ஒரு சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிதல் அவசியமாகிறது. ஏனெனில் அவையே அவர்தம் எண்ணம், செயல், சிந்தனை என்கிற அகவியலையும், அதன் விளைவான புறவியலையும் தீர்மானிக்கிறது. இது எப்படி என்பதை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதியில் தமிழர்கள் வேட்டையாடி இறைச்சியை பச்சையாக உண்பவர்களாக இருந்தனர் என்பதை புறநானூற்றில் வரும் ”பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த” என்ற பாடல் வரியின் மூலம் அறிய முடிகிறது. இவர்கள் பின்னாளில் வேட்டைச் சமூகமாய் அடையாளம் பெற்றனர். இப்படி வேட்டையாடிய விலங்குகளின் தோல் பயன்பாட்டுக்கு உரியதான போது அவற்றை பாதுகாக்கவும், பக்குவப் படுத்தவுமான அவசியம் உண்டானது.
இந்த இடத்தில்தான் சமையல் என்பதே துவங்கியது எனலாம். சமையல் என்ற சொல்லுக்கு பக்குவப் படுத்துதல் அல்லது ஒன்றில் இருந்து மேம்பட்ட இன்னொன்றை உருவாக்குதல் என்று பொருளாகிறது.
தோலின் நீர்மத்தன்மையை போக்கிட வெயிலில் காய வைக்கத் துவங்கியதே சமையலின் முதல் நிலையாக கருதலாம். இதன் நீட்சியாக காய வைத்த இறைச்சியை உண்ணும் பழக்கம் ஆரம்பித்தது. இன்றளவும் இந்த பழக்கம் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.
நெருப்பின் பயன்பாடு உணரப் பட்ட பின்னர் இறைச்சியை அனலில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். இதனை புறநானூற்றுப் பாடலில் வரும் ”கொள்ளி வைத்த கொழு நிணநாற்றம் மறுகுடன் கமழும்” என்ற வரிகள் உறுதி செய்கிறது. இதையே அனலில் இடுதல் என்பர். இப்படி அனலில் இடும் களமே இன்று அடுக்களையாகி நிற்கிறது. சமையலை அடுதல் என்றும் சொல்வதுண்டு.
சமவெளிப் பகுதியில் வாழத் துவங்கிய பின்னரே மனிதர்கள் தமக்கான உணவினை உற்பத்தி செய்யத் துவங்கினார்கள். அந்த கால கட்டத்தில்தான் மண்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்களின் பயன் பாடுகள் அறியப்பட்டன. இச்சமயத்தில் இறைச்சியோடு நீர் சேர்த்து வேக வைத்து உண்ணும் பழக்கம் வந்தது.
சமையலுக்கு நான்கு வகையான அடுப்புகளை பயன்படுத்தியதாக பழந்தமிழ் பாடல்களின் ஊடே அறிய முடிகிறது. அவை முறையே முரியடுப்பு, ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு,முடித்தலை அடுப்பு, ஆண்டலை அணங்கடுப்பு என்பதாகும்.
இதைப் போலவே அந்தக் கால கட்டத்தில் பயன்ப்டுத்திய பாண்டங்களின் பெயர்களை பின் வரும் பாடல் வரிகளின் ஊடே அறியலாம். “இருங்கட் குழிசி”, ”சோறடு குழிசி”, ”மேலும் புகர்வாய்க் குழிசி”, ”மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி”, ”வெண்கோடு தோன்றாக் குழிசி”, "முரவு வாய் ஆடுறு குழிசி”, “அட்டகுழிசி அழற்பயந்தாங்கு” என்பதாகும்.
ஆச்சர்யமான தகவல்கள்தானே...

நில உடமை சமூகமாய் மாறிய பின்னரே தன்னுடன் கால்நடைகளை வளர்க்கவும், மேய்த்து பராமரிக்கவும் துவங்கியிருக்கின்றனர். கால் நடைகளின் பாலும், தயிரும், நெய்யும் உணவுப் பொருட்களாய் இருந்ததை புறநானூற்றுப் பாடல்களின் ஊடே அறிய முடிகிறது. இந்த காலகட்டத்தில்தான் உணவில் சுவை சேர்ந்திருக்க வேண்டும்.
இந்தக் குறிப்புகளை எல்லாம் பார்க்கும் போது தமிழர்கள் இறைச்சி உணவைக் கொள்பவர்களாக இருந்திருக்கக் கூடும் என்கிற எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆதியில் அப்படி இருந்தாலும் பிற்காலத்தில் தாவர உணவும் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது.
அவை என்ன?
அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...