காந்தச் செந்தூரம்..!

Author: தோழி / Labels: , ,

இன்று பதிவதாக இருந்த பதிவினை தவறுதலாக அழித்து விட்டேன். எனவே நாளை பதிவதாக இருந்த பதிவினை இன்று வலையேற்றி இருக்கிறேன். தற்போது மீண்டும் புத்தகம் தேடி எடுத்து எழுதிட நேரமில்லை என்பதால் தவறை பொருத்தருள வேண்டுகிறேன்.

சித்த மருத்துவத்தில் செந்தூரம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அத்தகைய செந்தூரத்தை காந்தத்தினை பயன் படுத்தி தயாரிக்கப்படும் முறை ஒன்றை அகத்தியர் அருளியிருக்கிறார். இந்த செந்தூரம் நரை, திரை, மூப்பு ஆகியவைகளை போக்கும் என்கிறார் அகத்தியர்.

கேளப்பா காந்தம் பலம்தான் ஒன்று
கேள்மகனே அயம் பலம்தான் ஒன்று
வேளப்பா தங்கமொரு பலம்தான் தூக்கி
விசையாக மூன்றும் ஒன்றாய் உருக்கி கொண்டு
வாளப்பா கல்வமதில் பொடித்துக் கொண்டு
ஆளப்பா கண்டிடைக்கு வீரம் வாங்கி
அப்பனே இடைக்கு நிகர் சூதம் சேரே.


- அகத்தியர் -

சேர்ந்ததொரு இடைக்கு நிகர் கெந்தி சேர்த்து
திரமாக முலைப்பாலால் ஆட்டிக் கொண்டு
காத்துமே ரெண்டுநாள் ஆட்டிப் பின்பு
கருவான பழச்சாற்றால் ஆட்டி நன்றாய்
பார்த்துநீ உலரவைத்துப் பொடியதாக்கி
பண்பாகக் குப்பியிலே அரைமட்டிட்டு
கோத்துநீ பாண்டமரை உப்பைக் கொட்டி
குணமாக அதின்மேலே குப்பிவையே.


- அகத்தியர் -

வைத்த பின்பு குப்பியுட கழுத்து மட்டும்
மறைப்பாக உப்புடனே மண்ணும்கொட்டி
மெய்த்ததொரு மேல் மூடி சீலை செய்து
விசையாக வாலுகையில் எரிப்பாயப்பா
நைத்ததொரு மூன்று நாள் முத்தீயிட்டு
நலமாக ஆறவிட்டு எடுத்துப்பாரு
கைத்ததொரு செந்தூரம் முருக்கம்பூ போல்
காணுமடா செந்தூரம் பதனம் பண்ணே.


- அகத்தியர் -

பரமகுரு செந்தூரம் கணவிடைதான் கொள்ளு
நண்ணப்பா மண்டலமே கொண்டாயானால்
நரைதிரை மாற்றுமடா சட்டைபோக்கும்
விண்ணப்பா குருபதமும் ஒடுக்கம் காணும்
விசையான சிவயோகம் விருப்பம் செய்யும்
பொன்னப்பா உண்டாக்கும் செந்தூரத்தில்
பூட்டுகிற விதம் உனக்கு புகலுவேனே.


- அகத்தியர் -

காந்தம், அயம் , தங்கம் இவை மூன்றையும் தலா ஒரு பலம் வீதம் சேர்த்து உருக்கி குளிர வைத்த பின்னர் அதை நொறுக்கி கல்வதில் இட்டு அத்துடன் கடிகை அளவு வீரமும், அதன் எடைக்கு சமனான பாதரசமும் சேர்த்து இந்த மொத்த எடைக்கு நிகராக கெந்தி சேர்த்து முலைப்பால் விட்டு இரண்டு நாட்கள் அரைக்கவேண்டுமாம்.

அதன் பிறகு பழச்சாறுவிட்டு, நன்றாக அரைத்து பின் உலர வைத்து பொடியாக்கி குப்பி ஒன்றில் அரை பங்கு போட்டு, உப்பு நிரம்பிய பாத்திரத்தில் உப்பின் மேல் அந்த குப்பியை வைக்க வேண்டுமாம். பின் குப்பியின் கழுத்தளவு வரும் வரை உப்பும் மண்ணும் கலந்து கொட்ட வேண்டுமாம்.

அதன் பின்னர் அந்த குப்பியின் மூடிக்கு சீலை செய்து, வாலுகையின் உதவியுடன் எரிக்கவேண்டுமாம். அப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து எரித்து பின் ஆற விட்டு எடுத்துப் பார்த்தால் செந்தூரமானது முருங்கை பூப்போல் பூத்திருக்குமாம், அதை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த காந்த செந்தூரத்தை தினமும் பண எடைவீதம் எடுத்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் நரைதிரை மாறுவதுடன் ஒரு உடற் சட்டையையும் போக்குமாம். மேலும் சிவ யோகத்தை மனம் நாடும்படி செய்யுமாம். அத்துடன் இந்த காந்த செந்தூரத்தின் உதவியுடன் பொன்னையும் உண்டாக்கலாமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் உருவாக்கிய காந்த பாத்திரம்!

Author: தோழி / Labels: , ,

காந்தம் என்பது நமக்கு மேலை நாட்டு அறிவியல் வழியாகவே அறிமுகமானது என நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். ஆனல் பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்கள் அவற்றை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கின்றனர். அதைப் பற்றிய குறிப்புகள் நம்மிடையே இருந்தும் இத்தனை நாளாய் அவற்றை பயன்படுத்தத் தவறியவர்களாக நாம் இருந்திருக்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தமான செய்திதான்.

நேற்றைய பதிவில் சித்தர்கள் தங்களுடைய ரசவாதத்தின் ஒரு அங்கமாக காந்தத்தை பயன் படுத்திய செய்தியினையும், காந்தங்களின் ஐந்து வகைகளையும் பார்த்தோம். இந்த இயற்கை காந்தங்கள் பூமியின் அடியில் இருந்தே தோண்டி எடுக்கப் பட்டிருக்கின்றன. சாப நிவர்த்தி செய்த பின்னர் ஒரு முழ ஆழ பள்ளத்தை வெட்டி அங்கிருந்து எடுக்கப் படும் காந்தமே பயன்படக் கூடியது என குறிப்புகள் போகர் பாடலில் காணப் படுகிறது.

இயற்கையாக கிடைக்கும் காந்த கற்களைக் கொண்டு பாத்திரங்களை செய்து அதனை ரசவாத வேலைகளுக்கு பயன் படுத்தியிருக்கின்றனர் என்பது மிகவும் அபூர்வமான தகவல். நவீன அறிவியல் இயற்கை காந்தங்களைக் கொண்டு பாத்திரம் செய்யும் உத்தி எதனையும் உருவாக்கி பயன்படுத்துகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பலநூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் காந்தகற்களைக் கொண்டு பாத்திரங்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

எப்படி செய்வது என்கிற தகவலையும் போகர் தனது பாடலில் பின் வருமாறு கூறுகிறார்.

என்றதொரு மஞ்சள் நிறக் காந்தம்
ஏற்றமதாய் கிட்டாட்டால் ஊசி ஏழு
மன்றதோர்தன் பிடிக்கின்ற காந்தம் வாங்கிப்
பொடிப்பொடியாய்ப் பருப்புப் போலே நொறுக்கிக் கொண்டு
குன்றாத கிழிகட்டிக் காடி தன்னில்
கொதிக்கவைத்துப் பின்பதைத்தான் கொள்ளில் வைத்து
அன்றதையே அவித்துமேதான் எடுத்துக்கொண்டு
உலரவிட்டு நன்குசீலை செய்துகொண்டு
சிறப்பாய் மூன்றுநாட்கள் புதைத்து வைத்துப்
பின்பேதான் பலம்பத்து நிறுத்திக்கொண்டு
நன்றாய் நீயும் கனமான வீரமது
பலம்போடு பஞ்சமித்தி ரத்தைக் கூட்டி
பலம்போடு அரைத்தெல்லாம் வில்லை தட்டி
வளமான கசபுடமாயப் போட்டு எடுத்துக்
குளம்போடு ரெட்டையான துருத்தி யாலே
கூசாதே ஊதியேதான் ஓட்டில் கொட்டி
சாங்கமாக கறடுவைத்துக் குகையில் ஊதே
பின்னுமேஊ திட்டு ஐந்து தரமே தானம்
பொறுக்கினதோர் சத்தெல்லாம் ஒன்றாயக் கூட்டிக்
கண்ணுமேதான் காரமிட்டு உருக்கிக் கொண்டு
காட்டியமுன் நட்பதனில் உருக்கிச் சாய்த்துப்
பண்ணுமே தான் பதினொருக்கால் உருக்கிச் சாய்த்துப்
பாங்கான நாலிலொன்று தங்கங் கூட்டி
மண்ணுமேதான் மெழுகுகட்டிக் கிண்ணி வார்த்து
வத்து உண்ணு கற்பம்உண்ணு மகத்தாம் சித்தே.


- போகர் -

மஞ்சள் நிறக் காந்தம் அல்லது ஊசிக் காந்தத்தை சிறு சிறு தூளாக அதாவது பருப்பு அளவில் வெட்டி அதனை காடியில் கொதிக்க வைத்து அன்றைய தினமே அதை கொள்ளுடன் சேர்த்து அவித்து எடுத்து உலரவைத்த பின்னர் சீலை செய்து மூன்று நாட்கள் வரை மண்ணில் புதைத்து வைக்க வேண்டுமாம்.

