப் பட்டு வலையேற்றப் பட்டிருக்கிறது. தமிழறியாத நண்பர்களிடம் இந்த இணைப்பை பகிர்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆக்கங்களை உலகறிய செய்திட வேண்டுகிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுர்த்தசி, பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,


சதுர்த்தசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்....

திரியவே சதுர்த்தசியில் ஜெனனமானோன்
தேசத்தில் தீமையது செய்வோனாவான்
அரியவே பிறர்பொருளை யபகரிப்பான்
அடுத்தவிட மெங்கையுமே கலகஞ்செய்வான்
பிரியவே பிறர்களை தூஷணமே செய்வான்
பேச்சிக்கு முன்னாகக் கோபங்கொள்வான்
சூரியவே குரோதமது வுடையோனாகி
குவலயத்தீ லுருப்பதெனக் கூறிடாயே.


சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும். அடுத்தவர்களிடம் கலகஞ் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும். அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.

பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்
குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்
நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்
நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்
அன்றேல் களங்கமது யுற்றோனாகும்
உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்
பீறவே மந்திரத்தால் பலரைத்தானும்
மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே.


பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்குப் பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாளகுணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூசைசெய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார். 

இத்துடன் திதிகளுக்கான பலன்கள் நிறைவடைந்தன. இந்த தகவல்கள் இறுதியானவையோ என்றோ அல்லது உறுதியானவையோ என்றோ அறுதியிட்டு கூறிடும் தகுதி எனக்கு இல்லை. எனவே இந்த தகவல்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

நாளைய பதிவில் திதிகள் பற்றிய சில சுவாரசியமான உபரி தகவல்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஏகாதசி , துவாதசி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,

திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று ஏகாதசி, துவாதசி மற்றும் திரியோதசி திதிகளுக்கான பலன்களை பார்ப்போம். இந்த தகவல் யாவும் அகத்தியர் அருளிய "அகத்தியர் சோதிட காவியம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை.

ஏகாதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

ஆமெனவே காதசியில் ஜெனனமானோன்
அன்பாக குருவிடத்தில் பிரியமானவன்
தாமெனவே தனதான்னிய முடையோனாகும்
தக்கபடி தானுரைக்கும் நீதிமானாம்
நாமெனவே நாட்டினிலே யெவருமெச்சு
நளினமுடன் நேர்த்தியா னதுவேசெய்வன்
காமெனவே கல்வியினில் வல்லோனாவன்
காசினியில் யாவர்களு மதிக்கத்தானே.

ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் குருவிடத்தில் பிரியமுடையவர்களாகவும், தன தானிய முடையவர்களாகவும், தக்கபடி நீதி சொல்லும் நீதிமான்களாகவும், பூமியில் யாவருங் கண்டு மெச்சும் படியான காரியங்களை நேர்த்தியாக செய்பவர்களாகவும், கல்வியில் வல்லவர்களாகவும், உலகில் எல்லோரும் மதிக்கத்தகவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

துவாதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

தானெனவே துவாதசியில் ஜனனமானோன்
தானதர் மக்களது தழைக்கச் செய்வான்
நானெனவே நல்லகுண சீலமுள்ளான்
நளினமுள்ளான் மிக்கதோர் தனமுள்ளான்
கானெனவே நூதனமாங் காரியங்கள்
கண்டவர்கள் பிரம்மிக்க கருத்தாய் செய்வான்
மானெனவே மங்கையர்கள் மகிழநாளும்
மாரனைப்போல் புவிமீது விளங்குவானே.

துவாதசி திதியில் பிறந்தவர்கள் தானதர்மங்கள் செய்பவர்களாகவும், நல்ல குணமுடையவர்களாகவும், செல்வவளம் படைத்தவர்களாகவும், புதுமையான காரியங்களை அனைவரும் வியக்கும் வண்ணம் செய்கிறவர்களாகவும் இருப்பார்களாம். மேலும் ஆண்களாயின் பெண்கள் மகிழும்படியாக மன்மதனைப் போலும், பெண்களாயின் ஆண்கள் மகிழும்படியாக ரதிபோலும் இருப்பார்கள் என்கிறார்.

திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

வண்மையுடன் திரியோதசியில் ஜெனனமானோன்
வையமிசை தனவந்தனாக வாழ்வான்
பண்மையெனு மினத்தோர்க ளில்லாபாவி
பழிபுரிவான் யாவருக்கு மாகாலோபி
உண்மைதனை யொருபோது மோதமாட்டான்
ஓதுவதெல்லாம் பொய்யே யுறுதிகொள்வான்
தண்மையிலா மாந்திரீக னெனப்பேர் பூண்டு
தன்பெருமை தானோதித் திரிகுவானே.

திரியோதசி திதியில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், பொய்யும், புரட்டுமாய் காலம் தள்ளுகிறவனாகவும், வாக்குச் சுத்தமில்லாதவனாய் இருப்பான் என்கிறார். பொய்யாக தன்னை மாந்திரிகன் என்று சொல்லிக் கொள்ளும் தற் பெருமைக்காரனாயிருப்பான் என்கிறார்.

நாளைய பதிவில் கடைசி இரண்டு திதிகளான சதுர்தசி மற்றும் பௌர்ணமி திதிகளுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம். ஒரு வித்தியாசத்தை நன்றாக கவனியுங்கள் சதுர்த்தி திதி இல்லை சதுர்த்தசி திதி.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நவமி, தசமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,

திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று நவமி மற்றும் தசமி திதிகளுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.

நவமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

காணவே நவமியில் ஜெனனமானோன்
காசினிய லெங்கும் புகழ் பெயரெடுப்பான்
பூணவே தானிருப்பான் ஸ்தூலதேகன் 
பெண்சாதி பிள்ளைகள்மேல் விருப்பமில்லான்
வேணதோர் ஸ்திரீகளின்மேல் லிச்சைகொண்டு
வெகுபேரைச் சேர்த்துமே தான்வசிப்பான்
நாணவே நாணமது சற்றுமில்லான்
நங்கையர்கள் மனம்போலுமே நடப்பான்


நவமி திதியில் பிறந்தவர்கள் உலகில் யாவரும் புகழும் படியான பெயரெடுப்பவர்களாகவும், ஸ்தூல உடம்பு உடையவர்களாகவும், மனைவி, பிள்ளைகள் மேல் விருப்பமில்லாதவர்களாகவும், மற்ற பிற பெண்களின் மீது ஆசை கொண்டு அவர்களில் பலரை சேர்த்து வாழ்பவர்களாகவும், நாணமில்லாத பெண்களின் மனம்போல் நடப்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார். 

தசமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

நடக்கவே தசமியிலே ஜெனனமானோன்
நாட்டிலே புகழாக தர்மஞ்செய்வான்
கொடுக்கவே குணமுள்ளான் குற்றமில்லான்
கூடிய நேசரக் கின்பமுள்ளான்
அடுக்கவே யாசரஞ் சீலமுள்ளான்
அன்பாகும் பெரியோர்கள் நேயமுள்ளான்
தொடுக்கவே துணைவருள்ளான் தோஷமில்லான்
துலங்கிடும் பந்துக்கள் பிரியனாமே.


தசமி திதியில் பிறந்தவர்கள் தர்மஞ்செய்யும் குணமுடையவர்களாகவும், கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், சினேகிதர்களுடன் பிரியமுடையவர்களாகவும், ஆசாரமுடையவர்களாகவும், சீலம் உடையவர்களாகவும், பெரியோர்களிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும், குற்றம் இல்லாதவர்களாகவும், மனைவி, மக்கள், உறவினர்களிடம் பிரியமுடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

இது வரை நாம் பார்த்த குறிப்புகள் இரு பாலாருக்குமானதா இல்லை ஆண்களுக்கு மட்டுமானதா என்பது விவாதத்திற்கும், ஆய்வுக்கும் உரியது. ஏனெனில் குறிப்புகள் ஆண்களை மனதில் கொண்டு கூறப் பட்டிருப்பதைப் போலவே தோன்றுகிறது. இது தொடர்பில் விவரம் தெரிந்தவர்கள் விளக்கிட வேண்டுகிறேன்.

நாளைய பதிவில் ஏகாதசி ,துவாதசி, திரியோதசி திதிகளுக்கான பலன்களை பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சப்தமி, அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,


திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று சப்தமி மற்றும் அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களை பற்றி பார்ப்போம்.

