பாவம் தீர்க்கும் உருத்திராட்ச மணிமாலை செபம்!

Author: தோழி / Labels: ,

மனிதராய் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ் நாளின் கணிசமான நேரத்தினையும், பாடுபட்டு சேர்த்த தங்களுடைய செல்வத்தினையும் கொண்டு செய்த பாவங்களை தீர்க்கவும், புண்ணியங்களை சேர்க்கவுமே செலவிடுகிறோம். அநேகமாய் இதற்கு யாரும் விதிவிலக்காய் இருந்திட முடியாது.

பாவங்கள் சேர்வதும், புண்ணியங்கள் சேர்வதும் நமது எண்ணம், செயல், சிந்தனைகளை ஒட்டியே அமைகிறது.இதை உணர்ந்தவர்கள் பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை சேகரிக்கின்றனர். இப்படி அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை தீர்க்கும் முறையொன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். இந்த முறையை இங்கே பகிரக் காரணம் உருத்திராட்சத்தின் மகிமையாக கூறவரும் இடத்தில் அகத்தியர் இந்த செபமுறையினை விவரித்திருப்பதால்தான்...

வாருங்கள் அகத்தியர் மொழியில் இந்த முறையினைப் பற்றி பார்ப்போம்...

"நேரப்பா தேகசுத்தி நன்றாய்ச் செய்து
சிவசிவா வென்று திருநீறுபூசி
வடகிழக்கு முகமாக இருந்துகொண்டு
பக்குவமாய் ருத்திராட்சங் கையில்வாங்கி
விண்ணப்பா தான்நோக்கி நயமவசியென்று
விரும்பியே லட்சமுருவே செய்தால்
பண்ணியதோர் பாவமெல்லாம் மைந்தாமைந்தா
பருதிகண்ட பனிபோலே பறக்குந்தானே"


- அகத்தியர் -

நன்கு நீராடிய பின்னர், உயர்ந்த திருநீற்றினை சிவ சிவ என்னும் சிவ மந்திரத்தைக் கூறியபடியே உடலில் பூசிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் உருத்திராட்ச மாலையினை கையில் எடுத்துக் கொண்டு வடகிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார். இந்த நிலையில் வானத்தைப் பார்த்தவாறே “நயமவசி” என்னும் மந்திரத்தை உருத்திராட்ச மணி மாலையினை உருட்டியவாறே ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டும் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் சூரியனைக் கண்ட பனிபோல் பாவமெல்லாம் விலகிவிடும் என்கிறார் அகத்தியர்.

எளிய முறைதானே... முயற்சித்துப் பாருங்களேன்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காரிய சித்தி தரும் உருத்திராட்ச செபம்!

Author: தோழி / Labels: ,

நாம் அனைவருமே நாம் செய்யும் செயல்கள் யாவும் இலகுவாக வெற்றியடைய வேண்டும் என எண்ணுவது இயல்பு. ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமாவதில்லை. இதற்கு பலவேறு காரணங்களைச் சொல்லலாம். எனினும் கடினமான உழைப்பு அல்லது விடா முயற்சி போன்றவை வெற்றியைத் தரும் என்றாலும், அந்த நோக்கில் வெற்றிக்கு உதவக் கூடிய வசிய செபமுறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார்.

அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்குச் சொல்வதாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.

"உரையான உலகத்தோர் செபங்கள் செய்ய
உரைக்கிறோம் புலத்தியனே உண்மையாக
மரையான செபமணிதான் சொல்லக்கேளு
மனிதர்களி லஷ்டதொழிலாடு வோர்க்கு
கரையான வசியமடா வாலைவாலை
கண்மணியே ருத்திராட்ச மணியேகேளு
அரையான நூற்றியெட்டு மணிதானாகும்
அப்பனே ஆறுமுக மிருக்கச் செய்யே."


- அகத்தியர் -

"செய்யப்பா செகப்பு நூல்பட்டதாகும்
செயலான யிழையாறு முறுக்கி நீதான்
உய்யப்பா ருத்திராட்ச மணியதனிற்கோர்த்து
ஓகோகோ லெட்சமுரு வசியஞ்செய்தால்
அய்யப்பா அஷ்டவசியந் தானாகும்
அருளினோம் வசியமணி அடைவாகத்தான்
நையப்பா வசிய மென்னால் சொல்லப்போமோ
நாவதனால் சொல்வதற்கு வாயில்லையே."


- அகத்தியர் -

ஆறு முகங்களை உடைய 108 உருத்திராட்ச மணிகளைக் கொண்டு மாலை தயாரித்திட வேண்டுமாம். இந்த மணிகளை கோர்பதற்கு அடர்த்தியான சிவப்பு நிறத்தினால் ஆன பட்டு நூல் பயன்படுத்திட வேண்டும் என்கிறார். இப்படி தயாரிக்கப் பட்ட மாலையைக் கொண்டு வசிய மூல மந்திரத்தினை ஒரு லட்சம் தடவை கவனக் குவிப்புடன் செபிக்க அட்ட திக்குகளும் வசியமாகுமாம். உலகத்தில் தொழில் செய்வோர் அனைவருக்கும் உகந்த செபம் என்கிறார் அகத்தியர். இந்த செபத்தினை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் செபிக்கலாம்.

வசிய மூல மந்திரம்...

"ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா"

நாளைய பதிவில் பாவம் தீர்க்கும் உருத்திராட்ச மணி மாலை செபம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்சமும்!, செபமும்!, சிவ வேடமும்!

Author: தோழி / Labels: ,

செபம் செய்வதன் அர்த்தத்தையும், அதன் மகிமையினைப் பற்றி அகத்தியர் அருளிய விவரங்களை நேற்றைய பதிவில் பார்த்தோம். மேலும் அந்த செபத்தினை உருத்திராட்சம் கொண்டு செய்வதே மிகச் சிறந்த பலனைத் தரும் என்பதையும் பார்த்தோம். இப்படி செய்யப் படும் செபத்தினை நாள் தவறாது, கவனக் குவிப்புடன் செய்து வந்தால் இலகுவாக சித்தி கிடைத்திடும் என்ற விவரத்தையும் பார்த்தோம்.

இப்படியான செபத்தினை எவ்வாறு செய்திட வேண்டும் எனவும் அகத்தியர் தனது “வாத சௌமியம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார். அதன் படி செபம் செய்பவர்கள் தனிமையான், சுத்தமான சூழலில் செய்திட வேண்டுமாம். கோவில், மலை உச்சி, குகைகள் போன்ற ஆளரவம் குறைந்த இடங்கள் உத்தமம் என்கிறார். இடத்தினை தேர்ந்தெடுப்பதைப் போலவே செபிக்கும் போது அணிய வேண்டிய உடைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அகத்தியர் “சிவவேடம்” என்கிறார். மேலான சிவனின் வடிவில் அமர்ந்து செபிப்பதையே இப்படி கூறுகிறார்.

இந்த சிவவேடத்தை எவ்வாறு தரிக்க வேண்டும் என்பதை பின்வருமாறு விளக்குகிறார்.


"ஊணடாசிவவேட மார்க்கந் தன்னை
உறுதியாய் சொல்லுகிறேன் உனக்காய் மைந்தா
காணடா ஜெபமதலை அன்பத்தொன்று
கணக்காக ருத்ராட்சங் கையிலேந்து
தானடா யோகதெண்டு அளவை கேளு
தனதான அணிவிரல் முப்பத்திரண்டு
பேணடா அளவாகச் செய்துகொண்டு
பேணியே கைதனிலே எடுத்துக் கொள்ளே."

