நெருப்பில் நடக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,


சித்தர்களின் ஜாலவித்தை வரிசையில் போகர், தன்வந்திரி, அகத்தியர் ஆகியோர் அருளிய வித்தைகளை இதுவரை பார்த்தோம். அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய ஜாலவித்தை ஒன்றைப் பற்றி பார்ப்போம். இவை யாவும் தகவல் பகிர்வுகளே, இவற்றின் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது.

இனி, புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி ஜாலம்" என்னும் நூலில் அருளிய நெருப்பின் மீது நடக்கும் வித்தையை பார்ப்போம்.

மதானப்பா மணித்தக்காளி சாறுகூட 
    மைந்தனே உத்தாமணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
    வளமாக மத்தித்து வைத்துக் கொண்டு 
தானப்பா கைகாலில் தடவிக் கொண்டு
    தன்மையாய்த் தணல்மிதிக்கத் தணலும் நீர்போல்
ஏனப்பா இவ்விதமே செய்தா யானால்
    இதமாகத் தணலதுவுந் தயங்குந் தானே

புலிப்பாணி.

மணத்தக்காளி, உத்தாமணி, வசலை ஆகிய மூன்றின் சாறுகளை தனித் தனியே எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டுமாம். இந்த சாறு கலவையை கை, காலில் பூசிக் கொண்டு நெருப்பில் நடந்தால் நெருப்பின் உஷ்ணம் கால்களைப் பாதிக்காது என்கிறார். மேலும் நெருப்பானது தண்ணீர் போல் இருக்குமாம்.

சுவாரசியமான தகவல்தானே, ஆர்வமுள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நாகபாம்பின் விஷம் இறக்கும் மந்திரம்

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது கடித்து விஷம் தலைக்கேறி விட்டால் அந்த விஷத்தை இறக்கும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் விஷம் இறங்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.

சித்தியுள்ள நாகமதின் வித்தையப்பா
     தெளிந்துகொண்டு மனதுறுதி யாகப்பாரு
கொல்லென்ற கூத்துவனார் லபியினாலே
     கொடுமையென்ற விஷமேறித் தலைமேற்கொண்டா
சொல்லென்ற சொல்லதினால் மைந்தாமைந்தா
     சுகமாகத் தீருதற்கு மந்திரங்கேளு

வில்லென்ற விசைபோலே விஷத்திற்பாய்ம்
     விசையாக அங்கிலிசிங் நசிநசியென்னே.
யெண்ணியுரு அருபதிலே விஷந்தான்தீரும்
     யென்மகனே உறுதிகொண்டு இருந்துபாரு
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
     ஆதிதொடுத் தந்தமந்திரம் சித்தியாமே.

ஒருவரை நாக பாம்பு தீண்டி விஷம் அவர உடலெங்கும் பரவி தலைக்கேறி விட்டால், அவர் அருகில் அமர்ந்து "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை அறுபத்தி நான்கு தடவை தொடர்ந்து உச்சரிக்க உடலில் பரவிய விஷம் இறங்கிவிடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "அங்கிலி சிங் நசி நசி" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம்.

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

நாளைய பதிவில் நெருப்பில் நடக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தங்க பற்பம் செய்வது எப்படி!

Author: தோழி / Labels: ,


சித்தரியலில் உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அந்த வகையில் தன்வந்திரி அருளிய "தன்வந்திரி வைத்திய காவியம்" என்ற நூலில் தங்கத்தை பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம்.

தன்வந்திரி பற்றி பல முரணான கருத்தாக்கங்கள் உண்டு. தன்வந்திரி மனித குலத்தின் முதல் மருத்துவர் என்று ஒரு சாராரும், இல்லையில்லை அவர் தேவர்களின் மருத்துவர் என ஒரு சாராரும்,  இரண்டுமே தவறு அவர் திருமாலின் அவதாரம் என மூன்றாவது பிரிவினரும் கூறுவது உண்டு. எது எப்படியோ இத்தனை சிறப்புகள் வாய்ந்த அந்த பெருமகனார் ஒரு தமிழர் என்பது மட்டும் அவரது நூலின் வாயிலாக உறுதி செய்து கொள்ள முடிவது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. இவர் முன் வைத்த மருத்துவ முறையே இன்று ஆயுர்வேதம் என பிரபலமாகி இருக்கிறது. 

இனி தன்வந்திரி தனது "தன்வந்திரி வைத்திய காவியம்" நூலில் கூறியுள்ள தங்க பற்பம் செய்யும் முறையினை பார்ப்போம்.

பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு
    பாங்கான தங்கத்தின் காசு வாங்கி 
நேரப்பா கருமத்தின் இலையரைத்து
    நெகிழவே கவசித்து சீலை செய்து 
சீரப்பா கசப்புடமே இட்டாயானால்
    சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன்
காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும்
    பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே

கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும்
    பாங்கான திரேகமது வச்சிரகாயம்
தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு
    தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு 
ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும்
    அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம்
வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம்
    மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே.

கரு ஊமத்த இலையை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு தங்கக் காசுகளை எடுத்து அதன் மீது இந்த கலவையை நன்கு பூசி கவசம் இட வேண்டுமாம். இதன் பிறகு வலுவாக சீலை மண் செய்து "கஜப்புடம்" இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் தன்வந்திரி. (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் கஜப்புடம் பற்றிய தகவல் இருக்கிறது.) இப்படி செய்தால் தங்க காசானது நீறி பற்பம் ஆகியிருக்குமாம்.

இப்படி தயார் செய்யப் பட்ட தங்க பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு பண எடை அளவில் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். உணவில் இறைச்சி வகைகளையும், நண்டுக் கறியினையும் சேர்த்து மற்றவைகளை நீக்கி விட வேண்டுமாம். 

மேலும் நாள் தவறாமல் ஒரு மண்டலகாலம் மேற்கூறிய பத்தியத்தோடு தங்க பற்பத்தை உண்டு வந்தால் அவர்களுக்கு தொண்ணூற்றாரு வகை சிலேத்தும நோய்களும், காச நோய், சயம், ஈளை, சுவாச காசம் ஆகியவை நீங்கி குணமாகும் என்கிறார்.

அரிதான தகவல்தானே!, நாளை வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகர் ஜாலவித்தை!

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் என்றாலே அரிதான எட்டு விதமான சித்துக்களையும், வாய் பிளக்க வைக்கும் ஜாலங்களையும் நிகழ்த்திக் காட்டுகிறவர்கள் என்பதான பொதுக் கருத்து உண்டு. இந்தக் கருத்தினை முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. ஏனெனில் சித்தர்களின் பாடல்களின் ஊடே இம் மாதிரியான ஜாலங்களைப் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இவை எதற்காக சொல்லப் பட்டது என்பதும், அதன் பின் புலத்தில் மறைந்திருக்கும் உட் கருத்துக்களும் ஆய்வுக்கு உட்பட்டவை.

