சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆகையால் இந்த பெயருடனே இந்த தொடரினை துவங்குகிறேன். தெரிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்கிறேன்.

சாமுத்ரிகா லக்‌ஷனம் அல்லது அங்க லக்‌ஷணம் பற்றி இந்து மரபியலில் சமஸ்கிருதம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் பழமையான நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இவற்றுள் தமிழில் சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மட்டுமே இந்த தொடரில் தொகுத்தளிக்க இருக்கிறேன்.

மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள் நிர்ணயிப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.ஒருவரின் தோற்றம், இயல்பு,குணாதிசயங்கள் போன்றவைகளில் பரம்பரையின் பாதிப்புகள் தொடர்கிறது எனவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.நமது முன்னோர்கள் இதை இன்னமும் எளிமையாக் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்றார்கள்.

சாமுத்ரிகா லக்‌ஷணத்தை சோதிட இயலோடு தொடர்புடைய ஒரு கலையாகவே பலரும் கருதுகின்றனர். பழந் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு வாழ்வியல் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையான அத்தனை அம்சங்களின் ஊடாக இந்த கலையின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. மனித வளர்ச்சியில் ஊடாக உடலில் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்கள் என இவை ஏற்படுத்தும் தாக்கங்களை மிக விரிவாகவே சித்தர்கள் தங்களின் பாடல்களில் பதிந்து வைத்திருக்கின்றனர்.

அகத்தியர், தேரையர்,போகர் போன்றவர்களின் பாடல்களில் இந்த அங்க லக்‌ஷணம் பற்றிய விவரிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆண், பெண் என இரு பாலாருக்கும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். ஒருவரின் அங்க அமைப்பு அவரின் இயல்புகளையும், அவர்களுக்கான பலன்களையும் தீர்மானிப்பதாக கூறுகின்றனர். தாங்கள் சந்தித்த பல் வேறு மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஆய்ந்தறிந்தே இதனை எழுதியிருக்க வேண்டுமென நம்புகிறேன்.

நமக்கு கிடைத்திருக்கும் இந்த தகவல்களைக் கொண்டு மேலதிக ஆய்வுகளும், விவாதங்களும் இந்த கலையை மேலும் செம்மைப் படுத்த உதவும். என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பில் இந்த கலையை திருமண பொருத்தம், குழந்தை பிறப்பு, நோய்களுக்கான அறிகுறிகளை கண்டறிதல் போன்றவைகளில் சிறப்பாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

அநேகமாய் பழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட இந்த கலையினைப் பற்றி இனி வரும் நாட்களில் விரிவாக பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி மலை தகவல் தொடர்.....தொடரும்!

Author: தோழி / Labels:

சதுரகிரி மலையின் மகத்துவங்களை வெறும் இருபத்திநாலு பதிவுகளில் அடக்கிவிட இயலாது. இதுவரை பகிரப் பட்ட தகவல்களை சதுரகிரி மலை பற்றிய ஓர் அறிமுகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

காலம் காலமாய் சதுரகிரி மலை ஒரு மர்ம பூமியாகவும், அங்கே அமானுஷ்யங்கள் குடி கொண்டிருப்பதைப் போன்றதொரு எண்ணப் போக்கு நிறுவப் பட்டிருக்கிறது. பகுத்தறிவுக்கு சற்றும் ஒவ்வாத பலநூறு புராணக் கதைகள் தந்த கிளர்ச்சியில் சதுரகிரி மலையின் நிஜமான சிறப்புகள் இன்றும் இலைமறை காயாகவே இருக்கிறது.

தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஆய்வுகளிலும், அதன் தெளிவுகளிலும் செலவழித்த மகத்தான மனிதர்களின் கண்டறிதல்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைய தமிழில் ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது. அந்த ஆவணங்கள் இன்றைய தமிழில் ஆவணப் படுத்தப் படவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். இம் மாதிரியான ஒரு சூழலில் சதுரகிரி ம்லை பற்றி ஒரு நிதர்சனமான அறிமுகத்தை தர வேண்டுமென்பதே இந்த தொடரின் நோக்கமாய் இருந்தது. இது வரையில் அதனை ஆகக் கூடிய நேர்மையுடன் செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

துவக்கத்தில் நிறைய தயக்கத்துடனே இந்த தொடரினை எழுதிட முனைந்தேன். ஏனெனில் நான் முற்றிலும் பார்த்தறியாத ஒரு நிலப் பரப்பின் விவரங்களை எழுதுவதில் நிறையவே சிரமங்கள் இருந்தன. இது வரை சதுரகிரி மலை குறித்து ஆவணப் படுத்தப் பட்டுள்ள உரைநடைகள் பெரும்பாலும் நெகிழ்வு நிலையில் வர்த்தக காரணிகளை முன் வைத்து எழுதப் பட்டவை.அவற்றின் ஊடாக பயணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை,இதனை அறிமுகப் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

இணையத்தில் சதுரகிரி மலை பற்றிய பெரும்பாலான தகவல்கள் தனி மனிதர்களின் பயண அனுபவங்களாகவே இருந்தன.எனக்கிருக்கும் ஒரே சாத்தியம் சித்தர்களின் பாடல்கள்தான். சித்தர் பாடல்களின் ஊடே சதுரகிரி பற்றிய தகவல்களை மட்டும் தேடி எடுப்பது திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன ஊசியை தேடுவதைப் போன்றதாகும். இவையெல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லை.கடந்த பத்தாண்டுகால வாசிப்பனுபவத்தின் சேகரிப்புகளைத்தான் இந்த பதிவுகள்.

ஆரம்பத்தில் என்னுடைய கவலை எல்லாம் இந்த தகவல்கள் எல்லாம் இன்றைய நிஜத்தில் ஒத்துப் போகுமா என்பதாகவே இருந்தது. ஆனால் பின்னூட்டமிட்ட பல நண்பர்களும், தனி மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட நண்பர்கள் இந்த விவரங்கள் மிக நேர்த்தியாக பொருந்துவதாய் கூறிய வார்த்தைகளே தொடர்ந்து உற்சாகமாய் எழுதிட உதவியது. அந்த வகையில் ஊக்கமளித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சதுரகிரி மலை பற்றி பகிர வேண்டியவை இன்னமும் நிறையவே பாக்கியிருக்கிறது.அதற்கு ஒரு வாழ்நாளின் உழைப்பு தேவைப்படும்.மிக நிச்சயமாய் ஒரு தனி மனிதரால் இவற்றை செய்திட முடியாது. ஆர்வமுள்ளவர்கள் அனைவருமாய் சேர்ந்து செய்திட வேண்டிய ஒரு முயற்சி அது.

