ஹோமம் - நிறைவாய் சில விளக்கங்கள்!

Author: தோழி / Labels:

அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இதுகாரும் அகத்தியர் அருளிய சில அரிய ஹோம முறைகளைப் பகிர்ந்து கொண்டேன். தொடரின் சுவாரசியம் கருதி இன்றுடன் ஹோமங்கள் பற்றிய பதிவுகளை நிறைவு செய்கிறேன். கடந்த பதின்மூன்று பதிவுகளின் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக நண்பர்கள் சிலர் கேட்டிருந்த விளக்கங்களுக்கு என்னாலான தெளிவுகளை இன்றைய பதிவின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன்.

இந்து மரபியலில் ஹோமங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் பிரிவினரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களே ஹோமங்களைச் செய்து பலனை வழங்கி வந்தனர். இதனை சித்தர் மரபியல் உடைத்தெறிகிறது. அவசியமும், ஆர்வமும் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்கின்றனர். இடைத் தரகர்கள் இல்லாத ஒரு நிலையினை சித்தரியல் வலியுறுத்துகிறது.

இந்த கருத்தியலின் இன்னொரு அம்சத்தினையும் நாம் அவதானிக்க வேண்டும். சித்தர்கள் தங்களின் தெளிவுகளை தங்களின் சீடர்களின் பயன்பாட்டுக்கெனவே பாடல்களாய் அருளியிருக்கின்றனர்.இந்த ஹோம முறைகளும் கூட சீடர்களின் நலன் விரும்பியே அருளப் பட்டிருக்கின்றன.எனவே பிறர் நலம் கருதி நாம் ஹோமம் செய்வதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே இயன்றவரையில் நம்முடைய தேவைகளுக்கு நாமே ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.

ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டுமாம். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம்.

ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப் படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டுமாம்.ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது.

என் வரையில் ஹோமங்கள் என்பவற்றை ஒருவகையான அறிவியல் நிகழ்வாகவே கருதுகிறேன். இவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் நுட்பங்களை தேடுவதன் மூலம் பல அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால் நானறிந்த தெளிவுகளை பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம் பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

"பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து
நலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு
வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு
வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"


- அகத்தியர் -

அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை போல அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பலாசு மரத்தின் குச்சிகளை போட வேண்டும் என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக் குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார்.

இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரை பீடித்திருக்கும் நோய் விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


300 வயதுவரை வாழவைக்கும் ஹோமம்?

Author: தோழி / Labels: ,

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.

ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

"அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"


- அகத்தியர் -

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.

தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

நம்ம்பிக்கையும், ஆர்வமும், அவசியமும் உள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சித்துப் பார்க்கலாமே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

பாவச் செயல்களை செய்வதன் மூலமாய் ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

"காணவே யின்னமொரு சூட்சங்கேளு
கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"


- அகத்தியர் -

வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும் பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற செயல்களினால் உண்டாகும் பாவம், தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார். இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அதென்ன வழி... அதனை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.

"ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா
உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"


- அகத்தியர் -

மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட, ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்உம்

தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த முறையில் 1008 தட்வை மந்திரம் சொல்லி நவதானியத்தை போட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

"நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
மெய்யடா பிரமையொடு சகலரோகம்
விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
மகத்தான கற்பூர தீபந்தன்னால்
அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"


- அகத்தியர் -

இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர தீராத பாவமெல்லாம் தீருமாம், அத்துடன் மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம். இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும் செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

இன்று வெளியாவதாக இருந்த “செல்வம் தரும் ஹோமம்” பற்றிய பதிவு நாளை வெளியாகும். இன்றைய பதிவில் புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

முந்தைய மூன்று பதிவுகளிலும் புவனையின் மூல மந்திரங்களை ஹோமங்களின் போது கூறிடவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். ஹோமத்தில் பயன்படுத்தப் படும் பொருட்கள் மட்டும்தான் மாறுகின்றன, ஆனால் மந்திரம் ஒன்றுதான். இத்தனை மகத்துவமான மந்திரத்துக்கு உரிய தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தந்து அவளின் அருளைப் பெறும் முறையினை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை என்பவள் குழந்தை வடிவத்தையுடைய தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா உருவத்திற்கு சொந்தமானவள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம் மூலம் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.

அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
கண்காண இன்னம்வெகு கடாட்சமே"


- அகத்தியர் -

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார்.

தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை போட்டுக் கொண்டே புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும் என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம் சொல்லி கோதுமையைப் போட புவனை அம்மனின் அருள் கிட்டும் என்கிறார். அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.

நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

அடுத்த பதிவில் பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகின்றோம். நல்ல உடல் ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம் என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர் ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும் முன்னூறு ஆண்டுகள் வாழ முடியுமென்கிறார்.

ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா?, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன் பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள் பொதிந்திருக்கிறதா என ஆராயலாம். அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.

"ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"


- அகத்தியர் -

முக்கோணம் வடிவத்தை உடைய ஓம குண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில் ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும் கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008 முறைகள் செய்திட வேண்டுமாம்.

இந்த ஹோமத்தை ஒரு மண்டல காலத்திற்குள் நூறுமுறை செய்யும் ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும் இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் அளவிலா செல்வத்தை தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது.

எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.


- அகத்தியர் -


கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும்.

அக்கினியின் மூலமந்திரம்...

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்...

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"

இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். சுவாரசியமான தகவல்தானே...

நாளைய பதிவில் நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய “கிரக தோஷம்” போக்கும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

நண்பர்களே, இனிவரும் நாட்களில் சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். ஹோமங்கள் என்றால் ஏதோ ஒரு சிலரால் மட்டுமே செய்விக்க கூடியது என்பதாகவே நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த கருத்துக்களை சித்தர் பெருமக்கள் உடைத்தெறிகிறார்கள்.

குருவருளை வேண்டி வணங்கி இந்த ஹோமங்களை யாரும் செய்திடலாம். தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம் எதுவும் இதில் இல்லை. அந்த வகையில் முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி பார்ப்போம்.

சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில் பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான ஒரு ஹோம முறையினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே இன்னமொரு கருமானங்கேள்
கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
பிலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் எள்ப்பொரிகொண் டோமாமம்பண்ணு
தோணவே கிரகமதில் நின்றதோஷந்
சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"


- அகத்தியர் -

என்கோண வடிவத்தில் ஹோம குண்டம் ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார். இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு.

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள் பொரியினை நெருப்பில் போட நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.

எளிதாய் இருக்கிறதல்லவா... ஆர்வமுள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். நாளைய பதிவில் புத்திரபாக்கியம் தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஹோம குண்டத்தின் அமைப்பும்,வகைகளும்..

Author: தோழி / Labels: ,


சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை இந்த வாரத்தின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த பதிவுகளில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் இந்த ஹோமகுண்டங்களைப் பற்றி பார்ப்போம். சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடுமாம்.

ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தானான தீபமடா மந்திரபீடம்
சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
வானான அண்டமடா மந்திரபீடம்
மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"


- அகத்தியர் -

ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம் அவையாவன...

முக்கோணம்..நாற் கோணம்..ஐங்கோணம்..
அறுகோணம்..எண்கேணம்..
வட்டம்..

நாளைய பதிவில் ஹோமம் செய்வதைப் பற்றி பார்ப்போம்.

பிற்சேர்க்கை: ஹோமங்களின் அறிவியல் பற்றி நண்பர் ஒருவர் அனுப்பியிருக்கும் இணைப்பு ஒன்றினை பகிர்ந்திருக்கிறேன். பயனுள்ள தகவல்கள்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?

Author: தோழி / Labels: , ,

யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை.பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.

பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம்.

அகத்தியர் மற்றும் புலிப்பாணி சித்தர் தங்களின் பாடலில் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர்.

"நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
நலமான அரசினொடு மாவின் சுப்பி
சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே"


- புலிப்பாணிச் சித்தர் -

"கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே"

- அகத்தியர் -

இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...

ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும். இது தொடர்பான முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்.

மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.

மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஹோமங்களின் அறிவியல் தொடர்ச்சி...

Author: தோழி / Labels:சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன.

ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.

ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம்.

இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன்.

இனி இந்த ஹோமங்களில் என்னவெல்லாம் பயன் படுத்தப் படுகிறது என்பதை நாளைய பதிவில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஹோமங்களின் அறிவியல்!

Author: தோழி / Labels: , , ,

ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சித்தர்களின் யாக முறைகளைப் பற்றி பகிர்வதற்கு முன்னர், நானறிந்த சில அறிவியல் கூறுகளை இன்று பகிர விரும்புகிறேன்.

ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.

ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.

யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.

பதிவின் நீளம் கருதி யாகம் தொடர்பான மேலதிக தகவல்களை நாளை தொடர்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர் பாடல்களில் ஹோமம்!

Author: தோழி / Labels:

தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர்.நான் பார்த்த வரையில் அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது.

அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
கருணையடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா
தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.

- அகத்தியர் -

ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...

"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"

"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"

"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"

"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"

பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஹோம குண்டங்களின் வடிவங்கள் என்ன?, அவற்றின் வகைகள் யாவை?, என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே இனிவரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.

யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.

மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன. இணையத்தில் கூட இம்மாதிரியான அறிக்கைகளை நாம் காண இயலும். அவற்றை விரித்து விவரிப்பது இந்த தொடரின் நோக்கமன்று.

எனினும் இத்தகைய ஒரு சடங்கினைப் பற்றி சித்தர் பெருமக்கள் கூறியிருப்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம். மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,3,1 முதல் 6,6,6 வரையிலான பலன்களும், மின்னூலும்!.

Author: தோழி / Labels: , , ,

6,3,1.

பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு


உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்கிறார்.

6,3,2.

ஆச்சப்பா நல்லகாலம் அப்பனே வருகலாச்சு
தாஷிதானில்லையாறும் தனிமூன்றும்ரெண்டும் வீழ்ந்தால்
போச்சப்பா கவலையெல்லாம் போனெதோர் பொருளும்சேரும்
மாஷியாய் வாழ்வாய் நீதான் மக்களை பெற்றுகந்தே


ஆறும் மூன்றும் இரண்டும் வீழ்ந்திருக்கும் இந்த அமைப்பு உனக்கு நல்ல காலம் வருவதை குறிக்கிறது. பொன்னும் பொருளும் சேர புத்திர பாக்கியத்துடன் நிறைவாய் வாழ்ந்திடுவாய் என்கிறார் அகத்தியர்.

6,3,3.

அந்தோவுன் கிரகமெல்லாம் ஆச்சுதுநீசமாக
சந்தோஷம் மழியாமலாகும் தனித்தாறு மிருமுன்றுமானால்
நிந்தைகள் மிகவுண்டாகும் நிஷ்கடூரக்காரனாகும்
வந்தநோய் வைத்தங்காட்டும் வலிசண்டை பலவுண்டாமே.


பாய்ச்சிகை உருட்டலில் முதலில் ஆறும் அடுத்தடுத்து இரு முறை மூன்றும் விழுந்திருப்பது உனக்கு கெடுதலையே தரும். அவப் பெயரையும், குடும்பத்தினர் ஆதரவை இழக்கவும் வைக்கும். வலுச் சண்டைகளும்,நோயினால் கடுமையாக பாதிக்கப் படும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்.

6,3,6.

புலவித கவலைவேண்டாம் பகர்ந்தாறும் மூன்றாறானால்
நலமது மிகவேயுண்டு நம்பியதெல்லாம் லாபம்
கலகங் ளொழிந்து போகும் கங்கண ப்ராப்தமாகும்
வலப்பக்க மச்சம்காணும் வர்த்தகம் விர்த்தியாமே.


ஆறும் மூன்றும் ஆறும் விழுந்ததால் இனிக்கஷ்டமென்ற கவலையே வேண்டாம். எண்ணிய எண்ணம் நிறைவேறும். கலகம் ஒழிந்து களிப்பு பெருகிடும். வலது பக்கத்தில் இருக்கும் மச்சத்தினால் உனக்கு அதிர்ஷ்டங்கள் உண்டு என்கிறார் அகத்தியர்.

6,6,1.

விர்த்தியாய் நிலஞ்செழிக்கும் நீரதுசுரக்கும் கேணி
தற்போது ஈராறொன்றால் தழைத்துமே செழித்துவாழ்வாய்
அற்பமாய் நினைத்திடாதே அகஸ்தியா வாக்கியத்தை
சொற்படி யெல்லாம் நடக்கும் சுடடிராளி முருகன்சாக்ஷி.

உனக்கு ஈராறும் ஒன்றும் வந்ததால் உனக்கு விளைச்சல் பெருகி அதனால் செழித்து வாழ்வாய். இந்த வாக்கினை அற்பமாய் நினையாதே இதற்கு முருகப் பெருமானே சாட்சி என்கிறார்.

6,6,2.

சாக்ஷியே சாதிப்பாகும் சங்கடம் மிகவேநேரும்
சூக்ஷியாய் துரோகம் செய்வர் ஈறாதுமிரண்டும் விழ
மாகடஷிசேர் தொழிலும் போகும் மக்கட்கு பீடைகாட்டும்
ஆக்ஷியாய் எல்லாம் நஷ்டம் அகஸ்தியருரைத்தவாக்கே.


ஈராறும் ஓன்றும் விழுந்ததால் துயரமே மேலிடும். துரோகங்களை சந்திக்க நேரிடும். தொழில் சிதையும்.குடும்பத்தினருக்கு நோய் நொடி உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

6,6,3.

வாக்கது தப்பாதப்பா விழுந்த நீராறுமூன்றும்
போக்கிய தொழிலும் செல்வம் ஜீவனும் வந்துசேரும்
பாக்கியம் மிகவும் பெற்று பலவித மேன்மையாவாய்
நோக்குவாய் மூதோர்வாக்கை நம்பி நீ வாழ்குவாயே.

உனக்கு ஈராறும் மூன்றும் விழந்ததால் கைவிட்டுப்போன தொழில், செல்வம் மீள வந்து சேரும். பிரிந்தவர்கள் தேடி வருவர். எல்லா வகையான நன்மைகளையும் பெற்று மேன்மையடைவார் என்கிறார் அகத்தியர்.

6,6,6.


வாழ்வைக் கெடுக்க வேதான் வங்சகர் கூடஞ்சேரும்
தாழ்வுகள் மிகவேநேரும் தனிவுள மூவாறானால்
சூழ்வினையாலே உந்தன் செல்வாக்கு மழிந்துபோகும்
பாழ்பட கிரகமெல்லாம் பகையாச்சு அஞ்சிடாதே.


பாய்ச்சிகை உருட்டிட மூன்று முறையும் ஆறு விழுமாயி அது உனக்கான நல்ல கிரகங்கள் எல்லாம் பகையாகி நிற்கிறது என்பதாகும். உன்னை வீழ்த்த வஞ்சகர் கூட்டம் காத்திருக்கிறது. முன்வினையினால் உனது செல்வம் அழியும். கீழான நிலைக்கு தள்ளப் படுவாய். அஞ்சிடாதே என்கிறார் அகத்தியர். அதனால் தாழ்வுகள் ஏற்படும், செல்வாக்கும் அழியும், பலவித சேதமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.

கடந்த ஐந்து நாட்களாக வெளியான பதிவுகளை மின் நூலாக்கி இருக்கிறேன். இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளவும்

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,1,1 முதல் 6,2,6 வரையிலான பலன்கள்..

Author: தோழி / Labels: , ,

6,1,1.

கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே
நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா
பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா
வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும்.


ஆறும், அடுத்தடுத்து இரண்டு முறை ஒன்றும் விழுந்திருப்பதால் நன்மை உண்டாகுமென குதூகலமடையாதே. பாடுபட்டு சேர்த்த பொருள் அழியும். இரண்டு வாரம் கழிந்தால் நன்மை உண்டாகும் என்கிறார்.

6,1,2.

வேணமென்றே நீ செய்யும் வேலையில் லாபமுண்டாம்
பூணுமாரொன்றும் ரெண்டும் புகழுறவிந்தாலே
தோணுமே பலிக்குமெண்ணம் தொந்தார்த்தமொழிந்து போகும்
காணுவாயிதனினுண்மை கந்தனின் கருணையுண்டாம்.


ஆறும், ஒன்றும், இரண்டும் வீழ்ந்ததால் செய் தொழிலில் லாபமுண்டாகும். மனதில் நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். குடும்பத்திலுள்ள தொந்தார்த்தங்க ளெல்லாம் ஒழிந்து போகும். இன்னும் சில நாளில் இதனுண்மை காண்பாய் என்கிறார்.

6,1,3.

கருணையு முனக்குயேது கிரகங்களெல்லாம் தீது
ஆறு ஒன்றும் மூன்றும் விழ அதிர்ஷ்டமும் போச்சுதப்பா
பொருளது விரையமாகும் பொல்லாப்பு அதிகமாகும்
உருபடாதுந்தன் செய்தி ஒன்றுக்கும் மஞ்சிடாதே.


ஆறம், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உந்தன் எண்ணம் பலிதம் ஆகாது. கைப்பொருள் விரையமாகும். பொல்லாப்பு அதிகரிக்கும், நீ எண்ணிய எண்ணங்கள் உருப்படாது இருந்தாலும் அஞ்சாதே என்கிறார் அகத்தியர்.

6,1,6.

அஞ்சிடவேண்டாமப்பா ஆறும் ஒன்றாலும் வீழ்ந்தால்
வஞ்சகம பீடை நோயும் வறுமையும் ஒழிந்துபோகும்
துஞ்சவே தானியங்கள் துணைவரும் வந்து சேர்வார்
கொஞ்சநாள் போனதானால் கொடுக்கல்வாங்கலிலே லாபம்.


உனக்கு ஆறும், ஒன்றும், ஆறும் விழுந்ததால் உனைத் தொடர்ந்த பீடையும், நோயும், வறுமையும், வம்பு வழக்குகளும், பகைவர்களின் வஞ்சமும் ஒழியும். நிலம் செழித்து தானிய விளைச்சல் பெருகும். புதிய சினேகிதர்களும் சேருவார்கள். அதனால் லாபமுண்டாகும் என்கிறார்.

