பற்களை பாதுகாக்க ஓர் பற்பொடி!

Author: தோழி / Labels: ,

“பல்லுப் போனால் சொல்லுப் போச்சு” என்கிற பழமொழி உணர்த்தும் சொல் என்பது உடல் ஆரோக்கியத்தை என்றே கருத வேண்டும். ஏனெனில் பற்களின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியத்தின் அடையாளம். சமீப காலத்தில் பல் மருத்துவம் மிக பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் வைத்திய துறை என்றால் மிகையில்லை.

இன்றைக்கு நவீன அறிவியல் பற்களை பராமரிக்கவும், பளிச்சென வைக்கவும் பல்வேறு மருந்து பொருள்களை சந்தைப் படுத்தினாலும் கூட, நமது முன்னோர்கள் நமக்களித்த ஆலும், வேலும் இன்றும் சிறப்பான பல் பராமரிப்பு உத்தியாக இருக்கிறது என்றால் மிகையில்லை. பற்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பழுது உண்டாகி விடுவதை தடுப்பது போன்ற விழிப்புணர்வு நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது.

அந்த வகையில் செயற்கை பொருட்களைத் தவிர்த்து இயற்கை பொருட்களைக் கொண்டு பற்களை உறுதியாகவும் குறை இன்றியும் பேண ஒருவகையான பற்பொடி ஒன்றை தயாரிக்கும் முறையைதன்வந்திரி தனது “தன்வந்திரி வைத்திய காவியம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.

போச்சப்பா தந்தமென்ற வியாதிக்கப்பா
பொல்லாத அரப்பொடியு மக்கிராகாரம்
நீச்சென்ற படிகாரம் மிருதார் சிங்கு
நோரான லவங்கையிடப் பட்டையப்பா
ஆச்சென்ற காசுக்கட்டி துருசுங்கூட்டி
அப்பனே கணக்காகக் கல்வம் போடு
பாச்சென்ற எலுமிச்சம் பழச்சாற்றாலே
பாங்குபெற நாற்சாம மாட்டு ஆட்டே.

ஆட்டியே நெருங்கவே மடிந்தபின்பு
அப்பனே சீசாவிற் பதனம் பண்ணு
கூட்டியே நான்குநாள் தேய்த்து வந்தால்
குடிலமாம் தந்தஅசைவு தந்தசன்னி்
நீட்டியே சீழ்விழல் ரத்தங்காணல்
நிலையாது வுடலை விட்டு நீங்கும்பாரு
தாட்டிகமா யிந்தநூல் முறைபொய்யாது
தப்பாது தப்பாது திண்ணந்தானே.


அரப்பொடி, அக்ராகாரம், படிகாரம், மிருதார் சிங்கி, லவங்கப்பட்டை, காசுக்கட்டி, துருசு இவைகளை சம எடையில் எடுத்து கல்வத்தில் போட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு நான்கு சாமம் அரைக்க வேண்டுமாம். ஒரு சாமம் என்பது மூன்று மணி நேரம்.

இவ்வாறு நான்கு சாமமாக நன்கு அரைத்து பின்னர் அதை சேகரித்து பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை கொண்டு நான்கு நாட்கள் பல் துலக்கிவர தந்தவாய்வு, தந்தசன்னி, தந்தத்தில் சீழ்வடிதல், ரத்தம் வடிதல், முரசு சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார். இப்படிச் செய்தால் இந்த நோய்கள் நிச்சயம் குணாமாகும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

இந்த சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மிளகு கற்பம்.

Author: தோழி / Labels: , , ,

கற்ப வகைகளைப் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். எளிய கற்ப வகைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்திட பலரும் வேண்டியிருந்தனர். தேரையர் அருளிய “தேரையர் காப்பியம்” என்னும் நூலில் காணக் கிடைத்த எளிய கற்பமான “மிளகு கற்பம்” பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

மரிசமொவ் வொன்றொரு வார மட்ட திக
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனே
யுண்டிடத் தொனிதரு மோதுமிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும தொன்றையுங்
குடிநீ ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட் டோடுமே

- தேரையர்.

இந்த வகை கற்ப முறைக்கு தரமான நூற்றித் தொண்ணூற்றி இரண்டு(192) மிளகுகள் தேவை படும். முதல் நாள் ஒரு மிளகு, அடுத்த நாள் இரண்டு, அதற்கடுத்த நாள் மூன்று என ஒவ்வொரு எண்ணிக்கையாக ஏழு நாள் வரை வெறும் வாயிலிட்டு நன்கு மென்று விழுங்கிட வேண்டுமாம்.

பின்னர் எட்டாம் நாளில் இருந்து ஆறு மிளகு, ஒன்பதாம் நாள் ஐந்து மிளகு என குறைத்துக் கொண்டே பதின் மூன்றாம் நாள் ஒரு மிளகு ஆகும் வரை சாப்பிட வேண்டுமென்கிறார். பதின்நான்காம் நாள் மீண்டும் எண்ணிக்கையை உயர்த்தி இரண்டு மிளகு என தொடர வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு ஏழு நாட்களாய் கூட்டிக் குறைத்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் மிளகை சாப்பிட்டு வர வேண்டுமாம்.

இப்படி ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் உடல் ஒளி பெறுவதுடன்,வலிமையும் அடையுமாம். மேலும் முக்கியமாய் ஆயுளும் அதிகரிக்கும் என்கிறார் தேரையர்.

எல்லாம் சரிதான், எப்படி உண்ண வேண்டும்?, இதில்தான் இந்த கற்பத்தின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

காலை அல்லது மாலை வேளைகளில் இந்த மிளகை உண்ணலாம் என்கிறார்.ஆனால் இதை சாப்பிடுவதற்கு ஒரு சாமம் அதாவது மூன்று மணி நேரத்துக்கு முன்னால் வரை உணவு உட்கொள்ளக் கூடாது என்கிறார். மேலும் பத்தியமாக “மது, மாது, மாமிசம்” விலக்கிட கூறுகிறார்.
எளிய கற்ப முறைதானே!

மேலும் மிளகை பொடியாக்கி தேனுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் குரல் இனிமையடையுமாம்.

சிட்டிகையளவு மிளகுப் பொடியுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் கடும்பசி ஏற்படுவதுடன் பித்தம் சார்பான நோய்களும் நீங்குமாம்.

மிளகைக் குடிநீராகக் காய்ச்சி பருகி வந்தால் முக்குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்குமாம் என்கிறார் தேரையர்.

