குண்டலினி - துரியம்.

Author: தோழி / Labels: ,

மூலாதாரத்தில் துவங்குகிற குண்டலினியின் பயணத்தின் உச்ச நிலையான துரியம் பற்றி இன்று பார்ப்போம். இதற்கு சகஸ்ரதளம் என்கிற மற்றொரு பெயரும் உண்டு.

மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும் போது அதனை அக்னி குண்டலினி என்றும், அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில் அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி பயணிக்கும் போது அதனை சந்திர குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த நிலையில் அதனை துரிய குண்டலினி என்றும் அழைக்கின்றனர்.

துரியம் பற்றி போகர் பின் வருமாறு விளக்குகிறார்.

தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே.

- போகர்.

ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.

போகர் தனது பாடலில் விவரித்திருக்கும் துரிய சக்கரத்தின் மாதிரி படம் இது.


ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு குண்டலினியை எழுப்புவது என்பது குண்டலினி யோகத்தின் மிக உயரிய செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள் கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப் பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக் கூடிய வ்ருணனையாக இருக்கும்.

கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த கவனமே கரைந்து போய்விட்டால்..... சித்தர்களோ இதனை நிலையற்ற நிலை என்கின்றனர். அதாவது நம்முடைய விழிப்பு நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து, கரைந்து போகிற நான்காவது பரவச நிலை. இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும், தானே தேடலாகவும், தானே தேடு பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஔவையாரும் கூட இந்த அனுபவத்தை இப்படி கூறுகிறார்....

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

குண்டலினி என்கிற மகா சமுத்திரத்தில் நான் உணர்ந்த ஒன்றிரண்டு துளிகளை மட்டுமே இதுவரை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.இந்த தொடரில் பிழையேதும் இருப்பின் அதைப் பொறுத்து என்னை திருத்திட வேண்டுகிறேன். குண்டலினி பற்றி ஒருவர் முழுமையாக அறியவும், புரியவும் பல காலம் பிடிக்கும். தொடர்ச்சியான தேடுதல் மட்டுமே நம்மை சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.

எதிர்காலத்தில் குருவருள் அனுமதிக்குமானால் இந்த தொடரின் இரண்டாம் பகுதியாக இதனுள் உறைந்திருக்கும் நுட்பங்களையும் அதனை கையாளும் வகைகளையும் பகிர்ந்திட முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் இந்த தொடரினை மின்னூலாக்கி இங்கே பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லாம் வல்ல குருநாதரின் அருளினாலே இது சாத்தியமாயிற்று. அவரின் பாத கமலத்தில் இந்த முயற்சியை சமர்ப்பித்து முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி - ஆக்ஞா.

Author: தோழி / Labels: ,

மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்தி ஆதார மையமாய் குறிக்கப்படும் ஆக்ஞா சக்கரம் பற்றி இன்று பார்ப்போம். இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு
அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல் பதினாறங்குலந்தான்
பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி
மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும்
இதனடுவில் யகார மாக்கினை வீடாமே.

- அகத்தியர்.

இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப் படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்" என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில் அமைந்துள்ளது.

பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக இது அமைகின்றது. இதன் மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.

அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை சூரிய சந்திர அம்சமாக உருவகம் செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் ஆக்ஞா சக்கரத்தின் மாதிரி படம் இது.


இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்". அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.

ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண் திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர். இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின் கவனக்குவிப்பு, விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை இது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி - விசுத்தி.

Author: தோழி / Labels: ,

மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.

- அகத்தியர்.

இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது.

பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.

இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன. அவற்றின் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின் எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது. இந்த தொடரின் முடிவில் அது என்ன என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் இது.


இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை “ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை உருவாக்கும் அல்லது விளைவிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை விட்டு நீங்கிடும். இதனால் எதனையும் விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான் என்கின்றனர்.

இதுவரை நாம் பார்த்த இந்த ஐந்து சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற வகையில் அடங்கும். இதற்குமேல் வரும் மற்ற இரண்டு சக்கரங்களும் மனஸ தத்துவ வகையை சார்ந்தவை.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி - அனாகதம்.

Author: தோழி / Labels: ,


நமது உடலில் இருக்கும் நான்காவது ஆதார சக்கரமான அனாகதம் பற்றி இன்று பார்ப்போம். அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.

இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது. இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில் ருத்ரன்காகினிதானே.

-அகத்தியர்.

இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன் மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன், அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம் “யம்” என்பதாகும். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் அனாகதச் சக்கரத்தின் மாதிரி படம் இது.


இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக நாடிகள் தாமரை இதழ் போல வெளிக் கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால் உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள் பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர். அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும். சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின் நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.

அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில் சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க சாதகனின் பொறுமை மற்றும் கவனக் குவிப்பை பொறுத்தது.

மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு “அக்கினி குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி - மணிபூரகச் சக்கரம்.

Author: தோழி / Labels:

மூன்றாவது சக்தி ஆதார மையமான மணிப்பூரக சக்கரம் பற்றி இன்று பார்ப்போம்.

தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன் நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப் படுகிறது. அது தொப்புள் கொடியாகும். இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான பிராணன் இந்த கொடியின் வழியேதான் நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம் என்கிறோம். இது சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது. இது நமது வயிறு, சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப் பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர் பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம் கூறப்பட்டிருக்கிறது.

இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்”

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் மணிபூரகச் சக்கரத்தின் மாதிரி படம் இது.


மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை அடையாளப் படுத்துகிறது. இந்த சக்கரமானது “சிவயநம” என்னும் எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன் தத்துவத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன் மூல மந்திரத்தினை உருவேற்ற சுவாதிஷ்டானத்திலிருந்து குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை வந்தடையுமாம். இது மிகக் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

முறையான பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த குருவின் வழிகாட்டுதல் இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே தக்க வழிகாட்டுதலுடன் பயில வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரிதான்.

முறையாக பயிற்சி செய்து சுவாதிஷ்டானத்தில் மலர்ந்திருக்கும் குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தால், நமது உயிர் சக்தி தூண்டப் பட்டு உடலின் உறுதி மற்றும் உடல் நலம் மேம்படும். இத்தகைய சக்கரம் தூண்டப் பட்டவர்கள் கடுமையான உழைப்புக்கும் அஞ்சாதவர்களாய் மாறிவிடுவர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி - சுவாதிஷ்டானம்.

