பஞ்சபாஷாண லிங்கம்.

Author: தோழி / Labels: ,

பாஷாணங்களை சுத்தி செய்ததைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். மிகவும் சிரமமான இந்த கட்டத்தில் தேறிவிட்டால் பாஷாணம் கட்டுவது அத்தனை சிரமமான காரியமில்லை. சுத்தி செய்யும் போது பாஷாணங்களின் எடையில் பெருமளவில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பரிசோதனையின் ஆரம்பத்தில் தலா நூறு கிராம் வீதம் ஐந்து பாஷாணங்களின் நிகர எடை ஐநூறு கிராம் இருந்தது. பரிசோதனையின் இறுதியில் முன்னூறு கிராம் அளவிலான பாஷாண லிங்கத்தினையே கட்ட முடிந்தது.

பாஷாணங்களின் விஷம் நீக்கி சுத்தி செய்து சேகரித்தாயிற்று.இனி அடுத்த கட்டமாய் சுத்தி செய்த இந்த பாஷாணங்களை குழம்பாக்குவதுதான். நவீன வேதி இயல் திடப் பொருள் ஒன்றை திரவமாக்க இரண்டு வழிகளை கூறுகிறது. ஒன்று திடப் பொருளை உருக்குவதன் மூலம் குழம்பாக்குவது, மற்றது ஏதேனும் ஒரு நீர்மத்தில் கரைப்பதன் மூலம் குழம்பாக்குவது.

போகரோ பாஷாணங்களை குழம்பாக்க பின்வரும் வழியைச் சொல்கிறார்.

"கண்டுபார் பாடாணக் குழம்பதனை
கனமான சதுரக்கள் ளிப்பாலிற்போட்டு
விண்டுபார் சாமந்தான் மூடிவைக்க
விடுபட்ட சுத்தசலம் போலேயாகும்
கொண்டுபார் சிறப்பான பாடாணந்தான்
கொடிதான அயச்சட்டிக் குள்ளேவைத்து
மண்டுபார் நாற்சாமம் சுருக்குப்போட
மகத்தான பாடாணம் குழம்பாமே."


- போகர் -

சதுரக்கள்ளிப் பாலில் பாஷாணத்தை போட்டு ஒரு சாமம் மூடிவைக்க பாஷாணமானது தெளிந்த நீர்மமாகும். பின்னர் அதனை அயச் சட்டியில் வைத்து நான்கு சாமம் சுருக்கு போட பாஷாணம் குழம்பாகும் என்கிறார்.

நானும் இந்த முறையில்தான் ஐந்து பாஷாணங்களையும் தனித் தனியே குழம்பாக்கிக் கொண்டேன். ஒரு வழியாக ஐந்து பாஷாணங்களையும் குழம்பாக்கிக் கொண்ட பின்னர், இவை ஒவ்வொன்றின் எடையினை சரி பார்த்து அதற்கேற்ப ஒவ்வொன்றிலும் இருந்து சம அளவு எடுத்து அவற்றை கலந்து பஞ்ச பாஷாண குழம்பினை உருவாக்கிக் கொண்டேன்.

இனி இந்த குழம்பை மெழுகு அச்சில் வார்த்து இறுக்குவது இறுதிக் கட்டம். கொழும்பு - 11ல் இருக்கும் செட்டி தெருவில்தான் இந்த மெழுகு அச்சு வாங்கினேன். அங்கே நிறைய தெய்வ வடிவங்களின் மெழுகு அச்சுகள் கிடைக்கின்றன. எதை வாங்குவதென திகைத்து கடைசியில் சிவலிங்க அச்சினை வாங்கி வந்திருந்தேன். அத்தனை வடிவான அச்சுக்கள் அங்கே கிடைக்கிறது.

இந்த அச்சில் பஞ்சபாஷாண குழம்பை வார்த்து சூரிய புடம் போட குழம்பானது இறுகி பாறை போலாகிவிட்டது. இப்போது நமது பஞ்சபாஷாண கட்டு கொண்டு உருவாக்கிய லிங்கம் தயார். கீழே படத்தில் இருப்பதுதான் இரண்டு மாத முயற்சியில் நான் உருவாக்கிய பஞ்சபாஷாண லிங்கம். சிறிய அளவில் இருக்கும் இந்த லிங்கத்தின் மகத்துவம் பெரியது.


இதனை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம். பெரிய அளவில் தயாரித்தால் கோவில்களில் பிரதிஷ்டை செய்யலாம். நமது பல கோவில்களில் உள்ள மூலவர்கள் இம்மாதிரியான மூலிகை மற்றும் பாஷாண கட்டுகளால் உருவாக்கப் பட்டவையே. அவற்றின் தகவல்கள் காலப் போக்கில் மறைந்து போய் விட்டதால் அவற்றின் சிறப்புகள் நமக்கு தெரியாமல் போய்விட்டது.

குறிப்பிட்ட ஊரில் உள்ள குறிப்பிட்ட கோவிலில் போய் வணங்கினால் குறிப்பிட்ட நோய்கள் தீரும் என்று சொல்வதன் பின்னனியில் இருப்பது இத்தகைய மருத்துவ தகவல்தான். அந்த மூலவரை அபிஷேகம் செய்த நீரையோ, பாலையோ பருகினால் நோய் தீரும் என்கிற அறிவியல் தகவல்கள் காலப் போக்கில் சடங்குகளாய், சம்பிரதாயங்களாய் தேய்ந்து போய்விட்டது.

அந்த வகையில் நாம் உருவாக்கிய இந்த பஞ்சபாஷாண லிங்கத்தையும் தினம் தோறும் அபிஷேகம் செய்து வழிபடலாம். அந்த அபிஷேக நீர்தான் மருத்துவ குணங்களை கொண்டது.தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் நமது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலைப் பட்டு பிணிகள் அண்டாமல் வாழலாம் என்கிறார் உரோம ரிஷி.

இந்த லிங்கத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் வைத்து வழிபடலாமாம். தூய இடத்தில் வைத்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வந்தால் மன அமைதியும், கவனக் குவிப்பும் சித்திக்கும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாஷாண சுத்தி - பரிசோதனை முயற்சியின் தொடர்ச்சி..!

Author: தோழி / Labels: ,

கடுமையான விஷத் தன்மையுடைய பாஷாணங்களை சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்குதலே இந்த பரிசோதனையின் முதல் கட்டம். இதுதான் மிகவும் கடினமானதும், கூட நிறைய நேரம் பிடிக்கிற செயல், அவசரத்தில் எதையும் செய்ய முடியாது. அவசரம் காட்டினால் முதலுக்கே மோசம் வந்து விடும். எனக்கு இந்த ஐந்து பாஷாணங்களை சுத்தி செய்து முடிக்க இரண்டு மாதம் பிடித்தது.

இந்த பாஷாண சுத்தி பற்றி உரோம ரிஷி அருளிய "உரோம ரிஷி மருத்துவ வாகடம்" நூலில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள முறைகளின் படியே பாஷாணங்களை சுத்தி செய்தேன்.

"ஆமப்பா இன்னமொரு கருவைக் கேளு
ஆதியென்ற பாசாணஞ் சுத்தி சொல்வேன்
சாமப்பால் ஒருகலசந் தன்னில் வாங்கி
கருவான பூரணமும் பூரஞ் செர்த்து
தாமப்பா குருவதனைக் கரைத்து நல்ல
தருவான பாசாணந் தன்னை வாங்கி
போமப்பா தோலாந்திர மாகக் கட்டிப்
பூரணமாஞ் சலந்தனிலே தூக்கி டாயே
தூக்கிடுவாய் நீர்வற்ற எரித்து நல்ல
சுத்தமுள்ள பாசாணஞ் சுத்தியாமே"


- மருத்துவ வாகடம்.

இனி ஒவ்வொரு பாஷாணமாய் சுத்தி செய்த முறையைப் பார்ப்போம்.

எலுமிச்சம் பழத்தின் உள்ளே கொள்ளும் அளவுக்கு அபிரக பாஷாணத்தை அடைத்து ஒரு புடமிட்டு எடுக்க அது சுத்தியாகியது. இந்த முறையில் தேவைக்கு ஏற்ப நிறைய எலுமிச்சம்பழங்கள் தேவைப் படும்.

கற் பாஷாணத்தை வேப்பங்காய்ப் பால், எருக்கம் பால் ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து சுருக்கு கொடுக்க சுத்தியாகியது. இந்த முறையில் அளவுகள் சரியாக கவனிக்க வேண்டும்.

சூதப் பாஷாணத்தை வெள்ளெருக்கன் பாலில் ஒரு நாளும், அதன் பின் எலுமிச்சம் பழச்சாற்றில் ஒரு நாளும் ஊற வைத்து எடுத்து, காடி விட்டுக் கழுவி எடுத்து காய வைத்துக் கொண்டு, பின்னர் மெருக்கன் கிழங்கைத் துளைத்து அந்த துளையினுள் பாஷாணத்தை போட்டு அந்த கிழங்குத் துண்டாலேயே துவாரத்தை மூடி அதன் பின் பசுஞ் சாணத்தால் கவசம் போட்டு இலகு புடமிட்டு ஆறவைத்து எடுக்க சுத்தியாகியது. மிகப் பொறுமையும், நேரமும் எடுத்துக் கொள்ளும் செயல் இது.

சுண்ணாம்புக் கல்லின் நடுவில் குழியாக தோண்டி துத்தப் பாஷாணத்தை துணியில் முடிந்து குழியில் வைத்து மேலே சுண்ணாம்புக் கல்லால் மூடி, பனங்கள்ளு விட்டு ஒரு சாமம் இரு சாதி விறகால் எரித்து எடுக்க துத்தப் பாஷாணம் சுத்தியாகியது. இதில் நேரக் கணக்கும், மிதமான தீயில் விறகு எரிவதும் முக்கியம்.

ஒரு மண்சட்டியில் காடி, எலுமிச்சம் பழச்சாறு, புளிச்சக் கீரைச்சாறு இவை சமமாக கலந்து விட்டு, இதனுள் சீலைப் பாஷாணத்தை பட்டுதுணியால் சுற்றி முடிந்து போட்டு சிறுதீயில் எரித்து சுருக்கு கொடுக்க சீலை பாஷாணம் சுத்தியாகியது.