குடி நீர் என்பது எட்டுப் பங்கு நீர் விட்டு ஒரு பங்காக காய்ச்சி எடுப்பதாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ரவிமேகலை என்னும் பொக்கிஷம்!

Author: தோழி / Labels: ,

காலத்தே அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் நூல்களை மின் நூலாக தொகுத்து இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தொடர் முயற்சியில் எனது பதின்மூன்றாவது படைப்பாக கோரக்கர் அருளிய "ரவிமேகலை - 75" என்கிற இந்த நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

பதினென் சித்தர் மரபில் பதினாறாவது சித்தராக வைத்து போற்றப் படுபவர் கோரக்கர். பல்வேறு சித்தர் பெருமக்களும் இவரின் சிறப்புகளை தங்களின் பாடல்களில் குறிப்பிட்டிருப்பது இவரது மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இவை தாண்டி இவர் மகத்துவம் கூறும் பல்வேறு செவிவழிக் கதைகள் புழக்கத்தில் உண்டு.

கோரக்கர் பாடல்களில் எளிமையான சொல்நயமும், சந்த வகுப்பும் சிறப்பாக அமைந்திருப்பது அவரது மொழியாளுமையை பறைசாற்றுகிறது. இதுவரை நம்மில் பலரும் அறிந்திராத பல சூட்சுமங்களையும் அவற்றின் ஊடே பொதிந்திருக்கும் அரிய பல தகவல்களைக் கொண்ட இந்தநூல் நமக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம் என்றால் மிகையில்லை.

காலமதில் கடியரவின் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமதில் சமாதிபெற மண்ணுந் தின்னா
நடுவனவ னுனதருகே வரவே மாட்டான்
வேலனைய கத்திவாள் வெட்டு மேறா
விடந்தலைமேற் கொண்டவனும் விமலி யாத்தாள்
சீலமுடன் ஞானப்பால் தந்து கந்தே
யீரெட்டாம் வயதுமெப்போ திருந்து வாழ்வாய்.

இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஆர்வம் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

எனது மேலான குருவினை பணிந்து இந்த முயற்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மின்நூலை இந்த இணைப்பில் தரவிரக்கிக் கொள்ளலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மரணத்தை வெல்ல....

Author: தோழி / Labels: ,

இந்த உலகில் மனிதனால் வெல்ல முடியாதது என ஒன்று இருக்கிறதென்றால், அது மரணமாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவில் நம்மால் மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமே தவிர வெல்ல முடியாது.

இப்படி வெல்லவே முடியாத மரணத்தையும் வெல்ல முடியும் என்கிறார் அகத்தியர். அவரது ”அகத்தியர் பூரணசூஸ்திரம் 216” என்னும் நூலில் இதற்கான விவரம் காணப் படுகிறது. இதன் நம்பகத்தன்மை மற்றும் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும், மேலதிக ஆய்வுக்கும் உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.

விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில்
வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி
தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில்
தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்
முளையுமடா அதனடுத்த தெற்கே காத
மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்
தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்
தன்னோடு வெண்சாரை தானும் உண்டே.

தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்
சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்
பின்னையே பிடித்தவிடங்க் கையிருக்கப்
பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்
மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால்
இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு
பொன்னையே தேடாதே கற்பந் தேடு
பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே.

பொதிகமலைச் சாரலில் பொன்னிமிளை விளையும் பிரதேசம் ஒன்று இருக்கிறதாம். அதை அண்டிய பகுதியில் தாம்பிரவேணி என்னும் ஆறு ஓடுகிறதாம். அதற்க்கு தெற்குப் பக்கமாக காத தூரம் சென்றால் மூவிலையை குருத்துக்களாகக் கொண்ட மரங்கள் இருக்குமாம். அவற்றின் நடுவே சோதிவிருட்சமும் இருக்கிறதாம். அதில் வெண் சாரைப் பாம்பு இருக்குமாம்.

இந்த பாம்பை கண்டவுடன் அதன் உடலில் நடு மையத்தை கையால் பிடிக்க வேண்டுமாம். அப்படி பிடித்தால் பிடிக்கிற பகுதி கையோடு வந்துவிடுமாம். இப்படி பிடிக்கும் போது வெண் சாரை கடிக்காதாம். உடனே பாம்பின் மற்ற இரண்டு பகுதிகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம். ஒட்டியவுடன் பாம்பு ஓடிவிடும் என்கிறார்..

இப்போது கையில் இருக்கும் வெண் சாரைப் பாம்பின் பகுதியை சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர். அப்படி சாப்பிட்டவர்களுக்கு இருபதாயிரம் வருடம் உடல் அழியாது இருக்குமாம். இந்த காலத்தில் பொன் பொருள் மீது மோகம் கொள்ளாமல் கற்ப வகைகளை தேடி அறிவதுடன், புருவ மத்தியை நோக்கி தியானித்திருக்க வேண்டும் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

அடுத்த பதிவில் கோரக்கர் அருளிய “ரவிமேகலை 75” யை மின்நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குழந்தைப் பேறில்லாதவர்களுக்கு....

Author: தோழி / Labels:

குழந்தை பேறில்லாமல் துயரத்தில் அழுந்தும் தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார். பலரின் தொடர்ச்சியான வேண்டுகோளை நிறைவு செய்திடும் வகையில் இன்று அந்த முறையினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இருந்துகொண்டு குருபரனைத் தியானம்பண்ணி
இன்பமுடன் ஓம்றீங் அங்வங்கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா
மார்க்கமுடன் ஆயிரத்தெட்டு உருவேசெய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடனே பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பார்பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் யன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
நேர்மையுள்ள ரகசியமது சந்தானவித்தை
ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி
அறிந்துமன துரிமையனா லடக்கம்பண்ணி
சாரப்பா சாகரத்தில் தவசுபண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே.

- அகத்தியர்.

வெள்ளியினால் ஆன ஒரு கிண்ணத்தில், ஒரு கழஞ்சு தேன் விட்டு அதனை வலது கையில் ஏந்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு முகமாய் அமர்ந்து/இருந்து கிண்ணத்தில் இருக்கும் தேனை கவனக் குவிப்புடன் பார்த்துக் கொண்டே “ஓம் றீங் அங் வங்” என ஆயிரத்து எட்டு தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம். இந்த செயல்முறையை குழந்தை பேறு வேண்டும் தம்பதியரில் கணவனே செய்திட வேண்டும் என்கிறார்.

