பஞ்சபூதமும், சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels: , ,


நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற ஐந்து அம்சங்களையே பஞ்ச பூதம் என்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் கலவையே இந்த பூமியும் அதில் வசிக்கும்அனைத்து உயிர்களும். இந்த பஞ்சபூத கலவையானது ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும் தனித்துவமான விகிதத்தில் கலந்திருக்கிறது.  இதனையே சித்தர் பெருமக்கள் “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என கூறியிருக்கின்றனர். 

மனித உடலில் விரவி பரந்திருக்கும் இந்த பஞ்ச பூத அம்சங்களின் சமநிலையில் மாற்றங்கள் அல்லது குறைபாடுகள் உருவாகும் போதுதான் ஒருவருக்கு மூப்பு, பிணி போன்றவை உண்டாகிறது. சித்தர்களின் மருத்துவம் என்பது இந்த பஞ்சபூத அம்சங்களை கையாளுவதில் துவங்கி அவற்றின் சமநிலை பேணுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டிருக்கிறது.

பஞ்சபூத அம்சங்களையும் அதன் கூறுகளையும் அறிந்திருந்த சித்தர் பெருமக்கள் மனித உடல் மட்டுமில்லாது எந்த ஒரு பொருளின் தன்மையையும் தேவைக்கு ஏற்ப மாற்றிவிடும் வல்லமை பெற்றிருந்தனர். இன்றைய நவீன அறிவியல் முன் வைக்கும் மூலக்கூறு அறிவியலின் ஆதி வடிவமே நமது சித்த மருத்துவமும், இரசவாதமும் என்றால் மிகையில்லை.

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற இந்த ஐந்து அம்சங்களை முன்னிலைப் படுத்தும் மூலகங்களை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் பகுத்துக் கூறியிருக்கிறார். அந்த தகவல் பின் வருமாறு...

ஆடவே அட்டசித்துந் தானேயாட
     அடங்கிநின்ற பூதவகைச் சரக்குக்கேளு
போடவே காரவகை பதிமூன்றுந்தான்
     பாங்கான பிருதிவியென றறிந்துகொள்ளு
கூடவே சாரவகை பன்னிரெண்டுந்தான்
     குறியாக அப்புவெனக் கூர்ந்துபாரு
வாடவே வைப்புவகை முப்பத்திரெண்டு
     வரிசையுடன் தேயுவென மகிழ்ந்துகாணே.

காணவே விளைவுவகை முப்பத்திரெண்டுங்
     கருவான வாயுவெனக் கனிந்துபாரு
பூணவே உபரசம்நூத் திரண்டுபத்தும்
     புத்தியுட னாகாச மென்றுபாரு
தோணவே வகையறிந்து பஞ்சபூதம்
     சுத்தமுள்ள சரக்குவகை யறிந்துகொண்டு
பேணவே சத்துருமித் துருவைக்கண்டு
     பிரியமுடன் சரக்குகளைக் கட்டிப்பாரே.

நிலம் அல்லது மண்ணை முன்னிலைப் படுத்தும் காரவகைகள் பதின்மூன்று இருக்கின்றதாம்.

நீரை முன்னிலைப் படுத்தும் சார வகைகள் பன்னிரண்டு இருக்கிறதாம்.

நெருப்பினை முன்னிலைப் படுத்தும் வைப்பு வகைகள் முப்பத்தி இரண்டு இருக்கிறதாம்.

காற்றை முன்னிலைப் படுத்தும் விளைவு வகைகள் முப்பத்தி இரண்டு இருக்கிறதாம்.

ஆகாயத்தை முன்னிலைப் படுத்து உபரச வகைகள் நூறு இருக்கிறதாம்.

இதுதான் அடிப்படை மூலகங்கள், மருந்து தயாரிப்பு அல்லது இரசவாதத்தில் தேர்ச்சி பெற நினைப்பவர்கள் முதலில் இந்த வகைகளைப் பற்றி அறிந்து தெளிவது அவசியம். அதன் அடுத்த கட்டமாய் இவை ஒவ்வொன்றையும் மற்றவைகளுடன் சேர்க்கும் போது உண்டாகும் விளைவுகளை அறிவதாக இருக்கும்.

அது என்ன விளைவுகள்?

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆசிரமங்களின் வகைகள்.... நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels: ,


அகத்தியர் அருளிய ஐந்து வகையான ஆசிரமங்களில், கடைசி இரண்டு வகை ஆசிரமங்களைப் பற்றி இன்று பார்ப்போம். இவை இரண்டும் மிக உயர் நிலை ஆசிரமங்களாக கூறப் படுகிறது. 

வானப்பிரஸ்த ஆசிரமம்.

காணவே சன்யாச ஆச்சிரமஞ் சொன்னேன்
    கருணையுடன் வானப்பிரஸ்த னாச்சிரமங்கேனே
கோணவே சுகதுக்கம் ரெண்டும்விட்டு
    சூழ்காவிற் கிழங்கருத்திச் சுத்தமாக
பூணவே பனிவெயிலிற் பொருந்திமைந்தா
   புகழ்பஞ்சாக் கினிநடுவி லிருந்துகொண்டு
பேணவே குருபதியில் பெலமாய்நின்றால்
   பிலக்குமடா ஆச்சிரமம் பேணிப்பாரே.

பாரப்பா வானப்பிரஸ்த னாச்சிரமந்தானும்
    பதிவாகி நிற்பதற்கு மந்திரங்கேளு
நேரப்பா தானிருந்து குருவைப்போற்றி
    நீமகனே ஓம்அம்சிவ வசியென்றேதான்
காரப்பா புருவமதில் தினம்நூறுமைந்தா
    கருணையுட ணுருவேறக் காச்சிகாணும்
சீர்பெருகும் வானப்பிரஸ்த நாச்சிரமந்தானும்
   சிவசிவா திறமாகுஞ் சிவயோகம்பாரே.

இந்த வகை ஆசிரமவாசிகள் சுக துக்கங்கள் தங்களை பாதிக்காத நிலையில் இருப்பவர்களாம். மழை வெய்யிலைப் பொருட்படுத்தாமல் கனி, கிழங்கு வகைகளை மட்டும் உணவாக உட் கொள்வார்களாம். பஞ்சாக்கினியின் நடுவில் இருந்து யோகம் நிஷ்டையில் இருந்து வருவார்கள் என்கிறார் அகத்தியர்.

இத்தகையவர்கள் குருவானவரை போற்றி வணங்கி பின்னர் "ஓம் அம் சிவ வசி" என்னும் மந்திரத்தை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார்.

அதிவர்ன ஆசிரமம். 