இப்படியாக ஐந்து பாஷாணங்களும் சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்கி சேகரித்து பத்திரப் படுத்துவதற்குள் இரண்டு மாத காலம் ஓடி விட்டிருந்தது. இனி இவற்றை குழம்பாக்கி, மெழுகு அச்சில் வார்த்து இறுகச் செய்தால் பாஷாண கட்டு தயாராகி விடும்.

இந்த பரிசோதனையை செய்யும் போது அதனை இணையத்தில் வலையேற்றும் எண்ணம் இல்லாததினால் புகைப் படங்கள் ஏதும் எடுக்கவில்லை. இருப்பினும் பஞ்சபாஷாண கலவையைக் கொண்டு நான் கட்டிய பஞ்சபாஷாண சிவலிங்கத்தின் படத்தினை நாளைய பதிவில் வலையேற்றுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாஷாணக் கட்டு, ஒரு பரிசோதனை அனுபவம்!

Author: தோழி / Labels:

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எழுதிய இந்த பதிவுதான் இந்த சோதனை முயற்சியின் ஆரம்பப் புள்ளி. எத்தனை நாளைக்குத்தான் வெறுமனே வாசிக்கவும் அவற்றை குறிப்பெடுத்து வலையில் பகிர்வதுமாய் இருப்பது, நாமும் நம்மாலான ஏதேனும் பரிசோதனைகளை செய்து பார்த்தாலென்ன என்று தோன்றியதன் விளைவே இந்த முயற்சி. நிச்சயமாக இது ஒரு தற்பெருமை பதிவல்ல... ஆர்வமிகுதி அல்லது ஆர்வக் கோளாறில் செய்து பார்த்த ஒரு பரிட்சார்த்த முயற்சி.

பாஷாணங்க்ள் என்பவை கடுமையான விஷத் தன்மை உடைய மூலகங்கள் என்றும் அவை இரண்டு வகைப் படும் எனவும் அந்த பதிவுகளில் பார்த்தோம். மேலும் விளக்கம் வேண்டுமெனில் அந்த பதிவுகளை வாசித்து விட்டு தொடரவும்.

சித்தர் பெருமக்கள் கடுமையான விஷத் தன்மையுடைய இந்த மூலகங்களை சுத்தி செய்து விஷம் நீக்கி அவற்றை மருந்தாக தயாரித்து பயன் படுத்தினர். தற்போதைய நவீன அறிவியலும் கூட இப்படி விஷத்தை மருந்தாக மாற்றி பயன்படுத்துகிறது. இந்த பாஷாணங்களை சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்கி அவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதையே பாஷாணம் கட்டுதல் என்கின்றனர். இப்படி செய்யும் போது உருவாகும் பாஷாண கட்டு மிகுந்த மருத்துவ குணமுடையதாகிறது.

பழனியில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் சிலை ஒன்பது வகையான பாஷாணங்களினால் கட்டப் பட்டது என்பது நாம் அறிந்ததே. அந்த சிலையின் அபிஷேக நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதன் பொருட்டே அந்த மூலவரின் பின் புறம் சுரண்டப் பட்டு விட்டதால் தற்போது அந்த மூலவருக்கு அபிஷேகம் எதுவும் செய்வதில்லை.

சரி நாமும் பாஷாணம் கட்டிப் பார்ப்போம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே குருநாதரிடம் கோரிக்கை வைத்தும் அவரின் ஒப்புதல் இந்த வருட மே மாத இறுதியில்தான் கிடைத்தது. இதற்கிடையில் எனது தேர்வுகள் வேறு முடிந்திருந்தன. இது ஒரு புறமிருந்தாலும் வீட்டில் அம்மாவிடம் அனுமதி வாங்குவதற்குள்தான் போதும் போதுமென்றாகி விட்டது. அம்மாவின் தயக்கத்திற்கு காரணங்கள் உண்டு. தன் சிறு வயதில், எனது பாட்டனார் மருத்துவ தேவைக்காக பாஷாணங்களை வீட்டில் புடமிடுவதை நேரில் பார்த்தவர் அவர். பாஷாணஙகளை புடமிடும் போது அவற்றில் இருந்து தீவிரமான நச்சு வாயுக்கள் வெளியேறும். அது புடமிடுபவரை கடுமையான மயக்கத்துக்கு ஆட்படுத்தி விடுமாம். இந்த எதிர்மறையான விளைவுகளை நினைத்தே அம்மா தயங்கினார்.

மருத்துவ கல்லூரியின் பரிசோதனைக் கூடங்களில் நாங்கள் பயன்படுத்தும் நச்சுவாயு தடுப்புக்கவசம் (Face Gas Mask) ஒன்றினை கொண்டு வந்து காட்டி அதன் அமைப்பு பயன்பாடு பற்றி எல்லாம் அம்மாவிற்க்கு விளக்கிய பின்னர் அரைகுறை மனதுடன் சம்மதித்தார். அதன் பிறகே மளமளவென தகவல் சேகரிப்பினை ஆரம்பித்தேன். இரண்டு வகையான பாஷாணங்கள் இருப்பதைப் பற்றி முனன்ரே கூறியிருக்கிறேன். ஒன்று இயற்கையாக கிடைக்கக் கூடியது “பிறவிப் பாஷாணம்” மற்றது செயற்கையாக உருவாக்குவது “வைப்புப் பாஷாணம்”. செயற்கையாக உருவாக்குவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இயற்கையான பாஷாணங்களை பயன் படுத்துவது என தீர்மானித்தேன். அதிலும் எந்த பாஷாணஙக்ளை தெரிவு செய்வது என்பதில் குழப்பம் வந்தது. ஏனெனில் 32 வகையான பிறவிப் பாஷாணங்கள் இருக்கின்றன.

இதற்கு “உரோமரிஷி மருத்துவ வாகடம்” என்ற நூல் துணைக்கு வந்தது. சிலை செய்வதற்கு பயன் படும் சிறப்பான ஐந்து பாஷாணங்களின் தகவலை இங்கிருந்தே பெற்றேன். ஆக நாம் இப்போது ஐந்து பாஷாணஙக்ளை கட்டுவது என தீர்மானத்திற்கு வந்தாயிற்று. அந்த ஐந்து பாஷாணஙக்ள் இவைதான்...

அபிரகப் பாஷாணம்.
கற் பாஷாணம்.
சூதப் பாஷாணம்.
துத்தப் பாஷாணம்.
சீலைப் பாஷாணம்.

இவற்றில் சூதப் பாஷாணமும், துத்த பாஷாணமும் எங்கள் கல்லூரி மருத்துவ கூடத்திலேயே இருக்கிறதால், அதன் பொறுப்பாளரை கேட்டு என் தேவைக்கு கொஞ்சம் வாங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. மற்ற மூன்று பாஷாணங்களை திரட்டுவதற்குள் தலைசுற்றி கிறுகிறுத்தே போயிற்று. குருவருளின் துணையினால் கற்பாஷாணத்தை மட்டக்களப்பில் இருக்கும் என் தோழி ஒருத்தியின் மூலம் பெற்றுக்கொண்டேன்.

அபிரகப் பாஷாணம் மற்றும் சீலைப் பாஷாணம் கடையில் வாங்க வேண்டியிருந்தது. இதில் அபிரகப் பாஷாணம் ஒரு கிராம் 60/= ரூபாய்க்கும், சீலைப் பாஷாணம் ஒரு கிராம் 54/= க்கும் என தலா 100 கிராம்கள் வாங்கி கொண்டேன். இதற்கே மொத்தமாக 11400/= ரூபாய் ஆயிற்று. தலை சுற்றலுக்கான காரணம் இதுதான்.

ஒரு வழியாக ஐந்து பிறவிப் பாஷாணங்களை சேகரித்தாயிற்று. இனி இவற்றை ஒவ்வொன்றாக சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்க வேண்டும். அதன் பின்னர் இந்த பாஷாணஙக்ளை தனித் தனியே குழம்பாக்கி சம அளவில் கலந்து மெழுகு அச்சில் வார்த்து இறுகச் செய்தால் பஞ்சபாஷாண கட்டு தயார்.

இத்தனை எளிதாய் சொல்லிவிட்ட இந்த செயல்முறைகளை எப்படி செய்தேன் என்பதை நாளைய பதிவில் பார்ப்போம்..


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நன்றி நண்பர்களே!

Author: தோழி / Labels:

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவின் ஐநூறாவது பதிவு இது. பதினெட்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை நமக்கு வாய்த்திருக்கிறது. ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உடன் வர,ஆயிரம் பேருக்கு மேல் தினமும் வாசிக்கிற ஒரு தளமாக நமது வலைப்பதிவு வளர்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக நீங்கள் அளித்து வரும் அக்கறையினாலும், ஆதரவினாலும், ஆர்வத்தினாலுமே இத்தனையும் சாத்தியமாற்று.

அத்தனைக்கும் நன்றி நண்பர்களே!

இந்த பதிவின் மூலமாய் என்னுடைய தனிப்பட்ட சில எண்ணங்களை, விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில், பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உங்களில் பலரும் குறிப்பிடுகிற மாதிரி, நான் சித்தரியலில் ஊறித் திளைத்த பண்டிதை எல்லாம் இல்லை. இன்னமும் நேராய்ச் சொல்வதானால் கடந்த மாதம் மருத்துவ கல்லூரி படிப்பை முடித்து, இப்போது பயிற்சி மருத்துவராய் பணியாற்றத் துவங்கி இருக்கும் சிறு பெண். நீங்கள் எனக்கு அளிக்கும் அத்தனை பாராட்டுதலுக்கும் சொந்தமானவர் எனது மேலான குரு அகத்தியர் மட்டுமே.

இங்கே பகிரப்படும் தகவல்கள் தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பயனளித்திருப்பதாக பலரும் மின்னஞ்சல் மூலமாய் நன்றி தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக இரண்டு சகோதரிகள் சித்தர் பெருமக்களின் வழிமுறைகளை கடை பிடித்ததன் மூலமாய் தாய்மைப் பேறு அடைந்ததாய் குறிப்பிட்டிருந்தனர். மிகவும் பெருமிதமாய் உணர்ந்த தருணங்கள் அவை. நம் முன்னோரின் தகவல்களை தேடித் திரட்டி பகிர்வது மட்டுமே எனது செயல், அதன் உள்ளார்ந்த பெருமையும் புகழும் அவர்களுக்கேயானது. நேரமின்மையினால் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவில்லையே தவிர வேறொன்றும் காரணமில்லை.