பின்னர் இந்த காந்தத்தில் பத்து பலம் நிறுத்து எடுத்து அத்துடன் ஒரு பலம் வீரம்,ஒரு பலம் பஞ்சமித்திரம் சேர்த்து அரைத்து வில்லையாக தட்டி அதனை கஜபுடம் போடவேண்டும் என்கிறார் போகர். பின்னர் இந்த காந்த வில்லையை இரட்டை துருத்தி கொண்டு உருக்கி ஒரு மட்பாண்டத்தில் கொட்டி கரடு வைத்து குகையில் இட்டு ஐந்து தடவை ஊதிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக திரட்டி அதனுடன் காரம் சேர்த்து பதினோரு தடவை உருக்கிட வேண்டும் என்கிறார்.

இப்படி உருக்கிய காந்தத்துடன் நான்கில் ஒரு பங்கு தங்கம் சேர்த்து உருக்கி மெழுகினால் செய்யப் பட்ட கிண்ண அச்சில் வார்த்து எடுத்தால் காந்த பாத்திரம் தயார். இயற்கையாக சேகரிக்கப்பட்ட காந்தத்தில் இருந்து காந்த பாத்திரம் செய்வது வரை பலவேறு செய்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதன் ஊடே நுட்பமான விவரங்கள் மறைக்கப் பட்டிருப்பதை வாசித்த எவரும் உணரமுடியும்.நவீன அறிவியலின் துணை கொண்டு இதில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

இப்படி தயாரிக்கப் பட்ட பாத்திரங்கள் ரசவாத செயல்பாடுகளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இத்தகைய காந்த பாத்திரத்தில் நிரப்பப் பட்ட தண்ணீரில் எண்ணைத் துளியை விட்டால் அது பரவாதாம். மேலும் பட்டாணிக் கடலையானது கறுத்துப் போகும், பெருங்காயத்தின் வாசனை மறையும்,இந்த பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்தால் பொங்கி வழியாது, கடுக்காயின் கசப்பு நீங்கும், எத்தனை சூடான நீரும் விரைவாக ஆறி குளிரும் என பல்வேறு ஆச்சர்யங்களை அடுக்குகிறார் போகர்.

இந்த காந்தப் பாத்திரத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்தார்கள்?. விவரங்கள் நாளைய பதிவில்...!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காந்தமும்,சித்தர்களும்!!

Author: தோழி / Labels:

காந்தம் என்பதன் பொதுப் பண்புகளை நேற்றைய பதிவில் பார்த்தோம்.இனி வரும் பதிவுகளில் காந்தங்கள் குறித்து சித்தர்களின் பாடல்களில் இருந்து திரட்டப் பட்ட தகவல்களைப் பார்ப்போம்.

ரசவாதத்தில் ஒரு அங்கமாக காந்தங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. போகர் தனது “போகர் 7000” என்ற நூலில் காந்தத்தின் தன்மை, இயல்பு மற்றும் அதன் வகைகள் பற்றி பின் வருமாறு கூறியிருக்கிறார்.

"காந்தக் கல்லின் பேர் கருதக் கேளு
கருநிறமாம் வாயுவாம் காலனாகும்
சாந்தமாம் சனியனாம் தருநிற் பாஞ்சாம்
சாதகமாம் சாட்சியாஞ் சிற்சிவன்தான்
நுருந்தமா மோஞ்கியதோர் வன்னிதானா
மோங்கல் தனில் உற்பவித்த உத்தமந்தான்
நைந்தமா நயசுக்குள் குருவாய் நின்றோன்
நாடியதோர் பேரெல்லாம்ங் காந்தமாகும்"


- போகர் -

லோகாமான பாடாண மாகத் தானும்
நுணுக்கமாகப் பூமிமலை உற்ப விக்கச்
சுகமாகச் சிவன் தானும் சொல்லி விட்டார்
திவலையது தான் பொங்கி நிலமலை தன்னில்
காகமாய்த்தான் காந்தம் என்ற நாமம் ஆச்சு
பூகமாயப் பிராமுகந்தான் சும்ப கந்தான்
போரான கர்டிகந்தான் புகைநீ ராச்சே.
ஆச்சுதேபு கைநீர் தான் ஐந்து மாச்சு
அதன்விவரம் கற்காந்தம் ஊசிக் காந்தம்
பாச்சுதேதான் பச்சைக்காந்தம் அரக்குக் காந்தம்
பாங்கான மயிர்க்காந்தம் ஐந்துமாகும்


- போகர் -

போச்சுதே பிராமசுந்தான் லோகந் தன்னைப்
பிரமிக்கச் செய்விக்கும் சும்ப கந்தான்
ஏச்சுதேதான் லோகத்தை இழுத்துக் கொள்ளும்
இயலான கர்டிகந்தான் தூரப் போமே.
தூரவே தான் ஒட்டிவிடும் லோகந் தன்னைத்
திராவகந்தான் லோகத்தைத் தண்ணீ ராக்கும்
மாரவேதி ராவகந்தான் லோகந் தன்னில்
மயிர்போலே தொத்துவிக்கும் ஐந்து மாச்சு

- போகர் -

கருநிறமான இந்த கற்கள் இரும்பு உள்ளிட்ட பொருட்களை தன்னகத்தே கவரும் தன்மையுடையது என்பதால் இவை காந்தக் கல் எனப்படுகிறது.

ஐந்து வகையான காந்தங்கள் இருப்பதாக கூறும் போகர், அவற்றின் பெயர்களை பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.அவை “கற்காந்தம்", “ஊசிக்காந்தம்”, “பச்சைக்காந்தம்”,“அரக்குக்காந்தம்”, “மயிர்காந்தம்” என்பதாம்.

இரும்பினை சுழற்றுவதால் அதனை சும்பகம் என்றும், இரும்புடன் ஒட்டிக் கொள்வதால் அதனை பிராமகம் என்றும், இரும்பை தள்ளும் தன்மை இருப்பதால் அதனை கடிகம் என்றும், உருக்கி வடிப்பதால் அதனை திராவகம் என்றும், ஒடித்தால் மயிர் போல் தெரிவதால் அதனை ரோமகம் என்று பெயரிடுகிறார்.

இவை இரும்பை ஒத்த குணங்களுடன் இருந்தாலும், இவை இரும்பினை விட மேலானதும், சிறந்ததும் ஆகும் என்கிறார் போகர்.

பதிவின் நீளம் கருதி நாளை தொடர்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காந்தம் ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels: ,

சித்தர் பாடல்களில் பொதிந்திருக்கும் அறிவியல் தகவல்களை தனியே தொகுத்தெடுத்து பகிரும் இன்னொரு முயற்சியாக, இனி வரும் நாட்களில் காந்தங்களைப் பற்றி சித்தர்கள் கூறியுள்ள தகவல்களைப் பார்ப்போம். இவற்றில் பல தகவல்கள் இதுவரை பொது வெளியில் சொல்லப் படாதவையாக இருக்கும்.

காந்தங்கள் என்றால் என்ன?, ஏன் இந்த பெயர் வந்தது?, இதன் வரலாறு என்ன? என்பது மாதிரியான அறிமுகத்துடன் இந்த தொடரை துவங்குகிறேன்.

காந்தம் கிரேக்க நாட்டின் இடையன் ஒருவனால் தற்செயலாக கண்டறியப் பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த வகையில் காந்தத்தை முதல் முதலில் பயன்பாட்டில் கொண்டு வந்தவர்கள் கிரேக்கர்களே என்கிற பெருமையை நவீன அறிவியல் அவர்களுக்கு அளித்து விட்டது.

ஆனால் அதற்கு முன்னரே இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் சீனர்கள் காந்த ஊசியைக் கொண்டு திசை காட்டும் கருவிகளை உருவாக்கி இருந்தனர். இந்தியர்களும் காந்தத்தை தங்களின் பயன் பாட்டில் வைத்திருந்தனர். அதைப் பற்றி விரிவாக எழுதிட நிறைய செய்திகள் இருக்கின்றன.

காந்தம் என்பது இரும்பு அல்லது இரும்புடன் சேர்ந்த அலோகங்களை தன்னை நோக்கி இழுத்து ஒட்டிக் கொள்ளும் ஒரு வகையான திண்ம கற்கள். இவை இயற்கை காந்தம் என அறியப் படுகிறது. தற்போது இவை செயற்கையாகவும் தயாரிக்கப் படுகின்றன. இவற்றின் பயன்பாடுகள் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பினை அளிக்கின்றன.

காந்தம் என்பது பழந்தமிழ் வார்த்தை. இதற்கு ஈர்த்தல்,வலித்தல்,இழுத்தல் என பொருள் கூறலாம். இந்த காந்தத்தினை பற்றிய தகவல்களை நமது சித்தர் பெருமக்கள் விரிவாக கூறியுள்ளனர்.அவற்றின் வகைகள், பயன்கள், மகத்துவம் என பட்டியல் நீள்கிறது.

இந்த தொடரின் முடிவில் இத்தனை அரிய தகவல்களை அரசாங்கம் ஏன் ஆவணப் படுத்தி, நமது பாடத் திட்டங்களில் புகுத்திடவில்லை என்கிற கேள்வி உங்களுக்கு நிச்சயம் எழும். நமது முன்னோர்களின் பெருமையை நாமே அங்கீகரிக்காவிடில் வேறு யார் அங்கீகரிப்பார்கள்?.