பாராப்பா புலத்தியனே சொன்னவகைநாலும்
    பதிவான அதிலிருந்து மனஞ்செவ்வையானால்
நேரப்பா அதிவர்னாச் சிரமந்தன்னை
     நேர்மையுடன் சொல்லுகிறே னினைவாய்க்கேளு
காரப்பா பிரபஞ்ச மாயைவிட்டு
     கனயோக நிஷ்டைதனைக் கடக்கத்தள்ளி
தேரப்பா செவியுடனே விழியுங்கெட்டு
     சிவசிவா சின்மயமாய்த் தெளிவார்காணே.

தெளிவற்றுச் சுளியற்றுச் செகமுமற்று
     சிவசிவா வென்றதொரு சத்தமற்று
ஒளிவற்று ஆகாச ஓசையற்று
     ஒன்றுமுதல் எட்டுரெண்டு உணர்வுமற்று
நெளிவற்று நினைவற்று நேர்மையற்று
     நேசமுதல் பாசமற்று நிலையுமற்று
அளிவற்று வெளியொளியில் யெங்குந்தானாய்
     அமர்ந்திருந்தா லாதிவர்னாச் சிரமம்பாரே.

முந்தைய நான்கு வகையான ஆசிரமங்களில் வாழ்ந்து கடைத்தேறியவர்கள் மட்டுமே இந்த ஆசிரமத்தில் வசிக்க முடியும் என்கிறார் அகத்தியர். இந்த நிலையானது பிரபஞ்ச மாயைகளையும், நிஷ்டை நிலைகளையும் கடந்து தெளிவற்று, சுழிவற்று, செகமும் அற்று சிவசிவா என்ற ஒலியும் அற்று ஒன்று முதல் எட்டிரெண்டு என்ற உணர்வுகளும் அற்று, நினைவு அற்று, நேசம் முதல் பாசம்வரையான அத்தனை உணர்ச்சிகளும் அற்று எங்கும் நானே என்ற நிலையில் வாழ்ந்திருப்பதே அதிவர்ன ஆசிரம வாழ்கை என்கிறார். 

இப்படியாகவே ஆசிரமங்கள் முற்காலத்தில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவரவர் ஆர்வம், உடல் மற்றும் மன வலிவு, அதைத் தாண்டிய வாழ்வியல் நோக்கம் மற்றும் அதன் தேவைகளைப் பொறுத்து இந்த ஆசிரமஙக்ளின் ஊடே வாழ்ந்திருக்கின்றனர். இத்தகைய வரையறைகள் இன்றைக்கும் பின்பற்றப் படுகிறதா, அல்லது இப்படித்தான் இன்றைய ஆசிரமங்கள் இயங்குகிறதா என்கிற கேள்விக்கான நேர்மையான பதிலை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இந்த தகவல்கள் யாவும் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் இருந்து தொகுக்கப் பட்டவை.

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆசிரமங்களின் வகைகள்....தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,


பிரமச்சாரி ஆசிரமம்,கிரகஸ்த ஆசிரமம்,சன்யாச ஆசிரமம்,வானப்பிரஸ்த ஆசிரமம்,அதிவர்ன ஆசிரமம் என ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக முந்தைய பதிவில் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாக கருதப் பட்டது என்பதையும் பார்த்தோம். இன்றைய பதிவில் முதல் மூன்று வகைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ள வரையறைகளை பார்ப்போம்.

பிரமச்சாரி ஆசிரமம்.

அறிவான புலத்தியனே சொல்லக்கேளு
     அருமையுள்ள பிர்மசாரி ஆச்சிரமந்தன்னை
நெறியாக ஒருபோது பிச்சைகொண்டு
      நேமமுட னனுதினமும் வேதம்பார்த்து
திறிகால மறவாமல் நிஷ்டை நேமம்
      செய்துமன தறிவாலே யோகஞ்செய்து
குறியாகச் சிகைவளர்த்து எண்ணைதள்ளிக்
      கூர்மையுள்ள பிர்மஆச் சிரமந்தானே.


தானாகத் தானவனாய் மனதுகூர்ந்து
     சங்கையுடன் யிம்முறைதான் தவறாமல்தான்
கோனான குருபதியில் மனதுகூர்ந்து
     குறிப்புடனே செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தேனான அமுர்தம்டா அம்கிலிசிம்மென்று
      சிவசிவா தினம்நூறு செபித்தால்மைந்தா
ஊனான தேகமடா பிர்மமாச்சு
      உத்தமனே பிரமசூச் சிரமஞ்சித்தே.

பிரம்மச்சரிய ஆசிரம வாசிகள் தலைக்கு எண்ணை பயன்படுத்தாமல் முடி வளர்த்திருப்பார்களாம். பிச்சை எடுத்து ஒரு வேளை உணவு மட்டும் கொள்வார்களாம். நியம நிஷ்டைகளை தவறாது கடைபிடிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

மேலும் "அம் கிலி சிம்" என்னும் மந்திரத்தை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம் அதனால் அவர்கள் உடல் பிரம்ம சொரூபமாகுமாம் என்கிறார். இப்படி பிரம்ம சொரூபமானால், இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார் அகத்தியர்.

கிரகஸ்த ஆசிரமம்.

சித்தியுடன் பிர்மசூச் சிரமஞ்சொன்னேன்
      சிவசிவா கிரகஸ்த னாச்சிரமங்கேளு
பத்தியுடன் கொலைகளவு காமந்தீமை
       பாராமல் சமுசார மார்க்கமாகி
சுததமுடன் சகலவுயிர் தானாயெண்ணி
       சுகிர்தமுடன் தர்மங்க ளீய்ந்துகொண்டால்
வெத்தியுடன் சகலசவு பாக்கியம்பெற்று
       விளங்குமடா கிரகஸ்த னாச்சிரமங்காணே.


காணவே கிரகமதி லிருந்துகொண்டு
      காசினியில் தர்மவா நாகிமைந்தா
பூணவே சற்குருவின் பாதம்போற்றி
       புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தோணவே தானிருந்து புருவமேவி
       சுத்தமுடன் ஓங்றீங் அஙுங்கென்று
பேணவே தானிருந்து செபித்தாயாகில்
       பிலக்குமடா கிரகஸ்த னாச்சிரமம்பாரே.

மனைவி மக்களுடன் இணைந்த குடும்ப வழ்வாக இருந்தாலும் கொலை, களவு, காமம் நீங்கியதாக சகல சௌபாக்கியங்களுடன் வாழ்பவர்களைக் கொண்டது கிரகஸ்த ஆசிரமம்.இவர்கள் பிற உயிர்களையும் தம்தென எண்ணி எவருக்கும் தீங்கிழைக்காமல் குருவின் பாதம் பணிந்து வாழ்பவராக இருப்பார்களாம். 

"ஓங் றீங் அஙுங்" என்னும் மந்திரத்தினை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். தொடர்ந்து இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார்.

சன்யாச ஆச்சிரமம்.