Author: தோழி / Labels:

குண்டலினி பயிற்சியில் இரண்டாவது சக்தி ஆதார மையமான சுவாதிஷ்டானம் பற்றி இன்று பார்ப்போம். இதற்கு “நிராகுலம்” என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம் என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது என பொருள்படும்.

மூலாதாரத்திற்கு மேலே இருக்கும் இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது பிறப்பு உறுப்பிற்கு மேலே இது இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில் இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ந" என்னும் எழுத்தையும்,அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம், ய, ர, ல" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில் வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப் படுகிறது.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் இது.


சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல் ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.

சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்” என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில் இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர குண்டலினி இந்த மையத்தை அடையும். இது விடாத தொடர் முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.

சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும் ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர். குண்டலினி சக்தியை பெண் அம்சமாக அதாவது வாலையின் அம்சமாய் உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே குண்டலினி சக்தி பாயும் போது அவை பூரணத்துவம் அடைந்து மலர்வதே சித்தியடைதல் எனப் படுகிறது.

இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த விஷயங்களின் மீதான மேம்பட்ட பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப் படுவது அவசியமாகிறது.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி - மூலாதாரம்.

Author: தோழி / Labels: , ,

மூலாதாரம் என்பது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக முன்னரே பார்த்தோம். சித்தர்கள் இந்த மூலாதாரத்தின் இடத்தினை மிகத் தெளிவாக விளக்கியிருக்கின்றனர்.

திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு விளக்குகிறார்....

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே

- திருமூலர்.

போகரும் தனது போகர் ஏழாயிரம் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்...

அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில் கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே

- போகர்.

மூலாதாரச் சக்கரமானது பிறப்பு உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை, சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம் இருக்கின்றது.

உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத் தாங்குவதால் இதனை ஆதார சக்கரம் என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு தேவையான சக்தியைத் தரக் கூடிய குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல் தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின் அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச ஷ" என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் மூலாதார சக்கரத்தின் மாதிரி படம் இது.


இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு “காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள் தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது. இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர், அதிதேவதை டாகினி/தாகினி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த் சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது. சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக கூறப்படுகிறது.

குருவருளின் துனையோடும், வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில் அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில் நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை தன் உணர்வுகளால் மட்டுமே அறிய முடியும். மூலாதாரத்தில் வெப்பம் உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென எதோவொன்று ஊறும் உணர்வு, உடல் புல்லரித்தல் போன்ற அனுபவங்களை நான் உணர்ந்திருக்கிறேன்.

குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு கடுமையான பசியும், அதிக தூக்கமும் உண்டாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினியும் முன் தயாரிப்பும்!

Author: தோழி / Labels:

குண்டலினி யோகத்தை துவங்குவதற்கு தேவையான முன் தயாரிப்புகளையே இத்தனை நாளாக பார்த்து வந்திருக்கிறோம்.அந்த வரிசையில் தனிமையான,அமைதியான சூழலில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பது வரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.

பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத் தண்டானது நிமிர்ந்து இருப்பதால் சுவாசமானது மூலாதாரத்தில் இருந்து துரியம் வரை தடையின்றி செல்லும் என்கின்றனர்.மேலும் பத்மாசனத்தில் அமரும் போது நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்திருக்க முடியும்.மேலும் இப்படி அமரும் போது விரல்களில் சின் முத்திரை அல்லது ஞான முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஆசனம் தயாராகிவிட்டது. அடுத்த நிலை சுவாசத்தை கவனிக்க ஆரம்பிப்பதுதான், சிலர் சொல்வது போல தினமும் இத்தனை நிமிடங்கள் அமர்ந்திருந்தால் போதுமானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, சித்தர்களும் அத்தகைய நேரக் கட்டுப்பாட்டினை வரையறுக்க வில்லை. நம்மால் எத்தனை நேரம் கவனம் குவித்து சுவாசத்தை கவனிக்க முடியுமோ அத்தனை நேரம் செய்வது சிறப்பு.

ஆரம்ப நாட்களில் சுத்தமாய் உங்களால் சுவாசத்தை கவனிக்கவே முடியாது. அப்படி யாராவது கவனிக்க ஆரம்பித்து விட்டேன் என யாரும் சொன்னால் அதை நம்பவும் கூடாது.மனம் நிறையவே அலைபாயும், அது எங்கெல்லாம் போகிறது என்பதை கவனிக்க ஆரம்பியுங்கள், மனம் தானாய் உங்களை நோக்கி மீண்டு வரும். அப்படி வரும் போது சுவாசத்தை கவனிக்க சொல்லுங்கள். கவனம் குவியும். வலிந்து செய்வதை காட்டிலும் இது மிக எளிய உத்தி!

வெறுமனே சுவாசத்தை மட்டும் கவனித்தால் போதுமானது, எதுவும் அற்புதம் நிகழும் என்றெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது. உடலை, மனதை, சுவாசத்தை தளர்வாக்கவே இந்த பயிற்சி. நாட்கள் செல்லச் செல்ல சில மாற்றங்களை உணரத் துவங்குவீர்கள். இதனை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். என்னுடைய அனுபவத்தைச் சொல்ல வேண்டுமெனில் ஒரு உள்ளார்ந்த அமைதி உண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாக இருக்கும்.

இந்த நிலையில்தான் குண்டலினியை பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இனி நமது செயல்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடக்கியது. முதலில் குண்டலினியை விழித்தெழச் செய்வது, அடுத்து அவற்றை அடுத்த அடுத்த ஆதார மையங்களான சக்கரங்களை நோக்கி நகர்த்துவது அல்லது உயர்த்துவது.

இது மூலாதாரம் துவங்கி துரியம் வரை ஆறு நிலைகளில் நடைபெறும். ஒவ்வொரு சக்கரமும் மலரும் போது அதற்கான பலன்களை நாம் உணரத் துவங்குவோம். இந்தப் பயணத்தில் உடல் ரீதியான சில பிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆக, முன் தயாரிப்புகள், விளக்கங்கள் எல்லாம் முடிந்து மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்யும் கட்டத்திற்கு வந்து விட்டோம்.