இவ்வாறு செபித்த தேனை மனைவியியானவள் மாத விலக்கு முடிந்து தலை முழுகிய பின்னர், உண்ண்க் கொடுத்து இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த முறைக்கு எவ்விதமான பத்தியமும் கூறப் படவில்லை. மலடு என சொல்லப் பட்டவர்களுக்கும் இந்த முறையினால் கருத் தரிக்கும் என்கிறார் அகத்தியர்.

ஆச்சர்யமான தகவல்தானே!, தேவையிருப்பவர்கள் குருவினை வணங்கி முயற்சிக்கலாம். தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நோக்கு வர்ம செயல்பாடு!

Author: தோழி / Labels: ,


நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இது குறித்து ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும். அவை பற்றியும் இந்த தொடரின் ஆரம்பத்தில் விளக்கியிருக்கிறேன்.

இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே

பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

இந்த வாயுக்கள் நமது நாடிகளின் ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.

இத்தகைய நுட்பமான வர்ம ஸ்தானங்களில் அடி படும் போது அவை உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை. “படாத இடத்தில் பட்டு பொட்டென போய்விட்டான்” என்கிற பேச்சு வழக்குகள் இந்த நுட்பமான வர்ம ஸ்தானங்களில் படும் அடியினையே குறிப்பிடுகிறது.

இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம்.

இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வாயுக்கள் சந்திக்கும் நுட்பமான வர்ம புள்ளிகளே நோக்கு வர்மத்தில் பயன் படுத்தப் படுகிறது. இந்த புள்ளிகளின் மீது கவனக் குவிப்போடும், தன் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகளை உண்டாக்க முடியும் என்கிறார் அகத்தியர்.

பார்வையின் தீவிரம் பொறுத்து ஒருவரை நிலை குலையச் செய்வதில் துவங்கி, அவரை மயக்கமடையச் செய்யவோ அல்லது அவரின் உயிரினை போக்கவோ செய்திட முடியுமாம். இவை தவிர இன்னும் மேம்பட்ட நிலையில் அவரை தன் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கவும் முடியும் என்கிறார். இதைத்தான் சமீபத்தைய திரைப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர்.

கீழே உள்ள படத்தில் நமது முகத்தில் உள்ளதாக அகத்தியர் சொல்லும் நோக்கு வர்ம புள்ளிகளை சிவப்புப் புள்ளியால் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த படத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருத வேண்டுகிறேன். யாரும் ஆர்வ மிகுதியினால் விஷப் பரிட்சைகளில் இறங்கிட வேண்டாம். ஏனெனில் நம்மைப் போன்றவர்களால் இதனை நிச்சயம் கைக் கொள்ள முடியாது. குருமுகமாக முறைப்படியான தொடர் பயிற்சிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஊடே வளர்த்தெடுக்கப் பட வேண்டியது இந்தக் கலை.இந்த நோக்கு வர்ம தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் வழிவகைகள் இருக்கின்றனவாம். அவற்றை குருமுகமாகவே அறிவது சிறப்பு என்பதால் அதை இங்கே ஒரு தகவலாக மட்டுமே பதிந்து வைக்கிறேன். தற்போதும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் தேர்ந்த வர்மக் கலை ஆசான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களைத் தேடியறிந்து பணிந்து இந்தக் கலையினை பழகிடலாம்.

நம்மிடம் இருக்கும் நூல்கள் நமது தேடலின் பாதையில் வழிகாட்டும் விளக்காக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டிய நிபுணத்துவத்தை குருமுகமாக மட்டுமே அறியமுடியும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நோக்கு வர்மம் மேலும் சில தகவல்கள்!

Author: தோழி / Labels:

நோக்கு வர்மம் என்பது நான்கு வகையான வர்ம பிரிவுகளில் ஒன்று என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த நோக்கு வர்மத்திற்கு “மெய்தீண்டாக் கலை” என்றொரு பெயரும் உண்டு. தவிர்க்க இயலாத ஆபத்துக் காலங்களில் மட்டுமே இந்தக் கலையினை பயன்படுத்திட வேண்டும் என சித்தர் பெருமக்கள். வலியுறுத்தியிருக்கின்றனர்.

நம்மை தாக்க வரும் மனிதர்கள் அல்லது விலங்குகளின் மீது பார்வையைச் செலுத்துவதன் மூலம் அவர்களை செயலிழக்கச் செய்து நம்மை தற்காத்துக் கொள்வதே இந்த கலையின் அடிப்படை நோக்கம். மேலும் குறைந்த இடைவெளியில் உள்ளவர்கள் மீது மட்டுமே இந்த முறையினைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யமுடியும். நுட்பமான இந்த கலையில் தேர்ந்தவன் எவராலும் வெல்ல முடியாதவனாகி விடுவான் என்கிறார் அகத்தியர். இதன் பொருட்டே குருவானவர் இந்தக் கலையை அத்தனை எளிதில் தம் மாணவருக்கு அருளிட மாட்டாராம்.

ஒரு வேளை மாணவன் வர்மக்கலையை முழுவதுமாக கற்றுத் தேர்ந்த பின்னர், காலப்போக்கில் அகந்தை காரணமாய், தன்னையே எதிர்க்க துவங்கினால் என்ன செய்வது என்று தயக்கத்தின் காரணமாய், குருவானவர் இது போன்ற சில நுட்பமான வர்மங்களை தங்கள் பரம்பரைக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவற்றையே கற்று கொடுத்தமையும் இந்த கலையின் அழிவிற்கு இன்னுமொரு காரணமாகிறது.

இன்றும் கூட, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள “கண் திருஷ்டி”, “கண்படுதல்”, “கெட்டபார்வை”, “ஒரு பார்வையில் சப்த நாடியும் ஒடுங்கிப் போதல்” என்பது மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் பயன் பாட்டில் இருப்பதை கவனிக்க வேண்டுகிறேன். இவற்றை நோக்கு வர்மத்தின் நீட்சியாகவோ அல்லது எச்சங்களாகவே கருதலாம்.

நமது இந்த மெய் தீண்டாக் கலையே சீனாவில் போதி தர்மர் என்னும் பௌத்த துறவியினால் போதிக்கப் பெற்றது . இந்த நோக்கு வர்மத்தை தற்போது சீனாவில் “திம்-மாக்” என அழைக்கின்றனர். இது பற்றிய மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

இது போலவே வர்மத்தின் மருவிய தோற்றமே ஜப்பானிய தற்காப்புக் கலையான “அக்கிடோ” என்றும் கூறுகின்றனர். அக்கிடோ பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் அறியலாம்.