ஒரு சிலர் இங்கு பகிரப்படும் தொடர்களில் தகவல்கள் முழுமையாக இல்லாததைப் போல தோற்றம் தருவதாக கூறியிருந்தனர். அவற்றை நான் மறுக்கப் போவதில்லை. ஏனெனில் நான் சேகரித்த தகவல் குறிப்புககளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக மட்டுமே இந்த வலைப் பதிவினை துவங்கினேன். இந்த தகவல்களின் மீது தீர்க்கமாய் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிட நிறைய உழைப்பும், நேரமும் தேவைப்படும். தற்போதைய எனது படிப்புச் சூழலில் அது சாத்தியமே இல்லை. இருந்த போதிலும் படிப்பின் ஊடாக எஞ்சுகிற மேலதிக நேரத்தில் தொடர்களை முடிந்தவரையில் முழுமையாகவும் சிறப்பாகவும் தர முயற்சித்திருக்கிறேன். குருவருளின் துணையோடு தொடர்ந்தும் முயற்சிப்பேன்.

மேலும் இதுவரை எழுதிய எல்லா தொடர்களிலும் உள்ள தகவல்கள் எந்த நூலில், எந்த பாடலில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன் என்ற தகவலை விரிவாகவே தந்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட அந்த நூலினை வாங்கி வாசித்தோ அல்லது தொடர்புடைய தகவல்களை தேடிப் பெற்றோ தெளிய வாய்ப்பிருக்கிறது. சித்தர் பெருமக்களின் பல ஆயிரம் பாடல்களின் ஊடே பயணித்து தகவல்களைத் திரட்டுவது என்பது தன்முனைப்பும், கவனக் குவிப்பும், மிகுதியான நேரமும் எடுத்துக் கொள்கிற கடினமான வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

என்னை விட பெரியவர்கள் எல்லாம் இங்கே இனையத்தில் சித்தர்களின் அருமை பெருமைகளை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ஐயா திரு.ஞானவெட்டியான், திருமிகு.சாமி அழகப்பன் போன்றவர்களின் அறிவு, திறமை மற்றும் அனுபவத்தை ஒப்பிடுகையில் நான் அவர்களின் பேத்தி/மகளுக்கு இணையானவள்தான். தொடர்களில் உள்ள தகவல்களின் மீது மேலதிக விளக்கங்கள் தேவைப் பட்டால் இம்மாதிரியான பெரியவர்களை அணுகிப் பணிந்து விளக்கமும், தெளிவும் கேட்டுப் பெறலாம். சித்த நெறியில் தம்மை அர்ப்பணித்து வாழும் இந்த பெரியவர்கள், தங்களுக்கு நேரமிருந்தால் நிச்சயமாய் தேவையானவர்களுக்கு உதவிடுவார்கள்.

முழுமையான தகவல்கள் இல்லை எனச் சிலர் குறைபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம் இந்த தகவல்களை எல்லாம் இப்படி பொதுவில் வெளியிடக் கூடாது. ஏன் வெளியிட்டாய்?, யாரைக் கேட்டு வெளியிட்டாய்?, இவை எல்லாம் பரம ரகசியம் உனக்கு சாபம்தான் கிடைக்கும் என கண்டிப்பும், மிரட்டலும் காட்டுகிற பலரை எதிர் கொள்ள வேண்டியிருப்பதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

அதிலும் இவர்களில் சிலர் தங்களைத் தாங்களே சித்தராக பிரகடனப் படுத்திக் கொண்டு மிரட்டலும், உருட்டலும் செய்வதுதான் வேடிக்கை. முப்பத்தி ஆறு வகையான தத்துவங்களை உணர்ந்து தெளிவதே சித்த நிலை. இத்தகைய மேலான சித்த நிலையை அடைந்தவர் எவரும் தங்களை சித்தனென சொல்லிக் கொள்வதுமில்லை. அடுத்தவர்கள் தம்மை அப்படி அழைக்க வேண்டுமென விலாச அட்டை வைத்துக் கொண்டு திரிவதுமில்லை. இந்த அடிப்படையைக் கூடத் தெரியாத பல அருட் சித்தர்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கொடுமையிலும் கொடுமை.

காவியும், கமண்டலமும் தரித்து மொட்டைத் தலையோடு தன்னை சுவாமி என்று கூறிக் கொள்கிறவர்களுக்கே இன்று மரியாதையும், மாலையும் கிடைக்கிறது. அத்தகையவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர் பின்னால் நின்று தங்களை தூய்மையானவர்களாய் காட்டிக் கொள்ள பிரியப் படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்களைப் பற்றியும், இவர்கள் என்ன ஆவார்கள் என்பதைப் பற்றியும் சிவவாக்கியர் இப்படிச் சொல்கிறார்.

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.


இத்தனை கடுமையான வார்த்தை பிரயோகத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. எனினும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் நமது ஆதங்கங்களை இறக்கி வைத்திடமுடியும் என்பதால் மற்றவர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

மீண்டும் ஒரு தடவை அந்த நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்... நான் எதை எழுதுவது, எதை விலக்குவது என்பதை எனது மேலான குருநாதர் மட்டுமே தீர்மானிக்கிறார். எனது ஒவ்வொரு இடுகையும் குருநாதரின் மேலான கவனத்தில் வைக்கப் பட்ட பின்னரே வலையேறுகிறது. சமயங்களில் ஆர்வ மிகுதியினால் சிலவற்றை வலையேற்ற நான் முனைந்தும் அவை முடியாமல் போயிருக்கிறது. இதற்கு சமீபத்தைய உதாரணம் காந்தங்களைப் பற்றிய தொடர். மிகுந்த சிரமங்களின் ஊடே திரட்டிய தகவல்களை என்னால் பகிர முடியாமல் போனது. இது மாதிரி பல அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

காலத்தே மறைந்து போன பல அரிய நூல்களை இனி நாம் திரும்ப பெற முடியாதுதான். ஆனால் நம் கையில் எஞ்சியிருக்கும் நூல்களையாவது இம் மாதிரியான ஊடகத்தில் பகிர்வதன் மூலம் சித்தரியல் மீதான விழிப்புணர்வினை உண்டாக்க முடியும். இதை அரசும், நிறுவனங்களும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. நம்மைப் போல சாமான்யரும் கூட செய்திட முடியும்.அந்த பயணத்தில் ஒரு சிறு முயற்சிதான் இந்த சித்தர்கள் இராச்சியம். இதன் வளர்ச்சி அல்லது பரவல் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம்தான் இருக்கிறது. ஆர்வமுள்ள மற்றவர்களோடு இந்த தகவல்களை பகிர்வதன் மூலம் நம் முன்னோர்களின் அறிவையும், தெளிவையும் சக மனிதரின் வாழ்க்கைக்கு பயனாக்கக் கூடிய வாய்ப்பினை உருவாக்கிடலாம்.

எனது மொழியில், கருத்தில், புரிதலில் பிழையேதும் இருந்தால் அவற்றைத் திருத்தி என்னை நல்வழி நடத்திடுமாறு வேண்டுகிறேன். தொடரும் ஆதரவிற்கும், அக்கறைக்கும் மிகுந்த நன்றிகளை மீண்டும் ஒரு தடவை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளைய பதிவில் என்னுடைய சோதனை முயற்சி ஒன்றினை பகிர்ந்து கொள்ள் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாய் செய்த பரிசோதனை அது, விஷத்தோடு விளையாடிய விளையாட்டு என்று கூடச் சொல்லலாம்.

விவரங்கள் நாளைய பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாயுச்சிய தரிசனம்..

Author: தோழி / Labels: ,

அகத்தியர் அருளிய பதினாறு வகையான தரிசனங்களில் இதுநாள் வரையில் பதினைந்து தரிசனங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வரிசையில் இன்று நிறைவு தரிசனமான “சாயுச்சிய தரிசனம்” பற்றி பார்ப்போம். முதல் பதினைந்து தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையை பயிலவோ முயற்சிக்கவோ வேண்டும்.

சாயுச்சிய தரிசனம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அரூபமென்ற தெரிசனங்கள் பதினைந்திற்க்கும்
இறுதிநிலை தெரிசனந் தான்மவுனபீடம்
சுரூபமென்ற சோதியிலே மனக்கண்சாத்தி
சுத்தமுடன் அந்தரத்தில் மணிநாவுன்னி
அரூபமென்ற தெரிசனங்கள் யீரட்டுந்தான்
அங்கசனையே தோணுமடா அமர்ந்துபாரு
ரூபமென்ற சோதியிலே அமர்ந்துபாரு
துலங்குமடா நினைத்தவண்ணஞ் சோதிதானே.

தானான சோதியடா உச்சிமூலம்
தனையறிந்து வாசியடா மவுனபீடம்
கோனான சுழினையடா நந்நதிக்கம்பம்
குருவான மூலமடா ஓங்காரந்தான்
வானான வட்டமடா கபாடவாசல்
வரையறிந்து திரையகத்தி மவுனங்கொண்டால்
தேனான அமுர்தரசந் தெளிவுகாணும்
தெளிவான ஒளிவரிந்து வெளியைக்காணே.


மௌனமாக அமர்ந்திருந்து சுரூபம் என்ற சோதியை மனக்கண்ணில் பார்க்க, இதற்க்கு முன் தரிசித்த பதினைந்து தரிசனங்கள் அனைத்தையும் ஒன்றாக அங்கு தரிசிக்கலாமாம். அப்படியே அமர்ந்து அதைத் தரிசித்தால் அனைத்தும் ஒன்றாகி ஒரே சோதியாக தெரியுமாம். அப்படி அந்த சோதியை தரிசித்து கொண்டே ஓங்கார மந்ந்திரமான “ஓம்” என்று மனதால் உச்சரிக்க வட்டமான கபால வாசல் திறக்குமாம். அப்போது இந்த சோதி தரிசன நிலையைக் கடந்து அண்ட வெளி ரகசியத்தை முற்றாக உணரலாமாம். இதுவே இறுதி நிலையாகும் என்கிறார் அகத்தியர்.

