உணவு - சமையல்.

Author: தோழி / Labels:

ஒரு சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிதல் அவசியமாகிறது. ஏனெனில் அவையே அவர்தம் எண்ணம், செயல், சிந்தனை என்கிற அகவியலையும், அதன் விளைவான புறவியலையும் தீர்மானிக்கிறது. இது எப்படி என்பதை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதியில் தமிழர்கள் வேட்டையாடி இறைச்சியை பச்சையாக உண்பவர்களாக இருந்தனர் என்பதை புறநானூற்றில் வரும் ”பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த” என்ற பாடல் வரியின் மூலம் அறிய முடிகிறது. இவர்கள் பின்னாளில் வேட்டைச் சமூகமாய் அடையாளம் பெற்றனர். இப்படி வேட்டையாடிய விலங்குகளின் தோல் பயன்பாட்டுக்கு உரியதான போது அவற்றை பாதுகாக்கவும், பக்குவப் படுத்தவுமான அவசியம் உண்டானது. 

இந்த இடத்தில்தான் சமையல் என்பதே துவங்கியது எனலாம். சமையல் என்ற சொல்லுக்கு பக்குவப் படுத்துதல் அல்லது ஒன்றில் இருந்து மேம்பட்ட இன்னொன்றை உருவாக்குதல் என்று பொருளாகிறது.

தோலின் நீர்மத்தன்மையை போக்கிட வெயிலில் காய வைக்கத் துவங்கியதே சமையலின் முதல் நிலையாக கருதலாம். இதன் நீட்சியாக காய வைத்த இறைச்சியை உண்ணும் பழக்கம் ஆரம்பித்தது. இன்றளவும் இந்த பழக்கம் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. 

நெருப்பின் பயன்பாடு உணரப் பட்ட பின்னர் இறைச்சியை அனலில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். இதனை புறநானூற்றுப் பாடலில் வரும் ”கொள்ளி வைத்த கொழு நிணநாற்றம் மறுகுடன் கமழும்” என்ற வரிகள் உறுதி செய்கிறது. இதையே அனலில் இடுதல் என்பர். இப்படி அனலில் இடும் களமே இன்று அடுக்களையாகி நிற்கிறது. சமையலை அடுதல் என்றும் சொல்வதுண்டு.

சமவெளிப் பகுதியில் வாழத் துவங்கிய பின்னரே மனிதர்கள் தமக்கான உணவினை உற்பத்தி செய்யத் துவங்கினார்கள். அந்த கால கட்டத்தில்தான் மண்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்களின் பயன் பாடுகள் அறியப்பட்டன. இச்சமயத்தில் இறைச்சியோடு நீர் சேர்த்து வேக வைத்து உண்ணும் பழக்கம் வந்தது.

சமையலுக்கு நான்கு வகையான அடுப்புகளை பயன்படுத்தியதாக பழந்தமிழ் பாடல்களின் ஊடே அறிய முடிகிறது. அவை முறையே முரியடுப்பு, ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு,முடித்தலை அடுப்பு, ஆண்டலை அணங்கடுப்பு என்பதாகும்.

இதைப் போலவே அந்தக் கால கட்டத்தில் பயன்ப்டுத்திய பாண்டங்களின் பெயர்களை பின் வரும் பாடல் வரிகளின் ஊடே அறியலாம். “இருங்கட் குழிசி”, ”சோறடு குழிசி”, ”மேலும் புகர்வாய்க் குழிசி”, ”மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி”, ”வெண்கோடு தோன்றாக் குழிசி”, "முரவு வாய் ஆடுறு குழிசி”, “அட்டகுழிசி அழற்பயந்தாங்கு” என்பதாகும்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே...

நில உடமை சமூகமாய் மாறிய பின்னரே தன்னுடன் கால்நடைகளை வளர்க்கவும், மேய்த்து பராமரிக்கவும் துவங்கியிருக்கின்றனர். கால் நடைகளின் பாலும், தயிரும், நெய்யும் உணவுப் பொருட்களாய் இருந்ததை புறநானூற்றுப் பாடல்களின் ஊடே அறிய முடிகிறது. இந்த காலகட்டத்தில்தான் உணவில் சுவை சேர்ந்திருக்க வேண்டும்.

இந்தக் குறிப்புகளை எல்லாம் பார்க்கும் போது தமிழர்கள் இறைச்சி உணவைக் கொள்பவர்களாக இருந்திருக்கக் கூடும் என்கிற எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆதியில் அப்படி இருந்தாலும் பிற்காலத்தில் தாவர உணவும் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது.

அவை என்ன?

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தமிழரும், உணவும் - ஓர் பார்வை!

Author: தோழி / Labels:


ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற வாழ்வியல் கூறுகளை தீர்மானிக்கும் காரணிகளில் அவர்கள் உட்கொள்ளும் உணவு முதன்மையானது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் மனிதன் தான் வாழும் பருவச் சூழலில் இயற்கையாய் அமைந்திருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே தனக்கான உணவினை உருவாக்கிக் கொள்கிறான். 

இந்த வகையில் உலகின் ஒவ்வொரு பகுதில் வாழ்ந்த இனக்குழுக்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப தனித்துவமான அடையாளங்களை கொண்டே வளர்ந்தன, இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நாம் அனைவரும் அறிந்தவையே. 

