மாந்திரிகம் - நிறைவாய் சில வரிகள்!

Author: தோழி / Labels:

வதைத்தலும், வதைக்கப் படுதலுமே மாந்திரிகம் என்கிற பொதுவான அச்ச உணர்வை களைவதும், அவற்றின் அடிப்படைகள் மற்றும் அவசியங்கள் குறித்த புரிதலை பகிர்வதுமே இந்த தொடரின் ஆரம்ப நோக்கமாய் இருந்தது.

மேலும், சித்தரியலில் மாந்திரிகம் என்பது மேலான முக்தி நிலையை அடையும் இரண்டு வழிகளில் ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. இது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும் என்பதால் சித்தர்கள் அணுகிய மாந்திரிகத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் கூறுகளை மட்டும் தொடராய் எழுதிட நினைத்தேன். அந்த வகையில் கடந்த 47 நாட்களாய் தொடர்ந்த இந்த தொடரை இன்றுடன் இடை நிறுத்திக் கொள்கிறேன்.

மாந்திரிகம் என்பது வெறும் 25 பதிவுகளுக்குள் அடங்கி விடுகிற விஷயமில்லை. இதன் எல்லைகள் விஸ்தாரமானது, அவற்றை விவரிக்க முனைந்தால் வருடக் கணக்கில் எழுதிக் கொண்டிருக்கலாம். எனவேதான் முன்னரே கூறியபடி சித்தர்களின் அஷ்டகர்மங்கள் என்பதன் அடிப்படை கூறுகளை மட்டுமே இதுவரை வாசித்திருக்கிறீர்கள். எதிர் காலத்தில் குருவருள் கூடி வந்தால் இந்தக் கலையினைப் பற்றி நானறிந்த மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொள்வேன்.

மாந்திரிகம் என்பது உலகின் பல பாகங்களில் வெவ்வேறு வகையில் புழக்கத்தில் இருந்தாலும் இதன் நிரூபணத் தன்மை குறித்த கேள்விகளும் கேலிகளும் நிறையவே இருக்கின்றன. காரண காரியமில்லாமல் இத்தனை விஸ்தாரமாய் மாந்திரிகம் பற்றி இத்தனை பேர் எழுதியிருக்க முடியாது. இன்றைய சூழலில் இதன் உண்மைத் தன்மைகளை வெளிக்கொணர நிறைய ஆய்வுகளும், விவாதங்களும் தேவைப் படுகின்றன. தமிழ்ச் சூழலில் இதனை யாரும் செய்கிறார்களா என தெரியவில்லை. என்னுடைய வாசிப்பனுபவத்தில், அவதானத்தில் இதனை உளவியல் சார்ந்த ஒரு அறிவியல் கலையாகவே கருதுகிறேன்.

அஷ்டகர்மங்கள் என்பது எட்டு வகையான மாந்திரிக முறையினைப் பற்றி கூறினாலும் இதன் வரிசை பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலை என்கிற தகவல் மட்டும் காணக் கிடைக்கிறது. ஆகவே எதனை முதலில் துவங்குவது எதனை தொடர்வது என்பது பற்றிய தகவல் ஏதும் இருக்குமா என பாடல்களில் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு நிலையில் சித்தியடைந்த பின்னரே அடுத்த நிலையை தொடர வேண்டும் என்பது மட்டும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மாந்திரிகம் என்பதை குருமுகமாகவே பெற வேண்டும் என்பது கட்டாய அடிப்படை விதியாகும். தேர்ந்த ஒரு குருவினால் மட்டுமே தனது சீடனை இந்தக் கலையில் வழிநடத்த முடியும் என் சித்தர்கள் உறுதியாக கூறியிருக்கின்றனர். சரியான குருவினை எப்படித் தேடி அடைவது என்பது குறித்து முந்தைய பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை தேடிப் படித்து முயற்சிக்கலாம். குருவானவர் அன்பு நிறைந்தவர், அக்கறையுடன் வழி நடத்துபவர் என்பதால் அவரிடம் முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தால் மட்டுமே குருவருளைப் பெறமுடியும்.

சரியான உடல் மற்றும் மன பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த கலையினை முயற்சிக்க வேண்டும் எனவும் சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கான வழி முறைகள் சித்தர் பாடல்களில் கூறப் பட்டிருக்கின்றன. இருப்பினும் குருவின் வழி காட்டுதலில் இந்த பக்குவத்தை அடைவதே சிறப்பு. குருவுக்கு மிஞ்சிய வித்தையில்லை என்பதை மீண்டும் இந்த இடத்தில் வலியுறுத்திட விரும்புகிறேன்.

திருமூலர், அகத்தியர் உள்ளிட்ட மற்ற சித்தர் பெருமக்களும் மாந்திரிகம் குறித்து விரிவாகவே எழுதியிருக்கின்றனர். அவற்றை எல்லாம் தொகுப்பது என்பது ஒரு வாழ்நாளின் பணியாக இருக்கும். இந்த தொடரினை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க கருவூரார் அருளிய மாந்திரிக தகவல்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன்.