- அகத்தியர் -

"கொள்ளடா விபூதி உத்தளமாய்ப்பூசி
கொண்ட பின்பு வேட்டியுட அளவைக் கேளு
நல்லடா அகலமது மூன்று முழமாகும்
நலமான நீளமது ஆறு முழமாகும்
உள்ளடா பீனஞ்சாண் அகலங் கூட்டி
உத்தமனே நீளமது நால் சாணாகும்
அள்ளடா காவியிலே நீர்க்காவியாகும்
அரகரா சிவவேட மகிமைதானே."


- அகத்தியர் -

ஒருவகையான நீர்க் காவி நிறத்தில் ஆன ஆறு முழ நீளமும் மூன்று முழ அகலமும் கொண்ட வேட்டியும், அதே நிறத்திலேயே நான்கு சாண் நீளமும் ஒரு சாண் அகலமும் உள்ள பீனமும் எடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் ஐம்பதியொரு உருத்திராட்ச மணிகளைக் கொண்ட செபமாலையும், முப்பதியிரண்டு விரல் கடை நீளமுள்ள யோக தண்டமும் தயாரித்துக் கையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். உடலெங்கும் வீபூதியையும் நன்கு பூசிக் கொண்டால் இந்த கோலமே “சிவ வேடம்” என்கிறார் அகத்தியர்.

இந்த சிவவேடமே அனைத்து வகையான செபங்களுக்கும் சிறப்பானது என்கிறார். இந்த கோலத்தில் உருத்திராட்ச மணி மாலையைக் கொண்டு செய்யப் படும் எந்த ஒரு செபமும் சித்திக்கும் என்றும், இத்தகைய செபங்கள் மகிமை வாய்ந்தது என்றும் கூறுகிறார்.

நாளைய பதிவில் உருத்திராட்ச மணி மாலையைக் கொண்டு செய்தொழில் வெற்றியடையவும், எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றவும் கூடிய வசிய முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்சமும், செபமும் !

Author: தோழி / Labels: ,

குறிப்பிட்ட சில எழுத்துக்களின் சேர்க்கையினால் உருவாகிடும் சொல்லை அல்லது சொல்தொடரை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதையே செபம் என்கிறோம். இதனை உரு அல்லது உருவேற்றல் என்றும் அழைப்பர். இந்த முறையில் செபிப்பது அநேகமாய் எல்லா மதங்களிலும் இருக்கிறது. சித்தர்களும் இந்த செபித்தலின் அவசியம் மற்றும் அதன் மகிமைகளை தங்களின் பல பாடல்களில் உரைத்திருக்கின்றனர்.

ஆக செபம் என்பது தன்னிலும் மேலான சக்தி அல்லது இறையினை தொடர்புகொள்ளும் வழியாக இருக்கிறது. இது மதம், மொழி, இனம் என அத்தனை விதமான வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது. கவன குவிப்புடன் செய்யப் படும் எந்தவொரு செபித்தலும் மிக நிச்சயமாய் பலனைத் தருகிறது. இதை மறுக்க முடியாது. இத்தகைய செபத்தினைப் பற்றி அகத்தியர் தனது “வாத சௌமியம்” என்கிற நூலில் பின் வருமாறு கூறுகிறார்.


"செய்யப்பா செபமதுதான் தினமுஞ்செய்தால்
சிவசிவா ஆதாரஞ் சித்தியாகும்
மெய்யப்பா கபமதுவும் விலகிப்போகும்
வேதாந்தம் சித்தாந்தம் மெய்யுள்தங்கும்
மையப்பா சுழிதனிலே வாசியேறும்
மைந்தனே அட்டாங்கம் திட்டமாகும்
பொய்யப்பா போகாது தன்னைப்பாரு
பூரணமும் காரணமும் பொருந்தும்பாரே"


- அகத்தியர் -

"பாராய்நீ புலத்தியமா முனியேயப்பா
பதிவாகச் செபதவங்கள் செய்வதற்கு
பேராகச் சொல்லுகிறேன் மைந்தாகேளு
நிசமான மணியெடுத்து செபமேசெய்ய
பிலமான ருத்திராக்கம் மெத்தநன்று
விண்ணான சித்தியெல்லாம் தான்பெறவே
நித்தியமும் நிலையறிந்து சுத்தமாக
நேமமுடன் தவறாமல் செபமேசெய்யே"


- அகத்தியர் -

தினமும் தொடர்ந்து செபித்து வந்தால் அனைத்து ஆதரங்களும் சித்தியாகுமாம். கபமும் விலகிப்போகுமாம், அத்துடன் வேதாந்தமும் சித்தாந்தமும் உடம்பினுள்ளே தங்கும் என்கிறார். சுழிமுனையில் வாசி ஏறுமாம், செபிப்பவர் உடலானது அழியா நிலையைப் பெறுவதுடன் பூரணமும், கரணமும் பொருந்திவிடுமாம். மேலும் செபமோ தவமோ செய்வதாக இருந்தால் அதற்க்கு உருத்திராட்ச மணியே மிகச்சிறப்பானது என்கிறார்.

உருத்திராட்ச மணியைக் கொண்டு செய்யப்படும் செபங்கள் முலம் இலகுவாக சித்தி பெறலாம். எனவே நாள் தவறாமல் தினமும் சுத்தமாக உருத்திராக்க மணி கொண்டு செபம் செய்ய வேண்டும் என்கிறார் அகதியர்.

எல்லாம் சரிதான்!, உருத்திராட்ச மணியை வைத்துக் கொண்டு எப்படி செபம் செய்வது?

அதனையும் அகத்தியர் தனது நூலில் விவரித்திருக்கிறார். அதாவது மிகச் சிறந்த சிவவேடத்தைக் கொண்டு செபிக்க வேண்டும் என்கிறார்.

அதென்ன சிவ வேடம்?, நாளைய பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்சமும்! மருத்துவமும்!

Author: தோழி / Labels: ,

உருத்திராட்ச மணிகளைத் தரும் உருத்திராட்ச மரம் என்பது ஒரு மூலிகைத் தாவரம். சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இவை மருந்துப் பொருட்களாக பயன் படுத்தப் படுகின்றன. மிகவும் அரிதான சில தகவல்களை மட்டும் இங்கே தொகுத்து பகிர்ந்திருக்கிறேன்.

உருத்திராட்ச மரத்தின் பழமானது கடினமான ஓட்டுடன் கருநீலமாய் இருக்கும் என முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இதன் உள்ளே இருக்கும் சதைப் பகுதியானது புளிப்பான சாறு நிறைந்திருக்கும். மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப் படுவதால் உருவாகும் “காக்காய் வலிப்பு” என்கிற epilepsy க்கு இந்த பழத்தின் சாறு அருமருந்தாக கூறப் படுகிற்து. மேலும் cough, bronchitis, nerve pain, migraine போன்ற வியாதிகளுக்கு நல்ல பலனை தருகிறது.

ஒருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் ஆஸ்த்துமா, எலும்புருக்கி நோய், மூட்டுவலி, பக்கவாதம், கண்களில் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தை தணிக்க முடியும்

இருமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தீக்காயங்களின் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் கவனசிதறல், மன அழுத்தம், குழந்தைபேறு இல்லாதவர்கள் இருமுக மணியை உடலில் அணிவதன் மூலம் நல்ல பலன் பெறமுடியும்.