இந்த வாரத்தின் நெடுகில் அப்படியான சில சித்துக்களை பார்க்க இருக்கிறோம். இன்றைய பதிவில் போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் அருளியிருக்கும் ஒரு ஜால வித்தை பற்றி பார்ப்போம். ஒரு குடத்தில் நீரை அள்ளி அந்தக் குடத்தினை தலைகுப்புற கவிழ்த்தாலும் பானையில் உள்ள நீர் கீழே சிந்தாதிருக்கும் ஜாலத்தை போகர் பின் வருமாறு கூறுகிறார்.

நடந்தபின்பு இன்னமொரு ஜாலங்கேளு
         நல்லமயி ரோசனையும் மத்தக்காசும்
அடர்ந்ததொரு நாற்கரந்தை வயன்றவேரும்
        அரசமர வேருடனே இந்த நான்கும்
குடத்துள்ளே சமனிடையாய் அறைத்துப்பூசி
         குளங்கிணற்றில் ஜலமதனை மொண்டுவந்து
அடைத்திருங்குஞ் சபைதனிலே கவிழ்த்துக்காட்டில்
         அணுவளவு ஜலங்கீழே வீழா தாமே.

கோரோசனை, மத்தக்காசு, கரந்தை வேர், அரசமர வேர் ஆகிய நான்கினையும் சம எடையில் எடுத்து தூய்மை செய்து, அவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் இந்த கலவையை குடத்தின் உட்புறத்தில் நன்றாக பூசி உலர வைக்க வேண்டும் என்கிறார். இந்த கலவை நன்கு காய்ந்த பின்னர் இந்த குடத்தில் நீர் எடுத்து அதனை கவிழ்த்தால் சிறிதளவு நீர் கூட கீழே விழாது என்கிறார் போகர்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

இன்றைய நவீன நீர்மவியலில் (Hydraulics) இம் மாதிரியான தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை பயன்படுத்திட முடியுமானால் மனித குலத்துக்கு நல்லதுதானே...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதத்தில் யந்திரங்கள் - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் பயன் படுத்தப் படும் யந்திரங்களின் வரிசையில் இதுவரை ஆறு வகையான யந்திரங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று செந்தூரம் எரிக்கும் யந்திரம், வாலுகா யந்திரம், திராவக வாலை யந்திரம் என்ற மூன்று வகையான யந்திரங்களை பற்றி பார்ப்போம்.

செந்தூரம் எரிக்கும் யந்திரம்

அடிப்பகுதி தட்டையாகவும் வாயகன்றும் சம அளவு உள்ள இரண்டு பாத்திரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒன்றில் செந்தூரம் ஆக்க வேண்டிய சரக்கினை போட்டுக் கொண்டு மறு பாத்திரத்தினை இதன் மீது கவிழ்ந்த நிலையில் மூடிக் கொள்ள வேண்டும். இரண்டு பாத்திரங்களின் வாயும் ஒன்றன் மீது ஒன்றாகப் பொருந்தி இருக்குமாறு வைத்து ஏழு சீலை மண் செய்து உலர்த்திக் கொள்ள வேண்டும்.

பிறகு அடிப்பகுதியில் உள்ள பாத்திரத்தை எரியும் அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு எரிக்க உள்ளே உள்ள சரக்கு தீயின் வெப்பத்தினால் உருகி செந்தூரம் ஆகும். இந்த முறைக்கு உதாரணம் சொல்ல வேண்டும் எனில் அயக்காந்த செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம் போன்றவற்றினை இந்த முறையில் தயாரிக்கலாம். 

வாலுகா யந்திரம்...

ஏழு அழுக்குத் துணிகளால் சுற்றப்பட்டு இருக்கும் ஒரு குப்பியினுள் எரிக்கப் பட வேண்டிய சரக்குகளை இட்டுக் கொள்ள வேண்டும். மருந்தின் தன்மைக்கு ஏற்றவாறு குப்பியின் வாயை அடைத்தோ அல்லது அடைக்காமலோ இருக்கலாம். இப்போதுஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சரக்குகள் உள்ள குப்பியினை அதன் நடுவில் வைக்க வேண்டும். குப்பியின் உயரத்தில் பாதி அளவிற்கு பாத்திரத்தில் மணலை கொட்டி நிரப்ப வேண்டும். 

சில வகை மருந்து தயாரிப்புக்கு குப்பியின் கழுத்து வரை கூட மணலிடுவதுண்டு. சொல்லப்பட்டு இருக்கும் கால அளவுக்கு அடுப்புத் தீயினால் எரித்து பின் இறக்கி ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய பிறகு குப்பியை பாத்திரத்தில் இருந்து எடுத்து விட வேண்டும். மணல் சூடேறி அந்த சூட்டின் உதவி கொண்டு குப்பியில் போடப்பட்டு இருக்கும் சரக்குகள் மருந்துகளாக பக்குவம் ஆகியிருக்கும்.இந்த முறைக்கு உதாரணத்திற்கு பூரண சந்திரோதயம், காள மேக நாராயண செந்துரம், தங்கவுரம் ஆகியவை தயாரிக்கப் படுகிறது. 

திராவக வாலை இயந்திரம்

கடைச் சரக்குகளையும் பச்சிலைகளையும் தீ நீராக வடிக்கவும் கார சாரங்களை திராவகமாக வடித்து எடுக்கவும் பயன்படக் கூடியதே திராவக வாலை யந்திரம் ஆகும். 

படத்தில் உள்ளதைப் போல வட்ட வடிவமான தடுப்பு ஒன்று இந்த வாலை யந்திரத்தின் உட்பகுதியில் இருக்கும். இதற்குக் கீழே ஒரு பகுதியில் இருக்கும் நீராவி நீர்ப்பகுதியில் சூடான நீர் வரக்கூடிய குழாய் ஒன்று பொருத்தப்பட்டு இருக்கும். இப்போது திராவகம் தயாரிப்புக்குத் தேவையான காரசாரங்களை பானையில் போட்டு வாலையின் சூடான நீர் வரக் கூடிய குழாயுடன் பொருந்திய பாகத்தினை பானையுடன் சேர்த்து மூடி சிலை மண் செய்து இடைவெளி சிறிதும் இல்லாமல் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்புத் தீயின் அனலால் பானையில் உள்ள காரசாரங்கள் கொதித்து ஆவியாகி மேலெழும்பும்.  இப்படி மேலெழும்பிய ஆவி வாலை யந்திரத்தின் சுவரில் முட்டி தடுப்புக்கு மேல்புற குளிர்ந்த நீரின் தன்மையினால் குளிர்ச்சியடைந்து ஆவி நீராகி குழாய் மூலம் கீழே தனியாக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தினுள் இறங்கும். இப்படி இறங்கும் நீர்மமே திராவகம் ஆகும்.

