அருள்மிகு கள்ளழகர் பெருமாளின் திருக்கோவில் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலில் அமைந்திருக்கிறது. இந்த ஊர் "திருமாலிருஞ்சோலை, உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, அழகாபுரி" என பல்வேறு பெயர்களால் அறியப் படுகிறது. ஆண்டு தோறும் மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் இரண்டாம் பாகத்தின் கதாநாயகர் கள்ளழகர்தான். தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதப் படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரசியமான தகவல்களை இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.
பழமையும், புகழும் வாய்ந்த இந்த திருத்தலத்தில் திரவியக் குவியல் மறைந்திருப்பதாக அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார். இந்தத் தகவலை ஒரு போதும் வெளியில் சொல்லக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். ஏனெனில் இந்த உலகில் பேராசை நிரம்பியவர்களும், மூடர்களும், துஷ்டர்களு பெரிய அளவில் இருக்கின்றனர். அவர்களிடம் வெளியிடாமல் விலகி இருக்குமாறும் புலத்தியருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். புலத்தியரின் காலத்திற்குப் பின்னர் அவரது சீடர்களின் வழி வழியே இந்த தகவல் இன்று நம் வரையில் வந்து சேர்ந்திருக்கிறது.
வாருங்கள் அழகர் கோவிலின் திரவியக் குவியல் பற்றி அகத்தியர் கூறுவதை அவரது மொழியில் பார்ப்போம். இந்த பாடல்கள் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
கண்டதோர் புலத்தியனே கவிவல்லோனே
காவலனே கண்டமட்டும் சொல்லலாச்சு
விண்டதோர் திரவியந்தான் கோடி செம்பொன்
வித்தகனே கள்ளழக ரடிவாரத்தில்
அண்டபா தாளமது வடிநூறப்பா
அப்பனே மலைபோல குவித்தசெம்போன்
கண்டுமே கண்கொண்டு பாராமல்தான்
காவலனே முழுமக்க ளிருந்திட்டாரே.
இருந்தாரே சூதுவிட மறியமாற்றான்
யெழிலான சித்தர்களுங் கவனியாமல்
பொருந்தவே யவ்விடத்தில் பக்திகொண்டு
பொங்கமுடன் நுழையாமல் விழலாய்ப்போனார்
திருந்த விதியாளி யிந்நூல்தன்னை
தீர்க்கமுடன் கண்டாலே விடுவானோபார்
அருந்தமிழாம் பன்னீரா யிரந்தானப்பா
அப்பனே விதியிருந்தால் கிட்டுந்தானே.
தானான புலத்தியனே தம்பிரானே
தண்மையுள்ள தனமிருக்டகுந் தடமுங்காணார்
கோனான யெனதை ரசுவனியாந்தேவர்
கொற்றவனா ரெந்தமக்கு யுரைத்தநீதி
தேனான மனோன்மணியாள் சாட்சியாக
தேற்றமுட னுந்தனுக்கா யுபதேசித்தேன்
மானான மகதேவ ரருளுங்கொண்டு
மன்னவனே நிதியெடுக்கு முயலுவீரே.
முயலவே யிம்மொழியை வெளிவிடாதே
மூர்க்கமுள்ள வெகுமூடர் காமியுண்டு
பயலான துட்டரென்னும் பசங்களப்பா
பாரினிலே கோடிசன மிகவேகாண்பீர்
கயவரா முலகுபதி யனேகமுண்ட
காவலனே படுமோசக் காரப்பா
நயமுடனே வஞ்சித்து சிநேகங்கொள்வார்
நம்பாதே படுக்காளி தூரத்தள்ளே.
தான் கண்டவற்றை மட்டுமே சொல்வதாக தகவல்களை கூறியிருக்கிறார் அகத்தியர். அதாவது கள்ளழகர் கோவில் அடிவாரப் பகுதியில் நூறு அடி ஆழத்தில் கோடி செம்பொன் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதாம். இந்த செம்பொன்னை மக்கள் காணாமல் இருக்கிறார்கள் என்று சொல்லும் அகத்தியர் மேலும் பக்தியுடன் இந்த கோவிலுக்கு வணங்கிச் செல்லும் சித்தர்கள் கூட அந்த நிதி இருப்பிடத்திற்கு நுழையாமல் சென்றுவிட்டார்கள் என்கிறார்.
தன்னுடைய இந்த பன்னீராயிரம் என்னும் நூல் விதியுள்ளவர்களுக்கு மட்டுமே முழுமையாகக் கிட்டுமாம். அப்படி விதியிருந்து இந்த நூல் முழுமையாக கிடைத்து விட்டால் அங்கே மறைத்து வைக்கப் பட்டிருக்கும் திரவியம் பற்றிய எல்லா விவரங்களையும் அறிய முடியும் என்கிறார்.அப்படி முழுமையாக கிடைக்காத நிலையில் பொக்கிஷத்தின் தடம் தடம்கூட அறியமுடியாது என்கிறார்.
அசுவினி தேவர் தனக்கு சொன்ன நீதி, மனோன்மணி தேவி சாட்சியாக உனக்குச் சொல்லுகிறேன். உனக்கு மிகவும் நிதி தேவை என்ற நெருக்கடியான நிலை வந்தால் மட்டும் சென்று தேவையான அளவை மட்டும் எடுத்துக்கொள் என்று அனுமதியும் கொடுத்திருக்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...