பாரப்பா கிரகிஷ்த னாச்சிரமஞ்சொன்னேன் 
     பதிவான சன்யாசி ஆச்சிரமங்கேளு
சேரப்பா சிகநூல்கள் அகற்றிமைந்தா
     தேகசுத்தி காயாசம் செய்துகொண்டு
காரப்பா தற்பனஓ மங்கள்செய்து
     காலறிந்து சிவயோகக் கருத்தில்நின்று
நேரப்பா பிச்சைகொண்டு அறிவில்நின்றால்
    நிலைத்துதடா சன்யாச ஆச்சிரமங்காணே.


தானான சன்யாசம் பெற்றோர்தானும்
    தன்மையுட னிம்முறைகள் தவறாமற்றான்
தானான பதிநோக்கித் தானேதானாய்
    தன்மையுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தானான விஞ்சையுட ஓம்அய்யும் கிலியுஞ் சவ்வும்
    தன்மையுடன் தினம்நூறு செபித்தாயாகில்
தானான சன்யாசி யாச்சிரமம்மைந்தா
    தன்மையுடன் தானாகத் திறக்குங்காணே.

இத்தகைய ஆசிரம வாசிகள் தேகசுத்தியுடன், தலையை மழித்து துறவுக் கோலத்தில் இருப்பார்களாம். ஹோமம், தர்பனம் போன்றவைகளை செய்கிறவர்களாகவும், தினமும் பிச்சை எடுத்தே உண்பவர்களாகவும் இருப்பார்களாம்.

"ஓம் ஐயும் கிலியுஞ் சவ்வும்" என்னும் மந்திரத்தினை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். தொடர்ந்து. இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் கடைசி இரு வகைகளைப் பற்றி பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆசிரமங்களும் அதன் வகைகளும்...

Author: தோழி / Labels: ,


சித்த மரபு என்றில்லாமல், இந்திய வேத மரபில் குரு சிஷ்ய பாரம்பர்யம் என்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்த ஒன்று. கடந்த நூற்றாண்டு வரையில் உயிர்ப்புடன் இருந்த இந்த குருகுல கல்வி முறையானது இப்போது முற்றாக வழக்கொழிந்து விட்டதென்றே கூறலாம். இனி வரும் தலை முறையினருக்கு இப்படி ஒரு வழக்கு இருந்ததே கூடத் தெரியாமல் போகலாம்.

ஆசிரமங்கள் என்றால் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில், ஓலையால் வேய்ந்த குடில்களும், அதனைச் சுற்றியொரு நந்தவனமும் என்பதாகவே மனக் காட்சி விரியும். அங்கே ஒரு குருவும், அவரிடம் பயிலும் மாணவர்களும் இருப்பார்கள். ஏறத்தாழ எல்லா ஆசிரமங்களும் இப்படித்தான் நமக்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.

இவை மட்டும்தானா ஆசிரமம்?, அவற்றில் என்ன நடந்தது?, ஆசிரமங்களில் பிரிவுகள், வகைகள் என ஏதும் இருக்கின்றனவா?... இப்படி தொடரும் கேள்விகளுக்கு அகத்தியரின் “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் விளக்கங்கள் கிடைக்கின்றன. அவற்றை தொகுத்துப் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.

அகத்தியர் ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

அவையாவன...


பிரமச்சாரி ஆச்சிரமம்

கிரகஸ்த ஆச்சிரமம்

சன்யாச ஆச்சிரமம்

வானப்பிரஸ்த ஆச்சிரமம்

அதிவர்ன ஆச்சிரமம் 


இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாகக் கருதப் படுகிறது. ஒரு ஆசிரம நிலையில் கடைத்தேறியவர்கள் மட்டுமே அடுத்தடுத்த ஆசிரம நிலைகளுக்கு போக முடியும் என்பதாகத் தெரிகிறது. இது தற்போதைய ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேற்படிப்பு என்பது போல இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த ஆசிரமங்களில் வாழ்ந்திருந்தவர்களை அகத்தியர் பின் வருமாறு உருவகித்துக் கூறுகிறார்.

பார்பிரமச் சாரியடா பிர்மாவாகும்
    பதிவான கிரகஸ்தன் விஷ்ணுவாகும்
நேர்குருவாஞ் சன்யாசம் ருத்திரனாகும்
    நிலைவானப் பிரஷ்தனடா மயேசனாகும்
சீர்பெருகும் ஆதிவர்னாச் சிரமமைந்தா
    சிவசிவா சதாசிவனாய்த் தெளிந்துகொள்ளு
ஆரறிவா ரஞ்சுநிலை விரதம்பெற்று
    அமர்ந்திருப்பான் கோடியிலே ஒருவன்றானே.

பிரமச்சாரி ஆசிரமத்தில் வசிப்பவர்களை பிரம்மனாகவும், கிரகஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்களை விஷ்ணுவாகவும், சன்யாச ஆசிரமத்தில் வசிப்பவர்களை ருத்திரனாகவும், வானப்பிரஸ்த ஆசிரமத்தில் வசிப்பவர்கள் மகேஸ்வரனாகவும், அதிவர்ன ஆசிரமத்தில் வசிப்பவர்களை சதாசிவனாகவும் உருவகித்துக் கூறுகிறார். மேலும் இந்த ஐந்து நிலைகளையும் கடந்தவர்கள் கோடியில் ஒருவராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!, இந்த ஆசிரமங்களில் வாழ்ந்திருந்தவர்கள் எத்தகையவர்களாக இருந்தனர்?, அவர்களின் செயல்பாடு எத்தகையதாக இருந்தது? அவர்களின் நோக்கம் என்ன?

விவரங்கள் அடுத்த பதிவில்.... காத்திருங்கள்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மாயமாய் மறைவதெப்படி?

Author: தோழி / Labels: ,


ஒருவரை நாம் கண்டே பிடிக்க முடியாவிடில், அவன் மாயமாய் மறைந்து விட்டான் என உவமையாகச் சொல்வது வழக்கம். மற்றபடி நமது புராணக் கதைகளின் ஊடே ஒரு இடத்தில் இருந்து சட்டென மறைந்து வேறு இடத்தில் தோன்றுதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.

நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமா?

சாத்தியமே என்கிறார் அகத்தியர். "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. ஆமாம்.. நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் அஞ்சன மை ஒன்றைப் பற்றி கூறியிருக்கிறார்.

அதை எப்படி தயார் செய்வது?