தகவல்களை திரட்டிக் கொண்டே போவதை விட கிடைத்திருக்கும் தகவல்களை பிற கூறுகளுடன் பொறுத்திப் பார்த்து, அவற்றின் நம்பகத் தன்மையினை உறுதி செய்த பின்னர் மேலதிக ஆய்வுக்ளை செய்வதே சரியான பாதையாக இருக்கும் என நம்புகிறேன். இதுவரை இங்கே பகிர்ந்த் தகவல்களை வைத்து இத்தகைய முன்னெடுப்பினை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.குருவருள் அனுமதித்தால் என் வகைக்கு எதிர்காலத்தில் நானும் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவேன்.

இந்த பதிவுகளை அவற்றின் தகவல்களை ஆர்வமுள்ள நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள்.அத்தகைய ஒரு பரவலே சித்தர்கள் பற்றி தமிழ் சமூகமெங்கும் சிதறிக் கிடக்கும் பல்வேறு தகவல்களை ஒருங்கினைக்க உதவும். நமது முன்னோர்களின் ஆவணப் படுத்தப்படாத அறிவாற்றலை ஒரு புள்ளியில் குவித்து அவற்றை பயனுள்ளதாக்க முடிந்தால்,அத்தகைய ஒரு செயல் நாம் நமது சமகால சமூகத்திற்கும் செய்யும் பெரும் சேவையாக இருக்கும்.

சதுரகிரி மலை பற்றிய அறிமுகத்தினை பார்த்து விட்ட நிலையில் சிறிய இடைவெளிக்குப் பின்னர் இது வரை நாம் பார்த்த கூறுகள் ஒவ்வொன்றினைப் பற்றியும் விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.தொடரும் ஒத்துழைப்பிற்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

சாமுத்ரிகா லட்சணம் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.அது உண்மையா?,சித்தர் பெருமக்கள் இது குறித்து என்னதான் சொல்லியிருக்கின்றனர்?

ஆம், அடுத்த தொடர் ”சாமுத்ரிகா லட்சணம்”தான். காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரியில் இருக்கிறது பாஷாணக் காடு!

Author: தோழி / Labels: ,

சித்தர் பெருமக்களின் அக மற்றும் புறத் தேடலுக்கான அனைத்து அம்சங்களையும் இயற்கை அன்னை வாரி வழங்கிதனால்தான் சதுரகிரி மலையானது சித்தர்களின் தலைமயகம் என பெயர் பெற்றது. நாம் இதுகாரும் சதுரகிரி மலையில் வாழ்ந்திருந்த சித்தர் பெருமக்கள், அவர்களின் ஆச்சிரமங்கள், குகைகள், அதனை சென்றடையும் வழிகள், வழியில் இருக்கும் ஓடைகள், ஆறுகள்,வனங்கள் அவற்றில் இருக்கும் அரிய மூலிகைகள்,உதகநீர் சுனைகள்,கோவில்கள் என எல்லாவற்றையும் கடந்த இருபத்தி மூன்று பதிவுகளில் பார்த்தோம்.

இந்த வகையில் விடுபட்டுப் போன ஒன்றினைப் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மருத்துவம் மற்றும் இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் முக்கியமான மூலகம் பாஷாணம் எனப் படும் பாடாணம். இவை உலோகத்தினை போன்ற கடினமான தன்மையையும், கொடிய விஷத்தின் தீவிரத்தையும் கொண்டிருக்கும் தின்மப் பொருள்.இது தொடர்பான் மேலதிக விவரம் வேண்டுவோர் எனது முந்தைய பதிவுகளில் வாசித்தறியலாம்.

இந்த பாஷாணம் இரண்டு பெரும் பிரிவுகளாக கூறப்பட்டிருக்கிறது.அவை பிறவிப் பாஷாணம், வைப்புப் பாஷாணம். இதில் பிறவிப் பாஷாணம் என்பது இயற்கையில் கிடைக்கும் மூலகம். பழநியில் குடி கொண்டிருக்கும் நவபாஷான மூலவரின் சிலையானது சதுரகிரி மலையில் செய்யப் பட்டு பழனிக்கு கொண்டு சென்றதாக ஒரு செவிவழிக் கதை உள்ளது. ஆனால் இதை நிறுவும் வகையில் தகவல்கள் ஏதும் சித்தர்களின் பாடல்களில் இல்லை.

ஒரு வேளை சதுரகிரியில் இந்த சிலை செய்யப் பட்டிருந்தால் நிச்சயமாக இங்கு பாஷாணங்கள் கிடைத்திருக்க வேண்டுமல்லவா!. இந்த தகவலை உறுதி செய்திட தகவல்கள் ஏதும் கிடைக்கிறதா என போகர் மற்றும் அகத்தியரின் பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த அரிய தகவலை இன்று பகிர்ந்து கொள்கிறேன். ஆம், சதுரகிரி மலையில் பாஷாணம் இருக்கிறது, அதுவும் எங்கே இருக்கிறது என்பதை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.


"பெருமையாம் சதுரகிரி வளப்பஞ்சொல்வேன்
நுட்பமுடன் புலஸ்தியனே புனிதவானே
பாலான தேசமெல்லாம் திரிந்துவந்தேன்
பாலகனே சதுரகிரி வளப்பமெத்த
லேசான காட்டகத்தே திரிந்துகண்ட்டேன்
சங்கமுடன் சதுரகிரி கிழக்கேயப்பா
சட்டமுடன் பாடாணக் காடுகண்டேன்
நலம்பெரிய பூமியெல்லாம் சுண்ணக்காடு
பட்டயம்போல் சுனையுண்டு தோப்புமுண்டு
பாலகனே கண்டேன் யாவுங்கண்டேனே"

- அகத்தியர் -

இந்த தேசமெல்லாம் சுற்றிவந்த நான், வளங்கள் நிறைந்த சதுரகிரியிலும் சுற்றினேன். சதுரகிரி மலையில் கிழக்குப் பகுதியில் எளிதில் நுழையக் கூடிய பகுதியில் பாஷாணக் காடு கண்டேன் என்கிறார்.இந்த காட்டின் நிலப் பகுதியானது சுண்ணம் அதிகமாக காணப்படும் என்கிறார். மேலும் அந்தக் காட்டின் மத்தியில் சுனையும் தோப்பும் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து வரும் பாடல்களில் பாஷாணங்களின் வகைகளையும் அவற்றின் பயன் பாடுகளையும் விவரித்துச் செல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!, சதுரகிரி மலையின் கிழக்கே உள்ள காட்டில் சுண்ணம் நிறைந்த நிலப் பகுதியில் பாஷாணங்கள் நிறைந்திருக்கின்றனவாம்.ஆர்வமுள்ளோரும், ஆய்வாளர்களும் இந்த தகவலைக் கொண்டு மேலதிக ஆய்வுகளை செய்திடலாம்.