சப்தமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

அரையவே சப்தமியில் ஜெனன மானோன்
அதிகபல முடையதோ ரானதீரன்
நிரையான நிதியுளான் நீடும்பிரபு
நிந்தையிலான் தயாள குணமேயுள்ளான்
குரையிலான் கூருமொழி யுருதியுள்ளான்
குவலயத்தி லனைவருக்கும் நன்மையுள்ளான்
உரையவே யுற்றதோர் மெய்யிற்றானும்
ஓங்குமே க்ஷயரோக மென்றுசெப்பே.

- அகத்தியர்.

சப்தமி திதியில் பிறந்தவர்கள் அதிக வலு உடையவர்களாகவும், தீரர்களாகவும், செல்வம் உடையவர்களாகவும், பிரபுக்களாகவும், இரக்க குணம் உடையவர்களாகவும், உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை செய்யக் கூடியவர்களாகவும், உடலில் காசநோயை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

செம்பவே யட்டமியில் ஜெனன மானோன்
செந்திருவின் கடாட்சமது வுள்ளோனாவான்
ஒப்பவே யோங்கிடும் பிரவிச் செல்வம்
உதவியாஞ் சந்ததியும் விருத்தியாகும்
மெப்பவே மேதினிய லின்னோன்றானும்
மைந்தரினால் கீர்த்தியது மகிட்சியாகும்
தப்பவே க்ஷயரோகம் தன்னைவாட்டும்
தானுமே காமுகனாங்த் திரிவன் காணே.

- அகத்தியர்.

அட்டமி திதியில் பிறந்தவர்கள் திருமகளின் அருளைப் பெற்றவர்களாகவும், பிறவியிலேயே செல்வந்தராகவும், குழந்தைப் பேறு உடையவர்களாகவும், புத்திரர்களினால் புகழ் அடைபவர்களாகவும், காசநோயை உடையவர்களாகவும், காமுகர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் நவமி மற்றும் தசமி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களை பற்றிய அகத்தியரின் தெளிவுகளை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பஞ்சமி, சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,


திதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று பஞ்சமி மற்றும் சஷ்டி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கல் யாவும் அகத்தியர் அருளிய "சோதிட காவியம்" என்னும் நூலில் இருந்து திரட்டப் பட்டவை.

பஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

பாரெனவே பஞ்சமியில் ஜெனனமானோன்
பகரொணா துக்கசா கரணு மாவான்
கூரெனவே சகலகலை வேதம் யாவும்
கொப்பெனவே பார்க்கமன மிகவே யுள்ளான்
நேரெனவே காண்பதற்கு நுட்ப தேகி
நேரிழைமார் தங்களின்மேல் விருப்ப முள்ளான்
காரெனவே காசினியி லின்னோன் தானும்
காமியென வேயிருப்பான் கண்டு சொல்லே.

அகத்தியர்

பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

சொல்லவே சஷ்டிதனில் ஜெனன மானோன்
சோர்வாக வேயிருப்பான் மெலிந்த தேகன்
புல்லவே பிரபுவெனப் புகழத் தானும்
புவியெங்குங் கீர்த்தியது கொள்வான் மேலாய் 
வெல்லவே பிரபுகள் தங்களாலே
வேணதோ ரூபகாரம் வந்து கூடும்
அல்லவே முன்கோபி யாகத்தானும்
அகிலமிசை வாழ்வெனை லுரைகுவாயே


சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள் என்கிறார்.

நாளைய பதிவில் சப்தமி மற்றும் அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திரிதியை, சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

Author: தோழி / Labels: ,

அகத்தியர் தனது "சோதிட காவியம்" நூலில் அருளியுள்ள திதிகளுக்கான பலன்களின் வரிசையில் இன்றைய பதிவில் திரிதியை மற்றும் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களை பார்ப்போம்.

திரிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

கூறப்பா திரிதியையில் ஜெனன மானோன்
குணமுளான் பயமுளான் சுத்த னாகும்
சீரப்பா யெத்தொழிலும் நிதானத் தோடு
சித்தமுடன் யோசித்து முடிக்க வல்லன்
பாரப்பா பிரபுவென யெவரு மெச்சப் 
பலசாலி யாயுலகி லிருந்து தானும்
தேறப்பா தேவா லயங் காளுக்குத்
தேடியே தருமமது செய்கு வானே.

அகத்தியர்.

திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

வாகாக சதுர்த்தியில் ஜெனன மானோன்
வையமிசை யாவர்களு மகிழநல்ல
பாகாக மணிமந்த்ர வாதியாகி
பலருடைய சினேகமது பண்பாய்க் கொள்வன்
ஏகாக யெத்தொழிலு முடிக்க வல்லோன்
எழிலாகுங் காரிய சித்தி யுள்ளோன்
தாகாக தேசசஞ் சாரியாகி
தக்கதோர் கீர்த்தியது கொள்வான் பாரே.

அகத்தியர்.

சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்த்ரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்தக் காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும்  இருப்பார்கள் என்கிறார்.

நாளைய பதிவில் பஞ்சமி மற்றும் சஷ்டி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்.

Author: தோழி / Labels: ,


அமாவாசை அல்லது பௌர்னமிக்கு அடுத்தடுத்த நாட்களான பிரதமை மற்றும் துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம். இந்த தகவல்கள் அகத்தியர் தனது "சோதிட காவியம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை.

பிரதமை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

சீராரும் பிரதமையில் ஜெனித்தோன் றானும்
செய்நன்றி மறவாதான் சித்தி யுள்ளான்
பேராரும் புத்தியுள்ளான் பொருளு முள்ளான்
பொருமையுட னெத்தொழிலும் பொருந்துசெய்வான்
ஏராரு மெல்லோர்க்கும் நல்லோ னாவான்
எத்திசையுங் கீர்த்தியது பெற்று வாழ்வான்
சாராருஞ் சந்தோஷ சித்த னாகி 
சாதுவா யிருப்பனெனச் சாற்றுவாயே

அகத்தியர்.

பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்தச் செயலையும் சிந்தித்துச் சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கிச் சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள் என்கிறார். 

துதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

சாற்றவே துதியையிலே ஜெனித்தொன் றானும்
சத்தியவா னொருக்காலும் பொய்யே சொல்லான்
போற்றவே புகழுடையான் சொன்ன சொல்லைப்
பிறட்டியே யொருக்காலும் பேச மாட்டான்
தேற்றவே தன்னுடைய யினத்தார் தன்னை
தேடியே ரட்சிக்குந் திறமையுள்ளான்
ஏற்றவே எவ்வித முயற்சி யாலும்
எழிலாகப் பொருள் சேர்ப்பா னென்றுகூறே.

அகத்தியர்.

துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை இரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

நாளைய பதிவில் திரிதியை மற்றும் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களை பற்றி அகத்தியர் கூறியவைகளை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திதி - பலன்கள் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் அருளிய சோதிடம் குறித்த எனது புரிதல்களையும், தெளிவுகளையும் முந்தைய பல பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். தவற விட்டவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை காணலாம். அந்த பதிவுகளின் தொடர்ச்சியாக இனிவரும் நாட்களில் அகத்தியர் அருளிய ”பிறந்த திதி பலன்கள்” பற்றி பார்ப்போம். 

சோதியம் கூறுதல் என்கிற தமிழ்ச் சொல்லே திரிந்து மருவி சோதிடமானது. சோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப் படுவதாகும். 

எல்லாம் சரிதான், அது என்ன திதி?

பெளர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாமென நினைக்கிறேன். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர். 

இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

இந்த பதினைந்து திதிகளை பற்றிய விவரங்களை முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். எனவே தயை கூர்ந்து இந்த இணைப்பில் சென்று திதிகளைப் பற்றிய அறிமுகத்தினை வாசித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்தால் புரிதலுக்கு ஏதுவாயிருக்கும். 

இந்த திதிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை பற்றி அகத்தியர் தனது "சோதிட காவியம்" என்னும் நூலில் விவரித்திருக்கிறார். இந்த பிறந்த திதி பலன்களில் அமாவாசை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களைத் தவிர மற்றைய திதிகளில் பிறந்த எல்லோருக்குமான பலன்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமாவசையில் பிறந்தவர்களுக்கான பலன் கூறப்படவில்லை. இதற்கான காரணங்களை தெரிந்தவர்கள் விளக்கினால் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

ஒருவர் பிறந்த திதியை அறிவது எப்படி?

ஒருவர் பிறந்த நேரத்தில் அன்று என்ன திதி நடைபெறுகிறதோ அதுவே அவர் பிறந்த திதி எனப்படும். பொதுவாக எல்லோர் ஜாதகத்திலும் பிறந்த திதி குறிப்பிடப்பட்டிருக்கும் பிறந்த திதி தெரியாதவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பிறந்த திகதியயும் நேரத்தையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் நேரமிருக்கும் போது உங்களுக்கான திதியை பார்த்து சொல்லிவிடுகிறேன்.