சித்தியுள்ள அஞ்சனந்தா னொன்றுகேளு
    திறமான தேவாங்கு காமரூபி
பத்தியுள்ள கருக்குருவி மூன்றின்பிச்சும்
    பாலகனே ஒன்றாக கருக்கிக் கொள்ளு
சுத்தமுள்ள முட்டோட்டி லிட்டுக்கொண்டு
   சூதுகப டில்லாமல் வருக்கும்போது
பத்தியுடன் தானுருகி மையாய்நிற்கும்
   மார்க்கமுடன் கல்வமதில் வைத்துக்காணே


காணவே பேரண்டத் தயிலம்விட்டு
   கடைந்தெடுக்கும் போதிலிருக் கண்ணிற்காணும்
ஊணவே ஓம்கிலிரங்ரங் கென்றேதான்
   உத்தமனே தான்செபித்து வழித்துக்கொண்டு
பேணவே மதகரியின் கொம்பில்வைத்து
   பிலமான சிமிழதனைப் பதனம்பண்ணி
பண்ணியந்த மையெடுத்துத் திலதம்போட்டு
   கண்ணிறைந்த காட்சியிலே நின்றால்மைந்தா


காசினியி லுனதுருவைக் காணமாட்டார்
   புண்ணியனே மனதுகந்த யிடத்தில்நின்று
போதமுடன் ஞானநெறி தன்னைப் பாரு
   தன்னருளைத் தனதாகப் பார்த்துப்பின்பு
சங்கையுடன் திலதமதை யெடுத்துப்பாரே
   என்னசொல்வேன் உனதுரு கண்ணிற்காணும்

தேவாங்கு, காமரூபி, கருக்குருவி ஆகியவற்றின் பிச்சுக்களை ஒன்றாக எடுத்து கருக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சுத்தமான முட்டை ஓட்டில் சேகரித்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அப்போது அவை உருகி மை போலாகி இருக்கும் என்கிறார் அகத்தியர். இந்த மையை கல்வத்தில் இட்டு பேரண்டத் தயிலம் சேர்த்து கடைய வேண்டுமாம். 

கடைந்த பின் அதனை வழித்து எடுத்து, யானைத் தந்ததால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படி சேகரம் செய்யும் போது "ஓம் கிலி ரங் ரங்" என்ற மந்திரத்தினை செபித்துக் கொண்டே செய்திட வேண்டுமாம்.

உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உலகில் உள்ள யாரும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார். பின்னர் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று யோகம் தவம் போன்றன செய்து தன்னை அறிந்து கொள்ள கூறுகிறார். இந்த திலகத்தை அழித்து விட்டால் உருவம் பிறர் கண்களுக்குத் தென்படத் தொடங்கிவிடும் என்கிறார். 

இது ஒரு தகவல் பகிர்வே, இதன் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும் மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய திருநீற்றுப் பலன்!

Author: தோழி / Labels:


சிவனை தங்களின் இறைவனாக கொண்ட சைவ மதத்தினரின் முதன்மையான அடையாளம் திருநீறு. இதனை இரட்சை, சாரம், விபூதி, பசுமம், பசிதம் என்றும் அழைப்பர். அருகம்புல்லை அதிக அளவில் உட்கொள்ளும் பசு மாட்டின் சாணத்தை சிறு உருண்டைகளாக்கி, வெயிலில் காய வைத்து, அதனை உமியினால் மூடி புடமிட்டு எடுத்தால் உருண்டைகளானது வெந்து நீறாகி இருக்கும். இதுவே தூய திருநீறு தயாரிக்கும் முறை என்கிறார் அகத்தியர்.

இதனை இரண்டு வகையாக அணிந்து கொள்ளலாமாம். இடைவெளி இல்லாது பூசிக் கொள்ளும் முறையை "உள்தூளனம்" என்கின்றனர். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் திருநீற்றினை ஓன்றிற்கு ஒன்று இணையாக மூன்று கோடுகளாய் இட்டுக் கொள்ளும் முறைக்கு “திரிபுண்டரிகம்” என்பர். இப்படி அணிந்து கொள்வதன் பின்னனியில் இருக்கும் தத்துவார்த்தமான விளக்கங்கள் மிக விரிவானவை. 

முற்காலத்தில் அவரவர் தேவையைப் பொறுத்து தாங்களே திருநீறீனை தயாரித்துக் கொண்டனர். இப்படி தயாரிப்பதற்கு என சில நியமங்களை நமது முன்னோர் வகுத்திருக்கின்றனர். வெண்மையான நிறமுடைய திருநீறே சிறப்பானதாக கருதப் படுகிறது. தற்காலத்தில் வர்த்கரீதியாக உற்பத்தி செய்வோர் இத்தகைய நியமங்களின் படி தயாரிக்கும் வாய்ப்புகள் குறைவே.

சித்தரியலில் செபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம் என பல்வேறு செயல்களில் திருநீறானது பயன்படுத்தப் பட்டமைக்கான குறிப்புகள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. திருநீறினை யாரிடம் இருந்து எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார். 

ஆமப்பா சூட்சம்வெகு சூட்சமான
     அருமையுள்ள மந்திரத்தைத் தியானம்பண்ணி
ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா
     உத்தமனே விபூதியுட நெதுவானாலும்
தாமப்பா தனதாக வாங்கும்போது
     சங்கையுட நவர்கள்செய்யுந் தவமெல்லாந்தான்
வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே
     வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே.


மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த 
     மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்
மனதாக அவர்கள்செய்யுந் தவப்பலந்தான்
     மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்
மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட
     மணிமந்திர பூதியுட நெதுவானாலும்
மனதாக அவர்களிடம் வாங்கும்போது
     மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே.

திருநீறினை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குணநலன்கள் வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடுமாம். எனவே இதை உணர்ந்து தியானத்தில் சிறந்து நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே திருநீற்றினை பெற வேண்டும் என்கிறார்.  மாறாக வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால் அது தீய பலன்களையே கொண்டு தருமாம்.

இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அது என்ன சூட்சும மந்திரம்?

சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம்றீம் சிம்ராவென்று 
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும்போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்துவாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.

சித்தர்கள், சிவ யோகிகள், ஞானிகள் போன்றவர்களிடம் திருநீற்றை வாங்கும் போது "ரூம் றீம் சிம்ரா" என்கிற மந்திரத்தை மனதில் நினைத்து செபித்து வாங்கிட, அவர்கள் பெற்றிருக்கும் உயர் தவப் பயனும், குணநலன்களும் நம்மை வந்து சேரும் என்கிறார். 

மற்றொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குழந்தைப் பேறு!.... தன்வந்திரியின் தீர்வு!!

Author: தோழி / Labels: ,


திருமணமான தம்பதியரிடம் இருந்து நமது சமூகம் எதிர்பார்க்கும் முதல் தகவல் குழந்தைப் பேறு பற்றியதாகவே இருக்கிறது. இது கொஞ்சம் தள்ளிப் போனாலும் கூட அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது.

சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று தன்வந்திரி அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். தன்வந்திரி வைத்திய காவியம் என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது. 

வாறான மங்கையர்கள் கெற்பமாக
      வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான விழுதியிலை மூலிதானும்
       நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான பால்தனிலே குழப்பியேதான்
       கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான கிருமியது அற்றுப்போகும்
       செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.


செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
       தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
       காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
       மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே யிக்காவிய மதீதவித்தைப்
       பாடினேன் தன்வந்திரி பாடினேனே.

பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையை பசுப்பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை உட்கொண்டு வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும் என்கிறார். 

இப்படி பிறக்கும் குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்குமாம். மிகவும் அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள் என்றும், தான் இதை பொதுவில் வைப்பதாகவும் கூறுகிறார்.

தேவையுள்ளோர் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கீழ்க்காய் நெல்லி கற்பம்!

Author: தோழி / Labels: , , ,


நமது உடலை மூப்பு, பசி, பிணி போன்றவைகள் அண்டாது நீடித்த ஆயுளோடும், இளமையோடும் வைத்திருக்க வேண்டி சித்தர் பெருமக்கள் பல்வேறு கற்ப வகைகளை அருளியிருக்கின்றனர்.பொதுவில் இவை மருத்துவ காயகற்பம், யோக காயகற்பம் என இரு பிரிவாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. இது தொடர்பில் முன்னரே பல மருத்துவ காயகற்ப வகைகளைப் பற்றி இந்த பதிவின் ஊடாக பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று மற்றொரு எளிய கற்பவகை பற்றிய தகவலைப் பார்ப்போம்.

கருவூரார் தனது வாதகாவியம் என்னும் நூலில் கீழ்க்காய் நெல்லி கற்பம் பற்றி பின் வருமாறு விளக்குகிறார்.

பூசமுடன் குருவாரங் கூடும் நாளில்
  புகழ் பெறவே கற்பமது கொள்வாயப்பா
வாசங்கீழ் காய் நெல்லி மூலந்தன்னை
   வளம்பெறவே நிழல்தனிலே வுலர்த்திக் கொண்டு
நேசமுடன் சூரணமே செய்து பின்பு
    நெய்தேனுஞ் சீனியுமொன் றாகக்கூட்டி
ஆசையுடன் தானருந்தக் காயசித்தி
    யாகுமிது கற்பமுறை யிதுதான் சொன்னேன்.

சொன்னேன்நான் பத்தியங்கள் நெய்யும் பாலும்
     சோறுமல்லல் மற்றொன்று மாகா தப்பா
மன்னனே அரைவருடங் கொண்டாயாகில்
     மகாகுட்டம் பதினெட்டுந் தீர்த்தே போகும்
நன்னயமா யொருவருடங் கொண்டா யானால்
      நல்லமதி புத்தியது மயங்கா தப்பா
என்றுபதி னாறான வயதுபோல
      இருநூறு வயதுவரை வலுமை தானே.


கீழ்க்காய் நெல்லியின் மூலத்தை எடுத்து நிழலில் காயவைத்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். (மூலம் என்பது பச்சையாக பிடுங்கப் பட்ட வேர் ஆகும்.) பின்னர் அத்துடன் சர்க்கரையும், நெய்யும், தேனும் சம அளவில் சேர்த்து சுண்டைக்காய் அளவில் உருண்டகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்

பூச நட்சதிரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் இந்த உருண்டையை உண்ணத் தொடங்க வேண்டுமாம். இப்படி இந்த உருண்டையை தொடர்ச்சியாக ஆறுமாதம் உண்டால் மகா குட்டங்கள் எனப்படும் பதினெட்டு வகை நோய்களும் தீரும் என்கிறார்.. இதையே தொடர்ந்து ஒரு வருட காலம் உண்டுவந்தால் பதினாறு வயது போல் இளமையுடனும், மதி நுட்பத்துடனும் இருநூறு வருடங்கள் வலிமையுடன் வாழலாம் என்கிறார் கருவூரார்.

இந்த காய கற்பம் உண்ணும் நாட்களில் பத்தியமாக நெய்யும், பாலும், சோறும் தவிர வேறு எதனையும் உட்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

எளிய கற்ப வகைதானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...சித்தர் குகை!, செயற்கை குகை!!

Author: தோழி / Labels: , ,


சித்தர் பெருமக்களின் உறைவிடங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கப் புகுந்தால், மூன்று வகையான தகவல்களே நமக்கு கிடைக்கின்றன. ஒன்று அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள், மற்றது அவர்கள் தங்கியிருந்த குகைகள், மூன்றாவது அவர்களது ஆசிரமங்கள் பற்றிய விவரணைகள்.

முந்தைய சதுரகிரி மலை பற்றிய தொடருக்காக, சதுரகிரியில் அமைந்துள்ள பல்வேறு சித்தர் பெருமக்களின் இருப்பிடத் தக்வல்களை தேடி தொகுத்திடும் போது அவர்கள் வாழ்ந்திருந்த குகைகள் பற்றிய தகவல்கள் மட்டும் விரிவாக குறிக்கப் பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் இந்தக் குகைகளின் அமைவிடங்கள் யாவும் சீரான ஒரு தொடராக ஒன்றிற்கொன்று அணுக்கமாய் இருந்ததும் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது..

அந்த மலையில் இயற்கையாகவே இப்படி குகைகள் அடுத்தடுத்து இருந்திருக்குமா, அல்லது செயற்கையாக தங்களுக்கான குகைகளை அமைத்துக் கொண்டிருந்தனரா என்ற கேள்வியும் எழுந்தது. சமீபத்தில் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” நூலில் வேறொரு விவரம் தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த இந்தத் தகவல் மிக ஆச்சர்யமானதாக இருந்தது. அதாவது சித்தர் பெருமக்கள் செயற்கையாகவே குகையினை உருவாக்கும் கலையினை அறிந்திருந்தனர் என்பதே அந்த தகவல். 

அகத்தியரின் அந்த பாடல்கள் பின்வருமாறு..

வாசிநிலை கண்டுசிவ யோகஞ்செய்ய
மகத்தான புலத்தியமா ரிஷியேகேளு
பேசவொண்ணா அந்தரங்க உண்மைதன்னை
பெரிதான எக்கியமா முனிதான்சொன்னார்
நேசமுடன் மலைகளிலே குகையுண்டாக்க
நீமகனே மனதுகந்த மலையிற்சென்று
பாசமுடன னால்புறமுஞ் சுத்திப்பார்த்து
பதிவான யிடமதிலே குகைதான்செய்யே


குகையறிந்து செய்வதற்கு வகையைக்கேளு
குருவான பூனீரு கல்லுப்போடு
தகையாத கரியுப்பு வெடியுப்யுத்தான்
சார்வான நவாச்சார மன்னபேதி
பகையான மலைபேதி மாங்கிசபேதி
பத்தியுள்ள கல்நாதம் கல்மதந்தான்
புகையாத அரபொடியுங் கல்காந்தம்சிங்கிட்டம்
புண்ணியனே சரக்குவகை பதிமூன்றாச்சே