சித்தரியலைப் பொறுத்த வரையில் பல்வேறு நூல்களில் காந்தம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.இந்த பதிவில் இடம் பெறும் தகவல்கள் அகத்தியர் 12000, போகர் 7000, தேரையர் வைத்தியகாவியம், கருவூரார் பலதிரட்டு, புலிப்பாணி வைத்தியம், கொங்கணவர் காவியம், அகத்தியர் ஏமதத்துவம், போகர் நிகண்டு போன்ற பல நூல்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் இந்த தகவல்களை ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம் - மின்னூல்!

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பத்தாவது படைப்பாக கருவூரார் அருளிய ”கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்” என்ற நூலை மின் நூலாக தொகுத்து உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

கருவூரார் போகரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சோழ நாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் இவர் ஊரின் பெயராலே கருவூரார் என்றழைக்கப்பட்டார். கருவூர், திருகாளத்தி ஆகிய இடங்களில் சமாதியடைந்ததாக குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

இவரது பாடல்கள் பொருளடர்ந்த வார்த்தைகளைக் கொண்டவை.இலகுவில் அவற்றின் பொருளறிவது சிரமம். இதன் பொருட்டே இவர் பாடல்களின் ஊடே விரவியிருக்கும் மறை பொருள்கள் இன்னமும் முழுமையாக அறியப் படவில்லை.

இந்த நூலைப் பற்றி கருவூரார் பின் வருமாறு விளக்குகிறார்.

"பாரப்பா யோகமொடு கண்டகங்கள்
பலகலையும் பாடினார் சித்தரெல்லாம்
நேரப்பா தொடக்கினியின் சூட்சமெல்லாம்
நிசமாக வாதகற்பந் தள்ளிச்சொன்னார்
ஆரப்பா யென்தம்பிக் கொப்புமுண்டோ
அலையாதே யிந்நூலைப் பாருபாரு"

யோகம் , கண்டகங்கள் என அனைத்தையும் பாடிய சித்தர்கள் உண்மையான வாத,கற்ப சூட்சுமங்களை மறைத்தே சொல்லியுள்ளார்கள் என குறிப்பிடும் இவர், அவற்றைத் தேடி எங்கும் அலையத்தேவையில்லை என்றும் தனது இந்த நூலை படித்தால் அவை அனைத்தும் சித்தியாகும் என்று கூறுகிறார்.

மேலும் தொடர்ந்து வாத, கற்ப செயல்முறைகள் மற்றும்
வாத,கற்ப ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை. இதற்குத் தேவையான அனைத்துவகை மூலிகை பற்றிய விவரங்கள், அவற்றின் பிரயோக முறைகள் விரிவாக இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிறது.

தமிழ் அறிந்த அனைவரும் இந்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலை மின் நூலாக தொகுத்திருக்கிறேன்.இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது இத்தகைய நூல்கள் எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது.எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.com

தொடர்புக்கு..
siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர் பாடல்களில் மறைபொருள்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் பாடல்களை புரிந்து கொள்ளும் வரிசையில் நேற்று மெய்யான இறை நிலை பற்றிய பாம்பாட்டி சித்தரின் பாடல் ஒன்றைப் பார்த்தோம். அந்த வகையில் இன்று சித்தர் பாடல்களின் உண்மையான பொருளறிவது தொடர்பான உதாரணம் ஒன்றினை பார்ப்போம்.

"செப்பரிய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்
செங்கத்திரைத் தண்கதிராய்ச் செய்துவிடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்லபம் கண்டு ஆடு பாம்பே!"


பாம்பாட்டி சித்தரின் இந்த பாடலுக்கு என்னிடம் இருக்கும் சமீபத்தைய பதிப்பில் வெளிவந்த ஒரு புத்தகத்தில் பின் வருமாறு பொருள் கூறப்பட்டிருக்கிறது.

“பூலோகம், பாதாள லோகம், சுவர்க்கலோகம் என்பன மூன்று உலகங்களாகும். இந்த மூன்று உலகங்களின் சிறப்பைச் சொல்ல ஆரம்பித்தால் அது சொல்லில் அடங்காது. அப்படிப்பட்ட மூன்று உலகங்களையும் செம்மைநிற ஒளிவீசும் பொன்னாக மாற்றுவோம். அதாவது, அவற்றை சுத்தத் தங்கமாக மாற்றிவிடுவோம் என்பதாம்.”

மேலோட்டமாய் அணுகினால் இந்தப் பொருள் சரியானதாகவே தோன்றும்.ஆனால் சித்தர்களின் பாடல்கள் மறைபொருளோடு கூடியவை, அவற்றின் பொருளறிவது தனித்துவமான கலை. இதனை குருமுகமாகவே அறிந்திட முடியும்.அந்த வகையில் இந்தப் பாடலுக்கான சரியான பொருள் பின்வருமாறு...

வாசி யோகத்தில் இரேசகம், பூரகம், கும்பம் என்கிற மூன்றும் தனித்துவமான அம்சங்கள். இவற்றை முறையாக கையாண்டு அவற்றை ஒருங்கினைக்கும் போது குண்டலினி கிளம்பி ஒளி வீசுகிறது. ஆந்த ஒளி பொன்னைப் போல பிரகாசமானதும், வெப்பம் நிறைந்ததும் ஆகும். இப்படியான வாசியோகத்தில் சிறந்த சித்தர்கள் எத்தகைய வெப்பத்தையும் கிரகித்து உடலை குளிர்விக்கும் தன்மை பெற்று விடுவார்கள்.

இத்தனை சிறப்பான வாசியோகம் கைவரும் போது எட்டு வகையான சித்துக்களின் ஒன்றான “கரிமா” கைகூடும். அதனால் எத்தனை பெரிய பொருளையும், ஏன் பூமியைக் கூட ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும். இத்தகைய வல்லபம், திறமை கொண்டவர்கள் சித்தர்கள் என்பதை உணர்ந்து குண்டலினிப் பாம்பே, நீ ஆடு என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

வர்த்தக நோக்கில் எழுதப் படும் பல நூல்களில் தெரிந்தோ, தெரியாமலோ இம்மாதிரியான அரிய தகவல்கள் வெளிவராமல் தொலைந்து கொண்டிருப்பது வருந்தத் தக்கது. இந்த உதாரணத்தை முன் வைப்பதன் மூலம் எவரையும் குறை சொல்வதோ அல்லது எவருக்கும் வருத்தம் உண்டாக்குவதோ என் நோக்கமில்லை. என்னுடைய புரிதல்களை பகிரும் ஒரு முயற்சி மட்டுமே.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...சித்தர்கள் சொன்ன பகுத்தறிவு!!

Author: தோழி / Labels:

சித்தர்களின் பாடல்களின் வழியே பயணித்தால், இறைநிலை என்பதை எவரும் எய்திடக் கூடிய ஒன்றாகவே புரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த பாடல்களில் இறை நிலை பற்றிய தேவையற்ற கற்பனா வாதங்களோ, மிகைப்படுத்திய புகழுரைகளையோ, அலங்காரங்களையோ அநேகமாய் காண முடியாது. ஒரு சிலபாடல்கள் இதற்கு விதிவிலக்கு,இவைகூட பிற்காலத்தில் இடைச் செருகலாய் வந்திருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

சித்தர்களின் பார்வையில் கடவுள்தன்மை என்பது மனித மனத்தின் செம்மைப் படுத்தப் பட்ட ஒரு உயர் நிலைதான் எனவும், அத்தகைய மேலான மனப் பக்குவத்தை தொடர் பயிற்சியின் மூலம் எவரும் அடைய முடியும் என்பதை வலியுறூத்தியிறுக்கின்றனர். இதற்கு பலபாடல்களை உதாரணம் காட்டிட முடியும்.

இறைநிலை,இறைவன் என்கிற தத்துவார்த்தங்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடும் ஆன்மீகத்தை கடுமையாக சாடியுமிருக்கின்றனர். இத்தகைய தெளிவுகளைக் கூறிடும் பாடல்களை அன்றைய பெரும்பான்மை கருத்தாளார்கள் நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் இவை பொது வெளிக்கு வருவதை முனைந்து தடுத்திருக்கின்றனர். இதனையும் மீறி சில பாடல்கள் காலம் கடந்து நம்முடன் நிற்கின்றன.

அந்த வகையில் இன்று பாம்பாட்டி சித்தரின் பாடல் ஒன்றைப் இன்றைய பதிவில் பார்ப்போம்.

"பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமிவலம் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவே
அயைடலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே!"


இறைவனுக்கு பூசை செய்கிறேன் பேர்வழி என சதா சர்வகாலமும் ஏதேனும் சடங்குகளை செய்வதாலும், அவரைப் பார்த்து புண்ணியம் தேட போகிறேன் என ஊர் ஊராய் கோவில் கோவிலாய் சுற்றுவதால் என்ன பலன் கிடைத்து விடும் என ஆன்மீகத்தின் அடிப்படையை இந்தப் பாடலில் கேள்விக்குள்ளாக்குகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இறை நிலை என்பது இவர்கள் எண்ணுவதைப் போல ஒரு மனித உருவிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அருள் பாலிக்கிற அம்சமில்லை. ஆதியும், அந்தமும் இல்லாத எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தத்துவ நிலை. தோற்றமில்லாத தோற்ற நிலை, எங்கும் நிறைந்திருக்கும் அத்தகைய நிலையினை நமக்குள்ளேயும் உணரமுடியும்.

