அகத்தியர் ஆரூடம் - 22 முதல் 30 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

௨௨. (22) வந்தால்..

உள்ளத்தின் கவலையெல்லாம் உடனே தீரும்
உறவற்றுப் போனவரும் வந்து சேர்வார்
விள்ளவும் முடியாது உந்தன் வாழ்க்கை
வினோதமாம் பொன் பொருளும் சேர்க்கையாகும்
வள்ளலின் கிருபையால் வருட மூன்று
வலுக்குமப்பா எத்தொழிலைச் செய்தபோதும்
கள்ளத்திரு மால்மருக னுதவியாலே
கருதியதெல்லா முனக்கு ஜெயதாமே.


ஆரூடத்தில் இருபத்தியிரண்டு வந்திருப்பதால், இனி உன் கவலைகளெல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். பகையாகி பிரிந்து போனவரும் கூட உன்னிடம் வந்து சேருவார்கள். இனி வரும் நாட்களில் வினோதமான பொன் பொருள்களெல்லாம் சேர்க்கையாகும். எத் தொழிலை செய்தாலும் அது மிகுந்த லாபத்தை அளிக்கும். இந்த ராசி மூன்று வருடத்திற்கு நல்ல யோகமாக இருக்கும். திருமாலின் கிருபையால் எண்ணியதெல்லாம் இனி முடியும் என்கிறார் அகத்தியர்.

௨௩. (23) வந்தால்..

பாரப்பா உந்தனைப்போல் பாக்கியசாலி
அகிலமதில் நினைப்பதெல்லாம் ஜெயமேயாகும்
பார்வேந்தன் போலுனக்கு பாக்யமுண்டாகும்
பலதொழிலும் செய்திடவே லாபமுண்டாம்
கார்வண்ணனருளால் பெண் குழந்தையுண்டாம்
கவலையெல்லாம் தீருமதால் கலங்கவேண்டாம்
சீர்பெறவே சனிவார விரதம்பூண்டு
சிறப்புடனே நவக்கிரக பூசைசெய்.


ஆரூடத்தில் இருபத்திமூன்று வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் பலிதமாகும். தொழிலில் அளவற்ற லாபம் உண்டாகி குடும்பத்தில் செல்வச் செழிப்பும், அரசன் போல் வாழ்வும் உருவாகும். பரந்தாமனின் கருணையால் மனையில் ஓர் பெண்குழந்தையும் பிறக்கும். அக்குழந்தையினால் குடும்பத்திலுள்ள பல கவலைகளும் நீங்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து நவக் கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.

௨௪. (24) வந்தால்..

போனதை மறந்துவிட புகழேயுண்டு
புண்ணியனே மனக்கலக்கம் வேண்டாமென்று
கானகம் சென்ற ராமர் மற்றும் தருமர்
கனநளன் அரிச்சந்திரன் கதையைப்போல
ஆனதோர் இம்மாதம் சென்றதனால்
அழிந்திட்ட பொருளனைத்தும் வரவேநேரும்
வேணவே செல்வமுடன் கலகம் நீங்கும்
வார்த்தகமும் புத்திரரும் மிகவுண்டாமே!


ஆரூடத்தில் இருபத்திநான்கு வந்திருப்பதால், இதுநாள் வரை அளவில்லாத கஷ்டங்களையும் அதனால் தொழில் நஷ்டங்களையும் அடைந்து பலவிதமாக கவலை அடைந்து இருக்கிறாய். ஆனாலும் அந்தக் கவலைகள் எல்லாம் இப்பொழுதே மறந்துவிடு. தைரியத்தை கை விடாதே, இதற்கு முன் தருமர், நளன், அரிச்சந்திரன் போன்றவர்கள் எல்லாம் பல இன்னல்களை அடைந்து முடிவில் சுகத்தை அனுபவித்திருக்கிறார்கள். அது போல் உனக்கும் இம்மாதத்தின் பின்னரே நன்மை உண்டாகும். அழிந்த பொருள் எல்லாம் வந்துசேரும். கவலை எல்லாம் நீங்கும். இப்பொழுது கலங்காமல் காத்திரு என்கிறார் அகத்தியர்.

௨௫. (25) வந்தால்..

