அகத்தியர் ஆரூடம் - 38 முதல் 44 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

இன்றைய பதிவில் முப்பத்தி எட்டு முதல் நாற்பத்தி நான்கு வரையிலான எண்களின் பலன்களைப் பார்ப்போம்.

௩௮. (38) வந்தால்..

இடம்விட்டு இடம்போக எண்ணமுண்டு
இருந்தாலும் அதனாலே லாபமுண்டு
தீடமான பெரியோரால் நன்மையுண்டு
தென்மேற்கு திசையிலிருந்து செய்தியுண்டு
திடமதிலே உனதுகுறை வேணதுண்டு
தைரியமாய் எத்தொழிலும் செய்யநன்று
முடவனெனும் சனியானவன் விலகிவிட்டான்
மூன்றுநாள் போகபின்னே சுகமுண்டாமே.

ஆரூடத்தில் முப்பத்தி எட்டு வந்திருப்பதால், முடவன் என்று சொல்லப்படும் சனியின் பார்வை உன்னை விட்டு விலகிவிட்டதாக கொள்ளலாம். இப்போது இருக்கும் இடம்விட்டு வேறிடம் போக எண்ணியிருக்கிறாய்!, அதனால் லாபமுண்டாகும். பெரியோர்களால் உதவியும் நன்மையும் உனக்கு உண்டு. தென்மேற்கு திசையிலிருந்து நன்மையான செய்திகள் வந்து சேரும். எந்த விதமான தொழிலை செய்தாலும் அதனால் லாபம் கிடைக்கும். இன்னும் மூன்று நாள் கடந்த பின்னர் அனைத்தும் நன்மையாகும் என்கிறார் அகத்தியர்.

௩௯. (39) வந்தால்..

பருதியது பத்தினிலே உதயமாச்சு
பகைவர்களின் பூண்டடியோ டொழியலாச்சு
வருத்தமே தந்தபிணி விலகலாச்சு
வறுமையுடன் மனக்குறையு மற்றுப்போச்ச
நிருபமது வெளியிலிருந்து வருகலாச்சு
நீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு
பெருமைபெற உந்தனுக்கு காலமாச்சு
பேசுமப்பா வுன்வீட்டில் கெவுளிதானே.


ஆரூடத்தில் முப்பத்தி ஒன்பது வந்திருப்பது, உனக்கு பத்தாவது விட்டில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் லாபங்களெல்லாம் உண்டாகும். உன் எதிரிகள் பூண்டோடு ஒழிவர். நோய் விலகும். உனது வறுமையும் மனக் கவலையும் நீங்கும். வெளியிலிருந்து நன்மையான செய்திகள் வரும். நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். நீ பெருமையடையும் காலம் இது. உன் வீட்டில் பல்லி சொல்லும் என்கிறார் அகத்தியர்.

௪o. (40) வந்தால்..

சளியவன் வக்கரித்ததால் சண்டைநேரும்
சகலவித காரியமும் தடங்கலாகும்
பணிவான மனிதர்களும் பகையேயாவார்
பலபொருளும்சேதமுண்டு காகும்பேளவரே
துணிவான காரியத்தை செய்ய நேரும்
துன்பமிக நேருமப்பா வியாதிகாணும்
கனிவான கடனாலே மனஞ்சஞ்சலிக்கும்
கழித்திடுவாய் நாற்பத்தி ஏழுநாளே.


ஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர்.

௪௧. (41) வந்தால்..

வையகத்தி லுன்கவலை நீங்கலாச்சு
வைரிகளும் உனைக்கண்டு ஏங்கலாச்சு
கைவிட்டு போனபொருளண் வருகலாச்சு
கன்னியர்க்கு மனைதனிலே கர்ப்பமாச்சு
பையவே வருத்தும் பிணி பறந்துபோச்சு
பாலகனே வெளியூரில் லாபமாச்சு
கைத்தொழிலும் வர்த்தகமும் ஓங்கலாச்சு
கருத்துடனே ஏழைகட்கு தருமஞ்செய்ய.


ஆரூடத்தில் நாற்பத்தி ஒன்று வந்திருப்பதால், இப்பொழுது உன் கவலைகளெல்லாம் நீங்கி வருகிறது. எதிரிகளும் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். உன் மனைவிக்கு கர்ப்பந்தரிக்கும். உன்னை கவலைக்குள்ளாகி வந்த நோய் நீக்கும். வெளியூரில் இருந்து லாபம் கிடைக்கும். வியாபாரமும் தொழிலும் பெருகும். கவனமாக ஏழைகளுக்கு தர்மம் செய்து வர நாளுக்கு நாள் நன்மை அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர்.

