ஆத்ம தரிசனம்!, அறிவு தரிசனம்!.

Author: தோழி / Labels: ,

கடந்த வாரத்தில் சித்தர் பெருமக்கள் அருளிய பதினாறு வகையான தரிசனங்களைப் பற்றியும், அதில் முதலாவது தரிசனமான ஆதார தரிசனம் பற்றியும் பார்த்தோம். அந்த வகையில் அடுத்த இரண்டு தரிசனங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

இந்த தரிசனங்களை வரிசைக் கிரமமாக முயற்சித்து சித்தியடைய வேண்டுமென்கிறார் அகத்தியர். அதாவது ஒரு தரிசனத்தில் சித்தியடைந்த பின்னரே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். குருவின் வழி காட்டுதலோடு இந்த தரிசனங்களை முயற்சிக்க வேண்டும்.

வாருங்கள் இரண்டாவது தரிசனமான ஆத்மாவின் தரிசனம் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

ஆத்மாவின் தெரிசனம்.

சித்தியுள்ள ஆதாரதெரிசனமுங் சொன்னேன்
சிவசிவா ஆத்துமாவின் தெரிசனத்தைக்கேளு
பக்தியுடன் கண்டமதில் அங்கெண்றூணி
பூரணமாய்வாசி தனைநிறுத்திக் கொண்டு
பக்தியுடன் சுழிமுனையில் வாசியேற
பாலகனே உங்கென்று மவுனம்பூட்டி
சுத்தமுடன் உங்கிலிநம் சிங்கென்று
சுருதிபெற தினம்னூறு உருவேசெய்யே.

செய்யப்பா உறுதிகொண்டு உருவேசெய்ய
செயமான திருவுருவாம் ஆதாரத்தில்
மெய்யப்பா சுழிமுனையின் பிரகாசத்தாலே
மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும்
மையப்பா மூலவன்னி பிரகாசத்தாலே
மந்திரகலை ஆத்துமா வென்றறிந்துகொண்டு
கையப்பா குவித்துனிதம் பணிந்துகொண்டால்
கருணைவளர் சீவாத்துமா கனியுந்தானே.


ஆதார தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் “அங்”என்று மூச்சை தொண்டையில் நிறுத்தி “உங்” என்று மௌனமாக இருந்து "உங் கிலி நம் சிங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு தடவை செபித்து வந்தால் சுழிமுனையில் மூலவன்னி பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் ஆத்மாவானது மந்திரக்கலையை உணர்ந்து அறிந்து கொள்ளும் என்கிறார்.

அப்போது கைகுவித்து வணங்கி பணிவுடன் மந்திரக்கலையை முழுவதுமாய் உணர்ந்து தெளிவு பெறவேண்டுமாம். அப்படி தெளிவடைந்ததும் சீவாத்துமா முழுமை அடைந்து தெளிவு பெறுமாம், இப்படியாக ஆத்துமாவின் தெரிசனம் சித்தியாகும் என்கிறார்.

ஆத்மாவின் தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் அடுத்த தரிசனமான “அறிவு தரிசனத்தை” பயிலலாம் என்கிறார் அகத்தியர். வாருங்கள் அதைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

அறிவு தெரிசனம்.

தானென்ற ஆத்துமாவின் தெரிசனத்தைச் சொன்னேன்
சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு
வானென்ற மூலமதில் உங்கென்றூணி
மவுனமென்ற பீடமதில் அங்கென்றிருத்தி
கோனென்ற விழியோகம் கொண்டுநல்ல
குறியறிய ஓம்நம சிவயவென்று
தேனென்ற ரசம்போலே உருவேசெய்தால்
தேவாதி தேவனென்ற பிர்மமாச்சே.

ஆச்சப்பா பிர்மமென்ற தார்தான் சொல்வார்
ஆதியென்ற சுழியினையிலே அக்கினியே தோன்றும்
பேச்சப்பா யிம்மூல வன்னிதன்னால்
பேரண்டம் சுத்திவர கெவுனமுண்டாம்
நீச்சப்பா வெகுநீச்சு மூந்நேயந்தம்
நிசமான அந்தமடா நெத்திக்கண்ணு
பாச்சப்பாக் கண்ணறிந்து வாசிகொண்டால்
பதிவான மவுனசித்து பலிக்குங்காணே.


முதல் இரண்டு தரிசனங்கள் சித்தியடைந்தவர்கள், “உங்” என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “அங்” என்று மௌனமாக இருந்து கொண்டு “விழி யோகத்தில்” இருக்க வேண்டுமாம்.

அது என்ன விழி யோகம்?

கண்கள் மூடிய நிலையில் விழிகள் இரண்டினாலும் புருவ மத்தியை பார்த்தபடி இருப்பதுதான் விழி யோகம் எனப்படும்.

இந்த விழி யோக நிலையிலிருந்து கொண்டு "ஓம் நம சிவய" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம். அப்படி தெரிந்தால் கெவுனம் உண்டாகுமாம், அப்போது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை உணரமுடியுமாம். இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங்கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!

நாளைய பதிவில் அடுத்தடுத்த தரிசனங்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Guruvadi Saranam said...

Very Nice.
Guruvarul thangalai Kaakkattum.

S.Rajendran
Bangalore.

jagadeesh said...

ஆஹா..இந்த இரண்டு தரிசனும், மனவளக்கலை மன்றத்தில் பயிற்றுவிக்கப் படுகிறது. அதுவே சாந்தி தவம்(ஆத்மா தரிசனம்), அறிவு தவம்(ஆக்கினை தரிசனம்) எனப்படுகிறது.நன்

Molagaa said...

super ra solli irukinga ...

RAVINDRAN said...

நன்றி

tamilvirumbi said...

Dear thozi,

You have rightly pointed out and also explained
in a simple way to proceed.Thanks a lot.

Post a Comment