இரசவாதத்தில் யந்திரங்கள் - அவியந்திரம்

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் தனி சரக்குகளை அவித்து பயன்படுத்தும் முறை உள்ளது. இரண்டு அவித்தல் முறைகள் பயன்பாட்டில் உள்ளன. முதலாவது முறையில் பாத்திரத்தில் நீர் அல்லது மூலிகை சாறினை ஊற்றி அதில் நேரடியாக சரக்கினை இட்டு வேக வைப்பது ஒரு முறை, மற்றொரு முறை நீர் அல்லது மூலிகை சாறு சரக்குகளின் மீது படாமல் அவற்றின் நீராவியில் வேக வைப்பது.

இந்த இரண்டாவது வகை அவித்தலுக்கு பயன்படும் உபகரணமே அவியந்திரம் எனப்படுகிறது. அது பற்றியே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

அவியந்திரம்

சட்டி அல்லது பானை போன்ற ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு விட்டு அந்த பானையினுடைய வாயினை புதிய துணி ஒன்றினால் மூடி இறுக கட்டி விட வேண்டும். இதனை "ஏடு கட்டல்" என்று கூறுவர். இப்போது இந்த துணியின் மீது வேகவைக்க வேண்டிய பொருளை வைத்து பானையின் வாய் பகுதியை முழுமையாக மூடக் கூடிய அளவில் இன்னொரு பானை வைத்து மூட வேண்டும். அதாவது இரண்டு பானைகளின் வாயளவும் ஒரே சுற்றளவுடன் படத்தில் காட்டப் பட்டதைப் போல இருக்க வேண்டும்.

இதன் பிறகு இரண்டு பானைகளின் வாய்ப்புறங்கள் இணைந்த விளிம்பு பகுதியில் சீலை மண் வைத்து பூசி விடவேண்டும். இதனால் உள்ளே வைக்கப் பட்ட பொருள் முழுமையாக அவியும். பாத்திரங்கள் அசையாமல் இருக்க வேண்டியது அவசியம். இப்படி தயார் செய்யப் பட்ட அமைப்பை அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு எரிக்க வேண்டும். அப்போது உள்ளே இருக்கும் நீர் ஆவியாகி துணியின் மீது வைக்கப் பட்ட பொருள் வேக ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக நீராவி வெளியேற வாய்ப்பு இல்லாததினால் உள்ளே நீராவியின் அழுத்தம் அதிகரித்து அவிக்கப் படும் பொருள் முழுமையாக வேகும்.

தற்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அழுத்த கலன்கள் (Pressure Cooker) இந்த தத்துவத்தில்தான் இயங்குகிறது. இந்த வகையில் இந்த அழுத்த சமையல் கலனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் வைத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.


இந்த முறையில் சரக்கின் பக்குவம் மற்றும் தேவைக்கு ஏற்ப பானையில் உள்ள நீரானது முழுமையாக அல்லது குறிப்பிட்ட அளவு ஆவியாகும் வரை அடுப்பினை எரிப்பது வழக்கம்.

நாளைய பதிவில் மெழுகு தைல யந்திரம் மற்றும் தூப யந்திரம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

2 comments:

வரலாற்று சுவடுகள் said...

எங்கிருந்துதான் இத்தனை தகவல்களை சேகரிக்கிறீர்களோ .., ஆச்சிரியமான அற்புதமான பதிவர் தாங்கள்.., தொடர்ந்து இணைந்திருக்கிறேன், அடுத்த பாகத்திற்க்காக காத்திருக்கிறேன் ..!

Hari Haran PS said...

பனங் கிழங்கை ஏன் பாட்டி இப்படிதான் வேக வைத்து தந்தார்...

Post a Comment