மனிதன் தொல் பழங்குடி இனக் குழுவாய் வாழ்ந்த காலத்தில், கிடைத்ததை உண்டு, கிடைத்ததை உடுத்தி, கிடைத்த இடங்களில் உறைந்து வாழ்ந்தவன். சற்றே மேம்பட்டு ஆற்றங்கரை நாகரிகமாய், நில உடமைச் சமூகமாய் வாழத் துவங்கிய பின்னரே தனக்கான உணவை உருவாக்கிடவும், பாதுகாக்கவும் கற்றுக் கொண்டார்கள். நெருப்பின் பயன் பாடு உணரப் பட்ட பின்னரே உணவை பதப் படுத்தவும், சமைக்கவும் ஆரம்பித்தனர்.

இந்த வகையில் ஆறாயிரம் ஆண்டு பழமையான தமிழரின் உணவியல் வரலாற்றினை அலசுவதே இந்தத் தொடரின் நோக்கம். இங்கே நான் பகிர இருக்கும் பெரும் பாலான இந்த தகவல்கள் பழந்தமிழ் பாடல்களின் ஊடே சேகரிக்கப் பட்டவை. ஆறாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர்களின் வரலாற்றில், கடைசி ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளின் தகவல்கள் மட்டுமே இந்த பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிறது.

அதற்கு முந்தைய வரலாறுகள் எல்லாமே கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் செவிவழிச் செய்தியாகவும், ஊகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட செய்திகளே. இவற்றில் உணவியல் தொடர்பான தகவல்கள் குறைவாக இருந்தாலும் அவை சுவாரசியமானவை.

ஆதியில் தமிழனும் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை பச்சையாகவும், காய வைத்தும், சுட்டும், சமைத்தும் உண்டதாக, புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப் படை போன்ற நூல்களில் அநேகக் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக விளக்கப் புகுந்தால் தொடரின் நீளம் அதிகரிக்கும் என்பதால் இங்கே பாடல் குறிப்புகளை தவிர்த்திருக்கிறேன்.

ஒரு பக்கம் வேட்டைச் சமூகமாய் வாழத்துவங்கிய வேளையில், சமவெளிப் பகுதிகளில் உணவிற்காக கால்நடைகளை வளர்க்கவும் தமிழர்கள்  தலைப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் உணவை உற்பத்தி செய்யவும் அதனை பாதுகாக்கும் முயற்சிகள் ஆரம்பம் ஆகியது. சமையல் செய்யும் முறையும் கூட இந்த கால கட்டத்தில்தான் துவங்கியது எனலாம்.

சமைத்தல் என்றால் என்ன?, தமிழர்கள் எப்படி சமைத்தார்கள்?

விவரம் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் எந்த மதம்?

Author: தோழி / Labels: , ,


சித்தர்கள் தமிழைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்தவர்கள், அதிலும் குறிப்பாக சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகவே கருதிக் கொண்டிருக்கிறோம். இது உண்மையாக இருக்க முடியுமா?, சித்தர் பெருமக்களை இத்தகைய அடையாளங்களுக்கு அடக்கி விடமுடியுமா?

இப்படி ஒருக் கோணத்தில் சித்தர் பெருமக்களை அணுகினால், விடை என்னவாக இருக்கும் எனத் தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. என்னுடைய தெளிவு இறுதியானது இல்லை, எனினும் தெளிவை நோக்கிய ஒரு துவக்கப் புள்ளியாக இருக்குமென நம்புகிறேன். தவறுகளிருந்தால் பொருத்தருளவும்.

நம்மில் பலரும் சித்தர்கள் என்றால் சிந்தை தெளிந்தவர்கள், தன்னை உணர்ந்தவர்கள் என்பதாகவே அறிந்திருக்கிறோம். நிதர்சனத்தில் இது ஒரு மேலோட்டமான சிந்தனைப் போக்கு. என்னுடைய வாசிப்பனுபவத்தில் சித்தர் பெருமக்கள் ஓவ்வொருவரும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவர்களாக, இம் மாதிரியான பொது வரையறைகளுக்கு அப்பாற் பட்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

ஏற்கனவே நிறுவப் பட்ட மதம், இனம், சாதி, மொழி, சடங்கு, சாத்திரங்கள் என இவை எல்லாவற்றையும் தாண்டிய சம நோக்குப் பார்வை ஒன்றே இவர்களிடத்தே நாம் காண முடிகிற பொதுமைப் பண்பு. இப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் இந்தப் பெருமக்களை ஒரு மதத்திற்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ அடையாளமாய் காட்டிட முடியும். 

சித்தரியல் என்பது வரையறைகள் இல்லாத தனித்துவமான சுதந்திரம் நிறைந்த, உயர் வாழ்வியல் கலாச்சாரம். இந்து மதச் சூழலில் நாம் பார்க்கும் சித்தர் பெருமக்களைப் போலவே மற்ற பிற மதங்களிலும் இத்தகைய மேன் மக்கள் அநேகர் வாழ்ந்திருந்தனர். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிக நிச்சயமாக இவர்கள் அமானுஷ்ய மனிதர்கள் இல்லை. நம்மினும் எளிய வாழ்வியல் தத்துவங்களை முன்னிறுத்தி வாழ்ந்த மாமனிதர்கள். முன் தீர்மானங்கள் எதுவும் இல்லாமல் இவர்களை அணுக துணிந்தால் மட்டுமே இந்த நிஜம் நமக்குப் புலப்படும்.

