புடம் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels:

சித்தரியலில் மருந்து தயாரிப்பு முறையில் இரசவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவில் சித்த மருந்துகள் இரண்டு வகையைச் சேர்ந்தவை. அவை முறையே உள்மருந்து, வெளி மருந்து என அறியப் படுகின்றன. இது தொடர்பாக முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அணு விஞ்ஞானம் என்பது தற்போதைய காலகட்டத்தின் மேம்பட்ட அறிவியல் துறை. இப்போது அதனை ஒட்டியே நானோ தொழில் நுட்பம் தற்போது வளர்ந்து வருகிறது. இவை எல்லாம் நவீன அறிவியல் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நமது முன்னோர்கள் இந்த தொழில் நுட்பங்களை தமது மருத்துவத்தில் கைக் கொண்டிருந்தனர் என்பது ஆச்சர்யமான செய்தி.

நமது உடல் துவங்கி நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் நுண்ணிய அணுக்களால் கட்டப் பட்ட அமைப்புகளே. இந்த அணுக்கள் சிதையுமே தவிர அழியாது. அவை வேறு அணுக்களோடு சேர்ந்து புதிய அமைப்பு அல்லது புதிய பண்புள்ளவையாக மாறுபடும். இந்த பிரபஞ்சம் துவங்கியதில் இருந்து அணுக்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. அவற்றின் அமைப்புகளே மாறுபட்டு வந்திருக்கின்றன.

சித்தரியலில் மருந்து தயாரிப்பு இந்த அணு அறிவியலின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது/பிரிப்பதன் மூலம் புதிய, மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக் கட்டமைப்பை உருவாக்குவதெ சித்த மருந்தியலின் ஆதார அடிப்படையாகும்.

எல்லாம் சரிதான்!, புடத்திற்கும், இந்த அணு அறிவியலுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இந்நேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கலாம். நாம் இதுவரை பார்த்த அணுக்களின் சேர்க்கை மற்றும் பிரித்தலை பக்குவப் படுத்துதல் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த பக்குவமாக்கும் செயலையே புடம் போடுதல் என்கின்றோம்.

புடம் போடுதல் என்பது சித்த மருந்தியலில் தனித்துவமான அறிவியல் பிரிவு. இனி வரும் நாட்களில் இந்த அறிவியலை எளிய தமிழில் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.

புடம் நாளையும் தொடரும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

Author: தோழி / Labels: ,

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அனுபவித்திருக்கக் கூடும். பேன்கள் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக கொள்ளும் இந்த பேன்கள், மிக வேகமாய் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. இவற்றை அழிக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் கூட முழுவதுமாய் அழிப்பது கொஞ்சம் சிரமமான ஒன்று.

இத்தகைய பேன் தொல்லையை எளிதில் முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முறையை புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்திய சாரம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

எண்ணவே தலையிலுள்ள பேன்கள் சாக
எடுத்துரைப்பேன் சூதமொரு கழஞ்சிவாங்கி
நண்ணவே மேனிச் சாறிட்டு ஆட்டு
நன்னூலில்தான் புரட்டி நவிலக் கேளு
திண்ணவே சிகையில் சிங்கம்போல் சொருகச்
சிரசிலுள்ள பேன்களெல்லாஞ் செத்துபோகும்
கண்ணவே போகருட கடாட்சத்தாலே
கலையறிந்து புலிப்பாணி காட்டினேனே.

- புலிப்பாணி வைத்தியசாரம்.

ஒரு கழஞ்சு பாதரசம் வாங்கி, அதன் எடைக்கு சமமான அளவு குப்பைமேனிக் கீரையின் சாற்றினை கலந்து இந்த கலவையை நன்கு அரைத்து அதனை ஒரு ஒரு தடிமனான நூலில் தோய்த்து எடுத்து அதனை தலையில் சொருகிக் கொள்ள வேண்டுமாம்.

இப்படி ஒரு சாமம் அல்லது மூன்று மணி நேரம் சொருகி வைத்திருந்தால் தலையில் உள்ள பேன்கள் எல்லாம் இறந்து விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

பேன் தொல்லைக்கு எளிமையான, அதே நேரத்தில் முழுமையான தீர்வு!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நீரழிவை போக்கும் குடிநீர்!

Author: தோழி / Labels: , ,

நமது உடலில் சுரக்கும் இன்சுலின் என்கிற ஹார்மோனின் அளவு குறையும் போது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதையே நீரழிவு என்கிறோம். பலரும் இதை ஒரு நோய் என்று குறிப்பிடுகின்றனர். நவீன மருத்துவமோ இதனை உடலில் ஏற்படும் ஒரு நிரந்தர குறைபாடு என்கிறது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு,மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிரந்தர தீர்வு என்று எதுவும் இதுவரை அறியப் படவில்லை. இத்தகைய நீரழிவு பற்றி நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.

தேரையர் தனது “தேரையர் குடிநீர்” நூலில் இந்த நீரழிவிற்கு ஒரு தீர்வினை அருளியிருக்கிறார்.

தேற்றான் விதைக் கடுக்காய் செப்புமா வாரை வித்து
ஏற்ற விளம்பிசினோ டித்தனையும் - கோற்றொடியே
பங்கொன்று காலாய் கசிவின்மோ ரில் பருக
பொங்கிவரு நீரிழிவு போம்!

- தேரையர்.

தேற்றான் கொட்டை,கடுக்காய், ஆவாரம் விதை, ஆவாரன் பிசின் என்கிற இந்த நான்கு பொருட்களையும் சம அளவு எடுத்து நீர் விட்டு ஒரு பங்காக காய்ச்சி வடித்து இறுத்த இந்த நீருடன் ஒரு பங்கிற்கு கால்பங்கு பசுவின் மோர் சேர்த்து பருகிட நீரழிவு நீங்கும் என்கிறார்.

தினமும் இரு வேளை முப்பது முதல் அறுபது மில்லி லிட்டர் குடிக்கலாம். நானறிந்த வரையில் இந்த மருத்துவ குறிப்பின் நம்பகத் தன்மை ஆய்வின் மூலம் உறுதி செய்யப் படவில்லை. எனவே தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முயற்சிக்கலாம்.

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காகிதம்,... பாத்திரம்!... பலகாரம்?

Author: தோழி / Labels: ,


காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் சீனர்களால் கண்டுபிடிக்கப் பட்டது என வரலாறு கூறுகிறது. நமக்கு அநேகமாய் பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டில்தான் காகிதம் பரிச்சயமாகி இருக்கும் என நினைக்கிறேன். இது பற்றிய தகவல் எனக்கு சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கிடலாம்.

சமீபத்தில் போகர் ஜால வித்தை நூலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பாடல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆம், போகர் தனது பாடலில் காகிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் காகிதத்தால் செய்யப் பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடுவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?, அந்த பாடல் இதுதான்....

