இரசவாதம் - பதங்க யந்திரம், துலா யந்திரம்

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் யந்திரங்கள் வரிசையில் இன்று பதங்க யந்திரம் மற்றும் துலா யந்திரம் பற்றி பார்ப்போம்.

பதங்க யந்திரம்


குறிப்பிட்ட சரக்குகளை பாத்திரத்தில் இட்டு மூடி எரிக்கும் போது அந்த சரக்கின் தூய்மையான பொருளானது மேல் மூடியில் படியும்.இதனை சுரண்டி எடுத்து பயன்படுத்துவர். இரசவாதத்தில் இதனையே பதங்கம் என்பார்கள். இந்த பதங்கம் செய்வதற்கென பயன்படும் உபகரணமே பதங்க யந்திரம் ஆகும்.

ஓர் சிறிய பானையில் எந்த சரக்கில் இருந்து பதங்கம் எடுக்க வேண்டுமோ அந்த சரக்கை போட வேண்டும். பின்னர் அதில் பொருந்துகிற மாதிரி அதே அளவு வாயுள்ள பெரிய பானையை எடுத்து உட்புறத்தில் பதங்கம் ஒட்டுவதற்கான இலைச்சாறுகளைப் பூசி காயவைக்க வேண்டும். சரக்கு இடப்பட்ட சிறிய பானையுடன் பெரிய பானையை கவிழ்த்து வாயை ஒட்டி ஏழு சீலை மண் செய்ய வேண்டும். பின்னர் அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு எரித்தால் பெரியபானையின் உட்புறத்தில் பதங்கம் படியும். ஆறியவுடன் சுரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓர் உதாரணம் சொல்வதானால் இலிங்கமும், கொடிவேலி வேரும் வைக்கப்பட்டு இரசபதங்கம் தயாரிக்கப்படுவதைக் குறிப்பிடலாம். பெரிய பானையில் பதங்கம் ஒட்டுவதற்காக ஊமத்தை இலை, கல்யாணமுருங்கை இலை, துளசி இலை, குப்பைமேனி இலை, வெற்றிலை, கோவை இலை ஆகியவற்றின் சாறுகள் பயன்படுத்தப்படும். 

துலா யந்திரம்


சரியான எடை அளவினை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் துலாக்கோல் போல தொங்க விடுவதனால் துலா யந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

அதிக உயரம் உள்ள பானையில் பாதி அளவு நீர் அல்லது சாறு வகைகளை ஊற்றிக் கொள்வார்கள். பிறகு தூய்மையாக செய்யப் பட வேண்டிய அல்லது வேக வைக்க வேண்டிய பொருளினைத் துணியினால் சுற்றி கட்டிக்கொள்வார்கள்.  

பானையின் மேல்புறத்தில் இருக்கும் வாயில் ஒரு சட்டத்தினை வைத்து அந்த சட்டத்தில் கயிற்றின் ஒரு முனையை கட்டி விடுவார்கள். மறுமுனையை மருந்து சுற்றப்பட்டு இருக்கும் துணிக்கட்டு அல்லது கிழியில் கட்டுவார்கள். மருந்துகளுக்கு ஏற்றபடி இக்கிழியை தண்ணீரில் மூழ்கும் படியோ அல்லது தண்ணீருக்கு மேலேயோ இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். 

பானையில் ஊற்றப்பட்டு இருக்கும் நீர் வற்றிப் போகும் வரை எரித்து கொதிக்க வைப்பார்கள். 

நாளைய பதிவில் அவியந்திரம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

வரலாற்று சுவடுகள் said...

சுவாரஸ்யம் கூடுகிறது.., நாளையும் தொடர்வேன் ..!

arul said...

arumai

சித்தன் said...

பதங்க எந்திரம் நான் பத்தாம் வகுப்பு இயற்பியலில் படித்த பதங்கமதலை நினைவூட்டுகிறது...

S.Puvi said...

உங்கள் பதிவுகளுக்கு நன்றிகள்.
உங்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை. உங்கள் பதிவகளை புத்தகமாக வெளியீடு செய்தால் இணைய தள வசதிகளை பெற முடியாதவர்களும் பயன்பெறக்கூடடியதாக இருக்கும். இன்று பொரும்பாலும் எல்லோராலும் இணையதளம் பயன்படுத்த தெரிந்திருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைப்பதில்லை. உதாரணமாக என்னால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இணையதளம் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் வாசித்து விளங்கிக்கொள்ளும் அளவுக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை.
எனவே உங்கள் பதிவுகளை புத்தகங்களாக வெளியிட்டால் பயனுள்ளதாக இஇருக்கும் என நான் நம்புகின்றேன்

Post a Comment