நாளை முதல் சக்கரமான மூலாதாரம் பற்றியும், அதற்கான பயிற்சிமுறை, பலன்கள், விளைவுகள் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!

Author: தோழி / Labels:

நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை கரும யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கிரியா யோகம் எனப்படும். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள். ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்து பழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசை திரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகே அடிப்படைகளை மட்டும் தொட்டுச் செல்வோம்.

தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினி யோகத்தின் முதல் நிலை. இதை நாம் பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியை பராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாக பலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும் தேவையானவைகளை சேகரித்து வைப்பது, அதனை பாதுகாப்பது போன்றவைகளையே தன்னை உணர்தல் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல் அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லது அறிதல்கள்.

நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும் மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம். உண்மையில் தன்னை அறிதல் என்பதே நமக்குள் ஓடிடும் மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான் துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது, அதுவாகவே வெளியே போகிறது என தொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம் அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில் நமது மகத்துவமே இந்த மூச்சில்தான் அடங்கி இருக்கிறது.

சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரான தாளகதியில் நமக்குள் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால் மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரண நிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல் அல்லது மனம் வருந்த ஒரு செயலை செய்யும் போது விடும் சுவாசத்திற்கும் வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்த தாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல் நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்க கவனிக்க நமக்குள் மாற்றங்களை உணர முடியும்.

சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவை உயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம், முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாக தனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள் நமது சுவாசம் எத்தகையது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையான சுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும். இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன் பொருட்டே இதனை விளக்கிக் கொண்டிருக்கிறேன்.

அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோ மந்திரமோ இல்லை ஒரு வகையான பயிற்சிதான்... முழுமையான சுவாசத்தை அறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்க அதன் லயம் புலப்படும், அந்த லயத்தினை கவனிக்க மனம் அதில் ஒடுங்கும். கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும். சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்க உண்டாகும் மாற்றங்களே குண்டலினி பயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகி விட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை, இது சிரமமான வேலையும் இல்லை. ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும் உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.

குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும் சாதகன் முதலில் தனிமையான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாக இருந்தால் அமைதியாக அமர்ந்து செய்ய வசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை, வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டிய பகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதி உள்ள இடங்களும் சிறப்பானதே.

அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியை செய்திட எல்லா வகையான ஆசனங்களை பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தளர்வாகவும், வசதியாகவும் அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம். சாதாரணமாய் நாம் உட்காரும் முறையான பத்மாசனம் போதுமானது. உட்காருவது கடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

பதிவின் நீளம் கருதி நாளை தொடர்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!

Author: தோழி / Labels:

மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம்.

இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.

சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.

ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர்.

தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர்.

இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.

ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும். அவரே நமக்கு சரியான வழி எது என்பதை உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால் குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம் இல்லாத எளிதான காரியம்தான்.

அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?

எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம் வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான செயல் இல்லை. மிகுந்த பொறுமை, விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா சக்திகளும் சித்திக்கும்.

எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு ஆதார மையத்தையும் அடையும் போது அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த சக்தி மையம், தலை அல்லது முகம் மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம் மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த அதார மையங்களை சக்கரம் என்று அழைப்போம்.

எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.

இது பற்றி இனிவரும் பகுதிகளில் காண்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!

Author: தோழி / Labels:

மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம்.

இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.

சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.

ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர்.

தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர்.

இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.

ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும். அவரே நமக்கு சரியான வழி எது என்பதை உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால் குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம் இல்லாத எளிதான காரியம்தான்.

அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?

எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம் வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான செயல் இல்லை. மிகுந்த பொறுமை, விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா சக்திகளும் சித்திக்கும்.

எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு ஆதார மையத்தையும் அடையும் போது அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த சக்தி மையம், தலை அல்லது முகம் மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம் மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த அதார மையங்களை சக்கரம் என்று அழைப்போம்.

எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.

இது பற்றி இனிவரும் பகுதிகளில் காண்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினியும்... சாதகனும்!

Author: தோழி / Labels:

குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல் சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.

குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.

குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

இனி வரும் பதிவுகளில் குண்டலினியை எழுப்பிடும் வழி வகைகளைப் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினியும் நாடியும்!!

Author: தோழி / Labels: ,

குண்டலினி பற்றிய அடிப்படை தகவல்களைத்தான் இது வரையில் நாம் பார்த்திருக்கிறோம். குண்டலினி என்பது என்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படி இருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக் கூடியது? என்பது மாதிரியான விவரங்களை இதுவரை பார்த்திருக்கிறோம்.

இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியை எழுப்புவது, அதன் செயல்பாடுகள், விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்க வேண்டி இருக்கிறது.

அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்த பதிவினை வாசித்து விட வேண்டுகிறேன். நேற்றைய பதிவில் நமது உடலில் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக ஒரு வரித் தகவலை பகிர்ந்திருந்தேன். இப்போது இந்த நாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் இப்போது அவசியமாகிறது.

நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல், நோக்குதல் போன்றவை நேரடி அர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளை நாடுவதால் கூட இவைகளுக்கு நாடி என பெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்வதானால் நவீன அறிவியல் சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்த நாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம். ஆனால் நரம்புகளைப் போல இவற்றை நேரடியாக பார்க்க முடியாது என்றும் இவை சூட்சுமமானது என்கின்றனர்.

மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில் 7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம் நாடிகளும், இடது கண்ணில் 2000ம் நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலது காதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500 நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும், பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும், முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம் நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலது கையில் 1500 நாடிகளும், இடது கையில் 1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம் நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம் நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும், பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில் 13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள் என ஆக மொத்தம் 72000ம் நாடிகள் இருக்கின்றதாம்.

இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள் முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவை பிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பதாகும்.

பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை என்பது இவை இரண்டிற்கு நடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும், காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன் என்பது வலது கண்ணிலும், அத்தி என்பது வலது காதிலும், அலம்புடை என்பது இடது காதிலும், சங்கினி என்பது பிறப்பு உறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும் ஓடுகிறதாம்.

இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்த எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமது உயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழு மையங்களில் இணைந்து பிரிந்து செல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதார மையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதார மையங்கள்தான் நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இவை மூலாதாரத்திற்கும், உச்சந்தலையான துரியத்திற்கும் இடையே உடலின் ஊடாக அமைந்திருக்கின்றன.

இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

உச்சிதலை நெற்றிவிழி புருவமத்தி
உரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்
பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்
பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாய
கச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்
கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்
கொச்சிநரை சொல்லவில்லை வெளுத்தமார்க்கம்
குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.

- காகபுசுண்டர் -

1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம் 3.மணிபூரகம் 4.அநாகதம் 5.விசுத்தம் 6.ஆக்ஞேயம் 7.துரியம் என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே 1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு 4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு 7.உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது.

இதுவரை நாடிகள் மற்றும் அவை குவிந்திருக்கும் ஆதார மையங்கள் பற்றிய அடிப்படை தெளிவுகளைப் பார்த்தோம். நமது குண்டலினியானது இந்த ஆதார மையங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால் நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டி இந்த பதிவினை இடைச் செருகலாய் பகிர்ந்தேன்.

மேலும் விவரங்களுடன் நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி எழுந்தால் என்னவாகும்?

Author: தோழி / Labels: ,


குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.

குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர், நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும், இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும் குண்டலினியை கவனிப்போம்.

குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை சீண்டினால் என்ன ஆகும் சீறிக் கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!

ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து துரியம் என்கிற உச்சந்தலை வரை கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த துரியத்திற்கு குண்டலினியை கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.

இப்படி குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு கொண்டு வந்தால் என்னவாகும்?

அந்த அனுபவத்தை கொங்கணவர் பின்வருமாறு விளக்குகிறார்.

உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.

- கொங்கணவர் -

உணர்வற்று, உடலற்று, யோகமற்று, ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று லெச்சை, கூச்சம், சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று, நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும் என்று எண்ணினால் குண்டலி யோகத்தை செய் என்கிறார் கொங்கணவர்.

இப்போது குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திட வேண்டுமா?

விவரங்கள் நாளைய பதிவில்....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினியும் சித்தர்களும்...

Author: தோழி / Labels: , ,

குண்டலினி பற்றிய தொடர் இன்று முதல் துவங்குவதாக கொள்ளலாம். இதுவரை பார்த்த அடி ஆதார புரிதல்கள் இனி உதவியாக இருக்கும்.

சித்தரியலில் குண்டலினி பற்றி பேசாத சித்தர்கள் வெகு குறைவு. அநேகமாய் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த குண்டலினியின் மகிமையை கூறியிருக்கின்றனர். இதனை உயர்த்துவதன் மூலம் சாதாரண உணர்வினை, பரபிரம்ம உணர்வாக உயர்த்திடலாம் என்று கூறுகின்றனர்.

சுருள்சுருளாய் நெளிந்த ஒரு காதணியை குண்டலம் என வழங்குகிறோம். இப்படி சுருண்டு வளைந்து பாம்பினைப் போல இந்த நிலை சக்தி மூலாதாரத்தில் இருப்பதால் இதனை குண்டலினி என அழைப்பதாக ஒரு பெயர் காரணம் கூறுகிறது. இதை ஒரு யோக வித்தையின் மூலம் எழுப்பிடலாமாம். இதன் ஆற்றலை ஒருனியை பாம்பினை ஒத்ததாக கூறுகின்றனர்.

குண்டலினியின் இருப்பிடத்தை காகபுசண்டர் பின் வருமாறு விளக்குகிறார்.

குண்டலியைக் கண்டாக்காற் கருக்குமென்பார்
குண்டலியி னிருப்பிடமும் மூலமென்றார்
குண்டலிதா னென்றாக்கால் நரம்போதோலோ
குருந்தண்டோமுள்ளெலும்போ பிடரிமார்போ
குண்டலியே யென்றவர்கள் பெயரார் சொன்னார்
கொத்தளத்தின் பெருமைதனைச் சொல்லினார்கள்
குண்டலியே வாய்திறக்கப் பேசுமென்றார்
குருவென்றார் வாலையென்றார் குமரனென்றாரே.


- காகபுசுண்டர் -

குண்டலினியை சித்தர் பெருமக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருக்கின்றனர். அதைச் சொல்லும் கொங்கணவர் பாடல் ஒன்றை பார்ப்போம்.

சிறந்திட்ட குண்டலியின் பேர் செப்பக் கேளு
சிறப்பான சிவயோக மென்றுபேரு
சிறப்பான வாசி யென்று மிதுக்கே பேரு
சீரான இராச யோக மென்றுபேரு
திறப்பான யரசனென்று மிதுக்கே பேரு
சேர்ந்துணர்ந்த சபையென்று மிதற்கே பேரு
வுறப்பாக விதைபார்த்தால் ஞானசித்தி
யுத்தமனே காயசித்தி யுணந்து பாரே.

- கொங்கணவர் -

குண்டலினிக்கு, சிவயோகம் என்றும், வாசி யோகமென்றும், சுழியோகமென்றும், ராஜயோகமென்றும், அரசன் என்றும் சபையென்றும் பெயர் வழங்கப்படுகிறது. இவற்றை முறையாகச் செய்து தேர்ச்சி பெற்றால் காயசித்தியும் ஞானசித்தியும் வாய்க்கும் என்கிறார் கொங்கணவர்.

மனித உடலில் மூலாதாரம் எங்கிருக்கிறது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். அந்த மூலாதாரத்தில் குண்டலினி எப்படி இருக்கிறது என்பதை திருமூலர் அருளிய திருமந்திரம் என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. அதாவது, நம் ஒவ்வொருவரின் உடம்பிலும் முதுகு தண்டின் அடியில் மூலாதாரத்தில், மூன்றரைச் சுருள்களாக முடங்கி உறங்கி கிடக்கும் பாம்பு போன்று குண்டலினி இருக்கிறது. அதன் முகம் கீழ் நோக்கி இருக்கிறது. அதன் வாலை அதன் வாய் கவ்விக்கொண்டிருக்கிறது.

இப்படி தூங்கிக் கொண்டிருக்கும் இந்த குண்டலினியை எழுப்புவதுதான் இந்த குண்டலினி யோகத்தின் நோக்கம்.

இது பற்றித்தான் இனி வரும் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி....மேலும் சில தெளிவுகள்!!