இப்படி ஆசிய நாடுகள் எங்கும் பரவிய கலையின் தாயகம் தமிழகம். இது தமிழர்களின் கலை, ஆனால் இன்று ஏறத்தாழ தமிழர்கள் அனைவராலும் மறக்கப் பட்டுவிட்ட அல்லது தமிழகத்தில் அழிந்தே போய்விட்ட கலை இது. இன்றைக்கு நமக்கு பழம் பெருமை மட்டுமே மிச்சமாயிருக்கிறது. இது மிகவும் வருந்தத் தக்க நிலை. இந்த நிலையிலாவது நம்மிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு இந்தக் கலையினை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கிட வேண்டும்.

நோக்கு வர்மம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?, நோக்கு வர்மப் புள்ளிகள் எவை? நோக்கு வர்மத்தால் என்ன செய்ய முடியும்?..... இந்த விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நோக்கு வர்மம்.... சில அடிப்படைகள்!

Author: தோழி / Labels:

நோக்கு வர்மம். தீபாவளி நாளில் இருந்துதான் இந்த வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அதற்கு முன்னர் வரை இப்படியான ஒன்றைப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் இது நம்முடைய அடையாளம், குறைந்த பட்சம் இப்படியான தகவல்கள், திரைப்பட ஊடகம் மூலமாவது தமிழர் பார்வைக்கு வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. தமிழன் தன் பார்வையையும் கூட ஆயுதமாக உணர்ந்து அறிந்து பயன்படுத்தியிருக்கிறான் என்பதே பெருமிதமான உணர்வுதானே!.

இப்படித்தான் தமிழரின் அநேக பெருமைகள் மறைவாகவே இருக்கின்றன. அவை தாமாய் மறைந்ததா இல்லை மறைக்கப் பட்டதா என்று ஆராயப் புகுந்தால் தேவையில்லாத வீண் மன கசப்புகளே மிஞ்சும்.

நோக்கு வர்மம் என்பது அடிப்படையில் வர்மங்களின் வகைகளில் ஒன்று. இதைப் பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கத்தினை ஏற்கனவே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அதன் விவரங்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இந்த முறை வர்மம் பற்றி அகத்தியர், போகர் போன்ற பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கிக் கூறியிருக்கின்றனர்.

ஒரு சிலர் நமது நோக்கு வர்மம் மேல் நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் கலைகளுக்கு இணையானதா என்ற கேள்விவியினை மின்னஞ்சல்களில் முன் வைத்திருக்கின்றனர். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இரண்டும் வெவ்வேறான அடிப்படையைக் கொண்டவை என்றே கருதுகிறேன். இதற்கு இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் பிரபலமானதால் இதற்கு மெஸ்மரிசம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகள் பற்றி திரைப்படங்கள், கதைகள் மிகையான ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதே உண்மை. நிதர்சனத்தில் இந்த ஊடகங்கள் காட்சிப் படுத்துவதைப் போல நினைத்த மாத்திரத்தில் ஒருவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முடியாது. ஏனெனில் இந்த முறையில் ஒருவரை இயக்க விரும்புபவர் அவர் அனுமதி இன்றி நிச்சயமாக அதைச் செய்திட முடியாது.

அவர் அனுமதி பெற்ற பின்னர் "அறிதுயில் நிலைக்கு" அவரை கொண்டு சென்று அதன் பின்னர் அவர் ஆழ்மனதிற்குள் ஊடுருவி அவரை கட்டுப்பாடிற்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் அறிதுயில் நிலைக்கு செல்பவர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது அல்லது தெரியகூடாது என்று தீர்மானமாக இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாது.

இங்கு அறி துயில் என்பது கேட்டல், பேசுதல், தொடுகை போன்ற உணர்வுகளுடன் கூடிய ஒருவகை உறக்க நிலை.

இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகளால் ஒருவரிடம் இருக்கும் மன அழுத்தம், கவலைகள், தீய பழக்கவழக்கங்கள், குற்ற உணர்ச்சி போன்றவற்றை இல்லாது செய்யலாம் அது தவிர அவரின் கடந்தகால வாழ்க்கை சம்பவங்கள். முற்பிறப்பு நினைவுகள் வரை அறியலாம் என்று கூறப்படுகிறது.

மாறாக நோக்கு வர்மம் என்பது நொடிப் பொழுதில், நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தன் முன்னாலிருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாடிற்குள் கொண்டுவரவோ முடியும். இது மிகையான வாதமாக இருக்க முடியாது. ஏனெனில் இது பற்றி அகத்தியரும், போகரும் உறுதியான கருத்துக்களையே தங்களின் நூலில் கூறியிருக்கின்றனர்.

எல்லோரும் நினைப்பதைப் போல இந்த கலை அடியோடு அழிந்து போய் விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். இன்றும் கூட இந்த கலையின் எச்சங்கள் நம்மிடையே இருந்து கொண்டுதானிருக்கின்றன. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மருத்துவ வர்மம்....

Author: தோழி / Labels: , ,

வர்மக் கலையானது அடிப்படையில் மருத்துவம் சார்ந்த ஒன்று என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாகவும், அவற்றின் ஊடே பத்து வகையான வாயுக்களின் ஓட்டம் இருப்பதாகவும் சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.

அவை முறையே...

பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

என்பதாக வரையறுத்திருக்கின்றன. இந்த நாடிகள் ஒன்றோடு ஒன்று இனையும் அல்லது பினையும் இடங்களை நாடிமுடிச்சுகள் என்கின்றனர். இந்த இடங்களில் இந்த வாயுக்கள் தேங்கியிருக்குமாம். இவற்றை நாடி பார்த்து அறிந்து விட முடியும் என்றும், அதனை பார்க்கும் முறைகளையும் அகத்தியர் அருளியிருக்கிறார்.

இந்த நாடி முடிச்சுகளையே வர்மப் புள்ளிகள் என்கின்றனர். இந்த புள்ளிகளை அழுத்துவதன் மூலமோ, அல்லது தட்டுவதன் மூலமோ இந்த வாயுக்களின் ஓட்டத்தினை சீரமைக்க முடியும் என்பதே வர்மக் கலையின் அடிப்படையாக புரியப் படுகிறது. இந்த வர்மங்களின் வகைகளை ஏற்கனவே முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் அந்த பதிவுகளை பார்வையிடலாம்.

இன்றைய மருத்துவத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் அவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தியோ அல்லது வலி தெரியாமலிருக்கும் மருந்துகளைக் கொடுத்தோ சிகிச்சை செய்கிறோம். இதற்கென பிரத்தியேக மருந்துகள் இப்போது உள்ளன. ஆனால் வர்மக் கலையில் உடலில் ஒரு சில புள்ளிகளைத் தட்டுவதன் மூலமே ஒருவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தவும், குறிப்பிட்ட பாகத்தினை மரத்துப் போகச் செய்யவும் முடியும்.

சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் சில குறிப்பிட்ட இடங்களைத் தட்டுவதன் மூலம் மூர்ச்சையை தெளிய வைக்கவும், மரத்துப் போன இடத்தில் உணர்வினை மீட்டெடுக்கவும் முடியும். இந்த அடிப்படையே பின்னாளில் தற்காப்புக் கலையாகவும், உயிர் கொல்லும் போர்கலையாகவும் மாறியது.

இவைதவிர ஆயுதங்களால் வெட்டுபடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளாலோ உடலில் கயமேற்பட்டு இரத்தம் அதிகமாக வெறியேறினால் அந்த இரத்தப் போக்கினை உடனடியாக நிறுத்தவும் வர்மக்கலை வழி சொல்கிறது. இதனை அகத்தியர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.

காயமது திருமேனிதனில்
ஆயுதங்களின் அடவால் வெட்டுண்டு
குருதியது வெளிப்போந்தாக்கால்
குருதியதை நிறுத்தும் உபாயமது
உத்தமனே உரைப்பேன் கேளு
கரமதின் கவளிகளது பிளவுண்டு
குருதி கண்டால் மணிக்கட்டுதனில் பற்றிய
மணி பந்த சூட்சுமமதில் பெருவிரலது

கொண்டு அழுத்தி மனதினில்
நூற்று எண்பது மாத்திரை அதை
எண்ணி விரலகற்ற குருதியது
அடங்கும் அடங்கு மடாபரி தொன்று
அறிந்து கொள்ளடா மணிகட்டதுமுதல்
முண்டது காண் பகுதிதனில்
வெட்டுண்டு இருதியது வருங்கால்
பதறாதே பய்ய வேமுண்டது உள்

வர்மநிலை தனில் ஆட்காட்டியதால்
மாத்திரை அரை யூன்றியே பூரணமாய்
நூற்று இருபத்து எண்ணியே விரலகற்ற
குருதியது தானெனவே நிற்கும்பாரு
பாரெனவே சிரசதனில் குருதியது
பெருக்கம் கண்டால் சென்னிபற்றிய
செவிக்குத்தி கால மதில் ஆட்காட்டியதில்
மாத்திரையது காலளவு வழுத்தி

அகவினில் எண்ணமது இரு நூற்று
நாற்பது தாமதித்து விரலகற்றிட
சுகம்தானே சுகமாய்தானே
மற்றொன்று கேளாய் மகனே
அதரமது அருகில் தானடா சுழிவர்மம்
சுண்டு அன்னம் முகவாய் தனில்
குருதி காண் சுழியதில் விரலுன்றி
மாத்திரையது கால் வரையறுத்து

உள்மனதினில் அறுபது எண்ணமிட
குருதியது சேதமிடல் தட்டென
நிற்கு மடா ஊட்டமான ஊட்டியதனில்
வெட்டுண்டு குருதியது கொட்டுங்கால்
குறியானது குரல் முடக்கியதில்
விரல்களது ஊன்றியே பாங்காய்
பரிவுடனே மாத்திரையது அரைதான்
வழுத்தி நவமணி முறை பூஜ்யமதில்

எண்ணிட இரத்த மது சுகமாய் நிற்ககுமடா
கரமது வெட்டுண்டு இரத்தப்
போக்கால் அவதி கண்டால்
மற்றொரு உபாயமது கூறுவேன்
கேளாய் மகனே கம்கூட்டது
சேருமிட சேர்க்கையதில் விரலூன்றி
சுகமாய் அழுத்திட உதிரப்போக்கது
தீரும்பாரு திடமான கால்களதில்

ஊனது தோன்றி குருதியது நீர் போன்று
வெளியேறி னாக்கால் தயவான
நெறி வர்மமது இருபுறமும் பற்றிட
குருதியது தானென நிற்கும் பாரு
நின்றெனவே முழங்காலதின்
கீழ்தானடா ஆயுதமதால் தாக்கமது
கண்டால் நடுத்தொடை சூட்சுமத்தில்
திறனாய் அழுத்திட குருதியது

நிற்கும் பாரு பாரெனவே இரத்தப்
பெருக்கத்தை நிறுத்த இறுதியான
வர்மசூட்சுமம் இது தானடா மைந்தா
பாதமது இணையும் காலது பொருத்துதனில்
பற்றிய வர்மமதில் பெருவிரலால்
தட்டெனவே அழுத்திட குருதியது
சீரென சினராமல் நிற்குமடா

- அகத்தியர்.

சமீபத்தில் விபத்தில் காயமடைந்து குருதி கொட்டக் கொட்ட கொண்டு வரப்பட்ட இரண்டு பேரின் குருதிப் போக்கினை இந்த முறையினால் உடனடியாக என்னால் நிறுத்திட முடிந்தது. இப்படியான அவசர நேரங்களில் வர்மம் போலொரு சிறந்த மருத்துவமுறை இருக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.

இவை தவிர பல்வேறு நோய்க் குறியீடுகளை அறியவும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் அகத்தியர் தனது நூலில் விவரித்திருக்கிறார். நேரமும், குருவருளும் அனுமதித்தால் எதிர் காலத்தில் அவை பற்றி விரிவாக பதிவிட முயற்சிக்கிறேன்.

இனி, எல்லோரும் மிக ஆவலும் எதிர்பார்த்திருக்கும் நோக்கு வர்மம் பாக்கி இருக்கிறது. அதென்ன நோக்கு வர்மம்?. இப்போது அதை பயன்பாட்டில் இருக்கிறதா? நோக்கு வர்மத்தால் என்ன செய்யலாம்?, என்ன செய்ய முடியும்?

இந்த கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வர்மம் மர்மமா?

Author: தோழி / Labels: ,


வர்மக் கலை என்பது அடிப்படையில் ஒரு மருத்துவக் கலை. ஆனால் கால ஓட்டத்தில் தற்காப்பு கலையாக உருமாற்றம் பெற்று, தற்போது வர்மக்கலை ஒரு நுட்பமான போர்க் கலை என்பதாக திரைப் படத் துறையினர் மூலம் வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. மறைந்து போயிருந்த இந்த கலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பலரின் ஆர்வத்தை இந்தக் கலையின் பக்கம் திருப்பியவர்கள் என்கிற வகையில், அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே.