மூன்று முக மணியினை அணிவதால் ஆயுதங்களினால் ஏற்படும் காயங்களின் பாதிப்பினை குறைக்கலாமாம். மேலும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை சிந்தனையுடைய்வர்களுக்கு நல்ல பலனை அளிக்குமாம்.

நான்கு முக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் இருமல் தொல்லைகளில் இருந்து தீர்வு பெறலாம். மேலும் இரத்த ஓட்டம் சிற்ப்பாகும்.

ஐந்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உடல்பருமன் பிரச்சினைகள் மற்றும் இதயக் கோளாறு உடையவர்களுக்கு நல்ல பலனைத் தருமாம்.

ஆறுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் குழந்தையின்மை, வலிப்பு மற்றும் பேச்சாற்றல் திறன் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

ஏழுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் மூச்சுக் கோளாறு மற்றும் கால்களில் பாதிப்புடையவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

எட்டுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சினைகள், தோல்வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ஒன்பதுமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் தன்னம்பிக்கை பெருகி உடல் ஆரோக்கியம் மிளிரும்

பத்துமுக உருத்திராட்ச மணியை உடலில் அணிவதன் மூலம் உறுதியான மனநலம் வாய்க்கும்.

பொதுவில் உருத்திராட்ச மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது. நம் துறவிகள் ஏராளமான உருத்திராட்ச மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் இருந்திருக்கக் கூடும்.

நாம் அருந்தும் நீரில் உருத்திராட்ச மணியை ஐந்து நிமிடம் ஊற வைத்து அந்த நீரைப் பருக உயர் குருதி அழுத்தம் கட்டுக்குள் வருமாம். தீராத காய்ச்சல் உள்ளவர்களுக்கு பழைய உருத்திராட்ச மணியை தேனில் உரைத்துக் கொடுக்க காய்ச்சல் குறையுமாம். இதைப் போலவே உருத்திராட்சக் கொட்டையினை குடிக்கும் நீரில் ஐந்து நிமிடம் ஊற விட்டு அந்த நீரில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கலக்கி அருந்தினால் எத்தகைய இருமல் மற்றும், வாந்தி தணியுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்சமும் சித்தர்களும்!

Author: தோழி / Labels: , ,

உருத்திராட்ச மணி மாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இன்றும் கூட நாம் உருவகப் படுத்தும் சித்தர் உருவங்களில் இந்த உருத்திராட்ச மாலைகள் இடம் பெறுவதை கவனித்திருப்பீர்கள். உருத்திராட்ச மணிகளைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு சித்தர்களின் பாடல்களில் நமக்கு காணக் கிடைக்கிறது. அந்த பாடல்களை எல்லாம் தொகுத்து இங்கே பகிர வேண்டுமெனில் இந்த தொடர் இரண்டு வாரஙக்ளுக்கு மேல் நீளும் என்பதால் திருமூலர் மற்றும் அகத்தியர் கூறியவைகளை மட்டும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

திருமூலர் உருத்திராட்ச மணிகளின் மகத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.உருத்திராட்ச மணிகள் எந்த அளவுக்கு மகத்துவமானவை என்பது இந்த பாடல்களின் மூலம் அறியலாம்.

"பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே"


- திருமூலர் -

"காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே"

- திருமூலர் -

அகத்தியரும் தனது பாடல்களில் உருத்திராட்ச மணி பற்றிய பல தகவல்களை கூறியிருக்கிறார். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது மிகவும் அரியதான ஒரு தகவல். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் அல்லது துறவறம் மேற்கொண்டவர்கள் உருத்திராட்ச மணி மாலையினை உடலில் அணிந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அந்த மணி மாலைகள் எத்தகையதாக என்ன அளவுடன் இருத்தல் வேண்டும் என்பதை அகத்தியர் தனது சீடருக்கு அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு...

"துதிக்கவென்றால் புலத்தியனே இன்னங்கூர்வேன்
துப்புரவாய் செபமாலை பூணுங்காலம்
மதிக்கவே செபமாலை ருத்திரட்ச
மன்னவனே யாறுமுகந் தானெடுப்பாய்
பதிக்கவே செபமாலை முப்பதிரெண்டு
பாங்குடனே சடையதிலே யணியவேண்டும்
விதிப்படியே ருத்ராட்ச மன்பத்தொன்று
வேதவிதிப் பிரமாணம் செப்பக்கேளே"


- அகத்தியர் -

"கேளப்பா புலத்தியனே யின்னங்கூர்வேன்
கொடியான ருத்திராட்சம் மன்பத்தொன்று
மீளப்பா மாலயது களுத்திலேதான்
மிக்கவே தான்றரிக்க விதியேயாகும்
தாளப்பா கரகணுக்கில் செபமாலை
தகமையுட னுத்திராட்சம் பன்னிரெண்டாகும்
வேளப்பா ருத்திராட்சம் கங்கணந்தான்
நாதமுறைத் தான்படியே வட்டமாச்சே"

- அகத்தியர் -

"அட்டமாம் ருத்திராட்ச முழங்கைமேலே
அன்புடனே சரமதுவும் சோடசந்தான்
திட்டமுடன் சோடசமாம் பதினாறப்பா
தீர்க்கமுடன் முழங்கரமா மணியத்துள்ளே
நிட்டையிலே தான்பூண்டு மதியங்கொண்டு
நிஷ்களங்க மானசெப மாலைபூண்டு
சட்டமுட னசுவினியர் சொன்னநீதி
சடாட்சரனே யுந்தமக்கு சாற்றினேனே"

- அகத்தியர் -

மனதை ஒருநிலைப் படுத்தி செபம் செய்திடும் வேளையில் அணிந்திட வேண்டிய உருத்திராட்சங்கள் பற்றிய தகவலை தான் அசுவினி தேவரிடம் இருந்து அறிந்து கொண்டதாக கூறுகிறார். அதாவது இந்த உருத்திராட்சங்கள் அனைத்துமே ஆறு முகங்களை உடையதாக இருக்க வேண்டுமாம். முப்பதி இரண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட உருத்திராட்ச மாலையினை சடையிலும், ஐம்பத்தியோரு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை கழுத்திலும், பன்னிரெண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட மாலையினை மணிக்கரத்திலும், பதினாறு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை முழங்கைக்கு மேற்பட்ட பகுதியிலும் அணிய வேண்டுமென்கிறார்.

அடுத்த முறை துறவியர் அல்லது சிவனடியார் எவரையேனும் சந்திக்க நேர்ந்தால் அகத்தியர் அருளியபடி அணிந்திருக்கின்றனரா என்பதை அவதானியுங்கள்.

நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் மருத்துவ குணங்க்ளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்ச மணி - சில அபூர்வ தகவல்கள்!

