புனித ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!

Author: தோழி / Labels: ,

இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

பழந்தமிழ் சித்தர்களில் இஸ்லாமிய மதநெறிகளை பின் பற்றி வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாகோபு சித்தர் என அழைக்கப் படும் இவரைப் பற்றி எனது முந்தைய பதிவில் விவரங்களை பகிர்ந்திருக்கிறேன்.

இந்த புனித நாளில் யாகோபு சித்தர் அருளிய ஒரு கருத்தினை அனைவருடனும் பகிர்வது பொருத்தமாய் இருக்கும் என கருதுகிறேன்.

யாகோபு சித்தர் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத ஜீவ காருண்யத்தை ஒரு தலை சிறந்த வாழ்க்கை முறையாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தன்னுயிராக நினைத்து நேசிப்பதையே, எல்லா உயிர்களையும் படைத்த அல்லா விரும்புவதாகக் குறிப்பிடுகிறார்.

அல்லாவை முப்போதுந் தொழுதிறைஞ்ச
அறிவாகப் பலனுண்டு அறிந்துநீயும்
எல்லாமும் படைத்தவரைத் துதித்துப்போற்று
ஏழைமதி போகாம லியல்புகாட்டிச்
சொல்லாலே நினைத்துமே கோழிதன்னைச்
சுகமாக அறுப்பவர்க்குப் பாவமாகும்
கொல்லாமல் எல்லாமும் படைத்தஅல்லா
குணமதனை உயிர்போக்கக் கொடுமையாமே.

கொடுமையாய்த் தம்முயிர்போ லெவ்வுயிர்க்கும்
கொண்டாட்ட மில்லார்க்குக் குறைச்சலுண்டு
அடுமையாய்க் காத்தோர்க்கு இடுக்கஞ்செய்ய
ஆண்மையாய்ச் செய்திடிலோ நரகமுண்டு
படுபாடா யாட்டைத்தா னறுப்பவர்க்குப்
பலனில்லை யேமமென்ற பொருளுமில்லை
இடுகாட்டில் கார்த்திருந்த பிணமும்போல
இருந்தேங்கி மாண்டுமே திரிவார்பாரே.


பெருமைமிகு அல்லாவை மூன்று வேளையும் பணிந்து தொழுது வேண்டினால் எல்லா நலமும்,வளமும் உனக்கு கிடைக்கும். மேலும் இந்த உண்மையை தொழுகையின் மூலம் நீ அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் யாகோபு சித்தர், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் அல்லாவே படைத்தார். அப்படி தான் படைந்த எந்த உயிரையும் கொல்லும்படி அவர் சொல்லவில்லை என்கிறார்.

எல்லா உயிர்களையும் தன் உயிர் போல நினைக்காதவர்களுக்கு எந்த சுகமும் கிட்டாது என்கிறார். மற்றைய உயிர்களின் மேல் இரக்கமின்றி கொல்பவர்களுக்கு நரகமே கிட்டும் என்றும், அவர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்ய காத்திருக்கும் பிணத்துக்கு ஒப்பானவர்கள் என்கிறார் யாகோபு சித்தர்.

எனவே இந்த நல்ல நாளில் பிற உயிர்களுக்கு தொல்லை தராதிருக்கும் மன உறுதியை அருளிடவேண்டி, எல்லாம் வல்ல அருளாளனை வணங்கி நிற்போம்.

இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு காவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இன்று பதிப்பிப்பதாக இருந்த அமாவாசை பற்றிய பதிவு நாளை மறுநாள் வெளியாகும். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அமாவாசையும், அகத்தியரின் கேள்வியும்!!

Author: தோழி / Labels:

இந்து மரபியலில் அமாவாசை முக்கியமான ஒரு தினமாக கருதப் படுகிறது. அம்மாவாசை தினங்களில் முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் தர்ப்பணமாய் கொடுக்கப் படுகிறது. அபிராமி பட்டரின் கதையும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். பஞ்சாங்கத்தில் அமாவாசை முக்கியமான திதிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது. இதைப் பற்றி முந்தைய பதிவில் விரிவாக பகிர்ந்திருக்கிறேன்.

நவீன ஆறிவியலின் அமாவாசை விளக்கம் நீங்கள் அறிந்ததே, மேலும் இந்த நாட்களில் உருவாகும் கூடுதல் ஈர்ப்புவிசையின் காரணமாய் கடலில் அலைகள் அதிகரிப்பதையும், இதே காரணத்தினால் மனிதனின் உடலிலும் கூட மாற்றங்கள் ஏற்படும் என்கிற தகவல்கள் நாம் அறிந்தவையே.. ஆனால் நமது இன்றைய பதிவு இதைப் பற்றியதல்ல!

அமாவாசை பற்றி அகத்தியர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம்.

பிறக்கமது வன்றியே யெழுதோற்றத்துள்ளும்
பேராக நாலுவகை யோனிக்குள்ளும்
பிறக்குமது பொறிஐந்தால் கோடாகோடி
பிணமாகிப் பிறக்கமட்டும் மாய்கையாலே
திறக்குமிது மேல்வாசல் சங்குமூச்சு
செல்லயிலே விந்துள்ளாய் ஆத்துமாச்செல்லும்
மறக்குமிது வரைகளிலே செனிப்பதில்லை
மணஞ்சென்ற யிடங்கயிலே பிறப்புண்டாமே.

உண்டான மாதாவும் பிதாவுமாண்டால்
உத்தமனே தற்பனங்கள் செய்வோமென்பார்
பற்றான கிரியையொடு சரியைக்கெல்லாம்
பரிசுகெட்ட நினைவாலே நீரிறைத்துத்தானும்
கொண்டாடித் தற்பனங்கள் செய்வோமென்பார்
குரும்பாரப்பா யெள்ளோடு தண்ணீர்வார்ப்பார்
தென்டனிடு வார்கோயில் தோறுஞ் சென்று
தெளிவற்றே தெளியார்கள் அலைவார்தானே.

அலைவார்கள் அவரவர்கள் தேசவாழ்க்கை
அமாவாசை விரதமென்பார் திதிகள்செய்வார்
உலைவார்கள் வேதியற்கு அன்னமீய்ந்து
உறுதியாய்ப் பிண்டமிட்டு பிதிர்க்குப் பூஜை
மலையாமற் கொடுப்பார்கள் யெள்ளுந்தண்ணீர்
வார்ப்பார்கள் வேதமுறை வளப்பமாக
நிலையான விந்துகெட்டுப் பிணமாய்ப்போனால்
நீயார்க்குத் தற்பனங்கள் செய்யும்வாரே.

வாரான பிதுர்கன்மம் யோகிதீர்ப்பான்
மற்றவர்க்கு வாராது லுத்தமாண்பர்
நீறான பிணத்துக்குப் பிண்டமேது
நீதிகெட்ட யெள்ளுநீர் வார்ப்பதேது
தூறான வேதநூல் பார்த்துவாசி
சுழன்றலைவார் உலகமெல்லாம் சுத்தமாடு
தேறாத பசுக்களப்பா மாய்கைக்குள்ளே
சிக்கினாற் பிறப்பிறப்பிற் சிக்கினாரே.


அமாவாசை அன்று இறந்து போன தம் தாய், தந்தையருக்கு திதி செய்வதாகக் கூறி விரதம் இருந்து பிராமணர்களுக்கு விருந்து படைத்து, பிண்டம் போட்டு பிதுர் பூசை செய்து எள்ளும் தண்ணீரும் வார்த்து கோவில் கோவிலாய் சுற்றுகிறவர்களை தெளிவற்றவர்கள் என்கிறார்.

தன் முன்னோரின் கர்மங்களை தீர்க்கும் வேதமுறை எனச் சொல்லி இந்த திதி சடங்குகளைச் செய்வோரை நோக்கி பின் வரும் கேள்விகளையும் வைக்கிறார் அகத்தியர்.

பிணமாக போய் எரித்து சாம்பலும் ஆகிவிட்ட பின்னர் அதற்கு ஏன் பிண்டம்?

உடலே அழிந்து சாம்பலாகிப் போன பின்னர் எதை நினைத்து தர்பணம் செய்கிறாய்?

நீ கொட்டும் எள்ளும் தண்ணீரும் எதற்கு போய்ச் சேரும்?

இன்றைய பகுத்தறிவாளர்கள் மற்றும் கடவுளை மறுப்போர் கேட்கும் கேள்விகளை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முகத்தில் அறைகிற மாதிரி அகத்தியர் கேட்கிறார்.

அப்படியானால் இந்த பிதுர் கர்மங்களை எப்படி தீர்ப்பது?

அமாவாசை அன்று என்னதான் செய்ய வேண்டும்?

இதற்கான அகத்தியரின் தெளிவுகள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மின் நூல்களின் தொகுப்பு!

Author: தோழி / Labels:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குருவருளினால் இந்த சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவின் ஊடாக, நமது சித்தர் பெருமக்கள் அருளிய பதினோரு நூல்களை மின் நூலாக்கி பகிர்ந்திருக்கிறேன். நமது முன்னோர்களின் அரும்பெரும் கலைச் செல்வமான இந்த நூல்கள் தமிழறிந்த அனைவரிடமும் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்பதே என் நோக்கம். அதன் பொருட்டே இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளும் படி பொதுவில் வைத்திருக்கிறேன்.

தொடர்ந்து நண்பர்கள் பலரும் மின்னஞ்சல் வாயிலாக இந்த நூல்களை அனுப்பிட கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவில் அந்த பதினோரு மின் நூல்களின் இணைப்பினை மீண்டும் ஒருமுறை தந்திருக்கிறேன்.இதனை யாரும் தரவிரக்கிக் கொள்ளலாம்.கட்டணம் ஏதுமில்லை. அறிந்தவர் தெரிந்தவர் மற்றும் ஆர்வமுள்ள அனைவருடனும் இந்த இணைப்பினை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த நூல்களை தமிழறிந்த மற்ற நண்பர்களிடையே பகிர்வதன் மூலம் நம் தாய்மொழிக்கும், அதன் பெருமையை நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களுக்கும் நம்மால் ஆன வகையில் செய்யும் சிறப்பாக அமையும்.

நன்றி நண்பர்களே!

தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - நிறைவுப் பகுதியும்,மின்னூலும்.

Author: தோழி / Labels: , ,

அகத்தியர் ஆரூடத்தில் கடைசி ஆறு எண்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.

௫௯.(59) வந்தால்..

அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது வந்திருப்பதால், கடந்த சில நாட்களாக துன்பப்பட்டாய், நட்டமும் அடைந்தாய். கோபத்தால் பல பொருட்களை இழந்தாய். ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு கவலை அடைந்தாய். இனி பயப்பட தேவையில்லை. தினமும் நவக்கிரகங்களை வணங்கிவர உனக்கு நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். இந்த வாரம் கழிந்த பிறகு உனக்கு நன்மையாக அமையும் என்கிறார் அகத்தியர்.

௬o. (60) வந்தால்..

வருத்தமே யுந்தனுக்கு அதிகமாகும்
வையகத்தில் நினைப்பதெல்லாம் அபலமாகும்
பொருத்தமுடன் செய்தொழிலில் நஷ்டமாகும்
புவிதனிலே மனைவிமக்கள் பகையதாகும்
கன்னியால் மனைதனிலே கலகமாகும்
கச்சிதமாய் வைத்தபொருள் களவுபோகும்
தரித்திரமே மேலோங்கும் சினேகம் நீங்கும்
தணியுமப்பா நாளுக்குநாள் தான்பாரே.


ஆரூடத்தில் அறுபது வந்திருப்பதால், உனக்கு மனக்கவலையே அதிகமாகும். செய்யும் தொழிலில் நட்டமே கிட்டும். மனைவி மக்களும் பகையாவார்கள். ஓரு பெண்ணினால் குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீட்டில் களவு போகும். நல்லவர்கள் நட்பு இல்லாது போகும். இந்த பிரச்சினைகளெல்லாம் படிப்படியாக குறைந்து பின் முற்றாக நீங்கும் என்கிறார் அகத்தியர்.

௬௧. (61) வந்தால்..

யோகதிசை உந்தனக்கு வந்ததாலே
ஒன்பதிலே குருபகவான் பார்வையாச்சு
தோகையரால் லாபமண்டு துயரம் பொச்சு
துரைத்தனத்தி லுந்தனக்கு தொழிலுண்டாச்சு
பாகமாய் வந்தபிணி பதங்கலாச்சு
பலவூர்கள் செய்தியதால் பாக்கியமாச்ச
ஆகமத்தின் மொழியிதுதான் உண்மையாச்சு
அறிவித்தேன் அருள்வாக்கை அறிகுவாயே.


ஆரூடத்தில் அறுபத்து ஒன்று வந்திருப்பது, ஒன்பதாமிடத்தில் குருபார்வையும் யோக திசையும் வந்திருப்பதை குறிக்கிறது. பெண்களால் லாபம் உண்டு. கவலைகள் எல்லாம் நீங்கும். மிகுந்த செல்வாக்கான இடத்தில் தொழில் வாய்க்கும். உனக்கு வந்த நோய்கள் எல்லாம் நீங்கும். பல இடங்களிலும் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இந்த ஆரூடம் உண்மையாகும். இது அருளால் சொல்லும் வாக்கு என்கிறார் அகத்தியர்.

௬௨. (62) வந்தால்..

பனிரெண்டில் சூரியனும் உதித்ததாலே
பலபேர்களா லுனக்கு உதவியுண்டு
பணியணிகள் சேருமப்பா பலத்தலாபம்
பாவையர்க்கு கோபமதில் பாலனாகும்
துணிந்து நீ எத்தொழில் செய்தபோதும்
தொல்லையின்றி விர்த்திகர மாகுமப்பா
தணியுமப்பா உந்தனுடகஷ்ட மல்லாம்
தட்டாமல் ஒன்பதுநாள் கழிந்திடவே.


ஆரூடத்தில் அறுபத்து இரண்டு வந்திருப்பது, பன்னிரெண்டில் சூரியன் இருப்பதை குறிக்கும். பலர் உனக்கு உதவுவார்கள். நல்ல தொழிலும், ஆடை ஆபரணங்களும் சேரும். பலவித லாபம் உண்டாகும். உன் மனைவிக்கு ஆண்குழந்தை தரிக்கும். எந்த தொழிலை செய்தாலும் எந்த தடையும் இல்லாமல் விருத்தியாகும். இன்னும் ஒன்பது நாளில் உனக்கு இருக்கும் துன்பம் எல்லாம் விலகிவிடும் என்கிறார் அகதியர்.

௬௩. (63) வந்தால்..