6,2,1.

பாங்கவே மனையும்மாடும் ஆறுரெண்டொன்றால் லாபம்
ஓங்குமே சிறுவர்கட்கு உயர்தரக் கல்வியெல்லாம்
பாங்குள மனையைவிட்டு பரதேசம் போனபேரும்
தேங்கிடா வந்தேசேர்வார் தீர்ந்திடும் உனது துன்பம்


ஆறும், இரண்டும், ஒன்றும் விழுந்ததால் எந்த காரியத்திலும் நல்ல லாபமுண்டாகும். குடும்பத்தில் சிறுவர்களுக்கு கல்வி ஞானமும் ஓங்கும். சொந்தமாய் வீடும், கால்நடைகளும் அமையும். மனங்கலங்கிச் சொன்றவராயினும் சீக்கிரத்தில் வீடுவந்து சேருவார்கள். உனது கவலைகள் ஒழியும் என்கிறார் அகத்தியர்.

6,2,2.

துன்பமே மிகவுண்டாகும் தொகுத்தாறு மீறிரெண்டால்
அன்பு பேரானால் அடுத்துமே பகையுமாவார்
நன்றி நீ செய்தபோது நலமொன்றும் ஏற்படாது
தன்மையுமழிந்து போகு தரித்திரனாக்குமாமே.இப்பொழுது ஆறும் அடுத்தடுத்து இரண்டும் வந்ததால் அன்புள்ள சினேகிதர் ஆயினும் பகையாவார்கள். நீ நன்மையை செய்தாலும் அதனால் நலம் ஏதும் விளையாது. உனது தன்மை அழிந்து தரித்திரம் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

6,2,3.

ஆக்குமே தனவானாக ஆறிரெண்டு மூன்று வீந்தால்
போகுமே கவலையெல்லாம் பொன் பொருள் மிகவே சேரும்
தேக்குமே உனக்கு நன்மை தேகத்தின் பிணியும் நீங்கும்
நோக்குமே நன்மையாக நல்லதோர் கிரகமெல்லாம்.


ஆறும், ரெண்டும், மூன்றும் வீழ்ந்ததால் இந்த அமைப்பு உன் கவலையெல்லாம் அகற்றி செல்வத்தை கொண்டு தரும்.நோய் நொடிகள் விலகிடும்.கிரக அமைப்புகளினால் நலமுண்டாகும் என்கிறார்.

6,2,6.

கிரகத்தின் கோளாறின்று காட்டிடும் கவலையாலே
உரமுள்ள ஆறும் ரெண்டும் உடனாறும் வீழ்ந்ததப்பா
பரபரப்பதிகமாகும் பாவியென்ற சுவர்கள்
சிறப்புடன் சிலநாள் போக சேமமே பெறுகுவாயே.

ஆறும், இரண்டும், ஆறும் விழுந்ததால் கிரக கோளாறின் காரணமாய் கவலையும், பதட்டமும் அதிகரிக்கும். நற்பெயருக்கு களங்கமுண்டாகும். இந்த நிலமை சில நாளில் மாறிடும் என்கிறார் அகத்தியர்.

இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். தவிரவும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொடரை முழுமையா மின்னூலாகவும் நாளை பகிர்கிறேன்... காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 3,1,1 முத்ல் 3,6,6 வரையிலான பலன்கள்..

Author: தோழி / Labels: , ,

அகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆரூடத்தில் இன்று 3,1,1 முதல் 3,6,6 வரையிலான பலன்களைப் பார்ப்போம்.

3,1,1.

தெய்வீகத் தன்மையாலே தேர்ந்து நீயடைவாய் லாபம்
பையமூன்றிரொன்றாக பாலனே விழுந்ததாலே
வையகந்தனிலுனக்கு வாழ்விலே பின்னமில்லை
செய்யவே தொழிலுமோங்கும் தீர்க்கமாய் ஆயுளுண்டாம்.


பாய்ச்சிகையை உருட்டும் போது ஒருமுறை மூன்றும் இருமுறை ஒன்றும் விழுந்ததால் தெய்வ பக்தியினால் வேண்டிய லாபங்களை அடைவாய். குடும்பத்திலும் தொழிலிலும் எவ்வித குறையும் ஏற்படாது. தீர்க்கமான ஆயுளுண்டாகும் என்கிறார்.

3,1,2.

ஆயுளும் அற்பமில்லை அவனியில் நன்மையில்லை
தோயமூன்றொன்று ரெண்டும் தொகுத்த தாலல்லாபமில்லை
சேயரும் பெண்டீருந்தன் சொல்தனை மதிப்பதில்லை
சகாயமு மொருவரில்லை சஞ்சலம் கொஞ்சநாளே.


மூன்றும், ஒன்றும், இரண்டும் விழுந்ததால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறாது. மனைவி மக்களின் வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாக நேரிடும். உதவிக்கு யாருமில்லாத நிலையும், உடல் நோவும் வாட்டும். எல்லாக் கவலைகளும் சில நாளில் நீங்கும் என்கிறர்.

3,1,3.

கொஞ்சவே மூன்றுமொன்றும் மூன்றுமே விழுந்ததாலே
சஞ்சலமொழிந்து போச்சு சகலமும் நன்மையாச்சு
வஞ்சகம் செய்தபேர்கள் வகையற்று ஒழியலாச்சு
அஞ்சாதே நீ செய்வதெல்லாம் அடைகுவாய் லாபந்தானே.


உனக்கு மூன்றும், ஒன்றும், மூன்றும் பாய்ச்சிகையில் விழுந்ததால் கவலைகள் எல்லாம் தீர்ந்து நன்மைகள் உண்டாகும். வஞ்சகம் செய்தவர்கள் அழிந்து போவார்கள்.அஞ்ச வேண்டாம்,இனி நீ செய்வதெல்லாம் நன்மையாகவே முடியும்.

3,1,6.

லாபமில்லை மூன்றொன்றாறில் நஷ்டமேயாகும்பாரில்
ஆபத்தும் சினேகராலேயாகிவிட மர்க்கமுண்டு
கோபத்தைக் கைக்கொள்ளாதே கொடுமைகள்மிகுமே
சோபிதம் குறைந்துபாரில் துன்பமும்மிகவுண்டாமே


உனக்கு மூன்றும் ஒன்றும் ஆறும் பாய்ச்சிகையில் விழுந்ததால் சினேகிதரால் ஆபத்துக்கள் நேரலாகும். ஆனால் நீ கோபத்தைப் பாராட்ட வேண்டும். கிரகத்தின் கோளாறினால் உனது குணமும் கெடும் மாறுதலடையும். எந்த வித லாபமும் கிட்டாமல் அதிக துன்பமுண்டகும்.

3,2,1.

மிகமிக துயரங்காட்டும் மூன்றிரெண்டொன்றும் வந்தால்
பசுகமது ஒழிந்துபோகும் சொல்மொழி தவறலாகும்
கையதுமிகவே நேரும் பயங்கர நோயுண்டாகும்
வகையற்று பொருளிழந்து வறுமையால் வாடுவாயே.


மூன்று, இரண்டு, ஒன்று என விழுந்தால் மிகத் துயரத்தை உண்டாக்கும். குடும்பத்தின் சுகத்தை கெடுக்கும். கொடுத்த வாக்கு தவறிப்போகும். பகையும், கடுமையான நோயும் உண்டாகும். கைப்பொருள் விரையமுண்டாகும் என்கிறார்.

3,2,2.

வாடவே வேண்டாமப்பா வந்தது நல்லகாலம்
நீடவே மூன்றிரெண்டும் நிஷ்டூர மொழிந்து போகும்
தேடவேபோன ஜீவன் தெற்கெனும் திசையில்கிட்டும்
பாடலாமிதனை நம்பி பலன்பெற்று ஜீவிப்பாயே


ஒருமுறை மூன்றும் இருமுறை இரண்டு விழ இனி நன்மையான பலன்களெல்லாம் ஏற்படும். தேடிப்போன ஜீவன் தெற்கு திசையிலே எதிர்பாராதவிதமாய் கிடைக்கும். இனி உன் கவலைகள் நீங்கி உலகில் சுகமாக வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.

3,2,3.

ஜீவிய காலமெல்லாம் வறுமையால் வாடி நின்றாய்
பாவிகள் சிலபேராலே பலவித பொருளைத் தோற்றாய்
ஆவியை ஒழிப்பதற்கும் யோசிப்பார் கவனம் வைப்பாய்
சேவித்தே ஈசன் தன்னை ஜெகமதில் வாழ்வாய் முன்னே.


மூன்றும், இரண்டும், மூன்றும் விழுந்திருப்பது உன் கஷ்ட நிலையினையே காட்டுகிறது. தீயவர்களினால் உன் பொருளை இழந்திருப்பாய். அவர்களினால் உன் உயிருக்கும் ஆபத்துண்டு. கவனமாய் இரு!, எல்லாம் வல்ல ஈசனை வணங்கி நலமாய் வாழ்ந்திடு என்கிறார்.

3,2,6.

