அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங்களில் இன்று ஒளி தரிசனம் மற்றும் விந்து தரிசனம் பற்றி பார்ப்போம்.
தரிசனங்கள் என்பது ஒரு வகையான அனுபவ நிலை. அவற்றை வார்த்தைகளினால் விவரிப்பதை விட அனுபவித்து அறிவதே சிறப்பு. அனுபவம் என்பது முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். ஆகக் கூடிய பொறுமை மற்றும் நிதானத்தோடு இவற்றை பயிலும் எவருக்கும் தரிசனம் சாத்தியம். இத்தகைய தரிசனங்களை பெற்றவர்களை நான் அறிவேன் என்பதால் இந்த கருத்தினை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
வாருங்கள் ஒளி தரிசனம் பற்றிய அகத்தியரின் பாடலைப் பார்ப்போம்.
ஒளி தரிசனம்..
ஆச்சப்பா பரமவெளி தெரினமுஞ்சொன்னேன்
அருள்நிறைந்த ஒளியினுட தெரிசனத்தைக்கேளு
காச்சப்பா அங்கென்று கண்டமதில்யிருத்தி
கருணைவளர் உச்சியிலே சிம்பென்றுரேசி
பாச்சப்பா யிப்படியே பிராணாயஞ்செய்தால்
பரமவெளி தன்னிலொளி பளீரெனவேதோணும்
மூச்சப்பா நின்றநிலை ஆரறியப்போறார்
முத்திகொண்ட சுழினையடா சந்தியந்தான்பாரே.
ஆதி தரிசனமான ஆத்மாவின் தரிசனம் துவங்கி பிரம தரிசனம் வரை வாய்க்கப் பெற்றவர்களே இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமாம். கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து “அங்” என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம்” என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டுமாம். அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும் என்கிறார் அகத்தியர். இதுவே ஒளி தரிசனம் ஆகும்.
இந்த ஒளி தரிசனத்தை தரிசிக்கப் பெற்றவர்கள் அடுத்த தரிசனமான விந்து தரிசனத்தை பயில வேண்டும். இதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
பாரப்பா ஒளியினிட தெரிசனமும் சொன்னேன்
பதவின விந்தினிட தெரிசனத்தைக்கேளு
சாரப்பா கேசரியில் மனதைனாட்டி
தமரான அணுவாசல் தன்னில்நின்று
நேரப்பா கண்ணடங்க மவுனம்பூட்டி
நேர்மையுடன் தானிருந்து றீங்கென்று
காரப்பா வாசியை நீமேலேனாக்கி
கருணையடன் சுழினையிலே நிசமென்றுநில்லே.
நில்லடா சிம்மெனவே வாசிகொண்டு
நிலையான தமரதிலே வாசியேத்து
வில்லடா விசைபோலே வாசியேத்து
விபரமுடன் யிறங்குதுறை அறிந்துகொண்டு
செல்லடா தமரதிலே நின்றுபார்த்தால்
சிவசிவா பூரணசந் திரனேகாணும்
உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால்
உறுதியுடன் சிருஷ்டிதிதி சங்காரமாமே.
குருவருளை தியானித்து மௌனமாக இருந்து கேசரியில் மனதை நிறுத்தி, “றீங்”என்று அணுவாசல் தன்னில் மூச்சை ஒன்று சேர்த்து மேல் நோக்கி செலுத்தி இறங்குதுறை அறிந்து பார்த்தால் பூரண சந்திரன் தென் படுமாம். இந்த பூரண சந்திரக் காட்சியைக் கண்டால் சிருஷ்டி, திதி, சங்காரம் என்னும் மூன்றும் சித்திக்குமாம் இதுவே விந்து தெரிசனம் என்கிறார் அகத்தியர்.
நாளைய பதிவில் நாத தரிசனம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



3 comments:
இதை படிக்கும் போது ஒரு வித பயத்துடன் கூடிய பக்தி பெருகுவதால்... மீண்டும் முறையாக விடிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு விட்டு படிக்க முயல்கிறேன்....
Dear Thozi,
This marvellous presentation induced me to get
darshanam of siddhars.Where Will I meet them?
Destiny plays a pivotal role not to get this darshanam.Thanks a lot.
மிக அருமையான தகவல்களை நுணுக்கமாக எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்
Post a Comment