பொல்லலாத சனி ராகு பகையினாலே
போகுமொரு காரியங்கள் தடங்கலாகும்
நில்லாது பலவிதமாய் அலையச்செய்யும்
நிஷ்டூரம் சினேகதிரால் கவலையாகும்
நல்லதைச் சொன்னாலம் பொல்லாப்பாகும்
நஷ்டமப்பா தொழில் முதறைநான் விந்தையுண்டு
சொல்லவே நாற்பத்தி மூன்று நாளில்
சுகமுண்டு பருதிகண்ட பனிபோலே.


ஆரூடத்தில் அறுபத்து மூன்று வந்திருப்பது, சனியும் ராகுவும் பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். எந்த செயலை செய்தாலும் அது தடங்கலாகும். அலைச்சல் அதிகமாகும். நண்பர்களால் கவலையடைய நேரும். நல்லதை சொன்னாலும் அது தீமையாகவே முடியும். தொழிலும் நட்டமடையும். இவை எல்லாம் நாற்பத்தி மூன்று நாளில் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்கிறார் அகத்தியர்.

௬௪. (64) வந்தால்..

அகஸ்தியானர் கூறியதோர் வாக்கியத்தை
யாருமே நம்பிமோசம் போனதில்லை
சுகத்தைத்தரும் குடும்பத்தின் கஷ்டந்தீரும்
சுபக்கிரக பார்வையினால் லாபமுண்டாம்
மகப்பெறும் சுகவாழ்வும் பகையம் நீங்கும்
மண்ணதனை எடுத்தாலும் பொன்னதாகும்
ஜெகந்தன்னிலே எதிரியின்றி செழித்து வாழ்வாய்.
தியாகராஜன் குகனருளால் செப்பினேனே.


ஆரூடத்தில் அறுபத்தி நான்கு வந்திருப்பது, சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்திருப்பதை குறிக்கும். அதனால் குடும்பக் கவலை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுகமான வாழ்வு அமையும். பகை கொண்டவர்கள் அதை மறந்து உன்னிடம் நட்பு கொள்வார்கள். நீ மண்ணை தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உனக்கு எதிரி என்று யாருமே இனி இருக்க மாட்டார்கள். இந்த ஆரூடத்தை நம்பிய எவரும் மோசம் போனதில்லை. ஏன் என்றால் இந்த ஆருடத்தை சிவனின் அருளாலும், முருகனின் அருளாலும் பாடியிருக்கிறேன் என்கிறார் அகத்தியர்.

அகத்தியர் அருளிய அகத்தியர் ஆரூடம் இத்துடன் முற்றிற்று.

நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த பத்து நாட்களாய் தொடராக வந்த இந்த ஆரூடத் தகவல்களை ஒரே மின்னூலாக உருவாக்கி பகிர்ந்திருக்கிறேன்.தேவையுள்ளோர் இந்த இணைப்பில் இருந்து அந்த நூலை தரவிரக்கிக் கொள்ளலாம்.தேவையுள்ள் பிற நண்பர்களுக்கு இந்த இணைப்பினைக் கொடுத்து உதவிடுமாறும் வேண்டுகிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 52 முதல் 58 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

௫௨. (52) வந்தால்..

கஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு
கந்தநாதன் கிருபையுனக் குண்டாச்சு
நஷ்டமெல்லா மொழிந்து நன்மையாச்சு
நலம்பெறவே குடும்பமதில் சுகமுண்டாச்சு
இஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு
இனத்தினிலே கல்யாணம் கூடலாச்சு
அஷ்டலஷ்மி வுன்மனையில் வாழலாச்சு
அதனாலே வேணபொருள் சேரலாச்சு.


ஆரூடத்தில் ஐம்பத்தி ரெண்டு வந்திருப்பது, உன் துன்பம் எல்லாம் தீர்ந்து நன்மையான காலம் வந்திருப்பதைக் குறிக்கிறது. இனிவரும் நாட்கள் நன்மையானதாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியும் நிம்மதியும் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டில் திருமணம் நடைபெறும். உன் வீட்டில் அஷ்ட லட்சுமி குடியிருப்பாள். அதனால் எல்லா நன்மையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

௫௩. (53) வந்தால்..


விதிப்பயனிது வென்று நொந்திடாதே
உதித்தொரு கிரகத்தின் கோளாறிது
நிதியின்றி முன்கோடம் நீதான் கொண்டு
நிகழ்ந்தொணா பழிசெயலி லீடுபட்டு
பதியிழந்தாய் பொருளிழந்தாய் தொழிலிழந்தாய்
பரதேசிபோல் மனது கலங்கி நின்றாய்
சதியில்லை மாதம்மூன்று சென்றதானால்
சாதிப்பாய் பலவிதத்தில் ஜெயமேதானே.


ஆரூடத்தில் ஐம்பத்தி மூன்று வந்திருப்பது, உன்னை கெட்ட கிரகத்தின் கோளாறுகள் வருத்துவதைக் குறிக்கிறது. இது என் விதி என்று வருந்தி வணங்கும் தெய்வங்களையும், பெற்றோர்களையும் நிந்தனை செய்யாதே. இதற்கு முன்னும் உனது முன் கோபத்தினால் வீட்டை விட்டு பிரிந்து சென்றாய். கையில் இருந்த பொருட்களையும் இழந்தாய். தொழிலையும் இழந்தாய். இப்போது மீண்டும் மனம் கலங்கி கவையுடன் நிற்கிறாய். இவை எல்லாம் இன்னும் மூன்று மாதத்தில் தீரும். அதன் பின் பல வழிகளிலும் சாதித்து வெல்வாய் அதுவரை பொறுமையுடன் இருக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.


௫௪. (54) வந்தால்..

சந்தேகங் கொள்ளாதே சாற்றுவேன் கேள்
சண்முகனின் பாதமலர் சாட்சியாக
உந்தனிட எண்ணமெல்லாம் முடியுமப்பா
உன்மனையில் வேணபொருள் சேருமப்பா
தன்மையுள்ளோர் உனக்குதவி யாவாரப்பா
தாட்டிகமாய் வியாபாரம் தழைக்குமப்பா
தொந்திரவு துணைநொயும் துலையுமப்பா
துதித்திடுவாய் உந்தன்குல தெய்வந்தன்னை.


ஆரூடத்தில் ஐம்பத்தி நான்கு வந்திருப்பதால். சந்தேகப்படாதே! சண்முகன் சட்சியாக உன் எண்ணங்கள் எல்லாம் இனி நிறைவேறும். உன் வீட்டில் பொருட்கள் சேரும். உயர் பதவியில் இருப்பவர்கள் உனக்கு உதவுவார்கள். வியாபாரம் விருத்தியாகும். அதிக சிரமம் கொடுத்து வந்த நோய் விலகும். அத்துடன் உன் குல தெய்வத்தை வணங்கி வர மேலும் பல நன்மைகளை அடையலாம் என்கிறார் அகத்தியர்.

௫௫. (55) வந்தால்..

இரண்டிலே சந்திரனும் மிருக்க தீதாம்
இன்பமுடன் மணமாலை சூட்ட தீதாம்
விரையமுண்டு மாடுமனை வாங்க தீதாம்
வெளுயூருக்கு சென்றாலும் மிகவும் தீதாம்
தரணிதனில் கொடுத்த கடன் கேட்க தீதாம்
தத்துவமாய் வியாபாரம் செய்ய தீதாம்
உரமான சினேகிதரால் உனக்கே தீதாம்
உத்தமனே வாரமைந்து கழித்திடாயே.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஐந்து வந்திருப்பது, இரண்டாம் இடத்தில் சந்திரன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் நன்மை நடக்காது. திருமணம் செய்யவும், புது வீடு, கால் நடைகள் வாங்கவும் இந்த காலகட்டம் நல்லதல்ல. வெளியூருக்கு செல்வதும் தீமையை கொடுக்கும். கொடுத்த கடன் கேட்க சென்றாலும் தீமையே நடக்கும். வியாபாரமும் தீமையிலேயே முடியும். அன்புமிக்க நண்பர்களாலும் தீமையே நடக்கும்.ஆனாலும் ஐந்து வாரம் பொறுமையாக இருந்தால் அதன் பின் நன்மை கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.

௫௬. (56) வந்தால்..

எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்குமப்பா
எத்தொழிலை செய்தாலும் லாபமப்பா
உன்மனதின் கவலையெல்லாம் தீருமப்பா
உடன் பிறந்தோர் பந்துக்களால் உதவியப்பா
வண்ணபகை யாள ருறவாவாரப்பா
வந்தநோய் வழிவிலகி நிற்குமப்பா
நன்மையுடன் பலபொருளும் சேருமப்பா
நாற்பத்தி ரெண்ட நாளில் நலமுண்டாமே.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஆறு வந்திருப்பதால், எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்கும். எந்தத் தொழிலை செய்தாலும் லாபமே கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் இனி தீரும். சகோதரர்கள், உறவினர்கள் எல்லோரும் உதவுவார்கள். பகையாளிகளும் பகையை விட்டு ஒன்று சேர்வார்கள். நன்மையான பல பொருட்கள் சேரும். உன்னை வருத்தும் நோய் விலகும். அத்துடன் இன்னும் நாற்பத்தியிரண்டு நாளில் பல பொருட்கள் சேர்வதுடன் நன்மைகளும் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௫௭. (57) வந்தால்..

ஆறிலே சூரியனு மிருப்பதாலே
அனுகூல மாகுமப்பா உனது எண்ணம்
போரிலே நின்றாலும் ஜெயமே யுண்டு
போன பொருள் தவணையின்றி வந்து சேரும்
கோரிய வியாபாரம் லாபங்காணும்
கோவுடனே மனைகோல பாக்ய மண்டாகும்
பாரிலே பதிமூன்று நாட்குபின்னே
பலவிதத்தில் சந்தோச மடைகுவாயே.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஏழு வந்திருப்பது, ஆறாம் இடத்தில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். உன் எண்ணம் எல்லாம் நினைத்தபடியே நடக்கும். போருக்கு சென்றாலும் வெற்றியே கிடைக்கும். கைவிட்டு போன பொருட்கள் முழுமையாக வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பசுமாடுகள் வாங்கவும் வீடு கட்டவும் வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் பதின் மூன்று நாட்களுக்குப் பின் பல வழிகளிலும் உனக்கு சந்தோசம் கிட்டும் என்கிறார் அகத்தியர்.

௫௮. (58) வந்தால்..

குருமுனியின் வாக்கியந்தான் பிசகாதப்பா
குறித்துள்ள எண்ணமது பலியாதப்பா
ஒருவரிட சொல்கேட்க லாகாதப்பா
உடன்பிறந்தோர் பந்துக்களும் பகைப்பாரப்பா
தருமமே செய்தாலும் வறுமையப்பா
தரித்திரத்தால் பொருள் விரைய மாகுமப்பா
ஊருமாறி ஊரைவிட்டும் ஒட்டுமப்பா
உத்தமனே ஒருமாதம் கழித்திடாயே.


ஆரூடத்தில் ஐம்பத்தி எட்டு வந்திருப்பதால், இப்போது மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் எதுவும் நடக்காது. ஒருவரின் சொல்லும் கேட்காதே. சகோதரர்களும் உறவினரும் பகைவர் ஆவார்கள். தருமம் செய்தாலும் வறுமையே வரும். சேமிப்பும் வீண் விரயமாகும். ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று அலைய வேண்டி ஏற்படும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.

நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளைய பதிவில் அகத்தியர் ஆரூடம் தொடரை மின்னூலாக பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 45 முதல் 51 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் ஆரூடத்தில் இன்று நாற்பத்தி ஐந்தில் இருந்து ஐம்பத்தியொன்று வரையிலான எண்களுக்கான பலனை இன்று பார்ப்போம்.

௪௫. (45) வந்தால்..

அலட்சியமாய் நினைத்ததெல்லாம் அதிர்ஷ்டமாச்சு
அஷ்டமத்தில் புதபகவான் அமரலாச்சு
துலக்கமுள்ள பெரியோர்க ளுதவியாச்சு
துன்பமெலா மனைவிட்டு அற்றுபோச்சு
நலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று
நட்சத்திரம் போலுனக்கு அமையலாச்சு
கலகமிலா லட்சுமியின் கருணாயலே
கண்டிடுவா யிருபத்து நாளிலுண்மை.

ஆரூடத்தில் நாற்பத்தி ஐந்து வந்திருப்பதால், எட்டாமிடத்தில் புதன் வந்திருப்பதை குறிக்கிறது. இதனால் இது பயன் தராது என்று நீ அலட்சியமாக விட்டதெல்லாம் இனி நன்மையை கொடுக்கும். பெரியவர்கள் உதவியும் கிடைக்கும். துன்பங்கள் எல்லாம் வீட்டை விட்டு சென்றுவிடும். உனக்கு வலது பக்கதில் மச்சம் ஒன்று நட்சத்திரம் போல் அமைந்திருக்கும். லட்சுமியின் கருணையால் இருபத்தியொரு நாளில் இந்த உண்மைகளை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அகத்தியர்.

௪௬. (46) வந்தால்..

உலகிலே நீயடையாத துன்பமில்லை
உறன்முறையா லுந்தனுக்கு உதவியில்லை
நலமொன்று குடும்பத்தி லடைந்ததில்லை
நஷ்டமே டைந்த பொருள் கணக்கேயில்லை
மலைத்தவுன் மனநோய்க்கு மகிழ்ச்சியில்லை
கலக்கமது உனைவிட்டு போவதில்லை
கண்டிதமாய் நவமாதம் கழித்திடாயே.


ஆரூடத்தில் நாற்பத்தி ஆறு வந்திருப்பதால், இதுவரை நீ அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. உறவினர்கள் உதவியும் உனக்கு கிடைக்கவில்லை. இதுவரை நன்மை என்று எதுவும் உன் குடும்பத்திற்கு நடந்ததில்லை. நட்டமடைந்த பொருட்களுக்கும் கணக்கில்லை. மகிழ்ச்சி இல்லாமல் மன நோயால் பாதிக்க பட்டவர் போல் இருக்கிறாய். கலக்கம் உன்னைவிட்டு போகவில்லை. இன்னும் ஒன்பது மாதம் பொறுமையுடன் இருந்தால் அதன் பிறகு நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

௪௭. (47) வந்தால்..

கிரகத்தின் தோஷமெல்லா மொழிந்துபோச்சு
கீர்த்தியுடன் எண்ணமது பலிதமாச்சு
உரமிகுத்த பந்துக்களால் உதவியாச்சு
உன்னுடைய வியாபாரம் லாபமாச்சு
சிரமமிகம் நோய் விலகும் காலமாச்சு
சிக்கனமாய் பிக்குகளும் ஒழியலாச்சு
தரணிதன்னில் தழைத்தோங்கி வாழலாச்சு
தாட்டிகமாய் நாளேழில் சுகமுண்டாச்சு.