இத்துடன் இந்த தரிசனம் தொடர் நிறைவுக்கு வந்தது. முறையாக குருவின் வழிகாட்டுதலோடு இவற்றை மேற்கொண்டால் எல்லா தரிசனங்களும் சித்திக்கும். இந்த சாயுச்சிய தரிசனம் வரை பெற்றவர்களுக்கு மிக உயரிய நிலையான சமாதி நிலை சித்திக்குமாம். ஆர்வமுள்ளவர்கள் குருவருளை வேண்டி வணங்கி அவரின் அனுமதியோடு முயற்சிக்கலாம்.

நண்பர்களே, நாளைய பதிவு இந்த வலைப்பதிவின் முக்கியமான பதிவுகளில் ஒன்று. புதிய விவரங்களுடன் நாளை சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருவ தரிசனம், அரூப தரிசனம்.

Author: தோழி / Labels: ,

அகத்தியர் அருளிய பதிறாறு தரிசனங்களில் இன்று பதினான்கு மற்றும் பதினைந்தாவது தரிசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இவை முறையே “உருவ தரிசனம்”, “அரூப தரிசனம்” என்றழைக்கப் படுகிறது.

உருவ தரிசனம்..

சோதியென்ற னாதாந்த தெரிசனமுஞ்சொன்னேன்
சுரூபமென்ற உருவமதின் தெரிசனத்தைக்கேளு
ஆதியென்ற கோமுகஆசான மேல்க்கொண்டு
அப்பனே விபூதி தூளிதமேசெய்து
நீதியென்ற வாமமதால் மவுனம்பூட்டி
நின்றிநிலை தமர்வால் திரையை நீக்கி
ஓதியதோர் பிரணவத்தால் உள்ளேசென்றால்
உள்ளொளியும் வெளியொளியும் மொன்றாய்ப்போமே.

ஒன்றாகி நின்றபொருள் தானேதானாய்
உத்தமனே அட்டசித்துந் தானேயாகும்
நன்றான ரவிமதியுஞ் சொன்னபடிகேக்கும்
நாட்டமுடன் யிகபரமும் நன்மையாகும்
நின்றாடும் வாசியினால் மவுனங்கொண்டு
நெறியான தமரதிலே வாமாகி
நேராத மவுனரசங் கொண்டாயானால்
குருவான தேசியடா வாசியாமே.


முந்தைய பதின்மூன்று தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த தரிசன முறையினை பின் பற்றி பயில வேண்டும். கோமுக ஆசனத்தில்* அமர்ந்து இருந்து கொண்டு வீபூதி துளிதமிட்டு கவனக் குவிப்புடன் ஆழ்ந்த மௌனமாக இருந்து பிரணவ மந்திரமான “ஓம்” என்ற மந்திரத்தை செபித்து வர உள் ஒளியும், வெளி ஒளியும் ஒன்றாக இணைவதை தரிசிக்கலாமாம். இதுவே உருவ தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

இத்தகைய உருவ தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு அட்டமா சித்துக்களும் சித்திப்பதுடன், இக பரமும் தெளிவாக விளங்கும் என்கிறார் அகத்தியர்.

*ஆசனங்கள் பற்றி சித்தர்கள் அருளிய தகவல்களை கூடிய விரைவில் விளக்கப்படங்களுடன் எழுதுகிறேன்.

அரூப தெரிசனம்..

உருவ தரிசனம் வரையிலான அத்தனை தரிசனங்களை பெற்றவர்கள் இந்த அரூப தரிசனத்தை பயிலலாம். இது பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

வாசியென்ற உருவதுவே பொருளென்றெண்ணி
மனதுபரி பூரணமாய் பூசைசெய்து
தேசியென்ற அருவமதின் தெரிசனத்தைக்கேளு
திருகுமணி வாசிலிலே மவுனம்பூட்டி
நாசினுனி சுழினை வழிதமருக்குள்ளே
வாசி ஊடுருவ நாட்டங்கொண்டு
ரேசிவாசிம் மெனவே வாசியாதி
நின்னகமும் விண்ணகமும் ஒன்றாங்காணே.

ஒன்றான காட்சியடா அரூபமாச்சு
உத்தமனே அரூபமென்ற காட்சிதன்னை
அண்டகேசரி யெனவே அமர்ந்துகொண்டு
அனுதினமும் பிராணதாரகமாய் நின்றால்
குன்றாத சமாதியடா சோதியாச்சு
குருவான சோதியிலே கூர்ந்துகொண்டால்
நன்நான பதவியடா சாயுச்சியபதவி
நாதாந்த பதவியென்ற அரூபமாச்சே.


கேசரி யோகத்தில் அமர்ந்திருந்து கொண்டு திருகுமணி வாசலிலே மௌனமாக உற்று நோக்கி. நாசிநுனி சுழினை வழியாக மூச்சு செல்லும் போது மனதும் விண்ணும் ஒன்றாய் இருப்பதை ஊணர முடியுமாம். அந்த ஒன்றாக இருப்பது அரூப காட்சியாக தென்படுமாம். இந்த காட்சியை தரிசித்த படி பிரணாயாமம் செய்துவந்தால் சாயுச்சிய பதவி கிடைப்பதுடன் சமாதி நிலையும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!, அடுத்த பதிவில் பதினாறாவதும் மிக முக்கியமானதும் கடைசி தரிசனமுமான சாயுச்சிய தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நாத தரிசனம்.

Author: தோழி / Labels: ,

அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங்களில் இனி வர இருக்கும் தரிசனங்கள் கொஞ்சம் சிக்கலானவை. அவற்றை வார்த்தைகளினால் எந்த அளவுக்கு விவரிக்க முடியுமென தெரியவில்லை. இவை பெரும்பாலும் குருவினால் சீடருக்கு உணர்த்தப் பட வேண்டியவை என்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த தரிசன விவரங்களை இங்கே பகிர முயற்சிக்கிறேன்.

வாருங்கள், விந்து தரிசனம் பற்றி அகத்தியர் அருளியிருப்பதை பார்ப்போம்.

ஆமப்பா விந்தினிட தெரிசனமுஞ்சொன்னேன்
அருள்பெரு நாதமதின் தெரிசனத்தைக்கேளு
தாமப்பா தன்னிலையை தானேகண்டு
சங்கையுடன் விபூதி தூளிதமேசெய்து
சோமப்பால் கொண்டுபரி பூரணமாய் நின்றால்
சொல்நிறைந்த சுவாசமது பாழ்போகாமல்
நாமப்பா சொல்லுகிறோம் மவுனம்பூட்டி
நாதாந்தத் தமர்வாசல் திரையைநீக்கே.

நீக்கியந்த கேசரியில் மனத்தைநாட்டி
நிலையறிந்து ஓம்வசியென்று மைந்தா
தாக்கிநின்றாய் ரேசகபூரண மாய்நிற்க
தன்மையுடன் வாசியது உண்மையாகும்
போக்குவரத் தாகிநின்ற வாசிமைந்தா
பொருந்தி நின்றதமரதிலே யடங்கினாக்கால்
வாக்குமன தொன்றாகி மனதுகூர்ந்து
மகத்தான கேசரியில் சோதியாமே.


தன் நிலையை தானே கண்டுணர்ந்து தெளிவாக வீபூதி துளிதம் செய்து பின்னர் மனதை பூரணமாக நிலை நிறுத்தினால் சுவாசம் வீணாக போகாது. அப்போது மௌனமாக “ஓம்வசி”என கேசரியில் மனதை நிலை நிறுத்த நாதாந்த தர்ம வாசலின் திரை நீங்கி தரிசனம் காண கிடைக்குமாம்.

அப்படி தரிசனத்தை காணும் போது கேசரியில் சோதி தோன்றுமாம். மேலும் இந்த தரிசனங்கள் படிக்கும் போது புரியாமல் இருந்தாலும் வரிசை முறைப்படி செய்து வரும் போது சிறப்பாக உணரமுடியும் என்றும் சொல்கிறார்.

நாளைய பதிவில் உருவ தரிசனம் மற்றும் அரூப தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஒளி தரிசனம், விந்து தரிசனம்.

Author: தோழி / Labels: ,

அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங்களில் இன்று ஒளி தரிசனம் மற்றும் விந்து தரிசனம் பற்றி பார்ப்போம்.

தரிசனங்கள் என்பது ஒரு வகையான அனுபவ நிலை. அவற்றை வார்த்தைகளினால் விவரிப்பதை விட அனுபவித்து அறிவதே சிறப்பு. அனுபவம் என்பது முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். ஆகக் கூடிய பொறுமை மற்றும் நிதானத்தோடு இவற்றை பயிலும் எவருக்கும் தரிசனம் சாத்தியம். இத்தகைய தரிசனங்களை பெற்றவர்களை நான் அறிவேன் என்பதால் இந்த கருத்தினை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

வாருங்கள் ஒளி தரிசனம் பற்றிய அகத்தியரின் பாடலைப் பார்ப்போம்.

ஒளி தரிசனம்..

ஆச்சப்பா பரமவெளி தெரினமுஞ்சொன்னேன்
அருள்நிறைந்த ஒளியினுட தெரிசனத்தைக்கேளு
காச்சப்பா அங்கென்று கண்டமதில்யிருத்தி
கருணைவளர் உச்சியிலே சிம்பென்றுரேசி
பாச்சப்பா யிப்படியே பிராணாயஞ்செய்தால்
பரமவெளி தன்னிலொளி பளீரெனவேதோணும்
மூச்சப்பா நின்றநிலை ஆரறியப்போறார்
முத்திகொண்ட சுழினையடா சந்தியந்தான்பாரே.


ஆதி தரிசனமான ஆத்மாவின் தரிசனம் துவங்கி பிரம தரிசனம் வரை வாய்க்கப் பெற்றவர்களே இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமாம். கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து “அங்” என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம்” என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டுமாம். அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும் என்கிறார் அகத்தியர். இதுவே ஒளி தரிசனம் ஆகும்.

இந்த ஒளி தரிசனத்தை தரிசிக்கப் பெற்றவர்கள் அடுத்த தரிசனமான விந்து தரிசனத்தை பயில வேண்டும். இதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

விந்து தரிசனம்..