இனிவரும் நாட்களில் இந்த திதிகள்  ஒவ்வொன்றுக்கும் அகத்தியர் அருளிய பலன்களை பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புறமருந்து நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் புறமருந்துகள் வரிசையில் கடைசி எட்டு வகை மருந்துகளைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

25. கீறல் - கட்டி, கொப்புளம் முதலியவற்றில் தங்கியுள்ள சீழ், கெட்ட இரத்தம் முதலியவைகள் நீக்க கீறி விடுவது.

26. காரம் - ரணத்தைப் போக்குவதறகோ அல்து உண்டாக்குவதற்கோ பாஷாணப் பொருள் சேர்த்துக் கட்டுவது.

27. அட்டை விடல் - கெட்ட இரத்தத்தை எடுப்பதற்கு அட்டையை விடுவது.

28. அறுவை - அறுத்துச் செய்ய வேண்டியவைகளை அதற்குள்ள  கருவிகளைக்கொண்டு அறுத்துச் சுத்தமாக்கி தைத்து விடுவது.

29. கொம்பு வைத்துக் கட்டல் - ஒடிந்த எலும்புகளை நேராக்கவும், வளைந்தவைகளை நிமிர்த்தவும், மரச்சட்டம் வைத்துத் தக்க கருவிகளால் கட்டுவது.

30. உறிஞ்சல் -  தேவை இல்லாத சீழ், இரத்தம் முதலியவைகளை அதற்குரிய கருவிகளைக் கொண்டு வாய் மூலம் உறிஞ்சி வெளியேற்றுவது.

31. குருதி வாங்கல் - சில நோய்களில் கெட்ட ரத்தம் தங்கி நிற்குமானால் ரத்தக் குழலைக் கீறியோ குத்தியோ ரத்தத்தை வாங்கி வெளியே விடுவது.

32. பீச்சு - மலம் வெளிப்படாமல் அடைபட்டு இருந்தால் அதை வெளியேற்ற மருந்து கலந்த நீரை ஆசனவாயில் பீச்சுவது. காது நோய்களிலும், ரண நோய்களிலும் பீச்சாங் குழல் உபயோகிப்பது உண்டு.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புறமருந்துகள் 17- 24

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் அருளிய அகமருந்துகள் மற்றும் புற மருந்துகள் யாவும் மூன்று அடிப்படை மூலங்களில் இருந்தே உருவாக்கப் படுகின்றன. அவை மூலிகைகள், தாதுபொருள்கள்(உப்பு, உலோகங்கள்), உயிரிகள் (பறவைகள், விலங்குகள், வண்டுகள்).

இந்த வரிசையில் இன்றைய பதிவில்  17 முதல் 24 வரையிலான புறமருந்துகள் அல்லது வெளி மருந்துகள் பற்றி பார்ப்போம்.

17. நீர் - இரணங்களைக் கழுவுவதற்கு பாஷாணச் சரக்குகள் சேர்த்துக் கலந்த மருந்து கிருமி நாசினி.

18. வர்த்தி - பாஷாண சரக்குகளை அரைத்தோ அல்லது மருந்துகளிலோ துணியை நனைத்து திரியாகச் சுருட்டி புரையோடியுள்ள ரணங்களில் வைப்பது.

19. சுட்டிகை - மரம், ஊசி முதலியவைகளில் கொளுத்தி சூடாக்கி நோயுள்ள இடங்களில் இழுப்பது.

20. சலாகை - ஒரு சிறிய மெல்லிய கருவி.

21. பசை - குங்கிலியம் முதலியவைகளில் மெழுகு அல்லது நெய்யுடன் சேர்த்து உருக்கி பசை போல வைத்துக் கொள்வது.

22. களி - உண்ணும் களி போன்ற பக்குவத்தில் சரக்குகளைச் சேர்த்து கிண்டிக் கொண்டு வெளியில் பூசுவது.

23. பொடி - ரணங்களில் தூவுவதற்கு செய்து கொள்கின்ற சரக்குகளின் தூள்.

24. முறிச்சல் - கை, கால் முதலிய உறுப்புகளில் ஏதாவது பிறழ்ந்து சரியான நிலைமை மாறி இருக்கும் பொழுது சரி செய்வது.

நாளைய பதிவில் மீதமிருக்கும் புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வாழ்த்துக்களும்..! வணக்கங்களும்..!!