வாலையில் உள்ள தடுப்புக்கு மேல இருக்கும் குளிர்ந்த நீர் நேரம் செல்லச் செல்ல சூடு அடையும். ஆதலால் அந்த நீரை அடிக்கடி மாற்றி விடுவது நல்லது. இனி திராவகம் வடியாது என்று தெரிந்த பிறகு தீயினை அணைத்து ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய பிறகு வாலை யந்திரத்தினையும் பானையையும் தனித்தனியே பிரித்து ஒரு நாள் முழுவதும் ஈரத்தில் வைட்துப் பின் உலர்த்தி எடுத்துக் கொள்ளலாம். 

இந்த வாலை யந்திரத்தின் மூலமாக வெடியுப்பு திராவகம், சங்கத் திராவகம், ஓமத் தீநீர் , கெந்தக நீர், சோம்புத் தீநீர் ஆகியவற்றையும் இது போல் மற்ற திராவக வகைகளையும் வடித்து எடுக்க முடியும். 

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதத்தில் யந்திரங்கள் - மெழுகு தைல யந்திரம், தூப யந்திரம்

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் பயன்படும் யந்திரங்களின் வரிசையில் இன்று மெழுகு தைல யந்திரம் மற்றும் தூப யந்திரம் பற்றி பார்ப்போம்.

மெழுகு தைல யந்திரம்

கழுத்து நீண்டு வாய் குறுகி இருக்கும் பெரிய பானையாக தெரிவு செய்ய வேண்டும். குறைந்தது 20 லிட்டர் கொள்ளளவு இருத்தல் அவசியம். இதன் வாயில் சொருகி வைக்கும் அளவுக்கு 8 லிட்டர் கொள்ளளவில் சிறிய பானை ஒன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு படத்தில் காட்டப் பட்டதைப் போல பெரிய பானையினுடைய ஒரு பக்கத்தில் 20 செ.மீ அளவுக்கு சிறு துவாரம் செய்து கொண்டு, சிறிய பானையின் ஒரு பக்கமும் இதே போல ஒரு துவாரம் செய்து கொள்ளவும். சிறிய பானையின் துவாரம் கீழ் நோக்கி இருக்கும் படியாகவும் பெரிய பானையின் துவாரம் மேல் நோக்கி இருக்கும் படியாகவும் அமைத்து இரண்டுபானைகளின் வாய் பகுதிகளை ஒன்றுடன் ஒன்று சொருகி ஒரு நூலைக் கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இதன் மீது ஏழு சிலை மண் செய்து உலர்த்தி விட வேண்டும்.

ஒரு எரியும் அடுப்பின் மீது பெரிய பானயின் துளை இல்லாத பகுதியை வைத்து விட்டால் சிறிய பானையின் துளை உள்ள பகுதி கீழ் நோக்கி இருக்கும். இப்போது சிறிய பானையின் துளைக்கு நேர் கீழாக ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். அடுத்து பெரிய பாத்திரத்தின் மேல் பக்கத் துளை வழியாக தைலம் இறக்க வேண்டிய மருந்துப் பொருள்களை ஊற்றி அந்தத் துளையை சிறு ஓட்டால் மூடி சாணத்தைக் கொண்டு பூசி விட வேண்டும்.

இப்போது அடுப்பில் இருக்கும் தீயின் வெப்பத்தினால் பெரிய பானையில் போடப்பட்டிருக்கும் பொருள்கள் தைலமாக சிறிய பானையில் இறங்க ஆரம்பிக்கும். சிறிய பானையின் கீழ்ப்பக்க துளை வழியாக தைலம் தரையில் வைக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தில் இறங்கும். வெப்பம் அதிகரிக்கும் சமயத்தில் சிறிய பானை சேதம் ஆகாமல் இருக்கவும் தைலம் எளிதாக பாத்திரத்தில் இறங்கவும் சிறிய பானையின் மேல் ஒரு ஈரத்துணியை பரப்பி விட வேண்டும். ஈரம் காயக்காய மீண்டும் தண்ணீரைத் துணியின் மீது தெளித்து, தைலம் இறக்கி முடியும் வரை துணியினை ஈரமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். 


இதுவே மெழுகு தைல யந்திரம் எனப்படும்.
 
தூப யந்திரம்

ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் புகை போடும் சாம்பிராணி அல்லது பூலாங்கிழங்கு அல்லது மருந்துப் பொருள் இதில் ஏதாவது ஒன்றினைப் பாத்திரத்தின் பாதியளவிற்குப் போட்டுக் கொள்ள வேண்டும். 

பிறகு பாத்திரத்தின் வாயினை மெல்லிய துணியின் உதவி கொண்டு ஏடு கட்ட வேண்டும். அந்தத் துணியின் மீது பக்குவம் செய்யப் பட வேண்டிய மருந்துப் பொருள்களை வைத்து இன்னொரு சட்டியால் மூடிவிட வேண்டும். இந்த இரண்டு சட்டிகளின் வாயையும் மண் பூசி சீலை செய்து அடுப்பில் ஏற்றி தீயை அதிகப் படுத்த வேண்டும். 


கீழ் பானையில் இருக்கும் புகை உண்டாக்கும் பொருள்களால் உருவாகும் ஆவியின் உதவியால் துணியில் வைத்து இருக்கின்ற பலசரக்கு பக்குவம் அடையும். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பறங்கி ரசாயணம் தயாரித்தலைக் கூறலாம். 

நாளைய பதிவில் செந்தூரம் தயாரிக்கும் யந்திரம், வாலுகா யந்திரம், திராவக வாலை யந்திரம் பற்றி பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதத்தில் யந்திரங்கள் - அவியந்திரம்

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் தனி சரக்குகளை அவித்து பயன்படுத்தும் முறை உள்ளது. இரண்டு அவித்தல் முறைகள் பயன்பாட்டில் உள்ளன. முதலாவது முறையில் பாத்திரத்தில் நீர் அல்லது மூலிகை சாறினை ஊற்றி அதில் நேரடியாக சரக்கினை இட்டு வேக வைப்பது ஒரு முறை, மற்றொரு முறை நீர் அல்லது மூலிகை சாறு சரக்குகளின் மீது படாமல் அவற்றின் நீராவியில் வேக வைப்பது.