பாரப்பா ஒளியினிட தெரிசனமும் சொன்னேன்
பதவின விந்தினிட தெரிசனத்தைக்கேளு
சாரப்பா கேசரியில் மனதைனாட்டி
தமரான அணுவாசல் தன்னில்நின்று
நேரப்பா கண்ணடங்க மவுனம்பூட்டி
நேர்மையுடன் தானிருந்து றீங்கென்று
காரப்பா வாசியை நீமேலேனாக்கி
கருணையடன் சுழினையிலே நிசமென்றுநில்லே.

நில்லடா சிம்மெனவே வாசிகொண்டு
நிலையான தமரதிலே வாசியேத்து
வில்லடா விசைபோலே வாசியேத்து
விபரமுடன் யிறங்குதுறை அறிந்துகொண்டு
செல்லடா தமரதிலே நின்றுபார்த்தால்
சிவசிவா பூரணசந் திரனேகாணும்
உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால்
உறுதியுடன் சிருஷ்டிதிதி சங்காரமாமே.


குருவருளை தியானித்து மௌனமாக இருந்து கேசரியில் மனதை நிறுத்தி, “றீங்”என்று அணுவாசல் தன்னில் மூச்சை ஒன்று சேர்த்து மேல் நோக்கி செலுத்தி இறங்குதுறை அறிந்து பார்த்தால் பூரண சந்திரன் தென் படுமாம். இந்த பூரண சந்திரக் காட்சியைக் கண்டால் சிருஷ்டி, திதி, சங்காரம் என்னும் மூன்றும் சித்திக்குமாம் இதுவே விந்து தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் நாத தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிரமவெளி தரிசனம்.

Author: தோழி / Labels: ,

குருவின் வழி காட்டுதலோடு புருவ மைய தரிசனம் வரை சித்தியடைந்தவர்கள் இந்த பிரம வெளி தரிசனத்தை பயிலலாம். இந்த முறை பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஆச்சப்பா புருவநடு தெரிசனமும் சொன்னேன்
அரகரா பிர்மவெளி தெரிசனத்தைக்கேளு
பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில்
பிரணவத்தால் வாசிதனை மேலேனோக்கி
பாச்சப்பா மவுனமதில் ரீங்கென்றிருத்தி
பதிவான சுழிமுனையை பத்திப்பார்க்கில்
மூச்சப்பா நிறைந்ததிரு ஆறாதாரம்
முடிவில்லா பரமவெளி காந்தியாச்சே.

காந்தியென்ற பரமவெளி காந்திதன்னை
கனிவான கண்ணறிந்து ஆர்தான்காண்பார்
பாந்தியமாய் பரமவெளியை பதிவாயப்பார்த்தால்
பஞ்சவர்ண அஞ்சுநிலை தானேதோணும்
சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால்
தன்மயமும் விண்மயமும் அதுவாய்ப்போச்சு
நேர்ந்துமிக பூரணமாய் மவுனங்கொண்டால்
நிசமான மவுனகுரு னாதனாச்சே.

ஓம் என்ற பிரணவத்தின் உதவியுடன் மூச்சை மேல் நோக்கி செலுத்தி பின் மௌனமாக “ரீங்” என்று சுழுமுனையில் ஊன்றி மனக்கண்ணால் பார்த்தால் இந்த தரிசனம் சித்தியாகுமாம்.

அப்படி இந்த தெரிசனம் சித்தியானால் அப்ஞ்சவர்ணம் தெரிவதுடன், ஐந்து நிலைகளும் தெரியுமாம். அப்போது தன்மயமும் விண் மயமும் தானே என்று உணரும் மௌன நிலை சித்திக்கும் என்கிறார்.

இந்த மௌன நிலை சித்தித்தவர்களே மௌன குருவாக விளங்க முடியும் என்கிறார் அகத்தியர். ஆக, இதன் மூலம் மௌன குரு என்பவர் யார் அவரின் சிறப்பு எத்தகையது என்பதை இந்த தரிசன முறை நமக்கு உணர்த்துகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புருவ மைய்ய தரிசனம்.

Author: தோழி / Labels: ,

இது வரை நாம் பார்த்த தரிசனங்களில் இருந்து கொஞ்சம் மாறுதலான தரிசனம் ஒன்றை இன்று பார்ப்போம். முந்தைய தரிசனங்களை நமக்கு வசதியான எந்த இடத்திலும் செய்யலாம். ஆனால் இந்த புருவ மைய்ய தரினத்தை சதுரகிரி மலையில்தான் செய்திட வேண்டுமென்கிறார் அகத்தியர். இதற்கான பிண்ணனி குறித்த தகவல்கள் ஏதும் குறிப்பாக இல்லை.

வாருங்கள் இந்த தரிசனம் பற்றி அகத்தியர் சொல்வதை பார்ப்போம்.

பாரப்பா நானினுனி தெரிசனமுஞ்சொன்னேன்
பரிவான புருவமய்யத் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா மனம்நிறுத்தி மவுனம்பூட்டி
நேர்மையடன் சுழினையிலே மனக்கண்சாற்றி
காரப்பா கனிந்தமனங் கொண்டு மைந்தா
கருணையுடன் நின்றுதவம் செய்தாயாகில்
மேரப்பா வளமானசதுரகிரி சென்றுதானே
மெஞ்ஞான சோதிசிவ சோதியாமே.

சோதியென்ற ஆதியடா சுழினைக்கம்பம்
சுயஞ்சோதி யானசிவ ஞானதீபம்
ஆதியென்ற தீபமடா ஆத்துமாவாகும்
நிலையான தீபமடா பரமாய்நிற்கும்
சாதியென்ற வன்னியடா ஆவிதன்னை
தனையறிந்து சோதியாம் தன்னில்சேரே
ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம்
அடங்கிநின்ற பரசுரூபம் வெளிதானாச்சே.

சதுரகிரி சென்று மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்திட வேண்டுமாம். அப்போது சிவ சோதி தரிசனம் காணலாமாம். இந்த சோதியுடன் தன்னை அறிந்து ஒரு நிலைப்பட்ட மனதையும் இணைக்க ஆதி அந்தம் தெரிய வருவதுடன், பரசு ரூபமும் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.

இந்த முறைக்கென மந்திரங்கள் ஏதும் குறிப்பிடப் படவில்லை, மாறாக முந்தைய தரிசனங்களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்.

நாளைய பதிவில் பிரமவெளி தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பூரண தரிசனம், நாசி நுனி தரிசனம்!

Author: தோழி / Labels: ,

பூரண தரிசனம்..

இது வரை பகிர்ந்து கொண்ட முதல் ஆறு தரிசனங்களை பெற்று சித்தியடைந்தவர்கள் இந்த ஏழாவது தரிசனமான பூரண தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

பாரப்பா உள்ளமென்ற தெரிசனந்தான்சொன்னேன்
பதிவான பூரணமாந் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா வங்கென்று வாசிதனையெழுப்பி
நிலையான சுழினையிலே அங்கென்றிருத்தி
காரப்பா ஓம்றீங் கிலிமங்கென்று
கருத்துறவே னூற்றெட்டு உருவே செய்தால்
தேரப்பா அண்டமெனும் சுழினைக்குள்ளே
தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனையாங்காணே.

காணவே அரிதாகும் தெரிசனந்தான் மைந்தா
கற்பூர தீபமதின் காந்திதன்னை
பேணவே மனம்பூண்டு காந்திதன்னால்
பேசாத மவுனரச பானமுண்டால்
தோணவே மவுனரச பானங்கொண்டால்
துலங்குமடா சிவயோகம் சுத்தமாக
ஊணவே தானிருந்து மவுனம்பூட்டி
ஓடிநின்று வாசியது ஒடுக்கமாச்சே.


“வங்” என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “அங்” என்று நிறுத்தி, மௌனமாக இருந்து "ஓம் றீங் கிலி மங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு முறை செபித்து வந்தால் சுழிமுனையில் சதாசிவனார் தரிசனம் காணக் கிடைக்குமாம். அப்படி தெரிந்தால் பூரண தெரிசனம் சித்தியாகுமாம்.

மேலும் இந்த தரிசனதில் கற்பூர தீபம் போன்ற ஒளியும் தென்படுமாம், அப்போது வாசியானது ஒடுக்கமாகுமாம். அத்துடன் மௌன ரச பானம் சுரக்கும் அதை உணர்ந்தால் சிவயோகம் தெளிவாகவும், முழுமையாகவும் சித்திக்குமாம் என்கிறார் அகத்தியர்.

நாசினுனி தரிசனம்..

சித்தர்களின் தரிசன வகைகளில் எட்டாவது தரிசனமான நாசி நுனி தரிசனம் பற்றி பார்ப்போம். இதை அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

ஒடுக்கமுடன் பூரணமாம் தெரிசனத்தைச் சொன்னேன்
உண்மையென்ற னாசினுனி தெரிசனத்தைக்கேளு
அடுக்கநடு மனைதனில் வங்கென்றிருத்தி
ஆதியென்ற சுழிமுனையில் சிங்கென்றிருத்தி
தொடுத்துமிக சிவயவசி அம்மங்கென்று
சுத்தமுடன் னூற்றெட்டு உருவேசெய்தால்
நடுத்தமரில் னாகாந்த சோதிதொன்றி
நாலான காரியமும் நன்மையாமே.

நன்மையுடன் னாசினுனி னாட்டம்பாரு
நாதாந்த பூரணமாய் சுழினைக்கேத்தி
உண்மையென்ற வாசியிலே உகந்துநில்லு
தன்மையுடன் உலகமதில் தானேநின்று
சகலஉயிர் தாபரமும் தானேதானாய்
சின்மயமாய்த் தானிருந்து தெளிந்துகொண்டால்
சிவசிவா மவுனமது தீர்க்கமாமே.


புருவ மத்தியில் மனதை நிறுத்தி “வங்” என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “சிங்” என்று நிறுத்தி மௌனமாக கண்களால் நாசி நுனியை நோக்கியவாறு இருந்து "சிவயவசி அம் மங்" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் புருவ மையத்தில் காந்த ஜோதி தெரியுமாம். அப்படி தெரிந்தால் நாசினுனி தெரிசனம் சித்தியாகியதாக கொள்ளலாமாம்.

