அகத்தியர் ஆரூடம் - 45 முதல் 51 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

அகத்தியர் ஆரூடத்தில் இன்று நாற்பத்தி ஐந்தில் இருந்து ஐம்பத்தியொன்று வரையிலான எண்களுக்கான பலனை இன்று பார்ப்போம்.

௪௫. (45) வந்தால்..

அலட்சியமாய் நினைத்ததெல்லாம் அதிர்ஷ்டமாச்சு
அஷ்டமத்தில் புதபகவான் அமரலாச்சு
துலக்கமுள்ள பெரியோர்க ளுதவியாச்சு
துன்பமெலா மனைவிட்டு அற்றுபோச்சு
நலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று
நட்சத்திரம் போலுனக்கு அமையலாச்சு
கலகமிலா லட்சுமியின் கருணாயலே
கண்டிடுவா யிருபத்து நாளிலுண்மை.

ஆரூடத்தில் நாற்பத்தி ஐந்து வந்திருப்பதால், எட்டாமிடத்தில் புதன் வந்திருப்பதை குறிக்கிறது. இதனால் இது பயன் தராது என்று நீ அலட்சியமாக விட்டதெல்லாம் இனி நன்மையை கொடுக்கும். பெரியவர்கள் உதவியும் கிடைக்கும். துன்பங்கள் எல்லாம் வீட்டை விட்டு சென்றுவிடும். உனக்கு வலது பக்கதில் மச்சம் ஒன்று நட்சத்திரம் போல் அமைந்திருக்கும். லட்சுமியின் கருணையால் இருபத்தியொரு நாளில் இந்த உண்மைகளை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அகத்தியர்.

௪௬. (46) வந்தால்..

உலகிலே நீயடையாத துன்பமில்லை
உறன்முறையா லுந்தனுக்கு உதவியில்லை
நலமொன்று குடும்பத்தி லடைந்ததில்லை
நஷ்டமே டைந்த பொருள் கணக்கேயில்லை
மலைத்தவுன் மனநோய்க்கு மகிழ்ச்சியில்லை
கலக்கமது உனைவிட்டு போவதில்லை
கண்டிதமாய் நவமாதம் கழித்திடாயே.


ஆரூடத்தில் நாற்பத்தி ஆறு வந்திருப்பதால், இதுவரை நீ அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. உறவினர்கள் உதவியும் உனக்கு கிடைக்கவில்லை. இதுவரை நன்மை என்று எதுவும் உன் குடும்பத்திற்கு நடந்ததில்லை. நட்டமடைந்த பொருட்களுக்கும் கணக்கில்லை. மகிழ்ச்சி இல்லாமல் மன நோயால் பாதிக்க பட்டவர் போல் இருக்கிறாய். கலக்கம் உன்னைவிட்டு போகவில்லை. இன்னும் ஒன்பது மாதம் பொறுமையுடன் இருந்தால் அதன் பிறகு நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

௪௭. (47) வந்தால்..

கிரகத்தின் தோஷமெல்லா மொழிந்துபோச்சு
கீர்த்தியுடன் எண்ணமது பலிதமாச்சு
உரமிகுத்த பந்துக்களால் உதவியாச்சு
உன்னுடைய வியாபாரம் லாபமாச்சு
சிரமமிகம் நோய் விலகும் காலமாச்சு
சிக்கனமாய் பிக்குகளும் ஒழியலாச்சு
தரணிதன்னில் தழைத்தோங்கி வாழலாச்சு
தாட்டிகமாய் நாளேழில் சுகமுண்டாச்சு.


ஆரூடத்தில் நாற்பத்தியேழு வந்திருப்பது, உன் கெட்ட கிரகங்களெல்லாம் விலகி விட்டதைக் குறிக்கும். இனி உறவினர்கள் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். பலவித சிரமங்களைக் கொடுத்த நோயும் விலகும் காலம் இது. உன் சேமிப்பால் கடன்கள் யாவும் தீரும். பூமியில் சிறப்புடன் வாழ்வாய். இவை எல்லாம் இந்த ஆருடம் பார்த்த நாளில் இருந்து எழு நாளில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௪௮. (48) வந்தால்..

உத்தனுடைய எண்ணமெல்லாம் உறுதியாச்சு
உடன்பிறந்தோர் பந்துக்களால் உதவியாச்சு
சொந்தமான உன் தொழிலில் லாபமாச்சு
சுந்தரியால் உன்குடும்பம் செழிக்கலாச்சு
மந்தமதியுள்ளோரின் நேசம் போச்சு
மகாநோயும் தீர்ந்து மணம் கூடலாச்சு
எந்தமுகம் போனாலும் தங்கமுகமாச்சு
ஏழைகட்கு தர்மம் செய்வாய் ஈசன் சாட்சி


ஆரூடத்தில் நாற்பத்தி எட்டு வந்திருப்பதால், உன் எண்ணங்களெல்லாம் சிறப்பாக நிறைவேறும். சகோதரர்களாலும் சொந்தங்களாலும் உதவி கிடைக்கும்.செய்யும் தொழில் விருத்தி அடையும். மனைவியால் உனது குடும்பத்தில் அமைதி கிட்டும். உனைக் கெடுக்க நினனத்த வஞ்சகர்களின் உறவும் விட்டுப் போய்விடும். நோயும் குணமடையும். வீட்டில் திருமணமாகாமல் இருப்போருக்கு திருமண பாக்கியம் கிட்டும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதைகளும் கிடைக்கும். எழைகளுக்கு தருமம் செய்!, ஈசன் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் என்கிறார் அகத்தியர்.