இந்த இரண்டாவது வகை அவித்தலுக்கு பயன்படும் உபகரணமே அவியந்திரம் எனப்படுகிறது. அது பற்றியே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

அவியந்திரம்

சட்டி அல்லது பானை போன்ற ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு விட்டு அந்த பானையினுடைய வாயினை புதிய துணி ஒன்றினால் மூடி இறுக கட்டி விட வேண்டும். இதனை "ஏடு கட்டல்" என்று கூறுவர். இப்போது இந்த துணியின் மீது வேகவைக்க வேண்டிய பொருளை வைத்து பானையின் வாய் பகுதியை முழுமையாக மூடக் கூடிய அளவில் இன்னொரு பானை வைத்து மூட வேண்டும். அதாவது இரண்டு பானைகளின் வாயளவும் ஒரே சுற்றளவுடன் படத்தில் காட்டப் பட்டதைப் போல இருக்க வேண்டும்.

இதன் பிறகு இரண்டு பானைகளின் வாய்ப்புறங்கள் இணைந்த விளிம்பு பகுதியில் சீலை மண் வைத்து பூசி விடவேண்டும். இதனால் உள்ளே வைக்கப் பட்ட பொருள் முழுமையாக அவியும். பாத்திரங்கள் அசையாமல் இருக்க வேண்டியது அவசியம். இப்படி தயார் செய்யப் பட்ட அமைப்பை அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு எரிக்க வேண்டும். அப்போது உள்ளே இருக்கும் நீர் ஆவியாகி துணியின் மீது வைக்கப் பட்ட பொருள் வேக ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக நீராவி வெளியேற வாய்ப்பு இல்லாததினால் உள்ளே நீராவியின் அழுத்தம் அதிகரித்து அவிக்கப் படும் பொருள் முழுமையாக வேகும்.

தற்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அழுத்த கலன்கள் (Pressure Cooker) இந்த தத்துவத்தில்தான் இயங்குகிறது. இந்த வகையில் இந்த அழுத்த சமையல் கலனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் வைத்திருந்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.


இந்த முறையில் சரக்கின் பக்குவம் மற்றும் தேவைக்கு ஏற்ப பானையில் உள்ள நீரானது முழுமையாக அல்லது குறிப்பிட்ட அளவு ஆவியாகும் வரை அடுப்பினை எரிப்பது வழக்கம்.

நாளைய பதிவில் மெழுகு தைல யந்திரம் மற்றும் தூப யந்திரம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - பதங்க யந்திரம், துலா யந்திரம்

Author: தோழி / Labels:


இரசவாதத்தில் யந்திரங்கள் வரிசையில் இன்று பதங்க யந்திரம் மற்றும் துலா யந்திரம் பற்றி பார்ப்போம்.

பதங்க யந்திரம்


குறிப்பிட்ட சரக்குகளை பாத்திரத்தில் இட்டு மூடி எரிக்கும் போது அந்த சரக்கின் தூய்மையான பொருளானது மேல் மூடியில் படியும்.இதனை சுரண்டி எடுத்து பயன்படுத்துவர். இரசவாதத்தில் இதனையே பதங்கம் என்பார்கள். இந்த பதங்கம் செய்வதற்கென பயன்படும் உபகரணமே பதங்க யந்திரம் ஆகும்.

ஓர் சிறிய பானையில் எந்த சரக்கில் இருந்து பதங்கம் எடுக்க வேண்டுமோ அந்த சரக்கை போட வேண்டும். பின்னர் அதில் பொருந்துகிற மாதிரி அதே அளவு வாயுள்ள பெரிய பானையை எடுத்து உட்புறத்தில் பதங்கம் ஒட்டுவதற்கான இலைச்சாறுகளைப் பூசி காயவைக்க வேண்டும். சரக்கு இடப்பட்ட சிறிய பானையுடன் பெரிய பானையை கவிழ்த்து வாயை ஒட்டி ஏழு சீலை மண் செய்ய வேண்டும். பின்னர் அடுப்பில் ஏற்றி சிறு தீயிட்டு எரித்தால் பெரியபானையின் உட்புறத்தில் பதங்கம் படியும். ஆறியவுடன் சுரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஓர் உதாரணம் சொல்வதானால் இலிங்கமும், கொடிவேலி வேரும் வைக்கப்பட்டு இரசபதங்கம் தயாரிக்கப்படுவதைக் குறிப்பிடலாம். பெரிய பானையில் பதங்கம் ஒட்டுவதற்காக ஊமத்தை இலை, கல்யாணமுருங்கை இலை, துளசி இலை, குப்பைமேனி இலை, வெற்றிலை, கோவை இலை ஆகியவற்றின் சாறுகள் பயன்படுத்தப்படும். 

துலா யந்திரம்


சரியான எடை அளவினை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் துலாக்கோல் போல தொங்க விடுவதனால் துலா யந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

அதிக உயரம் உள்ள பானையில் பாதி அளவு நீர் அல்லது சாறு வகைகளை ஊற்றிக் கொள்வார்கள். பிறகு தூய்மையாக செய்யப் பட வேண்டிய அல்லது வேக வைக்க வேண்டிய பொருளினைத் துணியினால் சுற்றி கட்டிக்கொள்வார்கள்.  

பானையின் மேல்புறத்தில் இருக்கும் வாயில் ஒரு சட்டத்தினை வைத்து அந்த சட்டத்தில் கயிற்றின் ஒரு முனையை கட்டி விடுவார்கள். மறுமுனையை மருந்து சுற்றப்பட்டு இருக்கும் துணிக்கட்டு அல்லது கிழியில் கட்டுவார்கள். மருந்துகளுக்கு ஏற்றபடி இக்கிழியை தண்ணீரில் மூழ்கும் படியோ அல்லது தண்ணீருக்கு மேலேயோ இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். 

பானையில் ஊற்றப்பட்டு இருக்கும் நீர் வற்றிப் போகும் வரை எரித்து கொதிக்க வைப்பார்கள். 

நாளைய பதிவில் அவியந்திரம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதத்தில் யந்திரங்கள்

Author: தோழி / Labels:


சித்தரியலில் இரசவாதம் என்பது பெருங்கடல். இவற்றை முழுமையாக புரிந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் ஒரு வாழ்நாளின் உழைப்பு தேவைப்படும். இதன் பரிமாணங்கள் பல தரத்தவை. தற்போதைய நவீன அறிவியலை விடவும் மேலான தர நிர்ணயங்களையும், நோக்கங்களையும் கொண்டது இரசவாத அறிவியல். நமது வலைப் பதிவில் இந்த அறிவியலின் சில கூறுகளைப் பற்றி நாற்பதுக்கும் மேலான பதிவுகளின் ஊடே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இனி வரும் நாட்களில் இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் சில பொறிகளைப் பற்றி பார்ப்போம்.