அப்படி நாசிநுனி தெரிசனம் சித்தியானால் சகல உயிர்களிலும் பரம்பொருளே நிறைந்திருக்கிறது என்றும், அந்த பரம்பொறுளிலில் தானும் அடக்கம் என்றும் உணர முடியுமாம். அத்துடன் மவுன சித்தும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.

எளிமையாக இருக்கிறதல்லவா!!

அடுத்த பதிவில் புருவ மைய்ய தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உள்ளமென்ற தரிசனம்.

Author: தோழி / Labels: ,

நண்பர்களே!

இன்றைய தினம் குருவிற்கான தினம்.குருபூர்ணிமா என்று அழைக்கப் படும் இந்த நாளில் குருவினை பணிகிறவர்களுக்கு அவரின் பூரண ஆசி கிடைத்திடும் என்பது நம்பிக்கை.

நம்மை நல்வழி நடத்துகிற, நாம் அறிந்திராத ஒன்றை நமக்கு அருளிடும் எவரும் நமக்கு குருவே! அவரை பணிவதால் நமக்கு உயர்வே தவிர தாழ்வில்லை.

அந்த வகையில் எனது மேலான குருவின் பாதங்களை பணிந்து அவர் ஆசியும் அருளும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டி வணங்கிக் கொண்டு இன்றைய பதிவினை துவக்குகிறேன்.

சித்தர்கள் அருளிய ஆறாவது தரிசனமாகிய உள்ளமென்ற தரிசனம் பற்றி இன்று பார்ப்போம். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல முதல் ஐந்து தரிசன சித்தி அடைந்தவர்களே இந்த உள்ளமென்ற தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

நில்லென்று மனதடங்கும் தெரிசனமும் சொன்னேன்
நிசமான புலத்தியனே யின்னங்கேளு
ஊனென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன்
உத்தமனே சற்குருவைத் தியானம்பண்ணி
சொல்லென்று வாசிதனை வங்கென்றெழுப்பி
தீர்க்கமுடன் உங்கென்று மவுனம்பூட்டி
செல்லென்று அங்கிலிவசி வசியென்றோத
துலங்குமடா மகேஸ்பரத்தின் தெரிசனந்தான்காணே.

காணவே மயேசரத்தின் தெரிசனந்தான் மைந்தா
கருணையுடன் காணவே அரிதாம்பாரு
பூணவே புருவமப்பா சுழினைக்குள்ளே
பொருந்திநின்று வந்ததொரு வாசிதானும்
தோணவே துலங்கி நின்று அசவையாகி
சொல்நிறைந்த மந்திரமு மதுவேயாக
ஊணவே மவுனமது குருதியாகி
உள்வெளியாய் நின்றுதடா உகந்துபாரே.


குருவருளைத் தியானம் செய்து மூச்சை “வங்” என்று ஊன்றி, பின் “உங்” என்று மௌனமாக இருந்து கொண்டு "அங்கிலி வசி வசி" என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.

அப்படி செபித்து வரும்போது காண்பதற்க்கு மிகவும் அரியதான மகேஸ்பரத்தின் தெரிசனத்தை காணலாமாம். அப்போது சுழிமுனையுடன் பொருந்தி வரும் மூச்சானது அதுவே மந்திரமாகவும், மௌன நிலையாகவும் உடலில் ஓடும் இரத்தம் போல் ஒன்றி உள் வெளியாய் இருக்கும் நிலையை உருவாக்குமாம்.

இதையே உள்ளமென்ற தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் பூரண தரிசனம் மற்றும் நாசி நுனி தரிசனம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மௌன தரிசனம்.

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய பதினாறு வகையான தரிசனங்களில் ஐந்தாவது தரிசனமாகிய “மௌன தரிசனம்” பற்றி இன்று பார்ப்போம்.

முதல் நான்கு தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையினை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர். மௌன தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

உறுதியுள்ள மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன்
உகந்துமன மடங்கினதோர் தெரிசனத்தைக்கேளு
பரிதிமதிமேற் சுடரறிந்து மவுனம்பூட்டி
பக்தியுடன் வாசிதனை வங்கென்றூணி
திருகுசுழி முனையதிலே சிங்கென்றோட்டி
தீர்க்கமுடன் தானிருந்து குருவைப்போற்றி
உறுதியுடன் சிங்குசிவாயென்றோத
உண்மையுள்ள மௌன தெரிசனமுமாமே.

ஆமப்பா தெரிசனத்தை யென்னசொல்வேன்
அதியென்ற தேகமதில் அக்கினிகொண்டேறும்
காமப்பால் கானப்பால் கனிந்தமுர்தமூறும்
கண்ணறிந்து மவுனமதாய் கனிவாய்நின்று
வாமப்பா லுருதியியனால் வரைகள்தாண்டி
மகத்தான சுழினைவழி வாசல்சென்று
தாமப்பா தனன்றிவே சாட்சியாக
தன்மயமும் விண்மயமும் தானாய்நில்லே.


இதுவரை சித்தியடைந்த தரிசனங்கள் மூலமாக சூரிய சந்திரர்களை விட சிறப்பான ஒளியை தரிசித்ததை மௌனமாக மனதில் உள்வாங்கி மூச்சை “வங்”என்று ஊன்றி, பின்னர் அந்த முச்சை சுழிமுனையில் “சிங்”என்று செலுத்தி குருவருளை வணங்கி வேண்டி "சிங்கு சிவா" என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.

இவ்வாறு தொடர்ந்து செபித்துவர உடலில் அக்கினி ஏறுமாம். அப்போது காமப்பால், கானப்பால், கனிந்தாமிர்தம் ஆகியவை ஊறுமாம். அப்போது அதை உணர்ந்து மௌனமாக இருந்தால், ஊறிய இம் மூன்றும் சுழிமுனை வாசல் வரை செல்லுமாம். அப்போது ஆகாயம், பூமி எங்கும் நீக்கமற பரந்து விரிந்து நிற்கும் பிரம்மம் நானே என்று உணரும் நிலை சித்திக்குமாம்.இதுவே மௌன தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்.

தரிசனங்களுள் மௌன தரிசனம் மிகவும் சிறப்பாய் கூறப் பட்டிருக்கிறது. நாளைய பதிவில் ஆறாவது தரிசனமான “உள்ளமென்ற தரிசனம்” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனோ தரிசனம்.

Author: தோழி / Labels: ,

சித்தர் பெருமக்கள் அருளிய பதினாறு வகையான தரிசனங்களில் நான்காவது தரிசனமாகிய மனோ தரிசனம் பற்றி இன்று பார்ப்போம்.

முதல் மூன்று தரிசனங்களாகிய “ஆதார தரிசனம்”, “ஆத்ம தரிசனம்”, “அறிவு தரிசனம்” ஆகிய மூன்று தரிசனங்களில் சித்தி அடைந்தவர்களே இந்த நான்காவது தரிசனமாகிய மனோ தரிசனத்தை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர்.

வாருங்கள், மனோதரிசனம் பற்றி அகத்தியரின் மொழியில் என்ன கூறியிருக்கிறாரென பார்ப்போம்.

கானென்ற அறிவான தெரிசனந்தான் சொன்னேன்
கலங்காத மனமென்ற தெரிசனத்தைக்கேளு
வானென்ற பூரகத்தில் சிங்கொன்றூதி
மகத்தான சுழியினையிலே வாசிபூட்டி
பூனென்ற ஓம்அரிநம வென்றேதான்
புத்தியுடன் தினம்னூறு உருவேசெய்தால்
வானென்ற தேகம்வெகு குளிர்ச்சியாகும்
மகத்தான ஆனந்த மயமாந்தானே.

தானென்ற ஆனந்தம் தானேதானாய்
தன்மையுடன் நின்றநிலை தானேகண்டு
வானென்ற கேசரியில் மவுனம்பூட்டி
வரிசையுடன் அண்டகேசரத்தில் சென்றால்
யேனென்ற மனோன்மணிதான் முன்னேநின்று
யின்பரச அமுர்தமது யிவாள்மைந்தா
வீணென்று தெரிசனத்தை விட்டாயானால்
வேதாந்த மவுனமதுக் குறுதிபோச்சே.


குருவருளை வேண்டி வணங்கி மௌனமாக இருந்து “சிங்”என்று மனதை பூரகத்தில் நிறுத்தி, மூச்சை சுழிமுனையில் நிறுத்தி "ஓம் அரி நம" என்று தினமும் நூறு முறை செபித்துவரவேண்டுமாம். அப்படி செபித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகுவதுடன், மனமானது மிகவும் ஆனந்த நிலையில் இருக்குமாம்.

இவ்வாறு மனம் ஆனந்த நிலையில் இருக்கும் போது கேசரியில் மௌன நிலையை கைக்கொண்டால் மனோன்மணித் தாயின் தெரிசனம் கிடைக்குமாம். மனோன்மணி தாயின் தெரிசனம் கிடைத்தவுடன் மனமானது அனைத்தும் சித்தித்ததாக எண்ணுவதுடன், இனி தெரிசனம் எதுவும் கிட்டதேவையில்லை, இதுவே இறுதி தரிசனம் என்றும் நினைக்கவும் தோன்றுமாம். இதுவே மனோ தரிசனம் சித்தியடைந்த நிலையாக கூறுகிறார்.

இந்த மனோ தரிசனமே போதும் என நினைத்து மிச்சமிருக்கும் தரிசன முறைகளை பயிலாமல் விட்டுவிட்டால் இது வரை பெற்ற நான்கு தரிசன சித்துக்களும் வீணாகி விடுமாம். எனவே பதினாறு தரிசனங்களையும் தொடர்ந்து பயின்று சித்தியடைவதே முக்திக்கு வழி என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் ஐந்தாவது தரிசன முறை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆத்ம தரிசனம்!, அறிவு தரிசனம்!.

Author: தோழி / Labels: ,

கடந்த வாரத்தில் சித்தர் பெருமக்கள் அருளிய பதினாறு வகையான தரிசனங்களைப் பற்றியும், அதில் முதலாவது தரிசனமான ஆதார தரிசனம் பற்றியும் பார்த்தோம். அந்த வகையில் அடுத்த இரண்டு தரிசனங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

இந்த தரிசனங்களை வரிசைக் கிரமமாக முயற்சித்து சித்தியடைய வேண்டுமென்கிறார் அகத்தியர். அதாவது ஒரு தரிசனத்தில் சித்தியடைந்த பின்னரே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். குருவின் வழி காட்டுதலோடு இந்த தரிசனங்களை முயற்சிக்க வேண்டும்.