Author: தோழி / Labels:


இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனையும் படைத்தது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் திரு. எம். சரவண குமார் அவர்கள் சீரும், சிறப்புடனும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.


முருகனின் பெயர்கொண்டு
முனைப்போடு உழைப்பவரே!
பங்குச் சந்தையிலும்
தமிழைப் பவனிவர வைத்தவரே!
எம் வயதிற்கொப்ப
உம் அனுபவங்களையும்
அனுபவங்களின் அறிவையும்
பதிவுகளில் பகிர்ந்தவரே!

இணையம் தந்த இமயமே!
துணையாய் இருந்து
உயர வழிகாட்டிடும்
உற்ற தோழரே!

சங்கடப் பொழுதுகளில்
உடனிருந்து உதவிசெய்து
சப்தமின்றி ஊக்குவிக்கும்
அன்பு நெஞ்சம்கண்டு
அகமகிழ்ந்து போற்றுகிறேன் உம்மை!

இவ்வினிய நன்னாளாம்
உங்கள் ஜனன நாளில்
குருவருளை நான் வேண்டுகிறேன்!
சிந்தை, எண்ணம்,
சொல், செயல்,
குடும்பம்,
வாழ்க்கை,
தொழில்
என அனைத்திலுமே
மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும்
நிம்மதியுடனும்
தொடர்ந்து
வெற்றி நடை போட
குருவருள் என்றும் உமக்கு
குறைவின்றிக் கிடைக்கட்டும்!
வாழ்த்தி வணங்குகிறேன்!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புறமருந்துகள் 9 - 16

Author: தோழி / Labels: ,


நமது உடலானது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து கூறுகளால் ஆனது என்பதை பார்த்தோம். இவை நமது உடலின் ஊடே விரவியிருக்கும் விகிதங்களை பொறுத்து நமது உடலை மூன்று வகையாக வாதம், பித்தம், சிலேத்துமம் என நமது முன்னோர்கள் பகுத்திருக்கின்றனர். பஞ்ச பூதங்களின் கலவையான இந்த உடலில் ஏழு தாதுக்கள் இருப்பதாகவும் முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அவை முறையே சாரம், குருதி, ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை சுக்கிலம் என்பவனவாகும்.

இவற்றில் ஏற்படும் உயர்வு, குறைபாடுகளே நமது உடலில் நோயாக வெளிப்படுகிறது. இவற்றின் தன்மை, பண்பு, நிலை, பக்குவம் ஆகியவைகளை ஆய்ந்தறிந்தே மருந்துகளும் வகை பிரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் கணித்து சரியான மருந்தினையும் அதன் அளவினையும் தெரிவு செய்வது எளிதான காரியமில்லை. குருவருளும், கூர்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மருத்துவரே சரியான மருந்தினை அளிக்க முடியும்.

இன்றைய பதிவில் புறமருந்துகள் 9-16 வரையிலான வகைகளை பார்ப்போம்.

9. மை - இது மூன்று வகைகளாகச் செய்யப்படும்.

அஞ்சனக்கல் முதலியவற்றோடு சில சரக்குளைச் சேர்த்து  இலைச் சாறுகள் விட்டு அரைத்து  உலர்த்திக் கொண்டு தேன் விட்டு மைபோல் அரைத்துக் கொள்வது.

சில சரக்குகளை சுருக்கித் தேன்விட்டு அரைத்துக் கொள்வது.

சில சரக்குகளையும் பூச்சாறுகளையும், குடிநீர்களில் கலந்து கொண்டு தேன் விட்டுக் காய்ச்சிக் கொள்வது.

10. பொடிதிமிர்தல் - சில இலைகளையோ, பொடிகளையோ அரைத்து உடம்பில் தேய்த்து  உருட்டி உதிர்த்து  விடுவது.

11. கலிக்கம் - சில சரக்குகளை சில சாறுகளால் அரைத்து  உருட்டி மாத்திரைகளாக்கிக் கொண்டு, தேவையான போது தேனிலோ வேறு சாற்றிலோ உரைத்துக் கண்ணில் போடுவது.

12. நசியம் - சில இலைகளையோ, பூக்களையோ, கசக்கி மூக்கில் பிழிவது. சில நெய் வகைகளையும் இடுவது உண்டு.  கலிக்க மாத்திரை போல் இதற்கும் செய்து கொண்டு  தாய்ப்பால் விட்டு உரசி இடுவது உண்டு.

