அகத்தியர் ஆரூடம் - 6 முதல் 13 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் ஆரூடத்தில் இன்று ஆறு முதல் பதின்மூன்று வரையிலான எண்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.

௬. (06) வந்தால்..

நாமகள் கருணையாலே நலியுடன் கவலைநீங்கும்
தாமத மின்றியெண்ணம் தடையின்றிபலிதமாகும்
கோமகள் போலேவாழ குறைவின்றி மகப்பேறாகும்
ஆமென முன்னோர்வாக்கு ஒருதிங்கள் கழியப்பாரே
ஆதிநாள் வினைகளெல்லாம் அப்பனே அற்றுப்போச்சு
கோதின்றி விவாகமென்று குடும்பத்தில் கூடலாச்சு
வாதிகள் கூட்டமெல்லாம் வகைகெட்டு போகலாச்சு
கியாதியாய் குடும்பத்திலுள்ள கலகங்கலொழியலாச்சு.


ஆரூடத்தில் ஆறு வந்தால், கலைமகளின் கருணையால் இனி கவலைகள் நீங்கும். மனதில் எண்ணிய எண்ணம் யாவும் நிறைவேறும். உன் மனம் மகிழ்ச்சியடைய குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் விவாக காரியம் ஒன்று நடக்கும். உன்னை கெடுக்க நினைக்கும் எதிரிகள் விலகிவிடுவார்கள். குடும்பத்திலுள்ள கவலையும் துன்பமும் விரைவில் நீங்கிவிடும். இது நாள் வரையில் நீ அடைந்த துன்பங்களெல்லாம் விலகும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த ஒரு மாதத்தில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௭. (07) வந்தால்..

அருட்பெருஞ் ஜோதியிலே மறைந்த சைவம்
அப்பனே வடலூரில் அமர்ந்த தெய்வம்
பெருங்கருணை யுனக்குண்டு பெறுவாய்ப் பாக்யம்
பொய்யாது எண்ணமெல்லாம் பலிக்குமப்பா
வருமப்பா வெளியூரின் செய்தியொன்று
வையமிசை புத்திரனை பெற்று வாழ்வாய்
குருவுனக்கு ஒன்பதாம் வீட்டில் பார்வை
குறித்ததெல்லாம் ஐந்து நாளில் ஜெயமதாமே.


ஆரூடத்தில் ஏழு வந்தால், குறித்த பொருளாயினும் நினைத்த எண்ணமாயினும் கவலையின்றி கைகூடும். குடும்பத்தில் செல்வாக்குடன் வாழ்வாய். வெளியூரிலிருந்து நன்மையான செய்தி ஒன்று உன்னைத் தேடி வரும். சிறந்த பண்பான ஆண் குழந்தை பெற்று வாழ்வாய். உனக்கு குரு ஒன்பதாவது வீட்டிலிருப்பதால், இவை அனைத்தும் ஐந்து நாளில் தடையின்றி கிட்டும் என்கிறார் அகத்தியர்.

௮. (08) வந்தால்..

அண்டமதில் துன்பமிகு கொண்டிடாதே
அன்பில்லா நெஞ்சரிடம் உறவாடாதே
கண்டபடி கவனமதை செலுத்திடாதே
கவலையெல்லாம் போகுமிந்த வாரத்தோடே
பெண்டுபிள்ளை குடும்பமுடன் சுகமிகுந்தே
பிணிவிலகும் தொழில்பெருகும் தவறிடாதே
மண்டலத்தில் மகிழ்வுடனே வாழ்குவாயே
மச்சமொன்று அடையாளம் முதுகிற்பாரே.

ஆரூடத்தில் எட்டு வந்தால், உலகில் உனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று கவலை கொள்ளாதே. அன்பு இல்லாதவர்களிடம் உறவாடாதே. இந்த ஆருடம் பார்த்த இந்த வாரத்துடன் கவலை எல்லாம் போகும். மனைவி பிள்ளைகளுடன் சுகமுடன் வாழலாம். நோய்கள் நீங்கும். தொழில் பெருக்கும் இன்னும் ஒரு மண்டல காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாய். இதற்கு அடையாளமாக உன் முதுகில் ஓர் மச்சமுமிருக்கும் என்கிறார் அகத்தியர்.

௯. (09) வந்தால்..

ஆண்டவன் உனக்கு துணை இருப்பானப்பா
அபப்னே நீ செய்வதெல்லாம் லாபமப்பா
வேண்டியபொருள் வந்து சேருமப்பா
வேதனை யளித்திடும் நோய் தீருமப்பா
தாண்டினோர் வீடுவந்து சேர்வாரப்பா
தப்பாது பெண் குழந்தை பிறக்குமப்பா
தூண்டியின் மீன்போலே துடித்திடாதே
தின மைந்தில் உனதுயெண்ணம் பலிக்கும்பாரே!


ஆரூடத்தில் ஒன்பது வந்தால்,அப்பனே உனக்கு ஆண்டவனுடைய கருணை இருப்பதால் இனி நீ எதைச் செய்தாலும் லாபம் கிடைக்கும். தேவையான பொருட்கள் எல்லாம் வந்து சேரும். வேதனை கொடுக்கும் நோய் தீர்ந்து போகும். பெண் வாரிசு கிடைக்கும். தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடிக்காதே, இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஐந்தாவது நாளில் உன் எண்ணம் எல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர்.

௧o. (10) வந்தால்..