நாளையுடன் இந்த சதுரகிரிமலை தொடரை நிறைவு செய்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி மலையில் மோட்சம் கிடைக்க....!

Author: தோழி / Labels: ,

ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில் அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.

"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை
காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங்
ஆளடா சதுரகிரி என்கோணமாகும்
அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு
சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர்
தளடா சிறப்புடனே தவசுபண்ணி
தன்னருளால் பிர்மமய மானார்பாரே"

- அகத்தியர் -

சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதாகவும், இந்த எட்டு மூலைகள் மற்றும் நடுவிலிருக்கும் சதுரகிரி உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் இருப்பதாக கூறுகிறார். இந்த குகைகளில் நவ சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து அருள் பெற்று பிரம்ம மயமானார்களாம். இந்த ஒன்பது குகைகளையும் தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறியிருக்கிறார்.

த்ற்போது சதுரகிரி மலையானது சுமார் ஐநூறு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் இந்த மலையின் பரப்பளவு இன்னமும் கூட அதிகமாய் இருந்திருக்கலாம்.அடர்ந்த வனமான இந்த மலையில் கால்நடையாகவே எட்டு மூலைகளுக்கும் பயணித்து மொத்தமுள்ள ஒன்பது குகைகளையும் தரிசிப்பதில் உள்ள மேலான சிரமங்கள் ஒருவரை பக்குவமானவராய் ஆக்கி விடக்கூடும்.இத்தகைய பக்குவமானது ஒருவரை மேலான முக்தி நிலைக்கு உயர்த்தி விடலாமென கருதுகிறேன்.மேலும் இந்த பாடல்வழியே சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதும் புலனாகிறது.

சதுரகிரி மலையில் இப்படி எத்தனையோ ஆச்சர்யங்கள் மறைந்தும் , நிறைந்துமிருக்கின்றன. நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி மலையில் மறைந்திருக்கும் புதையல்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் சாமானியர்களின் பார்வையில் படாமல், மறைந்தோ அல்லது மறைக்கப் பட்டிருப்பதாக கூறப் படுகிறவைகளைப் பற்றி அகத்தியர் வாயிலாக இன்றும் பார்ப்போம். இதுகாறும் இந்த தொடரில் பகிரப் பட்ட தகவல்கள் அனைத்துமே சித்தர்களின் பாடல்களில் இருந்து பெறப்பட்டவைகளே; அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடலையும் அதன் விளக்கத்தினையும் இன்று பார்ப்போம்.

"பெருமையாம் சதுரகிரி மேற்கேயப்பா
பேரான குகையொன்று குளமுமுண்டு
அருமையாம் உதகமென்ற சுனையுமுண்டு
அப்பனே பாதாளக் கிணறுமுண்டு
ஒருமையாம் கிணற்றருகில் கிடாரமுண்டு
ஓகோகோ நாதாக்கள் வத்தவைப்பு
வறுமையது வாராது கண்டபேர்க்கு
வளம்பெரிய லட்சுமியும் வாசமுண்டே"

- அகத்தியர் -

பெருமை மிகுந்த சதுரகிரியின் மேற்குப் பகுதியில் குகையொன்றும், குளமும், அதன் அருகில் உதக சுனையும், பாதாளக் கிணறும் இருக்கிறது. இந்தப் பாதாளக் கிணற்றருகில் கிடாரம் இருக்கிறது. இது சித்தர்களின் வைப்புக் கிடாரமாகும். இங்கு சென்று இவற்றைக் காண்பவர்களின் வாழ்நாளுக்கு வறுமையே வராது. அத்துடன் வளங்கள் பெருகும் லட்சுமி அவர்களுடன் வாசம் செய்வாள் என்கிறார் அகத்தியர்.

இது தொடர்பாய் மேலும் சில பாடல்கள் இருக்கின்றன. அதனை பகிர்வது வாசிப்போருக்கு தேவையற்ற எண்ணங்களை தோற்றுவிக்குமென்பதால், இந்த அளவில் ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கூறி நிறைவு செய்கிறேன். நாளைய பதிவில் அகத்தியர் அருளிய மோட்சம் பெறும் வழியொன்றினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி மலையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம்!

Author: தோழி / Labels: ,

வாருங்கள்,சதுரகிரியில் மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் ஒன்றினைப் பற்றிய சுவாரசியமான ஒரு தகவலைப் ஒன்றினை இன்று பார்ப்போம். அகத்தியர் அருளிய “ஏம தத்துவம்” என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது இந்த தகவல். மிகவும் பழமையான இந்த நூல் தற்போது பதிப்பில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.என்னிடமிருப்பது நூற்றாண்டுகளைத் தாண்டிய பதிப்பு.

அசுவினியார் என்கிற சித்தர் மூலிகைகள் மற்றும் அவற்றின் நுட்பங்கள், கோவில்கள் மற்றும் அதன் சூட்சுமங்கள் போன்ற தனது வாழ்நாள் அனுபவங்கள் முழுவதையும் ஒரு நூலாக எழுதினாராம். அந்த நூலின் பெயர் “கர்ம காண்டம்” என்பதாம். பன்னிரெண்டாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த நூல் அவரது மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டதென்பதை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"நூலான பெருநூலா மின்னூல்போல
நுணுக்கமுடன் கொள்ளவே வேறில்லை
பாலான நூலிது பெருநூலப்பா
பாலகனே அசுவினியார் யெந்தமக்கு
காலான பதிகண்டு தடமுங்கண்டு
மாலான பெருநூலாம் கர்மகாண்டம்
ஆமேதான் பன்னீரா யிரந்தானப்பா
அப்பனே கர்மகாண்டம் தாமுரைத்தார்
போமேதான் சத்த சாகரந்திரிந்து
பொங்கமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
தாமேதான் பாடிவைத்தார் கர்மகாண்டம்"

- அகத்தியர் -

மிகவும் அரிதான சூட்சுமங்களை தன்னகத்தே கொண்ட இந்த நூலானது தனது மாணவர்கள் மட்டுமே பயன்படுத்திட வேண்டி, அதனை சதுரகிரி மலையில் மறைத்து வைத்திருக்கிறாராம் அசுவினியார். அத்தகைய சிறப்பான இந்த நூல் சதுரகிரி மலையில் எங்கே,எவ்வாறு மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது என்பதனையும் அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"தாரணியில் சதுரகிரி மேற்கேபாலா
நாமேதான் சொன்னபடி சுரங்கமப்பா
நாயகனே பாதாள வரையுண்டாமே
வளம்பெரிய காவணத்தின் சுரங்கமப்பா
திரையான மறைவுடனே திட்டுவாசல்
தீர்க்கமுள்ள வாஞ்சனேயர் காவலப்பா
குறைநீக்கி உட்சென்றால் சித்தர்காவல்
குறிப்புடனே யவர்மாத மஞ்சலித்து"