நுணுக்கமான இந்த தத்துவ நிலையினை புரிந்து கொள்வதில் புள்ளியளவு பிசகு ஏற்பட்டாலும் கூட, அது மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, நாத்திக வாதம் என்பன போன்ற நேரெதிர் பிம்பங்களை கட்டமைத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. சித்தர்களோ அல்லது அவர்களையொத்த மற்ற பிற மதங்களின் மெய்யுணர்வாளர்களோ கடவுள் கோட்பாட்டினை நிராகரிக்க வில்லை. மாறாக மெய்யான தெய்வம் எதுவென தேடித் தெளிவதை முன் வைத்தனர். 

தேடல் என்பது தன் இருப்பினை உணர்ந்து, தன் சுற்றத்தை, அதன் இயல்பைக் குறித்த புரிதலின் வாயிலாக உயர் நிலையான மெய்யறிவினைக் கைக் கொள்ளுதல் என்பதாகவே இருந்தது. மேலான குருவின் வழி காட்டுதலோடு இந்த தேடலின் பாதை அமைகிறது. தன்னை உணர்ந்த மேலான சித்த நிலையில் அவர்கள் யாருடைய பிரதிநிதியும் இல்லை, அல்லது தம்மை முன்னிலைப் படுத்தும் தன் முனைப்பும் இல்லை. இதையே சித்தியடைந்த மேலான இறைமை நிலை என்பதாகிறது.

ஸ்தாபனங்களை நிராகரித்த இப் பெருமக்கள், ஒரு போதும் கடவுளையோ அவரின் தன்மையையோ மறுக்கவில்லை. மாறாக தம்மில் உறைந்த இறையை உணராதவர்களை ஏழைகள் என்கிறார் பட்டினத்தார்.

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீஇருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே.

இதனையே திருமூலரும்...

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
                             
இந்தக் கருத்தினை இன்னும் தீவிரமாய் சிவ வாக்கியர் பின் வருமாறு கூறுகிறார்.

கோயில் பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலா மிறையையே

திருமூலரின் இந்தப் பாடலும் இதனை வலியுறுத்தும்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே

மனித வாழ்வியல் கூறுகளான அத்தனை துறைகளிலும் அவர்களின் தேடல்களும், அதன் தெளிவுகளும் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். அவற்றை போற்றிப் பராமரித்து மேம்படுத்துவதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். அன்பையே இறையாகக் கொண்டு, அகிலம் சிறக்க தம்மை அர்ப்பணித்த அப் பெருமக்களை மதங்களின் பிரதிநிதி என்பதை விடவும் மனிதர்களின் பிரதிநிதி என்பதே சாலப் பொருந்தும். 

மதங்களைத் தாண்டிய மனித நேயத்தை வலியுறுத்திய அப் பெருமக்களின் வழி நிற்பதில் பெருமை கொள்வோம்.

பிற் சேர்க்கை:

நண்பர்களே,

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு இன்றோடு இரண்டாண்டுகளை பூர்த்தி செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

எல்லாம் வல்ல குருவருளினால் மட்டுமே இத்தனையும் சாத்தியமாயிற்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


படர்தாமரை, ஓர் எளிய தீர்வு!

Author: தோழி / Labels: ,

தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.

தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது. 

இத்தகைய தோல் வியாதிகளுக்கு சித்தர் பெருமக்கள் பல எளிமையான தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இன்று படர்தாமரை பிரச்சினைக்கு தேரையர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். தேரையர் வாகடம் என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.

கொன்றைக் கொழுந்து தகரைவிதை குழலா வரைவேர் குளவிந்தம்
மனறத் துளசி திரிபலையும் மற்று மிலுப்பைப் புண்ணாக்கும்
ஒன்றக் கூட்டிப் பழமோரில் ஊறி யெடுத்தெலு மிச்சம்சாற்றில்
நன்றா யரைத்துப் பூசியிட நாடா படர்தா மரைதானே.

- தேரையர்.

கொன்றைக் கொழுந்து, தகரவிதை, ஆவாரைவேர், மஞ்சள், துளசி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி முள்ளி, இலுப்பைப் பிண்ணாக்கு, ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பழைய மோரில் ஊறவைத்து எடுத்து,எலுமிச்சைச் சாற்றுவிட்டு நன்கு அரைத்துப் படர்தாமரை இருக்கும் பகுதிகளில் பூசிவர குணமாகும் என்கிறார்.

மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாயா புருஷ தரிசனம்.... தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,


சாய புருஷ தரிசனம் பெறுவது பற்றிய தகவல்களை முந்தைய பதிவில் பார்த்தோம். 

போகர் தனது “போகர் 7000” நூலில் இது குறித்து விரிவாகவே கூறியிருக்கிறார். மேலும் இந்த தரிசனத்தை எளிதில் பெற உதவும் மை ஒன்றினை தயாரிக்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.இந்த மை குறித்து சொல்ல வரும் வேளையில் இதனை தனக்கு காலங்கி நாதர் உபதேசித்ததாக குறிப்பிடுகிறார்.

பாரேதான் சரநூலாம் பஞ்சபட்சி
     பாரினிலே மாணாக்கள் பிழைக்கஎன்று 
நேரேதான் சாத்திரத்தை பாடிவைத்தார்
     நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தைக் காண்பதற்கு
     செம்மலுடன் வழிசொன்னார் மைதான்இல்லை
கூரேதான் மையினது மார்க்கம்தன்னை
     கூறினேன் காலங்கி கடாட்சந்தானே.