தேரியதோர் பிரண்டதனை யரைத்துக் கொண்டு
திடமான காகிதத்தாற் றென்னைசெய்து
மாரியே பின்புறத்தில் மூன்றுபூசல்
மைந்தனே யுலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை யடுப்புபோல
கூட்டியே தொன்னையதின் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்தபின்பு
வடைபோளி யதிரசங்கள் சுட்டுவாங்கே.

- போகர்.

சற்று தடிமனான காகிததில் தொன்னை போல் செய்து கொண்டு அதில் பிரண்டை யை அரைத்து, அந்த காகித தொன்னையில் பின் புறத்தில் பூசி காய வைத்துக் கொள்ள வேண்டுமாம். இதே மூன்று தடவைகள் பூசி நன்றாக காயவைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்..

இப்படி மூன்று கல்லைக் கொண்டு அடுப்பு உண்டாக்கி நெருப்பு மூட்டி அதில் காயவைத்த இந்த காகிதத் தொன்னையை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்த பின் வடை, போளி அதிரசம் எல்லாம் சுட்டு எடுக்க முடியும் என்கிறார் போகர்.

வாய்ப்பிருப்பவர்கள் இதை பரிட்சித்துப் பார்க்கலாமே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யுகம், எத்தனை யுகம்!

Author: தோழி / Labels:

யுகம் என்பது கால அளவை குறிக்கும் ஒரு அலகு. இந்திய மரபியலில் நான்கு வகையான யுகங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அவை முறையே கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பனவாகும். இந்த யுகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால அளவைக் கொண்டது. இவற்றை ஆண்டுக் கணக்கில் வரையறுத்திருக்கின்றனர். இதன் படி தற்போது கலியுகம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த கலியுகம் முடிவடைந்த பின்னர் மீண்டும் கிருதயுகம் துவங்கும் என்கிற கருத்தாக்கம் இருக்கிறது.

மேலே சொன்னவை எல்லாம் நம்மில் பலரும் அறிந்தவையே, ஆனால் பலரும் அறிந்திராத யுகங்களைப் பற்றியதே இந்த பதிவு. அகத்தியர் தனது “அகத்தியர் வாத சௌமியம்” என்னும் நூலில் பதினெட்டு யுகங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்.

கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்
கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா
ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி
அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி
வாளடா தன்மயுகம் ஈராறுகோடி
மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி
காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன்
கனமான வீராசன் நாலைந்துதானே.

தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி
தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி
மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி
மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி
பானென்ற பணியிரதம் நான்குகோடி
பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி
வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும்
மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே.

பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு
பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம்
மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு
விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம்
தேரடா துவாபரயுகம் தனைக்கேளு
தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம்
காரடா கலியுகம் வெகு கடினமைந்தா
கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம்.

அகத்தியர் அருளிய பதினெட்டு யுகங்களின் விவரம் பின் வருமாறு....

வரியின் யுகம் பதின்னான்கு கோடி ஆண்டுகளும்,
அற்புதனார் யுகம் பத்து கோடி ஆண்டுகளும்,
தன்ம யுகம் பன்னிரெண்டு கோடி ஆண்டுகளும்,
ராசி யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும்,
சன்ய யுகம் பத்து கோடி ஆண்டுகளும்,
வீர ராசன் யுகம் இருபது கோடி ஆண்டுகளும்,
விண் யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும்,
வாயு யுகம் ஏழு கோடி ஆண்டுகளும்,
மைன யுகம் ஆறு கோடி ஆண்டுகளும்,
மணிகள் யுகம் ஆறு கோடி ஆண்டுகளும்,
அத்தே யுகம் பத்தொன்பது கோடி ஆண்டுகளும்,
பணியிரத யுகம் நான்கு கோடி ஆண்டுகளும்,
விஸ்வாசன யுகம் மூன்று கோடி ஆண்டுகளும்,
வாய்தன் யுகம் ஒரு கோடி ஆண்டுகளும்,
திரேதா யுகம் பதினேழு லட்சத்து ஒன்பதனாயிரம் ஆண்டுகளும்,
கிரேதா யுகம் இருபது லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளும்,
துபாபர யுகம் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளும்,
மிகவும் கடினமான யுகமான கலியுகம் ஒருலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகள்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!

Author: தோழி / Labels: ,

பில்லி,சூனியம் பற்றி சித்தரியல் கூறும் தகவல்களை பலவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இம் மாதிரியான மாந்திரிக முறைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் ஒரு எளிய வழியை இன்று பார்ப்போம்.

புலிப்பாணிச் சித்தர் தனது "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் பில்லி, சூனிய ஏவலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வழியை பின்வருமாறு அருளியிருக்கிறார்..

போமேடா கண்டங்கத் திரியின்மூலம்
பொங்கமுடன் காட்டு சீரகத்தின்மூலம்
வாமடா கொடியறுகின் மூலம்
வகைவகைக்கு பலம்நூறு நிறுத்திக்கொண்டு
தாமடா வெவ்வேறு பாண்டத்திலிட்டுத்
தயவான தூணிநீர் தன்னை வார்த்து
நாமடா வெந்திறக்கித் தினமொன்றாக
நலமாகத் தான்வார்க்க பில்லிஏவல்போமே.

- புலிப்பாணி வைத்தியசாரம்.

கண்டங்கத்தரியின் வேர் நூறு பலமும், காட்டு சீரகத்தின் வேர் நூறு பலமும், கொடியறுகு வேர் நூறு பலமும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். (பழந்தமிழர்கள் பயன்படுத்திய அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவை முறைகளை முந்தைய பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்). இப்படி சேகரித்த வேர்களை தனித்தனியே சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தினம் ஒரு வேராக நறுக்கி பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு அவிக்க வேண்டுமாம். ஆறிய பின்னர் இந்த நீரில் மூன்று நாட்கள் குளித்தால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது போய்விடும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சுகப்பிரசவம் ஆக வேண்டுமா!!

Author: தோழி / Labels: ,

நமது சமூக அமைப்பில் தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது, என்கிற நம்பிக்கை ஆழமாய் வேரோடியிருக்கிறது. ஒவ்வொரு பிரசவமும் ஒரு பெண்ணிற்கு மறுபிறவியைப் போன்றது என்கிற பேச்சு வழக்கு காலகாலமாய் புழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை.

நவீன அலோபதி மருத்துவத்தின் படி பிரசவம் இரண்டு பெரும் கூறுகளாய் அணுகப் படுகிறது.

1. யோனி வழிப் பிரசவம் (Normal vaginal Delivery).
இது இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் முறை.

2. சத்திர சிகிச்சை பிரசவம் (Caesarian Section).
இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்யும் முறை.

எதனால் இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாமல் போகிறது என்பதற்கு மருத்துவ ரீதியாக நிறைய காரணங்கள் முன் வைக்கப் படுகிறது.