- அகத்தியர் -

"குறமான கர்மகாண்டம் பெருநூலப்பா
குருபரனே காண்பதர்க்கு வந்தேனென்று
நீடியதோர் நெடுங்கால அருள்காணவேண்டி
நிஷ்களங்க மாகவல்லோ விடையும்காண
தேடியே இவ்விடமும் வந்தேனென்று
சிரமுடனே அவர்பதத்தை தாள்பணிந்து
அறமதுவும் வழுவாமல் புண்ணியவானே
அங்ஙனமே நூல்கண்டு வாங்குவீரே

- அகத்தியர் -

சதிரகிரி மலையின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு திட்டான பகுதியில், மறைவாக ஒரு சுரங்கம் உள்ளதாம். அந்த சுரங்க வாசலில் ஆஞ்சனேயர் காவல் இருக்கிறதாம். அவரைத் தாண்டி உள்ளே செல்ல சித்தர் காவல் இருக்கிறதாம். அவரை வணங்கி.. அருள் கிடைக்கவேண்டியும், என் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டும் சிறப்பான கர்மகாண்டம் என்னும் பெரு நூலைக் காண்பதற்க்காக இங்கு வந்தேன் என்று கூறி, அவர் தாள் பணிந்து வணங்கி நூலை வாங்க வேண்டும் என்று சொல்கிறார்.

"வாங்குவாய் யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
வளமுடைய பஞ்சால்லிய புலத்தியாகேள்
திருவான கோவிந்தா கோபாலாகேள்
தீர்க்கமுடன் உந்தமக்கு யாவுமீர்ந்து
பெருமயுடன் நூல்கொடுத்து வழியுஞ்சொல்லி
பேரான வம்பலத்தை திறந்துகாட்டி
துரயான நூல் கொடுத்து வழியுங்கூறி
நுட்பமுடன் பொதிகைக்கு யேகென்பாரே"

- அகத்தியர் -

அந்த நூலை அங்கேயே தங்கி படிக்க வேண்டுமாம். சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அவற்றை அந்த சித்தர் விளக்கி, அதன் நுட்பங்களை உணர்த்தி, அங்கிருக்கும் அம்பலத்தை திறந்து காட்டி பொதிகை மலைக்கு செல்லும் வழியையும் கூறுவார் என்கிறார் அகத்தியர். ஆச்சர்யமான தகவல்தானே!

இந்த தகவல்களின் சாத்தியங்கள் குறித்தான சந்தேகங்கள் இருந்தாலும், அகத்தியர் கூறிய படி மலையின் மேற்குப் பகுதியில் திட்டும், அதனையொட்டி மறைந்திருக்கும் குகைகள் ஏதுமிருக்கிறதா என்பதை தேடிப் பார்க்கலாம். அநேகமாய் குரங்குகள் நிறைந்து வாழும் குகையாக கூட இருக்கலாம்.அதனையே ஆஞ்சநேயர் காவல் என்றும் அகத்தியர் குறிப்பிட்டிருக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சிக்கலாமே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள் தொடர்ச்சி..!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையின் தனித்துவமான மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது. சதுரகிரி மலை பற்றி பகிர்வதற்கு இன்னமும் ஏராளமான தகவல்கள் பாக்கி இருந்தும், இந்த தொடரினை கடந்த வாரமே நிறைவு செய்திட விரும்பினேன்.இருப்பினும் ஏற்கனவே தட்டச்சு செய்து விட்ட மிக முக்கியமான ஒன்றிரண்டு தகவல்களை இந்த வாரத்தில் பகிர்ந்து இந்த தொடரினை நிறைவு செய்கிறேன்.சதுரகிரி மலையினை பற்றி இது வரை ஆவணப் படுத்தப் படாத சில தகவல்கள் இந்த வாரத்தின் நெடுகில் இடம்பெறும்.

வாருங்கள் காயசித்தி அளிக்கும் மூலிகைகளைப் பற்றிய பதிவினை தொடர்வோம்.

பொற்றலைக்கரிப்பான்

முந்தைய பதிவின் நிறைவில் குறிப்பிட்ட குருவரிக்கற்றாளைக்கு தென் திசையில் அம்புவிடும் தூரம் சென்றால் பொற்றலைக்கரிப்பான் என்று ஒரு மூலிகை இருக்கிறதாம். அதன் காய் மிளகு போல் இருக்குமாம். அதன் இலையைக் கையால் கசக்கினால் கைகளில் எரிவு எடுக்குமாம். அதன் சாற்றை பாடாணங்களில் (பாஷாணங்கள்) சேர்த்து அரைத்து புடமிட செந்தூரமாகுமாம். அந்த செந்தூரத்தை புசிக்க காய சித்தியுண்டாகுமாம்.

உதிரவேங்கை

கலங்கிமுனிவர் வனத்தில் இந்த உதிரவேங்கை மரங்கள் அதிகளவில் காணப்படுமாம். அது வேங்கைமரம் போல் இருப்பதுடன், அதன் தூர் கறுப்பாக இருக்குமாம், இந்த மரத்தை குத்தினால் இரத்தம் போன்ற நிறத்தில் பால்வருமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து உலோகங்களுக்கு சுருக்கிட பேதிக்கும். அப்படி பேதித்த உலோகத்தை இந்த மரத்தின் பால் விட்டு உருக்க தங்கமாகும் அந்தத்தங்கத்தை புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

சாயாவிருட்சம்

யூகிமுனி வனத்தின் வடக்குப் பகுதியில் ஒரு மண் மேடு இருக்கிறதாம் அதை அண்டிய பகுதிகளில் இந்த சாயா விருட்சம் வளர்ந்து இருக்கிறதாம்.
இதற்க்கு நிழற்காந்தன் என்று இன்னும் ஒரு பெயரும் வழங்கப்படுகிறது. இந்த விருட்சத்தின் நிழல் நிலத்தில் விழாதாம். அதன் நிறம் சாம்பல் நிறமாகவும் இலை புன்னை மரத்து இலை போலவும், காய் சுருண்ட வெள்ளரிக்காய் போலும் இருக்குமாம். இந்தமரத்தின் பட்டையைச் சீவினால் நீல நிறத்தில் பால்வருமாம். அந்த பாலைக் கொண்டுவந்து அதில் சுத்தி செய்த பாதரசம் விட்டு சூரியப்புடம் போட்டால் இறுகி இருக்குமாம் அதை எட்த்து செந்தூரமாக்கி நெய்யில் குழைத்து ஒருமண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம்.