ஆரூடத்தில் நாற்பத்தியேழு வந்திருப்பது, உன் கெட்ட கிரகங்களெல்லாம் விலகி விட்டதைக் குறிக்கும். இனி உறவினர்கள் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பலவித சிரமங்களைக் கொடுத்த நோயும் விலகும் காலம் இது. உன் சேமிப்பால் கடன்கள் யாவும் தீரும். பூமியில் சிறப்புடன் வாழ்வாய். இவை எல்லாம் இந்த ஆருடம் பார்த்த நாளில் இருந்து எழு நாளில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௪௮. (48) வந்தால்..

உத்தனுடைய எண்ணமெல்லாம் உறுதியாச்சு
உடன்பிறந்தோர் பந்துக்களால் உதவியாச்சு
சொந்தமான உன் தொழிலில் லாபமாச்சு
சுந்தரியால் உன்குடும்பம் செழிக்கலாச்சு
மந்தமதியுள்ளோரின் நேசம் போச்சு
மகாநோயும் தீர்ந்து மணம் கூடலாச்சு
எந்தமுகம் போனாலும் தங்கமுகமாச்சு
ஏழைகட்கு தர்மம் செய்வாய் ஈசன் சாட்சி


ஆரூடத்தில் நாற்பத்தி எட்டு வந்திருப்பதால், உன் எண்ணங்களெல்லாம் சிறப்பாக நிறைவேறும். சகோதரர்களாலும் சொந்தங்களாலும் உதவி கிடைக்கும்.செய்யும் தொழில் விருத்தி அடையும். மனைவியால் உனது குடும்பத்தில் அமைதி கிட்டும். உனைக் கெடுக்க நினனத்த வஞ்சகர்களின் உறவும் விட்டுப் போய்விடும். நோயும் குணமடையும். வீட்டில் திருமணமாகாமல் இருப்போருக்கு திருமண பாக்கியம் கிட்டும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதைகளும் கிடைக்கும். எழைகளுக்கு தருமம் செய்!, ஈசன் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் என்கிறார் அகத்தியர்.

௪௯. (49) வந்தால்..

அப்பனெ வருடமென்றாய் கஷ்டப்பட்டாய்
அதற்கு முன்னும் வெகுநாள் கவலையுற்றாய்
செப்பவே மாதமொன்று சென்றதானால்
சித்தத்தில் நினைத்த எண்ணம் ஜெயமேயாகும்
தப்பாது உன்வாக்கு தொழிலுமோங்கு
தனபாலம் மிகவுண்டு நலியம் நீங்கும்
ஒவ்பில்லா மணங்கூடும் மகப்பேறாகும்
உலகமதில் அகஸ்தீயனார் உரைத்தவாக்கு.


ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்பது வந்திருப்பது, நீ ஒரு வருடமாக துன்பமும் அதற்கு முன்னரும் பல நாட்களாக கவலைகளையும் அடைந்ததைக் குறிக்கும். ஆனால் இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்தபின்னர், நினைத்த எண்ணம் எல்லாம் இனிதாக நிறைவேறும். உன் வாக்கு பிழைக்காது. தொழிலும் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் விலகும். திருமண யோகம் கிட்டும். குழந்தை பேறும் உண்டாகும். இது உலகத்தவருக்கு அகத்தியர் சொல்லும் வாக்கு என்கிறார்.

௫o. (50) வந்தால்..

நினைத்து நீ எடுத்ததொழில் பலிக்குமப்பா
நிச்சயமாய் புவிதனிலே அடைவாய் லாபம்
உனைகெடுக்க வேணபேர் கூடினாலும்
உறவற்று அவர்கூட்ட மொழிந்துபோகும்
சினந்தவிர்த்து உந்தன்குல தெய்வந்தன்னை
சிறப்புடனே பூஜையது செய்வாயானால்
கணமுடனே உலகமதில் வாழ்வாயென்று
கலக்கமிலா குருமுனியும் உரைத்திட்டாரே.


ஆரூடத்தில் ஐம்பது வந்திருப்பதுதால், நீ நினைத்து செய்யும் தொழில் யாவும் சிறப்பாக நடைபெற்று அதிக லாபம் கிடைக்கும். உன்னைக் கெடுக்க நினைத்து எத்தனை பேர் கூட்டாக சதி செய்தாலும் அவர்கள் கூட்டமே அழிந்து போகும். நீ அதற்காகக் கோபம் அடையாமல், அதைப் பொருட்படுத்தாமல் குலதெய்வத்தை வணங்கிவர உலகில் சிறப்புடன் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.

௫௧. (51) வந்தால்..

கேதுசனி ராகுனக்கு பகைதானப்பா
கெடுதியுண்டு வாழ்வினிலே மனக்கிலேசம்
வாதுகளும் வம்புகளும் வந்தேதீரும்
வகைதப்பி யிடத்தைவிட்டு மாற்றிவைக்கும்
மாதுமக்கள் பந்துக்களும் மனைவெறுப்பார்
மனதுவைத்து செய்வதெல்லாம் நஷ்டமாகும்
ஏதுயினி செய்வதென யேங்கிடாதே
இடைஞ்சலெல்லாம் தீருமப்பா வாரமாறில்.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்று வந்திருப்பது, உனக்கு சனி ராகு கேது பகையாக இருப்பதைக் குறிக்கும். இதனால் குடும்பத்தில் பலவிதமான கவலைகள் ஏற்படும். எடுத்ததெற்கெல்லாம் வம்பு வழக்குகள் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்ல வேண்டி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் உன்னை வெறுப்பார்கள். மனம் விரும்பி செய்யும் காரியங்கள் எல்லாம் நட்டமாகும். இனி என்ன செய்ய என்று ஏங்காதே. இந்த துன்பம் எல்லாம் ஆறு வாரத்தில் நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 38 முதல் 44 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

இன்றைய பதிவில் முப்பத்தி எட்டு முதல் நாற்பத்தி நான்கு வரையிலான எண்களின் பலன்களைப் பார்ப்போம்.

௩௮. (38) வந்தால்..

இடம்விட்டு இடம்போக எண்ணமுண்டு
இருந்தாலும் அதனாலே லாபமுண்டு
தீடமான பெரியோரால் நன்மையுண்டு
தென்மேற்கு திசையிலிருந்து செய்தியுண்டு
திடமதிலே உனதுகுறை வேணதுண்டு
தைரியமாய் எத்தொழிலும் செய்யநன்று
முடவனெனும் சனியானவன் விலகிவிட்டான்
மூன்றுநாள் போகபின்னே சுகமுண்டாமே.

ஆரூடத்தில் முப்பத்தி எட்டு வந்திருப்பதால், முடவன் என்று சொல்லப்படும் சனியின் பார்வை உன்னை விட்டு விலகிவிட்டதாக கொள்ளலாம். இப்போது இருக்கும் இடம்விட்டு வேறிடம் போக எண்ணியிருக்கிறாய்!, அதனால் லாபமுண்டாகும். பெரியோர்களால் உதவியும் நன்மையும் உனக்கு உண்டு. தென்மேற்கு திசையிலிருந்து நன்மையான செய்திகள் வந்து சேரும். எந்த விதமான தொழிலை செய்தாலும் அதனால் லாபம் கிடைக்கும். இன்னும் மூன்று நாள் கடந்த பின்னர் அனைத்தும் நன்மையாகும் என்கிறார் அகத்தியர்.

௩௯. (39) வந்தால்..

பருதியது பத்தினிலே உதயமாச்சு
பகைவர்களின் பூண்டடியோ டொழியலாச்சு
வருத்தமே தந்தபிணி விலகலாச்சு
வறுமையுடன் மனக்குறையு மற்றுப்போச்ச
நிருபமது வெளியிலிருந்து வருகலாச்சு
நீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு
பெருமைபெற உந்தனுக்கு காலமாச்சு
பேசுமப்பா வுன்வீட்டில் கெவுளிதானே.


ஆரூடத்தில் முப்பத்தி ஒன்பது வந்திருப்பது, உனக்கு பத்தாவது விட்டில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் லாபங்களெல்லாம் உண்டாகும். உன் எதிரிகள் பூண்டோடு ஒழிவர். நோய் விலகும். உனது வறுமையும் மனக் கவலையும் நீங்கும். வெளியிலிருந்து நன்மையான செய்திகள் வரும். நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். நீ பெருமையடையும் காலம் இது. உன் வீட்டில் பல்லி சொல்லும் என்கிறார் அகத்தியர்.

௪o. (40) வந்தால்..

சளியவன் வக்கரித்ததால் சண்டைநேரும்
சகலவித காரியமும் தடங்கலாகும்
பணிவான மனிதர்களும் பகையேயாவார்
பலபொருளும்சேதமுண்டு காகும்பேளவரே
துணிவான காரியத்தை செய்ய நேரும்
துன்பமிக நேருமப்பா வியாதிகாணும்
கனிவான கடனாலே மனஞ்சஞ்சலிக்கும்
கழித்திடுவாய் நாற்பத்தி ஏழுநாளே.


ஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.

௪௧. (41) வந்தால்..

வையகத்தி லுன்கவலை நீங்கலாச்சு
வைரிகளும் உனைக்கண்டு ஏங்கலாச்சு
கைவிட்டு போனபொருளண் வருகலாச்சு
கன்னியர்க்கு மனைதனிலே கர்ப்பமாச்சு
பையவே வருத்தும் பிணி பறந்துபோச்சு
பாலகனே வெளியூரில் லாபமாச்சு
கைத்தொழிலும் வர்த்தகமும் ஓங்கலாச்சு
கருத்துடனே ஏழைகட்கு தருமஞ்செய்ய.


ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்று வந்திருப்பதால், இப்பொழுது உன் கவலைகளெல்லாம் நீங்கி வருகிறது. எதிரிகளும் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். உன் மனைவிக்கு கர்ப்பந்தரிக்கும். உன்னை கவலைக்குள்ளாகி வந்த நோய் நீக்கும். வெளியூரில் இருந்து லாபம் கிடைக்கும். வியாபாரமும் தொழிலும் பெருகும். கவனமாக ஏழைகளுக்கு தர்மம் செய்து வர நாளுக்கு நாள் நன்மை அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர்.

௪௨. (42) வந்தால்..

மனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான்
மாதமொன்றாய் கவலையுற்று வருந்துகின்றாய்
இனமுள்ளவோர் பெண்மணியின் கலகத்தாலே
இடையூறு மிகவுண்டுன் குடும்பந்தன்னில்
தனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய்
நிஷ்டூருனாக நின்றாய் வுன்குடும்பத்தாருக்கு
தினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால்
தீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே.


ஆரூடத்தில் நாற்பத்தியிரெண்டு வந்திருப்பதால், நீ மனதில் ஒர் எண்ணத்தை நினைத்து ஒருமாதமாக கவலைப்படுகிறாய். உன் குடும்பத்தில் ஒரு சிவந்த நிறமுள்ள பெண்மணியினால் கலகம் உண்டாகி, அதனால் அதிக இடையூறுகள் அதிகம் ஏற்படும். இதனால் பலவிதத்திலும் பொன் பொருள் நிலம் எல்லாம் இழந்தாய். குடும்பத்தவர்களுக்கு பகைவன் போலானாய். நாள் தோறும் நவக்கிரகத்தை வணங்கி வந்தால் இவை தீரும் என்கிறார் அகத்தியர்.

௪௩. (43) வந்தால்..

ஒன்பதிலே புதபகவான் உனக்கமர்நத
உறுதியினால் நினைத்த எண்ணம் பலிதமாக
கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கெண்டம் போச்சு
கடன் கொடுத்த பொருள் வரவும் காலமாச்சு
மண்மனையும் பொன்பொருளும் சேரலாச்சு
மாடாடு கொள்ளவும் பால்பாக்கியமாச்சு
துன்மார்க்கர் சகவாசம் வைத்திடாமல்
தொல்லுகில் நல்விதமாய் வாழ்ந்திடாயே.


ஆரூடத்தில் நாற்பத்தி மூன்று வந்திருப்பது, புதன் ஒன்பதாவது விட்டில் அமர்ந்திருப்பதைக் குறிக்கும். கண்ணியமான வாழ்க்கை வாழ்வாய். உனக்கிருந்த கண்டம் போய்விட்டது. கடன்கொடுத்த பொருள் கை வரும் காலம் இது. நிலம் வாங்கவும் மனை வாங்கவும் பொன் பொருள் சேரவும் உகந்த நேரமிது. ஆடு மாடு வாங்கவும் முடியும். ஆனால் தீயவர்களுடன் தொடர்பு வைக்காதே, அவர்களை விட்டு நிங்கினால் உனக்கு ஒருவித கவலையும் உண்டாகாது என்கிறார் அகத்தியர்.

௪௪. (44) வந்தால்..

பாம்பின் தெரைபோல் பதறிடாதே
பதட்டமாய் ஒருவரையம் நிந்திக்காதே
விம்புகொண்டு குடும்பத்தை வெறித்திடாதே
வெகுகலகம் உன்மீத வரும்தப்பாதே
சோம்பல்கொண்டு செய்தொழிலை விட்டிடாதே
சித்தமது நோய்நொடியாயல் கலங்கிடாதே
ஆம்செவ்வாய் சனியாலே தோஷமுண்டு
ஆதரவாய் நவக்கிரகபூஜை செய்ய.


ஆரூடத்தில் நாற்பத்தி நான்கு வந்திருப்பதால், உனக்கு செவ்வாய் மற்றும் சனியின் தோசமுள்ளது. இதன் காரணத்தினால் பாம்பின் வாயில் சிக்கிய தேரையைப் போல் பதறி ஒருவரையும் நிந்தனை செய்யாதே. அதிக துன்பத்தால் குடும்பத்தை வெறுக்காதே. பலவிதமான கலகங்கள் உன் குடும்பத்திற்கு ஏற்படும். சோம்பல் குணம் வந்து தொழிலைக் குழப்பும். நோயால் பாதிக்கப்படுவாய். கவலைப் படாமல் நவக்கிரகத்தை வணங்கிவர நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 31 முதல் 37 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் ஆரூடம் தொடரில் இதுவரையில் முதல் முப்பது எண்களுக்கான பலன்களைப் பார்த்தோம். இனி வரும் நாட்களில் மீதமிருக்கும் எண்களின் பலன்களையும் பார்ப்போம்.

௩௧. (31) வந்தால்..

இப்பொழுது உந்தனுக்கு கெட்டகாலம்
இருந்தாலும் பயமில்லை சுகமுண்டாகும்
கொப்பெனவே குடும்பமதில் கலகமாகும்
கொடுத்ததை கேட்டாலே பகையுமுண்டாகும்
ஒப்பவே வுபகாரம் செய்திட்டாலும்
உலகினிலே அபகார மாக நேரும்
தப்பாது தொழில் முறையில் நஷ்டமாகும்
தயங்காமல் பத்துவார மிருந்திடாயே.