வாருங்கள் இரண்டாவது தரிசனமான ஆத்மாவின் தரிசனம் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

ஆத்மாவின் தெரிசனம்.

சித்தியுள்ள ஆதாரதெரிசனமுங் சொன்னேன்
சிவசிவா ஆத்துமாவின் தெரிசனத்தைக்கேளு
பக்தியுடன் கண்டமதில் அங்கெண்றூணி
பூரணமாய்வாசி தனைநிறுத்திக் கொண்டு
பக்தியுடன் சுழிமுனையில் வாசியேற
பாலகனே உங்கென்று மவுனம்பூட்டி
சுத்தமுடன் உங்கிலிநம் சிங்கென்று
சுருதிபெற தினம்னூறு உருவேசெய்யே.

செய்யப்பா உறுதிகொண்டு உருவேசெய்ய
செயமான திருவுருவாம் ஆதாரத்தில்
மெய்யப்பா சுழிமுனையின் பிரகாசத்தாலே
மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும்
மையப்பா மூலவன்னி பிரகாசத்தாலே
மந்திரகலை ஆத்துமா வென்றறிந்துகொண்டு
கையப்பா குவித்துனிதம் பணிந்துகொண்டால்
கருணைவளர் சீவாத்துமா கனியுந்தானே.


ஆதார தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் “அங்”என்று மூச்சை தொண்டையில் நிறுத்தி “உங்” என்று மௌனமாக இருந்து "உங் கிலி நம் சிங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு தடவை செபித்து வந்தால் சுழிமுனையில் மூலவன்னி பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் ஆத்மாவானது மந்திரக்கலையை உணர்ந்து அறிந்து கொள்ளும் என்கிறார்.

அப்போது கைகுவித்து வணங்கி பணிவுடன் மந்திரக்கலையை முழுவதுமாய் உணர்ந்து தெளிவு பெறவேண்டுமாம். அப்படி தெளிவடைந்ததும் சீவாத்துமா முழுமை அடைந்து தெளிவு பெறுமாம், இப்படியாக ஆத்துமாவின் தெரிசனம் சித்தியாகும் என்கிறார்.

ஆத்மாவின் தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் அடுத்த தரிசனமான “அறிவு தரிசனத்தை” பயிலலாம் என்கிறார் அகத்தியர். வாருங்கள் அதைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

அறிவு தெரிசனம்.

தானென்ற ஆத்துமாவின் தெரிசனத்தைச் சொன்னேன்
சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு
வானென்ற மூலமதில் உங்கென்றூணி
மவுனமென்ற பீடமதில் அங்கென்றிருத்தி
கோனென்ற விழியோகம் கொண்டுநல்ல
குறியறிய ஓம்நம சிவயவென்று
தேனென்ற ரசம்போலே உருவேசெய்தால்
தேவாதி தேவனென்ற பிர்மமாச்சே.

ஆச்சப்பா பிர்மமென்ற தார்தான் சொல்வார்
ஆதியென்ற சுழியினையிலே அக்கினியே தோன்றும்
பேச்சப்பா யிம்மூல வன்னிதன்னால்
பேரண்டம் சுத்திவர கெவுனமுண்டாம்
நீச்சப்பா வெகுநீச்சு மூந்நேயந்தம்
நிசமான அந்தமடா நெத்திக்கண்ணு
பாச்சப்பாக் கண்ணறிந்து வாசிகொண்டால்
பதிவான மவுனசித்து பலிக்குங்காணே.


முதல் இரண்டு தரிசனங்கள் சித்தியடைந்தவர்கள், “உங்” என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “அங்” என்று மௌனமாக இருந்து கொண்டு “விழி யோகத்தில்” இருக்க வேண்டுமாம்.

அது என்ன விழி யோகம்?

கண்கள் மூடிய நிலையில் விழிகள் இரண்டினாலும் புருவ மத்தியை பார்த்தபடி இருப்பதுதான் விழி யோகம் எனப்படும்.

இந்த விழி யோக நிலையிலிருந்து கொண்டு "ஓம் நம சிவய" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம். அப்படி தெரிந்தால் கெவுனம் உண்டாகுமாம், அப்போது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை உணரமுடியுமாம். இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங்கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!

நாளைய பதிவில் அடுத்தடுத்த தரிசனங்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆதார தரிசனம்.

Author: தோழி / Labels:

அகத்தியர் அருளிய பதினாறு வகையான தரிசனங்கள் எவையென நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று அகத்தியர் அருளிய முதல் தரிசனமான “ஆதார தரிசனம்” பற்றி பார்ப்போம்.

பொதுவில் இந்த தரிசங்களை எப்படி அணுகிட வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

குருவின் அருளை வேண்டி, அந்த அந்த நிலையில் உற்று பார்த்து உன் முயற்சியால் உன் நிலையை அதில் உணர்ந்து கொண்டாயானால் இந்த உலகமெல்லாம் பரந்திருக்கும் பிரம்மத்தை மனம் உணர்வதுடன் என்றும் பூரண நிலையாய் வாழ்வாய் என்று சொல்கிறார்.

இப்போது அகத்தியர் அருளிய முதலாவது தரிசனமான ஆதார தரிசம் பற்றி அவரது மொழியில் பார்ப்போம்.

ஊணவே வாசிதனை மூலந்தன்னில்
ஓமென்று தானிறுத்தி உறுதிகொண்டு
பேணவே யிங்கென்று மவுனம்பூட்டி
பெருமையுள்ள ஓங்அங்சிவய நமவென்று
தோணவே தினம்நூறு உருவேசெய்தால்
சுத்தமுள்ள சுழினையிலே நந்திகாணும்
பூணவே நந்தியுட பிரகாசங் கண்டால்
பொருந்திநின்ற ஆதாரஞ் சித்தியாமே.

ஆமப்பா ஆதாரஞ் சித்தியானால்
ஆதார தேவதைகள் அப்போகாணும்
ஓமப்பா வென்றபிரண வத்தினாலே
ஒளிவிளக்காய் நின்றதொரு சோதிகாணும்
வாமப்பால் நிறைந்த பூரணத்திலேதான்
மகத்தான சோதிபஞ்ச வர்ணமாக
தாமப்பா தன்னிலையில் தானேகாணும்
தண்மையுடன் கண்டதெல்லாம் சித்தியாமே.


ஓம் என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “யிங்”என்று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய நம" என்று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என்கிறார்.

இந்த ஆதார தரிசனம் சித்தியானால் ஆதார தேவதைகள் கண்களுக்கு தெரிவார்களாம், தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஒளிவிளக்குப் போல் சோதி தென்படுமாம். அந்த சோதியானது பஞ்ச வர்ண நிறத்திலே இருக்குமாம். இந்த பஞ்சவர்ண ஒளி தென்படத் தொடங்கினாலே இத் தரிசனத்தில் முழுமையாக சித்தியானதாக கொள்ளலாம் என்கிறார் அகத்தியர்.

எதிர் வரும் நாட்களில் மற்றபிற தரிசனஙக்ளை பற்றியும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தரிசனங்கள் பதினாறு..!

Author: தோழி / Labels:

பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக அகத்தியர் அருளியிருக்கும் செய்தியினை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த தரிசனங்கள் ஒவ்வொன்றும் படி நிலையாக அருளப் பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு தரிசனமாய் அனுபவித்து அறிந்திட வேண்டும் என்கிறார். இவை யாவும் அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு அருளியதாக கூறப்பட்டிருக்கிறது.

முறையான வழி நடத்துதலில் முயற்சிக்கும் எவருக்கும் இந்த தரிசனங்கள் சாத்தியமாகும். வாருங்கள் பதினாறு வகையான தரிசனஙக்ளைப் பற்றி அகத்தியர் கூறுவதை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பதிவான தெரிசனங்கள் பதினார்தன்னை
முத்தியுள்ள ஆதாரதெரிசனந்தா னொன்று
மூலமென்ற ஆத்துமாவின் தெரிசனந்தானொன்று
சித்தியுள்ள அறிவானதெரிசனந் தானொன்று
சிவசிவாமவுன மென்றதரிசனந்தானொன்று
புத்தியுடன் மனமடங்கு தெரிசனந்தானொன்று
புகழான உள்ளமென்ற தெரிசனந்தானொன்றே.

ஒன்றான பூரணமாந் தெரிசனந்தானென்று
உறுதியுள்ள னாசினுனி தெரிசனந்தானொன்று
பன்றான புருவமய்யந் தெரிசனந்தானொன்று
பார்மகனே வெளியான தெரிசனந்தானொன்று
நன்றாக நின்றஒளி தெரிசனந்தானொன்று
நாடிமனங் கொண்டவிந்து தெரிசனந்தானொன்று
குன்றாத நாதமென்ற தெரிசனந்தானொன்று
குணமான உருவமென்ற தெரிசனந்தான்காணே.

காணவே அரூபமென்ற தெரிசனந்தானொன்று
கைகலாச சாயுட்ச தெரிசனந்தானொன்று
தோணவே தெரிசினங்கள் பதினாருதன்னை
சுத்தமுடன் சற்குருவின் கடாக்ஷத்தாலே
ஊணவே அந்தநிலை ஊணிப்பார்த்து
உண்மையுடன் தன்னிலையாய் தன்னைக் கண்டு
பூணவே யிகபரசாதனத்துக் கெல்லாம்
பொருந்தி மனம்பூரணமாய் வாழ்வாய்பாரே.


ஆதார தரிசனம், ஆத்துமாவின் தரிசனம், அறிவு தரிசனம், மனோ தரிசனம், மௌன தரிசனம், உள்ளமென்ற தரிசனம், பூரண தரிசனம், நாசினுனி தரிசனம், புருவமய்ய தரிசனம், பிரமவெளி தரிசனம், ஒளி தரிசனம், விந்து தரிசனம், நாத தரிசனம், உருவ தரிசனம், அரூப தரிசனம், சாயுச்சிய தரிசனம் என பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக கூறுகிறார்.

நம்மில் பலருக்கு இது புதிய செய்தியாக இருக்கும். இந்த தரிசனங்களை எவ்வாறு தரிசிப்பது?. அதனால் என்ன விளையும்?