முன்கால வினையிதென்று மூர்க்கமாய் திரியவேண்டாம்
உன்காலம் நல்லதாச்சு விழவும் மூன்றிரண்டுமாறும்
பின்னால் நீ வேணலாபப் பயிர்த்தொழில் செழித்துவோங்கும்
ஒன்றுக்கும் அஞ்சிடாதே ஒருவாரம் கழிந்திடாயே.மூன்றும், இரண்டும், ஆறும் விழுந்திருப்பதால் உனக்கு நல்ல நேரம் உண்டாகியிருக்கிறது. இது உன் முன்வினை பயனால் வந்தது என இருமாந்து இருந்து விடாதே. இனி வரும் நாட்களில் உனக்கு விவசாயம் செழித்து லாபம் பெருகும் என்கிறார்.

3,3,1
.

குழித்திடாய்யிரு மூன்றொன்றும் கருத்துடன் விழுந்ததால்
பத்தவர் பாழாய் போவார் இழித்தவர் இடர்க்குள்ளாவார்
செழிக்குமுன் குடும்பமப்பா சேரும் பொன் பூஷணங்கள்
அழித்ததோர் பொருளும் சேரும். அன்பு கொண்டிருந்திடவே.


இரண்டு முறை மூன்றும் அடுத்து ஒன்றும் விழ உன்னை பழித்தவர் அழிந்து போவார்கள், எதிரிகள் துயருக்கு ஆளாவர்கள். பொன், பொருள் சேர புகழுடன் வாழ்ந்திருப்பாய் என்கிறார் அகத்தியர்.

3,3,2.

கோண்டதோர் கவலையாலே குன்றியே வாடுகின்றாய்
இன்றிரு மூன்றும் ரெண்டும் வீழ்ந்ததால் பொருளும் நஷ்டம்
அண்டொணா துயர்க்குள்ளாக்கும் அபலமாய் எண்ணம்
கண்டாலும் விஷம் போல் பார்ப்பார் கஷ்டமும் துயர முண்டாம்.


முதல் இரண்டு முறை மூன்றும் அதனையடுத்து இரண்டு விழுந்திருப்பது உன் துயர நிலையை குறிக்கிறது. உறவுகள் வெறுத்து ஒதுக்குவர். மனக் கவலையும், பொருள் விரயமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

3,3,3.

குண்டாலும் அஞ்சுவார்கள் கருத்துடன் முன்மூன்றானால்
விண்டாலும் சபைநடுங்க வேணவே தனமும் சேரும்
செண்டாலும் சிறுவராலே சீமான்போல் வாழ்வுண்டாகும்
கொண்டாடும் குலதெய்வங்கள் குதிகொள்ளும் உந்தனுக்கே.


மூன்று முறை மூன்று வீழ்ந்தால் இனி உனக்கு நல்ல காலம் என்பதாகிறது. பெரிய சபைகளில் உனக்கு மரியாதை உண்டாகும். எதிரிகள் அஞ்சி நடுங்குவர். உன் வாரிசுகளினால் செல்வம் குவியும். செல்வ சீமானாய் வாழ்க்கை அமையும் குலதெய்வங்கள் உனக்கு துனையாக இருக்கும் என்கிறார்.

3,3,6.

உந்தனின் கிரகமெல்லாம் வக்கரமாச்சுதப்பா
சொந்தமாய் தொழில் செய்தாலும் சோங்கியே போகுமப்பா
விந்தையாய் இருமூன்றாறும் வந்ததால் கவலையப்பா
சிந்தனை மிகவேநேரும் ஜீவன்கள் நஷ்டமாமே.முதல் இரண்டு தடவைகள் மூன்றும், அடுத்து ஆறும் விழுந்தால் உனது நல்ல கிரகங்கள் எல்லாம் வக்கரித்த நிலையில் இருப்பதை காட்டுகிறது. சொந்த தொழில் சிதையும், கவலைகள் சூழும். குடும்பத்தில் உயிரிழப்புகள் உண்டாகும் என்கிறார்.

3,6,1
.

நஷ்டமே மிகவுண்டாகும் நலமில்லை மூன்றாரொன்றில்
இஷ்டம்போல் நடப்பாயானால் இடரது மிகவேநேரும்
கஷ்டமாம் குடும்பந்தன்னில் கைப்பொருள் விரையமாகும்
துஷ்டரால் துடுக்கும்நேரும் சலிப்பது அதிகமாகவே.மூன்றும், ஆறும், ஒன்றும் விழ நஷ்டமே உண்டாகும். தன்னிச்சையாக செயல் பட்டால் மனத் துயரும், கைப் பொருள் விரயமும், எதிரிகளினால் ஆபத்தும் உண்டாகும் என்கிறார்.

3,6,2
.

அதிகமாய் கவலைவேண்டாம் அதிர்ஷ்டமுமுனக் குண்டாச்சு
பதிதனில் மிகவுமேன்மை பாக்கிய மடையப்போராய்
கதியென வடைந்தபேரை பாத்து ரஷிப்பாய் நீ தான்
நிதியுடன் ஏழைகட்கு நிகழ்த்துவாய் தர்மந்தன்னை.


பாய்ச்சிகை உருட்டிடும் பொழுதில் அடுத்தடுத்து மூன்றும், ஆறும், இரண்டும் விழ இனி வரும் நாட்களில் உனக்கு நன்மையுண்டாகும். மேலான நிலைகளை அடைவாய். தஞ்சமென வருவோரை காத்து ரட்சிப்பாய். ஏழைகளுக்கு உன்னால் இயன்ற தர்மத்தை செய்து வர நன்மை உண்டாகும் என்கிறார்.

3,6,3.

தன்னையே நோகச் செய்யும் தரித்திர திசையுண்டாகும்
பின்னும் மூன்றாறு மூன்றும் பிழையுற விழுந்ததாலே
ஒன்றுமே புலப்படாது உன்தொழில் பொருளும் நஷ்டம்
துன்பமாய் நோயுண்டாகும் துலைந்திடும் மாதமொன்றில்


மூன்றும், ஆறும், மூன்றும் வீழ்ந்தால் உனக்கு மிகவும் தரித்திரம் உண்டாகும். புத்தி செயலிழந்து தொழில் முடக்கம் உண்டாகி பொருள் விரையமும் ஏற்படும். நோயும் உண்டாகும். இவையனைத்தும் ஒரு மாதத்தில் நீங்கிடும் என்கிறார் அகத்தியர்.

3,6,6.

ஒன்றுக்கு மஞ்சிடாதே ஒரு மூன்று யிராறானால்
நன்றப்பா நினைப்பதெல்லாம் நடந்திட ஜெயமேகாணும்
இன்றுடன் உனது பீடையிடர்களுமொழிந்து போச்சு
ஊன்மனைதனில் விவாகம் உறுதியாய் கூடும்பாரே.


மூன்றும் அதையடுத்து இரண்டு ஆறும் வீழ்ந்தால் இனி நீ நினைப்பதெல்லாம் ஜெயமாகும் என்கிறார் அகத்தியர். இன்றுடன் உன்னை பிடித்திருந்த தீயவைகள் விலகி விரைவில் உனது இல்லத்தில் திருமணம் ஒன்றும் நடைபெறும் என்கிறார்.

இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 2,1,1. முதல் 2,6,6. வரையிலான பலன்கள்..

Author: தோழி / Labels: , ,

2,1,1.

செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால்
பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது
மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார்
ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும்.உனக்கு இரண்டும், ஒன்றும், ஒன்றும் உதயமானதால் அடிக்கடி பொருள் நஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும். மனைவி மக்களுடன் பிணக்கு உண்டாகும். எண்ணம் நிறைவேறாது எண்கிறார்.

2,1,2.

கூடுமேயெண்ணமெல்லாம் கூறும் ரெண்டொன்றும் ரெண்டும்
ஓடுமே வினையெல்லாம் உடன்பிறந்தோரால் நன்மை
தேடுமுன் கிடைக்குமப்பா தொழிலது நீடித்தோங்கும்
கோடுசொல் தவறிடாத கோமான் போல் வாழ்குவாயே.தற்போது இரண்டும், ஒன்றும், இரண்டும் விழுந்தால் பொல்லாத நோயும், தீவினைகளும் நீங்கும். உன்னுடன் பிறந்தவர்களால் வேண்டிய லாபமுண்டாகும். நாடிய பொருள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். தொழில் தழைத்து ஓங்கும், தனவந்தனாக வாழ்வாய் என்கிறார்.

2,1,3.


வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது
தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது
சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும்
கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே.


இரண்டும், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உனக்கு கேது வக்கரித்திருக்கிறான் என்று பொருளாகிறது. அதனால் சுகமான வாழ்க்கை இருக்காது. குடும்பம் சிதறி ஆளுக்கொரு இடமாக மாற்றி இருக்க வைக்கும். சில பேர்களால் உனது வம்சத்திற்கு அவமதிப்பைத் வந்து சேரும் என்கிறார்.

2,1,6.

விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழைய நாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன் வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.


இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும். முன்னோர்களின் குடும்ப வழக்குகளின் சிக்கலொழியும். மனையாளுக்கு கெர்ப்பம் தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும் உன் வார்த்தைக்கெதிர் வார்த்தையிராது, கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.

2,2,1.

தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவி விருரெண்டான்றால்
வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும்
செய்யவே தொலிலுமோங்கும் சந்தோச செய்தி தோன்றும்
பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ


உனக்கு இரண்டுமுறை இரண்டும் இறுதியில் ஒன்றும் விழுந்தால் எத்தகைய துன்பமாயினும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். தொழிலில் அளவற்ற லாபங்களையளிக்கும். பல ஊர்களிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். தவிர நீ பொய்யுரையாத புனிதனாகவும் வாழ்வாய் என்கிறார்.

2,2,2.


அன்று நீ பாவம் அலைச்சலும் திரிச்சலாகும்
நன்றில்லை மூரெண்டானால் நயம் பேசி மோசம் செய்வார்
வென்றிடும் வழக்கானாலும் வகையற்று தோற்றுபோகும்
ஒன்றுமே பயன்படாது உருபடா முறையிதமே


மூன்று முறையம் இரண்டு விழுமானால் முன் காலத்தில் நீ செய்த வினையினால் இப்பிறவியில் வெகு கவலைகள் உண்டு என்கிறார். மேலும் எக்காரியத்திலும் நன்மை ஏற்படாது. வெல்லக் கூடிய வழக்குகள் கூட கலகத்தால் தோல்வியாகும். நீ செய்யும் காரியம் எதுவும் உருப்படாது. சில நாள் போக வேண்டும் என்கிறார்.

2,2,3.

ஆமென விரண்டும் ரெண்டும் அடுத்தது மூன்றும் வீழ்ந்தால்
தாமதமாகா தெண்ணம் தழைத்திட செல்வமோங்கும்
போமென வெளியூர் போக பல தொழில் விர்த்தியாகும்
காமனை யெரித்தோன் மைந்தன் கந்தனும் துணையிருப்பான்


இருமுறை இரண்டும் இறுதியில் மூன்றும் விழுந்தால் ஆகாத காரியமாயினும் தாமதமின்றி முடியும். செல்வமோங்கும், தொழிலில், வெளியூர் பயணத்தில் லாபமுண்டாகும். கந்தநாதனின் கருணையால் கவலைகளெல்லாம் நீங்குமாம்.

2,2,6.

துணையென நம்பிடாதே தொல்லையாம் பலபேர் நேசம்
இணைபுடனிருரெண்டாறும் இடரப்பா விழுந்ததாலே
வினையமாய் தொழிலும் நஷ்டம்வந்திடும் வழக்கரும்வம்பும்
மனையிலே களவு போகும் மனைவிக்கும் தோஷமாமே


உனக்கு இரண்டு முறை இரண்டும் கடைசியில் ஆறும் விழுந்தால், நீ ஒருவரையும் நம்பாதே!,சிலபேர்களால் உனக்கு இடர்விளையக்கூடும். தொழிலில் நஷ்டம் வம்பு வழக்குகளேற்படும். மனையில் களவு போகும். மனைவிக்கு பலவித நோய்களை காட்டும் என்கிறார்.

2,3,1.

தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால்
மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள்
காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும்
பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை.உனக்கு இரண்டும் மூன்றும் ஒன்றும் விழுந்ததால் சொந்தங்களும், நட்புகளும் உனக்கு மோசமே செய்ய துணிவார்கள். கைப்பொருள் விரையமும், தொழில் நஷ்டமும் அதனால் கவலைகளும் உண்டாகும். உன்னிடம் அன்புள்ளவர்கள் கூட உன்னை விட்டு பிரிவார்கள் என்கிறார்.

2,3,2.

உன்மனம் போலேயாகும் மிரண்டு மூன்றிரண்டே வீழ்ந்தால்
பண்டைய பொருளும் சேரும் பகைவர்கள் குலமே நாசம்
பெண்டுடன் புத்திரபேரும் பெருகுவாய் வேணலாபம்
கொண்டாடும் உனது தெய்வம் கூடவே துணையிருக்கு.


இரண்டுடன் மூன்றும் இரண்டும் விழுமானால் எதிரிகள் இல்லாத வாழ்க்கையும், பூர்வீக பொருளனைத்தும் வந்து சேரும். இரண்டு தாரங்களுண்டாகும், புத்ர லாபம் பெருகும், பகைவர்களின் குலமே நாசமாகும். உன் வீட்டில் மடிந்த குலதெய்வங்கள் உனக்குப் பக்கத்துணையாக இருக்கும் என்கிறார்.

2,3,3.


இருக்குமே கஷ்டமாக இரண்டுடன் யிருமூன்றானால்
உருக்குமே உள்ளந்தன்னை உலகிலே கெடுபேராகும்
பெருக்கமாய் இருந்தசெல்வம் பலவிதவிறையமாகும்
நொறுக்குமே நோய்தானுன்னை நிலையது நீங்கிப்போகும்


இரண்டுடன் இரு மூன்று விழுந்தால் அதிக கஷ்டங்களும் அதனால் மனதை வருத்தக் கூடிய கவலைகள் உண்டாகும். கெட்ட பெயரை ஏற்படுத்தும். நிறைந்திருந்த செல்வம் பல வகையில் விரயமாகும். இதனால் நோயும், கவலையும் சூழ்ந்து சுயபுத்தி மாற்றும் என்கிறார் அகத்தியர்.

2,3,6.

நீங்கும் கவலையெல்லாம் இரண்டு மூன்றாறுமானால்
ஓங்கிடும் உனதுசெல்வம் உயருமே தொழில்தானப்பா
சோங்கிடும் தோஷம்நோயும் தொலைத்திடும் அஞ்சிடாதே
வாங்கிய கடன்தான் நீங்கி வறுமையுமகன்றுபோமே.


இரண்டும், மூன்றும், ஆறும் விழுந்ததால் கவலைகள் எல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். செல்வம் ஓங்கும், மேலான தொழிலுண்டாகும், சகல தோஷங்களும், நோயும் நீங்கும், கடன்தீரும், குடும்பத்தின் வறுமையகலும் என்கிறார்.

2,6,1.

போமெனதுயரம் போகும் பக்ஷமாய் ரெண்டாறொன்றில்
கோமான்போல் வாழ்வுண்டாகும் குடும்பத்தில் மணமே
தாமதமின்றி நோயும்தணிந்திடும் வெளியூர் போகக்கூடும்
ஷேமமேத மிதவுமுண்டாகும் ஜெகம் புகழடைகுவாயே.


இரண்டும், ஆறும், ஒன்றும் விழுந்தால் இல்லறத்தின் துன்பங்களெல்லாம் விலகும், தனவந்தனாக வாழ்வு ஏற்படும். மனையில் மணங்கூடும்,நோய்கள் நீங்கும், வெளியூர் போகவே ஷேமத்தைத் தரும், பிரக்யாதியளிக்கும் என்கிறார்.

2,6,2.

வாயவே யிரண்டுமாறும் வருத்தமே இரண்டும் வீழந்;தால்
தோயவே பொருளும் நஷ்டம் தொழில்தனில் நிந்தையுண்டாம்
உபாயமாய் சிலபேராலே விரோதமும் கலகமாகும்
காயமே யருந்தபோதும் கடவுளை மறந்திடாதே.


உனக்கு இரண்டும், ஆறும், இரண்டும் விழுந்ததால் வருத்தமுண்டாகும். பொருள் நஷ்டமும் தொழில் முடக்கம் உண்டாகும். சில பேர்களால் உனக்கு கலகமும் விரோதமும் உண்டாகும். ஆனால் எத்தகைய துன்பம் நேரிடினும் கடவுளை மறவாதே, உன் கஷ்டமெல்லாம் நீங்கிப் போகும் என்கிறார்.

2,6,3.

முறைந்திட்டோர் சேகரித்த மண்மனை வந்துசேரும்.
இரண்டுடனாறும் மூன்றும் இணங்கிட செல்வமோங்கும்
சிறந்திடும் நாற்கால் ஜீவன் சீக்கிரம் யெண்ணம் கூடும்.
துறந்துமே சென்றேபேரும் துரிதத்தில் வருகுவாரே.


இரண்டும், ஆறும், மூன்றும் விழுந்தால் பெரியோர்கள் தேடிய மனைபூமி நிலம் முதலியவைகள் சேரும். செல்வமானது ஓங்கும். நாற்கால் ஜீவன் கொள்ள பால் பாக்கியம் உண்டாகும். எண்ணமும் சீக்கிரத்தில் கூடும். கவலையடைந்து மனைவிட்டு சென்றோர்களும் வந்து சேருவார்கள் என்கிறார் அகத்தியர்.

2,6,6.

வாரென யிரண்டீராறும் வந்திடில் கெடுதியப்பா
நேரவே எடுத்தவேலை நிதானமே மிகந்துகூடும்
பாரது மூளுமப்பா பொரந்திய குடும்பந்தன்னில்
தேரவே வழியண்டு துதித்திடாய் தெய்வந்தன்னை


இரண்டும், இருமுறை ஆறும்விழ எடுத்தவேலைகள் எதுவாயினும் நிதானமாகவே கூடும். மனையில் சண்டை நடக்கும்.பலவித கவலையுண்டாகும். ஆனால் உனது குலதெய்வத்தையோ நவக்கிரகத்தையோ பூஜை செய்ய நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் மூன்றாம் எண்ணுக்குறிய பலன்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 1,1,1 முதல் 1,6,6 வரையிலான பலன்கள்..