பெண்ணின் வயது மற்றும் உடல் அமைப்பு

சூல் வித்தகம் கர்ப்பபையின் கழுத்துப்பகுதியை மறைத்திருத்தல் அல்லது மூடியிருத்தல் (Placenta praevia)

தாய்க்கு ஏற்படும் அதிக குருதிப் பெருக்கு ( Severe antepartum haemorrhage)

தாயின் குருதி அமுக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தல் (Severe pregnancy induced hypertention)

cephalopelvic disproportion (CPD)

Meconium or foetal distress

Severe intrauterine growth retardation

இது போன்ற தவிர்க்க இயலாத சூழல்களில் தாய் மற்றும் சேயின் உயிரை காப்பாற்றிட மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்கின்றனர். இந்த முறையை சிசேரியன் சத்திர சிகிச்சை (Emergency caesarian section) என்பர்.

நவீன அறிவியலுக்கு இவை எல்லாம் சரிதான், ஆனால் அலோபதி மருத்துவம் வளராத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது தாய்மார்கள் இது மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் நிச்சயம் எதிர் கொண்டிருப்பார்கள். அதற்கு நம் பெரியவர்கள் என்ன மாதிரியான தீர்வினை வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றியதே இந்த பதிவு.

நான் தேடிய வரையில் சத்திர சிகிச்சை பிரசவம் பற்றி சித்தர் பாடல்களில் குறிப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை. ஆயினும் இயற்கை பிரசவம் தடைப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அப்படியான சூழல்களில் என்ன செய்திட வேண்டும் என்கிற தீர்வுகளும் அந்த பாடல்களில் இருக்கின்றது.

அந்த வகையில் அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு சில குறிப்புகளை இன்று பார்க்கலாம்..

காணடா பிறவியது னோக்குதற்கு
கருவாக சுண்டையுடன் வடவேர்வாங்கி
பூணடா சற்குருவை தியானம்பண்ணி
புத்தியுடன் வளையமிட்டு மஞ்சள்சாத்தி
பேணடா கால்விரலில் பூட்டினாக்கால்
பிள்ளையது தான்பிறக்கும் பெருமையாக
பாரப்பா யின்னமொன்று சொல்வேன்கேளு
பரிதான பெரண்டைவேர் கொன்னைவேரும்
நேரப்பா காடியிலே அரைத்துமைந்தா
நீமகனே தாங்குடுக்க பிறவினோக்குங்
காரப்பா அதிமதுரம் பொடியேசெய்து
கருணையுடன் தேனதிலே கொடுத்துப்பாரு
பாரப்பா பிறவியது தானேனோக்கி
பிள்ளையுமே சுகமாகப் பெறுவாள்பாரே.

- அகத்தியர்.

சுண்டை என்னும் மூலிகையின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை எடுத்து வந்து குருவருளை வேண்டி வணங்கி, வளையமாக செய்து மஞ்சள் பூசி கருவுற்ற பெண்ணின் கால் விரலில் அணிந்தால் குழந்தை சுகமாக பிறக்குமாம்.
அதே போல பிரண்டை வேரும் கொன்னை வேரும் காடி விட்டு அரைத்து கருவுற்ற பெண்ணுக்குக் கொடுக்க குழந்தை சுகமாக பிறக்குமாம்.

அதிமதுரத்தை பொடி செய்து தேனில் குழைத்து கொடுக்க குழந்தை சுகமாக பிறக்கும் என்கிறார்.

ஆச்சர்யமான அதே நேரத்தில் சுலபமான வழிமுறைகள்தானே!, இவை எல்லாம் என்னுடைய துறை சார்ந்தவை என்பதால் எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால் இத்தகைய தகவல்களை எல்லாம் தொகுத்து ஆவணமாக்கி அதன் பேரில் ஆய்வு செய்திட வேண்டும் என தீர்மானித்திருக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் வாங்கிய சாபம்!

Author: தோழி / Labels: ,


சித்தர் பெருமக்களில் மூத்தவரும், சிறப்பானவருமான அகத்தியரே சாபம் வாங்கிய தகவலை, கோரக்கர் தான் அருளிய “நமனாச திறவுகோல்” என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

வைத்ததொரு நூல்தன்னில் வெளியாய்
எல்லாம் ஓதிவைத்தோம் புவிமனுச்சந் தேகம்தீர
மெய்த்தவநூல் மேதினியில் அறியா வண்ணம்
மறைவாக வகத்தியரும் மறைத்த தாலே
உய்வாக என்பாலாம் சித்த னார்கள்
உரிமையிலா வகத்தியருக்குச் சாபம் ஈந்தே
துய்மையுடன் வைத்தநூல் இவர்கண் ணுக்குத்
தோன்றாமல் போகுங்கண் தெரியா தென்றே

என்றேகிச் சாபமிட்ட போதே நூலும்
இழிவாகப் பாறையைப்போல் திரண்ட தங்கே
நன்றாகப் பாறையிடம் சென்றோர்க் கெல்லாம்
நகருமது தெளிவாக நூலும் தோன்றும்
நின்றாலும் அகத்தியரின் கண்ணுக் கின்நூல்
நிலவரமாய்த் தோற்றிடவே தில்லை யில்லை
வென்றிடவே நூலிருக்கும் பாறை யெய்தி
விகற்பமற ரவிமேகலை யுரைத்த மந்திரம்
-கோரக்கர்.

உலகில் இருக்கும் மக்கள் அனைவரின் சந்தேகங்களையும் தீர்க்கும் நூல் ஒன்றினை தான் எழுதியிருப்பதாக கோரக்கர் குறிப்பிடுகிறார். அத்தனை ரகசியங்களையும் வெளிப்படையாக எழுதியதனால் அந்த நூலை அகத்தியர் பூமியில் உள்ளவர்களுக்கு கிடைக்காமல் மறைத்து வைத்தாராம். இதை அறிந்த மற்ற சித்தர் பெருமக்கள் அந்த நூல் அகத்தியர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போகட்டும் என சாபம் கொடுத்தார்கள் என குறிப்பிடுகிறார்.

சித்தர் பெருமக்களின் சாபத்தினால் அந்த நூலானது பாறைபோல் திரண்டு நின்றது என்றும், அந்த நூலினை படிக்க விரும்புவோர் அந்த பாறை அருகினில் சென்றால் பாறை விலகி வழிவிட அந்த நூல் கண்ணிற்குத் தெரியும், அதை படிக்கலாம் என்கிறார். ஆனால் அகத்தியர் அந்த பாறை அருகில் சென்று பாறை விலகினாலும் நூல் அவரது கண்ணுக்குத் தெரியாது என்கிறார் கோரக்கர்.

இத்தனை அற்புதமான நூல் இருக்கு இருக்கும் இடத்தையும், பாறையை அடையும் வழியையும். அந்த பாறையின் அருகில் சென்றதும் சொல்லவேண்டிய மந்திரம் பற்றிய விபரங்களையும் கோரக்கர் தனது ரவிமேகலை என்னும் நூலில் சொல்லியிருப்பதாக சொல்கிறார்.

இத்தனை ரகசியங்கள் அடங்கிய இந்த ரவிமேகலை என்னும் கோரக்கர் நூலை விரைவில் மின்னூலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திர காயகற்பம்!