Author: தோழி / Labels:

  • பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
  • உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
  • உயிரின் படர் நிலைதான் மனம்.
  • மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
  • உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
  • நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
  • குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.
இதுதான் கடந்த வாரத்தின் நெடுகே நாம் பார்த்தவைகளின் சாராம்சம். இவை எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட முந்தைய இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.

இன்று குண்டலினி பற்றி மேலும் சில அடிப்படை தகவல்களை அணுகிடுவோம்.

குண்டலினி என்பது உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு வகையான நிலையான ஆற்றல் என்கின்றனர். முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் தத்துவம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

குண்டலினி எங்கே இருக்கிறது?

நமது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக கூறியிருக்கின்றனர்.அதாவது நமது பிறப்பு உறுப்பிற்கும், ஆசன வாய்க்கும் இடையே நடுவில் புதைந்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த இடத்தையே மூலாதாரம் என்றும் அழைக்கின்றனர்.

ஏன் இந்த பெயர் வந்தது?

குண்டலினி என்பது காரணப் பெயர். குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி, அவை எளிதில் வெளியேறிவிடாதபடி பாதுகாக்கும் இடம். இந்த குண்டத்தை நமது உடலுக்கு ஒப்பாக சொல்கின்றனர். அத்தகைய குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற இந்த ஆற்றலை குண்டலினி என்கின்றனர்.

யாரெல்லாம் இதை கற்கலாம்?, எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா?

ஆர்வமும், விடா முயற்சியும் உள்ள எவரும் இதை கற்கலாம். தகுந்த குருவின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வதே சிறப்பு.

எத்தனை நாளில் குண்டலினி எழும்பும்?

மிக நிச்சயமாக ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகாது. நிதானம், பொறுமை, கவனகுவிப்பு ஆகிய இம் மூன்றுமே இதை சாத்தியமாக்கும்.

குண்டலினி பற்றி சித்தர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர்?

சித்தர்களின் குண்டலினி பற்றி நாளை முதல் பகிர்ந்து கொள்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி... மனது?

Author: தோழி / Labels:


மனதினன் என்கிற பதமே மனிதன் என்றாகியது, என என்னுடைய தமிழாசான் கூறுவார். மனுஷன், மனிஷி என்ற வார்த்தைகளை அன்றாடம் நாம் பயன் படுத்திக் கொண்டுதானிருக்கிறோம். ஆக, மனது என்கிற ஒன்றுதான் நம்முடைய உண்மையான அடையாளமாகிறது. மற்றபடி பிறப்பால் வருகிற சாதி, மதம், இனம், பால் என்கிற அடையாளங்கள் எல்லாம் மாயத் தோற்றமே, அழியக் கூடியது. மனமோ சூக்குமமானது, அழிவில்லாதது.

மனம் என்பதை உயிரின் ஒரு கூறாக சிலர் கூறுகின்றனர். ஆனால் சித்தர் பெருமக்கள் உயிர்வேறு, மனம் வேறு அல்ல,இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். உயிரின் படர் நிலைதான் மனம் என்கிறனர். மேலும் மனதிற்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.ஒன்று தெளிவு எனப்படும் “ஞானம்”, மற்றது வலிமை எனப்படும் “உறுதி”. இவை இரண்டும் தனித்துவமானவை. வலிமை இல்லாத ஞானத்தினாலோ அல்லது ஞானம் இல்லாத வலிமையினாலோ பயனில்லை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் போது மட்டுமே மனம் முழுமையடைகிறது.

இப்படி ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் மனதில் ஆற்றல் அளப்பறியது. இதன் வேகம் கணக்கிட முடியாதது. இன்னும் சொல்வதானால் இந்த பூமியை ஆண்டு கொண்டிருப்பதே இப்படியான மனங்கள்தான்.

எல்லாம் சரிதான், இந்த மனம் மனிதனுக்கு என்ன செய்கிறது?

எளிமையான பதில், உணர்கிறது... உணர்த்துகிறது.

அவ்வளவுதான்!

எப்படி உணர்கிறது?

தனது புலன்களின் வழியே உணர்கிறது. அதுவும் தனித்துவமான பாதைகளில்... நாவின் சுவையை கண் அறியாது. செவியின் ஓசையை நாக்கு உணராது.இப்படி பன்னிரெண்டு புலன்களின் வழியே தனித்துவமான உணர்தல்கள் நடக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது நாள் வரை ஐம்புலன்களைத்தானே கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் சித்தரியல் பன்னிரெண்டு புலன்களைச் சொல்கிறது. அது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஆனால் இப்படி உணரப்படும் தகவல்கள் எல்லாம் மனம் என்கிற ஒன்றில் போய் குவிகிறது. இதை அடங்குகிறது என்றும் சொல்லலாம். நாம் ஏற்கனவே பார்த்த மனதின் இரண்டு முகங்களான ஞானமும், வலிமையும் இவற்றை எப்படி கையாளுகின்றன என்பதில்தான் ஒரு மனிதனின் தனித்துவம், திறமை, முயற்சி, வெற்றி எல்லாம் அமைகிறது.

தான் உணருகின்றவைகளை விழிப்புடன் கவனித்து அதன் மேல் காரியமாற்றும் தன்மை மனதிற்கு மட்டுமே இருக்கிறது. அது இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே மற்ற அவயங்கள்.

அப்படியானால், விழிப்பு நிலையில் செயல்பட மனதில் ஞானமும், உறுதியும் தயாராக இருக்க வேண்டுமல்லவா...

அதென்ன விழிப்பு நிலை?, அதை எப்படி அடைவது?

இதற்கு பதில்தான் குண்டலினி...

நாளைய பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி... உணர்தல்?

Author: தோழி / Labels:

குண்டலினி தொடரின் முந்தைய இரண்டு பதிவுகள் சில ஆதார அடிப்படைகள் தொடர்பான புரிதல்களை உருவாக்கியிருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு தகவலையும் பார்த்து விடுவோம்.

உயிர் என்பது நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் மையம். அந்த ஆற்றலே நம் உடலை இயக்குகிறது. உயிர் ஆற்றல் ஓங்கும் போது உடல் ஆரோக்கியம் சிறக்கிறது. உயிர் ஆற்றல் மங்கும் போது உடல் தளர்ந்து நோய் வாய்ப் படுகிறது. இதுதான் இதுவரை நாம் பார்த்த நமது வாழ்வியலின் அடிப்படை.

