அகத்தியர் ஆரூடம் - 14 முதல் 21 வரையிலான பலன்கள்!

Author: தோழி / Labels: ,

௧௪. (14) வந்தால்..

பாரப்பா வந்தவனுக்கு நல்லயோகம்
பலித்திடவே வந்ததினால் தனமேலாபம்
சீரப்பா நோய்விலகும் மணமேகூடும்
சிறுவர்கட்கு கல்வியுடன் செல்வமோங்கும்
நேரப்பா குடும்பத்தின் கவலை நீங்கும்
நெடுந்தூரம் போனவரும் வரவேநேரும்
கோரப்பா பரம்பொருளை குணமுண்டாகும்
கொண்டயெண்ணம் கைகூடும் நாளீரேழில்.


ஆரூடத்தில் பதினான்கு வந்திருப்பதால், இனி உனக்கு நல்ல யோகம் உண்டாகப் போகிறது. பீடித்திருக்கும் நோய் எல்லாம் விலகும். திருமண நிகழ்வு ஒன்று குடும்பத்தில் நிகழும். சிறுவர்களின் கல்வி சிறப்பாகும். உன்னைப் பிரிந்து வெகுதூரம் போனவர்கள் தேடி வருவார்கள். மிகுந்த செல்வமும், சிறப்பும் உன்னை வந்து சேரும். இவை எல்லாம் இன்றிலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து கைகூடும் என்கிறார் அகத்தியர்.

௧௫. (15) வந்தால்..

பஞ்சமதில் சுக்கிரனின் ஆட்சியாச்சு
பட்டதொரு துன்பமெல்லாம் பறந்துபோச்சு
தஞ்சமென்ற பேர்களை நீ காக்கலாச்சு
தனவந்த னென்றபெய ருனக்குண்டாச்சு
வஞ்சமுள்ள பஞ்சர்குல மொழியலாச்சு
ஓர் வஞ்சியால் பொருள்சேரும் வழக்கும்போச்சு
அஞ்சாதே கெண்டமெலாம் தவறலாச்சு
அறுநான்கு நாள்தனில் அதிர்ஷ்டமாச்சே


ஆரூடத்தில் பதினைந்து வந்திருப்பதால், இனி உனக்கு ஐந்தில் சுக்கிரன் ஆட்சியாவதைக் குறிக்கிறது. எனவே இது வரை நீ பட்ட துன்பம் எல்லாம் இனி விலகும். உன்னை தஞ்சமென தேடி வருவோரை ஆதரிக்கும் வகையில் உன்னிடம் செல்வம் வந்து சேரும். ஒரு பெண் வழியாக உனக்கு செல்வம் வந்து சேரும். வம்பு, வழக்குகள் விலகும். ஆகையால் இனி நீ கவலை கொள்ளாதே இன்னும் இருபத்தி நான்கு நாளில் இதெல்லாம் சாத்தியமாகும் என்கிறார் அகத்தியர்.

௧௬. (16) வந்தால்..

இவ்விடத்தி லிருந்தாலும் சுகமிராது
இடம்விட்டு போனாலும் பயன்படாது
கள்ளமன துள்ளவரை கருதொணாது
கருத்தினிலே நினைத்தயெண்ணங் கைகூடாது
உள்ளபடி நடந்தாலும் உருப்படாது
உன்மனைவி மக்களுனக் கடங்கிடாது
அல்லது உனைவிட்டு அகன்றிடாது
அப்பனே மாதமொன்று கழித்திடாயே.

ஆரூடத்தில் பதினாறு வந்திருப்பதால், இப்போது இருக்கும் இடமும் உனக்கு சுகப்படாது, வேறிடம் மாறினாலும் பயனில்லை. காரியத் தடை உண்டாகும். எண்ணிய எண்ணம் எதுவும் ஈடேறாது போகும். மனைவி, மக்களும் மதிக்கமாட்டார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடிக்கும். எனவே இந்தக் காலத்தில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டுமென கூறுகிறார் அகத்தியர்.

௧௭. (17) வந்தால்..


சுகமுடனே நினைத்ததெல்லாம் பலிக்குமப்பா
சுகக்ஷேம மாயிருப்பாய் புவியின் மீது
பகையொன்றும் நேராது குடும்பந்தன்னில்
பலவிதத்தில் செய்தொழிலில் லாபங்காணும்
அகமகிழ பெரியோர்கள் பொருள் கிடைக்கும்
ஆதரவாய் பந்துக்களும் உதவியாவார்
மிகவருந்தும் நோயதுதான் மருந்தால்தீரும்
மைந்தனே வாரமது யிரண்டில்தானே.


ஆரூடத்தில் பதினெழு வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் நிறைவேறும். சுக வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் பகை விலகும்.செய் தொழில் எல்லாம் லாபம் தரும்.முன்னோர்களின் பொருள் வந்து சேரும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும்.வருத்தும் நோயும் மருந்து கொள்ள தீர்ந்து போகும். இவை எல்லாம் அடுத்த இரண்டு வாரத்தில் உனக்கு வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

௧௮. (18) வந்தால்..

வாக்கான கிரகமெல்லாம் முச்சமாச்சு
வறுமையுடன் பெரும்பிணியு மொழியலாச்சு
போக்கான பொருள்களெல்லாம் பறந்துபோச்சு
பொல்லாத கஷ்டமெல்லாம் பறந்துபோச்சு
நோக்கிதிசை தவறியபேர் வருகலாச்சு
நீடித்துத் தொழிலுனக்கு மகப்பேறாச்சு
கேட்காத நற்செய்தி கேட்கலாச்சு
கவலையெல்லாம் நாளாறில் நன்மையாச்சே.