Author: தோழி / Labels: , ,

மரணம்! நாம் பிறந்த அன்றே தீர்மானிக்கப் பட்ட ஒன்று. ஆனாலும் கூட நம்மில் யாரும் இதை விரும்புவதேயில்லை. மரணத்தை வெல்லவும், உயிரை தக்க வைக்கவுமே காலம் காலமாய் மனித குலம் போராடி வருகிறது.

இத்தகைய மரணத்தை வெல்லும் கலையில் குறிப்பிடத் தக்க அளவு சாதனைகளைச் செய்தவர்கள் நம்து சித்தர் பெருமக்கள். தங்களுடைய தெளிவுகளை, அனுபவங்களைத் தம்முடைய சீடர்கள் வழியே விட்டுச் சென்றிருக்கின்றனர். நாம்தான் அவற்றை தேடித் தெளியவோ அல்லது பயன்படுத்தவோ முனையவில்லை.

இப்படி மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் வழிவகையினை சித்தர்கள் காயகற்பம் என்று குறிப்பிடுகின்றனர். இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள்/தேவையுள்ளோர் அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

சித்தர் பெருமக்கள் இரண்டு வகையான காயகற்பங்களை அருளியிருக்கின்றனர். அவை மருத்துவ காயகற்பங்கள், யோக காயகற்பங்கள் என அறியப் படுகின்றன.

அத்தகைய யோக காயற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம். கோரக்கர் தனது "ரவிமேகலை" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார். இந்த முறை மந்திர ஜெபம் மூலம் செய்யப்படும் ஒரு காய கற்ப முறையாகும்.

பூசித்திடு மூலமுதல் மந்திரத்தைப் போற்றி
புகன்றிடுவேன் லெட்சமுரு ஆவர்த்தி கொள்போற்றி
காப்பதற்கு ஆயுள்விருத்தி மூலமந்திர மோது
காலனற்றுப் போய்விடுவா னில்லைநாளுந் தீது
ஏர்ப்பதற்காய் இன்னமுண்டு இயம்பிடுவேன் மீது
இன்பமுடன் மந்திர செபங்கள் செய் தப்பாது
பூர்த்திசெய் துகந்துகண்டு கொள்வாய் மூலத்தாது
புன்மலத்தில் ஆசையற்றுப் போய்விடும்பொய் சூது
நேர்த்தியாப்பின் அபமிருந்து மூலஞ்சொல்நீ சாது
நிலைத்திடுமுன் காயமாவி இல்லையேமன வாது.

-கோரக்கர்.

ஆயுள் விருத்தியும், உடலுக்கு பாதுகாப்பும் கிடைக்க தான் அருளும் மூல மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்தால் போதும் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் எமன் பயம் இனி இல்லாது போகும் என்றும் கூறுகிறார்.

மந்திரங்களை செபிப்பது ஒரு போதும் தவறாகாது, இந்த உண்மையை செபத்தை பூர்த்தி செய்வதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என்கிறார். இந்த மந்திரத்தை செபம் செய்வதால் மனதின் ஆசைகள், பொய் சூது நீங்குமாம்.

எல்லாம் சரிதான், உடல் அழியாது காத்து நிலைத்திருக்க செய்யும் மூலமந்திரம் என்ன?

"ரெக்ஷிகியே நமோ நமா பார்வதி
நீபஞ்சா க்ஷிரி ரிங் ரிங் குரு
தக்ஷணி நகு லக் ஸ்ரீரீங்
க க லுக் டங் லுங்
அக்ஷரி ஹரி பிரம விஷ்ணு
ஆத்ம ஸம்ரெக்ஷ ஆதார பீஜ
கட கட மிருத் விநாசக
இட் இட் இமாம் இமாஞ்ச
இக் ருக் மம துயிருள் நீடித்தே நமஹா."

இந்த மந்திரத்தை கிழக்கு நோக்கியிருந்து லட்சம் முறை செபிக்க மந்திரம் சித்தியாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வாலை ஞான பூஜாவிதி - மின்நூல்.

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்து மின் ஊடகத்தில் பகிர்ந்திடும் தொடர் முயற்சியில், பன்னிரெண்டாவது படைப்பாக போகர் அருளிய "வாலை ஞான பூஜாவிதி" என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

சித்தர் பெருமக்களின் வரிசையில் சிறப்பான இடத்தில் வைத்துப் போற்றப் படும் போகநாதர் அருளிய இந்த நூலானது வாலைத் தெய்வத்தை வணங்கிடும் வழி வகைகளை விளக்கிக் கூறுகிறது. சித்தர் பெருமக்கள் அனைவரும் வழிபட்ட இந்த வாலைத் தெய்வம் பத்து வயதுடைய சிறுமியின் அம்சம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சித்தமெல்லாம் சிவமாய் திளைத்திருக்க ஆதி சக்தியின் அருளும்,ஆசியும் அவசியம் என்பதை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அத்தகைய ஆதி சக்தியின் அம்சம்தான் இந்த வாலைத் தெய்வம். இந்த தெய்வத்தை வணங்கி இவளின் அருள் பெற்றவர்களே சித்த நிலைக்கு உயரமுடியும் என ஏராளமான குறிப்புகள் நமக்கு காணக் கிடைக்கின்றன.பட உதவி திரு . கிமு அவர்கள்.

போகர் இந்த நூலில் வாலைதெய்வதின் வழிபாட்டின் முக்கியத்துவத்தை பின் வருமாறு விளக்குகிறார்.

"இந்தவிதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக்கறிக் கையினால்
சந்தோஷ வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே"

நமது உடலில், உணர்வில் உறைந்திருக்கும் தெய்வமாகிய வாலையை அறியாமல் மனிதர்கள் தமது வாழ்நாளை வீணடித்து இறந்தும் விடுகிறார்கள் என்கிறார் போகர். இத்தனை சிறப்பு வாய்ந்த வாலையை சித்தர் பெருமக்கள் அகப்புற வழிகளில் பூசை செய்திருக்கின்றனர்.

இந்த நூலில் வாலை தெய்வத்தை வழிபடுவதற்குத் தேவையான யந்திர தயாரிப்பு முறை, அதற்கான மூல மந்திரங்கள் அவற்றின் பிரயோக முறைகள் என அனைத்தும் விரிவாக விளக்கப் பட்டிருக்கிறது. வாலை தெய்வத்தின் அருள் பெற விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

தமிழ் அறிந்த அனைவரும் இந்த அரிய நூலின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது. எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஆர்வம் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

எனது மேலான குருவினை பணிந்து இந்த முயற்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.com

தொடர்புக்கு..
siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பூப்படைதல் தள்ளிப் போனால்...

Author: தோழி / Labels: ,

பண்டைய தமிழ் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கையை அவர்களின் வயதை வைத்து எட்டு பருவங்களாக பிரித்து கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு பருவத்திலும் பெண்கள் கடந்து செல்லக் கூடிய வாழ்வியல் கூறுகளை அடிப்படையாக வைத்து இந்த வகைப் பாட்டினை நமது பெரியவர்கள் வகுத்திருக்கின்றனர்.