௪௯. (49) வந்தால்..

அப்பனெ வருடமென்றாய் கஷ்டப்பட்டாய்
அதற்கு முன்னும் வெகுநாள் கவலையுற்றாய்
செப்பவே மாதமொன்று சென்றதானால்
சித்தத்தில் நினைத்த எண்ணம் ஜெயமேயாகும்
தப்பாது உன்வாக்கு தொழிலுமோங்கு
தனபாலம் மிகவுண்டு நலியம் நீங்கும்
ஒவ்பில்லா மணங்கூடும் மகப்பேறாகும்
உலகமதில் அகஸ்தீயனார் உரைத்தவாக்கு.


ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்பது வந்திருப்பது, நீ ஒரு வருடமாக துன்பமும் அதற்கு முன்னரும் பல நாட்களாக கவலைகளையும் அடைந்ததைக் குறிக்கும். ஆனால் இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஒரு மாதம் முடிந்தபின்னர், நினைத்த எண்ணம் எல்லாம் இனிதாக நிறைவேறும். உன் வாக்கு பிழைக்காது. தொழிலும் சிறப்பாக நடைபெறும். லாபம் அதிகரிக்கும். துன்பங்கள் விலகும். திருமண யோகம் கிட்டும். குழந்தை பேறும் உண்டாகும். இது உலகத்தவருக்கு அகத்தியர் சொல்லும் வாக்கு என்கிறார்.

௫o. (50) வந்தால்..

நினைத்து நீ எடுத்ததொழில் பலிக்குமப்பா
நிச்சயமாய் புவிதனிலே அடைவாய் லாபம்
உனைகெடுக்க வேணபேர் கூடினாலும்
உறவற்று அவர்கூட்ட மொழிந்துபோகும்
சினந்தவிர்த்து உந்தன்குல தெய்வந்தன்னை
சிறப்புடனே பூஜையது செய்வாயானால்
கணமுடனே உலகமதில் வாழ்வாயென்று
கலக்கமிலா குருமுனியும் உரைத்திட்டாரே.


ஆரூடத்தில் ஐம்பது வந்திருப்பதுதால், நீ நினைத்து செய்யும் தொழில் யாவும் சிறப்பாக நடைபெற்று அதிக லாபம் கிடைக்கும். உன்னைக் கெடுக்க நினைத்து எத்தனை பேர் கூட்டாக சதி செய்தாலும் அவர்கள் கூட்டமே அழிந்து போகும். நீ அதற்காகக் கோபம் அடையாமல், அதைப் பொருட்படுத்தாமல் குலதெய்வத்தை வணங்கிவர உலகில் சிறப்புடன் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.

௫௧. (51) வந்தால்..

கேதுசனி ராகுனக்கு பகைதானப்பா
கெடுதியுண்டு வாழ்வினிலே மனக்கிலேசம்
வாதுகளும் வம்புகளும் வந்தேதீரும்
வகைதப்பி யிடத்தைவிட்டு மாற்றிவைக்கும்
மாதுமக்கள் பந்துக்களும் மனைவெறுப்பார்
மனதுவைத்து செய்வதெல்லாம் நஷ்டமாகும்
ஏதுயினி செய்வதென யேங்கிடாதே
இடைஞ்சலெல்லாம் தீருமப்பா வாரமாறில்.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்று வந்திருப்பது, உனக்கு சனி ராகு கேது பகையாக இருப்பதைக் குறிக்கும். இதனால் குடும்பத்தில் பலவிதமான கவலைகள் ஏற்படும். எடுத்ததெற்கெல்லாம் வம்பு வழக்குகள் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்ல வேண்டி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் உன்னை வெறுப்பார்கள். மனம் விரும்பி செய்யும் காரியங்கள் எல்லாம் நட்டமாகும். இனி என்ன செய்ய என்று ஏங்காதே. இந்த துன்பம் எல்லாம் ஆறு வாரத்தில் நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

tamilvirumbi said...

Dear Thozi,
Your enormous efforts in carving out this blog convey good messages to everyone.Thanking you with a great pleasure.

kimu said...

Thanks :)

KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...

I aprecaite your hidden treasure work.I really wondering your carving.I found small variation in aaruda map.that is 12 and 58 having same tamil numerical letter.Is this correct or by oversighted.Pl.look in to this.
thanking you with a great pleasure.

Unknown said...

பெண்ணாய் பிறந்து பெருமை சேர்த்து விட்டாயடி என் தோழி

Post a comment