ஆரூடத்தில் முப்பத்தியொன்று வந்திருப்பதால், தற்சமயம் உனக்கு நல்லவை எதுவும் நடக்காது. ஆனாலும் பயம் கொள்ளத் தேவை இல்லை. இந்த நிலை மாறும். இக் காலத்தில் உன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த பொருளை கேட்கச் சென்றால் பகைமை உண்டாகும். யாருக்கேனும் உதவி செய்யதால் அது கெடுதலாகவே முடியும். செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும். இவை எல்லாம் இன்றிலிருந்து பத்து வாரத்தில் தீரும் என்கிறார் அகத்தியர்.

௩௨. (32) வந்தால்..

குருபகவான் ஒன்பதிலே இருக்க நன்றாய்
குவலயத்தில் சுபகாரியம் முடிக்கநன்றாம்
சிறுவர்களை பள்ளிதனில் சேர்க்கநன்றாம்
சிறப்புடனே வியாபாரம் செய்ய நன்றாம்
உருக்கமுடன் மனைகோல மிகவும் நன்றாம்
வெளியூர்க்கு போகவும் லாபமுண்டாம்
பொருள்தனை கொடுக்கவும் வாங்கவும் நன்றாம்
பிணிநீங்கும் மருந்துண்ண நன்மைதானே.


ஆரூடத்தில் முப்பத்தியிரண்டு வந்திருப்பதால், ஒன்பதாவது வீட்டில் குருபகவான் இருப்பதைக் குறிக்கிறது. குடும்பதில் சுப காரியங்கள் செய்யவும், பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவும், புதிய வியாபாரமும் தொடங்கவும், நிலம் வாங்கவும், வீடுகட்டவும் நல்ல தருணமாக இது இருக்கிறது. வெளியூருக்கு போகும் வாய்ப்பும், கொடுக்கல் வாங்கல் செய்யவும், நோய் தீர மருந்து உட்கொள்ளவும் சிறப்பான காலம் இது என்கிறார் அகத்தியர்.

௩௩. (33) வந்தால்..

ஏழுதனில் சந்திரனு மிருப்பதாலே
எடுத்ததெல்லா முந்தனுக்கு பெருத்தலாபமாம்
குழுமுந்தன் மைந்தர்களால் சுகமேயுண்டு
சொல்மொழிகள் தவறாது நடந்தேதீரும்
வாழுமுந்தன் மனைதனிலே பொருள் கிடைக்கும்
வகைதப்பிச் சென்றவரும் வந்துசேர்வார்
பாழுள்ள நோய்விலகும் நாளீரெட்டில்


ஆரூடத்தில் முப்பத்திமூன்று வந்திருப்பதால், செய்யும் செயல்கள் அனைத்து அதிக லாபத்தை கொடுக்கும். பிள்லைகளால் நன்மை உண்டாகும். சென்ன வாக்கு தவறாது நிறைவேறும். வாழும் வீட்டில் பொருள் சேரும். என்ன செய்வதென்று அறியாமல் வீடை விட்டு சென்றவர்கள் திரும்பி வருவார்கள். தொல்லை கொடுத்த நோய் விலகும். இவை அனைத்தும் இன்றிலிருந்து பதினாறு நாட்களில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௩௪. (34) வந்தால்..

சதுர்கோண கேதுபகை சதிக்குள்ளாக்கும்
சாராத குற்றமெல்லாம் சார்ந்ததேதீரும்
பிதுர் சொத்து இருந்தாலும் பாழாப்போகும்
பித்தமுடன் வாதகரம் தோஷங்காணும்
கதிகலங்கி காசினியில் நிற்கநேரும்
காதார துர்செய்தி கேட்கலாகும்
விதிபிசகா தானாலும் மதியைக்கொண்டு
மண்ணுலகில் வாரமெட்டு கழித்திடாயே.


ஆரூடத்தில் முப்பத்திநான்கு வந்திருப்பது, உனக்கு கேது பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். செய்யாத தவறெல்லாம் செய்ததாக குற்றம் சாட்டப்படுவாய். குடும்ப சொத்து இருந்தாலும் பயன் தராது. பித்தம், வாதம் ஆகியவற்றால் உருவாகும் நோய்கள் உண்டாகும். செய்வதறியாது கலங்கி காசியில் சென்று நிற்க வேண்டி ஏற்படும். கெட்ட செய்திகளையே கேட்க வேண்டி ஏற்படும். இந்தப் பலன்களை மாற்ற முடியாது என்றாலும் அவதானமாக எட்டுவாரத்தைக் கடந்தாயானால் நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

௩௫. (35) வந்தால்..

அம்புவியி லுந்தனிட கிரகமெல்லாம்
அனுகூல மாயிருக்க பயமேயில்லை
நம்பிய உன் யெண்ணமெலாம் பலிக்குமப்பா
நாட்டமிடும் வியாபாரமும் விர்த்தியாகும்
கொம்யனையாள் தன்னாலே குடிவிளங்கும்
குடும்பமதில் மனஸ்தாபம் விலகிப்போகும்
ஒன்பதுநாள் நவக்கிரக பூஜைசெய்ய
ஒழியும்மப்பா உனைபிடித்த பீடைதானே.


ஆரூடத்தில் முப்பத்தி ஐந்து வந்திருப்பதால், கிரகங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றது. இனி பயமில்லை. உன் எண்ணம் எல்லாம் கைகூடும். நட்டத்தில் இருக்கும் வியாபாரம் விருத்தியடைந்து லாபம் கிட்டும். உன் மனைவியின் மகத்துவத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தாருடன் இருக்கும் மனக்கசப்பு நீங்கும் என்று சொல்லும் அகத்தியர் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நவக்கிரகங்களை வழிபட்டு வந்தால் உனக்கிருக்கும் துன்பம் எல்லாம் விலகும் என்கிறார்.

௩௬. (36) வந்தால்..

ஜெயமாகும் உன்மனதில் நினைத்தஎண்ணம்
செல்வனே சித்தமது கலங்கிடாதே
துயர்கொண்டு பிரிந்தவரும் வந்துசேர்வார்
துணைவியுடன் மாடுமனையோடு வாழ்வாய்
பயமான நோய்விலகும் பாலராலே
பாக்கியங்கள் நீயடைவாய் பிற்காலத்தில்
கயிலநாதன் மைந்தன் சாட்சியாக
களிப்புறுவாய் இன்னுமேழு நானிற்குள்ளே.


ஆரூடத்தில் முப்பத்தி ஆறு வந்திருப்பதால், நினைத்த காரியம் யாவும் கைகூடும். மனக்கவலை கொள்ளாதே!, கவலையுடன் பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்து சேருவார்கள். துணைவியுடன், மாடு, மனை வாங்கி மகிழ்ச்சியாய் வாழ்வாய். பயம் ஏற்படுத்தும் நோய் விலகும். உன் பிற்காலங்களில் உன் பிள்ளைகளினால் பாக்கியங்கள் கிட்டும். சிவனின் மைந்தனான முருகன் சாட்சியாக இன்னும் ஏழு நாட்களிற்குள் மிகவும் மகிழ்ச்சியடைவாய் என்கிறார் அகத்தியர்.

௩௭. (37) வந்தால்..

மனக்கோட்டை கட்டி நீ மகிழ்ந்திடாதே
மலைத்தவுடன் கிரகமெல்லாம் கொடியதாச்சே
உனைகெடுக்க வேணபே ருறமேயாவார்
உகந்து நீ செய்தொழிலில் நஷ்டங்காண்பாய்
வினையமடன் வந்த நோய் வருத்தமாக்கும்
வேறிடத்தும் மாற்றி வைக்கும் கவலையாக்கும்
மனைவிமக்கள் சுற்றமும் உனைவெறுக்கும்
மாதமூன்று போனபின்னே மகிழுவாயே.


ஆரூடத்தில் முப்பத்தி ஏழு வந்திருப்பது, உனக்கு இப்போது கிரகங்களெல்லாம் நல்ல இடத்தில் இல்லை. மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி அடையாதே. உன்னை வஞ்சிக்கவே எல்லோரும் உன்னிடம் வந்து சேர்வார்கள். நீ செய்யும் தொழில் எல்லாம் நட்டமே ஏற்படும். நோய் வந்து வருத்தம் கொடுக்கும். இடம் மாறி கவலை அடைவாய். உற்றார் உறவினர்கள் உன்னை வெறுப்பார்கள். இந்த நிலை எல்லாம் மூன்று மாதங்களின் பின் நீங்கும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 22 முதல் 30 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

௨௨. (22) வந்தால்..

உள்ளத்தின் கவலையெல்லாம் உடனே தீரும்
உறவற்றுப் போனவரும் வந்து சேர்வார்
விள்ளவும் முடியாது உந்தன் வாழ்க்கை
வினோதமாம் பொன் பொருளும் சேர்க்கையாகும்
வள்ளலின் கிருபையால் வருட மூன்று
வலுக்குமப்பா எத்தொழிலைச் செய்தபோதும்
கள்ளத்திரு மால்மருக னுதவியாலே
கருதியதெல்லா முனக்கு ஜெயதாமே.


ஆரூடத்தில் இருபத்தியிரண்டு வந்திருப்பதால், இனி உன் கவலைகளெல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். பகையாகி பிரிந்து போனவரும் கூட உன்னிடம் வந்து சேருவார்கள். இனி வரும் நாட்களில் வினோதமான பொன் பொருள்களெல்லாம் சேர்க்கையாகும். எத் தொழிலை செய்தாலும் அது மிகுந்த லாபத்தை அளிக்கும். இந்த ராசி மூன்று வருடத்திற்கு நல்ல யோகமாக இருக்கும். திருமாலின் கிருபையால் எண்ணியதெல்லாம் இனி முடியும் என்கிறார் அகத்தியர்.

௨௩. (23) வந்தால்..

பாரப்பா உந்தனைப்போல் பாக்கியசாலி
அகிலமதில் நினைப்பதெல்லாம் ஜெயமேயாகும்
பார்வேந்தன் போலுனக்கு பாக்யமுண்டாகும்
பலதொழிலும் செய்திடவே லாபமுண்டாம்
கார்வண்ணனருளால் பெண் குழந்தையுண்டாம்
கவலையெல்லாம் தீருமதால் கலங்கவேண்டாம்
சீர்பெறவே சனிவார விரதம்பூண்டு
சிறப்புடனே நவக்கிரக பூசைசெய்.


ஆரூடத்தில் இருபத்திமூன்று வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் பலிதமாகும். தொழிலில் அளவற்ற லாபம் உண்டாகி குடும்பத்தில் செல்வச் செழிப்பும், அரசன் போல் வாழ்வும் உருவாகும். பரந்தாமனின் கருணையால் மனையில் ஓர் பெண்குழந்தையும் பிறக்கும். அக்குழந்தையினால் குடும்பத்திலுள்ள பல கவலைகளும் நீங்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து நவக் கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.

௨௪. (24) வந்தால்..

போனதை மறந்துவிட புகழேயுண்டு
புண்ணியனே மனக்கலக்கம் வேண்டாமென்று
கானகம் சென்ற ராமர் மற்றும் தருமர்
கனநளன் அரிச்சந்திரன் கதையைப்போல
ஆனதோர் இம்மாதம் சென்றதனால்
அழிந்திட்ட பொருளனைத்தும் வரவேநேரும்
வேணவே செல்வமுடன் கலகம் நீங்கும்
வார்த்தகமும் புத்திரரும் மிகவுண்டாமே!


ஆரூடத்தில் இருபத்திநான்கு வந்திருப்பதால், இதுநாள் வரை அளவில்லாத கஷ்டங்களையும் அதனால் தொழில் நஷ்டங்களையும் அடைந்து பலவிதமாக கவலை அடைந்து இருக்கிறாய். ஆனாலும் அந்தக் கவலைகள் எல்லாம் இப்பொழுதே மறந்துவிடு. தைரியத்தை கை விடாதே, இதற்கு முன் தருமர், நளன், அரிச்சந்திரன் போன்றவர்கள் எல்லாம் பல இன்னல்களை அடைந்து முடிவில் சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அது போல் உனக்கும் இம்மாதத்தின் பின்னரே நன்மை உண்டாகும். அழிந்த பொருள் எல்லாம் வந்துசேரும். கவலை எல்லாம் நீங்கும். இப்பொழுது கலங்காமல் காத்திரு என்கிறார் அகத்தியர்.

௨௫. (25) வந்தால்..

குற்றமுள்ள கிரகமெல்லாம் விலகிப் போச்சு
குடும்பத்தில் ஜெயகால முதவியாச்சு
பற்றறவே பதிமூன்று நாளேபோனால்
பாலகனே ஐந்தாண்டிற் குறைவேயில்லை
சுற்றமுடன் வாழ்ந்திடுவாய் சுகமே கூடும்
சுகவாழ்வும் மகப்பேறும் தொழிலும் ஓங்கும்
அற்புதமாய் பொருள்சேரும் அரசனைப்போல்
அகமகிழ் வாழ்ந்திடுவாய் அதிர்ஷ்டந்தானே.


ஆரூடத்தில் இருபத்தி ஐந்து வந்திருப்பதால், இது நாள்வரை உனக்கு இடைஞ்சல்களை விளைவித்த கிரகங்கள் எல்லாம் இப்போது விலகிவிட்டது. இன்னும் பதிமூன்று நாட்கள் போனால் அடுத்த ஐந்து வருடத்திற்கு குறைவின்றி குடும்பத்தாருடன் மகிழ்வுடன் வாழ்வாய். குழந்தை பேறும், தொழில் விருத்தியும் உண்டாகும். சிறப்பாக பொருள் சேரும். அரசன் போல் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.

௨௬. (26) வந்தால்..

பாலனே இனியொன்றும் பயமேயில்லை
பலிக்குமப்பா உந்தனுட எண்ணமெல்லாம்
மேலான லாபமெல்லாம் அடைவாயப்பா
மேதினியில் செய்தொழிலும் நீடித்தோங்கும்
ஆலமுண்டோன் அருளாலே ஆண்குழந்தை
அப்பனே உன்மனையில் பிறக்கும்பாரு
கீலகமின்றி யிருபத்தேழ் நாளில்
கனவிலும் அதிசயங்கள் காண்பாய்தானே.