பிறந்ததில் இருந்து ஏழு வயது வரையிலான பெண்னை பேதை என்றும், எட்டு துவங்கி பதினோரு வயது வரை பெதும்பை என்றும், பன்னிரண்டு துவங்கி பதின்மூன்று வயதுவரை மங்கை என்றும், பதினான்கு வயதிலிருந்து பத்தொன்பது வயது வரையில் மடந்தை என்றும், இருபது வயது துவங்கி இருபத்தி ஐந்து வயது வரையில் அரிவை என்றும், இருபத்தியாறு துவங்கி முப்பத்தி ஒன்று வயது வரையிலான பெண்களை தெரிவை என்றும். முப்பத்தி இரண்டு வயதில் துவங்கி நாற்பது வயது வரையிலான பெண்களை பேரிளம் பெண்கள் என்றும், நாற்பதைக் கடந்தவர்களை விருத்தை என்றும் வகைப் படுத்திக் கூறியிருக்கின்றனர்.

இதில் இன்று பன்னிரெண்டு வயது முதல் பதின்மூன்று வயதுவரையிலான மங்கைப் பருவத்து வாழ்வியல் கூறினையும் அதற்கான சித்தர் பெருமக்களின் தெளிவு ஒன்றினையும் பார்ப்போம். இந்த கால கட்டத்தில்தான் ஒரு பெண் பருவத்திற்கு வருகிறாள். இதையே பூப்பெய்துதல் என்கிறோம். இது இயல்பாய் உடலியலில் ஏற்படும் ஒரு மாற்றம் என்றாலும் கூட, இந்த கால கட்டத்தில் பெண்ணானவள் உளவியல் ரீதியாகவும் பல குழப்பங்களுக்கு ஆளாகிறாள். எனவேதான் இந்த காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் மிகவும் கவனமாய் கையாள வேண்டும்.

இந்த பூப்பெய்துதல் அல்லது முதல் முறையாக மாதவிலக்கு உண்டாவது என்பது சில பெண்களுக்கு தள்ளிப் போகலாம் அல்லது வராமலும் கூட போகலாம். இது அந்தந்த பெண் பிள்ளைகளின் உடலியல் ரீதியான கோளாறுகளினால் தள்ளிப் போகும். இதற்கு தற்போது அலோபதி மருத்துவத்தில் நிறைய பலன் தரும் மருந்துகள் இருக்கின்றன. எனினும் இவை பக்க விளைவைத் தரக் கூடியவை.

இப்படி பூப்பெய்துதல் தள்ளிப் போனால் அந்த பெண்ணும், அவளது பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினைக்கு அகத்தியர் ஒரு எளிய தீர்வினை தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.

போமப்பா யின்னமொரு புதுமைகேளு
பெண்களிலே புத்தியறியா திருந்தால்
நாமப்பா சொல்லுகிறோங் காரணந்தன்னை
நாட்டமுடன் வித்துநீர் யிறக்கிக்கொண்டு
ஓமப்பா பெருங்காய முரைத்துக்கொண்டால்
உத்தமனே பெண்ருதுவாய் உண்மையாகும்.

- அகதியர்.

பூப்படைதல் தாமதமாவதற்கு வித்து நீர் கீழிறங்கி கொண்டு இருப்பதே காரணமாய் இருக்கும் என்கிறார். வித்து நீர் என்பதை தற்போதைய அறிவியலின் படி ஹார்மோன் குளறு படிக்கு இணையாக வைத்துப் பார்க்கலாம். இப்படியான பெண்களுக்கு பெருங்காயத்தை உரைத்துக் கொடுத்தால் இந்த குறை நீங்கி பூப்படைதல் நிகழும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எட்டு நாள் வரை பசியில்லாமல் இருக்க...

Author: தோழி / Labels:


பசி மனித குலத்தின் தீராத நோய்களில் ஒன்றாக குறிப்பிடப் படுகிறது. இந்த பசிதான் மனித வாழ்க்கையின் அச்சாக இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய புற வாழ்க்கையைத் தாண்டிய அக வாழ்க்கையை முன்னிலைப் படுத்திய சித்தர் பெருமக்கள் இந்த பசியை வென்றிட பல்வேறு உபாயங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.

போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் எட்டு நாள் வரை பசியே இல்லாமல் இருந்திட வைக்கும் ஒரு உபாயத்தை அருளி இருக்கிறார்.

நாட்டிலே உனைமதிக்க யின்னோர் வித்தை
நவிலுகிறேன் மணவனே நவிலக்கேளு
வீட்டிலே எட்டுநா ளன்னாகாரம்
வேண்டாமற் புசியாம லிருக்கலாகும்
ஏட்டிலே புளுகினா னென்று சொல்லி
யேசாதே நாயுருவி விரையுழக்கு
வாட்டியே பசும்பாலை விட்டுக்கிண்டி
வருந்தினவன் எட்டுநா ளிருக்கலாமே.

நாயுருவி செடியின் விதையை ஆழாக்கு அளவு சேகரிக்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அவற்றை தூய்மை செய்து, அடுப்பில் வாட்டிய பின்னர் அத்துடன் பசும்பாலைச் சேர்த்து கிண்டி வேக வைத்து அதனை உண்டால் எட்டு நாள் வரையில் பசி எடுக்காது என்கிறார். இது பொய் இல்லை உண்மை என உறுதி கூறுகிறார்.

இதன் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை. இப்படி ஏட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய அரிய தகவல்களை ஆய்வு செய்து, இவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்திட அரசும், ஆர்வமுள்ளவர்களும் முன் வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகரின் மூக்குப் பொடி!

Author: தோழி / Labels: ,

மூக்குப் பொடி பற்றி தற்போதைய தலைமுறையினருக்கு, அதிலும் குறிப்பாக நகர்ப்புற இளையோருக்கு பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றிரண்டு தசாப்தங்களுக்கு முன் வரை மூக்குப் பொடியை ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானவர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர்.

நமது மூக்கின் உள்ளே அநேக வர்மப் புள்ளிகள் உள்ளன. இவற்றை கண்ணாடி வர்மம் என வர்ம நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. காரத் தன்மை உடைய பொருள்களால் தயாரிக்கப் படும் மூக்குப் பொடியினை உறிஞ்சும் போது இந்த வர்மப் புள்ளிகள் தூண்டப் பட்டு மூளையில் ஒரு விதமான சிலிர்ப்பினை உண்டாக்குகின்றன. இதனால் உண்டாகும் கிறுகிறுப்புக்கு, மூக்குப் பொடியை பயன்படுத்துபவர் நாள் போக்கில் அடிமையாகி விடுவார்கள்.

