இரசவாதத்தில் யந்திரங்கள் - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் பயன் படுத்தப் படும் யந்திரங்களின் வரிசையில் இதுவரை ஆறு வகையான யந்திரங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று செந்தூரம் எரிக்கும் யந்திரம், வாலுகா யந்திரம், திராவக வாலை யந்திரம் என்ற மூன்று வகையான யந்திரங்களை பற்றி பார்ப்போம்.

செந்தூரம் எரிக்கும் யந்திரம்

அடிப்பகுதி தட்டையாகவும் வாயகன்றும் சம அளவு உள்ள இரண்டு பாத்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றில் செந்தூரம் ஆக்க வேண்டிய சரக்கினை போட்டுக் கொண்டு மறு பாத்திரத்தினை இதன் மீது கவிழ்ந்த நிலையில் மூடிக் கொள்ள வேண்டும். இரண்டு பாத்திரங்களின் வாயும் ஒன்றன் மீது ஒன்றாகப் பொருந்தி இருக்குமாறு வைத்து ஏழு சீலை மண் செய்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

பிறகு அடிப்பகுதியில் உள்ள பாத்திரத்தை எரியும் அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு எரிக்க உள்ளே உள்ள சரக்கு தீயின் வெப்பத்தினால் உருகி செந்தூரம் ஆகும். இந்த முறைக்கு உதாரணம் சொல்ல வேண்டும் எனில் அயக்காந்த செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம் போன்றவற்றினை இந்த முறையில் தயாரிக்கலாம். 

வாலுகா யந்திரம்...

ஏழு அழுக்குத் துணிகளால் சுற்றப்பட்டு இருக்கும் ஒரு குப்பியினுள் எரிக்கப் பட வேண்டிய சரக்குகளை இட்டுக் கொள்ள வேண்டும். மருந்தின் தன்மைக்கு ஏற்றவாறு குப்பியின் வாயை அடைத்தோ அல்லது அடைக்காமலோ இருக்கலாம். இப்போதுஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சரக்குகள் உள்ள குப்பியினை அதன் நடுவில் வைக்க வேண்டும். குப்பியின் உயரத்தில் பாதி அளவிற்கு பாத்திரத்தில் மணலை கொட்டி நிரப்ப வேண்டும். 

சில வகை மருந்து தயாரிப்புக்கு குப்பியின் கழுத்து வரை கூட மணலிடுவதுண்டு. சொல்லப்பட்டு இருக்கும் கால அளவுக்கு அடுப்புத் தீயினால் எரித்து பின் இறக்கி ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய பிறகு குப்பியை பாத்திரத்தில் இருந்து எடுத்து விட வேண்டும். மணல் சூடேறி அந்த சூட்டின் உதவி கொண்டு குப்பியில் போடப்பட்டு இருக்கும் சரக்குகள் மருந்துகளாக பக்குவம் ஆகியிருக்கும்.இந்த முறைக்கு உதாரணத்திற்கு பூரண சந்திரோதயம், காள மேக நாராயண செந்துரம், தங்கவுரம் ஆகியவை தயாரிக்கப் படுகிறது. 

திராவக வாலை இயந்திரம்

கடைச் சரக்குகளையும் பச்சிலைகளையும் தீ நீராக வடிக்கவும் கார சாரங்களை திராவகமாக வடித்து எடுக்கவும் பயன்படக் கூடியதே திராவக வாலை யந்திரம் ஆகும். 

படத்தில் உள்ளதைப் போல வட்ட வடிவமான தடுப்பு ஒன்று இந்த வாலை யந்திரத்தின் உட்பகுதியில் இருக்கும். இதற்குக் கீழே ஒரு பகுதியில் இருக்கும் நீராவி நீர்ப்பகுதியில் சூடான நீர் வரக்கூடிய குழாய் ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். இப்போது திராவகம் தயாரிப்புக்குத் தேவையான காரசாரங்களை பானையில் போட்டு வாலையின் சூடான நீர் வரக் கூடிய குழாயுடன் பொருந்திய பாகத்தினை பானையுடன் சேர்த்து மூடி சிலை மண் செய்து இடைவெளி சிறிதும் இல்லாமல் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்புத் தீயின் அனலால் பானையில் உள்ள காரசாரங்கள் கொதித்து ஆவியாகி மேலெழும்பும்.  இப்படி மேலெழும்பிய ஆவி வாலை யந்திரத்தின் சுவரில் முட்டி தடுப்புக்கு மேல்புற குளிர்ந்த நீரின் தன்மையினால் குளிர்ச்சியடைந்து ஆவி நீராகி குழாய் மூலம் கீழே தனியாக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தினுள் இறங்கும். இப்படி இறங்கும் நீர்மமே திராவகம் ஆகும்.

வாலையில் உள்ள தடுப்புக்கு மேல இருக்கும் குளிர்ந்த நீர் நேரம் செல்லச் செல்ல சூடு அடையும். ஆதலால் அந்த நீரை அடிக்கடி மாற்றி விடுவது நல்லது. இனி திராவகம் வடியாது என்று தெரிந்த பிறகு தீயினை அணைத்து ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய பிறகு வாலை யந்திரத்தினையும் பானையையும் தனித்தனியே பிரித்து ஒரு நாள் முழுவதும் ஈரத்தில் வைட்துப் பின் உலர்த்தி எடுத்துக் கொள்ளலாம். 

இந்த வாலை யந்திரத்தின் மூலமாக வெடியுப்பு திராவகம், சங்கத் திராவகம், ஓமத் தீநீர் , கெந்தக நீர், சோம்புத் தீநீர் ஆகியவற்றையும் இது போல் மற்ற திராவக வகைகளையும் வடித்து எடுக்க முடியும். 

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

வரலாற்று சுவடுகள் said...

இந்த தொடர் பதிவு அற்புதமான பல தகவல்களை எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தது சகோ ., நன்றி பகிர்வுக்கு ..!

Viktor Ger said...

Dear Miss Thozi. Do you have information or poems of the Siddhas about Sapta Dhatu?

S.Chandrasekar said...

Dear Madam,

I have read some of your articles that speak about separation/filteration gadgets. Even though medicine is your family domain, this proves the extent to which you have done meticulous hardwork in research and trial experiments. Many of the visitors here may not be patient enough to try as you did. I salute and congratulate you for your humble achievements. God bless you!

Post a Comment