செந்தாடுபாவை

மேலே குறிப்பிட்ட சாயாவிருட்சம் இருக்கும் இடத்திற்க்கு நேர் வடக்கே செந்தாடுபாவை என்னும் ஒரு மூலிகைச் செடி இருக்கிறது. அந்தச் செடி குத்துக்காரைச் செடி போலவும், அதன் இலை சம்மட்டி இலை போலவும் இருக்குமாம். அதன் இலையைப் பிடுங்கி சாறு பிழிந்து அந்தச் சாற்றைக் கொண்டு சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டும். பின் அந்த சூதத்தை எடுத்து சாயா விருட்சத்தின் பாலில் ஏழுநாள் ஊறவைத்து எடுத்துப் புடமிட்டு செந்தூரமாக்கி பசுநெய்யில் குழைத்து ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

இத்துடன் சதுரகிரி மலையில் உள்ள அரிய மூலிகைகள் பற்றிய பதிவுகள் நிறைவடைகிறது. நாளைய பதிவில் சதுரகிரி பற்றிய சுவாரசியமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள்

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் நிறைந்திருக்கும் மூலிகைகளின் அருமை பெருமைகள் சித்தர்களின் பாடல்களில் விரிவாக கொட்டிக் கிடக்கின்றன.அவற்றை தனியே தொகுத்து ஆய்வுகள் மேற் கொண்டிருந்தால் சித்த மருத்துவம் இன்னேரத்துக்கு உலகின் முதன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றாக திகழ்ந்திருக்கும். அத்தகைய பொன்னான வாய்ப்பினை நாம் தவற விட்டுவிட்டோமோ என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. இப்போது கூட காலம் தாழ்ந்து விடவில்லை. தமிழக அரசும்,இந்த துறையில் ஆர்வமுள்ளோரும் கை கோர்த்தால், நமது சித்தர்களின் அரிய தெளிவுகளை மனிதகுலத்தை உய்விக்க பயன்படுத்திட முடியும்.

கடந்த மூன்று நாட்களாக பகிர்ந்து கொள்ளும் மூலிகைகள் பெரும்பாலும் சதுரகிரி மலைக்கே உரித்தானவை,அந்த வரிசையில் இன்று காயசித்தி அளிக்கும் மூன்று மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

வனபிரம்மி

முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெண்ணாவல் மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து வலது பக்கத்தில் வனபிரம்மி என்னும் மூலிகை இருக்கிறது. இது கொடியாகப் படர்ந்து இருக்கும். இதன் இலை நெல்லியிலை போல தடிப்பாக இருக்குமாம். இந்த மூலிகையை ஞாயிற்றுக் கிழமையன்று சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரைக் கொண்டு வந்து சூரணித்து முப்பது நாட்கள் புளித்த காடியில் கலக்கி உட்கொள்ள காயசித்தியாகுமாம்.

முப்பிரண்டை

மேலே சொன்ன வனபிரம்மி கொடி யிருக்கும் இடத்திற்க்கு பக்கத்தில் முப்பிரண்டை இருக்கிறதாம்.இது சாதாரன பிரண்டை போல முப்பட்டையாக இருக்குமாம்.இதைக் கொண்டுவந்து சாறு எடுத்து சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டுமாம்.உடனே அதையெடுத்து நாகத்துடன் இணைக்க நாகம் கட்டும். நாகம் சூதம் இந்த இரெண்டும் சேர்ந்த கலவையின் எடைக்கு சம எடை கெந்தி சேர்த்து இதே முலிகையின் சாறுவிட்டு அரைத்து புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை சாப்பிட்டுவர காயசித்தி கிடைக்குமாம்.

குருவரிக்கற்றாளை

சதுரகிரியின் வடபாகத்தில் குறுவரிக் கற்றாளை என்று ஒரு மூலிகை இருக்குறதாம். அது பெருவிரல் பருமன் இருக்குமாம். ஒன்றரைச் சாண் உயரம் மட்டுமே வளருமாம். குறுக்கே வரிவரியாக வரிகள் காணப்படுமாம். இதற்க்குச் சாப நிவர்த்தி செய்து வேரை எடுத்துவந்து இடித்துச் சாறேடுத்து இரும்பை மெல்லிய தகடாகத் தட்டி இந்த சாற்றில் ஊறவைத்து எடுக்க அது தாமிரமாக மாறி இருக்குமாம். அதை செந்தூரம் செய்து உண்ண காய சித்தி உண்டாகுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தவறுக்கு வருந்துகிறேன்..

Author: தோழி / Labels:

நண்பர்களே!

சித்தரியலில் ஆர்வமுடைய நண்பர் ஒருவரின் மூலமாக கிடைத்த சித்தர் பாடல்களின் ஒலித் தொகுப்பினை கடந்த மாதம் இங்கே பகிர்ந்து கொண்டமை உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பதிவுகளில் ஒலித் தொகுப்பினை உருவாக்கியவர் மற்றும் அதன் உரிமையாளரைப் பற்றி கூறியிருந்த தகவல்கள் தவறானவை. திரு.ஆர்.கண்ணன் என்ற பெருந்தகையாளரின் மின்னஞ்சல் கிடைக்கப் பெறும் வரையில் இதனை நான் அறிந்திருக்கவில்லை. அவரின் அறக் கட்டளைக்குச் சொந்தமான இந்த ஒலித் தொகுப்பினை அவரது அனுமதியில்லாது, இன்னொருவரின் பெயரில் பதிவிட்டது என்னுடைய மிகப் பெரிய தவறு.

இது தொடர்பாக எனது நிலையினை விளக்கி,அந்த பதிவுகளை உடனடியாக நீக்கிவிடுவதாக கூறி, நடந்து விட்ட தவறுக்காக எனது வருத்தங்களையும் தெரிவித்து,எனது பிழையை பொருத்தருளுமாறு வேண்டி ஒரு மின்னஞ்சலை அவருக்கு அனுப்பியிருந்தேன்.அதற்கு அவர் தன் இளைய சகோதரியாய் கருதி என் தவறினை பொறுப்பதாய் பதிலளித்திருந்தார்.மேலும் விரைவில் திருமந்திரத்தினை ஒலித் தொகுப்பாய் கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும் இந்த ஒலித் தொகுப்பு வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொண்டால் அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

தன்னுடைய முயற்சியினை தனது அனுமதியில்லாது எடுத்தாண்டதோடு மட்டுமல்லாது, வேறொருவருக்கு அதன் புகழை நான் கொடுத்திருந்ததை அறிந்து ஆத்திரம் கொள்ளாது,மென்மையான தன்மையோடு எனது பிழையை உணர்த்திய பாங்கிலும்,எனது விளக்கத்தினை ஏற்று என் சிறு பிள்ளைத் தனத்தை பொருத்தருளிய பெருந்தன்மையில் அவர் மிக உயர்ந்தவரானார்.இதன் பின்னர் நான் உடனடியாக அந்த பதிவுகளில் இருந்த தகவல் பிழையினை சரி செய்திருக்க வேண்டும்.ஆனால், வழக்கம் போல எனது கவனமின்மையினால் அதனை செய்ய தவறிவிட்டேன்.