Author: தோழி / Labels:

நம் உடலில் அணிந்து கொள்வதற்கு, பிரார்த்தனைகள் அல்லது மந்திரங்களை செபிக்கும் போது ஜபமாலையாக பாவிக்க, இறைவனின் திருமார்பில் ஆபரணமாய் சூடுவதற்கு என மூன்று விதமான பயன் பாட்டிற்கென உருத்திராட்ச மாலைகள் உருவாக்கப் படுகின்றன. ஒரே முகமுடைய மணிகளால் மட்டுமே இந்த மாலைகள் அமைக்கப் பட வேண்டும். பெரும்பாலான உருத்திராட்ச மணிகளின் நடுவில் இயற்கையாகவே துளையிருக்கும். அப்படி துளைகள் இல்லாத காய்களில் மட்டுமே துளைகளை இடுகின்றனர். இந்த தகவல் அநேக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு சில குறிப்பிட்ட முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப் படுகின்றன. இவை பார்ப்பதர்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எளிதில் இனங்காண முடியாத அளவில் இருக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும்.

அசலான மணிகளை இனம் பிரித்தறிய சில எளிய சோதனை முறைகள் உள்ளன. இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையே உருத்திராட்ச மணியை வைத்தால் அவை சுழலுமாம். அதே போல ஏகமுக மணியை நீரோட்டத்தில் விட்டால் அது எதிர்த்து ஓடுமாம். நான்கு முக உருத்திராட்ச மணியைத் தவிர மற்ற அனைத்து முகமுடைய உருத்திராட்ச மணிகளும் நீரில் மிதக்கும் தன்மையுடையதாம். இது போல வேறு சில முறைகளும் இருக்கின்றன.

ஒவ்வொரு உருத்திராட்ச மணியும் தனித்துவமான சக்தி மண்டலமாக கருதப் படுகிறது. இந்த் மணிகளின் மகத்துவம் பற்றி தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன். இதன் பொருட்டே அவைகளை மாலைகளாய் கட்டும் போது ஒவ்வொரு மணிக்கும் இடையே இடைவெளி விடுகின்றனர். இந்த இடைவெளியாது ஒரு மணி மற்றொரு மணியை தொட்டு விடாதபடி நேர்த்தியான முடிச்சுகளால் அமைக்கப் படுகிறது. பொதுவில் மூன்று வகையான முடிச்சுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை கவனித்துப் பார்த்து வாங்கிட வேண்டும்.

இந்த முடிச்சு வகைகள் நாகபாசம், சாவித்திரி, பிரமகிரந்தி என அழைக்கப் படுகின்றன. மாலையின் பயன்பாட்டினைப் பொறுத்து இந்த முடிச்சுக்கள் மாறுபடும். இப்படி மாலைகளாய் கோர்க்கும் போது கடைசியில் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடும் இடத்தில் தனியே ஒரு மணியை அமைக்கின்றனர். இதனை “நாயக மணி” அல்லது “மேரு மணி” என அழைக்கின்றனர்.

இப்படி கோர்க்கப் பட்ட ஜெப மாலைகளை வைத்து செபிக்கும் போது அந்த மந்திரம் கூடுதல் பலனை தருகிறது. காலை வேளைகளில் நாபிக்கு சமமாகவும், மதிய நேரத்தில் மார்புக்கு சமனாகவும், அந்தி வேளையில் நாசிக்கு சமனாகவும் வைத்து செபித்திட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே சரியான பலனை அடைந்திட முடியும். மேலும் உருத்திராட்ச மணியால் ஆன செபமாலையை வைத்துக் கொண்டு மலை உச்சி, நதிக்கரை, காடுகள், குகைகள், ஞானிகள், சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள் போன்றவற்றில் இருந்து செய்வது அதி உன்னத பலனைக் கொடுக்குமாம். இந்த உருத்திராட்ச மாலைகளை ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாமாம்.

இந்த உருத்திராட்ச மணிகளைப் பற்றி சித்தர் பெருமக்கள் கூறியுள்ள தகவல்களை நாளைய பதிவில் காண்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

Author: தோழி / Labels:

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.

உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள் அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன. பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே இருக்கின்றன.

இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம் மற்றும் இடைவெளியைப் பொறுத்தே இந்த உருத்திராட்ச மணிகளின் எடை அமைகிறது. நெருக்கமான இடைவெளியை உடைய காய்கள் பாரமானதாகவும், அகன்ற ஆழமான இடைவெளியுள்ள காய்கள் பாரம் இல்லாமல் லேசானதாகவும் இருக்கும். இத்தகைய காய்கள் மட்டும் நீரில் மிதக்கும்.

மிக அபூர்வமாய் இரண்டு காய்கள் ஒன்றோடு ஒன்று இனைந்தது முகங்கள் ஏதும் இல்லதது போலிருக்குமாம். இந்த வகை மணிகளை “கவுரி சங்கர்”என்கின்றனர். ஒரு முகம் மட்டும் அமைந்துள்ள காய்கள் தோற்றத்தில் முழுமையாக விளைச்சலை அடையாத காய்களைப் போலிருக்கும். ஏகமுகம், இரண்டு முகம், மூன்று முகமுடைய உருத்திராட்ச மணிகளும் அபூர்வமானதாகவும், சக்தி உடையவனாகவும் கருதப் படுகிறது. இந்த கருத்தாக்கங்கள் யாவும் நம்பிக்கையின் பாற்பட்டதே.

உருத்திராட்ச காய்களின் அளவை வைத்து மூன்று தரமாக பிரிக்கின்றனர். நெல்லிக்காய் அளவு உருத்திராட்சம், இலந்தைப் பழ அளவு உருத்திராட்சம், கடலை அளவு உருத்திராட்சம் என மூன்றாக பொதுமைப் படுத்தப் பட்டிருக்கிறது. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சங்கள் பூரண பலனையும், இலந்தைப் பழ அளவிளான காய்கள் மத்திம பலனையும், கடலை அளவுள்ளவை அதம பலனையும் தருமென கூறப் பட்டிருக்கிறது.

பொதுவில் ருத்திராட்சங்கள் மாலைகளாய் கோர்த்தே பயன் படுத்தப் படுகிறது. நூல் கயிறு முதல் உலோக கம்பிகள் வரை மாலைகளாய் கோர்க்க பயன் படுத்தப் படுகிறது. இப்படி மாலைகளாய் கோர்ப்பதில் பல தனித்துவமான முறைகள் கையாளப் படுகின்றது. நான்கு வகையிலான எண்ணிக்கையில் இந்த மாலைகள் கோர்க்கப் படுகின்றன. 1, 27, 54, 108 என்கிற எண்ணிக்கையிலான மாலைகளே பயன் பாட்டில் இருக்கிறது. இப்படி மாலையாக கோர்க்கும் போது ஒரே வகையான முகங்களைக் கொண்ட உருத்திராட்சங்களையே பயன் படுத்திட வேண்டுமாம். ஆனால் வர்த்தக ரீதியாக மாலை கட்டுவோர் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி மாலையாக கட்டும் போது ஒரு உருத்திராட்சம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்த உருத்திராட்சத்தை தொட்டுக் கொண்டிருக்க கூடாதாம்.

ஏன்?, எதற்கு?

விவரங்கள் நாளைய பதிவில் தொடர்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உருத்திராட்சம் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!, உருத்திராட்சம் என்றவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது... சன்னியாசம், சாமியார்கள், ஆன்மீகம், எளிமை, ஜபமாலை, உடல்நலம், மருத்துவம், மந்திரவாதிகள் இத்யாதி இத்யாதி!!.

