மாந்திரிகத்தின் படி நிலைகளில் ஒன்றான மோகனத்தில் சித்தி பெறுவதற்கு தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் மோகனத்திற்கான யந்திரம் பற்றியும் அதனைக் கொண்டு சித்தி பெறும் தந்திரம் பற்றியும் இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த யந்திரத்தை எவ்வாறு அமைத்திட வேண்டுமென கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"நன்றாகச்சொல்லுகிறேன் முன்போலையா
நயமாகஇருபத்தைந் தரைதான்கீறி
குன்றானசிவயநம வென்றுபோட்டு
கொற்றவனே சிகாரத்தில் சவ்வும்போடு
பன்றானவகாரத்தில் றீயும்போடு
பாலகனேயகாரத்தில் ஸ்ரீயும்போடு
நன்றானநகாரத்தில் ஐயும்போடு
நலமானமகாரத்தில் கிலியும்போடே.
"போடேநீ உ - எ - ஒ - அ - இ - போடு
பொலிவான நம் - லம் சௌவும்போடு
ஆடேநீ ஐம் - ஈம் தானேபோடு
அரகராமூன்றா தணைபிடித்து
ஓடாதேயரைதோறும் மாறிக்கொள்ளு
ஒகோகோமுதல்வரையில் நாலுபோடு
வாடாதேமறுவரையில் பதினைந்தையா
வாகுடனேமறுவீட்டில் பனிரண்டாமே."
"ஆமேதான்மறுவரைய லொன்பதாகும்
ஆகாகாமறுவீட்டில் பதினொன்னறாகும்
ஆமேதானாலாவ தணைபிடித்து
அப்பனேயரைதோறு மாறிக்கொள்ளு
ஆமேதான் முதல்வரையில் கோணமாறு
அய்யனே மறுவரையில் நாலுகோணம்
ஆமேதான்மறுவீட்டில் மூன்றுகோணம்
அன்பனேமறுவணையில் வட்டம்போடே."
"வட்டம்பின்மறுவீட்டில் கோணமைந்து
வரிசையுடன்நான்போட்டு சொல்லக்கேளு
திட்டமாய்மூன்றாவ தணையாறு
திறமாகும்யந்திரத்தின் பெருமையையா
நட்டமிலையான் சொன்ன லயணஞ்செய்யின்
நலமானவித்தையடாநன்றாய்ப்பாரு
கட்டளையிட்டேனே யுன்றனக்கு
கழறாதேமோகனத்தின் பெருமைதானே."
இந்த பாடல்களில் குறிப்பிடப்பட்ட யந்திரத்தின் மாதிரி வரை படம் இது.
குருவருளோடு கூடிய ஒரு செவ்வாய்க் கிழமை நாளில் மிளகு மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு, மாம் பலகையால் ஆன ஆசனத்தில் தென்கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தினை மஞ்சள் பட்டுத் துணியில் வைத்து மோகன மூலமந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து முல்லை மலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.
அடுத்த பதிவில் மற்றுமொறு மாந்திரிக முறை பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...