இப்படியான இறை நிலையை பூசை செய்வதாலும், புண்ணியம் தேடி சுற்றுவதாலும், சமய நூல்களை படிப்பதாலும் அடைய முடியாது.தேவையற்ற சஞ்சலங்களுக்கு பலியாகாமல் சுயநலம் கடந்த பொது நலத்தோடு வாழ்ந்தால் எங்கும் நிறைந்திருக்கும் இறைநிலையினை உணர்ந்து அனுபவிக்க முடியும்.அந்த நிலைக்கு தன்னையும் உயர்த்திக் கொள்ள முடியுமென்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
அருட் புலம்பல் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels: ,

தமிழ் கூறும் சித்தர்கள் அனைவருமே எளிமையான பின்புலங்களில் இருந்தே வந்திருக்கின்றனர். சமூகத்தின் எளிய ஒடுக்கப் பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளாகவே சித்தர்களை தமிழ் சமூகம் ஆணவப் படுத்தியிருக்கிறது. எதிலும் விதி விலக்கு உண்டே!

இந்த கருத்தியலுக்கு விதிவிலக்கானவர்கள் இரண்டு பேர் ஒருவர் வணிகக் குடும்பத்தில் பிறந்து பெரும் செல்வம் ஈட்டி அதில் திளைத்த பட்டினத்தார். மற்றவர் பத்திரகிரியார் அரசராக இருந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. பட்டினத்தாரை தனது குருவாகக் கொண்டு அரச சுகபோகங்களைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முக்தி அடைந்ததாக கருதப்படும் பத்திரகிரியார் எழுதிய அருட்புலம்பல் எனப்படும் மெய்ஞான புலம்பல் என்கிற நூல் சித்தர் நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. இந்த பாடல்களை ஏற்கனவே மின்னூலாக்கி இங்கே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அந்த நூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

அருட் புலம்பல் என அறியப் படும் இந்த பாடல்கள் எளிய தமிழில்,முதல் வாசிப்பில் எளிதாய் பொருள் உணரும் வகையில் எழுதப் பட்டிருப்பது சிறப்பு. எனினும் மீள் வாசிப்புகளில் மட்டுமே இந்த எளிய சொல்லாடல்களின் பின்னிருக்கும் விரிவான தத்துவத்தினை அருமைகளை உணர்ந்திட இயலும்.

உதாரணத்திற்கு இந்த பாடலை பார்ப்போம்...

"ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்?"

இந்த பாடல் முதல் வாசிப்பில் ஆணவத்த்தை அடக்கி,ஐம்புலன்களை ஒடுக்கி இறைவனை அடைவது எக்காலம் என்று பொருள் விளங்கும்.

இதையே சற்றே நுணுகி ஆராய்ந்தால், ஆங்காரம் என்ற சொல்லுக்கு தான் என்கிற மமதையை குறிப்பதை அறியலாம். தான் என்கிற அஹங்கார நிலை அழியும் போதே ஐம்புலன்களும் அதில் கரைந்து போய்விடுகிறது.

தூங்காமல் தூங்கி என்கிற வார்த்தைகள் வாசிக்க எளியதாய் இருந்தாலும், பத்திரகிரியாரின் இந்த சொல்லாடல் மிகவும் புதுமையானது. தூங்காமல் தூங்கி என்கிற வார்த்தைக்கு நேரடி பொருள் தேடுவது சிரமம். என்னுடைய புரிதலில் இதனை சுயமறிந்த விழிப்பு நிலை என்று கருதியிருக்கிறேன்.

ஆக, தான் என்கிற அகங்கார நிலையழித்த விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே உயர்ந்த சுகமான முக்தி நிலை சாத்தியமாகும் என்பதை பாடலின் வழியே சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறார் பத்திரகிரியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மாந்திரிகம் - நிறைவாய் சில வரிகள்!

Author: தோழி / Labels:

வதைத்தலும், வதைக்கப் படுதலுமே மாந்திரிகம் என்கிற பொதுவான அச்ச உணர்வை களைவதும், அவற்றின் அடிப்படைகள் மற்றும் அவசியங்கள் குறித்த புரிதலை பகிர்வதுமே இந்த தொடரின் ஆரம்ப நோக்கமாய் இருந்தது.

மேலும், சித்தரியலில் மாந்திரிகம் என்பது மேலான முக்தி நிலையை அடையும் இரண்டு வழிகளில் ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. இது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும் என்பதால் சித்தர்கள் அணுகிய மாந்திரிகத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் கூறுகளை மட்டும் தொடராய் எழுதிட நினைத்தேன். அந்த வகையில் கடந்த 47 நாட்களாய் தொடர்ந்த இந்த தொடரை இன்றுடன் இடை நிறுத்திக் கொள்கிறேன்.

மாந்திரிகம் என்பது வெறும் 25 பதிவுகளுக்குள் அடங்கி விடுகிற விஷயமில்லை. இதன் எல்லைகள் விஸ்தாரமானது, அவற்றை விவரிக்க முனைந்தால் வருடக் கணக்கில் எழுதிக் கொண்டிருக்கலாம். எனவேதான் முன்னரே கூறியபடி சித்தர்களின் அஷ்டகர்மங்கள் என்பதன் அடிப்படை கூறுகளை மட்டுமே இதுவரை வாசித்திருக்கிறீர்கள். எதிர் காலத்தில் குருவருள் கூடி வந்தால் இந்தக் கலையினைப் பற்றி நானறிந்த மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொள்வேன்.

மாந்திரிகம் என்பது உலகின் பல பாகங்களில் வெவ்வேறு வகையில் புழக்கத்தில் இருந்தாலும் இதன் நிரூபணத் தன்மை குறித்த கேள்விகளும் கேலிகளும் நிறையவே இருக்கின்றன. காரண காரியமில்லாமல் இத்தனை விஸ்தாரமாய் மாந்திரிகம் பற்றி இத்தனை பேர் எழுதியிருக்க முடியாது. இன்றைய சூழலில் இதன் உண்மைத் தன்மைகளை வெளிக்கொணர நிறைய ஆய்வுகளும், விவாதங்களும் தேவைப் படுகின்றன. தமிழ்ச் சூழலில் இதனை யாரும் செய்கிறார்களா என தெரியவில்லை. என்னுடைய வாசிப்பனுபவத்தில், அவதானத்தில் இதனை உளவியல் சார்ந்த ஒரு அறிவியல் கலையாகவே கருதுகிறேன்.

அஷ்டகர்மங்கள் என்பது எட்டு வகையான மாந்திரிக முறையினைப் பற்றி கூறினாலும் இதன் வரிசை பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலை என்கிற தகவல் மட்டும் காணக் கிடைக்கிறது. ஆகவே எதனை முதலில் துவங்குவது எதனை தொடர்வது என்பது பற்றிய தகவல் ஏதும் இருக்குமா என பாடல்களில் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு நிலையில் சித்தியடைந்த பின்னரே அடுத்த நிலையை தொடர வேண்டும் என்பது மட்டும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மாந்திரிகம் என்பதை குருமுகமாகவே பெற வேண்டும் என்பது கட்டாய அடிப்படை விதியாகும். தேர்ந்த ஒரு குருவினால் மட்டுமே தனது சீடனை இந்தக் கலையில் வழிநடத்த முடியும் என் சித்தர்கள் உறுதியாக கூறியிருக்கின்றனர். சரியான குருவினை எப்படித் தேடி அடைவது என்பது குறித்து முந்தைய பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை தேடிப் படித்து முயற்சிக்கலாம். குருவானவர் அன்பு நிறைந்தவர், அக்கறையுடன் வழி நடத்துபவர் என்பதால் அவரிடம் முழுமையாக நம்மை ஒப்புக் கொடுத்தால் மட்டுமே குருவருளைப் பெறமுடியும்.

சரியான உடல் மற்றும் மன பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த கலையினை முயற்சிக்க வேண்டும் எனவும் சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கான வழி முறைகள் சித்தர் பாடல்களில் கூறப் பட்டிருக்கின்றன. இருப்பினும் குருவின் வழி காட்டுதலில் இந்த பக்குவத்தை அடைவதே சிறப்பு. குருவுக்கு மிஞ்சிய வித்தையில்லை என்பதை மீண்டும் இந்த இடத்தில் வலியுறுத்திட விரும்புகிறேன்.

திருமூலர், அகத்தியர் உள்ளிட்ட மற்ற சித்தர் பெருமக்களும் மாந்திரிகம் குறித்து விரிவாகவே எழுதியிருக்கின்றனர். அவற்றை எல்லாம் தொகுப்பது என்பது ஒரு வாழ்நாளின் பணியாக இருக்கும். இந்த தொடரினை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க கருவூரார் அருளிய மாந்திரிக தகவல்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன்.

இந்த தொடரின் நெடுகே நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் வாயிலாக தங்களின் கேள்விகளை எழுப்பியிருந்தனர். தனித் தனியே பதிலளிப்பதை விட இந்த பதிவின் வாயிலாக பொதுவான சுருக்கமான எனது புரிதல்களை பதிலாகபட்டியலிடுகிறேன்.