ருத்திராக்‌ஷம், உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும் இந்த உருத்திராட்சம் பற்றி பல்வேறு கருத்தாக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. புராணங்களில் இது பற்றிய மிகைப் படுத்தப் பட்ட பல தகவல்கள் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து உருத்திராட்சம் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பற்றியும், சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல் பற்றியும் தொகுத்து அளிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

வடமொழியில் ருத்ராக்‌ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப் படுகிறது. இமயமலையின் அடிவாரங்களில், கங்கைநதியின் சமவெளிப் பகுதிகளில்,ஆஸ்திரேலியா மற்றும் மலேயா நாடுகளில் மட்டுமே காணப் படுகிறது. இந்த தாவரத்தில் 90 வகை இருப்பதாக தாவரவியல் பகுத்தறிந்திருக்கிறது. இவற்றில் 25 வகை மரங்கள் இந்தியா மற்றும் நேப்பாள நாடுகளில் கிடைக்கிறது.

இந்த மரம் அதிகபட்சமாய் 80 அடி உயரம் வளரக் கூடியது. உருத்திராட்ச மரத்தின் சில வகைகள் தமிழகத்தின் பழநி, நீலகிரி போன்ற இடங்களிலும், கேரளத்தில் திருவாங்கூர் பகுதியிலும், கர்நாடகத்தில் மைசூர் பகுதிகளில் காணப் படுகிறது. இதன் பழங்கள் கருமை கலந்த நீலம் அல்லது செம்மையோடிய நீல நிறத்தில் கடினமான மேலோட்டுடன் இருக்கும். இந்த மரத்தின் இலைகள் வாத மரத்தின் இலைகளைப் போல ஆறு அங்குல நீளத்தில் இருக்கும். முதிர்ந்த இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில் பூக்கள் தோன்றும். உருத்திராட்ச மரத்தின் பூக்கள் வெண்மை நிறமுடையாக இருக்கும்.

உருத்திராட்ச மரத்தின் பழங்கள் கடுமையான மேலோட்டுடன் இருந்தாலும் உள்பகுதி புளிப்பு சுவையுள்ள சாறு நிறைந்த சதைப் பகுதியாக இருக்கும். இவற்றின் நடுவில் இருக்கும் கொட்டை பகுதியைத்தான் நாம் உருத்திராட்ச மணி என்கிறோம். நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி நகரம்தான் உருட்திராட்ச மணிகளுக்கு முக்கியமான சந்தையாக இருக்கிறது.

இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், சாயமேற்றப் பட்டிருக்கும். இதன் பொருட்டே சிவந்தும், பளபளப்பாகவும் இருக்கிறது. சில இடங்களில் அரக்கு, பிளாஸ்டிக் போன்றைவைகளினால் செய்யப் பட்ட போலி மணிகளும் விற்பனைக்கு வருகின்றன. போலிகளை கண்ட்றியும் முறைகளை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.

நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் அமைப்பு, வகை, பற்றிய விவரங்களைப் பார்ப்போம்..

குறிப்பு :-

சென்னையை சேர்ந்த திரு.எம்.கே.சுகுமாரன் என்னும் அருளாளர் தனது கடின உழைப்பின் பயனாய் போகர் அருளிய போகர் சப்தகாண்டம்-7000 என்கிற நூலை மின்னூலாக்கி இருக்கிறார்.

இந்த அரிய நூலினை பின் வரும் இணைப்பில் இருந்து தரவிரக்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். எனவே ஆர்வமும், தேவையும் உள்ள நண்பர்கள் தரவிரக்கி பயன் படுத்திக் கொள்ளவும். அவரின் மேலான இந்த முயற்சிக்கு எனது நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தமிழனின் புத்தாண்டு தினம்!,வாழ்த்துக்கள் நண்பர்களே!

Author: தோழி / Labels: , ,

தமிழ் கூறும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் துவங்கி இனிவரும் நாட்கள் அனைத்துமே வளமானதாகவும், உங்களின் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ் புத்தாண்டின் துவக்க நாள் குறித்து சமீப காலமாய் இரண்டு நிலைப்பாடுகள் உண்டாகியிருக்கின்றன. எமக்கு அரசியல் தேவையில்லை,மேலும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் குறித்தும் நாம் விவாதிக்கப் போவதில்லை. இந்த பதிவின் மூலம் தமிழ் புத்தாண்டு குறித்து சித்தர் பெருமக்கள் என்ன கூறியிருக்கின்றனர் என்பதைப் பற்றி மட்டும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்து மரபியலில் காலத்தைக் கணிக்க உதவும் பஞ்சாங்கத்திற்கும், சித்தர்களின் கணக்கீட்டு முறைக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. இது பற்றி முன்னரே பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அந்த விவரங்களை அறிய விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம். வாருங்கள்!, சித்தர்களின் கால கணக்கீட்டு முறை பற்றி புலிப்பாணி சித்தர் அருளிய பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.இந்த பாடல் “புலிப்பாணி சோதிடம்” என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப் பட்டது.


"சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்
சொலிகின்ற கதிர்மதி கணக்கன்பாம்பு
அதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே
அடக்கிவைத்தார் கோள்களையும் திதியுடனே
மாதமொடு வருடாதிக் கணக்கெல்லாம்
தெளிவுடனே மக்கள்ளுய்ய அயன்தானும்
வாதியென்ற ஞானியரும் பலவாறாக
வையகாத்தில் பூட்டிவைதார் மறைவாக
பரந்திட்டேன் போகருட கடாட்சத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே"

- புலிப்பாணிச் சித்தர் -

ஒன்பது கோள்களையும், வருடம், மாதம், வாரம், நாள், நாழிகை என எல்லா கூறுகளையும் பன்னிரெண்டு ராசிக்குள் அயன் அடக்கி வைத்தார் என்கிறார் புலிப்பாணி சித்தர். இதை ஞானிகள், சித்தர்கள் விளக்கமாக பூமியில் பூட்டி வைத்தார்களாம். அதனை போகரின் அருளால் புலிப்பாணி ஆகிய நான் எல்லோருக்கும் சொல்கிறேன் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

இனி, இந்த வருடத்தின் பிறப்பினை எவ்வாறு கணித்தார்கள் என்பதைப் பற்றி அகத்தியர் அருளிய பாடல்களின் வழியே பார்ப்போம். இந்த பாடல்கள் அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டது.

"புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்
புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்
கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்
காவலரே யாம்கேட்டு நுந்தமாக்காய்
சத்தியமாய் யானுரைத்தே னன்புள்ளானே"


- அகத்தியர் -


"மேடமெனும் ராசியாம் மதனிற் கேளு
மேலான யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருசபுருசன் அவதரிப்பா னென்றே
பரிவுடன் உலகிற்க்கு நீசாற்றே"


- அகத்தியர் -

கலியுகம் பற்றிய விவரங்களையெல்லாம் தான் அசுவினி தேவரிடம் இருந்து தெரிந்து கொண்டதாக கூறும் அகத்தியர், சூரியனானவன் மீன ராசியில் இருந்து மேஷ ராசியின் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் பிரவேசிக்கும் நேரமே வருடத்தின் பிறப்பு ஆகிறது என்கிறார். ஒவ்வொரு வருட சுழற்சிக்குப் பின்னர் புதுவருடம் இந்த குறிப்பிட்ட கணத்தில்தான் உதயமாகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோரால் கணித்துச் சொல்லப் பட்ட இந்த விவரங்களைத்தான் இன்றைய நவீன அறிவியல் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் உறுதி செய்திருக்கிறது.