விவரங்கள் நாளைய பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கடவுளும் தரிசனமும்!

Author: தோழி / Labels:

தரிசனம் என்பதன் ஆரம்பத் தகவல்களை நேற்றைய பதிவில் பார்த்தோம். நமது ஆன்மீகத்தை பொறுத்த வரை தரிசனம் என்பது கடவுளை காண்பதாகவே சொல்லப் படுகிறது.

நமது புராண கதைகளில் கூட கடவுளின் காட்சி என்பது சிலிர்ப்பினை உண்டாக்கும் வகையில் நயமான வருணனைகளுடன் கூறப் பட்டிருக்கிறது.மனித உருவில் நான்கு கைகளுடன், எடைக்கு எடை தங்க, வைர வைடூரிய நகைகளை அணிந்தவராக, ஒளிவெள்ளத்தில் மிதந்தவாறு அருள் நிறைந்த முகத்தோடு காட்சி தருவார் என்பது மாதிரி பல தரிசனங்கள் கூறப் பட்டிருக்கின்றன.

இதுவா கடவுள் தரிசனம்?

கடவுளின் உருவம் இப்படியானதுதான் என யாருக்காவது உறுதியாக தெரியுமா?

சிற்பிகளின் கற்பனை மற்றும் ஓவியர்களின் ரசனை வழியேதான் நாம் கடவுளை கண்டிருக்கிறோம். அதைத்தான் நம்மில் பலரும் நம்பிக் கொண்டும் இருக்கிறோம்.

உண்மையில் கடவுள் எப்படித்தான் இருப்பார்?.அவரின் அங்க லட்சணங்கள்தான் என்ன?

இந்த கேள்விக்கு அநேக பதில்களை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் அவை எல்லாம் வெகுசன வெளியில் விரிவாக சொல்லப் படவில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நாமும் நம்மையொத்த உருவத்தில் கடவுளை ஏற்றுக் கொண்டு விட்டோம்.

ஒரு உதாரணத்திற்கு வைணவ சமயத்தின் ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் கடவுளின் உருவத்தை எப்படி வரையறுக்கிறார் என்று பார்ப்போம்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.


ஆணுமில்லை, பெண்ணுமில்லை,அலியுமில்லை, பார்க்கவும் முடியாது, இருக்கிறதுவுமில்லை, இல்லாததுவுமில்லை... விரும்பியவர் விரும்பிய வடிவத்தை உடையவன் அல்லது அப்படி இல்லாமலிருப்பவன்.

கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறதுதானே!, ஆனால் இதுதான் இறைவனின் வடிவம் என்கிறார் நம்மாழ்வார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்.

இப்படியான தரிசனங்களை பற்றிதான் நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர். இந்த தரிசனத்தின் சிறப்பினைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

"மாண்டு சடம் போகமல் தெளிவதெப்போ
மகத்தாலன அறிவதிலே வாழ்வதெப்போ
பூண்டுகொண்ட ஆசையது ஒழிவதெப்போ
பொல்லாத மாய்கைவிட்டு நிற்பவதெப்போ
ஆண்டுகொண்ட காமவலை அறுப்பதெப்போ
அலைச்சலற்று நிற்பதெப்போ அய்யாஅய்யா
தாண்டியந்த நிலையதிலே மனதைனாட்டி
சதான்நத போதமாக தெரிசனம்பாரே."


இறந்து போய் சடலமாகாமல் நாம் தெளிவது எப்போது?
மகத்துவமான அறிவு நிலை பெற்று நாம் வாழ்வது எப்போது?
ஆசைகளை அழிப்பது எப்போது?
கொடியதான மாயை நிலையை விட்டு விலகி நிற்பது எப்போது?
எம்மை ஆட்சி செய்யும் காமவலையை அறுப்பது எப்போது?
மனமானது சஞ்சலம் இல்லாது அமைதியாய் இருப்பது எப்போது?

இப்படி வரிசையாக கேள்விகளை அடுக்கி விட்டு அதற்கான தெளிவை இப்படி சொல்கிறார்.

மேலே சொன்னவைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு உயரிய பேரானந்த நிலையினை அடைய வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நிலைகளில் மனதை ஊன்றி நிலை நிறுத்தினால் சில தரிசனங்கள் கிடைக்குமாம். அவற்றை தரிசித்தால் எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கமுடியும் என்கிறார்.

அதாவது அனைத்து உலக இன்பங்களிலிருந்தும் விடுதலை அடைந்து என்றும் ஆனந்த நிலையில் இருக்க இந்த தரிசனங்கள் வழிசெய்வதாக சொல்லும் அகத்தியர் இத் தரிசனங்களில் பதினாறு வகைகள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

அதென்ன பதினாறு வகையான தரிசனங்கள்?

விவரங்கள் நாளையபதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


“தரிசனம்”, ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

தரிசனம் என்பது என்ன?

நாம் தினமும் கண்ணால் கானும் காட்சிகள் எல்லாமே தரிசனம்தான்.அப்படி பார்க்கிற காட்சிகள் நமக்குள் உண்டாக்குகிற எதிர்வினைகளையே உணர்வுகள் என்று சொல்கிறோம். நமக்குள் உண்டாகிற அந்த உணர்வுகளை பார்க்க முடியாது, ஆனால் உணர்கிறோம். அப்படி உணர்வதும் கூட ஒரு வகை தரிசனம்தான். பார்க்க முடிகிறவைகளை புற தரிசனம் என்றும், உணர முடிகிறவைகளை அக தரிசனம் என்று இரண்டு நிலையாக கூறலாம்.

ஒரு வகையில் பார்த்தால் நாம் பிறக்கிற கணம் தொடங்கி இறுதி மூச்சுவரையில் இந்த வாழ்க்கை பயணமே ஒரு தரிசனம்தான். தரிசனங்களின் ஊடான இந்த வாழ்க்கையில் நாம் இது வரை அறியாமல் இருக்கிற அற்புதமான சில அக தரிசனங்களைப் பற்றியே இந்த தொடரில் பார்க்க இருக்கிறோம். அதுவும் நமது சித்தர் பெருமக்கள் அருளியிருக்கிற மகத்தான தரிசனங்களைப் பற்றி!

சித்தரியலில் குருவினை கண்டறிவதையே முதலாவது தரிசனமாய் சொல்லி இருக்கின்றனர். இப்படி துவங்கும் தரிசனமானது ஜீவசமாதி என்கிற பிறவா பேரின்ப முக்தி நிலை வரையில் பல்வேறு தரிசனங்களின் ஊடாக பயணிக்கிறது.நாம் முன்னர் சொன்ன அகதரிசனமே சித்தரியலில் தரிசனமாய் குறிப்பிடப் படுகிறது. இவற்றை உள்ளொளியாக மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்த தரிசனங்கள் யாருக்கு வாய்க்கும்?. ஆர்வமும், முனைப்பும், உழைப்பும் உள்ள எவருக்கும் வாய்க்கக் கூடியவை இந்த தரிசனங்கள். அவரவரின் முயற்சிக்கேற்ப இந்த தரிசனங்கள் அமையுமாம். ஒவ்வொரு தரிசனமும் இப்படித்தான் இருக்குமென வரையறுத்துச் சொல்ல முடியாது என்றும் அவை அனுபவித்தே உணர வேண்டியவை என பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

இந்த தரிசனங்களைப் பற்றி அகத்தியர், போகர், திருமூலர் போன்ற வெகு சிலரே குறிப்பிட்டிருக்கின்றனர். இதில் இருந்தே இவற்றின் மகத்துவத்தை நாம் உணர்ந்திட முடியும். இந்த மூவரில் அகத்தியரே இவற்றை விரிவாக விளக்கி இருக்கின்றார். அகத்தியர் 12000 என்ற நூலில் தரிசனங்களின் படி நிலைகள் பற்றிய குறிப்புகள் விரிவாகவே கூறப் பட்டிருக்கிறது.

தரிசனத்தின் சிறப்பு மற்றும் மகத்துவம் பற்றி அகத்தியர் என்ன கூறியிருக்கிறார்?

விவரங்கள் நாளைய பதிவில்....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

Author: தோழி / Labels:

இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில்அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அண்மையில் அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் எம்.சரவண குமார் அவர்கள் சீரும்,சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்...எண்ணங்களைப் பழுக்கவிட்டு
முதிர்ந்த அனுபவத்தை

அடித்தளமாக்கி இளமைக்

காலத்திலேயே - பல

அத்தியாயங்கள் படைத்த

"பங்குவணிகனே"


அடிக்கடி உம்முடன்

அளவளாவி மகிழ்ந்து

அரிய தகவல் கற்றிட

இணையமெனும் தோழன்

இணைத்தான் எம்மை...


முதல் சந்திப்பிலேயே

பெரியோர் முதல் சிறியோர் வரை

சரிசமனாய் மதிக்கும் - உந்தன்

உயரிய பண்பு கண்டு

வியந்து தான் போனேன்..!


கைபிடித்து நடக்கும் குழந்தையாய்

கவரில் போகும் கடிதமாய்

இலட்சியம் நோக்கி

நடைபோட - பலருக்கு

பாதை போட்டுத்தந்து

வாழ வழிகாட்டி

வளர உரம் ஊட்டி

அழுத்திச் சொல்லித்தந்த

"ஆசானே"


வாழ்த்தும்

வயதுமில்லை..

வாழ்த்திய

அனுபவமும் இல்லை..

இளையவள் இவள்

வாழ்த்துகிறேன் ஏற்றிடுவீர்!


நீண்டதொரு நல் வாழ்வில்

நிலையான புகழை ஈட்டி

ஆண்டவர்கள் துணைகொண்டு

அடுக்கடுக்காய் வெற்றி கண்டு

காண்பவர் வியக்கும் வண்ணம்

பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மின் நூல்கள்...ஒரே இடத்தில்!

Author: தோழி / Labels:

நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டபடி இது வரையில் தொகுத்த அத்தனை மின்னூல்களையும் இந்த பதிவில் பகிர்ந்திருக்கிறேன். தேவையானவர்கள் தரவிறக்கி பயன் படுத்திக் கொள்ளவும்.

தேவையுள்ளோருக்கு அறியத் தந்தால் தமிழுக்கும், சித்தரியலுக்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...