மாந்திரிகம் பற்றிய வாசிப்பனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. அதைத் தாண்டிய செயல் முறைகளில் அனுபவம் ஏதுமில்லை. இப்போதைக்கு எனக்கு அதில் ஆர்வமும் இல்லை.

பாடல்களின் பொருளை பிரித்து எளிய தமிழில் பகிர்வது மட்டுமே எனது நோக்கம். இதை பிறருக்கு சொல்லித் தரும் அளவுக்கெல்லாம் நான் தகுதியானவள் இல்லை.

சித்தர்களின் மாந்திரிகம் என்பது வேறு, மலையாள மாந்திரிகம் என்பது வேறு... அடிப்படைகள் ஒன்றாக இருந்தாலும் நோக்கம் மற்றும் செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். மந்திரங்களை உச்சரிக்கும் முறைகளைப் பற்றி இந்த தொடரில் பகிர்ந்திருக்கிறேன்.

மாந்திரிக கலை அறிவியல் ரீதியாக நிருபிக்கப் படாத கலை என்பதை இந்த தொடரின் துவக்கம் முதல் நெடுக கூறி வந்திருக்கிறேன். நிரூபிக்கப் படாத வரையில் எதுவுமே விமர்சனத்துக்கும் விவாதத்திற்கும் உரிய ஒன்றுதான். அதில் எனக்கு எப்போதும் மாற்றுக் கருத்து இல்லை. மேலதிக ஆய்வுகளும் விவாதங்களும் நடந்தால் மட்டுமே இந்த கலை குறித்த நியாயமான தெளிவுகள் நமக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

மூட நம்பிக்கை என ஒன்றை ஏன் நிராகரிக்கிறோம் என்பதற்கும் கூட பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும். அதுவே பகுத்தறிவு!, சிறு துரும்பு கூட பல் குத்த உதவுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்தி சந்தி வேளை என்பது சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரங்களை குறிக்கிறது.

சித்தரியல் தொடர்பான வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். தொடரும் ஒத்துழைப்புக்கும்,ஆதரவிற்கும் நன்றி நண்பர்களே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மாரணம் தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் அஷ்டமாகர்மங்களில் எட்டாவது கலையான மாரணம் மற்ற பிற வகைகளை விட ஆபத்தானது. தான் நினைக்கிற ஒரு மனிதனுக்கு மரணத்தை உண்டு பண்ணக் கூடிய சாத்தியமுள்ளது இந்தக் கலை. மனதளவில் உயர்ந்த பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே இத்தகைய கலையினைப் பயிலவும், சித்தியடையவும் வாய்ப்புக் கிட்டும். இந்த மாந்திரிக முறைகள் எதுவும் இதுவரை அறிவியல் ரீதியாக நிருபிக்கப் படவில்லை. மிகவும் ஆபத்தான இந்த கலையின் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே இங்கே தருகிறேன். எனவே ஆர்வம் மிகுதியால் இங்கே தந்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு யாரும் எதையும் முயற்சிக்க வேண்டாம் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இனி மாரண முறைக்கான யந்திரம் வரைவதைப் பற்றி பார்ப்போம். கருவூரார் தனது பாடலில் இந்த யந்திரத்தினை வடிவமைக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

பாரேநீமாரணத்தின் போக்குச்சொல்வேன்.
பாலகனேபகராதே பாரிலேதான்
சீரேநீயிருந்திடுவாய்க் கொடுமையொத்த
செய்பாகங்கைபாகங் கண்டுமேதான்
கார்மேகம்போலேநீ யாடிப்பாரு
கழறாதேகருமிகட்கு யிந்தமார்க்கம்
பேர்பெற்றஎன் சீஷா வெகுசுருக்கு
பேணிப்பாரிருபத்தந் தரைதான்போடே.

போட்டுநீஐங்கோண அறுகோணந்தான்
புகழானநாற்கோண முக்கோணந்தான்
நீட்டமாய்வட்டமது போடுபோடு
நினைவாகமசிவயந வென்றுமாட்டு
கோட்டுகளில் - ஈம - நம் - லம் - சௌம்போடு
கொகைனேஐம்என்ற பீஜம்போடு
தாட்டிகமாதய் கிலியும் - சவ்வும் - ஸ்ரீஜம்
தன்மையடன் - ஐயும் - என்ற - பீஜம்போடே.

பீசமதுபோட்டவுடன் சொல்லக்கேளு
பெருமையாம் மூன்றாவ தணைபிடித்து
வாசகமாய்மாறிவிடு முன்போலையா
வரிசையாய்பதினொன்று நாலுபதினைந்து
நேசமாய்பனிரெண்டு ஒன்பதையா
நீகுழந்தாய்நாலாவ தணைபிடித்து
கூசமின்றிமாறிவிடு அறைகடோறும்யயய
குற்றமில்லைமாரணந்தான் சித்தியாச்சே.


இந்த பாடல்களில் குறிப்பிடப்பட்ட யந்திரத்தினை படியெடுத்தால் கீழே உள்ள படத்தினைப் போல யந்திரம் அமையும்.


இந்த யந்திரத்தினை செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென சில பிரத்யேக முறைகள் இருக்கின்றன. அதன் படியே யந்திரங்கள் கீறப்பட் வேண்டும்.இவ்வாறு கீறப்பட்ட யந்திரத்தினை வைத்து மாரண முறையில் சித்தியடையத் தேவையான தந்திரத்தை இனி பார்ப்போம்.

குருவருளுடன் கூடிய ஒரு புதன் கிழமை நாளில், நாக மணிகளால் ஆன மாலையை அணிந்து கொண்டு அத்திப் பலகையால் ஆன ஆசனத்தில் தெற்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தை கருப்பு வண்ணப்பட்டுத் துணியில் வைக்க வேண்டும்.

பின்னர் மாரணத்திற்கான மூல மந்திரமான “ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா” என்ற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து கடலை மலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர மாரணம் சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

நாளையுடன் இந்த மாந்திரிகம் தொடரினை நிறைவு செய்ய இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மாரணம்.

Author: தோழி / Labels:

சித்தர்களின் மாந்திரிகத்தின் கடைசி வகையான மாரணம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இது வரையில் பார்த்த ஏழு வகைகளை விட அதி தீவிரமானதும், உயிராபத்தை தரக் கூடியது இந்த கலை. ஆம் ஒருவருக்கு மரணத்தையே தந்துவிடும் வல்லமை கொண்டது மாரணம்.

மாரணம் என்பது மரண துன்பத்தை தருவது என்று அர்த்தமாகிறது. இத்தனை ஆபத்தான முறையில் சித்தியடைய வேண்டுமெனில் உயரிய மனப் பக்குவம் உடையவர்களாய் இருத்தல் அவசியம். குருவானவர் தனது எந்த ஒரு சீடனுக்கும் ஆகக் கடைசியில்தான் இந்த கலையினை போதிக்கிறார்.

மாரண கலையில் சித்தியடைய தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி இனி பார்ப்போம்.

மாரணத்திற்கான அதி தேவதை எமன்.

மாரணத்திற்கான மூல மந்திரம் “ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா” ஆகும்

ஒரு புதன் கிழமையன்றே இதற்கான பயிற்சியினை துவக்கிட வேண்டும்.

தெற்கு திசையினை நோக்கி அமர்ந்தே மாரணத்திற்கான பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

நாகமணி மாலையினை அணிவதற்கும், செபிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

அத்தி மரத்தின் பலகையினை அமரும் ஆசனமாக பயன்படுத்த வேண்டும்.

கடலை மலரைக் கொண்டு யந்திரத்தினை அர்ச்சிக்க வேண்டும்.

செப்பு அல்லது வெள்ளியிலான தகட்டில் மாரண யந்திரத்தினை கீறிட வேண்டும்.

யந்திரத்தினை வரைவதைப் பற்றியும் அதனைக் கொண்டு சித்தியடையத் தேவையான தந்திரம் பற்றியும் நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வித்துவேடணம் தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,

வித்துவேடணம் என்பது குறிப்பிட்ட இரண்டு நபர்களிடையே கருத்து வேற்றுமைகளை உருவாக்கி அவர்களின் உறவினை பிரிப்பதே ஆகும்.தற்காலத்தில் மலையாள மாந்திரிகர்கள் இந்த முறையில் வெற்றிகரமாக செய்யப் படுவதாக தெரிகிறது.

மற்ற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறையிலும் யந்திரம் முக்கியமானது.நான் பார்த்தவரையில் அச்சு ஊடகங்களில் இந்த யந்திரங்களின் படங்களை இதுவரையில் யாரும் தந்ததாக தெரியவில்லை. அநேகமாய் இங்குதான் முதல் முதலாய் இந்த யந்திரங்கள் பொது பார்வைக்கு வைக்கப் படுகிறது என நினைக்கிறேன்.

வாருங்கள் இந்த யந்திரங்களை எவ்வாறு அமைகக் வேண்டும் என பார்ப்போம். கருவூரார் பின் வரும் தனது பாடல்களில் யந்திர வடிவமைப்பைப் பற்றி விளக்குகிறார்.

பிரித்தேனேவித்து வேஷணந்தானையா
பிசகாதுயிருப்பதைந் தரைதான்கீரி
வருத்தமின்றியறுகோணம் முக்ககோணந்தான்
வகையானவைங்கோணம் நாற்கோணம்பார்
பொருத்தமாய்வட்டமது போடுபோடு
பொங்கமுடன்சிவயநம வென்றுபாட்டு
கருத்துவைத்து நம் -சவ்வும் - ஈம் - லம்போடு
கலங்காதே - ஐம்என்றபீஜம்போடே.