இதன் படி இந்த முறை புது வருடமானது ஆங்கில திகதி 14.04.2011 அன்று இந்திய, இலங்கை நேரமான முற்பகல் 11.39 க்கு உதயமாகிறது. இந்த நேரத்தில் பழையன கழிந்து இனியெல்லாம் சுகமாய் அமைந்திட எல்லாம் வல்ல குருவினை மனதில் தியானித்து புதியவருடத்தின் செயல்களை துவக்குங்கள். நலமே விழையும்.

குருவருளும், திருவருளும் அனைவருக்கும் சித்திக்க மீண்டுமொரு முறை எனது பிரார்த்தனைகளை வைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குழந்தைப்பேறு தரும் தந்திரம்!

Author: தோழி / Labels: , ,

நமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாக்கப் படுவது நிதர்சனம். தற்போதைய நவீன மருத்துவம் பலவேறு தீர்வுகளை தந்துவிட்ட சூழலில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் இதற்கான எளிய தந்திரம் ஒன்றினை அருளியிருக்கின்றனர். கொஞ்சம் சுவாரசியமானதுதான், வாருங்கள் தெரிந்து கொள்வோம்..


"அட்சரமாஞ் சிகாரமுதல் சகலபூவாம்
சிறப்புனனே யிருந்துதான் வருணன்மூலை
நிசமான தாமரையின் மணிதானாவல்
நிலையான பலகையது நீலவஸ்த்ரம்
தலையான வருவைந்து நூறுபோடு
சகலபில்லி சூனியங்கள் தெறித்துப்போகும்
மலையாதே பெரும்பாடு முடனேதீரும்
மங்கையர்க்கு மதலையுண்டா மலங்கிடாதே."


- அகத்தியர் -

நாவல் மரத்தின் பலகை ஒன்றை எடுத்து அதில் “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை எழுதிட வேண்டும். பின்னர் அந்த பலகையின் மீது தாமரை மணிகளையும், ஒரு பூவினையும் வைத்திட வேண்டுமாம். நீல நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு, மேற்கு முகமாய் அமர்ந்து நாவல் மரத்தின் பலகையை முன்னர் வைத்துக் கொள்ள வேண்டும். “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை செபித்தவாறே ஒவ்வொரு பூவாக, ஐநூறு முறை அந்த பலகையின் மீது பூக்களை போட வேண்டுமாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களை பீடித்திருக்கும் பில்லி,சூனியம் போன்றவை விலகி, பெரும்பாடு என்ற நோயும் தீர்ந்து போவதுடன் குழந்தை பாக்கியமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். தேவையுள்ளவர்களுக்கு இந்த முறையை பரிந்துரைக்கலாம்.

நண்பர்களே, எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பதில் தற்போது தமிழ் நாட்டின் அரசாங்கத்துக்கும், தமிழர்களுக்கும் இடையில் குழப்பங்களும் விவாதங்களும் மலிந்திருக்கிற சூழலில், தமிழ் புத்தாண்டு என்பது எப்போது பிறக்கிறது என்பதை நமது சித்தர் பெருமக்கள் தெளிவாக கூறியிருக்கின்றனர். அந்த தகவலுடன் நாளை புதுவருட பதிவில் சந்திக்கிறேன்.... காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய பேய் விரட்டும் தந்திரம்?

Author: தோழி / Labels: , ,

கோழியில் இருந்து முட்டை வந்ததா?, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது மாதிரி பேய், பிசாசு, பூதம், பிரம்மராட்சதர்கள் என்கிற ஒன்றின் இருப்பு அல்லது இல்லாமை குறித்த விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. என் வரையில் இது முழுக்க முழுக்க உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகவே கருதுகிறேன். மேலும் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடிய எந்த ஒரு மனோபாவமும் பேய்தான்.

இந்த பேய்களைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். அகத்தியரும் கூட தனது பாடலில் பேய்களின் குணாம்சம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"கட்டடா பேயினது முறையைக்கேளு
காணுகிற குணங்காணும் கருத்தில் சொல்வேன்
இஷ்டமுடன் பெண்களையாண் ரூபமாக்கும்
மினிதான ஆணானால் மோகினியைக் காட்டும்
நட்டிரவில் சாய்பிதற்றும் கருவழிக்கும்
நளிர்சுரங்கள் பெரும்பாடு நடுக்கும்பித்தம்
முட்டெனவே பெண்புருஷன் கூடிவாழ்வாள்.
முறையையுட னதுபோகு முறையைக்கேளே."

- அகத்தியர் -

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.


"கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்
கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கி
ஆளடா கோழிபன்றி யாடுகாவு
ஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடு
தாளடா காரீயம் செம்புதங்கம்
தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்ட
பாழடா அலகையென்ற பேய்களெல்லாம்
பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."

- அகத்தியர் -

காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன் “அ, இ, அரி, ஓம்” என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டை பாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.

எளிமையான தந்திரம்!, எவருக்கேனும் உதவிட நினைத்தால் குருவினை வணங்கி பயனபடுத்தலாம்.

நாளைய பதிவில் குழந்தை பேறை அருளும் தந்திரம் ஒன்றைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பகைவரை நண்பராக்கிடும் தந்திரம்!!

Author: தோழி / Labels: , ,

பகைவர்கள் இல்லாத சமரச வாழ்வியலையே சித்தர் பெருமக்கள் வலியுறுத்துகின்றன. பிறர் தமக்கு தீமை செய்தாலும் அவருக்கு நன்மை செய்வதன் அவசியத்தை பல பாடல்களில் காணமுடிகிறது. அந்த வகையில் எத்தனை கொடிய பகைவரானாலும் அவரை நண்பராக்கிக் கொள்ளும் உத்தி ஒன்றினை அகத்தியர் தனது பாடல் ஒன்றில் அருளியிருக்கிறார்.

அகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் இடம்பெற்றிருக்கும் அந்த பாடல் பின்வருமாறு...

"யெட்டான நகாரமுதை யகாரமான
இனிதான யிலைகளோ வில்வமாகும்
நலமான செந்துகிலுடன் கிழக்குமூலை
முளகுசிவ மாம்பலகை முன்னூற்றெட்டு
தட்டாதே யுருவேற்றி யெதிரிபேரை
தானெழுதி யுன்பேரை மேலாகமாற்றி
கட்டாகத் தகடெழுதி கையிற்கொண்டால்
கடும்பகைவன் கேள்வானாம் கண்ணிற்காணே"


- அகத்தியர் -

2"x2" அளவிலான செப்புத் தகடு ஒன்றினை எடுத்து அதில் நமது பேரை எழுதிக் கொள்ள வேண்டும். அதன் கீழே நண்பராக்க வேண்டிய நமது எதிரியின் பெயரை எழுதிட வேண்டுமாம். சிவப்பு நிறத்திலான உடையணிந்து கொண்டு, மாம் பலகை ஒன்றின் மீது கிழக்கு முகமாய் உட்கார்ந்து நமக்கு முன்னால் அந்த தகட்டினை வைத்திட சொல்கிறார் அகத்தியர்.