தற்போது நாம் கருவிகள் என்று சொல்வதையே பொறிகள் என்று சொல்கின்றனர். இரசவாதத்தில் இந்த பொறிகளை யந்திரம் என்றே குறிப்பிடுகிறார்கள். தற்போதைய ஆய்வுக் கூடங்களில் பயன் படுத்தப்படுகிற நவீன உபகரணங்களின் முன்னோடியாக சித்தர் பெருமக்கள் உருவாக்கிய இந்த யந்திரங்களைச் சொல்லலாம். ஒன்றிலிருந்து தேவையானதை பிரித்தெடுக்க, இரண்டு மூலகங்களை ஒன்று சேர்க்க, ஒரு மூலகத்தின் தன்மையை மாற்றிட என பல்வேறு வகையான வேலைகளுக்கு இந்த யந்திரங்கள் பயனாகி இருக்கின்றன.

இந்த தொடரில் அத்தகைய ஏழு யந்திரங்களைப் பற்றியும், அதன் செயல்பாடு மற்றும் வரைபடங்களை பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் யந்திரம் "சுடர் தைல யந்திரம்".

இந்த இடத்தில் தைலம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

தைலம் என்பது இரசவாதத்தின் ஒரு அங்கம். தேவையை பொறுத்து குறிப்பிட்ட மூலகங்களை, மூலிகை சாறு உள்ளிட்ட தனிச் சரக்குகளோடு தகுந்த விகிதத்தில் காய்ச்சி பாகு நிலையில் வடித்தெடுப்பதே தைலம் எனப் படுகிறது. இவற்றை ஐந்து வகையாக பிரித்திருக்கின்றனர். அவை முறையே "முடித் தைலம்", "பிடித் தைலம்", "குடித் தைலம்", "துளைத் தைலம்", "சிலைத் தைலம்" எனப்படும்.

இந்த ஐந்து வகையான தைலங்களை தயாரிக்க பன்னிரெண்டு முறைகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவை முறையே சூரியப்புட தைலம், மண் தைலம், நீர் தைலம், தீநீர் தைலம், கொதித் தைலம், ஆவி தைலம், உருக்கு தைலம், சுடர் தைலம், சிலைத்தைலம், குழித் தைலம்,   மரத் தைலம், பொறித்தைலம் என்பனவாகும்.

இவற்றுள் சுடர் தைலம் பற்றி பார்ப்போம்.

சுடர் தைல யந்திரம்ஒரு முழ நீளம் உள்ள வெள்ளைச் சீலை ஒன்றை எடுத்து அதில் மூலகங்களைக் கொண்டு தயாரித்த சரக்கை தடவி, அந்த துணியை திரியைப்போல அதை திரித்து வளையமாக அல்லது குட்டையாக மடித்துக் கட்டிக் கொள்ள வேண்டும். 

பின்னர் சலாகையினால் (probe) குத்தி சிறிது நெய் தோய்த்து எடுத்து, சலாகையை இடதுகையினால் பிடித்துக் கொண்டு தீயினால் சலாகையில் குத்தப்பட்ட திரியை கொளுத்திக் கொள்ள வேண்டும். ஏன் இடது கையால் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கம் பாடல்களில் கிடைக்க வில்லை.திரியானது எரிய ஆரம்பிக்கும் போது தைலமானது திரியிலிருந்து சொட்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். 

இதுவே சுடர் தைலம் என அழைக்கபப்டும்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே....

நாளைய பதிவில் பதங்க யந்திரம் மற்றும் துலா யந்திரம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?

Author: தோழி / Labels: ,


புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது.

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர்.

அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது?

எளிய விதிகள்தான், யாரும் கடைபிடிக்கலாம்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது "ரவிமேகலை" நூலில் "பேதிகல்பம்" என்ற பெயரில் அருளியிருக்கிறார்.

சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே. 

- ரவிமேகலை.

சோற்றுக் கற்றாழை மடல் களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தினால் வயிறு கழியுமாம். அத்துடன் வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும் என்கிறார்.

இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் இராச்சியம்.... அடுத்த கட்டத்தில்!!

Author: தோழி / Labels:


2010, பெஃப்ரவரி மாதம் என்னிடமிருந்த தகவல்களை பதிந்து வைக்க வேண்டி துவக்கப் பட்ட இந்த வலைப் பதிவு, இன்றோடு 654 பதிவுகள், அவற்றில் பதின்மூன்று மின் நூல்கள், 3145 நண்பர்கள் பின் தொடர இதுவரை இருபத்தி எட்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் வாசிக்கப் பட்ட வலைப் பதிவாக வளர்ந்து நிற்கிறது. 

இது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. குருவருளும், தன்னலம் கருதா பல நண்பர்களின் ஆலோசனைகளும், இதற்கு சற்றும் குறைவில்லாத உங்களின தொடர்ச்சியான ஆதரவும்தான் இத்தனை பெரிய வளர்ச்சிக்குக் காரணம். 

இந்த நிலையில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் போது வலைப் பதிவின் பக்கம் வரவோ, பதிவுகளை எழுதிடவோ முடியாத சூழ்நிலையில் இருந்த போது நண்பர்கள் சிலர் சித்தர்கள் இராச்சியம் பதிவின் தகவல்கள தமிழைத் தாண்டிய வெளியில் அறிமுகம் செய்தாலென்ன என்கிற கேள்வியினை முன் வைத்தனர். பதிவின் தகவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் அளவிற்கு எனக்கு மொழியாளுமை இல்லை என்பதால் தயங்கினேன். அதற்கும் தீர்வாக இந்த மொழி பெயர்ப்பின் பொறுப்பினை பதிவரும், நண்பருமான தமிழ் தமிழானவள் அவர்கள் ஏற்றுக் கொள்வதாய் முன் வந்தார்.

நண்பர்களின் ஒத்துழைப்புடன் தமிழ் தமிழானவள் இந்த மொழியாக்கத்தை கடந்த இரண்டு வாரமாய் செய்து வருகிறார். முதல் கட்டமாக அவரால் மொழி மாற்றம் செய்யப் பட்ட சில பதிவுகளை தனியொரு வலைத் தளத்தில் வலையேற்றி இருக்கிறேன். இது தொடர்பான உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன். ஏதேனும் குறையிருப்பின் தயங்காமல் சுட்டிக் காட்டிட வேண்டுகிறேன்.