Author: தோழி / Labels: , ,பாய்ச்சிகை எனப்படும் நான்கு முக மரக் கட்டையினை மூன்று தடவைகள் உருட்டுவதன் மூலம் கிடைக்கும் எண்களைக் கொண்டு அதற்கான பலன்களை அகத்தியர் அருளியிருக்கிறார் அந்த வகையில் இன்றும் 1,1,1 முதல் 1,6,6 வரையிலான எண்களுக்கான பலனைக் காண்போம்.

1,1,1.

மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம்
அயபுவி மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய்
பம்பு சூனியமும் நீங்கும் பலவித லாப முண்டாம்
தம்பிரான் சாக்ஷியாக தாக்ஷிதானிலைபாரே.

மூன்று முறையும் ஒன்று விழுந்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும். மன்னன் போல் வாழ்வாய். பம்பு, சூனியம் நீங்கும் பலவிதத்தில் லாபமுண்டாகும். ஒருவித கவலையும் ஏற்படாது.

1,1, 2.

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.

ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும்,சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.

1,1,3.

தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால்
ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோமுண்டாம்
வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம்
தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம்.

முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிற ார்.

1,1,6.

உண்டப்பா கெடுதியுண்டு ஒன்றுடனொன்று மாறும்
நின்றிட விழுமானால் நிலைக்காது நினைத்த எண்ணம்
அன்றியும் அரசராலே அவகேடு வந்து நேரும்
சென்றிடும் செல்வமுற்றும் சொல்வது விஷம்போலவே.

ஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.

1,2 ,1.

விஷபாம்பை போலே பார்ப்பார் ஒன்றுரெண்டொன்று வீழ்ந்தால்
பசப்பு வார்த்தைகள் பேசிபறிப்பாருள் பொருளை எல்லாம்
நிஜமாக உரைத்திட்டாலும் நியாயமுணக்கிராது
கசங்கிட கடனில் தொல்லை காட்டிடும் கவலையாமே.

ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

1,2,2.

கவலையேன் ஒன்றும் ரெண்டும் இரண்டுமே விழுகுமானால்
ஷதவணையில்லாமல் சேரும் நாள் பொருளும் ஜீவன்
குவலயத் தன்னிலுந்தன் குணத்தை பாராட்டுவார்கள்
துவக்கிடும் நோயும் நீங்கும் துணைவராலே சகாயம்.

ஒன்றும், இரண்டும், இரண்டும் விழந்தால் பலவிதமான லாபமுண்டாகும். கைவிட்டுப்போன பொருளாயினும், ஜீவனாயினும் தவணையில்லாமல் எட்டு நாளைக்குள் வந்து சேரும். உன்னை மிகவும் நல்லவனென்று புகழ்வார்கள். ஆரம்பமாகும் நோயும் நீங்கும். சினேகிதர்களால் உதவியுண்டாகும். என்கிறார்.

1 ,2,3.

சகாயத்தால் அபாயம் நேரும் சரியொன்றுமிரண்டும் மூன்றும்
விகாரமாய் தோன்றுவாய் நீ விண்பெய ரெடுக்கலாகும்
அகாலமாய் மரணசேதி அப்பனே கேட்பாய் நீயும்
சுகரசுக மிழந்தபோதும் தைரியந்தனை விடாதே.

ஒன்றும், இரண்டும், மூன்றும் விழுந்தால் உன் கிரகக் கோளாறினால் உன் முகமே விகாரமாகத் தோன்றும். பெயரும் புகழும் கெடும். பிறறுக்கு உதவினாலும் அதனால் அபாயமுண்டாகும். உறவினர்களுக்குள் திடீரென மரணச்சேதியும் கேட்பாய். மேலும் உனது சுகம் முற்றும் இழந்தாலும் உனது தைரியத்தை மட்டும் விடாதே என்கிறார்.

1,2,6.

தைரியத்தை விடாதே தனியொன்றும் மிரண்டுமாறும்
வைரயா யிருந்தபேரும் வணங்குவாருன்னைக் கண்டால்
சௌரியத் தொழிலில் பாபம் சஞ்சலம் பிணியும் நீங்கும்
பரிவுடன் பிறக்கும் பிள்ளை பலித்திடும் அதனால்யோகம்.

ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் ,கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.

1,3,1.

யோகமுண்டு ஒன்றும் மூன்றும் உடனொன்றும் விழுகுமானால்
ஏகமாய்ப் பொருள் சேரும் இடரின்றியெண்ணங்கூடும்
சாகவே வாய்ந்த நோயும் சுகமாகும் மருந்தினாலே
வேகமாய் செய்திதோன்றும் வியாபாரம் விர்த்தியாமே.

ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விர்த்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

1,3,2.

ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து போகும்
போமப்பா உந்தன் கீர்த்தி பூஜிப்பாய் நவக்கிரகத்தை.

ஒன்றும்,மூன்றும்,இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.

1,3,3.

கிரகங்கள் நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு
மறைந்ததோர் பொருளுஞ்சேரும் மருந்தினால் நோயும் நீங்கும்
சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும்
அறமது புரிந்துவாழ்வாய் அகஸ்தியர் மொழிமீறாதே.

ஒன்றும், மூன்றும்,மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கலியாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.

1,3,6.

மீறியேவுந்தனை வாக்கை மனைவி மக்களும் நடப்பார்
தூறியே மிகுபேர் நஷ்டம் துணைவரால் வந்துநேரும்
ககரியம் கைகூடாது கவலையே அதிகரிக்கும்
தூரியே நோய்கள் காட்டும் துலைதூரம் செய்திதோன்றும்.

உனக்கு ஒன்றும், மூன்றும், ஆறும் விழுமானால் மனைவியும், மக்களும் உனது வாக்கை மீறி நடப்பார்கள். நண்பர்களினால் சண்டை பொருள் நஷ்டம் ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். கொடுமையான நோயும், கெட்ட செய்திகளும் வரும்.காரியம் கைகூடாது போகும் என்கிறார் அகத்தியர்.

1,6,1.

தோன்றிடும் பகைதான் மெத்தடுர்ந்தொன்று மாரொன்றாகில்
ஆன்றோர்கள் தேடிவைத்த ஆஸ்தியுமழிந்து போகும்
கானபடும் கண்ணிதன்னில் மான்படும் கவலைபோலே
வான்பதிக்குள்ளே நீயும் வருந்தவே நேருமப்பா.

உனக்கு ஒன்றும், ஆறும், ஒன்றும் விழுந்தால் மிகவும் பகையுண்டாகும். பெரியோர்களின் பொருள் அழியும். வேடன் வைத்த கண்ணில் சிக்கிய மான் போல் கலங்கி நிற்கவும் நேரிடும். கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.தைரியத்தை விடாதே! சீக்கிரத்தில் நன்மையடைவாய் என்கிறார்.

1,6,2.

அப்பனே ஒன்றும் ஆறும் உறுதியாய் இரண்டு வீழ்ந்தால்
தப்பாது முடியுமப்பா தானெதை நினைத்தபோதும்
ஒப்பிலா வாழ்வுண்டாக்கும் உள்ளுரிலடைவாய்லாபம்
கப்பியபகை நோய் நீங்கும் கங்கணப்ராப்தமாமே.

ஒன்றும், ஆறும், இரண்டும் விழந்தால் நீ நினைத்த எண்ணமெல்லாம் தடங்கலில்லாமல் முடியும். செல்வாக்கான வாழ்க்கையுண்டாகும் உள்ளுரிலேயே நல்ல லாபங்களெல்லாம் கிடைக்கும். பகையும் நோயும் நீங்கும், மனையில் சுப காரியம் நடக்கும் என்கிறார்.

1,6,3.

ஆகுமே கவசம்பாரு அப்பனே ஒன்றார் மூன்றும்
சோகமே பெரிதாய் நிற்கும் சலிப்பினால் இடத்தை மாற்றும்
ஏகமாய் பொருளும் போகும் இடறான நோயுண்டாகும்
போகுமே தொழிலும் நஷ்டம் பொல்லாப்பு மடைகுவாய்.

உனக்கு ஒன்றும், ஆறும் ,மூன்றும் வந்ததால் குடும்பத்தில் கலகம் நேரும்.எதிலும் துயரமே மேலிடும். சலிப்பின் காரணமாய் இடமாறுதலும் பெரும் பொருள் சேதமும், கடுமையான நோயும் உண்டாகும். தொழில் முடக்கமாகும்,சினேகித பொல்லாப்பு மடைவாய் என்கிறார்.

1,6,6.

அடைகுவாய் லாபமப்பா ஆக ஒன்றாது மாறும்
தடையின்றி விழுந்தாலே தழைத்திட மகப்பேறாகும்
புடைசூழ குடம்பந்தன்னில் புகழான வாழ்வுண்டாகும்
இடையிலே துயர் வந்தாலும் ஏதொன்றுமுனை செய்யாதே.

இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.

இதன் தொடர்ச்சியினை நாளைய பதிவில் காண்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை”ஆரூடம் - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: , ,சித்தர்கள் அருளிய சோதிடம் தொடர்பாக முன்பே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இனி வரும் நாட்களில் அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை” ஆரூடம் பற்றி பார்ப்போம். பாய்ச்சிகை என்பது மரத்தில் தயாரிக்கப் பட்ட நான்கு முகங்களைக் கொண்ட கட்டை ஆகும். இதில் முதன் மூன்று முகங்களில் முறையே 1,2,3 என்ற எண்ணும் நான்காவது முகத்தில் 6 என்ற எண்ணையும் இட வேண்டும்.