“நமசிவய” என்கிற மந்திரத்தை சொல்லிக் கொண்டே ஒரு மிளகு மற்றும் வில்வ இலையினை அந்த செப்புத் தகட்டின் மீது போடவேண்டுமாம். இந்த முறையில் 308 தடவை மந்திரம் சொல்லி மிளகையும், வில்வ இலையையும் போட வேண்டும் என்கிறார். இப்படி செய்த பின்னர் இந்த செப்புத் தகட்டினை கைகளில் வைத்துக் கொண்டால் எத்தனை கொடுமையான எதிரியாக இருந்தாலும் அவன் நமக்கு நண்பனாவான் என்கிறார் அகத்தியர்.

வேறொரு தகவலுடன் நாளை சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பனித்திரை!, மனத்திரை!

Author: தோழி / Labels: ,

மனித மனம் என்பது எண்ணற்ற அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இவையே நமது ஞாபக இடுக்குகள் எங்கும் பரவி படிந்து நம்மை ஆளுகின்றன. இந்த அனுபவ தொகுப்பானது நன்மை, தீமை என்கின்ற இரண்டு எல்லைகளில் நின்று ஒன்றுக்கு ஒன்று முரணாகி குழம்புவதையே மனசாட்சி என உருவகித்துக் கொள்கிறோம்.இந்த மன சாட்சிதான் நமது எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகளை முன்னெடுத்து நடத்துகின்றன.

தெளிவான சிந்தனை உள்ளவன் சிறந்தவனாகவும், குழம்பிய சிந்தனை உடையவன் தோல்வியடைந்தவனாகவும் இருக்கின்றான். ஆக ஒருவனை உயர்த்துவதும், தாழ்வடைய செய்வதும் மனம் என்றாலும், அதன் மூலம் மேலே சொன்ன அனுபவங்களில்தான் அடங்கியிருக்கிறது. இந்த அனுபவத்தைதான் திரு.கண்ணதாசன் தனது பாடல் ஒன்றில் ஆண்டவன் என்கிறார்.

இந்த தத்துவத்தை இன்னமும் எளிதாய் பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு விளக்குகிறார்.

"சூரியனைக் கணட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

பனி, புகைமூட்டம் போல் மிக அடர்த்தியானது. அதன் ஊடாக எதனையும் தெளிவாக பார்க்க முடியாது. இதனையே பனித்திரை என்பர். ஆனால் அப்படிப்பட்ட குழம்பிய பனித் திரையானது சூரியனின் ஒளி பட்ட மாத்திரத்தில் மாயமாய் மறைந்துவிடும்.

அந்த மாயத்திரை போலவே பாச பந்தங்களினால் சூழப் பட்டு, அதனில் திளைத்து குழம்பியிருக்கும் நமது மன நிலையானது, பரிசுத்த வஸ்துவான மேலான பரம் பொருளை மனதில் நிறுத்திய மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல், பொய்யான சிற்றின்பங்களை உணர்ந்து, அதன் மாயைகளில் இருந்து அகன்று தெளிவடையும் என்கிறார்.

இவ்வாறு பனித் திரையின் மாயையை நீக்கும் சூரியனைப் போல, நம் மனத்திரையின் மாயையை நீக்கும் பரம்பொருளின் பேரானந்த நிலை அகன்றுவிடாமல் தொடர்ந்து பற்றியிருப்போம் என்று ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.


நண்பர்களே!

எனது Google buzz முகவரி - https://profiles.google.com/siththarkal#siththarkal/buzz

இதைத் தவிர தோழி என்ற பெயரில் வரும் மற்ற buzz க்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எது ஆனந்தம் ?, எது மகிழ்ச்சி ?

Author: தோழி / Labels: , ,

ஒருவனுக்கு பெயர், பணம், புகழ் போன்றவை கிடைத்து, அதனைக் கொண்டாட தோதான சுற்றமும், நட்பும் அமைந்து விட்டால் அதுவே பெரிய ஆனந்தம் எனப் படுகிறது. இதுவே மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த மகிழ்வு நிலை என்பதாக நினைத்து, அதை நோக்கியே நமது வாழ்க்கை பயணம் அமைகிறது. சிலருக்கு இத்தகைய ஆனந்த நிலை கிடைக்கிறது, பலருக்கு அது எட்டாக் கனியாகவே போய் விடுகிறது. இத்தகைய ஒரு எண்ணப் போக்கில்தான் மனித குலம் வாழப் பழகி இருக்கிறது.

பாம்பாட்டி சித்தரோ இவையெல்லாம் மகிழ்வைத் தராது என்றும், மேலான இறை நிலையை உணர்வதே பேரானந்தம் என்றும், அதற்கான வழியை பின் வரும் தனது பாடலில் கூறுகிறார்.

"பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி
பெருங்காற்று உள்புகுந்ததால் பேச்சு உண்டாச்சே
ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி
எரிமண்ணிற் இரையென்றே ஆடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

கொல்லர்களின் உலைக் களத்தில் துருத்தி என்றொரு உபகரணம் இருக்கும். இதனை இயக்கினால் வெளியில் இருக்கும் காற்றை உள்ளிழுத்து குவிந்த ஒரு துளை வழியே காற்றை உலைகளத்தினுள் பீய்ச்சி அடிக்கும். அதனால் நெருப்பு கொழுந்து விட்டு எரியும். இந்த துருத்தியை ஒத்ததே நமது உடல் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

நவத்வாரங்கள் எனப்படும் ஒன்பது வாசல்கள் நமது உடலுக்கு உள்ளன.இவை ஒவ்வொன்றும் தனித்துவமான ஒரு வேலையை செய்பவை. இவை அனைத்தும் ஒழுங்காய் இயங்கினால்தான் இந்த உடல் இயங்கும், உயிர் தங்கும். இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக பிராணவாயு அவசியம். மூச்சினை முறையாக கையாளுவதன் மூலம், அதாவது இரேசக, பூரக, கும்பகமாக்குகின்ற போது அது வாசியோகமாகிறது. வாசியோகம் கைவரும் போது குண்டலினியானது கிளர்ந்தெழுந்து இறை நிலையை அடைய வைக்கிறது என்கிறார்.

ஆனால்,இதையெல்லாம் உணராத மக்கள், நிலையில்லாத ஆனந்தங்களை தேடி அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைப்பவர்கள் சுடுகாட்டில் எரியும் பிணத்தின் தன்மையை ஒத்தவர்களே என்பதை நன்கு உணர்ந்தோம் என்று ஆடு பாம்பே என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காய்த்த மரமும்!, கல்லடி தண்டனைகளும்!!

Author: தோழி / Labels:

விமர்சனங்களுக்கு அப்பாற் பட்டவர்களென இன்று எவரும் இல்லை. எல்லோருமே ஏதோ ஒரு வகையில் விமர்சனங்களுக்கும், கண்டணங்களுக்கும் ஆளாகிறோம். இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், உடல் ரீதியான தாக்கங்கள் என விளைவுகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதனை தூய நற் சிந்தனையாளர்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பதை பாம்பாட்டி சித்தர் பின் வரும் தனது பாடலில் விவரிக்கிறார்.

"காய்த்தமரம் அது மிகக் கல்லடி படும்
கன்மவினை கொண்டகாயம் தண்டனை பெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வஸ்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

"காய்த்த மரத்துக்கு கல்லடி படும்" என்பர். இங்கு காய்த்த மரம் என்பது செழித்து வளர்ந்து, பூத்துக் குலுங்கி காய்கள் காய்த்து, பழங்கள் நிறைந்திருக்கும் மரம். அந்த காய்களையும், பழங்களையும் வேண்டிக் கல்லெறியும் பொழுது மிக நிச்சயமாக பல கற்கள் அந்த மரத்தின் மீது படும்.