ஆச்சப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்
அப்பனே சமபாகம் நிறுத்துக்கொண்டு
பாச்சப்பா கல்வமதில் பொடித்துநன்றாய்
பருசான யிரும்பினுட தாளிசேர்த்து
நீச்சப்பா யானைபரி கத்தம்விட்டு
நிசமான புலிகரடி ரெத்தம்வார்த்து
வாச்சப்பா கொள்ளவித்த தண்ணீர்விட்டு
மார்க்கமுடன் நவ்வலுட கம்பால்கிண்டே


கிண்டிநன்றாய் ரவியில்வைத்து தெளிவைநன்றாய்
கிருபையுட னத்தெளிவை மலைமேலூத்த
சுண்டுநன்றாய்ச் சுவடியது உவடுபோலே
சுத்தமுடன் பொங்கியது உப்பாம்பாரு
கண்டிதமாய் நீருண்டு கல்லுப்புப்போல்
கசிந்துமிக உருகுமடா அந்தவேளை
தொண்டதுபோல் கூந்தாளஞ் செய்துகொண்டு
திரமாக வெட்டியெடு குகைபோல்தானே


தானான உவர்நீரைப் பின்னும்விட்டு
தன்மனதுக் கேற்கவே குகைதான்செய்து
மானாகேள் குகையதுவும் நன்றாய்ச்செய்து
மகத்தான உவர்நீங்க வகையைக்கேளு
தேனான மதுஉடனே தண்ணீர்பாலும்
சிறுகரந்தைச் சாத்துடனே சேர்ந்துகொண்டு
கோனான குகையைநன்றாய்க் கழுவிப்போட்டால்
கொடுமையுள்ள உவர்நீங்கித் திறக்கும்பாரே


பாரப்பா யிவ்விதமாய்க் குகைதான்செய்து
பத்தியுட னதிலிருந்து தவமேசெய்வாய்
நேரப்பா தனித்திருந்து தவமேசெய்தால்
நினைவதிலே பாய்ந்துரவி யொளிதான்காணும்
சாரப்பா தனித்திருந்து ஒளிதான்பார்க்க
தலைமலைகள் கெவிகள்வனம் தனில்சென்றார்கள்
காரப்பா கண்ணொளியைக் கண்ணால்பார்க்க
கருத்துறவே தனித்திருந்து கண்ணைப்பாரே. 

வாசி நிலை அறிந்து சிவ யோகம் செய்வதற்கான அந்தரங்க உண்மை ஒன்றினை எக்கியமகா முனிவர் தனக்குச் சொன்னதாகவும், அதனை அகத்தியர் தன் மாணவரான புலத்தியருக்கு சொல்வதாக இந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. மனதிற்குப் பிடித்த மலைக்கு சென்று, நான்கு பக்கங்களும் நன்றாக சுற்றியலைந்து தகுதியான இடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டுமாம். அப்படி தெரிவு செய்த இடத்தில் குகையை நாமே அமைத்துக் கொள்ளலாம் என்கிறார்.

பூநீர், கல்லுப்பு, கரியுப்பு, வெடியுப்பு, நவச்சாரம்,  அன்னபேதி, மலைபேதி, மாங்கிசபேதி, கல்நாதம், கல்மத்தம், அரப்பொடி, கற்காந்தம், சிங்கிட்டம் ஆகிய சரக்கு வகைகள் பதின்மூன்றையும் சம அளவாக நிறுத்து எடுத்து, அவற்றை கல்வத்தில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை பெரிய இரும்புத் தாளி ஒன்றில் போட்டுக் அத்துடன் யானைபரிகந்தம் விட்டு, புலிகரடி ரத்தம் விட்டு, அத்துடன் கொள்ளு அவித்த நீரையும் விட்டு நாவற் கம்பால் நன்றாகக் கிண்டி, இந்தக் கலவையை வெய்யிலில் வைக்க நன்கு தெளிந்து விடுமாம்.

பின்னர் தெளிந்த இந்த திரவத்தை எடுத்து பாறையில் குகை செய்ய வேண்டிய பாகத்தில் ஊற்ற வேண்டுமாம். அப்படி ஊற்றியதும் ஊற்றப்பட்ட பகுதியானது சுவடு போல பொங்கி உப்பாகுமாம். அந்த உப்பானது நீரில் கரைந்து கொண்டிருக்கும் கல்லுப்பைப் போல கசிந்து உருக்குமாம். அந்த நேரத்தில் தேவையான இடத்தை குறித்துக் கொண்டு. குறித்த பகுதியை குகை போல வெட்டியெடுக்க வேண்டும் என்கிறார். 

வெட்டியெடுக்க முடிந்த அளவு வெட்டியெடுத்த பின்னர் மேலும் தேவைப்பட்டால் இன்னும் அந்த திரவத்தை ஊற்றி, மேலும் ஆழமாக குகையை வெட்டிக் கொள்ளலாம் என்கிறார். பின் மனதிற்கு குகையின் அளவு சரியானது என்று தோன்றியதும். அந்த நிலத்தில் கல்லுப்புபோல ஏற்பட்ட கசிவு தன்மையை நிறுத்திடவும் வழி சொல்கிறார் அகத்தியர்.

தேனுடன் தண்ணீரும் பாலும், சிறுகரந்தை சாறும் சம அளவில் சேர்த்து குகையை நன்றாக கழுவி விட்டால் கொடுமையான அந்த உவர் கசிவு தன்மை நீங்கிவிடுமாம்.இப்படி குகையை செய்தபின் மன உறுதியுடன் அந்த குகையில் தனியாக இருந்து தவம் செய்தால் மனது ஒருமைப்பட்டு, சூரிய ஒளி போல் ஒரு ஒளியை புருவ மையத்தில் காணலாமாம். அப்படியான ஒளியை தரிசிக்கவே சித்தர்கள் வனங்களை நாடிச் சென்றார்கள் என்றும் சொல்கிறார். அத்துடன் அந்த ஒளியைப் பார்க்க தனிமையில் இருந்தே தவம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!, பாறைகளை உடைக்காமல் அவற்றை இளகச் செய்து தோண்டி எடுக்கும் தொழில் நுட்பத்தினை நமது முன்னோர்கள் பயன் படுத்தியிருக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து மேம்படுத்தியிருந்தால் அதன் பயன் எத்தகையதாக இருந்திருக்கும். இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத இத்தகைய தொழில் நுட்பங்களை ஆய்வு செய்து மேம்படுத்தாதது நம்முடைய தவறுதானே!

ஆர்வமுள்ளோர் இந்த திசையில் பயணிக்கலாமே!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு!

Author: தோழி / Labels: , ,


முடி உதிர்வது பற்றிய கவலை அநேகமாய் எல்லாப் பெண்களுக்குமே உண்டு. இது தவிர்க்க முடியாதது. இதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உண்டு. பெரும்பாலும் பொட்டு, பொடுகு ஏற்படுவதன் மூலமே அதிகமாய் முடி உதிர்கிறது.