ஆரூடத்தில் இருபத்தியாறு வந்திருப்பதால், இனி பயப்பட எதுவும் இல்லை. உன் எண்ணமெல்லாம் பலிக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும் அதிக லாபமும் கிடைக்கும். சிவன் அருளால் ஆண் குழந்தையும் கிடைக்கும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த இருத்தேழு நாளில் நடக்கும், இதற்கு அடையாளமாக இனி வரும் இரவுகளில் அதிசயமான கனவுகள் காண்பாய் என்கிறார் அகத்தியர்.

௨௭. (27) வந்தால்..

இக்கட்டாய் முடிந்ததெல்லாம் இனிதாய் தீரும்
எண்ணிய எண்ணமெல்லாம் ஜெயமேயாகும்
பக்கநின்று குலதெய்வம் பாதுகாக்கும்
பாலர்கட்டு ஞானமுடன் கல்வியோகங்கும்
தக்கதொரு தொழில் நடக்கும் தனமே சேரும்
தாயாதி பொருள் சேரும் நோயும் நீங்கும்
மிக்க பெரியோர்களிட உதவி கூடும்
மேல்நாட்டு செய்திகண்டு மகிழுவாயே


ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், உன்னடைய ஆபத்துகளெல்லாம் இனி நீங்கும். எண்ணிய எண்ணம் எல்லாம் பலிக்கும். குல தெய்வம் துணையாய் இருந்து உன்னைக் காக்கும், குழந்தைகளுக்கு கல்வி, ஞானம் அதிகரிக்கும். உனக்கு ஏற்ற தொழில் அமையும்.அதனால் செல்வமும் பொருட்களும் சேரும். பெரியோர் உதவிகள் கிட்டும். வெளிநாட்டு செய்தியொன்று உன்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்கிறார் அகத்தியர்.

௨௮. (28) வந்தால்..


கிரகங்கள் பொல்லாது பொல்லாதப்பா
கீர்த்தியில்லை நினைப்பதெல்லாம் தடங்கலாகும்
பரதேசி போலாக்கும் பயங்கள் தோணும்
பாலகனே செய்தொழிமில் நஷ்டங்காணும்
உறவான பெற்றோரும் வேறுப்பாரப்பா
உள்ளதொரு பொருளழியும் நோயும் காணும்
புறம்பேசும் குரும்பர்களால் கலகம் நேரும்
போக்கிடுவா யறுமூன்று வாரந்தானே.


ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால்,உனக்கான கிரகங்களெல்லாம் பொல்லாததாக இருப்பதால் நன்மை இல்லை. எண்ணிய காரியம் கைகூடாது. பெற்றவற்களே உன்னை வெறுப்பார்கள். பரதேசி போன்ற நிலை ஏற்படும். மனதில் பயம் உண்டாகும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். உள்ள பொருளும் அழிந்து வறுமையால் உய்ண்டாகும். நோய் நொடி ஏற்படும். புறம் பேசுபவர்களால் கலகம் உண்டாகும். ஆனால் இவை எல்லாம் அடுத்த 18 வாரத்தில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.

௨௯. (29) வந்தால்..

இப்புவியில் பட்டதுயர்வில கிப்போச்சு
இனியொன்றும் குறைவில்லை ஜெயமுண்டாச்சு
தப்பிதங்க ளணுகாது தழைத்து வாழ்வாய்
தனலாப மடைந்திடுவாய் நஷ்டமில்லை
ஒப்பவே ஜென்மத்தை விட்டுராகு
விலகிடுவான் இருபத்து ஐந்துநாளில்
அப்பனே அதற்குப்பின் நினைத்ததெல்லாம்
அகஸ்தியர் சொல்போல் நடக்கும் அதிர்ஷ்டந்தானே.


ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், இவ்வுலகில் இதுவரையில் நீ பட்ட துன்பங்களெல்லாம் விலகிப்போய்விட்டது. இனி ஒரு குறையும் இல்லை. எத்தகைய காரியத்தை நினைத்த போதிலும் அது சித்தியாகும். இனி லாபமே கிட்டும், நட்டம் ஏற்படாது. இதுவரை ஜென்மத்தில் இருந்த ராகு இன்னும் 25 நாளில் விலகிவிடுவான். அதன்பிறகு என் வாக்கின்படி எல்லாம் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௩o. (30) வந்தால்..

ஆதிமுத லிதுவரையில் னேகதுன்பம்
அப்பனே அனுபவித் தவஸ்த்தையுற்றாய்
பாதியிலெ பெரியோரின் பொருளைத் தோற்றாய்
பலவிதத்தில் தொழில் முறையிலவ் நஷ்டமுற்றாய்
வாதியாய் பந்துகட்கும் வைரியானாய்
வலுத்தமுள்ள நோயாலே வருத்தப்பட்டாய்
நீதியாய் இருபது நாள்தான் சென்றால்
நிச்சயமாய் சுகமுண்டு நினைத்துப்பாரே.


ஆரூடத்தில் முப்பது வந்திருப்பதால், இது நாள் வரை நீ அளவற்ற கவலைகளை அனுபவித்து வருகிறாய். பெரியோர்களின் பொருளை அழித்தாய். தொழிலிலும் பலி விதமான நஷ்டப்பட்டாய். உன் உறவினர்களுக்கு எதிரியானாய். நோய் வாய்ப்பட்டு மிகவும் வருந்தினாய். தைரியத்தை விடாதே. இன்னும் இருபது நாளில் உன் கஷ்டங்களெல்லாம் விலகி சுகமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 14 முதல் 21 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

௧௪. (14) வந்தால்..

பாரப்பா வந்தவனுக்கு நல்லயோகம்
பலித்திடவே வந்ததினால் தனமேலாபம்
சீரப்பா நோய்விலகும் மணமேகூடும்
சிறுவர்கட்கு கல்வியுடன் செல்வமோங்கும்
நேரப்பா குடும்பத்தின் கவலை நீங்கும்
நெடுந்தூரம் போனவரும் வரவேநேரும்
கோரப்பா பரம்பொருளை குணமுண்டாகும்
கொண்டயெண்ணம் கைகூடும் நாளீரேழில்.


ஆரூடத்தில் பதினான்கு வந்திருப்பதால், இனி உனக்கு நல்ல யோகம் உண்டாகப் போகிறது. பீடித்திருக்கும் நோய் எல்லாம் விலகும். திருமண நிகழ்வு ஒன்று குடும்பத்தில் நிகழும். சிறுவர்களின் கல்வி சிறப்பாகும். உன்னைப் பிரிந்து வெகுதூரம் போனவர்கள் தேடி வருவார்கள். மிகுந்த செல்வமும், சிறப்பும் உன்னை வந்து சேரும். இவை எல்லாம் இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து கைகூடும் என்கிறார் அகத்தியர்.

௧௫. (15) வந்தால்..

பஞ்சமதில் சுக்கிரனின் ஆட்சியாச்சு
பட்டதொரு துன்பமெல்லாம் பறந்துபோச்சு
தஞ்சமென்ற பேர்களை நீ காக்கலாச்சு
தனவந்த னென்றபெய ருனக்குண்டாச்சு
வஞ்சமுள்ள பஞ்சர்குல மொழியலாச்சு
ஓர் வஞ்சியால் பொருள்சேரும் வழக்கும்போச்சு
அஞ்சாதே கெண்டமெலாம் தவறலாச்சு
அறுநான்கு நாள்தனில் அதிர்ஷ்டமாச்சே


ஆரூடத்தில் பதினைந்து வந்திருப்பதால், இனி உனக்கு ஐந்தில் சுக்கிரன் ஆட்சியாவதைக் குறிக்கிறது. எனவே இது வரை நீ பட்ட துன்பம் எல்லாம் இனி விலகும். உன்னை தஞ்சமென தேடி வருவோரை ஆதரிக்கும் வகையில் உன்னிடம் செல்வம் வந்து சேரும். ஒரு பெண் வழியாக உனக்கு செல்வம் வந்து சேரும். வம்பு, வழக்குகள் விலகும். ஆகையால் இனி நீ கவலை கொள்ளாதே இன்னும் இருபத்தி நான்கு நாளில் இதெல்லாம் சாத்தியமாகும் என்கிறார் அகத்தியர்.

௧௬. (16) வந்தால்..

இவ்விடத்தி லிருந்தாலும் சுகமிராது
இடம்விட்டு போனாலும் பயன்படாது
கள்ளமன துள்ளவரை கருதொணாது
கருத்தினிலே நினைத்தயெண்ணங் கைகூடாது
உள்ளபடி நடந்தாலும் உருப்படாது
உன்மனைவி மக்களுனக் கடங்கிடாது
அல்லது உனைவிட்டு அகன்றிடாது
அப்பனே மாதமொன்று கழித்திடாயே.

ஆரூடத்தில் பதினாறு வந்திருப்பதால், இப்போது இருக்கும் இடமும் உனக்கு சுகப்படாது, வேறிடம் மாறினாலும் பயனில்லை. காரியத் தடை உண்டாகும். எண்ணிய எண்ணம் எதுவும் ஈடேறாது போகும். மனைவி, மக்களும் மதிக்கமாட்டார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடிக்கும். எனவே இந்தக் காலத்தில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டுமென கூறுகிறார் அகத்தியர்.

௧௭. (17) வந்தால்..


சுகமுடனே நினைத்ததெல்லாம் பலிக்குமப்பா
சுகக்ஷேம மாயிருப்பாய் புவியின் மீது
பகையொன்றும் நேராது குடும்பந்தன்னில்
பலவிதத்தில் செய்தொழிலில் லாபங்காணும்
அகமகிழ பெரியோர்கள் பொருள் கிடைக்கும்
ஆதரவாய் பந்துக்களும் உதவியாவார்
மிகவருந்தும் நோயதுதான் மருந்தால்தீரும்
மைந்தனே வாரமது யிரண்டில்தானே.


ஆரூடத்தில் பதினெழு வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் நிறைவேறும். சுக வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் பகை விலகும்.செய் தொழில் எல்லாம் லாபம் தரும்.முன்னோர்களின் பொருள் வந்து சேரும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும்.வருத்தும் நோயும் மருந்து கொள்ள தீர்ந்து போகும். இவை எல்லாம் அடுத்த இரண்டு வாரத்தில் உனக்கு வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

௧௮. (18) வந்தால்..

வாக்கான கிரகமெல்லாம் முச்சமாச்சு
வறுமையுடன் பெரும்பிணியு மொழியலாச்சு
போக்கான பொருள்களெல்லாம் பறந்துபோச்சு
பொல்லாத கஷ்டமெல்லாம் பறந்துபோச்சு
நோக்கிதிசை தவறியபேர் வருகலாச்சு
நீடித்துத் தொழிலுனக்கு மகப்பேறாச்சு
கேட்காத நற்செய்தி கேட்கலாச்சு
கவலையெல்லாம் நாளாறில் நன்மையாச்சே.

ஆரூடத்தில் பதினெட்டு வந்திருப்பதால் இப்போது உன்னுடைய வலிமையான கிரகங்கள் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் வறுமை அகலும். நோய் தீரும். தொலைந்த பொருட்களெல்லாம் கிடைக்கும். தீராக் கவலைகள் கூட இனி தீர்ந்து போகும். நிலைத்த தொழில் உண்டாகும். குழந்தை பாக்கியம் உருவாகும். இது வரை கேட்டிராத நல்ல செய்திகள் எல்லாம் இனி உன்னைத் தேடி வரும். உனை விட்டு பிரிந்தவர் உன்னைத் தேடி வருவார்கள். இதற்கான அமைப்புகள் அடுத்த ஆறு நாளில் உருவாகும் என்கிறார் அகத்தியர்.

௧௯. (19) வந்தால்..

இதுவரையில் நீபட்ட துன்பமெல்லாம்
யாராலும் கூறிடவே முடியாதப்பா
சதிசெய்தார் உந்தனுக்கு வேணபேர்கள்
சஞ்சலங்கள் மிகவடைந்தாய் தரணி தன்னில்
நிதியான கேதுவுந்தன் ஜென்மம் விட்டு
நீங்கிடுவான் இருபத்தியோர் நாள்போனால்
அதன்பிறகு எது நீ செய்த போதும்
ஆட்சியுடன் வாழ்ந்திடுவாய் அஞ்சிடாதே.


ஆரூடத்தில் பத்தொன்பது வந்திருப்பதால், இது வரை கொடுமையான துயரத்தை அனுபவித்திருப்பாய். இப்போது மிகுந்த கவலை நிறைந்த மனிதனாய் இருக்கிறாய். நீ நம்பியவர்களே உனக்கு தீராத கெடுதலைச் செய்தனர். இந்த நிலைக்காக இனி கவலைப் படாதே. இன்றில் இருந்து இருபத்தியோரு நாளில் உன் ஜென்மத்தில் இருக்கும் கேது விலகிவிடுவான். அதன் பின்னர் நீ தொட்டதெல்லாம் துலங்கும். செய்தொழில் மேலோங்கும்... கவலைப் படாதே என்கிறார் அகத்தியர்.

௨o. (20) வந்தால்..


கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கிடாதே
கபடமுள்ளோர் நேசமதை வைத்திடாதே
படமுடியா கஷ்டமென்று பயப்படாதே
பதட்டமாய் தெய்வத்தை நிந்திக்காதே
குடும்பமதில் பகைசெய்து குணங்கெடாதே
குருபலனும் வாரமூன்றில் வரும்தப்பாதே
தடமதனில் நோய்நொடியால் தவித்திடாதே
தணிந்திடவே நவக்கிரகபூஜைசெய்ய


ஆரூடத்தில் இருபது வந்திருப்பதால், கடன்பட்டவனைப் போல நெஞ்சம் கலங்கி இருக்கிறாய். படாத பாடெல்லாம் பட்டிருக்கிறாய்.இதனால் வெறுப்படைந்து குடும்பத்தினரிடம் கோபம் கொள்ளாதே, தெய்வத்தை நிந்திக்காதே!. இன்னும் மூன்று வாரத்தில் உனக்கு குருபலம் கூடி வருகிறது. அப்போது உன் துயரங்கள் நீங்கும். அதுவரையில் கபட எண்ணமுடையவர்களை விட்டு விலகி இருக்கச் சொல்கிறார். நோய் நொடிகளின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள நவக்கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.

௨௧. (21) வந்தால்..

ஐந்தினிலே குருபகவான் அமர்ந்ததாலே
அழிசூ ழுலகினிலே செழித்து வாழ்வாய்
மைந்தர்களை யீன்றதனால் சுகமேகாண்பாய்
மனக்கவலை விலகிடும் வழக்கு வெல்வாய்
வந்திடுவார் திசைமாறி போனவர்கள்
வலுத்திடும் வியாபாரம் நோயும் நீங்கும்
சொந்தமதில் மணங்கூடும் பொருளுஞ்சேரும்
சொல்மொழிதான் தவறிலிதை சுட்டுப்போடே.