நமது உடலானது எலும்புகளாலும், தசைகளாலும், நரம்புகளாலும் பின்னப் பட்டிருக்கிறது. இதில் ஒரு உறுப்பானது மற்ற உறுப்புடன் எவ்வாறு பிணைக்கப் பட்டிருக்கிறது, அவைகள் பிணைக்கப் பட்டிருக்கும் தொழில் நுட்பம் எத்தகையது என்பதை நவீன அறிவியலில் கதிரொளி (xray) மற்றும் வருடி (scan) மூலமாக நாம் பார்க்க முடிகிறது. அதனை வைத்தே சேதமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட ஒரு உறுப்பிற்குத் தேவையான சிகிச்சைகள் தரப்படுகின்றன.

இத்தகைய அறிவியல் வளர்ச்சி இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே குறிப்பிட்ட நவீன முறைகளை விடவும் நேர்த்தியான, செலவில்லாத ஒரு வைத்திய முறையாக வர்மக் கலை விளங்கியிருக்கிறது என்பது நமக்கு கிடைத்திருக்கும் நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த தகவல்கள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள் அழிந்து போயிருக்கலாம், அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது.

தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...

ஒடிவு முறிவு சாரி
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம காண்டம்
வர்ம பீரங்கி
வர்ம சூடாமணி

இந்த கலை அழிந்து போனதற்கும் இந்த கலையின் சிறப்பே கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த ஒருவன் சகல விதத்திலும் தன் சக மனிதர்களை விட அசாத்திய திறமைகளைக் கொண்டவனாகி விடுகிறான். அப்படிப் பட்டவனால் எதனையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

ஒரு வேளை ஆசாபாசங்களில் சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள் கையில் இந்த கலை சிக்கி அவர்கள் தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த ஆரம்பித்தால் அது சமூகத்தில் ஆபத்தான விளைவுகளையும், முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தி விடும் என்று கருதியே, சரியான மாணவன் கிடைத்தால் மட்டுமே கற்றுத் தருகிற கலையாகிப் போனது. சரியான மாணவன் கிடைக்காவிட்டால் அந்த குருவோடு அந்த கலை அழிந்து போக வேண்டியதுதான்.

பலரும் நினைப்பதைப் போல இந்த கலையினை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சித்தர்கள் வகுத்திருக்கின்றனர். போகர் ஒரு பாடலில் சீடனை தெரிந்தெடுக்கும் வகையினை இப்படிச் சொல்கிறார்.

"மறைவில் வைப்பதென்றால் மைந்தா கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன் றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல் தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம் காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த தானால்
அப்பனே நிலையறிந்து நூலை ஈயே"

- போகர்.

குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் ஒருவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரது தகுதியினை சோதித்து அறிந்த பின்னரே அவருக்கு இந்த கலையினை கற்றுக் கொடுக்க வேண்டுமென கூறுகிறார். சரியான மாணவனைக் கண்டறிந்த உடனும் அவருக்கு இந்தக் கலையினை போதிக்க முடியாது. இந்தக் கலையினை ஏற்றுக் கொள்ளும் உடல் மற்றும் மனப் பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிகளே முதலில் வழங்கப் படும். அவற்றில் தேறினால் மட்டுமே குருவானவர் வர்மக் கலையினை மாணவருக்கு அருளுவார். இதெல்லாம் இன்றைய அவசர உலகத்துக்கு சாத்தியமாகுமா?

ஆக, பொறுமை, நிதானம், தீர்க்கமான சிந்தனை, பிற உயிர்களின் மீது அன்பும், கருணையும் செலுத்தும் மனிதாபிமான பாங்கு போன்ற இயல்புகள் மிளிரப் பெற்றவரே இந்தக் கலையை கற்றுக் கொள்ளும் தகுதியுடையவராவார். இவர்களுக்கு மட்டுமே இந்த கலை முழுமையாக போதிக்கப் படுமாம். அவர்கள் நடவடிக்கையில் எள்ளளவு சந்தேகம் வந்தாலும் குருவானவர் முழுமையாக கற்றுத் தராமல் போகும் வாய்ப்புள்ளது.

பதிவின் நீளம் கருதி வர்மக் கலையின் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோக்கு வர்மம் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வர்மம் - தோற்றமும், காலமும்!

Author: தோழி / Labels: , , ,

கடந்த ஐந்தாறு நாட்களாய் தினமும் குறைந்தது பத்திருபது மின்னஞ்சல்களாவது நோக்குவர்மம் பற்றிய விசாரிப்புகளுடன் வந்திருக்கின்றது. எல்லாம் கடந்த தீபாவளி அன்று வெளியான “ஏழாம் அறிவு” திரைப் படத்தின் விளைவுதான். வர்மம் பற்றியும், அதன் வகைகள், முறைகள், செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசித்தறியலாம்.

இருப்பினும் தொடர்ச்சியான வேண்டுகோள்களின் காரணமாய் வர்மம் பற்றிய மேலதிக தகவல்களை இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடரினை கடந்த வாரமே வலையேற்றி இருந்தால் பரபரப்பான வாசிப்புக்கு உள்ளாகி இருக்கும். எனினும் ஏற்கனவே கடந்த வாரத்திற்கான பதிவுகளை முன்னரே வலையேற்றி விட்டபடியால் ஒரு வாரம் தாழ்த்தி இந்த தொடரை வலையேற்றுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் காத்திருந்து வாசிப்பார்கள்தானே!

வர்மக் கலையினை ஆதி குருவான சிவனே தோற்றுவித்ததாக சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர் தனது இணையான சக்திக்கு இந்த கலையை உபதேசித்தாகவும், அவரிடம் இருந்து நந்தி தேவர் வழியே தனக்கு கிடைத்தாக அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கிறார்.

இதனை அகத்தியர் தனது "ஒடிவு முறிவு சாரி" என்னும் நூலில் பின்வருமாறு சொல்கிறார்.

"பாதிமதி யணிபரமன் தேவிக்கிசைய
பணிவுடனே தேவியிடம் நந்தீசர்வாங்கி
மகிழ்வாக எந்தனக்கு சொன்னாரப்பா
வேதனை வாராமல் வர்மசூக்குமம்
விபரமுடன் உந்தனுக்கு உரைக்கக்கேளே"

- அகத்தியர்.

போகரும் தனது "போகர் வர்மசூத்திரம்" என்னும் நூலில் சிவன் அம்மைக்கு சொல்ல தாயான ஈஸ்வரி நந்திக்கு சொல்ல நந்தி தனக்கு சொன்னதாக சொல்கிறார்.

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல
பரிவுடனே நந்திசொன்ன மார்க்கம்
பாடினேன் வர்மசூத்திரம் பண்பாய்தானே"

- போகர்.

போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது ”வர்ம காண்டம்” என்னும் நூலில் இது பற்றி பின்வருமாறு சொல்கிறார்.

"பதாரம்தனைப் பணிந்து வர்மகாண்டம்
பாடினேன் நாடிநரம்பு ஆனவாறும்
காதாரம் கொண்டுணர்ந்து என்னைஆண்ட
கடாட்சமது போகருட கருணை யாலே
வளமாகப் புலிப்பாணி பாடினேனே"

- புலிப்பாணி.

இந்த தகவல்களின் அடிப்படையில் ஆதிசிவன் இதனை உருவாக்கியிருந்தாலும், நந்தி தேவரின் வழியேதான் அவரது சீடர்கள் இந்த கலையினை கற்றுத் தேர்ந்திருப்பது தெளிவாகிறது. நந்தி தேவரின் காலம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த வர்மக் கலை பற்றி பல்வேறு விதமான செவிவழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. எனினும் புராண இதிகாசங்களில் இந்த வர்மக் கலை பற்றி நேரடியான/மறைவான தகவல்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் பீமசேனன் துரியோதனின் தொடையில் கதையால் அடித்துக் கொன்றதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

முன்னாளில் வர்மக் கலையானது தமிழர்களின் வாழ்வியல் கலையாகவும், குருமுகமாய் எவரும் பயிலக் கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழர்களின் மீது அன்னியர்களின் ஆதிக்கம் உருவான போது இந்த கலை மறைவாகவும், இரகசியமாகவும் வைக்கப் பட்டு, கால ஓட்டத்தில் அழிந்தே போய்விட்டது என்று சொன்னால் மிகையில்லை.

இன்று இந்தக் கலையை நமக்குச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அவை பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புடம் - துருத்தி!

Author: தோழி / Labels: ,

புடம் என்கிற இயல் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது என்று பார்த்தோம். அவை அடுப்பு அல்லது உலை மற்றது வெப்பம். இது வரை வெவ்வேறு வகையான வெப்பத்தினை பற்றியும் அவற்றை எவ்வாறு உருவாக்கினர் என்றும் பார்த்தோம்.

இன்றைய பதிவில் அடுப்பு அல்லது உலை பற்றி பார்ப்போம். இந்த அடுப்பு நெருப்பை எரியச் செய்யும் கலனாகும். இந்த அடுப்பின் அமைப்பு என்பது ஒவ்வொரு வகையான புடத்திற்கும் ஏற்ப மாறுபடும். இந்த அடுப்பில் நெருப்பினை எரியச் செய்ய காற்று அவசியமாகும். இப்படி காற்றை செலுத்த தேவையான ஒரு உபரகரணத்தை பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் வாத சௌமியம்" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

"பாரப்பா ஊத்துமுறை வகையைக்கேளு
தானப்பா கிண்ணம் செய்யதுருத்தியொன்று
பக்குவமாய் உருக்குமுறை துருத்திரெண்டு
சேரப்பா சத்துவகை துருத்திநாலு
செயமான கைமுறையாய் அறிந்துகொண்டு"

உலைகளில் காற்றைச் செலுத்தும் இந்த கருவியினை அகத்தியர் துருத்தி என்று அழைக்கிறார். மூன்று வகையான துருத்திகளைப் பற்றி அகத்தியர் கூறியிருக்கிறார்.

ஒரு துருத்தி

இந்த வகையான துருத்தி முழு ஆடு ஒன்றின் தோலால் செய்யப்பட்டிருக்கும். இதற்கு ஒரே ஒரு துவாரம் மட்டும் இருக்கும். இதை இயக்குவதன் மூலம் அதன் துவாரம் வழியாக காற்று கரி அடுப்புக்கு செலுத்தப்படும். இந்த வகை துருத்திகளால் கிண்ணங்கள் செய்வதற்காக வேண்டியே கரி அடுப்பில் வெப்பம் உண்டாக்கப்படும் என்கிறார் அகத்தியர்.

இரண்டுதுருத்தி

இது கன்றின் தோலால் செய்யப்படிருக்கும். இதற்கு இரண்டு துவாரங்கள் இருக்கும். இதை இயக்குவதன் மூலம் அதன் துவாரங்கள் வழியாக காற்று கரி அடுப்புக்கு செலுத்தப்படும். இந்த வகை துருத்திகளால் தேவையானவற்றை உருக்குவதற்காக வேண்டியே கரி அடுப்பில் வெப்பம் உண்டாக்கப்படும் என்கிறார் அகத்தியர்.

நான்கு துருத்தி

இந்தவகை துருத்திகளில் நான்கு துவாரங்கள் இருக்கும். இதை இயக்குவதன் மூலம் அதன் துவாரங்கள் வழியாக காற்று கரி அடுப்புக்கு செலுத்தப்படும். இந்த வகை துருத்திகளால் தேவையானவற்றை ஊதிச் சத்து எடுக்க வேண்டியே கரி அடுப்பில் வெப்பம் உண்டாக்கப்படும் என்கிறார் அகத்தியர்.

இப்படி தோலால் செய்யப்பட்ட துருத்திகள் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் வரை புழக்கத்தில் இருந்தன. தற்போது இவை முற்றிலுமாக பயன்பாடில் இல்லை.

குறிப்பு : கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 52 மின்னஞ்சல்கள் வர்மம் பற்றியும், நோக்கு வர்மம் பற்றியும் விசாரித்து வந்திருக்கிறது. நண்பர்களின் இந்த வேண்டுகோளுக்கிணங்க அடுத்த பதிவில் இருந்து வர்மம் பற்றிய சித்தர் பெருமக்களின் தகவல்களை தொடராக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புடம் - வகைகள்.

Author: தோழி / Labels: ,

சித்த மருந்தியலில் மருந்துகளை ஒன்றோடு ஒன்று பிணைக்கவும், தேவையான மருந்தினை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும் புடம் போடுதல் செய்யப் படுகிறது. சில வகையான மருந்துகளுக்கு நீடித்த கூடுதல் வெப்பமும், தீயானது நேரடியாக மூலகங்களின் மீது படாமல் இருக்க வேண்டும்.அம்மாதிரியான செயல் முறைகளுக்கு பசுவின் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப் பட்ட வறட்டிகளைக் கொண்டு புடம் போட்டனர்.

இந்த வறட்டிகளின் எண்ணிக்கையை வைத்து இந்த புடங்களுக்கு பெயரிடப் பட்டுள்ளது. அகத்தியர் தனது "அகத்தியர் வாத சௌமியம்" என்னும் நூலில் இது பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.

