அகத்தியர் அருளிய ஆரூட யந்திரமும் பலன்களும்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் தனது “அகத்தியர்12000” என்ற நூலில் அருளியிருக்கும் இந்த அகத்திய ஆரூடத்தின் அறிமுகத்தை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த ஆரூட முறையில் பயன்படுத்தப் படும் ஆரூட யந்திரத்தின் அமைப்பு பற்றியும், முதல் ஐந்து இலக்கங்களுக்கான பலன்களையும் இன்றைய பதிவில் பார்ப்போம்.


மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் அகத்தியர் அருளிய ஆரூட யந்திரம். அகத்தியரின் பாடல்களில் கூறியுள்ளபடி அமைக்கப் பெற்றது இந்த யந்திரம். இந்த அமைப்பு பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் இதன் அமைப்பில் அநேக சூட்சுமங்கள் நிறைந்திருக்கின்றனவாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிக் கொள்ள வேண்டும். யந்திரம் கீறும் முறையினை பழைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வ முள்ளவர்கள் அந்தத் தகவல்களை தேடிப் பெறலாம்.

இனி முதல் ஐந்து இலக்கங்களுக்கான பாடலையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

௧. (01) வந்தால்..

ஓங்கார பிரணவத்தி னுதவியாலே
ஓதிடுவே னாரூட உண்மைதன்னை
பாங்காக தொழிலோங்கும் மணமேகூடும்
பாலர்கட்கு ஞானமுடன் கல்வியோங்கும்
நீஙகாத நோய்நீங்கும் பொருளுஞ் சேரும்
நினைந்தயெண்ணம் பலிக்குமயலுதவி தோன்றும்
தீங்கினி நேராது செழித்துவாழ்வாய்
தினமெட்டி லிதின்விபரம் தெரிகுவாயே.


ஆரூடத்தில் ஒன்று என வந்தால், கவலைகளெல்லாம் ஒழிவதுடன், தொழில் விருத்தியும் ஏற்படுமாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடுமாம். பாலகர்களுக்கு ஞானமும் கல்வியும் ஓங்குமாம். பீடித்திருக்கும் நோய் நீங்குமாம். கை விட்டுப்போன பொருட்கள் வந்து சேருமாம். நினைத்த எண்ணம் பலிக்கும் அத்துடன் அயல் உதவியும் கிட்டுமாம். இனி தீங்குகள் நேராமல் செழிப்புடன் வாழலாமாம். இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து எட்டு நாட்களில் இதன் விபரம் அறியமுடியுமாம் என்கிறார்.

௨. (2) வந்தால்..

வேலுண்டு வினையகலும் கஷ்டந்தீரும்
விச்சித்ர மயிலுண்டு கவலை போகும்
குழுமே செல்வமது தொழிலுமோங்கும்
ஷண்முகனி னருளாலே நலியும்நீயும்
பாழான கேதுபத்து நாளிலப்பா
பதறாதேயுன்னை விட்டு விலகிப்போவான்
தாழாமல் வாழ்ந்திடுவாய் யதன்பின்னாலே
தள்ளாதே யகஸ்தியனா ருரைத்தவாக்கே.


ஆரூடத்தில் இரண்டு வந்தால், முருகக் கடவுளின் கடாட்சத்தால் சகலமான காரியங்களும் தங்குதடையில்லாமல் வெற்றியளிக்கும். அத்துடன் கவலையும் கஷ்டமும் சண்முகன் அருளால் விலகிவிடும். அத்துடன் இதுவரை கஸ்டங்களை கொடுத்துவந்த கேது விலகிச் சென்றதும் குறைவின்றி வாழ முடியுமாம். இது அகத்தியர் வாக்கு என்றும் சொல்கிறார்.

௩. (03) வந்தால்..

திரிபுரந்தனை யெரித்த தீனநாதன்
திருவருளா லுந்தனுக்கு
பெரியோர் களுதவியுண்டு பெறுவாய்
பெண்டுபிள்ளை குடும்பமுடன் பெருத்துவாழ்வாய்
பரிவான தொழில்முறையி லடைவாய்லாபம்
பாராளும் மன்னர்களால் பெருமையுண்டு
உரித்தான உந்தன்குல தெய்வந்தன்னை
உத்தமனே துதிசெய்தால் உசிதமாமே.


