அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 2,1,1. முதல் 2,6,6. வரையிலான பலன்கள்..

Author: தோழி / Labels: , ,

2,1,1.

செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால்
பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது
மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார்
ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும்.



உனக்கு இரண்டும், ஒன்றும், ஒன்றும் உதயமானதால் அடிக்கடி பொருள் நஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும். மனைவி மக்களுடன் பிணக்கு உண்டாகும். எண்ணம் நிறைவேறாது எண்கிறார்.

2,1,2.

கூடுமேயெண்ணமெல்லாம் கூறும் ரெண்டொன்றும் ரெண்டும்
ஓடுமே வினையெல்லாம் உடன்பிறந்தோரால் நன்மை
தேடுமுன் கிடைக்குமப்பா தொழிலது நீடித்தோங்கும்
கோடுசொல் தவறிடாத கோமான் போல் வாழ்குவாயே.



தற்போது இரண்டும், ஒன்றும், இரண்டும் விழுந்தால் பொல்லாத நோயும், தீவினைகளும் நீங்கும். உன்னுடன் பிறந்தவர்களால் வேண்டிய லாபமுண்டாகும். நாடிய பொருள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். தொழில் தழைத்து ஓங்கும், தனவந்தனாக வாழ்வாய் என்கிறார்.

2,1,3.


வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது
தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது
சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும்
கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே.


இரண்டும், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உனக்கு கேது வக்கரித்திருக்கிறான் என்று பொருளாகிறது. அதனால் சுகமான வாழ்க்கை இருக்காது. குடும்பம் சிதறி ஆளுக்கொரு இடமாக மாற்றி இருக்க வைக்கும். சில பேர்களால் உனது வம்சத்திற்கு அவமதிப்பைத் வந்து சேரும் என்கிறார்.

2,1,6.

விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழைய நாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன் வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.


இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும். முன்னோர்களின் குடும்ப வழக்குகளின் சிக்கலொழியும். மனையாளுக்கு கெர்ப்பம் தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும் உன் வார்த்தைக்கெதிர் வார்த்தையிராது, கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.

2,2,1.

தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவி விருரெண்டான்றால்
வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும்
செய்யவே தொலிலுமோங்கும் சந்தோச செய்தி தோன்றும்
பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ


உனக்கு இரண்டுமுறை இரண்டும் இறுதியில் ஒன்றும் விழுந்தால் எத்தகைய துன்பமாயினும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். தொழிலில் அளவற்ற லாபங்களையளிக்கும். பல ஊர்களிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். தவிர நீ பொய்யுரையாத புனிதனாகவும் வாழ்வாய் என்கிறார்.

2,2,2.


அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும்
நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார்
வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும்
ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே


மூன்று முறையம் இரண்டு விழுமானால் முன் காலத்தில் நீ செய்த வினையினால் இப்பிறவியில் வெகு கவலைகள் உண்டு என்கிறார். மேலும் எக்காரியத்திலும் நன்மை ஏற்படாது. வெல்லக் கூடிய வழக்குகள் கூட கலகத்தால் தோல்வியாகும். நீ செய்யும் காரியம் எதுவும் உருப்படாது. சில நாள் போக வேண்டும் என்கிறார்.

2,2,3.

ஆமென விரண்டும் ரெண்டும் அடுத்தது மூன்றும் வீழ்ந்தால்
தாமதமாகா தெண்ணம் தழைத்திட செல்வமோங்கும்
போமென வெளியூர் போக பல தொழில் விர்த்தியாகும்
காமனை யெரித்தோன் மைந்தன் கந்தனும் துணையிருப்பான்


இருமுறை இரண்டும் இறுதியில் மூன்றும் விழுந்தால் ஆகாத காரியமாயினும் தாமதமின்றி முடியும். செல்வமோங்கும், தொழிலில், வெளியூர் பயணத்தில் லாபமுண்டாகும். கந்தநாதனின் கருணையால் கவலைகளெல்லாம் நீங்குமாம்.

2,2,6.

துணையென நம்பிடாதே தொல்லையாம் பலபேர் நேசம்
இணைபுடனிருரெண்டாறும் இடரப்பா விழுந்ததாலே
வினையமாய் தொழிலும் நஷ்டம்வந்திடும் வழக்கரும்வம்பும்
மனையிலே களவு போகும் மனைவிக்கும் தோஷமாமே


உனக்கு இரண்டு முறை இரண்டும் கடைசியில் ஆறும் விழுந்தால், நீ ஒருவரையும் நம்பாதே!,சிலபேர்களால் உனக்கு இடர்விளையக்கூடும். தொழிலில் நஷ்டம் வம்பு வழக்குகளேற்படும். மனையில் களவு போகும். மனைவிக்கு பலவித நோய்களை காட்டும் என்கிறார்.

2,3,1.

தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால்
மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள்
காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும்
பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை.



உனக்கு இரண்டும் மூன்றும் ஒன்றும் விழுந்ததால் சொந்தங்களும், நட்புகளும் உனக்கு மோசமே செய்ய துணிவார்கள். கைப்பொருள் விரையமும், தொழில் நஷ்டமும் அதனால் கவலைகளும் உண்டாகும். உன்னிடம் அன்புள்ளவர்கள் கூட உன்னை விட்டு பிரிவார்கள் என்கிறார்.

2,3,2.

உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால்
பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம்
பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம்
கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு.