பாய்ச்சிகை ஆரூடத்தில் நுழைவதற்கு முன்னர் ஒரு சில தெளிவுகளை பார்ப்போம். பழந்தமிழர் வாழ்வில் எதிர்வு கூறல் எனப்படும் கலையானது பல வடிவங்களில் இருந்திருக்கிறது. அவை முறையே சோதிடம், நிமித்தம், ஆரூடம், ப்ரசன்னம் என்பனவாய் கூறப் பட்டிருக்கிறது.

சோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்கள் மற்றும் வின்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப் படுவதாகும். சோதியம் கூறுதல் என்கிற தமிழ்ச் சொல்லே திரிந்து மருவி சோதிடமானது.

நிமித்தம் என்பது காரணத்தினால் ஆகிற காரியங்கள் என்பதன் அடிப்படையில் கூறப்படுவது. இடி இடித்தால் மழை வருமென சொல்வதும், பசித்தான் உணவு தேவை என்பதான காரண காரியங்களின் நீட்சியே நிமித்தமாக சொல்லப் பட்டது. இதை மற்றொரு முறையில் சொல்வதானால் செயல் கணங்களின் அடிப்படையில் கூறுவது என்பர். இந்த செயல் கணங்கள் என்பதே காலப் போக்கில் திரிந்து செய்கணம், செகுனம் என மருவி சகுனமானது. சகுனம் பார்த்து காரியமாற்றுவதும், பலன் கூறுவதும் நிமித்தமேயாகும்.

ஆரூடம் என்பது ஒருவர் தனது பிரச்சினைகளைப் பற்றி கேட்க வரும் நேரம், அவர் அமர்ந்திருக்கும் திசை, அவரது உடல்மொழி, அந்த நிலையில் இருக்கும் கோள்களின் அமைப்புகளை வைத்து பலன் கூறுவதாகும். இதைத் தவிர சோழிகளை எறிந்து அவற்றை கணக்கிட்டும், பாய்ச்சிகளை உருட்டி அவற்றின் எண்களை வைத்து பலன் கூறுவதும் உண்டு. இந்த வகையில் அகத்திய மாமுனி அருளிய பாய்ச்சிகை ஆரூடத்தினைத்தான் இனி வரும் பதிவுகளில் காண இருக்கிறோம்.

பாய்ச்சிகை முறையில் மூன்று முறை பாய்ச்சிகையானது உருட்டப் பட்டு முன்று தடவையும் வரும் எண்களின் அடிப்படையில் பலன்கள் கூறப் படுகின்றன. பலன் கேட்க வருபவரை அமர வைத்து இந்த கட்டையினை மூன்று முறை உருட்டுவதன் மூலம் வரும் எண்களை குறித்து வைத்துக் கொண்டு அதற்கான பாடலைப் படித்து பலன் கூறிட வேண்டும். இந்த 62 பலன்கள் யாவும் நிலையானவை. கேட்பவரைப் பொறுத்தும், பலன் கூறுபவர் பாய்ச்சிகையை உருட்டும் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கான பலன் அமைகிறது. இந்த முறை “நிகழ்தகவின்”அடிப்படையிலாகிறது. இந்த நிகழ்தகவு முறை கணிதவியலில் தனியொரு பெரும் பிரிவாக இருக்கிறது.

இத்தகைய எதிர்வு கூறல் முறைகளின் நம்பகத் தன்மை மற்றும் சிறப்புகளை நிறுவுவதோ அல்லது விவாதிப்பதோ இந்த பதிவுகளின் நோக்கமில்லை. நமது முன்னோர்களின் சுவாரசியமான படைப்புகளை மீட்டெடுத்து சமகாலத்தவருக்கு பகிர்வதும் அதன் மீதான மேலதிக ஆய்வுகளுக்கு வாய்ப்பளிப்பதுமே இந்த பதிவுகளின் நோக்கம்.

இனி வரும் பதிவுகளில் அகத்தியர் அருளிய பாய்ச்சிகை முறைக்கான பலன்களைப் பார்ப்போம். இந்த முறையினை எவரும் பயன் படுத்திடலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆருட சமாதி...

Author: தோழி / Labels:

கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இறுதி நிலையாக கூறப் பட்டுள்ள “ஆரூட சமாதி” பற்றி பார்ப்போம். இந்த நிலையினை பின்வருமாறு விவரிக்கிறார் கொங்கணவர்...

"அணைந்து முன்னே தேவதைகள் வந்தாலுந்தான்
அதைச்சட்டை பண்ணாதே யகண்டமாய் நில்
லணைந்து நின்ற வத்துவித நெறியிற்கூடி
யப்பனே சஞ்சார சமாதிக்குள்ளு
மணைந்து நின்று திடப்பட்டாற் பின்புகேளு
அப்பனே சகலத்தி லசத்தியம் போக்கி
யணைந்துநின்று சுட்டசட்டி விட்டாற் போலே
யாச்சரியந் தேவதைக ளசத்தாய்க் காணே"


- கொங்கணவர் -

"அசத்ததாகக்தேவதையை மனதிலெண்ணி
யசையாத மலைபோலே யசைவுமற்று
நிசத்தான காற்றுப்போல் தேவதைக ளென்று
நிச்சயித்து நன்றாக நில்லு நில்லு
பசத்தான வத்துவித நிலைநாமென்று
பாராகத் திடப்பட்டு நில்லுநில்லே
உசத்தாகச் சாதகத்தி நிலையைக் கூட்டி
யுத்தமனே யாரூட சமாதியாச்சே"


- கொங்கணவர் -


உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தே உண்டாயிற்று, நான் தான் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருக்கிறேன் என்பதாக உணர்வதுடன், தானே பிரம்மம், தானே அனைத்திற்க்கும் ஆதாரமானவன் என்ற உயரிய நிலையில் இருந்துகொண்டு, உன் முன்னால் தேவதைகள் தோன்றினாலும் கூட அவற்றை பொருட் படுத்தாமல் நீயே பிரம்மமாய் இருக்கும் நிலையான சஞ்சார சமாதியில் எல்லாம் மாயை என்பதை தெளிந்த பின்னர் மேலான தேவதைகள் முதல் வேறு எவரும் உன் முன்னால் வந்து நின்றாலும் அவற்றை காற்றைப் போல் நினைத்து அவை அனைத்துமே உன்னிடம் இருந்து தோன்றியதே என்ற உண்மையை உணர்ந்து மலை போல அசைந்து கொடுக்காது நீயே பிரம்மம் என்ற நிலையில் இருத்தல் ஆருட சமாதி எனப்படும். இதுவே இறுதி முடிவான நிலையும் ஆகும் என்கிறார் கொங்கணவர்.

யோகத்தின் மிக உயரிய நிலையில் கூட இத்தனை படி நிலைகள் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான தகவல்தானே... என் வயதிற்கு இதெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள். இவற்றை முழுதாய் உணர்ந்து எழுதிடும் மனப் பக்குவம் எனக்கு இன்னமும் வரவில்லை. அதற்கான பயணம் மிக நீண்டது.

இத்துடன் இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சஞ்சார சமாதி..

Author: தோழி / Labels:

கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று ஐந்தாவது வகையான “சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம். இதனை பின் வருமாறு கூறுகிறார் கொங்கணவர்.

"இருக்கிற தாகையினால் ரெண்டுக்கும் பேத
மியல்பான வகண்டவிர்த்தி சமாதி மார்க்கந்
தருக்கிறதோர் சஞ்சார சமாதி கேளு
சார்ந்து நின்ற வகண்டவிர்த்தி விட்டேயப்பா
வருக்கிறதா யெழுந்திருந்து பிரபஞ்சத்தைப் பார்த்தே
யடைவாக விவகரிக்குங் காலமெல்லா
மருக்கிறதோர் பிரபஞ்ச மெல்லாஞ் சமுத்திரத் தலைபோல்
மருவிநின்ற நுரைபோல மாயந்தானே"


- கொங்கணவர் -

"மாயமுற்றுச் சிலந்தியி னல்வலையைப்போல
மயங்கிநின்ற கூர்மத்தி னங்கம்போலத்
தோயமுற்ற வாகாச மேகம்போலச்
சொப்பனமாம் பிரபஞ்சத்தி லறிவைப் போல
வாயமுற்று நம்மிடத்தே யுண்டாச்சப்பா
வாச்சரிய நம்மிடத்தே யிருந்துகொண்டு
காயமுற்று அறிவழிந்து போறதாலே
கலந்து நம்மை விடவொன்றுங் கண்டிலேனே"

- கொங்கணவர் -

நேற்றைய பதிவில் விவரித்து இருந்த அகண்டவிர்த்தி சமாதியை விட்டு எழுந்து வெளியுலகமான பிரபஞ்சத்தில் உலாவும் போதும், பிரபஞ்சத்தில் கடமைகள் மற்றும் வேலைகளில் ஈடுபடும் பொழுதும் சமுத்திர அலையால் உண்டான கடல் நுரையைப் போல அனைத்துமே மாயை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

சிலந்திப் பூச்சியானது தான் உருவாக்கும் ஒருவகையான பசைத்தன்மை கொண்ட பொருளால் வலையை உண்டாக்கிக் கொண்டு அதில் தானே அதில் வசிப்பதை போலவும், கூர்மம் என்று அழைக்கப்படும் ஆமையானது தன்னுடன் தோன்றிய ஓட்டினுள் தன்னை அடக்கிக் கொள்வது போலவும், கனவு போன்ற இந்த பூலோகவாழ்கை அழிவடையும் தன்மை உடையது என்றும் உணர்ந்து, என்னை தவிர வேறொன்றும் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி பூலோக வாழ்வியல் விவகாரங்களில் ஈடுபடும்போது எதுவும் உன்னை சலனப்படுத்தாது என்பதை உணர்ந்திருக்கும் நிலையே சஞ்சார சமாதி என்கிறார்.