ஆரூடத்தில் இருபத்தியொன்று வந்திருப்பதால், உனக்கு குரு ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்று நீடித்த செல்வச் செழிப்பை அருளுவார். மனக் கவலை தீரும். வழக்கு விவகாரங்கள் எல்லாம் விலகிப் போகும். செய்தொழில் யாவும் சிறக்கும். நோய்கள் விலகும். மனை நிறைய புத்திர பாக்கியம் உண்டாகும். உன்னை பிரிந்து திசை மாறிப் போனவர்கள் உன்னைத் தேடிவருவார்கள். ஐந்தாமிடத்தில் குரு இருப்பதால் உன் குடும்பம் செழித்து ஓங்கும். மனை நிறைந்த மக்களைப் பெறுவாய். தன்னுடைய இந்த வாக்கு பலிக்கா விட்டால் இந்த நூலை எரித்து விடலாம் என உறுதியுடன் கூறுகிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் ஆரூடம் - 6 முதல் 13 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் ஆரூடத்தில் இன்று ஆறு முதல் பதின்மூன்று வரையிலான எண்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.

௬. (06) வந்தால்..

நாமகள் கருணையாலே நலியுடன் கவலைநீங்கும்
தாமத மின்றியெண்ணம் தடையின்றிபலிதமாகும்
கோமகள் போலேவாழ குறைவின்றி மகப்பேறாகும்
ஆமென முன்னோர்வாக்கு ஒருதிங்கள் கழியப்பாரே
ஆதிநாள் வினைகளெல்லாம் அப்பனே அற்றுப்போச்சு
கோதின்றி விவாகமென்று குடும்பத்தில் கூடலாச்சு
வாதிகள் கூட்டமெல்லாம் வகைகெட்டு போகலாச்சு
கியாதியாய் குடும்பத்திலுள்ள கலகங்கலொழியலாச்சு.


ஆரூடத்தில் ஆறு வந்தால், கலைமகளின் கருணையால் இனி கவலைகள் நீங்கும். மனதில் எண்ணிய எண்ணம் யாவும் நிறைவேறும். உன் மனம் மகிழ்ச்சியடைய குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் விவாக காரியம் ஒன்று நடக்கும். உன்னை கெடுக்க நினைக்கும் எதிரிகள் விலகிவிடுவார்கள். குடும்பத்திலுள்ள கவலையும் துன்பமும் விரைவில் நீங்கிவிடும். இது நாள் வரையில் நீ அடைந்த துன்பங்களெல்லாம் விலகும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த ஒரு மாதத்தில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௭. (07) வந்தால்..

அருட்பெருஞ் ஜோதியிலே மறைந்த சைவம்
அப்பனே வடலூரில் அமர்ந்த தெய்வம்
பெருங்கருணை யுனக்குண்டு பெறுவாய்ப் பாக்யம்
பொய்யாது எண்ணமெல்லாம் பலிக்குமப்பா
வருமப்பா வெளியூரின் செய்தியொன்று
வையமிசை புத்திரனை பெற்று வாழ்வாய்
குருவுனக்கு ஒன்பதாம் வீட்டில் பார்வை
குறித்ததெல்லாம் ஐந்து நாளில் ஜெயமதாமே.


ஆரூடத்தில் ஏழு வந்தால், குறித்த பொருளாயினும் நினைத்த எண்ணமாயினும் கவலையின்றி கைகூடும். குடும்பத்தில் செல்வாக்குடன் வாழ்வாய். வெளியூரிலிருந்து நன்மையான செய்தி ஒன்று உன்னைத் தேடி வரும். சிறந்த பண்பான ஆண் குழந்தை பெற்று வாழ்வாய். உனக்கு குரு ஒன்பதாவது வீட்டிலிருப்பதால், இவை அனைத்தும் ஐந்து நாளில் தடையின்றி கிட்டும் என்கிறார் அகத்தியர்.

௮. (08) வந்தால்..

அண்டமதில் துன்பமிகு கொண்டிடாதே
அன்பில்லா நெஞ்சரிடம் உறவாடாதே
கண்டபடி கவனமதை செலுத்திடாதே
கவலையெல்லாம் போகுமிந்த வாரத்தோடே
பெண்டுபிள்ளை குடும்பமுடன் சுகமிகுந்தே
பிணிவிலகும் தொழில்பெருகும் தவறிடாதே
மண்டலத்தில் மகிழ்வுடனே வாழ்குவாயே
மச்சமொன்று அடையாளம் முதுகிற்பாரே.

ஆரூடத்தில் எட்டு வந்தால், உலகில் உனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று கவலை கொள்ளாதே. அன்பு இல்லாதவர்களிடம் உறவாடாதே. இந்த ஆருடம் பார்த்த இந்த வாரத்துடன் கவலை எல்லாம் போகும். மனைவி பிள்ளைகளுடன் சுகமுடன் வாழலாம். நோய்கள் நீங்கும். தொழில் பெருக்கும் இன்னும் ஒரு மண்டல காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாய். இதற்கு அடையாளமாக உன் முதுகில் ஓர் மச்சமுமிருக்கும் என்கிறார் அகத்தியர்.

௯. (09) வந்தால்..

ஆண்டவன் உனக்கு துணை இருப்பானப்பா
அபப்னே நீ செய்வதெல்லாம் லாபமப்பா
வேண்டியபொருள் வந்து சேருமப்பா
வேதனை யளித்திடும் நோய் தீருமப்பா
தாண்டினோர் வீடுவந்து சேர்வாரப்பா
தப்பாது பெண் குழந்தை பிறக்குமப்பா
தூண்டியின் மீன்போலே துடித்திடாதே
தின மைந்தில் உனதுயெண்ணம் பலிக்கும்பாரே!


ஆரூடத்தில் ஒன்பது வந்தால்,அப்பனே உனக்கு ஆண்டவனுடைய கருணை இருப்பதால் இனி நீ எதைச் செய்தாலும் லாபம் கிடைக்கும். தேவையான பொருட்கள் எல்லாம் வந்து சேரும். வேதனை கொடுக்கும் நோய் தீர்ந்து போகும். பெண் வாரிசு கிடைக்கும். தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடிக்காதே, இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஐந்தாவது நாளில் உன் எண்ணம் எல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர்.

௧o. (10) வந்தால்..

ஜெயகால முந்தனுக்கு உதவியாச்சு
ஜென்மத்தில் சந்திரனும் உதயமானான்
பயமில்லை தொழில் முறையில் லாபமுண்டு
பாலகனே உன்மனதில் கவலை நீங்கும்
நயம்பேசி குடிகெடுப்போர் நாசமாவார்
நம்பியபேர்களை நீ யாதரிப்பாய்
செயலாக மாடுமனை கொள்ளநன்றாம்
சீக்கிரத்தில் தனலாப முனக்குண்டாமே.


ஆரூடத்தில் பத்து வந்தால், உனக்கு ஜென்மத்தில் சந்திரன் இருப்பதால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உன் மனக்கவலை நீங்கும். உன்னை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிக்கும் தன்மை கிடைக்கப்பெறும். நயமாகப் பேசி உனைக் கெடுக்க நினைக்கும் நயவஞ்சகர்கள் நாசமாவார்கள். மாடு, மனை வாங்க இதுவே நல்ல காலம் என்று சொல்லும் அகத்தியர், மேலும் விரைவில் உனக்கு தனலாபமும் வரும் என்கிறார்.

௧௧. (11) வந்தால்..

உன்னுடைய மனம்போலே முடியுமப்பர்
உத்தமனே குருவுனக்கு ஆட்சியானார்
கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கஷ்டந் தீரும்
கார்த்திகேய னருளாலே செல்வமோங்கும்
பண்டையநாள் பொருள்சேரும் பகையும் நீங்கும்
பாலகனே உன்மனையில் விவாகங்கூடும்
மன்னவனே இருபத்திமூன்று நாளில்
மகாநல்ல சேதிவர மகிழுவாயே.


ஆரூடத்தில் பதினொன்று வந்தால், உன் மனதில் நினைத்தது போல் காரியம் யாவும் முடியும். இப்போது உனக்கு குரு ஆட்சியாக இருப்பதால் கண்ணியமாக வாழ்வாய். துன்பங்கள் எல்லாம் தீரும். கார்த்திகேயன் அருளினாலே செல்வமெல்லாம் ஓங்கும். கைவராத பழைய கடன் எல்லாம் கைவந்து சேரும். பகை நீங்கிவிடும். வீட்டில் திருமணம் நடைபெறும். இன்னும் இருபத்தி மூன்று நாளில் நல்ல செய்தி ஒன்றுவரும். அது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்கிறார் அகத்தியர்.

௧௨. (12) வந்தால்..

பலனளிக்கும் கிரகமெல்லாம் பகையேயாச்சு
பனிரெண்டில் குருவுனக்கு பார்வையாச்சு
கலகமுடன் குடும்பத்தில் கவலையாச்சு
ஓர் கன்னியரால் மனைதனிலே விரோதமாச்சு
நலமளிக்கும் தொழில் முறையில் நஷ்டமாச்சு
நம்பியபேர் வஞ்சனையால் கஷ்டமாச்சு
கிலேசமுடன் வந்தநோய் வருத்தலாச்சு
கிருபையுடன் வாரமெட்டில் சுகமுண்டாமே.


ஆரூடத்தில் பன்னிரெண்டு வந்தால், உனக்கு நல்ல பலனளிக்கும் கிரகங்கள் எல்லாம் பகையாக இருக்கின்றது என்பதாகும். பன்னிரெண்டில் குரு பார்வை வந்துவிட்டது. குடும்பத்தில் பெருங் கவலை உண்டாகும். பெண் ஒருத்தியால் கலகங்கள் ஏற்படும். தொழில் நஷ்டம் ஏற்படும். நம்பியவர்கள் வஞ்சிப்பதால் கடும் துயரம் உண்டாகும். நோயும் வருத்தும். எட்டுவாரம் சென்றால் தான் நன்மை கிட்டும் என்கிறார் அகத்தியர்.

௧௩. (13) வந்தால்..

ஆத்திரப்படவேண்டாம் அப்பாகேளு
அகஸ்தியரின் வாக்கியந்தான் வீண்போகாது
கோத்திரமே விளங்க குலந்தழைக்கும்
கொற்றவனே புத்திரப்பே றுனக்குண்டாகும்
கீர்த்தியுற மூத்தோர்கள் பொருள் கிடைக்கும்
சினங்கொண்டு பிரிந்தவரு முறவேயாவார்
கார்த்திடுவா யுனையடுத்த பேரை நீதான்
கண்டிடுவாய் இம்மாதம் கழியத்தானே.


ஆரூடத்தில் பதின்மூன்று வந்தால், அப்பனே ஆத்திரப்படாதே! நீ பட்ட துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். இனி உன் குடும்பம் தழைத்தோங்கும். புத்திரப்பேறு கிட்டும். பெரியோர்களின் பொருள் சேர்க்கையும், பகையானவர்களுடன் ஒற்றுமையும் உண்டாகும். தஞ்சம் என்று வந்தவர்களை ஆதரிக்கும் தன்மையும் உண்டாகும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நடக்கும் என்கிறார். இது அகத்தியர் வாக்கு. ஒரு போதும் வீண் போகாது என்று கூறுகிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய ஆரூட யந்திரமும் பலன்களும்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் தனது “அகத்தியர்12000” என்ற நூலில் அருளியிருக்கும் இந்த அகத்திய ஆரூடத்தின் அறிமுகத்தை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த ஆரூட முறையில் பயன்படுத்தப் படும் ஆரூட யந்திரத்தின் அமைப்பு பற்றியும், முதல் ஐந்து இலக்கங்களுக்கான பலன்களையும் இன்றைய பதிவில் பார்ப்போம்.


மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் அகத்தியர் அருளிய ஆரூட யந்திரம். அகத்தியரின் பாடல்களில் கூறியுள்ளபடி அமைக்கப் பெற்றது இந்த யந்திரம். இந்த அமைப்பு பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் இதன் அமைப்பில் அநேக சூட்சுமங்கள் நிறைந்திருக்கின்றனவாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிக் கொள்ள வேண்டும். யந்திரம் கீறும் முறையினை பழைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வ முள்ளவர்கள் அந்தத் தகவல்களை தேடிப் பெறலாம்.

இனி முதல் ஐந்து இலக்கங்களுக்கான பாடலையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

௧. (01) வந்தால்..

ஓங்கார பிரணவத்தி னுதவியாலே
ஓதிடுவே னாரூட உண்மைதன்னை
பாங்காக தொழிலோங்கும் மணமேகூடும்
பாலர்கட்கு ஞானமுடன் கல்வியோங்கும்
நீஙகாத நோய்நீங்கும் பொருளுஞ் சேரும்
நினைந்தயெண்ணம் பலிக்குமயலுதவி தோன்றும்
தீங்கினி நேராது செழித்துவாழ்வாய்
தினமெட்டி லிதின்விபரம் தெரிகுவாயே.


ஆரூடத்தில் ஒன்று என வந்தால், கவலைகளெல்லாம் ஒழிவதுடன், தொழில் விருத்தியும் ஏற்படுமாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடுமாம். பாலகர்களுக்கு ஞானமும் கல்வியும் ஓங்குமாம். பீடித்திருக்கும் நோய் நீங்குமாம். கை விட்டுப்போன பொருட்கள் வந்து சேருமாம். நினைத்த எண்ணம் பலிக்கும் அத்துடன் அயல் உதவியும் கிட்டுமாம். இனி தீங்குகள் நேராமல் செழிப்புடன் வாழலாமாம். இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து எட்டு நாட்களில் இதன் விபரம் அறியமுடியுமாம் என்கிறார்.

௨. (2) வந்தால்..

வேலுண்டு வினையகலும் கஷ்டந்தீரும்
விச்சித்ர மயிலுண்டு கவலை போகும்
குழுமே செல்வமது தொழிலுமோங்கும்
ஷண்முகனி னருளாலே நலியும்நீயும்
பாழான கேதுபத்து நாளிலப்பா
பதறாதேயுன்னை விட்டு விலகிப்போவான்
தாழாமல் வாழ்ந்திடுவாய் யதன்பின்னாலே
தள்ளாதே யகஸ்தியனா ருரைத்தவாக்கே.


ஆரூடத்தில் இரண்டு வந்தால், முருகக் கடவுளின் கடாட்சத்தால் சகலமான காரியங்களும் தங்குதடையில்லாமல் வெற்றியளிக்கும். அத்துடன் கவலையும் கஷ்டமும் சண்முகன் அருளால் விலகிவிடும். அத்துடன் இதுவரை கஸ்டங்களை கொடுத்துவந்த கேது விலகிச் சென்றதும் குறைவின்றி வாழ முடியுமாம். இது அகத்தியர் வாக்கு என்றும் சொல்கிறார்.