இந்த முயற்சியில் தன்னுடைய மற்ற பிற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, நாளொன்றுக்கு ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாய் செலவழித்து இந்த மொழி மாற்றத்தை செய்துவருகிற தமிழ் தமிழானவளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் இந்த வாய்ப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் ஆங்கில வலைப் பதிவின் முகவரி

http://www.siththarkal.info/

இந்தப் பதிவினை தமிழறியாத உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது முன்னோர்களின் அருமை பெருமைகளை உலகத்தாரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவசமாதி - சில குறிப்புகள்.

Author: தோழி / Labels:


ஜீவசமாதி குறித்த விவரங்கள் பலருக்கு புதிய தகவலாய் இருந்திருப்பதை பின்னூட்டங்கள் மற்றும் தனி அஞ்சல்களின் வாயிலாக அறிய முடிந்தது. இந்த தகவல்கள் யாவும் காலகாலமாய் ஏடுகளிலும், நூலகங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் தகவல்களே, இதை பகிர்வதில் எனக்கென பெருமை எதுவுமில்லை.இப்படி ஒரு வாய்ப்பினை எனக்கு அருளிய எல்லாம் வல்ல குருவுக்கே அத்தனை புகழும் சேரும்.

இந்து மரபியலில் ஜீவசமாதியின் முக்கியத்துவம் தெளிவாக வரையறுத்து கூறப் பட்டிருக்கிறது. எனினும் ஜீவசமாதி என்பது குறிப்பிட்ட எந்த ஒரு மதத்திற்குமானது இல்லை. தமிழகத்தில் இஸ்லாம் மற்றும் கிருத்துவ ஞானியரின் அடக்கத் தலங்கள் புகழ்பெற்ற வணக்கத் தலமாய் இருப்பதை இதற்கு உதராணமாய் காட்டிட முடியும். ஞானத்தின் உச்ச நிலை எய்திய ஒருவரை இன்ன மதத்தவர் என அடையாளம் காட்டிக் கொண்டிருக்கத் தேவை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 

ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு விளக்கேற்றி வைத்து, மனதை ஒரு முகப் படுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தாலே அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும். ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் புறக்கணிக்கப் பட்டு வழிபாடுகள், ஆராதனைகள் என சடங்குகள் சார்ந்த ஒரு வைபவமாக மாற்றப் பட்டுவிட்டது வருந்தத் தக்கது. 

எமது நாட்டிலும் கூட பல ஞானியரின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன. கடந்த காலத்தின் அசாதாரண நிகழ்வுகளினாலும், தற்போதைய அரசியல் சூழலினாலும் அவற்றில் பல அழிந்ந்தும், பராமரிப்பு அற்றும் போய்விட்டன. எஞ்சிய ஒரு சில ஜீவசமாதிகள் அருளாளர்களினால் போற்றிப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. அத்தகைய ஜீவசமாதி ஒன்றின் படத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


ஞானியரின் அடக்கத்தலங்கள் குறித்த தகவலை முன்னரே இங்கு பதிந்திருக்கிறேன். தகவல் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்..

இவை தவிர இணையத்தில் பலரும் ஜீவசமாதிகள் குறித்த குறிப்புகளை பகிர்ந்திருக்கின்றனர். ஆர்வமுள்ளோர் பின்வரும் இணைப்புகளை பயன் படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இவை தொடர்புடையவர்களின் அனுமதியின்றி தகவலை பகிரும் நோக்கத்துடன் இங்கே பகிரப் படுகிறது. யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தால் அந்த இணைப்புகளை நீக்கிவிட தயாராக இருக்கிறேன்.

http://jeevasamathikal.blogspot.com/2011/12/blog-post.html

http://www.aanmigakkadal.com/2011/12/w.html


http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89807

http://tamilthamarai.com/devotion-news/2191-kurulinga-swami-chennai.html

நாளைய பதிவில் சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு பற்றிய ஒரு முக்கிய தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவசமாதி - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:


தவயோகத்தில் சிறந்த ஞானியர் உலக வாழ்க்கையில் தங்களுடைய கடமைகள் முழுமை அடைந்ததாக கருதிடும் போது மேலான இறை நிலையோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்தம் உடல் இயக்கமும், மன இயக்கமும் நின்று விட்டிருப்பினும், உயிர் மட்டும் உடலை விட்டு பிரியாதிருக்கும். இத்தகைய உயர்நிலை அடைந்த ஞானியரின் உடலுக்குச் செய்திட வேண்டிய சமாதி கிரியைகளை இது வரை பார்த்தோம். 

இதன்படி ஞானியரை குழியில் பத்மாசனத்தில் அமர்த்தி பரிவட்டம் சாற்றி திருவெண்ணீறு, நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப் புற்கள், வில்வ இலைகள், மலர்களைக் கொண்டு குழியை முழுவதுமாய் நிரப்பிட வேண்டும் என பார்த்தோம். எக்காரணம் கொண்டும் மணலைக் கொண்டு மூடக்கூடாது. தரை மட்டம் வருமளவுக்கு மேலே சொன்ன பொருட்களைக் கொண்டு குழியை நிரப்பிய பின்னர், நிறைவாக பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் தந்து நிலத்தின் மேல் மூன்று அடி அகலம், மூன்றடி உயரத்தில் மேடை அமைக்க வேண்டும் என்கிறார் திருமூலர். 

இப்படி அமைக்கப் பட்ட மேடையின் மீது அரச மரக் கன்று அல்லது சிவலிங்கம் ஒன்றினை ஸ்தாபிக்க வேண்டுமாம். இப்போது இது மாதிரியான அமைப்புடைய மேடைகளை பல்வேறு இடங்களில் பார்த்த நினைவு உங்களுக்கு வரலாம். ஆம், அவை எல்லாம் ஞானியரின் ஜீவசமாதிகளே, காலப் போக்கில் அவை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சென்றடையாமல் கைவிடப் பட்ட நிலையில் இருக்கின்றன.

திருமூலர் தான் அருளிய வழியில் முறையாக அமைக்கப் பட்ட ஜீவசமாதி உள்ள இடத்தில் அந்த ஞானியரின் எண்ண ஆற்றல்கள் அவரின் உடலை விட்டுப் பிரியாது அவ்விடத்தே சூட்சுமமாய் நிறைந்திருக்குமாம். மேலும் அந்த இடத்திற்கு வருவோரையும், வழிபடுவோரையும் ஞானியரின் எண்ண ஆற்றல் வழி நடத்தும் என உறுதி கூறுகின்கிறார்.