மனித உடலின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயிர்தான் வாய்த்திருக்கிறது. அப்படி இருக்கையில் மனிதர்களில் ஏற்றத் தாழ்வு ஏன் உருவாகிறது. இதற்கு எளிமையான ஒரு பதில், தன்னை உணர்ந்து செயல்படுகிறவன் சிறப்புகளைப் பெறுகிறான். உணராதவன் துன்பத்தில் வீழ்ந்து உழல்கிறான். இந்த இடத்தில் உணர்தல் என்கிற வார்த்தை மிக முக்கியமானது. ஏனெனில் இதைப் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.இந்த உணர்தல் என்கிற வார்த்தையின் தத்துவம் மிகப் பெரியது. அதில் நமக்கு தேவையானதை மட்டும் இங்கே பார்ப்போம்.

உணர்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அநேகமாய் நமது கடைசி மூச்சு இருக்கிற வரையில் ஏதேனும் ஒரு வகையில் இந்த உணர்தல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த உணர்தல்கள்தான் நமக்கு உணர்வுகளை கொடுக்கிறது. இப்படி கொண்டு தரும் உண்ர்வுதான் நமக்கு முக்கியம். உணர்தல் ஒரு போதும் நமக்குள் தங்குவதில்லை. ஆனால் அவை தரும் உணர்வு நமக்குள் தங்கிவிடுகிறது.

இப்படி தொடர்ந்து நமக்கும் சேகரம் ஆகிக் கொண்டிருக்கும் உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கான உணர்தல் என்ன என்பதை தீர்மானித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இவையே நம்மை வழி நடத்தவும் ஆரம்பித்து விடுகிறது.

ஒரு உதாரணம் இதை எளிமையாக விளக்கும். குழந்தையாக இருக்கிறீர்கள்.உங்கள் தாயார் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். பாதுகாக்கிறார். தாயாரின் அன்பை நீங்கள் உணர்கிறீர்கள். நன்றாக வளர்கிறீர்கள். இப்போது உங்கள் தாயார் உடல் தளர்ந்து மெலிகிறார். இப்போது உங்களுக்குள் சேகரமாகி இருக்கும் அம்மாவின் உணர்வு விழித்துக் கொள்கிறது. இப்போது நீங்கள் அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறீர்கள்.பாதுகாக்கிறீர்கள்.

இன்னொரு உதாரணமும் பார்ப்போம். நீங்கள் குழந்தையாக இருக்கிறீர்கள். ஒரு நபர் உங்களை அடித்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார். அவரின் மீது வெறுப்பு உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் அந்த நபருக்கு வயதாகிவிட்டது. வலுவிழந்து விட்டார். இப்போது உங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு என்ன செய்யும்? எப்படி வெளிப்படும்?

இதுதான் உணர்தலுக்கும், உணர்வுக்குமான தொடர்பு... இதையே சித்தர்கள் அனுபவம் என்கின்றனர்.

உடலைப் பற்றி உணர துவங்குகிறவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய உணர்வினைப் பெருகிறார்கள். அப்படி பெற்ற உண்ர்வு உடல் ஆரோக்கியமாய் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என உங்களைத் தூண்டுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கச் செய்கிறது. உடற்பயிற்சி செய்ய துவங்குகிறீர்கள், உணவுக் கட்டுப்பாடு செய்கிறீர்கள். பலன் உடல் வலிவும் பொலிவும் பெறுகிறது.

ஆக,நல்ல உணவும், நல்ல உடற்பயிற்சி என்கிற இரண்டும் உடலுக்கு வலிவையும்,பொலிவையும் தருகிறது.

உடலுக்கு சரி, உயிருக்கு என்ன செய்வது?

இதற்கான பதில், முந்தைய பதிவில் நாம் பார்த்த இரண்டு நெறிகள் பற்றி நினைவிருக்கிறதா?. ஆம், பக்தி நெறி, ஞான நெறி என்கிற இரண்டும்தான் நம் உயிரை வளர்த்து பாதுகாக்கப் போகிறது.

பக்தி நெறி என்பது கோவிலுக்குப் போய் பூசைகள் செய்து சடங்குகள், சம்பிரதாயங்களின் பின்னால் ஓடுவது என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமுக வாழ்வியலின் கவனச் சிதறல்களில் சிக்கி இருக்கும் நம்மை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டு வருவதே பக்தி நெறியின் நோக்கம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது முதல் நிலை. இந்த நிலையை உணர்ந்து கொண்டால் அடுத்து யோக நிலை எளிதாய் கைகூடும்.

எப்படி?

நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி என்றால்... ஆற்றல்?

Author: தோழி / Labels:

உடலும், உயிரும் சேர்ந்து ஒத்திசைந்து இயங்கினால்தான் உயிரினம்.இதில் ஏதேனும் ஒன்று மற்றதைப் பிரிந்து போனால் என்னவாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த உடலை காக்கவும்,வளர்க்கவும்தான் நம் வாழ் நாளைச் செலவு செய்கிறோம். உடலைக் காக்க இத்தனை சிரத்தை எடுக்கும் நாம், உடலின் ஆதாரமாய் இருந்து அதை இயக்கும் உயிருக்காக ஏதேனும் செய்தோமா, என்கிற கேள்வி நியாயமானதுதானே!.

உயிரின் மீது ஆசை இல்லாத மனிதர் நம்மில் யாரேனும் இருக்க முடியுமா?, அப்படி விலை மதிப்பில்லாத இந்த உயிரை போற்றி பாதுகாக்கவும், அதை வளர்த்தெடுக்கவும், அதற்கு தேவையான ஓய்வு தந்து மெருகேற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ன?

நிச்சயமாக இருக்கிறது!, அதுவும் மற்ற எந்த மரபியலையும் விட இந்திய மரபியலில் இதற்கு தெளிவான தீர்வுகள் இருக்கிறது. அதை புரிந்து கொண்டதால்தான் மற்ற நாட்டினர் இந்திய மரபியல் செல்வங்களை நாடி ஓடி வருகின்றனர்.

நமது மரபியல் அளிக்கும் தீர்வுகளை இரண்டு படி நிலைகளாக அணுகலாம். ஒன்று “பக்தி நெறி”, மற்றது “ஞான நெறி”.