இரண்டுடன் மூன்றும் இரண்டும் விழுமானால் எதிரிகள் இல்லாத வாழ்க்கையும், பூர்வீக பொருளனைத்தும் வந்து சேரும். இரண்டு தாரங்களுண்டாகும், புத்ர லாபம் பெருகும், பகைவர்களின் குலமே நாசமாகும். உன் வீட்டில் மடிந்த குலதெய்வங்கள் உனக்குப் பக்கத்துணையாக இருக்கும் என்கிறார்.

2,3,3.


இருக்குமே கஷ்டமாக இரண்டுடன் யிருமூன்றானால்
உருக்குமே உள்ளந்தன்னை உலகிலே கெடுபேராகும்
பெருக்கமாய் இருந்தசெல்வம் பலவிதவிறையமாகும்
நொறுக்குமே நோய்தானுன்னை நிலையது நீங்கிப்போகும்


இரண்டுடன் இரு மூன்று விழுந்தால் அதிக கஷ்டங்களும் அதனால் மனதை வருத்தக் கூடிய கவலைகள் உண்டாகும். கெட்ட பெயரை ஏற்படுத்தும். நிறைந்திருந்த செல்வம் பல வகையில் விரயமாகும். இதனால் நோயும், கவலையும் சூழ்ந்து சுயபுத்தி மாற்றும் என்கிறார் அகத்தியர்.

2,3,6.

நீங்கும் கவலையெல்லாம் இரண்டு மூன்றாறுமானால்
ஓங்கிடும் உனதுசெல்வம் உயருமே தொழில்தானப்பா
சோங்கிடும் தோஷம்நோயும் தொலைத்திடும் அஞ்சிடாதே
வாங்கிய கடன்தான் நீங்கி வறுமையுமகன்றுபோமே.


இரண்டும், மூன்றும், ஆறும் விழுந்ததால் கவலைகள் எல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். செல்வம் ஓங்கும், மேலான தொழிலுண்டாகும், சகல தோஷங்களும், நோயும் நீங்கும், கடன்தீரும், குடும்பத்தின் வறுமையகலும் என்கிறார்.

2,6,1.

போமெனதுயரம் போகும் பக்ஷமாய் ரெண்டாறொன்றில்
கோமான்போல் வாழ்வுண்டாகும் குடும்பத்தில் மணமே
தாமதமின்றி நோயும்தணிந்திடும் வெளியூர் போகக்கூடும்
ஷேமமேத மிதவுமுண்டாகும் ஜெகம் புகழடைகுவாயே.


இரண்டும், ஆறும், ஒன்றும் விழுந்தால் இல்லறத்தின் துன்பங்களெல்லாம் விலகும், தனவந்தனாக வாழ்வு ஏற்படும். மனையில் மணங்கூடும்,நோய்கள் நீங்கும், வெளியூர் போகவே ஷேமத்தைத் தரும், பிரக்யாதியளிக்கும் என்கிறார்.

2,6,2.

வாயவே யிரண்டுமாறும் வருத்தமே இரண்டும் வீழந்;தால்
தோயவே பொருளும் நஷ்டம் தொழில்தனில் நிந்தையுண்டாம்
உபாயமாய் சிலபேராலே விரோதமும் கலகமாகும்
காயமே யருந்தபோதும் கடவுளை மறந்திடாதே.


உனக்கு இரண்டும், ஆறும், இரண்டும் விழுந்ததால் வருத்தமுண்டாகும். பொருள் நஷ்டமும் தொழில் முடக்கம் உண்டாகும். சில பேர்களால் உனக்கு கலகமும் விரோதமும் உண்டாகும். ஆனால் எத்தகைய துன்பம் நேரிடினும் கடவுளை மறவாதே, உன் கஷ்டமெல்லாம் நீங்கிப் போகும் என்கிறார்.

2,6,3.

முறைந்திட்டோர் சேகரித்த மண்மனை வந்துசேரும்.
இரண்டுடனாறும் மூன்றும் இணங்கிட செல்வமோங்கும்
சிறந்திடும் நாற்கால் ஜீவன் சீக்கிரம் யெண்ணம் கூடும்.
துறந்துமே சென்றேபேரும் துரிதத்தில் வருகுவாரே.


இரண்டும், ஆறும், மூன்றும் விழுந்தால் பெரியோர்கள் தேடிய மனைபூமி நிலம் முதலியவைகள் சேரும். செல்வமானது ஓங்கும். நாற்கால் ஜீவன் கொள்ள பால் பாக்கியம் உண்டாகும். எண்ணமும் சீக்கிரத்தில் கூடும். கவலையடைந்து மனைவிட்டு சென்றோர்களும் வந்து சேருவார்கள் என்கிறார் அகத்தியர்.

2,6,6.

வாரென யிரண்டீராறும் வந்திடில் கெடுதியப்பா
நேரவே எடுத்தவேலை நிதானமே மிகந்துகூடும்
பாரது மூளுமப்பா பொரந்திய குடும்பந்தன்னில்
தேரவே வழியண்டு துதித்திடாய் தெய்வந்தன்னை


இரண்டும், இருமுறை ஆறும்விழ எடுத்தவேலைகள் எதுவாயினும் நிதானமாகவே கூடும். மனையில் சண்டை நடக்கும்.பலவித கவலையுண்டாகும். ஆனால் உனது குலதெய்வத்தையோ நவக்கிரகத்தையோ பூஜை செய்ய நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் மூன்றாம் எண்ணுக்குறிய பலன்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

2 comments:

Elangai Tamilan said...

தோழி,
மிக்க நன்றி .தாங்கள் விவரிக்கும் சிறிய விளக்கங்களும் அருமை .

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

RAVINDRAN said...

நன்றி

Post a Comment