நாளைய பதிவில் இறுதி நிலையான “ஆரூட சமாதி” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நிருவிகற்ப சமாதி மற்றும் அகண்டவிர்த்தி சமாதி..

Author: தோழி / Labels:


கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” நூலில் அருளியிருக்கும் சமாதி வகைகளை கடந்த மூன்று பதிவுகளாய் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று இரண்டு சமாதி வகைகளைப் பற்றி பார்ப்போம். ஒரு தகவல் பகிர்வாகவே இந்த தகவல்களை இங்கே பதிகிறேன்.


நிருவிகற்ப சமாதி..

நிருவிகற்ப சமாதி குறித்து கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்...

"பேரான நிருவிகற்ப சமாதிகேளு
பெருத்து நின்ற தத்துவலய சமாதிமுத்தி
தாரான சத்தானு வித்தை முத்தி
தனைமறந்து தூக்கமுற்ற மயக்கம்போல
வாரான சத்தமொன்றுங் காதிற்கேட்கா
மருவியிந்த பூரணத்தே சித்தமப்பா
நேரான சைதன்ய மாகப்போனால்
நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே"


- கொங்கணவர் -

"ஆச்சப்பா சமாதிவிட்டுச் சஞ்சரிக்கி
லடவாகச் சமாதியிலே யிருக்கும்போது
காச்சப்பா காலமென்ற திரயத்தினுள்ளுங்
கண்டிருந்த பிரபஞ்சமெல்லாம் பொய் யென்றெண்ணு
வீச்சப்பா விவகாரத் தாலே தோன்றி
விரிந்துநின்ற பிரபஞ்சத்தின் பாசந்தள்ளி
ஒச்சப்பா நிருவிகற்ப மாகி நின்றா
லுத்தமனே நிருவிகற்ப மிதுவே யாச்சே."


- கொங்கணவர் -

முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த தத்துவலய சமாதியம், சத்தானு சமாதியும் முழுமையாக சித்தியாகி விட்டால், தன்னை மறந்த துக்கத்தைப் போல் ஒரு மயக்க நிலை ஏற்படுமாம்.இந்நிலையில் எந்த ஒரு சத்தமும் அவர்களுக்கு கேட்காதாம். சுத்தமானது பூரணத்துடன் சேர்ந்து சுத்த சைதந்ய நிலையை அடைந்துவிடும் என்கிறார். இந் நிலைக்கே நிருவிகற்ப சமாதி பெயர்.

மேலும்,சமாதியை விட்டு எழுந்த பிறகும், சமாதியிலிருக்கும் பொழுதும் காலத்திற்குட்பட்டு இயங்கும் இப் பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும், இவை யாவும் மாயா விகாரத்தால் தோன்றியது என எண்ணி இவற்றின் மேலுள்ள பாசத்தை நீக்கி எதையும் நினைக்காமல் இருத்தலே முழுமையான நிருவிகற்ப சாமாதியாகும் என்கிறார் கொங்கணவர்.


அகண்டவிர்த்தி சமாதி..

சமாதி வகைகளில் நாண்காவது நிலையான அகண்டவிர்த்தி சமாதி பற்றி கொங்கணவர் பின் வருமாறு கூறுகிறார்.

"நன்றான வகண்டவிர்த்தி யாவதப்பா
நலம்பெரிய காற்றில்லா விளக்குப் போல
அன்றான வலைச்சலற்றுத் தண்ணீருமுப்பு
மடங்கிநின்ற வாறதுபோன் முத்தி நிற்குந்
தன்றான பிறமனதி னுருத்தான் கெட்டுத்
தனிப்பெறவே வேற்றுருவாய்ப் பிரமந்தானாய்
பன்றான விப்படிதான்கடிகையொன்று
பருவமுடன் சமாதியற்றார் பலத்தைக் கேளே"


- கொங்கணவர் -

"பலன்கேளு அசுவமேத யாகங்கோடி
பண்ணினதற் கொக்கு மொக்கும் பரிந்துகூடு
நிலன்கேளு யிப்படிதான் சமாதி மூட்டில்
நிலையாகச் சுழுத்தியென்றேயெண்ண வேண்
தலன்கேளு சுழுத்திக்குச் சித்தந்தானுந்
தயங்கிநின்று நின்றுற்று நசித்துப் போகும்
புலன்கேளு சமாதிக்கு நாம் பிரமமென்று
புடவாக வதிலிருந்து யிருக்கும் பாரே"


- கொங்கணவர் -

இந்த அகண்டவிர்த்தி சமாதி நிலையானது எப்படி இருக்குமென்றால் காற்றில்லாத இல்லத்தில் வைக்கப்பட்ட ஒரு விளக்கின் சுடரைப்போலவும், தண்ணீரில் கரைக்கப்பட்ட உப்பைப் போலவும் யோகத்தில் மனமானது முதிர்ந்து நிற்க்குமாம். இந்த ஆனந்த நிலையில் ஒரு கடிகை நேரம் லயித்தாலும் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்கிறார். அந்த பலன்களை பின் வருமாறு பட்டியலிடுகிறார் கொங்கணவர்.

கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். மேற் சொன்னவாறு தினமும் பழகி வந்தால் மனமானது சுழித்தியில் அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ தானே என்று எண்ணி கைவிட்டு விடாமல் சரியாக தொடர்ந்து செய்து வந்தால் அனைத்துமே சித்தத்தில் அடங்குமாம் அப்படி சித்தத்தில் அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில் அடங்குமாம். அப்போது நீயே பிரம்மம் என்பதை அறிவாய் என்கிறார். இதுவே அகண்டவிர்த்தி சமாதி யாகும்.

நாளைய பதிவில் ஐந்தாவது சமாதி வகையான “சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சவிகற்ப சமாதி...

Author: தோழி / Labels:


கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இரண்டாவது வகையான சவிகற்ப சமாதி நிலை பற்றி பார்ப்போம். இந்த சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும். வெறும் வார்த்தைகளால் இவற்றை விவரித்து உணர்த்துவதும், உணர்வதும் கடினமானது. இவை யாவும் உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய அதி உயர்நிலைகள். எனவே எனது இந்த முயற்சியினை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் கருதிட வேண்டுகிறேன்.

வாருங்கள்!, சவிகற்ப சமாதி பற்றி கொங்கணவர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.


"ஆச்சப்பா சவிகற்பச் சமாதி கேளு
அடுத்தாக்கால் ரெண்டுவகை யதிலேயுண்டு
வாச்சப்பா சத்தானு வித்தையொன்று
வரிசையுடன் திரையவித்தைச் சமாதியொன்று
போச்சப்பா சத்தானு வித்தை மார்க்கம்
பெரியதொரு தத்துவலய சமாதிக்குள்ளே
ஓச்சப்பா சத்தங்கள் பட்சியோசை
வுன்மனத்தே படுகிறது உயிர்ப்புக்கேளே"


- கொங்கணவர் -

"கேளப்பா சத்தானு வித்தையென்றுங்
கெடியான சவிகற்பச் சமாதியென்றும்
வாளப்பா திரிசானு வித்தைமார்க்கம்
வகைசொல்வே னன்றாகக் கேளுமக்காள்
நாளப்பா நின்றநிலை சமாதிக்குள்ளே
நலமாகத் தன்னையனு சந்தானித்துத்
தாளப்பா சஞ்சரிக்கில் திரிசானு வித்தை"


- கொங்கணவர் -

உயர்வான இந்த சவிகற்ப சமாதியானது நேற்றைய பதிவில் நாம் பார்த்த தத்துவலய சமாதி நிலையின் மற்றொரு வடிவாகக் கூறுகிறார். இந்த சுவிகற்பச் சமாதி இரண்டு வகைகளாக கூறப் படுகிறது. அவையாவன “சத்தானு சமாதி”, “திரைய சமாதி” என்கிறார் கொங்கணவர்.

தத்துவலய சமாதி நிலையில் இருக்கும் போது தன்னுள்ளே பட்சியின் ஓசை எழும்புவதை உணர்ந்து அதில் லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி எனப்படுமாம்.

தத்துவலய சமாதி நிலையில் தன்னைத் தானே அனுசந்தானம் செய்து நிற்றலே திரைய சமாதி என்கிறார்.

நாளைய பதிவில் அடுத்த இரு சமாதி வகைகளான “நிருவிகற்ப சமாதி” மற்றும் “அகண்டவிர்த்தி சமாதி” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...