உருவ தரிசனம், அரூப தரிசனம்.

Author: தோழி / Labels: ,

அகத்தியர் அருளிய பதிறாறு தரிசனங்களில் இன்று பதினான்கு மற்றும் பதினைந்தாவது தரிசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இவை முறையே “உருவ தரிசனம்”, “அரூப தரிசனம்” என்றழைக்கப் படுகிறது.

உருவ தரிசனம்..

சோதியென்ற னாதாந்த தெரிசனமுஞ்சொன்னேன்
சுரூபமென்ற உருவமதின் தெரிசனத்தைக்கேளு
ஆதியென்ற கோமுகஆசான மேல்க்கொண்டு
அப்பனே விபூதி தூளிதமேசெய்து
நீதியென்ற வாமமதால் மவுனம்பூட்டி
நின்றிநிலை தமர்வால் திரையை நீக்கி
ஓதியதோர் பிரணவத்தால் உள்ளேசென்றால்
உள்ளொளியும் வெளியொளியும் மொன்றாய்ப்போமே.

ஒன்றாகி நின்றபொருள் தானேதானாய்
உத்தமனே அட்டசித்துந் தானேயாகும்
நன்றான ரவிமதியுஞ் சொன்னபடிகேக்கும்
நாட்டமுடன் யிகபரமும் நன்மையாகும்
நின்றாடும் வாசியினால் மவுனங்கொண்டு
நெறியான தமரதிலே வாமாகி
நேராத மவுனரசங் கொண்டாயானால்
குருவான தேசியடா வாசியாமே.


முந்தைய பதின்மூன்று தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த தரிசன முறையினை பின் பற்றி பயில வேண்டும். கோமுக ஆசனத்தில்* அமர்ந்து இருந்து கொண்டு வீபூதி துளிதமிட்டு கவனக் குவிப்புடன் ஆழ்ந்த மௌனமாக இருந்து பிரணவ மந்திரமான “ஓம்” என்ற மந்திரத்தை செபித்து வர உள் ஒளியும், வெளி ஒளியும் ஒன்றாக இணைவதை தரிசிக்கலாமாம். இதுவே உருவ தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

இத்தகைய உருவ தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு அட்டமா சித்துக்களும் சித்திப்பதுடன், இக பரமும் தெளிவாக விளங்கும் என்கிறார் அகத்தியர்.

*ஆசனங்கள் பற்றி சித்தர்கள் அருளிய தகவல்களை கூடிய விரைவில் விளக்கப்படங்களுடன் எழுதுகிறேன்.

அரூப தெரிசனம்..

உருவ தரிசனம் வரையிலான அத்தனை தரிசனங்களை பெற்றவர்கள் இந்த அரூப தரிசனத்தை பயிலலாம். இது பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

வாசியென்ற உருவதுவே பொருளென்றெண்ணி
மனதுபரி பூரணமாய் பூசைசெய்து
தேசியென்ற அருவமதின் தெரிசனத்தைக்கேளு
திருகுமணி வாசிலிலே மவுனம்பூட்டி
நாசினுனி சுழினை வழிதமருக்குள்ளே
வாசி ஊடுருவ நாட்டங்கொண்டு
ரேசிவாசிம் மெனவே வாசியாதி
நின்னகமும் விண்ணகமும் ஒன்றாங்காணே.

ஒன்றான காட்சியடா அரூபமாச்சு
உத்தமனே அரூபமென்ற காட்சிதன்னை
அண்டகேசரி யெனவே அமர்ந்துகொண்டு
அனுதினமும் பிராணதாரகமாய் நின்றால்
குன்றாத சமாதியடா சோதியாச்சு
குருவான சோதியிலே கூர்ந்துகொண்டால்
நன்நான பதவியடா சாயுச்சியபதவி
நாதாந்த பதவியென்ற அரூபமாச்சே.


கேசரி யோகத்தில் அமர்ந்திருந்து கொண்டு திருகுமணி வாசலிலே மௌனமாக உற்று நோக்கி. நாசிநுனி சுழினை வழியாக மூச்சு செல்லும் போது மனதும் விண்ணும் ஒன்றாய் இருப்பதை ஊணர முடியுமாம். அந்த ஒன்றாக இருப்பது அரூப காட்சியாக தென்படுமாம். இந்த காட்சியை தரிசித்த படி பிரணாயாமம் செய்துவந்தால் சாயுச்சிய பதவி கிடைப்பதுடன் சமாதி நிலையும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!, அடுத்த பதிவில் பதினாறாவதும் மிக முக்கியமானதும் கடைசி தரிசனமுமான சாயுச்சிய தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

மாய உலகம்4u said...

பதினாறு தரிசனங்களையும் முறையாக அமர்ந்து பயில ஆர்வமாக உள்ளது .... ஒவ்வொரு நாளும் முதல் தரிசனத்தில் தொடங்கி பதினாறு தரிசனமும் பெற வேண்டும் என மனம் வேண்டுகிறது.... அதற்காக கடவுளிடம் வேண்டுகிறேன்....

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

காத்திருக்கிறோம் தோழி..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

R.Gopi said...

சித்தர்களின் ரகசியங்களை... உருவ அருவ தரிசனம் காண வைத்த தோழி அவர்களுக்கு என் வணக்கங்களும், நன்றிகளும் உரித்தாகுக....

viswam said...

அருமை. நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

கோவிந்தராஜு.மா said...

மிகவும் நன்றி உமது சேவை தொடறட்டும்

Ashvinji said...

தரிசனம்+தரிசனம்=மஹா தரிசனம் படித்தேன். நல்லா இருக்கு. அடுத்த பதிவில் சாயுஜ்ய தரிசனத்துக்காக காத்திருக்கேன்.

tamilvirumbi said...

Dear thozi,

Thanks a lot for your valuable information.

தமிழ் said...

கோமுக ஆசனம்

செய்முறை:

கால்களை முன்னோக்கி நீட்டி அமரவும். வலதுமுழங்காலை மடக்கி, இடதுதொடை மீது வையுங்கள். இதுபோலவே, இடதுமுழங்காலை மடக்கி, வலது தொடை மீது போடவும். இரண்டு கை விரல்களையும் படத்தில் காட்டியபடி முதுகுக்கு பின்பாக, கால் மூட்டை கோர்த்தநிலையில் ஒன்றிணையுங்கள். இரண்டு கரங்களையும் அந்தந்த கால் பாதங்களில் ஒன்றிணைத்து, அப்படியே முன்புறமாக குனியவும்.

Post a Comment