13. ஊதல் - சில இலைகள் அல்லது உப்புச் சரக்குகளில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு மென்று நோயாளியின் காது முதலியவைகளில் ஊதுவது.

14. நாசிகாபரணம் - சில சரக்குகள், வேர் முதலியவைகளை தனியாகவோ அல்லது சாறுகளில்  ஊறவத்து பொடியாக்கிச் சலித்து மூக்கில் இடுவது.

15. களிம்பு - பாஷாணங்களை  துவர்ப்பான  சரக்குகளுடன் பொடியாக்கி பசுவெண்ணைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்வது.

16. சீலை - சில பாஷாணங்களை அரைத்துக் குழம்பாக்கி அதில் துணித் துண்டை தோய்த்து ரணங்களுக்கு மேலே உபயோகிப்பது.

நாளைய பதிவில் அடுத்த எட்டுவகை புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

இன்று குருபூர்ணிமா. குருவுக்கான நாள். மேலான குருவை நினைத்து அவரின் அருளை வேண்டி பணிய நலம் பயக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புற மருந்துகள்

Author: தோழி / Labels: ,


சித்தர்களின் மருத்துவத்தில் மருந்துகளானது அகமருந்து, புறமருந்து என இரு பெரும் பிரிவுகளை கொண்டது. இவற்றில் இதுவரை அகமருந்துகள் 32 பற்றிய தகவல்களை பார்த்தோம். அந்த வரிசையில் இந்த வாரத்தின் நெடுகே புறமருந்துகள் பற்றிய விவரங்களினை பார்ப்போம். அகமருந்துகளை வாய் வழியே உட் கொள்வது என்றால் புற மருந்தானது உடலின் மேற்பரப்பில் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகும். உடலின் மீதான வீக்கம், வலி, கட்டிகள், புண்கள், காயங்கள், விஷக்கடி என பல்வேறு வகையான நோவுகளுக்கு புறமருந்து பயன்படுத்தப் படுகிறது.

அகமருந்துகளைப் போலவே புறமருந்துகள் 32 ஆகும். அவை முறையே.....

1.கட்டு, 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடிதிமிர்தல், 11.கலிக்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15.களிம்பு, 16.சீலை, 17.நீர், 18.வர்த்தி, 19.சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டை விடல், 28.அறுவை, 29.கொம்பு வைத்துக் கட்டல், 30.உறிஞ்சல், 31.குருதி வாங்கல், 32.பீச்சு.

இன்றைய பதிவில் முதல் எட்டு வகையான புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

1.கட்டு - இலைகளையோ, பட்டைகளையோ இடித்து அல்லது வேக வைத்து கட்டு கட்டுவது.

2.பற்று - பட்டைச்சோறு அல்லது அரைத்த விழுதை சுட வைத்தோ, சுட வைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புவது.

3.ஒற்றடம் - சுண்ணாம்புக் காரை, தவிடு, செங்கல் பொடி, மணல், சில இலைகள் முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வறுத்து துணியில முடித்து நோயுள்ள இடங்களில் ஒற்றுவது.

4.பூச்சு - கொதிக்க வைத்த இலைச்சாறுகளையோ, நெய்களையோ நோயுள்ள இடங்களில் பூசுவது.

5.வேது - நொச்சித்தழை போன்றவற்றை வெந்நீரில் போட்டு அதில் உண்டாகும் ஆவியைப் பிடிப்பது.

6.பொட்டணம் - சில சரக்குகளை இடித்து சிறு முடிச்சுக்கட்டி நெய் விதைகளில் ஒன்றை வைத்து நனைத்து அந்த முடிச்சை நோயுள்ள இடங்களில் ஒற்றடமாகக் கொடுப்பது.

7.தொக்கணம் - உடல் வலியை நீக்கப் பிடித்து விடுவது. வெறும் கையால் பிடித்து விடுவது, நெய் வகைகளைப் பூசிப் பிடிப்பது என இருவகைப்படும்.

8.புகை - மயலிறகு, சீரகம், விலங்குகளின்  குளம்புகள், மாடு  எருமைக்கொம்பு,  நல்ல பாம்பின்  சட்டை, பன்றி மலம் முதலியவைகளை இடித்து நெருப்பிலிட்டு உண்டாக்குவது.

நாளைய பதிவில் அடுத்த எட்டு புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...