ஜீவசமாதி - நிலவறையும், சடங்குகளும்

Author: தோழி / Labels:


ஜீவசமாதி பற்றிய அறிமுகம் மற்றும் அதன் அவசியத்தையும் இது வரை பார்த்தோம். இன்று "சமாதி கிரியைகள்" குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். இதன் முதல் கட்டமாக ஞானியர் உடலை வைக்கும் குழியினை அமைக்க வேண்டும். இதனை நிலவறை என்கின்றனர். இந்த நிலவறையை அமைக்கும் முறையை திருமூலர் பின் வருமாறு விளக்குகிறார்.

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே

ஒன்பது சாணுக்கு குறையாத ஆழமும், மூன்று சாண் அகலத்தில் முக்கோண வடிவில் குழி தோண்டிட வேண்டுமாம். இப்படித் தோண்டிய மணலை குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்து கொட்ட வேண்டும் என்கிறார். இப்படி அமைக்கப் பட்ட குழியை “குகை” அல்லது “நில அறை” என்று அழைக்கின்றனர்.

பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே

நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே

இவ்வாறு அமைக்கப் பட்ட குழியில் பஞ்சலோகம் மற்றும் நவமணிகளை குழியின் ஆழத்தில் முக்கோண வடிவில் பரப்பி, அதன் மீது தர்ப்பைப் புற்களை விரித்து வெண்ணீற்றையும், பொன்னிற சுண்ணப் பொடியையும் கொட்டி நிரப்பி இருக்கை அமைக்க வேண்டும். மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் சாந்து, புனுகு, பன்னீர் கலந்து மேலே குழியைச் சுற்றி சதுரமாய் தெளித்து தீபம் ஏற்றி வைத்திட வேண்டுமாம்.

இப்போது குழியினை அமைத்து, அதனுள் வைக்க வேண்டியவைகளை வைத்தாயிற்று, அடுத்து....

ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

சமாதி அடைந்த ஞானியின் உடல் மீது திருநீற்றைக் குப்பாயம் (மேல் சட்டை) போல் பூசிய பின்னர் அவரது உடலை பத்மாசனத்தில் அமர்த்தி குழியினுள் இறக்கி வைத்திட வேண்டுமாம். இப்போது அவரது உடலைச் சுற்றி பூக்கள், அறுகம்புல், சுண்ணப்பொடி, திருவெண்ணீறு ஆகியவற்றை போட வேண்டும் என்கிறார். 

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே

மேலே சொன்ன செய்முறைகளை எல்லாம் செய்த பின்னர் குழியினுள் பத்மாசனத்தில் இருத்தப் பட்ட குருவின் திருவடியில் பொரிக்கை, போனகம் (உணவு), இளநீர் ஆகியவற்றை வைத்திட கூறுகிறார் திருமூலர்.அதைத் தொடர்ந்து அவரின் முகம், காதணி, கண் ஆகியவைகளை மூடி, ஞானியின் உடல் மீது பரிவட்டம் சாற்றிட வேண்டும். இறுதியாக திருவெண்ணீறு, நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப் புற்கள், விலவ இலைகள், மலர்களைக் கொண்டு குழியை முழுவதுமாய் நிரப்பிட வேண்டுமாம்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

பதிவின் நீளம் கருதி மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

arul said...

nice post

வரலாற்று சுவடுகள் said...

ஆச்சர்யமான தகவல்கள் தான், காத்திருக்கிறேன் நாளை மேலும் பல ஆச்சர்யமான தகவல்களை வாசிக்க ..!

murugan said...

நிர்வியகல்ப சமாதி என்றால் என்ன தோழி ?

Sivakumar said...

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளோடு இதனை ஒப்பிடமுடிந்தால்....

Sivakumar said...

ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளோடு இதனை ஒப்பிடமுடிந்தால்....

G. Natarajaasivan said...

நாங்கள் மேற்குறிய முறைப்படி தான் அடக்கம் செய்வோம் முகம் சிறிது தெற்கு பார்பதுபோல் இருக்கும். பதினோரோவது மாதம் சமாதி மேல் பகுதி திறந்து கபால பூசைசெய்து பிறகு லிங்கம் வைத்து வழிபடுவோம்

Post a Comment