டைபாயிடு சுரம் எனப்படும் பித்த கபவாத சுரம் வந்து குணமான பின்னரும் பெரிய அளவில் முடி உதிரும். இதனால் அக்காலத்தில் பித்தகபவாத சுரம் வந்து குணமான உடன் மொட்டை அடிக்கும் பழக்கமும் இருந்தது. மொட்டை அடித்தால் மட்டுமே கருகருவென புது முடி வளருமாம். இல்லையேல் ஆங்காங்கே முடிஉதிர்ந்து திட்டுத்திட்டாய் வழுக்கையாகி விடுமாம்.

இப்படி முடி கொட்டி வழுக்கைத் தோற்றமுள்ள பெண்களுக்கான தீர்வு ஒன்றினை தேரையர் தனது “தேரையர் வைத்திய காவியம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.

காரு நாய் கரிச்சான்பட்டை யார்பலம்
பாரு பேருறை யார்பலம் வெள்ளுள்ளிச்
சேரு வாய்பலஞ் சேர்த்து நறுக்கியே
ஏரு வாய் நாழி யெள்ளெண்ணே யூற்றிடே.


ஊர்த்திடுங் கதிரோன் புட மேனிதம்
போர்த்திடு மிரு போதுமோ ரேழுநாள்
சேர்த்திடு மயிர் சேர முளைத்திடு
மேர்த்திடும் பத்திய மில்லைக் கார்த்திடே.

நாய் கரிச்சான் பட்டை ஆறுபலம், பேருறை ஆறுபலம், வெள்ளுள்ளி ஒருபலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நறுக்கி ஒருபாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு நாழி அளவு எள்ளெண்ணெய் அதில் சேர்க்கவேண்டுமாம் (ஒரு பலம் என்பது முப்பத்தி ஐந்து கிராம் ஆகும்). 

பின்னர் எள்ளெண்ணையுடன் மருந்துகளை வெயிலில் வைத்து சூரியப் புடமிட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படி சேகரித்த இந்த தைலத்தை வழுக்கையான இடத்தில் காலை, மாலை என இரு வேளையாக, ஏழு நாள் வரை தேய்த்து வர அந்த இடத்தில் புதிய முடி முளைக்கும் என்கிறார்.

இதற்கு பத்தியம் எதுவும் சொல்லப் படவில்லை. இந்த சரக்குகள் எல்லாம் தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் குறைவுதான். வீட்டிலேயே நாம் தயாரித்துக் கொள்ள முடியும். தேவையுள்ளோர் தகுதியுள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்திடலாம்.

இந்த முறையில் ஆண்களின் வழுக்கைத் தலையில் முடி வளரவைக்க முடியுமா என்பது தெரியவில்லை ஆர்வமுள்ளோர் இந்த திசையில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளலாமே!.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருவத்தை மாற்றிக் காட்டுதல்....

Author: தோழி / Labels: ,


சித்தர் பெருமக்கள் நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவம் எடுத்திடக் கூடியவர்கள் என்பது காலம் காலமாய் இருந்து வரும் ஒரு கருத்தாக்கம். இந்தக் கூற்றினை ஏற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ நம்மிடம் வலுவான ஆதாரங்கள் இல்லை. அடிப்படையில் சித்தர் பெருமக்கள் தனிமை விரும்பிகளாய் இருந்திருக்கின்றனர். இதனை அவர்களின் பல பாடல்களின் ஊடாக நாம் அறிய முடிகிறது. தங்களின் தேடலுக்கு இடைஞ்சல் வருவதை விரும்பாததன் பொருட்டே அவர்கள் வெகுசன வாழ்விடங்களை விட்டு விலகி காடுகளிலும், மலைகளிலும் தனித்திருந்தனர். தங்களைச் சாராத பிறரின் கவனத்தில் இருந்து விலகி இருப்பதையே விரும்பியிருக்கின்றனர்.. 

காடுகள், மலைகள் என்று தனித்திருந்தாலும் கூட அந்த இடங்களுக்கே உரித்தான இடையூறுகளும், ஆபத்துக்களும் தவிர்க்க முடியாதது. இவற்றை எதிர் கொள்ளவும் சித்தர் பெருமக்கள் சில உத்திகளை கைக் கொண்டிருந்தனர். காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்திருக்கும் பழங்குடியின மக்கள், வேடர்கள், விலங்குகள், ஊர்வனைகள், பறவைகள் போன்றவைகளினால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இப்போதும் கூட இது மாதிரியான சில உத்திகளைப் பயன் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

அந்த வகையில் சித்தர் பெருமக்கள் கைக் கொண்ட ஒரு உத்தியினைத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அது என்ன உத்தி?

பிறரின் கவனத்தை கவராமல் இருக்கும் படி தன்னுடைய உருவத்தை மாற்றிக் காட்டுவதுதான் அந்த உத்தி.

அதெப்படி உருவத்தை மாற்றிக் காட்டுவது?

அகத்தியர் தனது “அகத்தியர் 12000” என்ற நூலில் அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

வந்தவகை சொல்லுமுன்னே அறிந்துகொண்டு
      மனமகிழ்ந்து சொல்லுகிறேன் வகையாய்க்கேளு
சொந்தமுடன் சகலசித்துந் தானேதானாய்
      துலங்குதற்கு அந்தமடா மந்திரமூலம்
அந்தமுள்ள மூலமடா சிறீங்அம்மென்று
     அசைவற்று மவுனமதா யருட்கண்மேவி
பந்தமுடன் கம்பமதாய் நின்றாயானால்
     பலனான தவப்பலத்தைப் பகுந்துகேளே.


கேளப்பா தவபலத்தைச் சொல்லக்கேளு
     கிருபையுடன் சிவயோகத் திருக்கும்போது
சூளப்பா மனிதர்கண்டால் மனிதர்போலாம்
     சுகமான பெண்கள்கண்டால் பெண்கள்போலாம்
மேலப்பா யோகிகண்டால் யோகிபோலாம்
     விசையான மிருகங்கள் கண்டுதானால்
காலப்பா அந்தந்த வகைபோற்தோணும்
     கருணையுடன் தவசிருந்த கருத்தைப்பாரே.

தவம் அல்லது சிவயோகம் செய்யத் துவங்கும் போது, ஒரிடத்தில் அமர்ந்து உடலையும் மனதினையும் தளர்வாக்கி, மனதை ஒரு நிலைப் படுத்தி "சிறீங் அம்" என்று மௌனமாக புருவ மத்தியை நோக்கியபடி நூற்றியெட்டுத் தடவைகள் செபிக்க வேண்டுமாம். இப்படி செய்த பின்னரே தவத்தினையோ அல்லது சிவயோகத்தினையோ ஆரம்பிக்க வேண்டுமாம்.