தானான சித்துமுனி கும்பயோனி
     தாரணியில் கருவுதனை மறைத்தும்போட்டார்
மானான காலங்கி எந்தன்நாதர்
     மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானும்கற்று
     தெளிவாக மாணாக்கர் பிழைக்கஎன்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து
     பாருலகில் பாலகர்க்குப் பாலித்தேனே.

சித்தர் பெருமக்கள் தமது சீடர்களுக்காக சரநூல், பஞ்ச பட்சி, சாயா தரிசனம் என்று பலவகையான சாத்திரங்களை அருளியிருந்தாலும், இந்த சாயா தரிசனத்தை எளிதாய் பெற உதவும் மை பற்றிய தகவல்களை சொல்லாது மறைத்து விட்டதாகவும், அதனை தான் கூறுவதாய் தனது நூலில் குறிப்பிடுகிறார். இதன் மூலம் இந்த மையின் மகத்துவத்தை உணரலாம். 

பாலிப்பேன் இன்னமொரு மார்க்கம்கேளும்
     பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
நீலியென்ற கருங்காலி மூலிதானும்
     நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
சூலியென்ற நத்தையின் சூரியப்பா
     சூரியனார் காந்தியது மூலிவேரும்
வேலியென்ற பருத்தியப்பா இருவேலிதானும்
     வேகமுள்ள கருப்பு ஊமத்தைவேரே.

வேரான சடையனது மூலிதானும்
     வேகமுடன் பொன்னின் ஊமத்தைவேரும்
தூரான மையூரின் சிகையும்கூட்டி
     துப்புரவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சேரான பொடிதனிலே ஐங்கோலத்தைச்
     செப்பமுடன் தான்உரைத்துச் சொல்லக்கேளு
கூரான புழுகுரோசனை யும்சேர்த்து
     குறிப்புடனே மைசேர்த்து அரைத்திடாயே.

சேர்த்துமே பேரண்டந் தன்னில்அப்பா
     செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
கோர்த்துமே குமரியுடமையும் கூட்டி
     கொற்றவனே தான்அரைத்துச் சிமிளில்வைத்து
பார்த்துமே நேத்திரமாம் புருவந்தன்னில்
     பாலகனே மைதீட்டி ஆகாயத்தை
தீர்த்துமே பார்க்கின்ற காலம்தன்னில்
     திறமுடனே தரிசனமும் தெரியும்தானே.

தானான சூரியனை மேகம்தானும்
     சட்டமுடன் மேகமது மறைந்திட்டாலும்
பானான மேகமதுக் குள்ளிருக்கும்
     பாலகனே சூரியனும் கண்ணில்தோற்றும்
மானான சந்திரனைக் காணும்போது
     மகத்தான தரிசனையும் கண்ணில்தோற்றும்
தேனானதே சொளிவின் மயத்தைப்போல
    ஜெகசோதி மின்னல்போல் தோற்றும்பாரே.

பாரேதான் மையினால் மேகசாலம்
     பாங்குடனே கரிசனையும் காணலாகும்
நேரேதான் இக்கருவை சித்தர்தானும்
     நெறிமுறைமை தான்அறிந்து கூறாமல்தான்
சீரேதான் கருக்குருவை மறைத்துவிட்டு
     சீர்தப்பித் தெரிசனத்தைப் பாடிவைத்தார்
ஆரோதான் எனைப்போல் சொன்னாராப்பா
     அப்பனே உண்மையது உரைத்திட்டோமே.

கருங்காலி, கண்ணை மூலிவேர், நத்தை சூரி, சூரிய காந்தி வேர், வேலிப்பருத்தி, கருஊமத்தை வேர், பொன்னூமத்தை வேர், மையூர் சிகை ஆகியவைகளை சம அளவில் எடுத்து சிறுதுண்டுகளாக நறுக்கி பொடியாக செய்து கொள்ள வேண்டுமாம். 

இந்த பொடியுடன் ஐங்கோல கருவும் சேர்த்து உரைத்து, அத்துடன் புனுகும் கோரோசனையும் சம அளவில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கலவையுடன் ஏரண்டதைலமும், குமரி மையும் சேர்த்து கல்வத்தில் இட்டு கடைந்து எடுத்து அதனை சிமிழில் சேகரம் செய்து கொள்ளக் கூறுகிறார்.

சாயா புருஷ தரிசனம் பெற வேண்டிய வேளைகளில் இந்த மையை எடுத்து புருவ மத்தியில் திலகமாக தீட்டிக் கொண்டு நிழலை நன்றாக உற்று பார்த்து பின்னர் அப்படியே தலையை மேலே நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தை பார்த்தால் சாயா புருஷ தரிசனத்தை எளிதாகப் பெறலாம் என்கிறார்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாயா புருஷ தரிசனம்!

Author: தோழி / Labels:

சாயை என்ற சொல்லுக்கு உருநிழல், பிரியாத துணை என்பதாக அர்த்தங்கள் உண்டு. நம்முடைய நிழலையே நாம் பார்ப்பதன் மூலம் அதை உணர்வதையே சாயா புருஷ தரிசனம் என்கின்றனர். இந்திய யோக மரபில் இந்த சாயா தரிசனம் பற்றி நிறைய குறிப்புகள் காணப் படுகின்றன. நமது சித்தர் பெருமக்களின் பாடல்களிலும் கூட இத்தகைய குறிப்புகள் காணப் படுகின்றன. பத்திரகிரியார் பாடலொன்று பின் வருமாறு..

கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்

-பத்திரகிரியார்.