நேற்று, மீண்டும் அந்த பெருந்தகையாளரிடம் இருந்து வந்த இந்த பின்னூட்டமே, அவசரமாய் இந்த பதிவினை எழுதிட தூண்டியது.அவரின் வரிகளை இங்கே பொதுவில் அனைவரின் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன்.

“திரு தேவன் அவர்களிடமிருந்து புலிப்பாணி அடிமையின் அனுமதி” என்ற அந்த வாக்கியங்களை இந்த blogல் இருந்து நீக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது தவறு என தெரிந்த பின் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என சொன்னதை நினைவுபடுத்துகிறோம்

நல்ல செய்திகள் மக்களை அடையவேண்டும் என்பதில் இரண்டாம் சிந்தனைக்கு எள்ளவும் இடம் இல்லை, என்றாலும் அதற்கான முறை வழிகள் என சில உள்ளன அதனை பின்பற்றுவது தான் ஒழுக்கமுடையவர்களுக்கு உயர்ந்தது என நாங்கள் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள் .நீங்கள் விரும்பினால் இது தொடர்பாக உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் .

இந்தியாவில் எங்களை சந்திக்க விரும்பினால் தேதி குறித்து சொன்னால் சந்திக்க தயாராக இருக்கிறோம் .

எங்களது வெளியீடுகள்
வெளியீடு 1

சிவவாக்கியர் பாடல்கள் (550 பாடல்களும் முழுமையாக இசை வடிவில்)

வெளியீடு 2
சித்தர் பாடல்கள் வரிசையில்
1)சித்தர்கள் வந்தனம்
2)பத்திரகிரியார் பாடல்கள்
3)பாம்பாட்டி சித்தர் பாடல்கள்
4)குதம்பை சித்தர் பாடல்கள்
5)அகப்பேய் சித்தர் பாடல்கள்
6)மதுரை வாலைசாமி சித்தர் பாடல்கள்
7)கொங்கன நாயனார் சித்தர் பாடல்கள்
8)வேண்டுதல்

வெளியீடு 3
சித்தர்கள் ஞான பாடல்கள் வரிசையில்
1) சித்தர்கள் வந்தனம்
2) அகத்தியர் ஞானம்
3) சட்டைமுனி முன் ஞானம் மற்றும் பின் ஞானம்
4) காகபுஜன்டர் ஞானம்
5) ரோமரிஷி ஞானம்
6) சுப்பிரமணியர் ஞானம்
7) திருமூலர் ஞானம்
8) திருவள்ளுவர் ஞானம்
9) வால்மீகர் சூத்திர ஞானம்
10) வேண்டுதல் . .

இந்த வெளியீடுகளை தெரிவிப்பதன் மூலம் இது வேறு யாரிடமிருந்தும் பதிப்புரிமை பெறக்கூடாது என்பதை தெரிவிப்பதுடன்.இது போன்ற வெளியீடுகளை பதிப்பு செய்ய முறையான எழுத்து முறை அனுமதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் .

இறைவன் பணியில் . .

தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

பதிவுகளில் உடனடியாக தகவலை திருத்தாமல் விட்டது என்னுடைய கவனக் குறைவினால் நேர்ந்ததே தவிர வேறெந்த உள்நோக்கமும் இல்லை.இது மன்னிக்க இயலாத தவறு.எனது செயலுக்காக பொதுவில் எனது வருத்தங்களை திரு.ஆர்.கண்ணன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன்,அந்த ஒலிப் பதிவுகளை நிரந்தரமாக என் பதிவுகளில் இருந்து நீக்கி விட்டேன் என்பதையும் அறியத் தருகிறேன். இந்த ஒலித் தொகுப்பினை வேண்டுவோர் “சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை”யின் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றிடலாம்.அன்னாரின் தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது.அவரின் அனுமதியில்லாது அதனை பொதுவில் வெளியிடக் கூடாது என்பதற்காகவே இங்கே பகிரவில்லை. அவரின் அனுமதி பெற்று அறியத்தருகிறேன்.

இன்று பதிப்பிப்பதாக இருந்த சதுரகிரி மலை பற்றிய பதிவு நாளை வெளியாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரியின் அற்புத மூலிகைகள் தொடர்ச்சி..

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான மூலிகைகளின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.

வெண்ணாவல்

சதுரகிரியின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் விருட்சங்களில் முக்கியமானது இந்த வெண்ணாவல் விருட்சம். இதன் பூ, காய், கனி எல்லாம் வெண்மையாக இருக்குமாம். இந்த விருட்சத்தின் மேற் பட்டையை போக்கி அடிப் பட்டையை வெட்டிக் கொண்டுவந்து குழித்தைலம் இறக்கி, அந்த தைலத்தை லேசாக சூடாக்கிய தாமிர தகட்டில் நாற்பது தடவைகள் தேய்க்க அது வெள்ளியாகுமாம். அந்த வெள்ளியைச் செந்தூரமாக்கி இதே வெண்ணாவல் மரப்பட்டையைத் தூளாக்கி அத்துடன் கலந்து மூன்று நாட்கள், ஆறு பொழுது பண எடை அளவு புசிக்க காயசித்தி உண்டாகுமாம்.

கணைஎருமை விருட்சம்

சதுரகிரியில் நந்தீஸ்வரர் ஆச்சிரமத்துக்கு மேற்கு திசையில் ஒரு நாளிகை தூரம் நடந்தால் கணைஎருமை விருட்ச மரங்கள் இருக்குமாம். தோற்றத்தில் அது இலுப்பை மரம் போல் இருக்குமாம், அதன் காய் உருண்டையாக இருப்பதுடன், அந்த மரத்தினடியில் ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமையைப் போல் கனைக்குமாம், அந்த மரத்தைக் குத்தினால் பால்வரும், அந்தப் பாலைக் கொண்டு வந்து தினமும் பண எடை அளவு, நாலு நாள் சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து நாளிகைக்கு ஒரு கரண்டி வீதம் பசும்பால் கொடுக்க மூர்ச்சை தெளியும். அப்படி மூர்ச்சை தெளிந்தவுடன் காயசித்தி உண்டாகுமாம்.