அதேபோன்று குருவருளின் துணையோடு தன்னையறியும் தேடலில் தெளிவுகளை கண்ட தவசீலர்களும் கூட முன் வினைப் பயன் காரணமாய் கண்டனங்களையும், தண்டனைகளையும் எதிர் கொள்ள நேரிடும். தூய மனதோடு சமூகத் தொண்டு மற்றும் இறைத் தொண்டாற்றுவோர் கூட இதற்கு விதிவிலக்காய் அமைய முடியாது. இத்தகையோரை சோதனைகள் எதுவும் செய்து விடமுடியாது. அவர்கள் இதையெல்லாம் கடந்த ஓர் உயர்ந்த தெளிந்த மன நிலையில் இருப்பார்கள் என்கின்றார்.

எப்படிப் பழத்தை வேண்டி எறியப் படும் கல் மரத்தில் பட்டாலும் மரம் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னிடமிருந்து காய், கனிகளைத் தந்துகொண்டே இருக்கிறதோ, அதைப்போல சித்தர்களும், ஞானிகளும் எத்தனைதான் சோதனைகளுக்கு ஆட்பட்டாலும் தங்கள் அருள் பிரகாசத்தை தொடர்ந்துவெளிப்படுத்திக் கொண்டே இருப்பர். இத்தகைய நிலையைத் தருகின்ற பரம்பொருளைத் தொழுது ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிறவா பேரின்ப நிலைக்கான வழி!

Author: தோழி / Labels:

பிறந்த கணத்தில் இருந்து துவங்கும் மனித வாழ்வின் பயணம் இறுதி மூச்சு வரையில் தொடர்கிறது. இந்த பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நமக்கான வினைகளையும் அதன் எதிர்வினைகளையும் தீர்மானிக்கிறது. இந்த பாதையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமென பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.

"தசநாடி தசவாயு சத்த தாது
சார்ந்த மரக்கப்பல் அதுதத்தி வீழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
என்னாளும் ஓட்டத் துணிந்து ஆடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

அலைகள் அதிகமான கடலில் செலுத்தப் படும் கப்பலானது நிலை குலைந்து மூழ்கிப் போகும். அதே நேரத்தில் அலைகளற்ற அமைதியான கடலில் செலுத்தப் படும் கப்பலானது பாதுகாப்பாய் சேர வேண்டிய இடத்தினை சேரும்.

அது போல, பத்து நாடிகளாலும், பத்து வாயுக்களாலும், ஏழுவகை தாதுக்களாலும் உருவான இந்த உடலானது எல்லாம் வல்ல பரம்பொருளை நோக்கி செலுத்தப்படா விட்டால் அலைகடலில் கவிழ்ந்த கப்பல் போல் இந்த மண்ணிலேயே வீழுமாம்.

அலையில்லா நிலைகடலில் செலுத்தப்படும் கப்பல் போல் இந்த உடலும், மனமும் பரம்பொருளை நோக்கிச் செலுத்தப்பட்டால் பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பதை உணர்ந்து கொண்டோம் என்று துணிந்து ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

பத்து நாடிகள்(தசநாடி) -

இடகலை, பிங்கலை, சுழிமுனை, பூடா, காந்தாரி, அத்திசிங்குவை, அலம்புடை, சங்கினி, குரு, கன்னி ஆகிவையாகும்.

பத்து வாயுக்கள் (தசவாயு) -

அபாணன், பிராணன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிவையாகும்.

ஏழு தாதுக்கள் (சத்த தாது) -

இரசம், உதிரம், எலும்பு, தோல், தசை, மூளை, சுக்கிலம் ஆகிவையாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எல்லாம் குருவே !

Author: தோழி / Labels:

நமது நீதி நூல்கள் மாதாவுக்கும், பிதாவுக்கும் அடுத்த நிலையை குருவுக்குத்தான் தந்திருக்கின்றன. தெய்வமே இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் வைக்கப் படுகிறது. வேதங்களும் இதையே "குரூர் சாட்சாத் பரப்பிம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ" என்கின்றன.

சித்தரியலில் குருவின் மகத்துவம் பற்றி சொல்லத் தேவையே இல்லை. அவரே ஆதியும் அந்தமுமானவர். அவரை மீறியது எதுவுமில்லை என்பதை அதி தீவிரமாக பின்பற்றியவர்கள் சித்தர்கள். இந்த இடத்தில் “குரு இல்லா வித்தை பாழ்” என்கிற பழமொழியை குருவின் சிறப்புக்காக இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இத்தகைய குருவின் மேன்மையைப் பற்றி பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு பாடுகிறார்.

"சாற்றும் உடல்பொருள் ஆவி தத்தமாகவே
தானம் வாங்கிநின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றி மனம்வாக்கு காயம் மூன்றும்பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நின்றாடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

உடல், பொருள், ஆவி முன்றும் பரம்பொருளில் இருந்துதான் வந்தது. அந்த பரம்பொருளே குரு வடிவானவர். அத்தகைய மேலான குருவை போற்றிப் புகழ்ந்து பணிவோம். என்றும் அவர் அளித்த உபதேசத்தை மனத்தில் நிறுத்தி அதன் வழி நின்று செயலாற்றிட வேண்டுமென உணர்ந்தோமென்று ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

நான் பார்த்த வரையில் சித்தர்களின் பாடல்களில் இத்தகைய கொண்டாட்ட மனநிலை அரிதாகவே காணப் படுகிறது. குரு என்பதால் இத்தகைய அளவு கடந்த ஒரு பரவசநிலையை தனது பாடலில் பாம்பாட்டி சித்தர் வெளிக் கொணர்ந்திருக்கிறார் என கருதுகிறேன்.

மற்றொரு பாடலுடன் நாளை சந்திக்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யார் சித்தன் ?

Author: தோழி / Labels: ,

"இறந்தவர் ஐவர் அவர் இஷ்டமானவர்
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணில் உள்ளோர்
வகையறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

ஐம்புலன்களின் ஆளுகைக்கு உட்பட்ட மனிதன் உயிர் நீத்தால் நீத்ததுதான். அவனால் மீண்டும் அந்த உடல் கொண்டு வாழ முடியாது. வேறு பிறவி எடுத்து வந்தாலும் உற்றார் உறவினரைப் பொறுத்தமட்டில் அவர் இறந்தவர்தான்.

ஆனால் இந்த புலன்களின் ஈர்ப்பு விசைகளைக் கடந்து தன்னையறிந்தவர்கள் ஜீவன் முக்தர்கள். அவர்கள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்களே நிலையானவர்கள் என்கிற உண்மை அறிந்தோமென்று ஆடுபாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இத்தகைய ஜீவன் முக்தர்களைத்தான் சித்தர் பெருமக்களாக குறிப்பிடுகிறோம். அவர்கள் இறப்பிற்கு அப்பாற்பட்டவர்கள். ஜீவசமாதி அடைபவர்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் ஜீவசமாதி கொள்பவர்கள். இதைச் சித்தர்கள் பலரும் ஒரு சித்து விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

அடுத்த பதிவில் பாம்பாட்டிச் சித்தரின் மற்றொரு பாடலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...