௩. (03) வந்தால்..

திரிபுரந்தனை யெரித்த தீனநாதன்
திருவருளா லுந்தனுக்கு
பெரியோர் களுதவியுண்டு பெறுவாய்
பெண்டுபிள்ளை குடும்பமுடன் பெருத்துவாழ்வாய்
பரிவான தொழில்முறையி லடைவாய்லாபம்
பாராளும் மன்னர்களால் பெருமையுண்டு
உரித்தான உந்தன்குல தெய்வந்தன்னை
உத்தமனே துதிசெய்தால் உசிதமாமே.


ஆரூடத்தில் மூன்று வந்தால், திரிபுரத்தை எரித்த சிவனின் கருணையினால் கஷ்டமொன்றும் ஏற்படாது. பெரியோர்களின் உதவியுண்டாகும். தொழிலில் அதிக லாபங்களையெல்லாம் அடைவாய். மேலும் அரசர்களாலும் பெருமைப் படுத்தப் படுவாய். பலவிதத்திலும் சந்தோஷத்தையே அடைவாய். உனது குலதெய்வத்தை வாணங்கி வர நாளுக்கு நாள் நன்மைகிட்டும் இதுவே சிறப்பு என்கிறார்.

௪. (04) வந்தால்..

அண்டமாகி ரண்டமதை யளந்தமாயன்
அருளாலே யுந்தனுக்கு அதிர்ஷ்டமுண்டு
விண்டிடுவார் புவிதனிலே விவேகியென்று
வேணபொருள் சேரும்புத்ர பாக்கியமுண்டு
கண்டபடி கவனமதை செலுத்திடாதே
கவலையின்றி நினைத்தயெண்ணம் முடியுமப்பா
தொண்டனே பதினொன்று நாளே போனால்
துணைபுரிவார் செங்கமல வண்ணன் தானே.


ஆரூடத்தில் நான்கு வந்தால், உலகங்களை அளந்த மாயன் அருளால் உனக்கு அதிஷ்டம் உண்டு. பூமியில் உள்ளவர்கள் உன்னை விவேகி என்று போற்றுவார்கள். பொருள் சேரும். புத்திர பாக்கியம் கிட்டும். கண்டபடி கவனத்தை திசைதிருப்பாதே. நினைத்ததெல்லாம் நடக்கும். இந்த ஆரூடத்தை பார்த்த நாளில் இருந்து பதினொருநாள் சென்றால் செங்கமல வண்ணன் துணையுடன் எல்லாம் சிறப்பாகும் என்கிறார்.

௫. (05) வந்தால்..


பட்டதொரு துன்பமெலா மொழிந்துபோச்சு
பாலகனே குருதிசையு முதவியாச்சு
விட்டதொரு தொழிலுனக்கு விர்த்தியாச்சு
வீட்டிலுள்ள கஷ்டமெல்லாம் விலகலாச்சு
முட்டவே எண்ணமெல்லாம் முடிவதாச்சு
மூதோர்கள் பொருள்சேரும் காலமாச்சு
அட்டலக்குமி கடாட்சமது மிகவுண்டாச்சு
அகஸ்தியர் சொல்லணுவளவும் பிசகிடாதே.


ஆரூடத்தில் ஐந்து வந்தால், உனக்கு இனி குரு திசை வரப் போவதால் கவலைகளெல்லாம் நீங்கும். கஸ்டத்திலிருக்கும் தொழில் விருத்தியடையும். குடும்பத்தின் கஸ்டமெல்லாம் தீரும். எண்ணிய கருமங்கள் சிறப்பாக நடந்தேறும். பரம்பரை சொத்துக்கல் கைசேரும். அட்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். அகத்தியர் சொல் பிழைக்காது என்கிறார்.

சுவாரசியமாய் இருக்கிறதல்லவா... அடுத்த எட்டு இலக்கங் களுக்கான பலனை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆரூடம்!... அகத்தியரின் ஆரூடம்!

Author: தோழி / Labels: ,

ஆரூடம் என்பது என்ன?

எதிர்வு கூறல் கலையின் ஒரு அங்கமே ஆரூடம். இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை” ஆரூடம் என்ற தொடரில் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று ஆரூடம் பற்றி வாசித்த பின்னர் இந்த பதிவினை தொடர வேண்டுகிறேன்.

பாய்ச்சிகை ஆரூடத்தில் பாய்ச்சிகையை உருட்டி அதில் வரும் எண்களை வைத்து பலன் சொன்ன அகத்தியர், இந்த முறையிலும் எண்களை வைத்தே ஆரூடம் சொல்லியிருக்கிறார். முறைதான் கொஞ்சம் தனித்துவமானது. இன்று பல இடங்களில் அகத்தியர் ஆரூடம் என்கிற பெயர் பலகைகளை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் இந்த முறைகளைத்தான் பயன் படுத்தி ஆரூடம் கூறுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

இந்த ஆரூட முறைக்கு ஒரு யந்திரம் அவசியமாகிறது. அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல் படுத்த முடியாது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த யந்திரத்தை பயன் படுத்தவும் சில நிபந்தனைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது என்பதாகும்.

இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது.
இந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.

இந்த யந்திரத்தை வைத்து எப்படி ஆரூடம் பார்ப்பது?

ஆரூட யந்திரத்தை தங்களின் இஷ்ட தெய்வத்தின் முன்னர் வைத்து வணங்கிய பின்னர், குருவருளை மனதில் தியானித்து தனது தேவைகளை மனதில் நினைத்து யந்திரத்தில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றினை தொட வேண்டும். அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பின்னர் அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அகத்தியர் அருளிய பாடலைப் படித்து பலனை அறிய வேண்டும். எத்தனை எளிது!

இதே முறையில் மற்றவர்களுக்கும் செய்யலாம். கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை வணங்கி, பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு எண்ணை தொடச்சொல்லி பலன் சொல்லலாம். சிலர் மணதில் ஒரு எண்ணை நினைத்து அதைக் கூறும்படிக் கூறி அதற்கு பலன் சொல்வதுமுண்டு.

எல்லாம் சரிதான்!, இந்த ஆரூட யந்திரத்தை எப்படி தயார் செய்வது?

விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வசியக் காப்பு!

Author: தோழி / Labels: ,

வசியம் பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இம்மாதிரி வசியம் மற்றும் வசிய தாயத்துக்கள், வசிய காப்புகளுக்கென எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழிக்க நம்மில் பலர் தயாராக இருக்கின்றனர். இம்மாதிரியான வசிய பொருட்கள் பற்றி பல தகவல்கள் சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல் அகத்தியரின் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஆமென்ற வசியம் ஒன்று சொல்லக்கேளு
ஆதிமுதலான கொடியறுகு வாங்கி
ஓமென்ற கண்டித்து மதுவில் போட்டு
உரிமையுடன் மண்டலம் சென்றெடுத்துப்பாரு
நாமென்ற நீரதுவும் நன்றாய்வற்றி
நடுவான கொடியதுவும் பதமாய் நிற்கும்
தாமென்றதன் பதமாய் வந்த மூலம்
தருவான மூலமதின் தன்மைகேளே.

தன்மையுடைய வெள்ளியுடன் செம்பு சேர்த்து
தருவான தங்கமது மூன்றும் ஒன்றாய்
உண்மையுடன் தானுருக்கி தகடுதட்டி
உறுதியுள்ள மூலமதை வைத்துருட்டி
செம்மைபெற ரவி வளையம் போலே செய்து
தெரியாமல் பொருந்தினவாய் சேர்த்துக்கொண்டு
நன்மைபெற சற்குருவை தியானம் செய்து
நலமாக ஞாயிறுமுன் வைத்துப் போற்றே.

வைத்ததொரு ரவி வளையம் வளவு தன்னை
வலது கையில்தான் பூட்டி மனதாய் நின்றால்
மைதொடுத்த விழியாளும் மன்னர்தானும்
மகத்தான மிருகம் முதல் வசியமாகும்
மெய்த்ததொரு இம்முறைதான் அதீத வித்தை
வேதாந்த வேதியர்தான் சொன்ன மார்க்கம்
உத்ததொரு வித்தைதனை உலகத்தோர்க்கு
ரையாதே உரைத்ததினால் உறுதிபோமே.

கொடி அறுகம் புல்லை வேருடன் பிடிங்கிக் கொண்டு வந்து அதை பிரணவ மந்திரமான ஓம் என்பதுபோல் வளைத்து தேனில் போட்டு ஒரு மண்டல காலம் வைக்கவேண்டுமாம். பின் அதை எடுத்தப் பார்க்க, நீரெல்லாம் வற்றிப் பதமாக இருக்குமாம்.

வெள்ளி, செம்பு, தங்கம் ஆகிய மூன்று உலோகங்களையும் சம எடையாக எடுத்து ஒனறாகச் சேர்த்து உருக்கி தகடாகத் தட்டிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த தகட்டில் தேனில் உறவைத்து எடுக்கப் பட்ட பதமான அந்த கொடியறுகை வைத்து சுருட்டவேண்டுமாம். பின்னர் சூரியனைப் போன்று வளையமாகச் செய்து கொண்டு இரு முனையையும் இணைத்து ஒட்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பின்னர் இந்த வளையத்தை சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து வணங்கிக் கொள்ள வேண்டுமாம்.

இப்போது இந்த வளையத்தினை வலது கையில் அணிந்து கொள்ளவேண்டுமாம். அப்படி வளையத்தை அணிந்து கொண்டு சென்றால், பெண்கள் துவங்கி மன்னாதி மன்னர்கள், விலங்குகள் என அனைவரையும் வசியமாக்குமாம்.

இந்த வித்தையை வேதாந்த வேதியரான சிவனார் தமக்குக் கூறியது என்றும் இத்தனை சிறப்பான இந்த வித்தையை உலக மக்களுக்கு சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார். அப்படிச் சொன்னால் இது பொய்த்துப் பலிக்காது போய்விடும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எப்படி தூங்குவது?

Author: தோழி / Labels: , ,

மனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூங்குவதில்தான் செலவழிக்கிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.

சித்தர் பெருமக்களும் தூக்கம் பற்றி நிறையவே கூறியிருக்கின்றனர். தூக்கம் என்பது மனிதனுக்கு மிக அவசியமானது என்றாலும் கூட சித்தர்களின் தளத்தில் தூக்கம் என்பது உடல் தளர்வாகவும் உள்ளம் ஒரு முகமாகவும் இருக்கும் ஒரு நிலையையே குறிப்பிடுகின்றனர். இதனை தூங்காமல் தூங்கும் நிலை என்கின்றனர். பத்திரகிரியார் கூட இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?


தூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். மேலும் நாம் தூங்கும் போது நம்முடைய மூச்சு விரயமாவதாகவும் சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சியும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.

யோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.

கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.


பொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்கவேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை விவாதிப்பதை விட தூக்கம் பற்றி இப்படியான தகவல்கள் நம் முன்னோர்களினால் அருளப் பட்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு!

Author: தோழி / Labels: ,

இன்று ஒரு மருத்துவக் குறிப்பு, அதுவும் ஒரு அழகுக் குறிப்பு!

ஆணோ,பெண்ணோ முக அழகை பராமரிக்கவும், அதை மேலும் மெருகூட்டவும் தங்களால் ஆன மட்டில், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இதில் யாரும் விதிவிலக்கில்லை.இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் காலம் காலமாய் கொழித்துக் கொண்டிருக்கின்றனர். மிகச் சாதாரணமான கிடைக்கக் கூடிய நமது இயற்கை பராமரிப்பு முறைகளுக்கு இன்று மதிப்பில்லை. அதனையே அழகாய் ஒரு பொட்டலமாய் போட்டு சந்தைப் படுத்தினால் கண்னை மூடிக் கொண்டு வாங்கி பயன் படுத்துகிறோம்.

நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்கிறோம்.இதற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் செலவு பிடித்தவை. தேமலை போக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் இதற்கு முன் வைக்கப் பட்டிருக்கிறது. இவை எல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என முந்தைய தலைமுறையோடு பெயரில் முடங்கிப் போய் விட்டது. இதனால் நம்மில் பலருக்கு இதன் மகத்துவமே தெரியாமல் போய்விட்டது.

இந்த தேமலை தமிழ் வைத்தியத்தில் “மங்கு” என அழைக்கின்றனர். இதனை போக்கிட ஒரு எளிய மருத்துவ குறிப்பு தேரையரின் பாடலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு...

கொள்ளவே யரிதாரப் பளிங்கு மாகுங்
குறையாமல் பலமரைதான் நிறையோர் கட்டி
உள்ளவே நற்கோவை ரசத்தை வாங்கி
உறவாக யிழைத்து வழித்தெடுத்துக் கொண்டு
மெள்ளவே ஐந்திருநாள் யிருபோதுந் தான்
விளங்கவே அடுத்தடுத்துப் பூசும்போது
துள்ளவே திருமுகத்தில் படரும் வங்கும்
தொந்தித்து நில்லரிது துலைந்து போமே.


இந்தப் பாடல் தேரையரின் மருத்துவ காவியம் என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. இதன் படி சருமத்தில் உண்டாகும் தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட இந்த குறிப்பைத் தருகிறார்.

அரிதாரம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். பளிங்கு போல தோற்றமளிக்கும் இது கட்டியாகவும் தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியான அரிதாரம் ஒரு அரைப் பலம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் கோவைக்காயின் சாறு விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை, மாலை) என பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர அவை அனைத்தும் மறைந்து சருமம் அழகாயிருக்கும் என்கிறார்.

பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்... தேவையுள்ளோருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் அருளிய உடற்கூறியல் தொடர்ச்சி...

Author: தோழி / Labels:

உடற்கூறியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு,எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூறியலும் சொல்லாத ஒரு செய்தி.

வாருங்கள், இன்றைய பதிவில் நமது உடற்கூறில் அடங்கியிருக்கும் தொன்னூற்றி ஆறு கூறுகளைப் பற்றி பார்ப்போம்.இவை அனைத்தும் இருபது வகைகளில் அடங்கி இருக்கிறது.