பலன் என்று பார்த்தால் இந்த சிலிர்ப்பு உணர்வினால் உண்டாகும் தும்மலினால் மூக்கில் சேர்ந்திருக்கும் நீர், நுண்ணியியிரிகள் வெளித் தள்ளப் படுகிறது. புகைப் பிடிப்பது, புகையிலை மெல்லுவதைப் போல உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கமாக மருத்துவம் இதை வகைப் படுத்துகிறது. உயிர் கொல்லி நோயான புற்று நோயை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கக் கூடியது இந்த பழக்கம்.

ஆனால் போகர் இந்த மூக்குப் பொடியைப் பற்றியும் அதன் பலனைப் பற்றியும் வேறுவிதமாக கூறியிருக்கிறார். தனது “போகர் 7000” என்ற நூலில் உள்ள ஒரு பாடல் பின்வருமாறு...

போடவே மூக்குப் பொடியைக்கேளு
பெரிதான வறட்டிசுண்டி வேரைவாங்கி
நீடவே நிழல்உலர்த்திப் பொடியாய்ப்பண்ணி
நெரிசாய சீலைவடி கட்டிக்கொண்டு
தேடவே குடுக்கைதனில் அடைத்துவைத்துச்
சிறியதாக நுனிவிரலில் பிடித்துகொண்டு
வாடவே வாசியோடு உற்றிவாங்கி
மவுனமாம் சிகரத்தால் ரேசிப்பாயே

ரேசித்தால் நிராகாரத் தடைப்புநீங்கி
நின்மலமாம் அதீதத்தின் ஒளியோமீறும்
தூசித்தால் சுழிமுனைதான் எட்டிட்டுஏறும்
தூசான அழுக்கெல்லாம் சிந்திவீழும்
காசித்த கபாலமது கெட்டியாகும்
கண்ஒளிதான் கேசரத்தில் நின்றுபார்க்கில்
ஆசித்த வடுக்காறு முருவிக்காணும்
அந்தரத்தின் ஒளியெல்லாம் அருகுமாமே.

- போகர்.

வறட்டி சுண்டி வேரைக் கொண்டுவந்து நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதை சீலை வடி கட்டி குடுக்கையில் அடைத்துக் கொள்ளவேண்டுமாம். இப்படி தயார் செய்த மூக்குப் பொடியினை அவ்வப்போது நுனி விரல்களினால் பிடியளவு எடுத்து சுவாசத்துடன் உறிஞ்சிட வேண்டும் என்கிறார்.

இப்படி உறிஞ்சி வந்தால் நிர்மலமான அதீதத்தின் ஒளிமீறுமாம். மேலும் தூசான அழுக்கெல்லாம் சிந்தி வீழுமாம். கபாலம் இறுகி கெட்டியாகும் என்கிறார். முக்கியமாய் கேசரத்தில் நின்று பார்த்தால் எல்லாம் கண்களுக்கு தோன்ற ஆரம்பிக்குமாம். அந்தரத்தின் ஒளி எல்லாம் கூட உணர முடியும் என்கிறார் போகர்.

ஆச்சர்யமான தகவல்தானே!, மேலதிக ஆராய்ச்சிகள் தேவைப் படுகிற தகவல்களில் இதுவும் ஒன்று.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தொலைவில் நடப்பதை அறியும் “மை”!

Author: தோழி / Labels:

ஏதேனும் தொலைந்து போய்விட்டால் மை போட்டு பார்த்து கண்டுபிடிக்க மாந்திரிகர்களையும், தாந்திரிகளையும் அணுகுவது முற் காலத்தில் சர்வசாதாரணமான ஒன்று. அவர்களும் வெற்றிலை, முட்டை என பலவற்றில் ஏதோ ஒரு மையை பூசி அதைப் பார்த்து காணாமல் போன பொருள் எங்கே எந்த திசையில் இருப்பதாக சொல்லுவார்கள். இதன் உண்மைத் தன்மை அல்லது நம்பகத் தன்மை கேள்விக்குரியது. பகுத்தறிவாளர்களினால் ஏமாற்று வேலை என கேலி செய்யப்படும் ஒன்றாக மாறி தற்போது அநேகமாய் அழிந்து விட்ட ஒரு கலை இது.

நிதர்சனம் இப்படி இருக்க அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்கிற நூலில் இந்த மையை தயாரிப்பது பற்றியும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

பார்க்கவே யின்னமொரு சூட்சங்கேளு
பரமான மூலியடா யார்தான்காண்பார்
யேற்கவே சொல்லுகிறேன் புலத்தியாகேள்
யிளசான தாமரையின் கொடியை வாங்கி
தீற்றமுட னக்கொடியை வுலர்த்திநல்ல
சிவந்தமட்டுக் குள்ளிருத்தி மேலேசுத்தி
சேர்க்கையுடன் நெய்நனைத்து தீபமேத்தி
தீபமதால் யெரிந்துஅது கரியாங்காணே.

காணவே கரியெடுத்து கல்வத்திட்டு
கருவான யேரண்டத் தயிலத்தாலே
பூணவே யீராறு சாமமாட்டி
புத்தியுடன் அதுக்குநிகர் சவ்வாதுசேர்த்து
தோணவே மத்தித்து சிமிழில்வைத்து
சுத்தமுடன் சற்குருவைத் தியானம்பண்ணி
பேணவே புருவனடுச் சுழினைமீது
பிலமான மையெடுத்து திலர்தம்போடே.

போடப்பா திலர்தமது போடும்போது
திரணமாய் நின்றுமன தறிவால்போட்டால்
சூடப்பா கொண்டேகி கண்திறந்து
தொலைதூரங் காணுமடா சுழிக்கண்ணாட்டம்
நாடப்பா தூரதிஷ்டி விபரமெல்லாம்
நயனமதில் தோணுமடா நந்திவாழ்வு
தேடப்பா அவ்வாழ்வு யோகவாழ்வு
சிவசிவா சிவயோக வாழ்வில்நில்லே.

- அகத்தியர்.

தாமரை செடியின் கொடியை எடுத்து வெய்யிலில் காயவைத்து எடுத்து, அதை சிவப்புநிற துணியில் சுற்றி திரிபோல் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த திரியை விளக்கில் இட்டு பசு நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம் அப்படி தீபமேற்றினால் அந்த திரி எரிந்து கரியாகி இருக்குமாம். அந்த கரியை எடுத்து கல்வத்தில் இட்டு ஏரண்டத் தைலம் விட்டு பன்னிரெண்டு சாமம் அரைத்து எடுத்து பிறகு அதற்கு சம அளவில் சவ்வாது சேர்த்து மத்தித்து சிமிழில் சேகரித்து கொள்ள வேண்டும் என்கிறார்.

தேவை ஏற்படும் போது புருவ மத்தியில் அந்த மையைக் கொண்டு திலகம் இட்டு கொள்ள வேண்டுமாம். இப்படி செய்யும் போது எது தேவையோ அதனை மனதால் நினைத்து உணர்ந்து திலகமிட்டால், உட்கண் திறந்து தொலை தூரத்தில் நடப்பவைகள் எல்லாம் மனக்கண்னில் தோன்றுமாம். அப்படி தோன்றும் போது அந்த தகவல் அறிவைக் கொண்டு யோக வாழ்வும் அதற்கு தேவையானவற்றையும் தேடி அறிந்து சிவ யோக வாழ்வைக் கடைப்பிடிக்கலாமாம் என்கிறார் அகத்தியர்.