௪௨. (42) வந்தால்..

மனதிலோர் எண்ணத்தைக் கொண்டு நீதான்
மாதமொன்றாய் கவலையுற்று வருந்துகின்றாய்
இனமுள்ளவோர் பெண்மணியின் கலகத்தாலே
இடையூறு மிகவுண்டுன் குடும்பந்தன்னில்
தனதாண்யம் நிலபலமும் பொருளும் தோற்றாய்
நிஷ்டூருனாக நின்றாய் வுன்குடும்பத்தாருக்கு
தினமும் நீ நவக்கிரக பூஜை செய்தால்
தீவினைகள் தீர்ந்து சுகமடைவாய் தானே.


ஆரூடத்தில் நாற்பத்தியிரெண்டு வந்திருப்பதால், நீ மனதில் ஒர் எண்ணத்தை நினைத்து ஒருமாதமாக கவலைப்படுகிறாய். உன் குடும்பத்தில் ஒரு சிவந்த நிறமுள்ள பெண்மணியினால் கலகம் உண்டாகி, அதனால் அதிக இடையூறுகள் அதிகம் ஏற்படும். இதனால் பலவிதத்திலும் பொன் பொருள் நிலம் எல்லாம் இழந்தாய். குடும்பத்தவர்களுக்கு பகைவன் போலானாய். நாள் தோறும் நவக்கிரகத்தை வணங்கி வந்தால் இவை தீரும் என்கிறார் அகத்தியர்.

௪௩. (43) வந்தால்..

ஒன்பதிலே புதபகவான் உனக்கமர்நத
உறுதியினால் நினைத்த எண்ணம் பலிதமாக
கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கெண்டம் போச்சு
கடன் கொடுத்த பொருள் வரவும் காலமாச்சு
மண்மனையும் பொன்பொருளும் சேரலாச்சு
மாடாடு கொள்ளவும் பால்பாக்கியமாச்சு
துன்மார்க்கர் சகவாசம் வைத்திடாமல்
தொல்லுகில் நல்விதமாய் வாழ்ந்திடாயே.


ஆரூடத்தில் நாற்பத்தி மூன்று வந்திருப்பது, புதன் ஒன்பதாவது விட்டில் அமர்ந்திருப்பதைக் குறிக்கும். கண்ணியமான வாழ்க்கை வாழ்வாய். உனக்கிருந்த கண்டம் போய்விட்டது. கடன்கொடுத்த பொருள் கை வரும் காலம் இது. நிலம் வாங்கவும் மனை வாங்கவும் பொன் பொருள் சேரவும் உகந்த நேரமிது. ஆடு மாடு வாங்கவும் முடியும். ஆனால் தீயவர்களுடன் தொடர்பு வைக்காதே, அவர்களை விட்டு நிங்கினால் உனக்கு ஒருவித கவலையும் உண்டாகாது என்கிறார் அகத்தியர்.

௪௪. (44) வந்தால்..

பாம்பின் தெரைபோல் பதறிடாதே
பதட்டமாய் ஒருவரையம் நிந்திக்காதே
விம்புகொண்டு குடும்பத்தை வெறித்திடாதே
வெகுகலகம் உன்மீத வரும்தப்பாதே
சோம்பல்கொண்டு செய்தொழிலை விட்டிடாதே
சித்தமது நோய்நொடியாயல் கலங்கிடாதே
ஆம்செவ்வாய் சனியாலே தோஷமுண்டு
ஆதரவாய் நவக்கிரகபூஜை செய்ய.


ஆரூடத்தில் நாற்பத்தி நான்கு வந்திருப்பதால், உனக்கு செவ்வாய் மற்றும் சனியின் தோசமுள்ளது. இதன் காரணத்தினால் பாம்பின் வாயில் சிக்கிய தேரையைப் போல் பதறி ஒருவரையும் நிந்தனை செய்யாதே. அதிக துன்பத்தால் குடும்பத்தை வெறுக்காதே. பலவிதமான கலகங்கள் உன் குடும்பத்திற்கு ஏற்படும். சோம்பல் குணம் வந்து தொழிலைக் குழப்பும். நோயால் பாதிக்கப்படுவாய். கவலைப் படாமல் நவக்கிரகத்தை வணங்கிவர நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

1 comments:

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot.Still, most of the visitors become insatiated notwithstanding you have furnished vast information to the readers.

Post a comment