அறிவு (1)
இருவினை(2)
நல்வினை
தீவினை
மூவாசைகள்(3)
மண்
பொன்
பெண்
அந்தக் கரணங்கள்(4)
மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்
பஞ்சபூதங்கள்(5)
பிருதிவி - (பூமி - நிலம் - மண்)
அப்பு - (ஜலம் - நீர் - புனல்)
தேயு - (அக்னி - நெருப்பு - அனல்)
வாயு - (கால் - காற்று - கனல்)
ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்(5)
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்(5)
வாக்கு (வாய்)
பாணி (கை)
பாதம் (கால்)
பாயுரு (மலவாய்)
உபஸ்தம்(கருவாய்)
பஞ்ச தன் மாத்திரைகள்(5)
சுவை (ரசம்)
ஒளி (ரூபம்)
ஊறு (ஸ்பரிசம்)
ஓசை (சப்தம்)
நாற்றம் (கந்தம்)
பஞ்ச கோசங்கள்(5)
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
மூன்று மண்டலங்கள்(3)
அக்னி மண்டலம்
சூரிய மண்டலம்
சந்திர மண்டலம்
குணங்கள்(3)
ராஜஸம்
தாமசம்
ஸாத்வீகம்
மலங்கள்(3)
ஆணவம்
கன்மம்
மாயை
பிணிகள்(3)
வாதம்
பித்தம்
சிலேத்துமம்
ஏடனை(3)
லோக ஏடனை
அர்த்த ஏடனை
புத்திர எடனை
ஆதாரங்கள்(6)
மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞா
அவஸ்தைகள்(5)
சாக்கிரம் (நனவு)
சொப்பனம் ( கனவு)
சுழுத்தி (உறக்கம்)
துரியம் ( நிஷ்டை)
துரியாதீதம் (உயிர்ப்படக்கம்)
தாதுக்கள்(7)
இரசம்
இரத்தம்
மாமிசம்
மேதஸ்
அஸ்தி
மச்சை
சுக்கிலம் அல்லது சுரோணிதம்
ராகங்கள்(8)
காமம்
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மாச்சரியம்
இடம்பம்
அகங்காரம்
தச நாடிகள்(10)
இடைகலை - (இடப்பக்க நரம்பு)
பிங்கலை - (வலப்பக்க நரம்பு)
சுமுழுனை - (நடுநரம்பு)
சிகுவை - (உள்நாக்கு நரம்பு)
புருடன் - (வலக்கண் நரம்பு)
காந்தாரி - (இடக்கண் நரம்பு)
அத்தி - ( வலச்செவி நரம்பு)
அலம்புடை - (இடச்செவி நரம்பு)
சங்கினி - (கருவாய் நரம்பு)
குகு - (மலவாய் நரம்பு)
தசவாயுக்கள்(10)
பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

ஆக மொத்தம் தொண்ணூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல். பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவை பற்றி விரிவாக எழுதிட முயற்சிக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் அருளிய உடற்கூறியல்..

Author: தோழி / Labels: ,

ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தின் பெரியதோர் வெற்றிக்கு அடிப்படைக் காரணம், அந்த துறையில்தான் உடற்கூறு அறிவியல் துறையானது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட மாற்று மருத்துவத் துறையினர் அலோபதி மருத்துவமுறை உருவாக்கியுள்ள உடற்கூறியல் முறைகளின் படியே நோய்களை அணுகுகின்றனர்.

உடற்கூறியல் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் உறுப்புகளின் கட்டமைப்புகளை பற்றி விரிவாக விளக்கிடும் அறிவியல் துறை. இந்த துறை இரண்டு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. வெறும் கண்களால் பார்த்து உணரக் கூடிய உறுப்புகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறியும் வகையினை “மாக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்றும், கண்களால் பார்க்க முடியாத அல்லது நுண்ணோக்கிகளின் வழியே மட்டும் ஆராய்ந்து அறியும் வகையினை “மைக்ராஸ்கோப்பிக் அனாடமி” என்கின்றனர்.

என்னுடைய துறை என்பதால் அறிமுகத்தை கொஞ்சம் நீட்டி முழக்கிவிட்டேன். அலோபதி மருத்துவம் தவிர மற்ற மருத்துவ முறைகளில் உடற்கூறியலை தங்களுக்கே உரிதான வகையில் அணுகியிருக்கின்றனர். அந்த வகையில் நமது சித்தர் பெருமக்களும் மனித உடலின் கட்டமைப்புகளைப் பற்றி அறிவியல் முன்னேற்றம் ஏதும் இல்லாத ஒரு காலத்தில் மிக விரிவாக கூறியிருக்கின்றனர். அந்த வகையில் சித்தர்கள் நமது உடலின் அடிப்படை கட்டமைப்புகளை எவ்வாறு பகுத்துக் கூறியிருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

மனித உடலானது தொண்ணூற்றி பொறிகளால் கட்டப் பட்டது என்கின்றனர். ஆம்!, தொண்ணூற்றி ஆறு வகையான கூறுகள் ஒன்றிணைந்ததே ஒரு மனிதனின் உடல் என்று கூறியிருக்கின்றனர்.

அது பற்றி திருமூலர் பின்வருமாறு உரைக்கிறார்.

"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை
ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே"


- திருமூலர் -

இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளை அறிந்து தெளிந்து கொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவைகளை உணர்ந்து கொண்டு விட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளை புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும்.

இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளையும் இருபது வகைகளாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். பதிவின் நீளம் கருதி அந்த பாடல்களை இங்கே தவிர்க்கிறேன்.

அந்த இருபது வகைகள் பின்வருமாறு...

அறிவு
இருவினை
மூவாசை
அந்தகரணங்கள்
பஞ்சபூதங்கள்
பஞ்சஞானேந்திரியங்கள்
பஞ்சகன்மேந்திரியஙக்ள்
பஞ்சதன்மாத்திரைகள்
பஞ்சகோசங்கள்
மூன்று மண்டலஙக்ள்
குணங்கள்
மலங்கள்
பிணிகள்
ஏடனை
ஆதாரங்கள்
அவஸ்தைகள்
தாதுக்கள்
ராகங்கள்
தச நாடிகள்
தசவாயுக்கள்

இந்த இருபது வகைகளில் தொண்ணூற்றி ஆறு பொறிகளும் அடங்கி இருக்கிறது. இவையே நம் உடலை இயக்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அது உடலுக்கு சுகவீனம் ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.

அத்தனை முக்கியமான இந்த தொண்ணூற்றி ஆறு பொறிகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திரிசங்கு ராஜன் திரவியம்..

Author: தோழி / Labels: ,

கோவில்களில் திரவியங்களை இருப்புச் செய்து அதன் மீது சிலைகளையும், மண்டபங்களையும் நிர்மாணிக்கும் பழக்கம் தமிழகத்தில் பன்னெடுங் காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றைக்கும் கூட புதிய கட்டிடங்களைக் கட்டும்போது நவரத்தினங்களை பூமியில்போட்டு அதன் மீது முதல் கல்லை வைக்கும் மரபு இந்த பண்டைய மரபின் தொடர்சியே...

இந்த வகையில் இன்று திரிசங்கு ராஜன் என்ற மன்னன் மறைத்து வைத்த திரவியம் பற்றி அகத்தியர் கூறுவதைப் பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஆமேதான் வனந்தன்னிலே கெருடரிடியார்தாமும்
அங்ஙனமே யாசீர்மந் தன்னிலப்பா
தாமேதான் சீடவர்க்க மாயிரம்பேர்
தாக்கான கூட்டமுடன் கொலுவிருப்பார்
நாமேதான் சொன்னபடி யாசீர்மத்தின்வடக்கே
நலமான கணபதி கோவிலுண்டு
போமேதான் கோவிலின் கீழதாக
பொங்கமுடன் கிடாரவைப்பு சொல்லக்கேளே.

கேளப்பா திருசங்கு ராசன் வைத்த
கெடியான நவகோடி திரவியங்கள்
நாளப்பா வரைகோடி சென்றகாலம்
நாதாக்கள் முன்பாக வைத்தவைப்பு
மாளப்பா ராசனது தேகந்தானும்
மண்மீதிற் சமாதியது பூணுமுன்னே
நீளப்பா வைத்ததொரு திரவியங்கள்
நீலணித்தில் கண்டவர்களில்லைதானே.

தானான திரவியங்களிருக்கும்ஸ்தானம்
தாக்கான கெருடரிடி யாச்சிரமபக்கம்
கோனான கணபதியின் கோவிலின்
காணாத நிலவறையில் வைத்ததாமே
தேனான திரவியங்க ளெடுப்பதற்கு
தெரியவே சூட்மசுமகணபதியின் பாதம்கீழே
கோனா யெனதையர் சொன்னவாக்கு
குவலயத்தில்பொய்யாது மெய்யதாமே.


கருடரிஷி வனத்தில் கருடரிஷி அவர்களின் ஆசிரமம் இருக்கின்றதாம். அங்கே அவர் தனது சீடர்களுடன் வசித்திருந்தாராம். அந்த ஆச்சிரமத்தின் வடக்குப் பக்கதில் கணபதி கோவில் ஒன்று அமைந்திருக்கிறதாம். அந்த கோவிலின் கீழ்ப் பகுதியில் பெருமளவு பொக்கிஷம் வைக்கப்பட்டிருக்கிறதாம்.

திரிசங்கு ராஜன் தான் சமாதி அடைவதற்கு முன்பாக சித்தர்களின் முன்னால் நவகோடி நிதியங்களையும் இங்கே வைப்புச் செய்தானாம்.இந்த வைப்பு நிதிகளை சித்தர்களைத் தவிர வேறு எவரும் அறிந்தவர் இல்லை என்கிறார். மேலும் இந்த பொக்கிஷத்தை திறக்கும் சூட்சுமம் ஒன்று இருக்கிறதென்றும், அது அங்கிருக்கும் விநாயகர் சிலையின் பாதங்களின் கீழ்புறத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல்களை தனக்கு தன் குருநாதர் கூறியதாகவும், இவை முற்றிலும் உண்மையான தகவல் என்று அருளியிருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கள்ளழகர் திரவியம்..

Author: தோழி / Labels:

அருள்மிகு கள்ளழகர் பெருமாளின் திருக்கோவில் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலில் அமைந்திருக்கிறது. இந்த ஊர் "திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, அழகாபுரி" என பல்வேறு பெயர்களால் அறியப் படுகிறது. ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் இரண்டாம் பாகத்தின் கதாநாயகர் கள்ளழகர்தான். தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதப் படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரசியமான தகவல்களை இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

பழமையும், புகழும் வாய்ந்த இந்த திருத்தலத்தில் திரவியக் குவியல் மறைந்திருப்பதாக அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார். இந்தத் தகவலை ஒரு போதும் வெளியில் சொல்லக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். ஏனெனில் இந்த உலகில் பேராசை நிரம்பியவர்களும், மூடர்களும், துஷ்டர்களு பெரிய அளவில் இருக்கின்றனர். அவர்களிடம் வெளியிடாமல் விலகி இருக்குமாறும் புலத்தியருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். புலத்தியரின் காலத்திற்குப் பின்னர் அவரது சீடர்களின் வழி வழியே இந்த தகவல் இன்று நம் வரையில் வந்து சேர்ந்திருக்கிறது.

வாருங்கள் அழகர் கோவிலின் திரவியக் குவியல் பற்றி அகத்தியர் கூறுவதை அவரது மொழியில் பார்ப்போம். இந்த பாடல்கள் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

கண்டதோர் புலத்தியனே கவிவல்லோனே
காவலனே கண்டமட்டும் சொல்லலாச்சு
விண்டதோர் திரவியந்தான் கோடி செம்பொன்
வித்தகனே கள்ளழக ரடிவாரத்தில்
அண்டபா தாளமது வடிநூறப்பா
அப்பனே மலைபோல குவித்தசெம்போன்
கண்டுமே கண்கொண்டு பாராமல்தான்
காவலனே முழுமக்க ளிருந்திட்டாரே.

இருந்தாரே சூதுவிட மறியமாற்றான்
யெழிலான சித்தர்களுங் கவனியாமல்
பொருந்தவே யவ்விடத்தில் பக்திகொண்டு
பொங்கமுடன் நுழையாமல் விழலாய்ப்போனார்
திருந்த விதியாளி யிந்நூல்தன்னை
தீர்க்கமுடன் கண்டாலே விடுவானோபார்
அருந்தமிழாம் பன்னீரா யிரந்தானப்பா
அப்பனே விதியிருந்தால் கிட்டுந்தானே.

தானான புலத்தியனே தம்பிரானே
தண்மையுள்ள தனமிருக்டகுந் தடமுங்காணார்
கோனான யெனதை ரசுவனியாந்தேவர்
கொற்றவனா ரெந்தமக்கு யுரைத்தநீதி
தேனான மனோன்மணியாள் சாட்சியாக
தேற்றமுட னுந்தனுக்கா யுபதேசித்தேன்
மானான மகதேவ ரருளுங்கொண்டு
மன்னவனே நிதியெடுக்கு முயலுவீரே.

முயலவே யிம்மொழியை வெளிவிடாதே
மூர்க்கமுள்ள வெகுமூடர் காமியுண்டு
பயலான துட்டரென்னும் பசங்களப்பா
பாரினிலே கோடிசன மிகவேகாண்பீர்
கயவரா முலகுபதி யனேகமுண்ட
காவலனே படுமோசக் காரப்பா
நயமுடனே வஞ்சித்து சிநேகங்கொள்வார்
நம்பாதே படுக்காளி தூரத்தள்ளே.

தான் கண்டவற்றை மட்டுமே சொல்வதாக தகவல்களை கூறியிருக்கிறார் அகத்தியர். அதாவது கள்ளழகர் கோவில் அடிவாரப் பகுதியில் நூறு அடி ஆழத்தில் கோடி செம்பொன் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாம். இந்த செம்பொன்னை மக்கள் காணாமல் இருக்கிறார்கள் என்று சொல்லும் அகத்தியர் மேலும் பக்தியுடன் இந்த கோவிலுக்கு வணங்கிச் செல்லும் சித்தர்கள் கூட அந்த நிதி இருப்பிடத்திற்கு நுழையாமல் சென்றுவிட்டார்கள் என்கிறார்.

தன்னுடைய இந்த பன்னீராயிரம் என்னும் நூல் விதியுள்ளவர்களுக்கு மட்டுமே முழுமையாகக் கிட்டுமாம். அப்படி விதியிருந்து இந்த நூல் முழுமையாக கிடைத்து விட்டால் அங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கும் திரவியம் பற்றிய எல்லா விவரங்களையும் அறிய முடியும் என்கிறார்.அப்படி முழுமையாக கிடைக்காத நிலையில் பொக்கிஷத்தின் தடம் தடம்கூட அறியமுடியாது என்கிறார்.

அசுவினி தேவர் தனக்கு சொன்ன நீதி, மனோன்மணி தேவி சாட்சியாக உனக்குச் சொல்லுகிறேன். உனக்கு மிகவும் நிதி தேவை என்ற நெருக்கடியான நிலை வந்தால் மட்டும் சென்று தேவையான அளவை மட்டும் எடுத்துக்கொள் என்று அனுமதியும் கொடுத்திருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...