இப்படி செய்தவர்கள், சாதாரண மனிதர்கள் பார்த்தால் அவர்கள் கண்களுக்கு சாதாரண ஒரு மனிதரைப் போலவும், பெண்கள் யாரேனும் பார்த்தால் அவர்களுக்கு பெண்ணைப் போலவும், யோகிகள் யாரேனும் பார்த்தால் அவர்களுக்கு யோகியைப் போலவும் மிருகங்கள் மற்றும் பறவை பட்சிகள் பார்த்தால் அவற்றிற்கு அவை போலவே தோன்றுவார்களாம். இதனால் எந்தவித புற சஞ்சலங்களும் ஏற்படாமல் தவமிருந்து குறிக்கோளை அடையலாம் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே!

ஏட்டளவில் உறைந்து கிடக்கும் எண்ணற்ற தகவல்களில் இதுவும் ஒன்று. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து மேம்படுத்திட முயறசிக்கலாமே....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வேம்பு கற்பம்!

Author: தோழி / Labels: ,


நமது உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இந்த உடலானது நிலைத்திருக்கவும், தொடர்ந்து இயங்கிட காற்றும், உணவும் தேவை படுகிறது. நாம் உட் கொள்ளும் உணவில் இருக்கும் ஊட்டப்பொருள்களையும், தாதுக்களையும் நமது உடலின் உறுப்புகள் மற்றும் சுரப்பிகள் தனித்தனியே பிரித்து உடலுக்கு அளிக்கின்றன. கழிவுகளையும் வெளியேற்றுகின்றன. இந்த உறுப்புகளையும், சுரப்பிகளையும் தூண்டும் வேலையைத்தான் நாம் உட் கொள்ளும் உணவின் சுவை செய்கிறது. ஒவ்வொரு சுவையும் நமது உடலில் உள்ள குறிப்பிட்ட சில உறுப்புகள் அல்லது சுரப்பிகளைத் தூண்டி செயலூக்கம் அடைய வைக்கின்றது.

இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் தினமும் உணவில் அறுசுவையினையும் சேர்த்துக் கொண்டனர். நாகரீக வளர்ச்சியில் நாம்தான் இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டோம். இனிப்புடன் துவங்கி தாம்பூலம் தரிக்கும் போது துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்ட நம் முன்னோரின் அறிவின் திறத்தை நாம் மதிக்கத் தவறியது வேதனையான ஒன்று.

அந்த வகையில் கசப்பு என நாம் ஒதுக்கி வைத்த ஒரு சுவையின் கற்பம்தான் வேம்பு கற்பம். வேம்பு என்கிற் வேப்ப மரத்தின் சிறப்பினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

வரிசையாய் சமாதிசெய்தா ரெந்தை யய்யா
       வாராது விஷங்களெல்லாஞ் செப்பி னாரே.
செப்பினார் வேம்பினுட பெருமை யெல்லாம்
       தேவிசொ ல்லக்கேட்டே னென்றார்  
ஒப்பிலே வேம்புக்கு மேலே கற்பம்
      உலகத்தி லில்லையென்று உரைத்தார் பாரு
தப்பில்லா வேம்புண்ணக் கசக்கும் பாரு    
      சர்க்கரைபோ லினிக்கமட்டுஞ் சாதிக்கலாம் பார்
அப்பிரேன் தேகமெல்லா மமுர்த மாகும்
      அழகான மன்மதன்போ லாகும் பாரே

- அகத்தியர்.

இத்தனை சிறப்பான இந்த வேம்பினைக் கொண்டு காயகற்பம் தயாரிக்கும் முறைகளை சித்தர் பெருமக்கள் பலரும் அருளியிருக்கின்றனர். எனினும் கருவூரார் தனது “கருவூரார் வாதகாவியம்” என்னும் நூலில் அருளியிருக்கும் எளிய வேம்பு கற்பம் பற்றி இன்று பார்ப்போம்.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.

கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
   குஷ்டமென்ற பதினெட்டு வகையுந்தீரும்
துள்ளுகின்ற பூதமொடு பசாசுதானும்
   துடிதுடித்துக் கண்டவுட னோடிப்போகும்
விள்ளுகிறேன் பொடிசெய்து கொழுந்து தன்னை
    வெருகடியாய்த் தேனிலரை வருடங்கொண்டால்
வள்ளலே நரையோடு திரையு மாறும்
   வாலிபமுந் நூறுவய திருப்பான்றானே

- கருவூரார்.

கார்த்திகை மாதத்தில் வரும் மிருக சீரிடம் அல்லது பூச நட்சத்திர நாளில், காலை வேளையில் வேப்பமரத்தின் அதிக நீர்த்தன்மை உள்ள கொழுந்தைப் பறித்து உண்ண வேண்டுமாம் இப்படி தொடர்ந்து இருபத்தி ஏழு நாட்கள்  தினமும் காலை வேளையில் உண்டு வந்தால் பாம்பு கடித்தாலும் கூட தீங்கு வராதாம். மாறாக, கடித்த பாம்பு இறந்துவிடும் என்கிறார். இதே முறையில் ஒருமாதம் தொடர்ச்சியாக உண்டுவந்தால் குஷ்டம் என்று சொல்லப்படும் பதினெட்டு வகையான நோய்களும் தீருமாம் அத்துடன் பூதம், பிசாசு போன்றவை அணுகாது விலகிவிடுமாம்.

இந்த கொழுந்தை பொடியாக செய்து, வெருகடி அளவு எடுத்துத் தேனில் குழைத்து ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக உண்டு வந்தால் நரை திரை மாறுமாம். அதோடு வாலிபதோற்றத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம் என்கிறார் கருவூரார். இந்த கற்ப முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புத்தாண்டு வாழ்த்தும், 600வது பதிவும், வயிரவ மந்திரமும்!

Author: தோழி / Labels: ,


நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் துவங்கி இனிவரும் நாட்களில் உங்களின் எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் யாவும் மேம்பட்டு சிறந்திட எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். மேலும் இன்றைய பதிவு நமது “சித்தர்கள் இராச்சியம்” வலைப் பதிவின் அறுநூறாவது பதிவாக அமைகிறது. இது நாள் வரை நீங்கள் அளித்த அன்பும், ஆதரவும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்திட பணிவுடன் வேண்டுகிறேன்.

இந்த புத்தாண்டு நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் முன்னெடுக்கும் ஆக்கப் பூர்வமான முன்னெடுப்புகள் யாவும் சித்திக்க உதவிடும் சொர்ண வைரவரின் மந்திரம் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். இந்த மந்திரம் அகத்தியரால் தனது "அகத்தியர் பரிபாஷை" என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.

இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
         தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
          மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
         குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
          மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.

செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்க்கும் சொர்ணபைரவர் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார் அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?, அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.

பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை 
        பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
        என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
        கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
        தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.

"ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா" என்பதுதான் சொர்ண வயிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.

மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம் 
        பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
        நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
        கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
         அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.

சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார். 

எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.

மீண்டுமொரு முறை எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...