பவளத்துத்தி

மேலே சொன்ன கருனை விருட்ச மரங்களுக்கு வடக்குப் பக்கமாக அம்பு விடும் தூரத்தில் பவளத்துத்தி என்னும் ஒரு செடி உண்டு, அது துத்திச் செடி போலவும் அதன் இலை நுனியில் சுற்றிலும் சிவப்பு நிறம் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் இருக்கும். இதன் பூ பவள நிறத்தில் இருக்குமாம். இந்த செடியின் இலையை சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து வெருகடிப் பிரமாணம் அளவு எடுத்து ஒருவாரம் சாப்பிடக் காயசித்தி உண்டாகுமாம்.

உரோமவிருட்சம்

இராமதேவர் ஆச்சிரமத்திற்க்கு கீழ்திசையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் அங்கே உரோமவிருட்சம் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்து காணப்படுமாம். அம்மரம் சாம்பல் நிறமாக இருக்குமாம், அதன் கிளைகள் உரோமத்தைப் போலவும், தொட்டால் பஞ்சுபோல மிருதுவாகவும் இருக்குமாம். அதன் பட்டையை இரும்பு படாமல் தட்டி எடுத்து சூரணித்து, அந்த சூரணத்தில் திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம். அப்படி உண்டு காயசித்தி பெற்றவர்களுடைய சிறுநீரானது பஞ்சலோகாத்தையும் பேதிக்கச் செய்யும் தன்மையுள்ளதாகிவிடுமாம்.

(சிவவாக்கியாரின் சிறுநீர் பட்டு இரும்பு பேதித்து தங்கமாக மாறியதாக ஒரு செவிவழிக் கதை உண்டு.ஒரு வேளை அவர் இது போன்ற காயகற்பம் உட்கொண்டதனால் கூட இருக்கலாம்)

இந்த உரோமவிருட்சத்தில் துளை போட்டு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை அந்த துளையில் ஊற்றி, அந்த விருட்சத்தின் பட்டையால் மூடி நாற்பத்தைந்து நாள் கழித்து பார்த்தால் அந்த பாதரசம் கட்டியிருக்குமாம். அதை எடுத்து இந்த மரத்தின் பட்டையை அரைத்து கவசம் செய்து முழப் புடமிட உருகி மணியாகுமாம், அந்த மணியை வாயில் போட்டுக் கொண்டவர்களின் உடலுக்கு , கத்தி வெட்டு, அம்பு போன்றவையால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம், அத்துடன் நரை, திரை, மூப்பு, பிணி மாறி காயசித்தியும் உண்டாகுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரியின் அற்புத மூலிகைகள் தொடர்ச்சி...

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய சில மூலிகைகளின் இருப்பிடம் மற்றும் அவற்றின் மகத்துவம் குறித்த தகவல்கள் இன்றும் தொடர்கின்றது. இன்று புராண இதிகாசங்களில் மிகையாகவும்,மிகச் சிறப்பானதாகவும் வர்ணிக்கப் பட்டிருக்கும் சில மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

கற்பகதரு

கற்பக விருட்சம், பஞ்சு தரு என்கிற பெயர்களால் அறியப் படும் இந்த மரமானது மகாலிங்கர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறதாம்.இந்த மரத்தில் ஐந்து கிளைகள் இருக்குமென்றும் அவை ஒவ்வொன்றிலும் தனித்துவமான வெவ்வேறு வடிவத்திலான இலைகள் இருக்குமென்றும் கூறப் பட்டிருக்கிறது.இதனை வைத்தே இந்த மரத்தினை அடையாளம் காணலாம். இந்த மரத்தின் பட்டையை ஒரு பண எடையளவு ஒருவாரம் உட்கொள்ள அனைத்து நோய்களும் அகலுமாம்.மேலும் இந்த மரத்தை தட்டினால் பால் வருமெனவும்,அதனை ஒரு பண எடையளவு ஒரு மண்டலம் உட்கொள்ள காயசித்தியாகும் என குறிப்புகள் காணக் கிடைக்கிறது.

சஞ்சீவி மூலிகை

இராமாயணத்தில் இந்த மூலிகைக்காக ஒரு மலையையே பெயர்த்தெடுத்த கதையினை அறிவீர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையை சஞ்சீவினி மூலிகை, எமனை வென்றான் மூலிகை, தசையொட்டி மூலிகை என்று வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிட்டிருக்கின்றனர்.இதன் இலையானது சிறுவேப்பிலை போல இருக்குமாம். இது குத்து செடியாகும். இந்த செடியின் இலையின் சாறினை அகால மரணமடைந்தவரின் நாசியில் ஒரு சிட்டிகை விட்டு ஊத உயிர் பெற்று எழுந்து விடுவார்களாம். இது தவிர இந்த மூலிகையின் சாறினை வெட்டுப் பட்ட இடத்தில் தடவ அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதுடன் அவர் உறங்கி எழுந்தவர் போல புத்துணர்ச்சியுடன் எழுவார் என கூறப் பட்டிருக்கிறது. மூர்ச்சை அடைந்தவர்களுக்கு இந்த மூலிகையினால் விசிற மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார்களாம். இந்த மூலிகையில் பட்டு வரும் காற்றினை சுவாசித்தாலே ஆயுள் விருத்தியும், காயசித்தியும் கிடைக்குமாம். ஆச்சர்யம்தானே!

உரோமவேங்கை

சதுரகிரி மலையில் சங்கிலிப் பாறை இருக்கிறதாம்.அதற்க்கு தென் கிழக்கில் உரோமவேங்கை என்னும் விருட்சம் இருக்கிறது.இது வேங்கை மரம் போல் மிருதுவாகவும், அடித்தூர் சாம்பல் நிறத்திலும் இருக்குமாம்.அதன் விழுதானது கவரிமான் உரோமம் போல ஒருசாண் அல்லது அரைச்சாண் நீளத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம். இதன் பட்டையைச் சிறிது பெயர்த்தால் இரத்தம் போல் பால் வடியுமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து சொர்ணத்திற்க்குச் சுருக்கிட பற்பமாகுமாம், அதை சாப்பிட காயத்தி கிடைக்குமாம்.

