நிருவிகற்ப சமாதி மற்றும் அகண்டவிர்த்தி சமாதி..

Author: தோழி / Labels:


கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” நூலில் அருளியிருக்கும் சமாதி வகைகளை கடந்த மூன்று பதிவுகளாய் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று இரண்டு சமாதி வகைகளைப் பற்றி பார்ப்போம். ஒரு தகவல் பகிர்வாகவே இந்த தகவல்களை இங்கே பதிகிறேன்.


நிருவிகற்ப சமாதி..

நிருவிகற்ப சமாதி குறித்து கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்...

"பேரான நிருவிகற்ப சமாதிகேளு
பெருத்து நின்ற தத்துவலய சமாதிமுத்தி
தாரான சத்தானு வித்தை முத்தி
தனைமறந்து தூக்கமுற்ற மயக்கம்போல
வாரான சத்தமொன்றுங் காதிற்கேட்கா
மருவியிந்த பூரணத்தே சித்தமப்பா
நேரான சைதன்ய மாகப்போனால்
நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே"


- கொங்கணவர் -

"ஆச்சப்பா சமாதிவிட்டுச் சஞ்சரிக்கி
லடவாகச் சமாதியிலே யிருக்கும்போது
காச்சப்பா காலமென்ற திரயத்தினுள்ளுங்
கண்டிருந்த பிரபஞ்சமெல்லாம் பொய் யென்றெண்ணு
வீச்சப்பா விவகாரத் தாலே தோன்றி
விரிந்துநின்ற பிரபஞ்சத்தின் பாசந்தள்ளி
ஒச்சப்பா நிருவிகற்ப மாகி நின்றா
லுத்தமனே நிருவிகற்ப மிதுவே யாச்சே."


- கொங்கணவர் -

முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த தத்துவலய சமாதியம், சத்தானு சமாதியும் முழுமையாக சித்தியாகி விட்டால், தன்னை மறந்த துக்கத்தைப் போல் ஒரு மயக்க நிலை ஏற்படுமாம்.இந்நிலையில் எந்த ஒரு சத்தமும் அவர்களுக்கு கேட்காதாம். சுத்தமானது பூரணத்துடன் சேர்ந்து சுத்த சைதந்ய நிலையை அடைந்துவிடும் என்கிறார். இந் நிலைக்கே நிருவிகற்ப சமாதி பெயர்.

மேலும்,சமாதியை விட்டு எழுந்த பிறகும், சமாதியிலிருக்கும் பொழுதும் காலத்திற்குட்பட்டு இயங்கும் இப் பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், இவை யாவும் மாயா விகாரத்தால் தோன்றியது என எண்ணி இவற்றின் மேலுள்ள பாசத்தை நீக்கி எதையும் நினைக்காமல் இருத்தலே முழுமையான நிருவிகற்ப சாமாதியாகும் என்கிறார் கொங்கணவர்.


அகண்டவிர்த்தி சமாதி..

சமாதி வகைகளில் நாண்காவது நிலையான அகண்டவிர்த்தி சமாதி பற்றி கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.

"நன்றான வகண்டவிர்த்தி யாவதப்பா
நலம்பெரிய காற்றில்லா விளக்குப் போல
அன்றான வலைச்சலற்றுத் தண்ணீருமுப்பு
மடங்கிநின்ற வாறதுபோன் முத்தி நிற்குந்
தன்றான பிறமனதி னுருத்தான் கெட்டுத்
தனிப்பெறவே வேற்றுருவாய்ப் பிரமந்தானாய்
பன்றான விப்படிதான்கடிகையொன்று
பருவமுடன் சமாதியற்றார் பலத்தைக் கேளே"


- கொங்கணவர் -

"பலன்கேளு அசுவமேத யாகங்கோடி
பண்ணினதற் கொக்கு மொக்கும் பரிந்துகூடு
நிலன்கேளு யிப்படிதான் சமாதி மூட்டில்
நிலையாகச் சுழுத்தியென்றேயெண்ண வேண்
தலன்கேளு சுழுத்திக்குச் சித்தந்தானுந்
தயங்கிநின்று நின்றுற்று நசித்துப் போகும்
புலன்கேளு சமாதிக்கு நாம் பிரமமென்று
புடவாக வதிலிருந்து யிருக்கும் பாரே"


- கொங்கணவர் -

இந்த அகண்டவிர்த்தி சமாதி நிலையானது எப்படி இருக்குமென்றால் காற்றில்லாத இல்லத்தில் வைக்கப்பட்ட ஒரு விளக்கின் சுடரைப்போலவும், தண்ணீரில் கரைக்கப்பட்ட உப்பைப் போலவும் யோகத்தில் மனமானது முதிர்ந்து நிற்க்குமாம். இந்த ஆனந்த நிலையில் ஒரு கடிகை நேரம் லயித்தாலும் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்கிறார். அந்த பலன்களை பின் வருமாறு பட்டியலிடுகிறார் கொங்கணவர்.

கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மேற் சொன்னவாறு தினமும் பழகி வந்தால் மனமானது சுழித்தியில் அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ தானே என்று எண்ணி கைவிட்டு விடாமல் சரியாக தொடர்ந்து செய்து வந்தால் அனைத்துமே சித்தத்தில் அடங்குமாம் அப்படி சித்தத்தில் அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில் அடங்குமாம். அப்போது நீயே பிரம்மம் என்பதை அறிவாய் என்கிறார். இதுவே அகண்டவிர்த்தி சமாதி யாகும்.

நாளைய பதிவில் ஐந்தாவது சமாதி வகையான “சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

3 comments:

tamilvirumbi said...

Dear thozi,
What a lucid explanation is given by you for the above said samathies!I have shared my thought along with you.(Inner experience without conscience of the self - Absence of the Psyche): After practicing the Savvigarpa Samadhi for a considerable period, one can attain the Nirvigarpa Samadhi. Here he will experience an exhilarating feeling that the entire cosmos is a part of his body; the knowledge that he possess, is the universal knowledge; all the living beings are distinguished teachers to him with their knowledge; everything that he observed through his eyes and ears are mere fallacies; and, will be immersed in an inexplicable happiness. This spiritual state known as Nirvigarpa Samadhi.Really it is an astounding bliss.Please clarify my following doubt.It may be questioned that how will his body be saved if he happens to go in a state of trance in a dense forest?

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.தாங்கள் சமாதி பற்றி கூறுவது,எனது மூளையால் கிரகிக்க முடியவில்லை.தாங்கள் மற்றும் தமிழ் விரும்பி போன்ற அறிவு ஜீவிகளுக்குத்தான் புரியும் போல

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

RAVINDRAN said...

தோழியே,


நன்றி

Post a Comment