போட்டுவிடு உ - ஒ - இ - எ - அ - போடு
புகழானசவ்வும் ஸ்ரீயும் கிலியும் - றீயும்
நீட்டமாய் ஐயும்என்ற பீஜம்போடு
நீமகனே மூன்றாவ தணையைமாறு
தாட்டிகமாய்நாலுபனி ரெண்டுபோடு
தாழ்வின்றிபதினொன்று பதினைந்தப்பா
நாட்டுவாய்க்கடை வீட்டில் ஒன்பதையா
நாலாவதணைபிடித்து மாறுமாதே
.

இந்த பாடல்களில் குறிப்பிடப்பட்ட யந்திரத்தினை படியெடுத்தால் கீழே உள்ள படத்தில் உள்ளதைப் போல வரும். இந்த யந்திரமானது வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறப்பட வேண்டும்.இந்த வித்துவேடண யந்திரத்தை குருவருளுடன் கூடிய ஒரு சனிக் கிழமை நாளில், எட்டி மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு எட்டிப் பலகையால் ஆன ஆசனத்தில் வடமேற்கு திசையை நோக்கி அமர்ந்திருந்து கழுதைவண்ணப்பட்டுத் துணியில் வைக்க வேண்டும்.

இப்போது வித்துவேடணத்திற்கான மூல மந்திரமான “ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா” என்ற மந்திரத்தினை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து, காக்கனமலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர வித்துவேடணம் சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வித்துவேடணம்

Author: தோழி / Labels:

மாந்திரிகம் தொடர் தனது ஏழாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.மாந்திரிகத்தின் நீள எல்லைகள் மிகவும் விஸ்தாரமானவை.அதை விளக்கிச் சொல்ல முற்பட்டால் மேலும் பல வாரங்கள் தேவைப் படும். எனினும் வாசிப்பின் சுவாரசியம் கருதி இந்த வாரத்துடன் இந்த தொடரினை நிறைவு செய்திட உத்தேசித்திருக்கிறேன்.

சித்தர் பெருமக்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றாகவும், ஆயகலைகள் 64ல் ஒன்றாகவும் அறியப்படும் வித்துவேடணம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

வித்துவேடணம் என்பது ஒருவருக்கொருவர் தீரா பகையை உண்டாக்கிப் அவர்களை பிரிப்பது ஆகும். எத்தகைய காரணங்களுக்காக இந்த கலை சித்தர் பெருமக்களால் கைக்கொள்ளப் பட்டது என்பது குறித்தான விளக்கங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

வித்துவேடண பயிற்சி முறைக்கான முன் தயாரிப்புகளைப் பற்றி இனி பார்ப்போம்.

வித்துவேடணத்திற்கான அதிதேவதை வாயுதேவன் ஆவார்.

வித்துவேடணத்திற்கான மூல மந்திரம் “ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா” ஆகும்.

இந்த பயிற்சியினை ஒரு சனிக் கிழமையில் துவங்கிட வேண்டும்.

வடமேற்கு திசையினை நோக்கி அமர்ந்து பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

எட்டி மணியினால் ஆன மாலையினை அணிவதற்கும், மந்திரத்தினை செபிக்கவும் பயன்படுத்திட வேண்டும்.

எட்டி மரத்தின் பலகையினை ஆசனமாக பயன்படுத்திட வேண்டுமாம்.

காக்கனம மலர் கொண்டே யந்திரத்தினை அர்ச்சிக்க வேண்டும்.

அணிவதற்கும், மூலகங்களுக்கு அணிவிக்கவும் கழுதைவண்ண பட்டினை உபயோகிக்க வேண்டும்.

யந்திரம் தயாரிப்பதைப் பற்றியும் அதனைக் கொண்டு சித்தியடையத் தேவையான தந்திரம் பற்றியும் நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பேதனம் தொடர்ச்சி..

Author: தோழி / Labels: ,

தான் நினைக்கிற ஒருவரின் புத்தியை முற்றாக பேதலிக்கச் செய்திடும் தீவிரத் தன்மை வாய்ந்தது இந்த பேதனம் எனும் மாந்திரிக கலை.

எந்த காரணத்திற்காக இந்த கலையினை சித்தர் பெருமக்கள் கைகொண்டார்கள் என்பதற்கான சரியான விளக்கங்கள் நான் தேடிய வரையில் கிட்டவில்லை. விவரம் அறிந்தவர்கள் விளக்கினால் நன்றியுடையவளாயிருப்பேன்.

பேதன முறைக்கான யந்திரம் கீறுவதைப் பற்றி கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.

குணமாகும்பேதனமாஞ் சித்துகேளு
கொற்றவனேயிருபத்தைந் தரைதான்கீறி
மணமுள்ளோய்ஐங்கோணம் நாற்கோணவட்டம்
மயங்காதேயறுகோணம் முக்கோணம்பார்
கணக்காக ம - வ - ந - சி - ய வென்றுமாட்டு
கலங்காதே ஈம் - லம் - ஐம் - நம் - சௌவும்தான்
பிசகாமல்கிலியும் றீயும் - ஐயும் - தானே.

தானேதான் சவ்வும்ஸ்ரீயும் - பீஜம்போடு
தன்மையாய்மூன்றாவ தணையைமாறு
கோனேகேள்பதினொன்று பதினைந்தையா
கொற்றவனேஒன்பதுவும் நாலுபோடு
தேனேபார்கடைவீட்டில் பனிரெண்டாகும்
தெளிவாகதான்வரைந்து செப்பக்கேண்மோ
மானேநீநாலாவ தணைபிடித்த
மாறிவிடுபேதனயந் திரந்தானாச்சு.


இந்த பாடல்களில் கூறியுள்ள படி படியெடுத்தால் யந்திரம் கீழே படத்தில் உள்ளதைப் போல அமையும்.இனி இந்த யந்திரத்தைக் கொண்டு பேதன முறையில் சித்தியடைவதற்கான தந்திரத்தினை பார்ப்போம்.

குருவருளுடன் கூடிய ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில், வெண்முத்து மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு, பேய்த்தேத்தான் பலகையால் ஆன ஆசனத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தினை வெண்பட்டுத் துணியில் வைத்திட வேண்டும்.

பேதன மூலமந்திரமான “ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா”என்ற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து ஊமத்தம் பூவினால் யந்திரத்தை அர்ச்சித்துவர சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பேதனம்.

Author: தோழி / Labels:

சித்தர்களின் அட்டகர்மங்களில் ஆறாவதாக கூறப்பட்டிருக்கும் பேதனம் என்கிற மாந்திரிக கலையினைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முன்னரே இந்த வேண்டுகோளை உங்களிடம் வைத்திருந்தாலும் மீண்டுமொரு முறை நினைவுறுத்துவது அவசியம் என்பதால்...

நண்பர்களே! மாந்திரிகம் தொடர்பாக இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தையும் ஒரு தகவல் பகிர்வு என்கிற அளவில் மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.இவற்றை செயல்படுத்துவதில் நிறைய நுட்பங்கள் பொதிந்திருக்கின்றன. தேவையற்ற விஷப் பரிட்சைகள் கடுமையான துன்பத்தினை கொண்டுதந்து விடலாம்.

பேதனம் என்பது ஒருவரின் சித்தத்தினை முற்றாக குலைத்து அவரின் நினைவழித்து அவரை பேதலிக்க செய்வதாகும். மிகவும் ஆபத்தான ஒரு மாந்திரிக கலையாக இது அறியப் படுகிறது. இதன் பொருட்டே பேதனம் குறித்த தகவல்கள் காலம் காலமாய் முற்றாக மறைக்கப் பட்டிருந்தன.

பேதன முறையில் பயிற்சியினை துவங்குதற்கு முன்னர் தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

பேதனத்திற்கான அதிதேவதை குபேரன்

இந்த முறைக்கான மூல மந்திரம் “ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா” ஆகும்.

பயிற்சியினை ஒரு ஞாயிற்றுக் கிழமையன்றே துவங்கிட வேண்டும்.

வடக்கு திசை நோக்கி அமர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

வென்முத்தால் ஆன மாலையினை செபிக்கவும், உடலில் அணியவும் பயன்படுத்த வேண்டும்.

பேய்தேய்த்தான் மரத்தின் பலகையையே ஆசனமாய் பயன் படுத்திட வேண்டும்.

ஊமத்தம் பூவினை யந்திரத்தினை அர்ச்சிக்க பயன்படுத்திட வேண்டும்.

வெள்ளை பட்டுத் துணியினை ஆடையாகவும், மூலகங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்திட வேண்டும்.

வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் பேதனத்திற்கான யந்திரத்தினை கீறிட வேண்டும்.

இந்த யந்திரம் தயாரிக்கும் முறையினையும் அதைக் கொண்டு சித்தியடையும் தந்திரம் பற்றி நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆக்ருசணம் தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றான ஆக்ருசணத்திற்கு தேவையான முன் தயாரிப்புகளை முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று ஆகர்சண யந்திரத்தினை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றியும் அதனைக் கொண்டு சித்தியடையத் தேவையான தந்திரத்தினையும் பார்ப்போம்.

