பாஷாணங்களை சுத்தி செய்ததைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். மிகவும் சிரமமான இந்த கட்டத்தில் தேறிவிட்டால் பாஷாணம் கட்டுவது அத்தனை சிரமமான காரியமில்லை. சுத்தி செய்யும் போது பாஷாணங்களின் எடையில் பெருமளவில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பரிசோதனையின் ஆரம்பத்தில் தலா நூறு கிராம் வீதம் ஐந்து பாஷாணங்களின் நிகர எடை ஐநூறு கிராம் இருந்தது. பரிசோதனையின் இறுதியில் முன்னூறு கிராம் அளவிலான பாஷாண லிங்கத்தினையே கட்ட முடிந்தது.
பாஷாணங்களின் விஷம் நீக்கி சுத்தி செய்து சேகரித்தாயிற்று.இனி அடுத்த கட்டமாய் சுத்தி செய்த இந்த பாஷாணங்களை குழம்பாக்குவதுதான். நவீன வேதி இயல் திடப் பொருள் ஒன்றை திரவமாக்க இரண்டு வழிகளை கூறுகிறது. ஒன்று திடப் பொருளை உருக்குவதன் மூலம் குழம்பாக்குவது, மற்றது ஏதேனும் ஒரு நீர்மத்தில் கரைப்பதன் மூலம் குழம்பாக்குவது.
போகரோ பாஷாணங்களை குழம்பாக்க பின்வரும் வழியைச் சொல்கிறார்.
"கண்டுபார் பாடாணக் குழம்பதனை
கனமான சதுரக்கள் ளிப்பாலிற்போட்டு
விண்டுபார் சாமந்தான் மூடிவைக்க
விடுபட்ட சுத்தசலம் போலேயாகும்
கொண்டுபார் சிறப்பான பாடாணந்தான்
கொடிதான அயச்சட்டிக் குள்ளேவைத்து
மண்டுபார் நாற்சாமம் சுருக்குப்போட
மகத்தான பாடாணம் குழம்பாமே."
- போகர் -
சதுரக்கள்ளிப் பாலில் பாஷாணத்தை போட்டு ஒரு சாமம் மூடிவைக்க பாஷாணமானது தெளிந்த நீர்மமாகும். பின்னர் அதனை அயச் சட்டியில் வைத்து நான்கு சாமம் சுருக்கு போட பாஷாணம் குழம்பாகும் என்கிறார்.
நானும் இந்த முறையில்தான் ஐந்து பாஷாணங்களையும் தனித் தனியே குழம்பாக்கிக் கொண்டேன். ஒரு வழியாக ஐந்து பாஷாணங்களையும் குழம்பாக்கிக் கொண்ட பின்னர், இவை ஒவ்வொன்றின் எடையினை சரி பார்த்து அதற்கேற்ப ஒவ்வொன்றிலும் இருந்து சம அளவு எடுத்து அவற்றை கலந்து பஞ்ச பாஷாண குழம்பினை உருவாக்கிக் கொண்டேன்.
இனி இந்த குழம்பை மெழுகு அச்சில் வார்த்து இறுக்குவது இறுதிக் கட்டம். கொழும்பு - 11ல் இருக்கும் செட்டி தெருவில்தான் இந்த மெழுகு அச்சு வாங்கினேன். அங்கே நிறைய தெய்வ வடிவங்களின் மெழுகு அச்சுகள் கிடைக்கின்றன. எதை வாங்குவதென திகைத்து கடைசியில் சிவலிங்க அச்சினை வாங்கி வந்திருந்தேன். அத்தனை வடிவான அச்சுக்கள் அங்கே கிடைக்கிறது.
இந்த அச்சில் பஞ்சபாஷாண குழம்பை வார்த்து சூரிய புடம் போட குழம்பானது இறுகி பாறை போலாகிவிட்டது. இப்போது நமது பஞ்சபாஷாண கட்டு கொண்டு உருவாக்கிய லிங்கம் தயார். கீழே படத்தில் இருப்பதுதான் இரண்டு மாத முயற்சியில் நான் உருவாக்கிய பஞ்சபாஷாண லிங்கம். சிறிய அளவில் இருக்கும் இந்த லிங்கத்தின் மகத்துவம் பெரியது.
இதனை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம். பெரிய அளவில் தயாரித்தால் கோவில்களில் பிரதிஷ்டை செய்யலாம். நமது பல கோவில்களில் உள்ள மூலவர்கள் இம்மாதிரியான மூலிகை மற்றும் பாஷாண கட்டுகளால் உருவாக்கப் பட்டவையே. அவற்றின் தகவல்கள் காலப் போக்கில் மறைந்து போய் விட்டதால் அவற்றின் சிறப்புகள் நமக்கு தெரியாமல் போய்விட்டது.
குறிப்பிட்ட ஊரில் உள்ள குறிப்பிட்ட கோவிலில் போய் வணங்கினால் குறிப்பிட்ட நோய்கள் தீரும் என்று சொல்வதன் பின்னனியில் இருப்பது இத்தகைய மருத்துவ தகவல்தான். அந்த மூலவரை அபிஷேகம் செய்த நீரையோ, பாலையோ பருகினால் நோய் தீரும் என்கிற அறிவியல் தகவல்கள் காலப் போக்கில் சடங்குகளாய், சம்பிரதாயங்களாய் தேய்ந்து போய்விட்டது.
அந்த வகையில் நாம் உருவாக்கிய இந்த பஞ்சபாஷாண லிங்கத்தையும் தினம் தோறும் அபிஷேகம் செய்து வழிபடலாம். அந்த அபிஷேக நீர்தான் மருத்துவ குணங்களை கொண்டது.தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் நமது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலைப் பட்டு பிணிகள் அண்டாமல் வாழலாம் என்கிறார் உரோம ரிஷி.
இந்த லிங்கத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் வைத்து வழிபடலாமாம். தூய இடத்தில் வைத்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வந்தால் மன அமைதியும், கவனக் குவிப்பும் சித்திக்கும் என்கிறார் போகர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