இதைப் பற்றி நாம் பின்னர் பேசுவோம்.இப்போது உயிரைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம். நமது உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்கிற கேள்வி நம் எல்லோருக்கும் வருவதுதான். என்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் புரிதலின் படி உயிரானது நமது உடலின் உள்ளும், உடலுக்கு வெளியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒர் ஆற்றல் நிலை என்பதாகவே புரிந்திருக்கிறேன்.

ஆற்றல் இரண்டு வகையானது என நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்று “நிலை ஆற்றல்”, மற்றது “இயக்க ஆற்றல்”. நிலை ஆற்றல் கிளர்ந்து எழும் போது அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. தொடர்ந்து கிளராவிட்டால் இயக்க ஆற்றல் வலுவிழந்து தேய்ந்து மறைந்து விடும். இது நிரூபிக்கப் பட்ட அறிவியல் தத்துவம்.

நான் சொல்கிறேன்!, நமது உயிர்தான் இயக்க ஆற்றல்.

அப்படியானால் நிலை ஆற்றல் என்பது என்ன?

அதுதான் குண்டலினி!

புரியத் துவங்கியிருக்கும் என நம்புகிறேன்.

நாளை தொடர்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி?... குண்டலினி?

Author: தோழி / Labels:

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஒரு சாமியார், தன்னுடைய தவ வலிமையால் ஒருவரின் உடலில் உள்ள குண்டலினியை எழுப்புவதன் மூலம் அவரை புவியீர்ப்பு விசைக்கு எதிராக அந்தரத்தில் மிதக்க விடப் போவதாக அறிவித்து, பின்னர் அந்த நிகழ்வு ஒரு கேலிக் கூத்தானது நாமறிந்த செய்தி. இப்படித்தான் காலம் காலமாய் குண்டலினி என்கிற இந்த கலை மர்மம் சூழ்ந்த ஒரு கருத்தியலாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.

உண்மையில் குண்டலினி என்பது என்ன?, ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது?, எதற்காக இந்த குண்டலினி?, இதை பழகுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?, எல்லோருக்கும் இது சாத்தியமா?, யாரெல்லாம் இதை பழகலாம்?, அந்த சாமியார் சொன்னதைப் போல அந்தரத்தில் மிதக்க முடியுமா?... இப்படி இதன் உண்மைத் தன்மை மற்றும் அதன் பலாபலன்கள் குறித்து நம்மில் பலருக்கும் பல வேறு கேள்விகள் இருக்கின்றன.

எது உண்மை, எது பொய் என்பது புரியாத இன்றைய அவசர உலகில், குண்டலினியை சொல்லித் தருகிறேன் பேர்வழி என வீதிக்கு நான்கைந்து சாமியார்களை இப்போது பார்க்க முடிகிறது. வர்த்தக ரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டி, இவர்கள் அவிழ்த்து விடும் கட்டுக் கதைகள் குண்டலினியின் உண்மைத் தன்மையை பின் தள்ளி விட்டு, கற்பனையான அற்புதத்தை முன் நிறுத்துவதாகவே அமைகின்றன.

கடந்த ஓராண்டாக நான் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த, இந்த குண்டலினி தொடரை ஆரம்பிக்க இதுவே சரியான தருணம் என கருதுகிறேன்.இனி வரும் நாட்களில் சித்தர்கள் அருளிய குண்டலினியை நான் அறிந்த வகையில், மிகையில்லாமல் இங்கே பகிர்ந்திட உத்தேசித்திருக்கிறேன். எனது பார்வையில் தவறேதும் இருப்பின் அதைப் பொறுத்து, என்னைத் திருத்திட வேண்டுகிறேன்.

குண்டலினி பற்றி பேசுவதற்கு முன்னர் எனக்கு புரிந்த சில ஆதார அடிப்படைகளை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

உயிரும்,மெய்யும் ஒன்று சேர்ந்த “உயிர்மெய்” நிலைதான் மனிதன். மனிதனுக்கு மட்டுமல்ல இது மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும். உயிரைப் பிரிந்த மெய் பிணமாகவும், மெய்யைப் பிறிந்த உயிரை ஆவியாகயோ அல்லது பேய் பிசாசாகவோ நாம் புரிந்திருக்கிறோம். ஆக, இந்த இரண்டு மூலங்கள் ஒன்று சேர்ந்துதான் ஒரு இயக்க நிலையினை உருவாக்குகிறது. ஒன்று மற்றதைப் பிரிந்தால் அதனால் பலனில்லை.

நமது முன்னோர்கள் இதைத்தான் இரண்டு தத்துவ நிலையாக சொல்லி வைத்திருக்கின்றனர். சக்தி, சிவம் என்பதெல்லாம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். பக்தி மார்க்கத்தில் இது பற்றி விரிவான கருத்தாக்கங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் நாம் இங்கே விவாதிக்கப் போவதில்லை.

சித்தர் பெருமக்கள் இந்த இரண்டு மூலங்களை “பரு உடல்”, “நுண்ணுடல்” என கூறுகின்றனர். இந்த பரு உடல் என்பதுதான் நம்முடைய உடல். இந்த உடலை இயக்கும் உயிர் நுண்ணுடல் ஆகிறது. உடலை வளர்க்கவும், பாதுகாக்கவும் உணவு தேவைப் படுகிறது.

உயிரை வளர்க்க?, உயிரை பாதுகாக்க?

நாளைய பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அமாவாசையும், அகத்தியரின் தெளிவும்!!

Author: தோழி / Labels:

அமாவாசை தினத்தன்று முன்னோரின் கருமம் தீர்க்கும் திதி பூசை குறித்து அகத்தியர் எழுப்பின கேள்விகளை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த பூசை முறைகளை அகத்தியர் முற்றாக நிராகரிக்கிறார். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை யோகி மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார். மற்ற யாராலும், எந்த பூசை வகைகளாலும் இந்த கரும வினைகளை தீர்க்கமுடியாது என உறுதியாகச் சொல்கிறார்.

அப்படியானால் அமவாசையில் என்னதான் செய்யவேண்டும். அதற்கும் அகத்தியர் வழி சொல்கிறார்..

சிக்காமல் சொல்லுகிறேன் புலத்தியனே கேளு
தேசத்தோ டொத்துணியாய் வாழாதப்பா
சொக்காதே யிருந்தல்லோ சாக்கிரத்திற்
சுருதியந்த ஆக்கினையி லகாரந்தொட்டு
மக்காத கீழ்படியில் மகாரந்தொட்டு
வாசமா மிடகலையில் வகாரந்தொட்டு
புக்காதே பின்கலையிற் சிகரந்தொட்டு
பூட்டப்பா ரிதுவல்லோ அமாவாசையெண்ணே.