ஆக்ருசண யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிட வேண்டுமென கருவூரார் கூறுகிறார். மேலும் இந்த யந்திரத்தின் அமைப்பு எத்தகையது என்பதை பின் வரும் பாடல்களில் விளக்குகிறார்.

இல்லையாமாக்ருஷ்ண சித்தைநன்றாய்
எடுத்துரைப்பேனிதக்கமாதா யுன்றனக்கு
தொல்லையறுமிருபத்தைந் தரையைக்கீறி
சுந்தரனேநாற்கோணம் வட்டம்போடு
எல்லையாமறுகோண முக்கோணந்தான்
எழுதுவாய்ஐங்கோணம் வரிசையாய்ப்பார்
நல்லதோர்வநசியம வென்றுமாட்டு
நயமான லம் - மை; - சௌவும் - வையே.

வைப்பாயேஈசம்என்ற பீஜம்போடு
வகையாக எ - அ - உ - ஒ - இ - மாட்டு
கைப்பின்றி றீயும் - ஐயும் - சவ்வும் - ஸ்ரீயும்
கைதவமாய்க்கிலியும் என்றதனில்மாட்டு
தப்பின்றிமூன்றாவ தணைபிடித்து
சாங்கமாய்முன்போல மாறிக்கொண்டு
துப்புநேரிதழானே பதினைந்துபோடு
துய்யாகேள்ஒன்பதாய் நாலுபோடே.

போடவாய்ப்பனிரெண்டு பதினொன்றாகும்
பொங்கமுடன்நாலாவ தணையைமாறு
நீடியெயரைதோறும் முன்போல்மாறு
நீணிலத்திலுனைப்போல வுண்டோசித்து
வாடியேபோகாதே கரவாய்ப்பாரு
வையகத்திலாக்ருஷ்ணந்தா னுனக்கேசித்தி
கோடியிலேஒருவனல்லோ கண்டுதேவர்வன்
கோணாதுயில்வழியைக் கூர்ந்துபாரே.


இந்த பாடல்களில் உள்ள தகவல்களைக் கொண்டு வரையப் பட்ட யந்திரம் கீழே படத்தில் உள்ளதைப் போல இருக்கும்.வாருங்கள் இனி இந்த யந்திரத்தைக் கொண்டு சித்தியடையும் வழியினைப் பார்ப்போம். குருவருளுடன் கூடிய ஒரு வெள்ளிக் கிழமை நாளில் சங்கு மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு வெண்நாவல் பலகையால் ஆன ஆசனத்தில் மேற்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தை ஆந்தைவண்ணப்பட்டுத் துணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஆக்ருசண மூலமந்திரமான “ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் தொடர்ந்து இடைவெளி இன்றி செபித்து, அரளி மலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர ஆக்ருசணம் சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆக்ருசணம்.

Author: தோழி / Labels:

சித்தர்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றான ஆக்ருசணம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆக்ருசணம் என்பது பிறரை முற்றிலுமாய் ஆக்கிரமித்து தனக்கு அடிபணியச் செய்வதாகும். இது சக மனிதரில் துவங்கி விலங்குகள், தேவதைகள் என பட்டியல் நீள்கிறது. பொதுவில் இந்தக் கலையின் மூலம் நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றனர்.

சித்தர்களைப் பொறுத்தவரையில் இந்தக் கலையானது அவர்களின் எல்லையற்ற தேடலில் துணை நிற்கும் ஒரு தந்திர சாதனமாகவே கருதப் பட்டது.

பிற மாந்திரிக கலைகளைப் போலவே ஆக்ருசணத்திற்கும் நிறைய முன் தயாரிப்புகள் தேவையாகிறது.

ஆக்ருசணத்திற்கான அதிதேவதை வருணன் ஆவார்.

இந்தக் கலைக்கான பயிற்சியினை ஒரு வெள்ளிக் கிழமையன்றே துவங்கிட வேண்டும்.

ஆக்ருசணத்திற்கான மூல மந்திரம் “ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா” என்பதாகும்.

மேற்கு முகமாய் அமர்ந்தே இந்த பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

வெண்நாவல் மரத்தின் பலகையினையே ஆசனமாய் பயன்படுத்திட வேண்டுமாம்.

அணிவதற்கும், செபிக்கவும் சங்கு மணியினாலான மாலையினை பயன்படுத்திட வேண்டும்.

அரளிப் பூவினை யந்திரத்தினை அர்ச்சனை செய்வதற்கு பயன்படுத்திட வேண்டும்.

ஆந்த வண்ண பட்டினை அணிவதற்கும், மூலகங்களுக்கு அணிவிப்பதற்கும் பயன்படுத்திட வேண்டும்.

ஆக்ருசணத்திற்கான யந்திரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிட வேண்டும்.

இத்தனை முன் தயாரிப்புகளுடன் முக்கியமான யந்திரத்தினை வரைவது பற்றியும் அதனைக் கொண்டு இந்த கலையில் சித்தியடைவது பற்றியும் நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உச்சாடனம் தொடர்ச்சி..

Author: தோழி / Labels: ,


உச்சாடனம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் கலையில் சித்தியடைவதை கூறுகிறது. சப்தங்களுக்கு அதிர்வுகள் உண்டு என்பதன் அடிப்படையில், இந்த சப்தங்களை முறையாக கையாளுவதன் மூலம் உடலிலும், உள்ளத்திலும், சுற்றுச் சூழலிலும் குறிப்பிடத் தக்க விளைவுகளை உண்டாக்கலாம் என்கிற அறிவியலின் அடிப்படையில் அமைந்தது இந்தக் கலை. இதனை அறிவியல் ரீதியாக நிறுவிட சில முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வறிக்கைகளை இணையத்திலும் கூட வாசித்தறியலாம்.

உச்சாடன கலையில் சித்தியடைய தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.அவை அனைத்தும் சித்தர்களின் பாடல்களில் இருந்து பெறப் பட்ட தகவல்கள். இன்றைய பதிவில் மிக முக்கியமான முன் தயாரிப்பான யந்திரம் உருவாக்குதவதைப் பற்றியும் அதனைக் கொண்டு செய்ய வேண்டிய தந்திர முறையினையும் பார்ப்போம்.

இந்த முறைக்கான யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்பாலான தகட்டில் கீறிட வேண்டுமென்கிறார் கருவூரார். மேலும் இதனை எவ்வாறு அமைப்பது என்பதைப் பற்றி பின் வருமாறு விளக்குகிறார்.

ஏற்றினேன்உச்சாடன சித்துகேளு
என்மகனேயிருபத்தைந் தரையினுள்ளே
போற்றியேமுக்கோணம் வட்டம்போடு
புகழ்பெரியவைங்கோண மறுகோணந்தான்
பாற்றால்போல் நாற்கோணம் பரிந்துபோடு
பாலகனேமயநசிவ வரைந்துபோடு
நாற்றிசையோர்புகழ்பாலா நயந்துகேளு
நாட்டுவாய் சௌவும் ஐம் - ஈம் -நம்தானே.

தானே தான்லம்என்ற பீஜம்போடு
தாழ்வின்றி ஒ - அ - இ - உ - எ -போடு
கொணேகேள் ஸ்ரீயும் ஐயும் - கிலியும் - சவ்வும்
கொற்றவனே றீயும்என்ற பீஜம்போடு
தேனேபாரிவையெல்லா முன்போலப்பா
தெளிவாகநடுவணையைப் பிடித்தவாறு
மானேவாபனிரெண்டு ஒன்பதையா
மயங்காதேபதினொன்று நாலுபோடே.

போட்டுவிதிபதினைந்தா மிலக்கமையா
பொன்னாவனெநாலாவ தணையைமாறு
நாட்டிவிடுயான்சொன்ன வாறுபோல
நளினமாமுச்சாடன பெருமையாச்சு
காட்டுவேன்கலங்காதே கண்ணேகேண்மோ
கனமானபூஜையுட விவரங்கூட
மாட்டுவேன்வெகுசுருக்காய் மைந்தாமைந்தா
மகாபெருமைஅரமையடா மகிழ்ந்துபாரே.


இந்த பாடல்களில் கூறப்பட்டுள்ள படி யந்திரத்தினை அமைத்தால் அது கீழே உள்ள படத்தினைப் போல வரும்.
பாடல்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து யந்திரம் வரைவது மிகவும் கடினமானது. சித்தர்களின் பாடல்களில் பரிச்சயம் உள்ள ஒருவரால் மட்டுமே சரியான யந்திரத்தினை வரைந்தெடுக்க இயலும். வர்த்தக ரீதியாக கடைகளில் விற்கப் படும் யந்திரங்கள் பெரும்பாலும் இத்தனை கவனத்துடன் தயாரிக்கப் படுவதில்லை.

இனி இந்த யந்திரத்தைக் கொண்டு செய்ய வேண்டிய தந்திரத்தினைப் பார்ப்போம். குருவருளுடன் கூடிய ஒரு வியாழக் கிழமை நாளில் துளசி மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு, வெப்பாலை பலகையால் ஆன ஆசனத்தில் தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தினை பஞ்சவர்ணப்பட்டு துணியில் வைத்து உச்சாடன மூலமந்திரமான “ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா” என்கிற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து தும்பை மலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

அடுத்த பதிவில் வேறொரு மாந்திரிக கலையினைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உச்சாடனம்.