சுவாரசியமான தகவல்தானே!... ஆர்வமும், குருவருளும் கூடியவர்கள் முயற்சித்துப் பார்க்கலாமே!!

குறிப்பு :- புதிய தமிழ் திரட்டியான “யுடான்ஸ்”, இந்த வாரத்திற்கான நட்சத்திர பதிவாக நமது சித்தர்கள் ராச்சியத்தை தெரிந்தெடுத்திருக்கின்றனர். இதற்காக யூடான்ஸ் திரட்டியின் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வியர்வை நாற்றம்!

Author: தோழி / Labels: ,

ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசம் இல்லாமல், வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிறவர்கள் சந்திக்கிற ஒரு உடலியல் நிகழ்வு வியர்வை. இந்த வியர்வை என்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று, ஏனெனில் மனித உடலின் கழிவுகள் வியர்வை வழியாகவும் வெளியேறுகின்றன. இந்த வியர்வையின் நாற்றம் தவிர்க்க இயலாதது. சிலருடைய உடலில் இருந்து வெளியாகும் வியர்வை கற்றாழை மணத்துடன் மிகுந்த துர் நாற்றத்துடன், பக்கத்திலிருப்பவர்கள் முகம்சுழிக்கும் அளவிற்கு இருக்கும்.

தற்போது இதனை தவிர்க்க நிறைய வாசனாதி திரவியங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் கூட, அவை எல்லாம் செயற்கையான வேதிப் பொருட்களில் இருந்து தயாரிக்கப் படுபவை. இதனால் தற்காலிகமாக வியர்வை நாற்றத்தை தவிர்க்கலாமே ஒழிய நீண்டகால நோக்கில் உடலுக்கு தீங்கே விளையும்.

இத்தகைய வியர்வை நாற்றத்தைப் போக்க புலிப்பாணிச் சித்தர் தனது புலிப்பாணி வைத்ய சாரம் என்னும் நூலில் ஒரு எளிய வழியைக் குறிப்பிடுகிறார்..

உலகினிலே மானிடர்க்குக் கற்றாழை நாற்றம்
ஓடிவிடச் சாந்தொன்று உரைக்கைக் கேளு
நல்நாரி கரந்தையுட வேருங்கூட
நன்னாரி வேருடனே முத்தக்காசு
சூலமிலகுங் கஸ்தூரி மஞ்சள் தானும் கூட்டியே
வகைவகைக்கு வராக னைந்து
கலகமிலை யரைத்ததனை முகட்டில் பூசக்
கண்டோடுங் கற்றாழை நாற்றமே.

-புலிப்பாணிச் சித்தர்

நல்நாரி கரந்தை வேர், நன்னாரி வேர், கஸ்தூரி மஞ்சள் ஆகியவை ஒவ்வொன்றும் ஐந்து வராகன் எடை அளவு எடுத்து அவற்றை சேர்த்து அரைத்து சாந்து பக்குவத்தில் கக்கத்தில் பூசிக்கொள்ள உடலில் வீசும் துர்நாற்றம் அற்று விடும் என்கிறார் புலிப்பாணி.

இந்த சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவு. இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய மிருக வசியம்!

Author: தோழி / Labels: ,

இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர்.

இம்மாதிரியான இடங்களில் மனித சஞ்சாரம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் விலங்குகள்?

வனத்தில் நிறைந்திருக்கும் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கென சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். இன்றும் கூட காடுகளில் வாழ்ந்திருக்கும் பழங்குடியினர் இம்மாதிரியான சில வழிமுறைகளை கைக் கொண்டு காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

அகத்தியரும் கூட தனது அகத்தியர் பரிபூரணம் என்கிற நூலில் இம் மாதிரியான ஒரு வசிய உத்தியை அருளியிருக்கிறார். அதனை இன்று பார்ப்போம்.

இருந்துநிலை தானறிந்து யோகஞ்செய்ய
யேகாந்த புலத்தியனே ஒன்றுகேளு
வறிந்துநின்ற மிருகமெல்லாம் வசியமாக
மார்க்கமுடன் மந்திரந்தான் ஒன்றுகேளு
அருந்தவமாய்ச் சொல்லுகிறோம் நன்றாய்க்கேளு
அக்உக் கென்றுமிக அழுத்தியூது
பரந்துவரும் மிருகமெல்லாம் அசந்துபோகும்
பாலகனே சுழிமுனையில் பதிவாய்நில்லே.

- அகத்தியர் பரிபூரணம்.

இந்த பாடல் அகத்தியர் தனது சீடனான புலத்தியருக்கு சொல்வதைப் போல அமைந்துள்ளது. மனதை ஒரு நிலைப் படுத்தி சப்தமாக அக் உக் என்று அழுத்தி உச்சரிக்க மிருகங்கள் எல்லாம் வசியமாகும் என்கிறார். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் எந்த வகையான வன விலங்குகளிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாமாம்.

இம் மாதிரியான ஆச்சர்யமான தகவல்கள் எல்லாம் ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகரும், கதிர்காமமும்!

Author: தோழி / Labels: ,

இலங்கையின் தென் கிழக்கு கோடியில் உள்ள ஊர் கதிர்காமம். பழைய நூல்களில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இதை குறிப்பிடப் படுவதுண்டு. அருணகிரி நாதரும் கூட தனது திருப்புகழில் பதினான்கு பாடல்களை கதிர்காமத்தில் உறையும் கந்தன் மீது பாடியிருக்கிறார். இந்த கோவில் பதினோராம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!

-அருணகிரிநாதர்

அம்பாந்தோட்டை மாவட்டதில் திசமாறகம என்னும் இடத்தில், மாணிக்க கங்கை என்னும் ஆற்றை ஒட்டி இந்த ஆலயம் அமைந்துள்ளது. சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு பழமை வாய்ந்த தமிழ் கடவுளின் கோவில் எந்த வித இடையூறும் இல்லாமல் இருந்து வருவது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், பவுத்தர்கள் மூவருக்கும் பொதுவானதாக இந்த கோவில் இருந்து வருகிறது.எல்லா மதங்களின் விழாக்களும் இங்கே பாகுபாடின்றி கொண்டாடப் படுகிறது.இங்கு இறைவனுக்கு பூசை செய்பவர் வாயில் துணியை கட்டிக் கொண்டுதான் பூசை செய்வார்.எந்த வித மந்திர உச்சாடனங்களும் இங்கே கிடையாது. இப்படி பூசை செய்பவரை “கப்புறாளை” என்று அழைக்கின்றனர்.

