சித்தரியலில் மருந்து தயாரிப்பு முறையில் இரசவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவில் சித்த மருந்துகள் இரண்டு வகையைச் சேர்ந்தவை. அவை முறையே உள்மருந்து, வெளி மருந்து என அறியப் படுகின்றன. இது தொடர்பாக முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
அணு விஞ்ஞானம் என்பது தற்போதைய காலகட்டத்தின் மேம்பட்ட அறிவியல் துறை. இப்போது அதனை ஒட்டியே நானோ தொழில் நுட்பம் தற்போது வளர்ந்து வருகிறது. இவை எல்லாம் நவீன அறிவியல் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நமது முன்னோர்கள் இந்த தொழில் நுட்பங்களை தமது மருத்துவத்தில் கைக் கொண்டிருந்தனர் என்பது ஆச்சர்யமான செய்தி.
நமது உடல் துவங்கி நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் நுண்ணிய அணுக்களால் கட்டப் பட்ட அமைப்புகளே. இந்த அணுக்கள் சிதையுமே தவிர அழியாது. அவை வேறு அணுக்களோடு சேர்ந்து புதிய அமைப்பு அல்லது புதிய பண்புள்ளவையாக மாறுபடும். இந்த பிரபஞ்சம் துவங்கியதில் இருந்து அணுக்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. அவற்றின் அமைப்புகளே மாறுபட்டு வந்திருக்கின்றன.
சித்தரியலில் மருந்து தயாரிப்பு இந்த அணு அறிவியலின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது/பிரிப்பதன் மூலம் புதிய, மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக் கட்டமைப்பை உருவாக்குவதெ சித்த மருந்தியலின் ஆதார அடிப்படையாகும்.
எல்லாம் சரிதான்!, புடத்திற்கும், இந்த அணு அறிவியலுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இந்நேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கலாம். நாம் இதுவரை பார்த்த அணுக்களின் சேர்க்கை மற்றும் பிரித்தலை பக்குவப் படுத்துதல் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த பக்குவமாக்கும் செயலையே புடம் போடுதல் என்கின்றோம்.
புடம் போடுதல் என்பது சித்த மருந்தியலில் தனித்துவமான அறிவியல் பிரிவு. இனி வரும் நாட்களில் இந்த அறிவியலை எளிய தமிழில் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.
புடம் நாளையும் தொடரும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...