Author: தோழி / Labels:

உச்சாரணம் அல்லது உச்சாடனம் என அழைக்கப் படுவது சித்தர்களின் அஷ்டகர்மங்களில் ஒன்று. மற்ற பிற மாந்திரிக கலைகளை விட இந்த முறை மிகவும் தீவிரமானதும், ஆபத்து நிறைந்ததும் ஆகும். பொதுவில் மந்திரங்களை உச்சரிக்கும் வகைகளைப் பற்றி முந்தைய பதிவொன்றில் பார்த்தோம்.அதனை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

உச்சாடனம் பற்றி விரிவாக எழுதுவதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சித்தர்களின் பார்வையில் அவர்களின் கலையாக உச்சாடணம் பற்றி என்ன கூறியிருக்கின்றனர் என்பதை மட்டுமே நாம் இங்கே கவனிக்கிறோம். அடிப்படையில் உச்சாடனம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் கலையில் சித்தியடைவதாகவே கருதப் படுகிறது.

சித்தர்களின் பயன்பாட்டில் இந்த முறை ஒரு தற்காப்பு கலையாகவே அறியப் படுகிறது. தங்களின் சீடர்களுக்கும் அவ்வாறே இதனை அருளினர். மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உருவாக்கப் படும் அதிர்வுகளைக் கொண்டு தங்களின் உடலையும், சுற்றத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு உத்தியாகவே இதைக் கருதினர்.

வாருங்கள்!, உச்சாடன முறைக்கு தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

உச்சாடனத்திற்கான அதிதேவதை நிருதி

உச்சாடத்திற்கான மூல மந்திரம் “ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா”

ஒரு வியாழக் கிழமையன்று இந்த பயிற்சியினை துவங்கிட வேண்டும்.

இந்த பயிற்சியினை தென்மேற்கு திசையை நோக்கி அமர்ந்து செய்திட வேண்டும்.

துளசி மணியினால் ஆன மாலையினை அணிவத்ற்கும், மந்திரங்களை செபிக்கவும் பயன் படுத்திட வேண்டும்.

வெப்பாலை மரத்தின் பலகையினை அமரும் ஆசனமாய் உபயோகிக்க வேண்டும்.

யந்திரத்தினை அர்ச்சிக்க தும்பைப் பூவினை பயன்படுத்திட வேண்டும்.

பஞ்சவர்ண பட்டாடையினை அணிவதற்கும், மூலகத்திற்கு அணிவிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.

உச்சாடன முறையில் சித்தியடைய தேவையான யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்பாலான தகட்டில் கீறிட வேண்டும்.

அடுத்த பதிவில் இந்த யந்திரத்தினை எவ்வாறு அமைப்பது என்பதையும் அதனைக் கொண்டு உச்சாடன கலையில் சித்தியடைவதைப் பற்றியும் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தம்பனம் தொடர்ச்சி...!

Author: தோழி / Labels: ,


தான் நினைக்கிற எதையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அதனை முற்றிலுமாக செயலிழக்கச் செய்வதே தம்பனம் எனப் படுகிறது. இந்த முறையில் சித்தியடைய தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம்.

இன்று இந்த முறைக்கான யந்திரத்தினை அமைப்பது மற்றும் அதனைக் கொண்டு இந்த கலையில் சித்திடயையத் தேவையான தந்திரம் பற்றி பார்ப்போம்.

இந்த யந்திரத்தின் அமைப்பினைப் பற்றி கருவூரார் தனது பாடல்களில் பின்வருமாறு கூறுகிறார்.

தம்பனத்தின்போலுண்டோ மற்றசித்து
தாரணியில்கோடிவித்தை யாடலாகும்
நம்புகின்றோர்தனைக்காக்கும் நல்லசித்து
நலம்பெறலாமுன்மனதைச் சிவத்திலாக்கும்
அம்புவியிலன்பனென் றறைவேனையா
ஆச்சரியம்சித்தரென மறைத்துச்சொன்னார்
வம்பின்றிசொல்லுகிறேன் முன்போல்கண்ணே
வரைந்திடுவாயரைகளா மிருபத்தைந்தே.

ஐந்தான இருபத்தைந்தரையாய்க்கீரி
வழகாகவரைதோறுஞ் சூலம்போட்டு
பிந்தாமல்முதல்வரையில் வட்டம்போடு
சொந்தமாய்நடுவணையில் அறுகோணம்பார்
சுந்தரனேமறுவீட்டில் நாற்கோணம்பார்
பந்தமில்லாய்மறுவரையில் முக்கோணந்தான்
பதிந்துவிடுயறைதோறும் கோணந்தான்.

கோணங்களதனிலே சொல்லக்கேளு
கொற்றவனேநமசிவாய வென்றுபோடு
வேணபடி ஐம் - நம் - நம் லம்தானையா
வெகுசுருக்காய்சௌவும்என்ற பீஜம்போடு
நாணமுடன் அ - இ - உ - எ - ஒ - போடு
நாயகனே ஐயும் - கிலியும் சௌவும் றீயும்
கோணமதில்போட்டுவிடு ஸ்ரீயும்தன்னை
கோணமலிவையெல்லாஞ் சொல்லக்கேளே.

சொல்லக்கேள் நடுவணையை முன்போல்மாறு
சொற்பெரியவரைதோரும் பிடித்துமாறு
நல்லவனேமுதல்வரையில் ஒன்பதையா
நாடுவாய்மறுவரையில் பதினொன்றாகும்
கல்லுவாய்நடுவாயில் நாலதமாகும்
கழறாதேமறு விட்டில் பதினைந்தப்பா
வெல்லுவாய்க்கடைவிட்டில் பனிரெண்டாகும்
விவரமாய்நாலாவ தணையைமாறே.


இந்த பாடல்களில் குறிப்பிடப்பட்ட படி யந்திரத்தினை எழுதினால் கீழே உள்ளதைப் போல அமையும்.


இனி இந்த யந்திரத்தினைக் கொண்டு பூசை செய்திடும் முறையினைப் பார்ப்போம். தம்பன சித்திக்கான யந்திரத்தினை செப்பு அல்லது வெள்ளித் தகட்டில் கீறிட வேண்டுமாம்.

குருவின் அனுமதியோடு ஒரு திங்கட் கிழமையில் பச்சைப் பட்டு உடுத்தி, தாமரை மணிகளால் ஆன மாலையினை அணிந்து கொண்டு பலா மரத்தின் பலகையினால் ஆன ஆசனத்தில் கிழக்கு முகமான் அமர வேண்டும்.

பின்னர் பச்சைப் பட்டு துணியின் மீது யந்திரத்தை இருத்தி தம்பன சித்திக்கான மூல மந்திரமான, “ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா” என்கிற மந்திரத்தை கவனக் குவிப்போடு 108 முறை செபித்து தாமரை மலர்களால் அர்ச்சிக்க வேண்டுமாம்.இப்படி ஒரு மண்டலம் செபித்து வர தம்பனம் சித்திக்கும் என்கிறார் கருவூரார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

நாளைய பதிவில் மற்றொரு மாந்திரிக முறை பற்றி பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தம்பனம்.

Author: தோழி / Labels:


சித்தர்களின் மாந்திரிக வரிசையில் இன்று “தம்பனம்” என்கிற கலையினைப் பற்றியும்,அதில் சித்தியடைய தேவையானவைகளைப் பற்றியும் பார்ப்போம்.

தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என அறியப் படுகிறது. ஆய கலைகள் என அறியப் படும் அறுபத்தி நான்கு கலைகளில் கூட எட்டு வகையான தம்பனங்களைப் பற்றி கூறப் பட்டுள்ளது.

இந்த கலையின் விளைவுகள் மிகவும் தீவிரத் தன்மை கொண்டவை என்பதால் மிகக் கண்டிப்பாக குருவின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடலாலும், மனதாலும் முழுமையாக தகுதியானவர்களுக்கே குருவின் அனுமதியும் ஆசியும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.

இனி தம்பன முறையில் சித்தியடையத் தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

தம்பனத்திற்கான அதிதேவதை இந்திரன்.

தம்பன முறைக்கான மூல மந்திரம் “ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா”

இந்த முறையில் சித்தியடைய பயிற்சியினை ஒரு திங்கட் கிழமையில் துவக்கிட வேண்டும்.

தம்பன சித்தி வேண்டுவோர் பூசைகளை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து செய்திட வேண்டும்.

தாமரை மணியினால் ஆன மாலையினை உடலில் அணிவதற்கும், மந்திரங்களை செபிக்கவும் பயன்படுத்திட வேண்டும்.

பலா மரத்தின் பலகையினை உட்காருவதற்கான ஆசனமாக பயன் படுத்திட வேண்டும்.

தாமரை மலர்களை கொண்டே யந்திரத்தை பூசிக்க வேண்டும்.

பச்சை பட்டினை அணிவதற்கும், மூலகங்களுக்கு அணிவிப்பதற்கும் பயன்படுத்திட வேண்டும்.

தம்பன யந்திரத்தினை செப்பு அல்லது வெள்ளியினால் ஆன தகட்டில் கீறிட வேண்டும்.

மிக முக்கியமான இந்த யந்திரத்தை எவ்வாறு வரைவது என்பதையும், அதனைக் கொண்டு தம்பன முறையில் சித்தியடையத் தேவையான தந்திரத்தினையும் நாளைய பதிவில் காண்போம்..சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...