புனித ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!

Author: தோழி / Labels: ,

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

பழந்தமிழ் சித்தர்களில் இஸ்லாமிய மதநெறிகளை பின் பற்றி வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாகோபு சித்தர் என அழைக்கப் படும் இவரைப் பற்றி எனது முந்தைய பதிவில் விவரங்களை பகிர்ந்திருக்கிறேன்.

இந்த புனித நாளில் யாகோபு சித்தர் அருளிய ஒரு கருத்தினை அனைவருடனும் பகிர்வது பொருத்தமாய் இருக்கும் என கருதுகிறேன்.

யாகோபு சித்தர் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த வாழ்க்கை முறையாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பதையே, எல்லா உயிர்களையும் படைத்த அல்லா விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்.

அல்லாவை முப்போதுந் தொழுதிறைஞ்ச
அறிவாகப் பலனுண்டு அறிந்துநீயும்
எல்லாமும் படைத்தவரைத் துதித்துப்போற்று
ஏழைமதி போகாம லியல்புகாட்டிச்
சொல்லாலே நினைத்துமே கோழிதன்னைச்
சுகமாக அறுப்பவர்க்குப் பாவமாகும்
கொல்லாமல் எல்லாமும் படைத்தஅல்லா
குணமதனை உயிர்போக்கக் கொடுமையாமே.

கொடுமையாய்த் தம்முயிர்போ லெவ்வுயிர்க்கும்
கொண்டாட்ட மில்லார்க்குக் குறைச்சலுண்டு
அடுமையாய்க் காத்தோர்க்கு இடுக்கஞ்செய்ய
ஆண்மையாய்ச் செய்திடிலோ நரகமுண்டு
படுபாடா யாட்டைத்தா னறுப்பவர்க்குப்
பலனில்லை யேமமென்ற பொருளுமில்லை
இடுகாட்டில் கார்த்திருந்த பிணமும்போல
இருந்தேங்கி மாண்டுமே திரிவார்பாரே.


பெருமைமிகு அல்லாவை மூன்று வேளையும் பணிந்து தொழுது வேண்டினால் எல்லா நலமும்,வளமும் உனக்கு கிடைக்கும். மேலும் இந்த உண்மையை தொழுகையின் மூலம் நீ அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் யாகோபு சித்தர், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் அல்லாவே படைத்தார். அப்படி தான் படைந்த எந்த உயிரையும் கொல்லும்படி அவர் சொல்லவில்லை என்கிறார்.

எல்லா உயிர்களையும் தன் உயிர் போல நினைக்காதவர்களுக்கு எந்த சுகமும் கிட்டாது என்கிறார். மற்றைய உயிர்களின் மேல் இரக்கமின்றி கொல்பவர்களுக்கு நரகமே கிட்டும் என்றும், அவர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்ய காத்திருக்கும் பிணத்துக்கு ஒப்பானவர்கள் என்கிறார் யாகோபு சித்தர்.

எனவே இந்த நல்ல நாளில் பிற உயிர்களுக்கு தொல்லை தராதிருக்கும் மன உறுதியை அருளிடவேண்டி, எல்லாம் வல்ல அருளாளனை வணங்கி நிற்போம்.

இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இன்று பதிப்பிப்பதாக இருந்த அமாவாசை பற்றிய பதிவு நாளை மறுநாள் வெளியாகும். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

vv9994013539@gmail.com said...

ரம்ஜான் வாழ்த்துக்கள்.....

tamilvirumbi said...

Dear Thozi,
You have blogged the right article on this auspicious today.The almighty allah is blessing you in all aspects.Thanks a lot.

புதுகை.அப்துல்லா said...

முப்போதும் என்றால் மூன்றுவேளை என்று அர்த்தம் அல்ல. எப்போதும் என்றும் பொருள் வரும்.

பாவா ஷரீப் said...

நல்ல பதிவு
நன்றி தோழி

திவாண்ணா said...

அப்துல்லா சார் சொல்லறது சரியாவே படுது. சாதாரணமா இஸ்லாமியர்களுக்கு ஐந்து வேளையும் ஹஜ் போய் வந்தவருக்கு ஆறு வேளையும் தொழுகை விதிக்கப்பட்டுள்ளது என நினைவு.

இடுகாடு ன்னு தானே சொல்கிறார்? இறந்த பின் புதைக்கிற இடம் இடுகாடு. இஸ்லாமியர் புதைக்கிறதே வழக்கம். சுடுகிற இடம் சுடு காடு. சுடுகாட்டில் அடக்கம் செய்ய மாட்டார்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் தாமதமான நல்வாழ்த்துகள் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும்.

RAJA said...

மத நல்லிணக்கத்திற்காக எழுதுவதாக நினைத்துக்கொண்டு பிற மதங்கள் குறித்து எந்த பதிவுகளையும் இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறுதி தூதர் முகமது சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். பி.ஜெயிநுலாபுதீன்,ஜவாஹிருல்லா போன்றவர்கள் இதுபோன்ற கட்டுரைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பார்கள். சித்தர்கள் ராச்சியத்தில் ஏன் இவர்களின் கண்டனங்களைப் பெற வேண்டும்?

mohamedali jinnah said...

அன்புள்ள சகோதரிக்கு அன்புடன் வாழ்த்துகள்.
தாங்கள் இஸ்லாம் பற்றி எழுதியுள்ள மூன்று கட்டுரைகளும் அருமையாக உள்ளது .
மனித நேயம் வளர உங்கள் தொண்டு உயர்வானது

Post a comment