ஆச்சர்யத்தில் எல்லாம் ஆச்சர்யமாக இங்கே முருகனுக்கு சிலை கிடையாது. வள்ளி,தேவயானை சமேதராக முருகன் அருள்பாலிக்கும் ஓவியம் தீட்டப் பட்ட ஒரு திரை மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும். அந்த திரைக்கே பூசைகள் நடைபெறும்.

அப்படியானால் இந்த திரைக்கு பின்னால் என்னதான் இருக்கிறது? இந்த பதிவின் நோக்கமே அதை விளக்குவதுதான்...

இந்த திரைக்குப் பின்னால் ஒரு சிறிய அறை இருக்கிறது. பூசை செய்பவரைத் தவிர வேறு யாருக்கும் இங்கே அனுமதி இல்லை. காற்றோ, வெளிச்சமோ நுழையாத இந்த அறையில், ஒரு பேழையில் அறுகோண யந்திரம் ஒன்று உள்ளது. இந்த யந்திரம் சூட்சுமமான சக்தி வாய்ந்தது என்கின்றனர் . இதனை உருவாக்கியவர் போகர் என இக்கோவிலில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் பழநி தண்டாயுதபாணி சுவாமியை உருவாக்க பயன்படுத்திய அதே வகையான நவபாஷாணத்தால் இந்த யந்திரமும் செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது. அந்த யந்திரத்தின் படம் கீழே....

இந்த யந்திரமே கதிர்காமத்து கந்தனாக உருவகிக்கப் பட்டு எல்லா மதத்தினராலும் காலம் காலமாய் வணங்கப் பட்டு வருகிறது. விழாக் காலங்களில் மட்டும் இந்த யந்திரம் அடங்கிய பேழையை யானை மீது வைத்து ஊர்வலமாய் கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கோவிலின் அருகேதான் போகரும் சமாதி கொண்டிருப்பதாக செவிவழி தகவல்கள் கூறுகின்றன.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திருமால்... அனந்த சயனம்.... யோக நித்திரை!!

Author: தோழி / Labels: ,

வைணவக் கோவில்களில் பாம்பணையின் மீது பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் திருக்கோலத்தை தரிசித்திருப்பீர்கள். அனந்த சயனத்தில் இறைவன் இருப்பதாக இதை சொல்வார்கள். அனந்த சயனம் என்பது சமஸ்கிருத வார்த்தை, இதனை பாம்பின் மீது உறங்குவதாக அர்த்தப் படுத்தலாம்.

வலது பக்கமாய் ஒருக்களித்த நிலையில், கால்களை நீட்டி வலது கையை தலைக்கு கொடுத்து இமைகளை முக்கால் பங்கு மூடிய நிலையில், விழிகள் மேலே சொருகிவாறு திருமாலின் அனந்த சயன சிலை வடிக்கப் பட்டிருக்கும். இது தனித்துவம் வாய்ந்த ஒரு நிலை. இதற்கு பல புராண கதைகள் சொல்லலாம். நமக்கு அவை எல்லாம் தேவையில்லை.

ஆனால், என்னுடைய சிறிய அறிவின் தெளிவில் திருமாலின் இந்த படுக்கை கோலமானது, சித்தரியல் விளக்கும் யோக நித்திரையுடன் தொடர்புடையதாக எண்ணத் தோன்றுகிறது. இப்படி யோசிக்க காரணமாய் அமைந்தது இந்த பாடல்தான். அகத்தியர் தனது "அகத்தியர் பூரண சூத்திரம் 216" என்ற நூலில் யோக நித்திரை பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.

புனிதமாய் உறங்கவென்றால் வலக்கை மேலே
பூட்டாகக் கால்நீட்டிப் பூரணத்தை நோக்கி
அனிதமாய்க் கேசரத்தில் மனதை வைத்து
அப்பனே லலாடத்டதே தூங்க வேணும்
மனிதனாய்ப் பிறந்தாக்கால் சாகாக் கல்வி
வாசிக்குட் சிவமோடு வாழ்க்கை சேர்வான்
செனிதமாஞ்ச் சண்டாளாப் பிறவியோர்கள்
சித்திறந்து செனிப்பார்கள் செகத்தில்தானே.

- அகத்தியர்.

அதாவது, வலது கையை ஊன்றி அதில் தலையை வைத்து வலப்பக்கமாக சாய்ந்து கால்களை நீட்டியபடி கண்களை முக்கால் பங்கு மூடிய நிலையில் விழிகளால் பூரணத்தை நோக்கியபடி மனதை கேசரத்தில் நிலை நிறுத்தி உறங்க வேண்டும் இதுவே "யோக நித்திரை" என்கிறார் அகத்தியர்.

மேலும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் சாகாக் கலையான வாசியோகத்தை கற்றுத் தேர்ந்து எல்லாம் வல்ல பரம்பொருளோடு ஐக்கியமாகிட வேண்டுமென்கிறார். அப்படி செய்யாதவர்கள் தங்களின் ஊழ்வினைப் பயனால் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் பிறந்து அல்லல் பட வேண்டியிருக்குமாம்.

வாசியோகம், பரம்பொருளோடு ஐக்கியம்.... இவையெல்லாம் இன்னேரத்துக்கு உங்களுக்கு குண்டலினி யோகம், சமாதி நிலை போன்றவைகளை நினைவு படுத்தியிருக்கும். அகத்தியர் சொல்லும் இந்த் யோக நித்திரையும் இம்மாதிரியான யோகத்தில் ஈடுபடும் சாதகர்களுக்கானதே.

இப்போது மீண்டும் திருமாலுக்கு வருவோம். தலைக்கு மேல் பாம்பு குடைபிடிக்க, யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் இறைவனின் அமைப்பானது, பாம்பை ஒத்த குண்டலினி சக்தியானது துரியம் ஏறி மலர்ந்த பரமானந்த நிலையையும், வாசியோகத்தால் உயர்ந்த யோக நித்திரையையும் நமக்கு உணர்த்திட வடிவமைக்கப் பட்டிருக்கலாமோ.....!

என்னுடைய தெளிவுகள் இறுதியானவை அல்ல.... விவரம் அறிந்தவர்கள் இதை விளக்கினால் மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!

Author: தோழி / Labels: , ,

குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம்.

இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை தொடரின் இறுதியில் பகிர்வதாக கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன். நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....

குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில் பதினாறு இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.

சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.

அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின் மகத்துவத்தை பாடியுள்ளனர்.

திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"


- திருமூலர்.

மேலும் திருமூலரே தனது திருமந்திரம் என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

- திருமூலர்.

அருணகிரி நாதரும் தனது திருப்புகழில் பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"அகர முதலென உரைசெய் ஐம்பத்தோரட்சரமும்"

-அருணகிரிநாதர்.

இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக முக்கியமானதாகவும், உயர் தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது மீண்டும் குண்டலினிக்கு வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு முக்கிய ஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம்.

நண்பர்களே, குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும் ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் உருவாகும் பேசாமொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.

வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும் என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.

பிற்சேர்க்கை: பஞ்சாக்கர எழுத்துக்கள் பற்றிய எனது பழைய பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...