அமாவாசை பூரணையிற் பிதிர்மாதா கன்மம்
ஆகாகா விந்துநா தத்துட்பாரு
நமவசி விந்துவிலே நாட்டமூணு
நாலான பூரணத்தை மேலேதாக்கு
சமராகி விந்துவோடு நாதம்ரெண்டுஞ்
சமரசமாம் அமாவாசைக் குள்ளேதாக்கி
யிமையோடு விழியூட்டு சோமசூர்யன்
யிகபரமாய் ஒளிவீசும் திதியிதாச்சே.

திதிசடங்குக் கமாவாசை குள்ளேசென்று
திருப்தியா மிப்படியே சிவயோகமப்பா
கெதிமோட்ச மிதுவல்லோ சற்புத்திரராதி
கெடியாக அமாவாசை யறிந்தோர்க்கையா
பிதிர்சூட்சம் மாதாவின் சூட்சஞ்சொன்னேன்
பிதற்றாதே யெழுகோடி பிதிர்க்குமுத்தி
மதிகெட்ட மாணாக்கள் தோற்றமெழில்
வங்கிஷமு முத்திபெறு மாதாந்தத்தே.


அமாவாசை பௌர்ணமியில் பிதிர் மாதா கடமைகள் என்று எதையும் செய்ய கூடாது என்று சொல்லும் அகத்தியர். மக்கள் எல்லோரும் செய்வதை பார்த்து நீயும் ஏமாந்து போகாமல், அமாவசை நாட்களில் ஆக்னையை லகாரமாக கொண்டு, அதற்க்கு அடுத்த படியை மகாரமாக கொண்டு மனதை நிறுத்தி, இடங்கலையை வகாரமாக கொண்டு, பிங்கலையை சிகாரமாக கொண்டு உணர்ந்து "நமவசி" என்று செபித்து சிவ யோகம் செய்யவேண்டும் என்கிறார்.

மாதாந்தம் வரும் அமாவாசை, பௌர்ணமியில் இந்த சிவ யோகமே செய்யவேண்டுமாம். அப்படி செய்தால் சந்திர சூரிய பிரகாசம் புருவ மையத்தில் தென்படுமாம். இதுதான் முக்தி யடைவதற்கான வழி என்கிறார்.

இதைத்தான் “பிதிர் சூட்சுமம்”, “மாதா சூட்சுமம்” என்பார்கள். இதை நீ உணர்ந்து மாதாமாதம் செய்து முக்தியடைவாய் என தன் சீடர் புலத்தியருக்குச் சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே...!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


விநாயகர் சதுர்த்தி!

Author: தோழி / Labels: , , , , ,

முற்காலத்தில் இந்து மதம் ஆறு தனித் தனி பிரிவுகளாய் இயங்கி வந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் என தனித்துவமான ஒரு முழுமுதற் கடவுள் இருந்திருக்கிறார். விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கௌமாரம், சூரியனை வணங்குவோர் சௌரம் என தனித் தனி மதமாகவே இயங்கி வந்தன.

ஆதி சங்கரரே இவற்றை ஒன்றாக இணைத்து இந்து மதம் என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்த ஆறு பிரிவுகளில் முதலாவது பிரிவாக அறியப் படும் கணாபத்ய நம்பிக்கையின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு இன்று அவதார நாள்.

பிரதி தமிழ் வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார நாளாய் அனுஷ்டிக்கப் படுகிறது.சூட்சுமமான ஓம்காரத்தின் முழுவடிவே ஆனைமுகத்தான் என்பாரும் உண்டு.

சித்தர்களும் தங்களுடைய எந்த ஒரு நூலையும் விநாயகர் காப்புடனே துவங்கியிருப்பதை காண முடிகிறது. இந்த நல்ல நாளில் அப்படியான தகவல்கள் சிலவற்றை உங்களின் பார்வைக்கு தொகுத்து வைக்கிறேன்.

அகதியர் தனது "அகதியர் தீட்சாவிதி" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடன் இவ்வாறு ஆரம்பிக்கிறார்.

"பாதிமதி யணிந்த பரமன் எனக்கிசைந்த
பருதிமதி சுழிமூன்றும் நன்றாய்ச் சொல்வேன்
வேதனைவா ராமல் முதற்தீட்சை மார்க்கம்
விளம்புவேன் மஹா கணபதி காப்பாமே"


- அகத்தியர் -

போகர் தனது "போகர் ஞான சூத்திரம் 100" என்னும் நூலை விநாயகர் வணக்கத்துடனேயே தொடங்குகிறார்.

"பெருமையுள்ள சதநூலைப் படுவதற்கு
கருவூலந் திருமேனி தும்பிக்கையான்
கணபதி செந்தாமரைத்தாள் காப்பதாமே"

- போகர் -

உரோமரிஷியும் தனது "உரோம ரிஷி வைத்தியம் 500" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.

"மூலமு தலாதார முடிவினின்ற
மூர்த்தியெனும் கணேசரது பாதங்காப்பு"


- உரோமரிஷி -

நந்தீசரும் தனது "நந்தீசர் நிகண்டு 300" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.

"வெள்ளியங் கிரியான் தந்த
வேழமா முகனே யெந்தன்
உள்ளினுக் குள்ளாய் நாளும்
உரிவினுக் குருவாய் நின்று"

- நந்தீசர் -

பத்திரகிரியாரும் விநாயகர் வணக்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"ஐஞ்சு கரத்தானின் அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்?"


- பத்ரகிரியார் -

இவற்றை எல்லாம் விட, பகுத்தறிவுக் கருத்துக்களை முகத்தில் அறைந்தாற் போல பாடியவரும், உருவ வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவருமான சிவவாக்கியாரும் கூட தனது "சிவவாக்கியம்" என்னும் நூலை ஆரம்பிக்கும் போது விநாயகர் வணக்கத்தை முன்வைத்தே பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடதக்கது..

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே"


- சிவவாக்கியார் -

இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் விரவிக் கிடக்கிறது. இந்த நல்ல நாளில் இப்படி விநாயகப் பெருமானை நினைவு கூர்வதன் மூலம் அவரது பாதத் திருவடிகளைப் பணிந்து வணங்கிடுவோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...