இந்த தொடரின் நெடுகே நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் வாயிலாக தங்களின் கேள்விகளை எழுப்பியிருந்தனர். தனித் தனியே பதிலளிப்பதை விட இந்த பதிவின் வாயிலாக பொதுவான சுருக்கமான எனது புரிதல்களை பதிலாகபட்டியலிடுகிறேன்.

மாந்திரிகம் பற்றிய வாசிப்பனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. அதைத் தாண்டிய செயல் முறைகளில் அனுபவம் ஏதுமில்லை. இப்போதைக்கு எனக்கு அதில் ஆர்வமும் இல்லை.

பாடல்களின் பொருளை பிரித்து எளிய தமிழில் பகிர்வது மட்டுமே எனது நோக்கம். இதை பிறருக்கு சொல்லித் தரும் அளவுக்கெல்லாம் நான் தகுதியானவள் இல்லை.

சித்தர்களின் மாந்திரிகம் என்பது வேறு, மலையாள மாந்திரிகம் என்பது வேறு... அடிப்படைகள் ஒன்றாக இருந்தாலும் நோக்கம் மற்றும் செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். மந்திரங்களை உச்சரிக்கும் முறைகளைப் பற்றி இந்த தொடரில் பகிர்ந்திருக்கிறேன்.

மாந்திரிக கலை அறிவியல் ரீதியாக நிருபிக்கப் படாத கலை என்பதை இந்த தொடரின் துவக்கம் முதல் நெடுக கூறி வந்திருக்கிறேன். நிரூபிக்கப் படாத வரையில் எதுவுமே விமர்சனத்துக்கும் விவாதத்திற்கும் உரிய ஒன்றுதான். அதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. மேலதிக ஆய்வுகளும் விவாதங்களும் நடந்தால் மட்டுமே இந்த கலை குறித்த நியாயமான தெளிவுகள் நமக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

மூட நம்பிக்கை என ஒன்றை ஏன் நிராகரிக்கிறோம் என்பதற்கும் கூட பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும். அதுவே பகுத்தறிவு!, சிறு துரும்பு கூட பல் குத்த உதவுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்தி சந்தி வேளை என்பது சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்களை குறிக்கிறது.

சித்தரியல் தொடர்பான வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். தொடரும் ஒத்துழைப்புக்கும்,ஆதரவிற்கும் நன்றி நண்பர்களே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

மு.சரவணக்குமார் said...

குறுகிய காலத்தில் 10 லட்சம் Page views, 1112 Followers கலக்கறீங்க!

மேலும் வளர வாழ்த்துக்கள்.

சந்ரு said...

வாழ்த்துக்கள்... தொடருங்கள்..

Shiva said...

@ மு.சரவணகுமார் ....இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் எடுத்தக் கொண்ட அத்தனை பெரிய உயரிய விஷயமும்,.... அதனை பகுத்து வழங்கும் பாங்கும்,.... தோழிக்கே கைவந்த கலை. விரைவில் இன்னும் மிக அதிகம் பேரை சென்றடையும்... வாழ்த்துக்கள்

-கிமூ- said...

வாழ்த்துக்கள்
தோழி,
அருமையான பதிவுகள...

tamilvirumbi said...

Dear Thozi,
I convey my heartfelt congratulations to you. At this young age,
you are doing immeasurable service to this tamil world.God will bestow His blessings upon you to continue your service indefatigably.I will continue my sustenance
in your new endeavours also.Thanks a lot.

S.Puvi said...

உங்கள் பகிர்வுகளுக்கு நன்றி

abitha said...

மனம் , புத்தி , அகங்காரம் கடந்து, சித்தத்தில் லயிக்கும் போது தானாக வெளிப்படும் ஆனந்த களிப்பே சித்தர் பாடல்கள்.
யோசித்து எழுதப்பட்டதல்ல. மனமற்ற நிலை. புத்தியற்ற நிலை . அகங்காரம் அற்ற நிலை. சித்தத்தில் நிலைத்த நிலை.
மனதில் இருந்துகொண்டு அறியமுயற்சிக்கதீர்கள். தியானம் மூலம் சித்தத்திற்கு செல்ல முயற்சியுங்கள். எல்லாம் தானே விளங்கும்.
குரு தானே வருவார். நீங்களே குரு தான் என்பதை தானே விளங்கசெய்வர். ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் சுவாசத்திலேயே கவனம் செலுத்துங்கள்.
அனைத்து சித்தர் மறைபொருளும் தானே விளங்கும்.
ஏற்றம் இரண்டுள ( நாசி துவரம்) எழு கினருள (சக்கரங்கள்) மூத்தாள் இறைக்க (இடகலை) இளையள் மடைமாற ,
பாத்தியில் ( சித்தத்தில் ) பாயாமல் பாழெங்கும் ( மனதில்) பாய்ந்ததுவே , கூத்தி வளர்த்த கொழிபுள்ளமே ( மனம் பற்றி புலன்வழியே வெளியே திரியாதீர்கள்)

சி.பி.செந்தில்குமார் said...

உங்க வீடு சுடுகாட்டுக்கு பக்கமா? ஹி ஹி

abitha said...

ஈரோடுன்னா சும்மாவா?
சும்மா இரு! சொல்லற!

RAVINDRAN said...

நன்றி

Post a Comment