ஆரூடத்தில் மூன்று வந்தால், திரிபுரத்தை எரித்த சிவனின் கருணையினால் கஷ்டமொன்றும் ஏற்படாது. பெரியோர்களின் உதவியுண்டாகும். தொழிலில் அதிக லாபங்களையெல்லாம் அடைவாய். மேலும் அரசர்களாலும் பெருமைப் படுத்தப் படுவாய். பலவிதத்திலும் சந்தோஷத்தையே அடைவாய். உனது குலதெய்வத்தை வாணங்கி வர நாளுக்கு நாள் நன்மைகிட்டும் இதுவே சிறப்பு என்கிறார்.

௪. (04) வந்தால்..

அண்டமாகி ரண்டமதை யளந்தமாயன்
அருளாலே யுந்தனுக்கு அதிர்ஷ்டமுண்டு
விண்டிடுவார் புவிதனிலே விவேகியென்று
வேணபொருள் சேரும்புத்ர பாக்கியமுண்டு
கண்டபடி கவனமதை செலுத்திடாதே
கவலையின்றி நினைத்தயெண்ணம் முடியுமப்பா
தொண்டனே பதினொன்று நாளே போனால்
துணைபுரிவார் செங்கமல வண்ணன் தானே.


ஆரூடத்தில் நான்கு வந்தால், உலகங்களை அளந்த மாயன் அருளால் உனக்கு அதிஷ்டம் உண்டு. பூமியில் உள்ளவர்கள் உன்னை விவேகி என்று போற்றுவார்கள். பொருள் சேரும். புத்திர பாக்கியம் கிட்டும். கண்டபடி கவனத்தை திசைதிருப்பாதே. நினைத்ததெல்லாம் நடக்கும். இந்த ஆரூடத்தை பார்த்த நாளில் இருந்து பதினொருநாள் சென்றால் செங்கமல வண்ணன் துணையுடன் எல்லாம் சிறப்பாகும் என்கிறார்.

௫. (05) வந்தால்..


பட்டதொரு துன்பமெலா மொழிந்துபோச்சு
பாலகனே குருதிசையு முதவியாச்சு
விட்டதொரு தொழிலுனக்கு விர்த்தியாச்சு
வீட்டிலுள்ள கஷ்டமெல்லாம் விலகலாச்சு
முட்டவே எண்ணமெல்லாம் முடிவதாச்சு
மூதோர்கள் பொருள்சேரும் காலமாச்சு
அட்டலக்குமி கடாட்சமது மிகவுண்டாச்சு
அகஸ்தியர் சொல்லணுவளவும் பிசகிடாதே.


ஆரூடத்தில் ஐந்து வந்தால், உனக்கு இனி குரு திசை வரப் போவதால் கவலைகளெல்லாம் நீங்கும். கஸ்டத்திலிருக்கும் தொழில் விருத்தியடையும். குடும்பத்தின் கஸ்டமெல்லாம் தீரும். எண்ணிய கருமங்கள் சிறப்பாக நடந்தேறும். பரம்பரை சொத்துக்கல் கைசேரும். அட்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். அகத்தியர் சொல் பிழைக்காது என்கிறார்.

சுவாரசியமாய் இருக்கிறதல்லவா... அடுத்த எட்டு இலக்கங் களுக்கான பலனை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

Ram said...

அந்த கீறும் முறையின் சுட்டியையும் பகிர்ந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்... ம்ம்.. தேடுறேன்...!!

Rajakumaran said...

VERY NICE.. there they said some message.

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot.It will be highly useful to those who are interested in AARUDAM.But, You
have interpreted very well.

kaleappan said...

தோழியே,
யந்திரதை சற்று பெரிதாக போடுங்கள்,எலுத்துக்கள் சரியாக தெரியவில்லை.

இந்த யந்திரதை செயல்பட வைப்பதுக்கு என்ன செய்ய வேண்டும்?

மு.சரவணக்குமார் said...

@kaleappan

படத்தை க்ளிக் செய்தால் பெரிதாக வருகிறது. அதை சேமித்துக் கொள்ளலாம்.

RAVINDRAN said...

நன்றி

Anonymous said...

நல்ல தகவல் தோழி நன்றி ..

பிரவீன் குமார் .

puduvaisiva said...

நன்றி தோழி

puduvaisiva said...

@தம்பி கூர்மதியன்


http://siththarkal.blogspot.com/search/label/%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

:-)

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நல்லதோர் அறிய தகவல் அளித்திருக்கிறாய் மகளே ,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

M.R said...

தோழி நல்ல பயனுள்ள பகிர்வு இதில் கடைசியாய் அகத்தியர் சொல் பிசகிடாது (பிழையாகாது )என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். பிழைக்காது என்று எழுதி உள்ளீர்கள். தவறிருந்தால் மன்னிக்கவும் .

Post a comment