வெயில் நேரத்தில் கீழே விழும் நமது நிழலைப் பார்ப்பதில் பெரிதாக என்ன விசேடம் இருந்து விட முடியும் எனத் தோன்றுவது இயற்கையே... நிழலைப் பார்ப்பதில் விசேடமில்லை, அப்படிப் பார்த்த நிழலின் ஊடாக நம் சாயையை தரிசிப்பதில் தான் விசேடமிருக்கிறது. குண்டலினி யோகம் பயில்பவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகும் என்கிறார்கள்.

சரி, இந்த சாயா தரிசனத்தை எப்படி பெறுவது?

மேகங்கள் இல்லாத காலைப் பொழுதில், எட்டு ம்ணி துவங்கி ஒன்பது மணிக்குள்ளான சமயத்தில், மேடுபள்ளம் இல்லாத சம தரையில் நமது நிழல் பக்கம் திரும்பி நின்று நம் காலடியில் இருந்து ஏழு முதல் ஒன்பது அடி தூரத்திற்கு நிழல் விழும் போது நமது நிழலை நன்றாக உற்றுப் பார்க்கவேண்டுமாம். இப்படி கண்ணிமைக்காமல் ஒரு நிமிடம் முதல் முப்பது நிமிடம் வரை பார்க்கலாம். பார்த்த பின்னர் அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே நமது உருவப் பிம்பம் அல்லது சாயை தோன்றுமாம்.

இப்படி இந்த சாயா தரிசனத்தை தொடர்ச்சியாக நான்கு முதல் ஆறு வருடங்கள் வரை செய்து வந்தால் நமது நிழலானது நம் கூட இயங்கும் இன்னொரு புருஷனைப் போல தோன்றுமாம். இப்படித் தோன்றிய பிறகு இந்த சாயா புருஷன் ஒரு ஆள் ரூபத்தில் நம்முடனே திரியும் என்கிறார்கள். நாம் படுத்தால் அதுவும் படுக்கும். நாம் எழுந்தால் அதுவும் எழுந்திருக்கும். நமக்கு வரும் நல்லவை கெட்டவைகளை முன்கூட்டியே அது உணர்த்தும். அது சரீர ஞானத்தையே ஒத்து இருக்கும் என்கிறார்கள்.

தொடர்ச்சியாக இதை செய்து வருகிறவர்களுக்கு எல்லா வகையான சித்துக்களும் வாய்க்குமாம். முக்காலத்தையும் உணர்ந்து சொல்லும் ஆற்றல் உடையவர்களாகி விடுவார்களாம். எல்லையற்ற பிரபஞ்ச சக்தியுடன் நாம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு விதமான உளவியல் பயிற்சியாக இது இருக்கக் கூடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.சிலர் பௌர்ணமி நிலவு ஒளியிலும் இந்த சாயா தரிசனம் பார்ப்பதுண்டு. இதை மாயா புருஷதரிசனம் என்பார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த சாயாபுருஷ தரிசனத்தை எளிதாய் பெற உதவும் மை ஒன்றினை போகர் அருளியிருக்கிறார்.

ஆம், அந்த விவரங்கள்.... அடுத்த பதிவில்.... காத்திருங்கள்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இந்திர சால ஞானம்48 - மின்னூல்.

Author: தோழி / Labels:


நண்பர்களே,

மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினைந்தாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய ”இந்திர சால ஞானம் 48” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை அறிந்தவர் என்று கூறப் படுகிறது. இவர் காஞ்சியம்பதியில் சமாதியடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

பதினெண் சித்தரிகளிடம் தான் கற்றறிந்தவை பற்றி காலங்கி நாதரரே பின் வருமாறு விளக்குகிறார்.

"கேளடா முக்காலும் பேச்சுப்பேசக்
கேசரமாய்ச் சரமடக்கப் பேசலாமோ
நாளடா முப்பதி ரண்டே நாளில்
நானிருந்தேன் பதினெண்பேர் பேச்சைக்கேட்டு
வேளடா மன்மதன்றன் ரூபங்கண்டு
விடமென்று உட்கொண்டு பார்த்துக்கொண்டேன்
கோளடா ஒன்றுமில்லை யில்லைபாரு
கூச்சமற்றுப் பேச்சுக்கால் காணலாமே."

குண்டலினி யோகத்தில் தேர்ந்து தெளிந்ததனால் காலங்கிநாதருக்கு கமலமுனி என்றொரு பெயரும் உண்டு என்பது போன்ற பல புதிய தகவல்கள் இந்த நூலில் உள்ளது. போகருக்கு புவனபதி சக்கரம் பற்றிய விளக்கத்தினை தான் சொன்னதாகவும் அதனை போகர் தனது போகர் 700 என்னும் நூலில் தெளிவாக பாடிவைத்திருக்கிறார் என்கிற தகவல் ஆச்சர்யமான ஒன்று.

மேலும் போகருடன் சிலகாலம் தங்கியிருந்த போது அவர் தனக்கும், கொங்கணவருக்கும் சரக்கு கட்டும் வகைகளையும், அவனாசி நுனிமூலம், மாணிமூலம், போன்றவைகளை கற்பித்த விவரங்களும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

தமிழ் அறிந்த அனைவரும் இத்தகைய பெருமை வாய்ந்த நூலின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது இத்தகைய நூல்கள் எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது. எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

மேலான எனது குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"காலங்கிநாதர் அருளிய இந்திர சால ஞானம் 48" மின்னூலைத் தரவிறக்க..