ஆமப்பா புடந்தனக்கு நிதானங்கேளு
அப்பனே காடையது எருவென்றாகும்
நாமப்பா கவதாரி எருமூன்றாப்பா
நன்மையுள்ள குக்குடந்தான் எருபத்தாகும்
நாமப்பா வராகபுடம் எருஐம்பதாகும்
தயவான கனபுடந்தான் எருநூறாகும்
ஓமப்பா கெஜபுடந்தான் ஆயிரமுமாகும்
உத்தமனே கைமுறையாய்ப் புடமாய்ப்பாரே

- அகத்தியர்.

ஒரு வறட்டி கொண்டு போடப்படும் புடத்தினை “காடைப் புடம்” என்றும், மூன்று வறட்டிகளை பயன்படுத்தினால் அதை ”கௌதாரிப்புடம்” என்றும், பத்து வறட்டிகளை கொண்டு போடப் படும் புடத்தினை “குக்கூபுடம்” (சேவற்புடம்) என்றும், ஐம்பது வறட்டிகளைக் கொண்டு போடப் படும் புடத்தை “வராக புடம்” (பன்றிப்புடம்) என்றும், நூறு வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கனபுடம்” என்றும், ஆயிரம் வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கஜபுடம்” (யானைப்புடம்) என்றும் அகத்தியர் வரையறுத்திருக்கிறார்.

இவை தவிர தொன்னூறு வறட்டிகளைக் கொண்டு போடப்படும் புடத்திற்கு “மணல் மறைவுப்புடம்” என்று பெயர்.

வறட்டியை பயன்படுத்தாமல் ஆட்டின் எருவைக் கொண்டு போடும் ஒரு புட முறையும் உண்டு. அதை “பூமிப்புடம்” என அழைப்பர். நான்கு விரற்கடை அளவுக்கு ஆட்டின் எருவை இடுவதன் மூலம் இந்த முறையில் புடம் போடுவதுண்டு.

நெருப்பினை நேரடியாக பயன்படுத்தாமல், மறைமுகமாய் வெப்பம் உருவாக்கும் சில புட வகைகளும் உண்டு.
உமிப்புடம் - இது இரண்டு வகைப்படும். ஒன்று புடமிடவேண்டிய பொருட்களை உமியில் புதைது வைத்து எடுத்தல், மற்றையது உமியால் எரித்து புடமிடுதல்.

தானியப்புடம் - தேவையை பொறுத்து நெல்லுக்குள் அல்லது வேறு குறிப்பிட்ட தானியத்திற்குள் புதைத்து வைத்து எடுத்தல்.

சூரியப்புடம் - சூரிய ஒளியில் காயவைத்து எடுத்தல்.

சந்திரப்புடம் - நிலவின் ஒளியில் வைத்து எடுத்தல்.

பருவபுடம் - பௌர்ணமி அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.

அமாவாசைப் புடம் - அமாவாசை அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.

பனிப்புடம் - பனி பொழியும் வேளையில் புடமிட வேண்டிய பொருட்களை பனியில் வைத்து எடுத்தல்.

பட்டைப்புடம் - குறிப்பிட்ட மரத்தை துளைத்து அதனுள் புடமிடவேண்டிய பொருளை வைத்து அதே மரத்தின் தூள்களால் மூடி குறிப்பிட்ட நேரம் அல்லது சில நாட்கள் கழித்து எடுத்தல்.

இவை தவிர சூட்சுமமான புட வகைகளும் உண்டு. அவை “மனிதப்புடம்”, “குருப்புடம்” எனப்படும். அவற்றை குருமுகமாய் அறிவதே சிறப்பு.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புடம் - தீயின் அளவு.

Author: தோழி / Labels:

புடம் போடுவது என்பது சித்த மருந்தியலின் தனித்துவமான அறிவியல் என்பதை நேற்று பார்த்தோம். புடம் போடுவது என்பது உலை எனப்படும் அடுப்பு, அதில் உருவாக்கப் படும் வெப்பம் என இரண்டு கூறுகளை உள்ளடக்கிய செயல்பாடு.

வெப்பம் என்பது விறகு மற்றும் எரு அல்லது வறண்டு காய்ந்த பசுவின் சாணமான வறட்டிகள் மற்றும் தானியங்களை எரிப்பதன் மூலம் உருவாக்கப் படுகிறது. இவ்வாறு எரிக்கப் படும் தீயின் அளவுகளைக் கூட வரையறுத்திருக்கின்றனர். இந்த அளவுகள் எல்லாம் காலம் காலமாய் வாய்மொழியாவே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தரப் பட்டிருக்கிறது.

விறகினைக் கொண்டு எரிக்கும் போது உருவாகும் தீயின் அளவை நான்கு வகைகளாக குறிப்பிடுகின்றனர்.

மலர்ந்த தாமரை மலரைப் போல எரியும் தீயினை ”கமலாக்கினி” என்கின்றனர்.

துணிப் பந்தம் எரிவது போல உருவாகும் தீயினை “காடாக்கினி” என்கின்றனர்.

குவிந்த வாழைப் பூவினைப் போல எரியும் தீயினை “கதலியாக்கினி” என்கின்றனர்.

அகல் விளக்கின் சுடர் போல எரியும் தீயினை “தீபாக்கினி” என்கின்றனர்.

ஒவ்வொரு வகையான புடத்திற்கும் என்ன மாதிரியான நெருப்பு தேவை என்பது மிக முக்கியமானதாக கூறப் பட்டிருக்கிறது. இந்த பக்குவத்தில் விறகை எரித்தால் மட்டுமே புடம் போடும் செயல் வெற்றியாகும்.

எரியும் தீயின் வெப்பம் ஒரே மாதிரி சீராக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எரியும் விறகின் ஈரத்தன்மை, எரியும் சுடரின் தீவிரம், சுற்றுப் புறத்தில் வீசும் காற்று போன்ற காரணிகள் ஒரே சீரான வெப்பத்தை தராது. இதன் பொருட்டே சீரான வெப்பம் வேண்டி மற்றொரு முறையில் ஆட்டின் எரு மற்றும் மாட்டுச் சாணத்தை காய வைத்து வறட்டியாக பயன் ப்டுத்தினர்.

இந்த முறையில் வறட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான வெப்பத்தின் அளவு தீர்மானிக்கப் பட்டது.இதனை அகத்தியர் தனது “அகத்தியர் வாத சௌமியம்” என்ற நூலில் விளக்கமாய் கூறியிருக்கிறார்.

அந்த விவரங்கள் நாளை....!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...