குற்றமுள்ள கிரகமெல்லாம் விலகிப் போச்சு
குடும்பத்தில் ஜெயகால முதவியாச்சு
பற்றறவே பதிமூன்று நாளேபோனால்
பாலகனே ஐந்தாண்டிற் குறைவேயில்லை
சுற்றமுடன் வாழ்ந்திடுவாய் சுகமே கூடும்
சுகவாழ்வும் மகப்பேறும் தொழிலும் ஓங்கும்
அற்புதமாய் பொருள்சேரும் அரசனைப்போல்
அகமகிழ் வாழ்ந்திடுவாய் அதிர்ஷ்டந்தானே.


ஆரூடத்தில் இருபத்தி ஐந்து வந்திருப்பதால், இது நாள்வரை உனக்கு இடைஞ்சல்களை விளைவித்த கிரகங்கள் எல்லாம் இப்போது விலகிவிட்டது. இன்னும் பதிமூன்று நாட்கள் போனால் அடுத்த ஐந்து வருடத்திற்கு குறைவின்றி குடும்பத்தாருடன் மகிழ்வுடன் வாழ்வாய். குழந்தை பேறும், தொழில் விருத்தியும் உண்டாகும். சிறப்பாக பொருள் சேரும். அரசன் போல் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.

௨௬. (26) வந்தால்..

பாலனே இனியொன்றும் பயமேயில்லை
பலிக்குமப்பா உந்தனுட எண்ணமெல்லாம்
மேலான லாபமெல்லாம் அடைவாயப்பா
மேதினியில் செய்தொழிலும் நீடித்தோங்கும்
ஆலமுண்டோன் அருளாலே ஆண்குழந்தை
அப்பனே உன்மனையில் பிறக்கும்பாரு
கீலகமின்றி யிருபத்தேழ் நாளில்
கனவிலும் அதிசயங்கள் காண்பாய்தானே.

ஆரூடத்தில் இருபத்தியாறு வந்திருப்பதால், இனி பயப்பட எதுவும் இல்லை. உன் எண்ணமெல்லாம் பலிக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும் அதிக லாபமும் கிடைக்கும். சிவன் அருளால் ஆண் குழந்தையும் கிடைக்கும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த இருத்தேழு நாளில் நடக்கும், இதற்கு அடையாளமாக இனி வரும் இரவுகளில் அதிசயமான கனவுகள் காண்பாய் என்கிறார் அகத்தியர்.

௨௭. (27) வந்தால்..

இக்கட்டாய் முடிந்ததெல்லாம் இனிதாய் தீரும்
எண்ணிய எண்ணமெல்லாம் ஜெயமேயாகும்
பக்கநின்று குலதெய்வம் பாதுகாக்கும்
பாலர்கட்டு ஞானமுடன் கல்வியோகங்கும்
தக்கதொரு தொழில் நடக்கும் தனமே சேரும்
தாயாதி பொருள் சேரும் நோயும் நீங்கும்
மிக்க பெரியோர்களிட உதவி கூடும்
மேல்நாட்டு செய்திகண்டு மகிழுவாயே


ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், உன்னடைய ஆபத்துகளெல்லாம் இனி நீங்கும். எண்ணிய எண்ணம் எல்லாம் பலிக்கும். குல தெய்வம் துணையாய் இருந்து உன்னைக் காக்கும், குழந்தைகளுக்கு கல்வி, ஞானம் அதிகரிக்கும். உனக்கு ஏற்ற தொழில் அமையும்.அதனால் செல்வமும் பொருட்களும் சேரும். பெரியோர் உதவிகள் கிட்டும். வெளிநாட்டு செய்தியொன்று உன்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்கிறார் அகத்தியர்.

௨௮. (28) வந்தால்..


கிரகங்கள் பொல்லாது பொல்லாதப்பா
கீர்த்தியில்லை நினைப்பதெல்லாம் தடங்கலாகும்
பரதேசி போலாக்கும் பயங்கள் தோணும்
பாலகனே செய்தொழிமில் நஷ்டங்காணும்
உறவான பெற்றோரும் வேறுப்பாரப்பா
உள்ளதொரு பொருளழியும் நோயும் காணும்
புறம்பேசும் குரும்பர்களால் கலகம் நேரும்
போக்கிடுவா யறுமூன்று வாரந்தானே.


ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால்,உனக்கான கிரகங்களெல்லாம் பொல்லாததாக இருப்பதால் நன்மை இல்லை. எண்ணிய காரியம் கைகூடாது. பெற்றவற்களே உன்னை வெறுப்பார்கள். பரதேசி போன்ற நிலை ஏற்படும். மனதில் பயம் உண்டாகும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். உள்ள பொருளும் அழிந்து வறுமையால் உய்ண்டாகும். நோய் நொடி ஏற்படும். புறம் பேசுபவர்களால் கலகம் உண்டாகும். ஆனால் இவை எல்லாம் அடுத்த 18 வாரத்தில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.

௨௯. (29) வந்தால்..

இப்புவியில் பட்டதுயர்வில கிப்போச்சு
இனியொன்றும் குறைவில்லை ஜெயமுண்டாச்சு
தப்பிதங்க ளணுகாது தழைத்து வாழ்வாய்
தனலாப மடைந்திடுவாய் நஷ்டமில்லை
ஒப்பவே ஜென்மத்தை விட்டுராகு
விலகிடுவான் இருபத்து ஐந்துநாளில்
அப்பனே அதற்குப்பின் நினைத்ததெல்லாம்
அகஸ்தியர் சொல்போல் நடக்கும் அதிர்ஷ்டந்தானே.


ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், இவ்வுலகில் இதுவரையில் நீ பட்ட துன்பங்களெல்லாம் விலகிப்போய்விட்டது. இனி ஒரு குறையும் இல்லை. எத்தகைய காரியத்தை நினைத்த போதிலும் அது சித்தியாகும். இனி லாபமே கிட்டும், நட்டம் ஏற்படாது. இதுவரை ஜென்மத்தில் இருந்த ராகு இன்னும் 25 நாளில் விலகிவிடுவான். அதன்பிறகு என் வாக்கின்படி எல்லாம் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

௩o. (30) வந்தால்..

ஆதிமுத லிதுவரையில் னேகதுன்பம்
அப்பனே அனுபவித் தவஸ்த்தையுற்றாய்
பாதியிலெ பெரியோரின் பொருளைத் தோற்றாய்
பலவிதத்தில் தொழில் முறையிலவ் நஷ்டமுற்றாய்
வாதியாய் பந்துகட்கும் வைரியானாய்
வலுத்தமுள்ள நோயாலே வருத்தப்பட்டாய்
நீதியாய் இருபது நாள்தான் சென்றால்
நிச்சயமாய் சுகமுண்டு நினைத்துப்பாரே.


ஆரூடத்தில் முப்பது வந்திருப்பதால், இது நாள் வரை நீ அளவற்ற கவலைகளை அனுபவித்து வருகிறாய். பெரியோர்களின் பொருளை அழித்தாய். தொழிலிலும் பலி விதமான நஷ்டப்பட்டாய். உன் உறவினர்களுக்கு எதிரியானாய். நோய் வாய்ப்பட்டு மிகவும் வருந்தினாய். தைரியத்தை விடாதே. இன்னும் இருபது நாளில் உன் கஷ்டங்களெல்லாம் விலகி சுகமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

Netrikkan said...

இந்த ஆருடதிர்க்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் குறிபிட்டு உள்ளீர்.
மற்ற நிபந்தனைகளையும் கூறவும் ஏனென்றால் தவறான நிபந்தனையை பின்பற்றி ஆருடம் பார்க்கக்கூடாதல்லவா.

இவை அனைத்தும் மின்னூலாக தந்தருளினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
அழகிரி.......

M.R said...

நல்ல பனி தொடருங்கள் தொடர்கிறேன் நன்றி

kaleappan said...

தோழியே வணக்கம்,

இந்த யந்திரதை தயார் செய்யும் பொழுது எண்களை கட்டத்தில் நிரப்ப வேண்டுமா அல்லது எழுத்தைக் கொண்டு நிரப்ப வேண்டுமா?அல்லது இரண்டையும் எழுத வேண்டுமா?

இதை எப்படி பூஜை செய்வது?

நன்றி,

tamilvirumbi said...

Dear thozi,
Thanks.

kimu said...

Thanks

Dont Quit said...

tholiku enathu vanakkam, oruvaraathu aathma saanthi adaya ethum vali sonnal nandraga irukum .,

geethasmbsvm6 said...

இன்றுதான் இந்தச் சுடியைப் பார்த்தேன். நிதானமாய்ப் படிக்கணும். சுட்டிக்கு நன்றி.

Post a Comment