என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.comசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆண்மைக் குறைவுக்கு தீர்வு...

Author: தோழி / Labels: ,


ஆண்மைக் குறைவு பற்றிப் பெரிதான அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். உடலியல் ரீதியான ஏற்படும் இந்தப் பின்னடைவுகள் உருவாக்கிடும் உளவியல் சிதைவானது பல குடும்பங்களின் அவதிக்கும், அழிவுக்கும் காரணமாகி விடுகிறது. 

ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் வாழ்வியல் சூழல் காரணங்களினால் உருவாகிடும் இந்த பிரச்சினைகளைப் பற்றி நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பாதிப்புக்கு உள்ளாவர்கள், தங்களுக்கு ஏற்படும் இயல்பான தயக்கம் மற்றும் கூச்சம் காரணமாய் முறையான வைத்திய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முன் வருவதில்லை. இதனைப் பயன் படுத்திக் கொண்டு பல போலி வைத்தியர்கள் பொய்யான நம்பிக்கையை  தூண்டிவிட்டு, பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து பணத்தை கறந்து விடுவது காலம் காலமாய் தொடர்கிறது.

ஆண்மைக் குறைவை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், மற்றது உறவில் நாட்டமின்மை அல்லது இயலாமை என்பதாகும். இதற்கு நவீன மருத்துவம் அநேக தீர்வுகளை முன் வைக்கிறது. எனினும் இவை யாவும் செலவு பிடிக்கும் வைத்திய முறைகள். மேலும் இதற்கான பலனும் தொடர் சிகிச்சையின் மூலமே சாத்தியமாகும்.

ஆண்மைக் குறைவினை நிவர்த்தி செய்யும் பல வழி முறைகளை நமது சித்தர் பெருமக்கள் அருளி இருக்கின்றனர். மிகவும் எளிதான இந்த முறைகள் நல்ல பலனைத் தரக்கூடியவை என்றும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணிச் சித்தர் அருளிய புலிப்பாணி ஜாலதிரட்டு என்னும் நூலில் கூறப் பட்டிருக்கும் ஒரு முறையினை இன்று பார்ப்போம்.

பாராப்பா சந்தனமுந் தேற்றான வித்தும்
         பண்பான பூமிசர்க் கரையின் மூலஞ்
சேரப்பா பூனையென்ற காலி வித்துஞ்
         செயலான முருங்கை வேர்ப்பட்டை கூட்டி
கூறப்பா வகைவகைக்கு விராகன் ரெண்டு
          கொற்றவனே தானரைத்து தேங்காய் பாலின்
தீரப்பா சீனி சர்க்கரையும் போட்டுத்
           திறமாகக் குடிப்பாயீ ராறு நாளாமே.

ஆமடா குடித்துவரத் தாது புஷ்டி
            அப்பனே வீரியந்தான் விளையும் போது
தாமடா சூடுகள்தான் தணியும் பாரு 
             தளதளப்பாய் தேகமது காந்தி யுண்டாம்
வாமடா மங்கையரைப் புணர்ந்தா யானால்
             வளமான மான்மதனோ விவனென் பார்கள்
தாமடா போகருட காடாட்சத் தாலே
              நலமாகப் புலிப்பாணி பாடினானே.

சந்தனம், தேற்றான் கொட்டை, பூமிசர்க்கரைக் கிழங்கு, பூனைகாலி வித்து, முருங்கை வேர்ப்பட்டை என இவை ஒவ்வொன்றிலும் இரண்டு வராகன் எடை வீதம் எடுத்து கல்வத்தில் இட்டு, தேங்காய்ப் பால் ஊற்றி அரைத்தெடுக்க வேண்டுமாம். இதனுடன் அளவாக சீனிச் சர்க்கரையை சேர்த்து பன்னிரெண்டு நாட்கள் குடித்து வந்தால் தாது புஷ்டி ஏற்பட்டு வீரியம் உண்டாகும் என்கிறார். இதனால் உடலின் சூடு தணிவதுடன், தேகம் பொலிவாகுமாம். மேலும் இத்தகைவரைச் சேரும் பெண்கள் இவன் மன்மதனோ என வியந்து போவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த வைத்திய முறையின் பலனாக விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உறவில் நாட்டமும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சரக்குகள் எல்லாம் எந்த ஒரு நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடியவை. இதில் குறிப்பிடப் படும் சீனிச் சர்க்கரை எதுவெனத் தெரியவில்லை. தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அன்பே சிவம்....

Author: தோழி / Labels:


“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது டால்ஸ்டாயின் பிரபலமான வாசகம். அதாவது நம்மினும் வறிய ஏழைகளுக்குத் நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் தெரியும் கபடமில்லாத புன்னகையில் இறைவன் தெரிவார் என்பதே பொருள். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது.

அன்பே கடவுள் என்று அனைத்து மதங்களும் வலியுறுத்துகிறது.  உலக பொதுமறையான நமது திருக்குறளில் கூட அன்புடைமைக்கு என தனி அதிகாரமே உள்ளது. இத்தகைய மாசற்ற அன்பின் பெருமையை, மகத்துவத்தினை அகிலத்துக்கு முதலில் சொன்னவர்கள் நம் சித்தர் பெருமக்கள் என்றால் மிகையில்லை.

அன்பின் மகத்துவத்தினை திருமூலர் பின்வருமாறு விவரிக்கிறார்.

’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’              

- திருமந்திரம்.

அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்கிறார். அன்பையும், சிவமாகிய இறை நிலையையும் பிரிக்கவே முடியாது, அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர்.

பசி, தாகம் ஆகியவற்றை மறந்து பல காலம் தவம் இயற்றி, உடலை வருத்தினால்தான் இறைஅருளைப் பெறமுடியும் என பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை திருமூலர் நிராகரிப்பதோடு இறைஅருளைப் பெற எளிய வழி ஒன்றினையும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே 

-  திருமந்திரம்.

உடலை வருத்தி எதைச் செய்தாலும் இறைவனை அடைய இயலாது. மாறாக நெஞ்சம் உருகி அன்பு மயமாய் குழைந்தால் மட்டுமே இறை நிலையினை அடைவது சாத்தியம் என்கிறார் திருமூலர்.

மேலும் எத்தகையவர் மீது இறைவன் அன்பு செலுத்துவார் என்பதையும் திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.

’’கொழுந்து அன்பு செய்து கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் சாது ஆமே’’  

 - திருமந்திரம்.

எவர் ஒருவரால் சக உயிர்கள் மீது அன்பு செய்ய இயலுகிறதோ, அவர் மீதே இறைவன் அன்பு செலுத்துவார் என்கிறார். இறை அருளை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள பிறர் மீது அன்பு செலுத்துவதை விட எளிய வழி வேறு எதுவுமே இல்லை என்கிறார் திருமூலர்.

டால்ஸ்டாய் சொன்னதை உலகம் முழுக்க கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அன்பின் மகத்துவத்தை உலகத்தாருக்குச் சொல்லி வைத்த நம் முன்னோரின் பெருமையை நாம் எத்தனை தூரம் நினைவில் கொண்டிருக்கிறோம் அல்லது அதன் வழி நிற்கிறோம் என்ற கேள்விக்கான பதிலை உங்களின் தீர்மானத்துக்கே விட்டு இந்தப் பதிவினை நிறைவு செய்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தங்கமாகும் பித்தளை....

Author: தோழி / Labels: , ,


பஞ்சபூத அம்சங்களின் அறிவியல் குறித்த அடிப்படைகளை முந்தைய இரு பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் இன்று இந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தாழ்ந்த உலோகத்தை உயர் உலோகமாய் மாற்றும் முறையினை பார்ப்போம். இதற்கு முன்னரும் கூட இதே தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு தாழ்ந்த உலோகத்தினை உயர் உலோகமாய் மாற்றும் செயல் முறைகளை பகிர்ந்திருக்கிறேன் அந்தப் பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் பித்தளையை தங்கமாக மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார். அந்த விவரம் பின் வருமாறு.

பதிவாக இன்னமொரு கருமானங்கேள்
     பதிவான பிருதிவியைப் பழச்சாற்றாலே
கெதியாகத் தானரைத்து மைந்தாகேளு
     கெணிதமுடன் துருசுவெடி சாரங்கூட்டி
மதியான சருகுடனே பூரஞ்சேர்த்து
     மைந்தனே பழச்சாற்றா லரைத்துருட்டி
விதியான பித்தளையைத் தகடுசெய்து
     விரும்பியந்த மருந்ததிலே சேர்த்துமூடே.

சேர்ந்துநன்றாய் மூடியபின் மைந்தாகேளு
     சிவசிவா நிதானமுடன் புடத்தைப்போடு
பார்த்திபனே புடமாறி யெடுத்துப்பார்த்தால்
     பத்தியுள்ள பித்தளைதான் செம்பாய்ப்போச்சு
போற்றியந்தச் செம்பதனைப் பதனம்பண்ணி
     புண்ணியனே வெள்ளிதனில் நாலுக்கொன்று
வாத்திமிகத் தாங்கொடு உருக்கிப்பார்க்க
     மயங்காதே மகத்தான பொன்தான்பாரே.

பஞ்ச பூதங்களுள் மண்ணை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலகத்தை எடுத்து அத்துடன் பழச்சாறு சேர்த்து அரைத்து,பின்னர் அதனுடன் துரிசும், வெடிசாரமும், பூரமும் சம அளவில் சேர்த்து மீண்டும் அதே பழச்சாறு கொண்டு அரைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்.

பித்தளையை தகடாக செய்து அதன் மீது மேலே சொன்ன உருண்டைகளை பூசி நன்கு கவசமிட வேண்டுமாம். பின்னர் அதை புடமிட்டு, புடம் ஆறிய பின்னர் எடுத்துப் பார்த்தால் அந்த பித்தளையானது செம்பாக மாறியிருக்குமாம். பின்னர் அந்த செம்பின் எடைக்கு நான்கில் ஒரு பங்கு வெள்ளி சேர்த்து உருக்கினால் அது தங்கமாக மாறிவிடும் என்கிறார்.

எளிய முறைதானே!, ஆனாலும் இங்கே சில விவரங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. அதாவது மண்ணை முன்னிறுத்தும் மூலகம் எது என்பதையும், எந்த வகையான புடம் போடவேண்டும் என்பதையும் அகத்தியர் இந்த நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த தகவல்கள் அகத்தியர் அருளிய மற்றொரு நூலான "அகத்தியர் 12000" என்னும் நூலின் ஒன்பதாவது காண்டத்தில் வரும் 637வது பாடலில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஒரு உதாரணம் காட்டிடவே இந்த செயல் முறையினையும், அதன் பின்னே மறைக்கப் பட்டிருக்கும் தகவலின் இடத்தினையும் குறிப்பிட நேர்ந்தது. இது போல பல தகவல்கள் நூல்களின் ஊடே புதைந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இத்தகைய தகவல்களைத் தொகுத்து மேலதிக ஆய்வுகளை செய்திடலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பஞ்ச பூதங்களின் நிறமும், அவற்றின் விளைவும்....