ஜெயகால முந்தனுக்கு உதவியாச்சு
ஜென்மத்தில் சந்திரனும் உதயமானான்
பயமில்லை தொழில் முறையில் லாபமுண்டு
பாலகனே உன்மனதில் கவலை நீங்கும்
நயம்பேசி குடிகெடுப்போர் நாசமாவார்
நம்பியபேர்களை நீ யாதரிப்பாய்
செயலாக மாடுமனை கொள்ளநன்றாம்
சீக்கிரத்தில் தனலாப முனக்குண்டாமே.


ஆரூடத்தில் பத்து வந்தால், உனக்கு ஜென்மத்தில் சந்திரன் இருப்பதால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உன் மனக்கவலை நீங்கும். உன்னை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிக்கும் தன்மை கிடைக்கப்பெறும். நயமாகப் பேசி உனைக் கெடுக்க நினைக்கும் நயவஞ்சகர்கள் நாசமாவார்கள். மாடு, மனை வாங்க இதுவே நல்ல காலம் என்று சொல்லும் அகத்தியர், மேலும் விரைவில் உனக்கு தனலாபமும் வரும் என்கிறார்.

௧௧. (11) வந்தால்..

உன்னுடைய மனம்போலே முடியுமப்பர்
உத்தமனே குருவுனக்கு ஆட்சியானார்
கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கஷ்டந் தீரும்
கார்த்திகேய னருளாலே செல்வமோங்கும்
பண்டையநாள் பொருள்சேரும் பகையும் நீங்கும்
பாலகனே உன்மனையில் விவாகங்கூடும்
மன்னவனே இருபத்திமூன்று நாளில்
மகாநல்ல சேதிவர மகிழுவாயே.


ஆரூடத்தில் பதினொன்று வந்தால், உன் மனதில் நினைத்தது போல் காரியம் யாவும் முடியும். இப்போது உனக்கு குரு ஆட்சியாக இருப்பதால் கண்ணியமாக வாழ்வாய். துன்பங்கள் எல்லாம் தீரும். கார்த்திகேயன் அருளினாலே செல்வமெல்லாம் ஓங்கும். கைவராத பழைய கடன் எல்லாம் கைவந்து சேரும். பகை நீங்கிவிடும். வீட்டில் திருமணம் நடைபெறும். இன்னும் இருபத்தி மூன்று நாளில் நல்ல செய்தி ஒன்றுவரும். அது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்கிறார் அகத்தியர்.

௧௨. (12) வந்தால்..

பலனளிக்கும் கிரகமெல்லாம் பகையேயாச்சு
பனிரெண்டில் குருவுனக்கு பார்வையாச்சு
கலகமுடன் குடும்பத்தில் கவலையாச்சு
ஓர் கன்னியரால் மனைதனிலே விரோதமாச்சு
நலமளிக்கும் தொழில் முறையில் நஷ்டமாச்சு
நம்பியபேர் வஞ்சனையால் கஷ்டமாச்சு
கிலேசமுடன் வந்தநோய் வருத்தலாச்சு
கிருபையுடன் வாரமெட்டில் சுகமுண்டாமே.


ஆரூடத்தில் பன்னிரெண்டு வந்தால், உனக்கு நல்ல பலனளிக்கும் கிரகங்கள் எல்லாம் பகையாக இருக்கின்றது என்பதாகும். பன்னிரெண்டில் குரு பார்வை வந்துவிட்டது. குடும்பத்தில் பெருங் கவலை உண்டாகும். பெண் ஒருத்தியால் கலகங்கள் ஏற்படும். தொழில் நஷ்டம் ஏற்படும். நம்பியவர்கள் வஞ்சிப்பதால் கடும் துயரம் உண்டாகும். நோயும் வருத்தும். எட்டுவாரம் சென்றால் தான் நன்மை கிட்டும் என்கிறார் அகத்தியர்.

௧௩. (13) வந்தால்..

ஆத்திரப்படவேண்டாம் அப்பாகேளு
அகஸ்தியரின் வாக்கியந்தான் வீண்போகாது
கோத்திரமே விளங்க குலந்தழைக்கும்
கொற்றவனே புத்திரப்பே றுனக்குண்டாகும்
கீர்த்தியுற மூத்தோர்கள் பொருள் கிடைக்கும்
சினங்கொண்டு பிரிந்தவரு முறவேயாவார்
கார்த்திடுவா யுனையடுத்த பேரை நீதான்
கண்டிடுவாய் இம்மாதம் கழியத்தானே.


ஆரூடத்தில் பதின்மூன்று வந்தால், அப்பனே ஆத்திரப்படாதே! நீ பட்ட துன்பங்கள் எல்லாம் விலகிவிடும். இனி உன் குடும்பம் தழைத்தோங்கும். புத்திரப்பேறு கிட்டும். பெரியோர்களின் பொருள் சேர்க்கையும், பகையானவர்களுடன் ஒற்றுமையும் உண்டாகும். தஞ்சம் என்று வந்தவர்களை ஆதரிக்கும் தன்மையும் உண்டாகும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நடக்கும் என்கிறார். இது அகத்தியர் வாக்கு. ஒரு போதும் வீண் போகாது என்று கூறுகிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

tamilvirumbi said...

Dear thozi,
Very good presentation, you have made for us.
With a great thanks

kimu said...

அருமையான பதிவு.
நன்றி

kaleappan said...

தோழி வணக்கம்,

கூO 'O' என்ற எழுத்து எதை குறிக்கிறது?

RAVINDRAN said...

நன்று

Rajakumaran said...

நன்றி

Post a Comment