குண்டலினியும் நாடியும்!!

Author: தோழி / Labels: ,

குண்டலினி பற்றிய அடிப்படை தகவல்களைத்தான் இது வரையில் நாம் பார்த்திருக்கிறோம். குண்டலினி என்பது என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக் கூடியது? என்பது மாதிரியான விவரங்களை இதுவரை பார்த்திருக்கிறோம்.

இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியை எழுப்புவது, அதன் செயல்பாடுகள், விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி இருக்கிறது.

அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்த பதிவினை வாசித்து விட வேண்டுகிறேன். நேற்றைய பதிவில் நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக ஒரு வரித் தகவலை பகிர்ந்திருந்தேன். இப்போது இந்த நாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் இப்போது அவசியமாகிறது.

நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல் சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது என்கின்றனர்.

மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில் 7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம் நாடிகளும், இடது கண்ணில் 2000ம் நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலது காதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500 நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும், பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும், முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம் நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலது கையில் 1500 நாடிகளும், இடது கையில் 1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம் நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம் நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும், பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில் 13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள் என ஆக மொத்தம் 72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும், காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன் என்பது வலது கண்ணிலும், அத்தி என்பது வலது காதிலும், அலம்புடை என்பது இடது காதிலும், சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும் ஓடுகிறதாம்.

இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக அமைந்திருக்கின்றன.

இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.

- காகபுசுண்டர் -

1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம் 3.மணிபூரகம் 4.அநாகதம் 5.விசுத்தம் 6.ஆக்ஞேயம் 7.துரியம் என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே 1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு 4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு 7.உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது.

இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் பற்றிய அடிப்படை தெளிவுகளைப் பார்த்தோம். நமது குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால் நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி இந்த பதிவினை இடைச் செருகலாய் பகிர்ந்தேன்.

மேலும் விவரங்களுடன் நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

Sasikumar C said...

ஆர்வத்தை தூண்டும் அருமையான பதிவுகள்...

cb.srinivasan said...

nandri thozhi... naan thediya pala kelvigalum pathilgalum ingu parka magizhchi.... adutha pathirvuku kathirukiren... nandrigal ..... thodarga ...

cb.srinivasan said...

pranayamam patri thirinthu kolla aarvan... uthavungal...

abitha said...

72000 monkey force . Vali (idakalai)sukreevan (pinkalai)hanuman Relate and understand the powers attributed to hanuman in the epic. There are 72000 tiles at thillai ponnambalam......

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Srinivasan Rajagopalan said...

Nandru.

Post a Comment