Author: தோழி / Labels: , ,


நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற ஐந்து அம்சங்களின் கலவையாகவே இந்த பூமியும், அதில் வசிக்கும் உயிர்களும் இருக்கின்றன என்றும், ஒரு பொருளில் அமைந்திருக்கும் இந்த பஞ்சபூத விகிதங்களை மாற்றுவதன் மூலம் தமக்கு தேவையான பண்புகளை உடைய புதிய பொருளினை உருவாக்கிட முடியும் என்கிற சித்தர் பெருமக்களின் தெளிவினை முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த பஞ்சபூத அம்சங்களை குறிக்கும் மூலகங்களையும் அகத்தியர் எவ்வாறு வரையறுத்துக் கூறியிருக்கிறார் என்ற தகவலையும் கடந்த பதிவில் பார்த்தோம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இன்று பார்ப்போம்.

பஞ்ச பூதங்கள் என்னும் இந்த ஐந்து அம்சங்களுக்கான மூலகங்களை வரையறுத்துக் கூறிய அகத்தியர், அவற்றின் நிறம் குறித்தும் வரையறுத்துக் கூறியிருக்கிறார்.

ஆமென்ற பஞ்சபூதக் குறிப்பைச் சொன்னோம்
     அறையுறோ மதினுடைய நிறந்தான்கேளு
போமென்ற பிரிதிவியின்றன நிறந்தான்கேளு
      பொன்னிறம்போல் தானிருக்கும் தங்கவர்ணம்
பாமென்ற வப்பினிட நிறந்தான்கேளு
      பளிங்குநிறம் போலிருக்கும் பஞ்சவர்ணம்
மானென்ற வக்கினியின் நிறந்தானப்பா
      மகத்தான செம்புநிற வர்ணங்காணே
காணப்பா வாயுவதின் நிறந்தான்கேளு
காளகண்டமாக ரசப்புகை மேகந்தானே.

நிலம் அல்லது மண்ணை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் தங்க வர்ணமாகவும், நீரை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் பளிங்கு போன்ற பஞ்ச வர்ணமாகவும், நெருப்பினை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் செப்பு நிறமாகவும், காற்றை முன்னிலைப் படுத்தும் மூலகங்கள் ரசபுகை போல மேகவர்ணமாகவும் இருக்குமாம்.ஆகாசத்தை முன்னிலைப் படுத்தும் மூலகங்களுக்கு நிறம் குறிக்க முடியாது என்கிறார் அகத்தியர்.

இனி இந்த மூலகங்கள் ஒவ்வொன்றையும் மற்றவற்றோடு இணைப்பதால் என்னவாகும் என்பதைப் பற்றிய அகத்தியரின் தெளிவினை பார்ப்போம்.

பாரப்பா பிருதிவிதா னப்பைக்கொல்லும்
     பாங்கான அப்பதுதான் தேய்வைக்கொல்லும்
நேரப்பா தேய்வுந்தான் வாய்வைக்கொல்லும்
     நிலையான வாய்வதுதா னாகாசத்தில்
வீரப்பா கொண்டதிலே மடிந்துபோச்சு
     வேதாந்த பஞ்சகர்த்தாள் கூத்திதாச்சு
சாரப்பா தன்னறிவாற் சார்ந்துகொண்டு
     சகலகரு வேதைமுகஞ் சார்ந்துபாரே.

மண்ணை முன்னிலைப் படுத்தும் பொருட்களுடன் நீரை முன்னிலைப் படுத்தும் பொருட்களை இணைத்தால் மண் செயலற்றுப் போய்விடுமாம். அதே போல நெருப்பை முன்னிலைப்படுத்தும் பொருட்களுடன் காற்றை முன்னிலைப்படுத்தும் பொருட்களை இணைத்தால் காற்றை செயலாற்ற முடியாது செய்துவிடுமாம்.காற்றை முன்னிலைப்படுத்தும் பொருட்களுடன் ஆகாயத்தை முன்னிலைப்படுத்தும் பொருட்களை இணைத்தால் ஆகாயத்தை செயலாற்ற முடியாது செய்துவிடுமாம் என்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாம் இந்த அறிவியலின் அடிப்படை ஆதாரக் கூறுகளே, இவற்றை நன்கு உணர்ந்து தெளிவதன் மூலமே மருந்து தயாரிப்பு மற்றும் இரச வாதத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்திட முடியும் என்கிறார் அகத்தியர்.நமது முன்னோர்களின் அறிவியல் திறம் எந்த அளவிற்கு விஸ்தாரமாகவும், வினைத் திட்பம் மிக்கதாகவும் இருந்திருக்கிறது என்பதை அறிமுகம் செய்வதே இந்த பதிவுகளின் நோக்கம்.

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள எல்லாத் தகவல்களும் அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் இருந்தே சேகரிக்கப் பட்டவை. ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

அடுத்த பதிவில் இந்த பஞ்சபூத அறிவியலை  அடிப்படையாகக் கொண்டு பித்தளையை தங்கமாக மாற்றிடும் செயல் முறை ஒன்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்..


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...