குண்டலினி... மனது?

Author: தோழி / Labels:


மனதினன் என்கிற பதமே மனிதன் என்றாகியது, என என்னுடைய தமிழாசான் கூறுவார். மனுஷன், மனிஷி என்ற வார்த்தைகளை அன்றாடம் நாம் பயன் படுத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆக, மனது என்கிற ஒன்றுதான் நம்முடைய உண்மையான அடையாளமாகிறது. மற்றபடி பிறப்பால் வருகிற சாதி, மதம், இனம், பால் என்கிற அடையாளங்கள் எல்லாம் மாயத் தோற்றமே, அழியக் கூடியது. மனமோ சூக்குமமானது, அழிவில்லாதது.

மனம் என்பதை உயிரின் ஒரு கூறாக சிலர் கூறுகின்றனர். ஆனால் சித்தர் பெருமக்கள் உயிர்வேறு, மனம் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். உயிரின் படர் நிலைதான் மனம் என்கிறனர். மேலும் மனதிற்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.ஒன்று தெளிவு எனப்படும் “ஞானம்”, மற்றது வலிமை எனப்படும் “உறுதி”. இவை இரண்டும் தனித்துவமானவை. வலிமை இல்லாத ஞானத்தினாலோ அல்லது ஞானம் இல்லாத வலிமையினாலோ பயனில்லை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் போது மட்டுமே மனம் முழுமையடைகிறது.

இப்படி ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் மனதில் ஆற்றல் அளப்பறியது. இதன் வேகம் கணக்கிட முடியாதது. இன்னும் சொல்வதானால் இந்த பூமியை ஆண்டு கொண்டிருப்பதே இப்படியான மனங்கள்தான்.

எல்லாம் சரிதான், இந்த மனம் மனிதனுக்கு என்ன செய்கிறது?

எளிமையான பதில், உணர்கிறது... உணர்த்துகிறது.

அவ்வளவுதான்!

எப்படி உணர்கிறது?

தனது புலன்களின் வழியே உணர்கிறது. அதுவும் தனித்துவமான பாதைகளில்... நாவின் சுவையை கண் அறியாது. செவியின் ஓசையை நாக்கு உணராது.இப்படி பன்னிரெண்டு புலன்களின் வழியே தனித்துவமான உணர்தல்கள் நடக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது நாள் வரை ஐம்புலன்களைத்தானே கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் சித்தரியல் பன்னிரெண்டு புலன்களைச் சொல்கிறது. அது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஆனால் இப்படி உணரப்படும் தகவல்கள் எல்லாம் மனம் என்கிற ஒன்றில் போய் குவிகிறது. இதை அடங்குகிறது என்றும் சொல்லலாம். நாம் ஏற்கனவே பார்த்த மனதின் இரண்டு முகங்களான ஞானமும், வலிமையும் இவற்றை எப்படி கையாளுகின்றன என்பதில்தான் ஒரு மனிதனின் தனித்துவம், திறமை, முயற்சி, வெற்றி எல்லாம் அமைகிறது.

தான் உணருகின்றவைகளை விழிப்புடன் கவனித்து அதன் மேல் காரியமாற்றும் தன்மை மனதிற்கு மட்டுமே இருக்கிறது. அது இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே மற்ற அவயங்கள்.

அப்படியானால், விழிப்பு நிலையில் செயல்பட மனதில் ஞானமும், உறுதியும் தயாராக இருக்க வேண்டுமல்லவா...

அதென்ன விழிப்பு நிலை?, அதை எப்படி அடைவது?

இதற்கு பதில்தான் குண்டலினி...

நாளைய பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

அருட்சிவஞான சித்தர் said...

Well, I like this chapter.Well, I like this chapter.

Statsfact said...

thank u

Lingeswaran said...

மனிதன்=மன+இதம்......இப்படி இல்ல?

தங்கம்பழனி said...

மனித மனங்களை ஒருமுகப்படுத்தக்கூடிய பதிவு..!! தொடருங்கள்..! வாழ்க வளமுடன்.

Sasikumar C said...

மிக மிக அருமையான பதிவு...

Hariprasath parameswaran said...

உங்கள் தகவல்கள் மிக அருமையாகவும், உண்மையான ஆன்மீக பாதைக்கு வழி காட்டுதலாக உள்ளது, இன்றைய கால சூழ்நிலையில் உங்களது தகவல் பரிமாற்றம் ,பொய் கூறுகளையும் தன்னை தானே சாமி என்று சொல்லி கொண்டு உலாவும் பித்தலாட்ட காரர்களையும் மீறி ஆன்மிகத்தை உயிர் பெற செய்கிறது, உங்களுடன் நான் இந்த வலைதளத்தின் மூலம் தொடர்பு கொள்ள எனது குருவின் அருளும் ஒரு காரணமாக நான் உணர்கிறேன் . தயவு செய்து உங்களது பணிக்கு என்னாலான உதவி செய்ய முடியும் என்றால் ,என்னக்கு உத்தரவிடுங்கள் ,நன்றி - முத்துக்குமார் .இந்தியா

Appuvijay said...

Nanri thozhi ........

Post a Comment