காந்தச் செந்தூரம்..!

Author: தோழி / Labels: , ,

இன்று பதிவதாக இருந்த பதிவினை தவறுதலாக அழித்து விட்டேன். எனவே நாளை பதிவதாக இருந்த பதிவினை இன்று வலையேற்றி இருக்கிறேன். தற்போது மீண்டும் புத்தகம் தேடி எடுத்து எழுதிட நேரமில்லை என்பதால் தவறை பொருத்தருள வேண்டுகிறேன்.

சித்த மருத்துவத்தில் செந்தூரம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அத்தகைய செந்தூரத்தை காந்தத்தினை பயன் படுத்தி தயாரிக்கப்படும் முறை ஒன்றை அகத்தியர் அருளியிருக்கிறார். இந்த செந்தூரம் நரை, திரை, மூப்பு ஆகியவைகளை போக்கும் என்கிறார் அகத்தியர்.

கேளப்பா காந்தம் பலம்தான் ஒன்று
கேள்மகனே அயம் பலம்தான் ஒன்று
வேளப்பா தங்கமொரு பலம்தான் தூக்கி
விசையாக மூன்றும் ஒன்றாய் உருக்கி கொண்டு
வாளப்பா கல்வமதில் பொடித்துக் கொண்டு
ஆளப்பா கண்டிடைக்கு வீரம் வாங்கி
அப்பனே இடைக்கு நிகர் சூதம் சேரே.


- அகத்தியர் -

சேர்ந்ததொரு இடைக்கு நிகர் கெந்தி சேர்த்து
திரமாக முலைப்பாலால் ஆட்டிக் கொண்டு
காத்துமே ரெண்டுநாள் ஆட்டிப் பின்பு
கருவான பழச்சாற்றால் ஆட்டி நன்றாய்
பார்த்துநீ உலரவைத்துப் பொடியதாக்கி
பண்பாகக் குப்பியிலே அரைமட்டிட்டு
கோத்துநீ பாண்டமரை உப்பைக் கொட்டி
குணமாக அதின்மேலே குப்பிவையே.


- அகத்தியர் -

வைத்த பின்பு குப்பியுட கழுத்து மட்டும்
மறைப்பாக உப்புடனே மண்ணும்கொட்டி
மெய்த்ததொரு மேல் மூடி சீலை செய்து
விசையாக வாலுகையில் எரிப்பாயப்பா
நைத்ததொரு மூன்று நாள் முத்தீயிட்டு
நலமாக ஆறவிட்டு எடுத்துப்பாரு
கைத்ததொரு செந்தூரம் முருக்கம்பூ போல்
காணுமடா செந்தூரம் பதனம் பண்ணே.


- அகத்தியர் -

பரமகுரு செந்தூரம் கணவிடைதான் கொள்ளு
நண்ணப்பா மண்டலமே கொண்டாயானால்
நரைதிரை மாற்றுமடா சட்டைபோக்கும்
விண்ணப்பா குருபதமும் ஒடுக்கம் காணும்
விசையான சிவயோகம் விருப்பம் செய்யும்
பொன்னப்பா உண்டாக்கும் செந்தூரத்தில்
பூட்டுகிற விதம் உனக்கு புகலுவேனே.


- அகத்தியர் -

காந்தம், அயம் , தங்கம் இவை மூன்றையும் தலா ஒரு பலம் வீதம் சேர்த்து உருக்கி குளிர வைத்த பின்னர் அதை நொறுக்கி கல்வதில் இட்டு அத்துடன் கடிகை அளவு வீரமும், அதன் எடைக்கு சமனான பாதரசமும் சேர்த்து இந்த மொத்த எடைக்கு நிகராக கெந்தி சேர்த்து முலைப்பால் விட்டு இரண்டு நாட்கள் அரைக்கவேண்டுமாம்.

அதன் பிறகு பழச்சாறுவிட்டு, நன்றாக அரைத்து பின் உலர வைத்து பொடியாக்கி குப்பி ஒன்றில் அரை பங்கு போட்டு, உப்பு நிரம்பிய பாத்திரத்தில் உப்பின் மேல் அந்த குப்பியை வைக்க வேண்டுமாம். பின் குப்பியின் கழுத்தளவு வரும் வரை உப்பும் மண்ணும் கலந்து கொட்ட வேண்டுமாம்.

அதன் பின்னர் அந்த குப்பியின் மூடிக்கு சீலை செய்து, வாலுகையின் உதவியுடன் எரிக்கவேண்டுமாம். அப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து எரித்து பின் ஆற விட்டு எடுத்துப் பார்த்தால் செந்தூரமானது முருங்கை பூப்போல் பூத்திருக்குமாம், அதை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த காந்த செந்தூரத்தை தினமும் பண எடைவீதம் எடுத்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் நரைதிரை மாறுவதுடன் ஒரு உடற் சட்டையையும் போக்குமாம். மேலும் சிவ யோகத்தை மனம் நாடும்படி செய்யுமாம். அத்துடன் இந்த காந்த செந்தூரத்தின் உதவியுடன் பொன்னையும் உண்டாக்கலாமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

குணசேகரன்... said...

wonderfull...news..

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot for your today's blog.

RAVINDRAN said...

நன்றி

Post a comment