ஆரூடத்தில் பதினெட்டு வந்திருப்பதால் இப்போது உன்னுடைய வலிமையான கிரகங்கள் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் வறுமை அகலும். நோய் தீரும். தொலைந்த பொருட்களெல்லாம் கிடைக்கும். தீராக் கவலைகள் கூட இனி தீர்ந்து போகும். நிலைத்த தொழில் உண்டாகும். குழந்தை பாக்கியம் உருவாகும். இது வரை கேட்டிராத நல்ல செய்திகள் எல்லாம் இனி உன்னைத் தேடி வரும். உனை விட்டு பிரிந்தவர் உன்னைத் தேடி வருவார்கள். இதற்கான அமைப்புகள் அடுத்த ஆறு நாளில் உருவாகும் என்கிறார் அகத்தியர்.

௧௯. (19) வந்தால்..

இதுவரையில் நீபட்ட துன்பமெல்லாம்
யாராலும் கூறிடவே முடியாதப்பா
சதிசெய்தார் உந்தனுக்கு வேணபேர்கள்
சஞ்சலங்கள் மிகவடைந்தாய் தரணி தன்னில்
நிதியான கேதுவுந்தன் ஜென்மம் விட்டு
நீங்கிடுவான் இருபத்தியோர் நாள்போனால்
அதன்பிறகு எது நீ செய்த போதும்
ஆட்சியுடன் வாழ்ந்திடுவாய் அஞ்சிடாதே.


ஆரூடத்தில் பத்தொன்பது வந்திருப்பதால், இது வரை கொடுமையான துயரத்தை அனுபவித்திருப்பாய். இப்போது மிகுந்த கவலை நிறைந்த மனிதனாய் இருக்கிறாய். நீ நம்பியவர்களே உனக்கு தீராத கெடுதலைச் செய்தனர். இந்த நிலைக்காக இனி கவலைப் படாதே. இன்றில் இருந்து இருபத்தியோரு நாளில் உன் ஜென்மத்தில் இருக்கும் கேது விலகிவிடுவான். அதன் பின்னர் நீ தொட்டதெல்லாம் துலங்கும். செய்தொழில் மேலோங்கும்... கவலைப் படாதே என்கிறார் அகத்தியர்.

௨o. (20) வந்தால்..


கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கிடாதே
கபடமுள்ளோர் நேசமதை வைத்திடாதே
படமுடியா கஷ்டமென்று பயப்படாதே
பதட்டமாய் தெய்வத்தை நிந்திக்காதே
குடும்பமதில் பகைசெய்து குணங்கெடாதே
குருபலனும் வாரமூன்றில் வரும்தப்பாதே
தடமதனில் நோய்நொடியால் தவித்திடாதே
தணிந்திடவே நவக்கிரகபூஜைசெய்ய


ஆரூடத்தில் இருபது வந்திருப்பதால், கடன்பட்டவனைப் போல நெஞ்சம் கலங்கி இருக்கிறாய். படாத பாடெல்லாம் பட்டிருக்கிறாய்.இதனால் வெறுப்படைந்து குடும்பத்தினரிடம் கோபம் கொள்ளாதே, தெய்வத்தை நிந்திக்காதே!. இன்னும் மூன்று வாரத்தில் உனக்கு குருபலம் கூடி வருகிறது. அப்போது உன் துயரங்கள் நீங்கும். அதுவரையில் கபட எண்ணமுடையவர்களை விட்டு விலகி இருக்கச் சொல்கிறார். நோய் நொடிகளின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள நவக்கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.

௨௧. (21) வந்தால்..

ஐந்தினிலே குருபகவான் அமர்ந்ததாலே
அழிசூ ழுலகினிலே செழித்து வாழ்வாய்
மைந்தர்களை யீன்றதனால் சுகமேகாண்பாய்
மனக்கவலை விலகிடும் வழக்கு வெல்வாய்
வந்திடுவார் திசைமாறி போனவர்கள்
வலுத்திடும் வியாபாரம் நோயும் நீங்கும்
சொந்தமதில் மணங்கூடும் பொருளுஞ்சேரும்
சொல்மொழிதான் தவறிலிதை சுட்டுப்போடே.


ஆரூடத்தில் இருபத்தியொன்று வந்திருப்பதால், உனக்கு குரு ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்று நீடித்த செல்வச் செழிப்பை அருளுவார். மனக் கவலை தீரும். வழக்கு விவகாரங்கள் எல்லாம் விலகிப் போகும். செய்தொழில் யாவும் சிறக்கும். நோய்கள் விலகும். மனை நிறைய புத்திர பாக்கியம் உண்டாகும். உன்னை பிரிந்து திசை மாறிப் போனவர்கள் உன்னைத் தேடிவருவார்கள். ஐந்தாமிடத்தில் குரு இருப்பதால் உன் குடும்பம் செழித்து ஓங்கும். மனை நிறைந்த மக்களைப் பெறுவாய். தன்னுடைய இந்த வாக்கு பலிக்கா விட்டால் இந்த நூலை எரித்து விடலாம் என உறுதியுடன் கூறுகிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot.From the way, siththar agathiyar
enunciated this aarudam to fulfill everyones' curiosity to 100%.It is a very good sign for those who are believing.

Rajakumaran said...

nice..

kimu said...

thanks

Post a comment