நண்பர்களே!, இத்தனை புனிதம் வாய்ந்த ஜீவ சமாதிகள் நமது நாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றின் மகத்துவத்தை உணராதவர்களாகவே நாம் இருக்கிறோம். இத்தகைய தவசீலர்களை வணங்குவதன் மூலம் அவர்களின் அருளுக்கு பாத்தியமாக முடியும். தொடர்ந்து இந்த ஜீவ சமாதிகளை வணங்கி வந்தால் நாடு வளம் பெறுவதுடன், நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும்.

இத்துடன் ஜீவசமாதி பற்றிய இந்த குறுந்தொடர் நிறைவு பெறுகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவசமாதி - நிலவறையும், சடங்குகளும்

Author: தோழி / Labels:


ஜீவசமாதி பற்றிய அறிமுகம் மற்றும் அதன் அவசியத்தையும் இது வரை பார்த்தோம். இன்று "சமாதி கிரியைகள்" குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன். இதன் முதல் கட்டமாக ஞானியர் உடலை வைக்கும் குழியினை அமைக்க வேண்டும். இதனை நிலவறை என்கின்றனர். இந்த நிலவறையை அமைக்கும் முறையை திருமூலர் பின் வருமாறு விளக்குகிறார்.

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே

ஒன்பது சாணுக்கு குறையாத ஆழமும், மூன்று சாண் அகலத்தில் முக்கோண வடிவில் குழி தோண்டிட வேண்டுமாம். இப்படித் தோண்டிய மணலை குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்து கொட்ட வேண்டும் என்கிறார். இப்படி அமைக்கப் பட்ட குழியை “குகை” அல்லது “நில அறை” என்று அழைக்கின்றனர்.

பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே

நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே

இவ்வாறு அமைக்கப் பட்ட குழியில் பஞ்சலோகம் மற்றும் நவமணிகளை குழியின் ஆழத்தில் முக்கோண வடிவில் பரப்பி, அதன் மீது தர்ப்பைப் புற்களை விரித்து வெண்ணீற்றையும், பொன்னிற சுண்ணப் பொடியையும் கொட்டி நிரப்பி இருக்கை அமைக்க வேண்டும். மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் சாந்து, புனுகு, பன்னீர் கலந்து மேலே குழியைச் சுற்றி சதுரமாய் தெளித்து தீபம் ஏற்றி வைத்திட வேண்டுமாம்.

இப்போது குழியினை அமைத்து, அதனுள் வைக்க வேண்டியவைகளை வைத்தாயிற்று, அடுத்து....

ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

சமாதி அடைந்த ஞானியின் உடல் மீது திருநீற்றைக் குப்பாயம் (மேல் சட்டை) போல் பூசிய பின்னர் அவரது உடலை பத்மாசனத்தில் அமர்த்தி குழியினுள் இறக்கி வைத்திட வேண்டுமாம். இப்போது அவரது உடலைச் சுற்றி பூக்கள், அறுகம்புல், சுண்ணப்பொடி, திருவெண்ணீறு ஆகியவற்றை போட வேண்டும் என்கிறார். 

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே

மேலே சொன்ன செய்முறைகளை எல்லாம் செய்த பின்னர் குழியினுள் பத்மாசனத்தில் இருத்தப் பட்ட குருவின் திருவடியில் பொரிக்கை, போனகம் (உணவு), இளநீர் ஆகியவற்றை வைத்திட கூறுகிறார் திருமூலர்.அதைத் தொடர்ந்து அவரின் முகம், காதணி, கண் ஆகியவைகளை மூடி, ஞானியின் உடல் மீது பரிவட்டம் சாற்றிட வேண்டும். இறுதியாக திருவெண்ணீறு, நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப் புற்கள், விலவ இலைகள், மலர்களைக் கொண்டு குழியை முழுவதுமாய் நிரப்பிட வேண்டுமாம்.

ஆச்சர்யமான தகவல்தானே.....

பதிவின் நீளம் கருதி மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவசமாதி - ஏன்!, எதற்கு!, எங்கே!

Author: தோழி / Labels:


தவயோகத்தில் சிறந்து தெளிந்த ஞானியரின் உடலை ஜீவ சமாதி அமைத்திட வேண்டியதன் அவசியத்தை மற்றெவரையும் விட திருமூலர் வலியுறுத்திக் கூறுகிறார். அதற்கான காரண காரியங்களும் அவரது பாடல்களின் ஊடே நாம் காணக் கூடியதாக இருக்கிறது. 

அதனை அவரது வரிகளிலேயே பார்ப்போம்....

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே

ஜீவ சமாதி அடைந்த ஞானியரின் உடலை குழி தோண்டி அதில் இருத்தி புதைத்தலே புண்ணியம் என்கிறார். மாறாக அந்த உடலை எரித்தால் பஞ்சம் ஏற்பட்டு நாட்டில் கேடுகள் விளைந்து, மக்களுக்குள் போர் மூண்டு, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர் என்கிறார்.

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே

எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே

ஞானியரின் உடலை புதைக்காமல் நிலத்தின் மேல் கேட்பாரற்று அழிந்துப் போக விட்டாலும் அந்த நாட்டில் மழை பொய்த்து, பெரும் பஞ்சம் ஏற்படுமாம். அரசனும் தன் பதவி இழப்பான் என்கிறார்.

எனவே ஞானியரின் உடலை சமாதி கிரியை என்னும் சடங்குகளின் படி புதைத்து விடுவதே உத்தமம் . இந்த சமாதிகளை அமைப்பதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பது பற்றியும் திருமூலரின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே

வீட்டின் அருகில், நடைபாதை, குளக் கரை, ஆற்றின் நடுப்படுகை, மலர்கள் பூத்துக் குலுங்கும் பசுஞ் சோலை, நகரின் மத்தியில் நல்லதோர் இடம், அடர்ந்த காடுகள், மலைச் சாரல் போன்ற இடங்களில் ஜீவ சமாதி அமைக்க உகந்த இடங்கள் என்கிறார் திருமூலர்.

எல்லாம் சரிதான், இப்போது எப்படி குழி தோண்டுவது?, அதில் ஞானியரின் உடலை எப்படி இருத்துவது?

விவரங்கள் நாளைய பதிவில்.....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஜீவசமாதி ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:


சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்ற உயர் தவநெறியாளர்களின் உடலை அடக்கம் செய்வித்த இடமே ஜீவசமாதி என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்து ஞான மரபில் இந்த ஜீவ சமாதிகள் கோவில்களுக்கு இணையான புனிதத் தன்மை உடையவையாக கருதப் படுகிறது. நம்மில் பலரும் ஜீவ சமாதி என்றால் ஞானியரை உயிருடன் புதைக்கப் படுதல் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது மிகவும் தவறான கருத்து என்கிறார் திருமூலர். 

