புறமருந்துகள் 9 - 16

Author: தோழி / Labels: ,


நமது உடலானது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து கூறுகளால் ஆனது என்பதை பார்த்தோம். இவை நமது உடலின் ஊடே விரவியிருக்கும் விகிதங்களை பொறுத்து நமது உடலை மூன்று வகையாக வாதம், பித்தம், சிலேத்துமம் என நமது முன்னோர்கள் பகுத்திருக்கின்றனர். பஞ்ச பூதங்களின் கலவையான இந்த உடலில் ஏழு தாதுக்கள் இருப்பதாகவும் முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அவை முறையே சாரம், குருதி, ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை சுக்கிலம் என்பவனவாகும்.

இவற்றில் ஏற்படும் உயர்வு, குறைபாடுகளே நமது உடலில் நோயாக வெளிப்படுகிறது. இவற்றின் தன்மை, பண்பு, நிலை, பக்குவம் ஆகியவைகளை ஆய்ந்தறிந்தே மருந்துகளும் வகை பிரிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் கணித்து சரியான மருந்தினையும் அதன் அளவினையும் தெரிவு செய்வது எளிதான காரியமில்லை. குருவருளும், கூர்ந்த அறிவும், அனுபவமும் உள்ள மருத்துவரே சரியான மருந்தினை அளிக்க முடியும்.

இன்றைய பதிவில் புறமருந்துகள் 9-16 வரையிலான வகைகளை பார்ப்போம்.

9. மை - இது மூன்று வகைகளாகச் செய்யப்படும்.

அஞ்சனக்கல் முதலியவற்றோடு சில சரக்குளைச் சேர்த்து  இலைச் சாறுகள் விட்டு அரைத்து  உலர்த்திக் கொண்டு தேன் விட்டு மைபோல் அரைத்துக் கொள்வது.

சில சரக்குகளை சுருக்கித் தேன்விட்டு அரைத்துக் கொள்வது.

சில சரக்குகளையும் பூச்சாறுகளையும், குடிநீர்களில் கலந்து கொண்டு தேன் விட்டுக் காய்ச்சிக் கொள்வது.

10. பொடிதிமிர்தல் - சில இலைகளையோ, பொடிகளையோ அரைத்து உடம்பில் தேய்த்து  உருட்டி உதிர்த்து  விடுவது.

11. கலிக்கம் - சில சரக்குகளை சில சாறுகளால் அரைத்து  உருட்டி மாத்திரைகளாக்கிக் கொண்டு, தேவையான போது தேனிலோ வேறு சாற்றிலோ உரைத்துக் கண்ணில் போடுவது.

12. நசியம் - சில இலைகளையோ, பூக்களையோ, கசக்கி மூக்கில் பிழிவது. சில நெய் வகைகளையும் இடுவது உண்டு.  கலிக்க மாத்திரை போல் இதற்கும் செய்து கொண்டு  தாய்ப்பால் விட்டு உரசி இடுவது உண்டு.

13. ஊதல் - சில இலைகள் அல்லது உப்புச் சரக்குகளில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு மென்று நோயாளியின் காது முதலியவைகளில் ஊதுவது.

14. நாசிகாபரணம் - சில சரக்குகள், வேர் முதலியவைகளை தனியாகவோ அல்லது சாறுகளில்  ஊறவத்து பொடியாக்கிச் சலித்து மூக்கில் இடுவது.

15. களிம்பு - பாஷாணங்களை  துவர்ப்பான  சரக்குகளுடன் பொடியாக்கி பசுவெண்ணைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்வது.

16. சீலை - சில பாஷாணங்களை அரைத்துக் குழம்பாக்கி அதில் துணித் துண்டை தோய்த்து ரணங்களுக்கு மேலே உபயோகிப்பது.

நாளைய பதிவில் அடுத்த எட்டுவகை புறமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

இன்று குருபூர்ணிமா. குருவுக்கான நாள். மேலான குருவை நினைத்து அவரின் அருளை வேண்டி பணிய நலம் பயக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

Unknown said...

amazing post

Gnanam Sekar said...

நன்றி தோழி அவர்களே

Prasanna said...

Thank You !.

Ramalakshmi Kasi said...

is there any specific time to take medicine?

Post a Comment