ஜீவசமாதிகள் அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்றால் அனைத்தையும் மறந்த ஏகாந்த உணர்வு உண்டாகிறது. மனம் அமைதியில் திளைக்கிறது. சிலிர்ப்பூட்டும் அதிர்வலைகளை உணர முடிகிறது. நோயுற்றவர்களின் நோய் தீருகிறது. வேண்டுதல் நிறைவேறுகிறது. வாழ்வில் மாற்றம் உண்டாகிறது என பலரின் பல விதமான அனுபவங்களை கேட்டிருப்போம். இத்தனை சிறப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஜீவசமாதியின் தத்துவம் மற்றும் அதன் அடியாதாரங்களை பகிர்வதே இந்தக் குறுந்தொடரின் நோக்கம்.

ஞானியர் மேலான தவம் மற்றும் கடுமையான ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் தமது உடலையும், உயிரினையும் தூய்மையாக பேணி வருகிறவர்கள். இன்னும் தீர்க்கமாய் சொல்ல வேண்டுமெனில் உடலையும், உயிரையும் புனிதமான கோவிலைப் போல கருதி தனித்துவமான வாழ்வியல் கூறுகளை அனுசரிக்கிறவர்கள். இத்தகைய மேன் மக்கள், இந்த உலக வாழ்க்கையில் தங்களுடைய கடமைகள் முழுமை அடைந்ததாக கருதும் நிலையில் தம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். 

இந்த நிலையில் அவர்களின் உடல் இயக்கமும், மன இயக்கமும் நின்று விட்டிருப்பினும், உயிர் மட்டும் உடலை விட்டு பிரியாதிருக்கும் என்கிறார் திருமூலர். இத்தகைய நிலையே ஜீவ சமாதி என்கிறார். ஜீவ சமாதி என்பதை ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆன்மா தனது ஆதி வடிவத்திற்கு சமனாக உயர்வது என பொருள் கொள்ளலாம். இந்த உயரிய நிலையில் ஞானியரின் உடல் என்றும் கெடாமல் இருக்குமாம். 

இப்படி ஆதிக்கு சமன் ஆகி விட்ட ஞானிகளை இறைவனாகவே கருத வேண்டும் என்றும், அத்தகைய மேன் மக்களை அவரின் சீடர்களின் உதவியோடு பிரத்தியேகமான சடங்குகளை செய்வித்து அவர்களின் உடலை சமாதி செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். இவ்வகை சடங்கிற்கு "சமாதிக் கிரியை" என்று பெயர். இந்த சடங்கு விவரங்களை தனது திருமந்திரத்தில் விரிவாகவே கூறியிருக்கிறார். 

அவற்றை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆன்மீகம் என்பது.....!!

Author: தோழி / Labels:

ஆன்மீகம், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள், ஆளுக்கொரு அர்த்தங்களை பிடித்துக் கொண்டு தங்களுடைய மதம்தான் உயர்வானது என்று நிரூபிக்க வேண்டி என்னவெல்லாம் சொல்கிறார்கள், செய்கிறார்கள். கொஞ்சம் அழுத்தமாய் யோசித்தால் இத்தகைய மதங்களினால் சமூக நல்லிணக்கம் என்பது எங்காவது சாத்தியமாகி இருக்கிறதா? இதற்கு என்னதான் தீர்வு? வாருங்கள் இன்று இதைப் பற்றி கொஞ்சம் பேசித் தீர்ப்போம்.

அண்ட பெருவெடிப்பில் துவங்கிய இந்த பூமியில் ஒரு செல் உயிரியாக ஜனித்து இன்று மனிதனாய் வளர்ந்திருப்பதாக அறிவியல் சொல்கிறது. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அறிவியலார் சொல்லும் சாத்தியங்களை ஏற்றுக் கொள்கிற மன நிலைக்கு அநேகமாய் நம்மில் அனைவரும் வந்து விட்டோம். ஆக ஆதியில் இருந்து இன்றைய நிலை வரை நம்மை வார்த்தெடுத்தது எது? 

அதுதான் காலம். ஆம், கால பரிமாணத்தில் உருவானதுதான் இந்த பூமியும் அதில் வசிக்கும் அத்தனை உயிரினங்களும். இந்த காலத்திற்கு கடவுள் வேஷம் போட்டால் எப்படி இருக்கும். ஆனால் யாரும் அப்படி காலத்துக்கு கடவுள் வேஷம் போட்டதாக தெரியவில்லை. நம்மை போலவே கையும் காலும் உள்ள பிம்பங்களை உருவகித்து அதற்கு மகா சக்தியை கொடுத்து அதற்காக நம்முடைய காலத்தை கரைத்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே, நாம் பார்க்கப் போகிற ஆன்மீகம் என்பது மிக நிச்சயமாக மதத்தின் அடையாளம் இல்லை. அது நம் மனதின் அடையாளம். இதை தெளிவாக உணராமல் போனதால்தான் ஆளுக்கொரு மதச்சாயத்தை அப்பிக் கொண்டு நிற்கிறோம். சர்வ நிச்சயமாக மதச் சின்னங்களை உடம்பெல்லாம் அணிந்து கொண்டும், மத நூல்களை படித்துக் கொண்டும், அதன் விதிகளுக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு வாழ்வதல்ல ஆன்மீகம்.

எது நம்மை இயக்குகிறதோ அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம். இது ஒரு வகையான அறிவு சார்ந்த தேடல். ஆன்மீகம் என்பது நமது அறிவின் ஓர் இயல்... ஆம்!, அறிவியலேதான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நிரூபிக்கப் படாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை.

ஆக, எது நம்மை இயக்குகிறது? கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!, இரண்டு பேரின் அன்புதான் நம்மை உயிர்விக்கிறது, அவர்களின் அன்பும், அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது. அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத் தருகிறது. கருணை நம்மை உயர்த்துகிறது. ஆசையோ நம்மை உந்துகிறது. பெருகிய ஆசைதான் பொறாமையை தருகிறது. பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது. பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.

ஒரு வாழ்நாளை இயக்குவது இவைதான். இந்த சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் மனிதம். இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான் நாம் தேடும் ஆன்மீகம். இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கிறது. நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.

வாழ்க நலமுடன்.

இந்த கட்டுரை கடந்த ஏப்ரல் 22ம் திகதி கொழும்பில் வெளியான "ஓம்கார சாதனா 2012" என்கிற இதழில் வெளியான எனது கட்டுரை. பதிவுலக நண்பர்களுக்காக அதனை இங்கே பகிர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...