கற்றாமரை

சதுரகிரி மலையில் காலங்கி வனம் இருக்கிறது.அதன் வடக்குப் பக்கத்தில் தண்ணீர்கசிவுத் தரை இருக்கிறது. அந்தத் தரையில் கற்றாமரை என்றொரு மூலிகை இருக்கிறதாம். அந்த மூலிகையின் ஒரு இலையை கையால் தீண்டினால், அந்த இலை நான்கு இலையாக விரியுமாம். அந்த மூலிகையின் வேர் சடை போல் இருக்குமாம். இந்த வேரில் இரும்பு ஊசியைச் செருகி எடுத்தால் அது தாமிர ஊசியாக மாறி இருக்குமாம். பின்னர் அந்த தாமிர ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க வெள்ளி ஊசியாக மாறி இருக்குமாம். மீண்டும் அந்த வெள்ளி ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க அந்த ஊசியானது தங்க ஊசியாக மாறிவிடுமாம். மேலும் அந்த மூலிகையை கால்களில் மிதித்துக் கொண்டு பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் தெரியுமாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு இந்த மூலிகையை அடையாளம் கண்டு சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒரு மண்டலத்திற்க்கு வெருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளை சதுரகிரி மலையில் இருக்கும் மேலும் சில ஆச்சர்யமான மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரியின் அற்புத மூலிகைகள்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய விருட்சங்கள் மற்றும் மூலிகைகளின் பட்டியலை நேற்றைய பதிவில் பார்த்தோம். இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட சில அரிய மூலிகைகள் மலையின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதையும், அவற்றின் தன்மை மற்றும் மகத்துவத்தினைப் பற்றி பார்ப்போம்.

மிகவும் ரகசியமாய் பாதுகாக்கப்படுகிற சதுரகிரியின் தகவல்களை நான் பொதுவில் வைப்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சில நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தினை தெரிவித்திருந்தனர். நான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு கருத்தினையே அந்த நண்பர்களுக்கு பதிலாக வைத்திட விரும்புகிறேன். குருவருளால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். நற்சிந்தனையும்,குருவருளும் வாய்க்கப் பட்டவர்களுக்கு மட்டுமே சித்தர் பெருமக்களால் சபிக்கப் பட்ட இந்த ரகசியங்கள் கைகூடும்.

வாருங்கள் மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முண்டகவிருட்சம்

சதுரகிரி மகாலிங்க மூர்த்தியின் சன்னிதிக்கு வடதிசையில் ஒரு நாளிகை தூரம் நடக்க முண்டகவனம் என்னும் ஒரு வனம் இருக்கிறது. அந்த வனத்தின் வட மேற்கு மூலையில் இந்த முண்டக விருட்சங்கள் வளர்ந்திருக்கும். தோற்றத்தில் ஆல விருட்சம் போல் இருந்தாலும், இதன் இலைகள் சிறியதாகவும் காய்கள் கலத்திக்காய் போலவும் இருக்கும். இந்த மரத்தை தட்டினால் பால்வருமாம்.

அந்தப் பாலை தினமும் அரைக்காற் படியாக முப்பது நாளைக்கு சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து பசுப்பலை நன்கு காய்ச்சி தேன்விட்டு கலந்து ஒருகரண்டி வீதம் அடிக்கடி மூர்ச்சையானவருக்கு பருகத் தர வேண்டுமாம் அப்படி தொடர்ந்து பருக மூர்ச்சை தெளியுமாம். மூர்ச்சை தெளிந்து ஒருவாரத்தில் காயசித்தி உண்டாகி விடுமாம்.உடல் தங்கநிறமாகுமாம், மலஜலம் பேதிக்குமாம்.

அழுகண்ணி

மேலே சொன்ன முண்டகவிருட்சத்திற்க்கு பக்கத்தில் வட்டப்பாறை ஒன்று இருக்கிறதாம், அதன் மேற்குப் பகுதியில் கசிவுத்தரையும் அதில் நெரி கற்களும் நிறைந்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் அழுகண்ணி என்ற மூலிகைகள் வளர்ந்திருக்கும். அதன் இலை பலாச்சுளை போல் இருக்கும். பூமஞ்சள் நிறமாகவும் காய் செந்தட்டிக்காய் போலவும் இருக்கும். இதை சாப நிவர்த்தி செய்து பிடுங்கி அதன் வேரை சூரணித்து பசு நெய்யுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு, பிணி இன்றி நெடுங்காலம் வாழலாமாம்.

தொழுகண்ணி

மேலே சொன்ன அழுகண்ணி மூலிகை இருக்கும் இடத்திற்கு மேல் புறமாக தொழுகண்ணி என்னும் மூலிகை இருக்கிறது, அதன் இலை அலரி இலை போலிருக்கும், பூ வெண்மை நிறமாகவும் , தூர் கறுப்பு நிறமாகவும் இருக்கும், இது சூரியனை நோக்கியபடி இருக்கும். இந்த குறிப்புகளைக் கொண்டு இதனை தேடி அறிந்து, இலையில் கொஞ்சமும், முன்னர் கூறிய அழுகண்ணி இலையில் கொஞ்சமும் சம அளவில் எடுத்து சூரணித்து அந்த சூரனத்தில் திரிகடிப் பிரமாணம் எடுத்து பசும் பாலில் போட்டு அருந்தினால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளைய பதிவில் மேலும் கற்பக விருட்சம் மற்றும் சஞ்சீவி மூலிகையின் அற்புதங்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


என்னதான் இருக்கிறது சதுரகிரியில்....!

Author: தோழி / Labels:

மூன்றாவது வாரமாய் சதுரகிரி மலையின் தகவல்கள் தொடர்கிறது. உள்ளதை உள்ளவாறு பகிர்ந்து கொள்வது சுலபமாயிருக்கிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் கூறியவாறு மிகையான கட்டுக் கதைகள் எதுவும் நான் பார்த்த வரையில் சித்தர்களின் பாடல்களில் இல்லை. நறுக்குத் தெறித்தாற் போல் எளிய தமிழில் ஆனால் ஆழமான அர்த்தங்களுடனான பாடல்கள்.

தற்காலத்தில் சித்தர்களைக் குறித்தான ஆக்கங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மிகையாக புராணக் கதைகளுடன் பின்னப்பட்டே வெளியிடப் படுகிறது. இப்படியான ஆதாரஙகள் ஏதும் என்னிடத்தில் இருக்கும் புத்தகங்களில் இல்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. இதன் மூலம் எவரையும் குறை சொல்வது என் நோக்கமில்லை.

இன்றைய பதிவில் சதுரகிரி மலையில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தனித்தனியே பார்ப்போம்.

கோவில்கள்

சதுரகிரியில் கருப்பண்ணசமி, இரட்டைலிங்கம், கருப்பன் கோவில், சந்தனமகாலிங்க சுவாமி கோவில், சுந்தரர் கோவில், மகாலிங்கர் கோவில், சுந்தரலிங்கர் கோவில், வெள்ளைப் பிள்ளையார் கோவில், கன்னிமார் கோவில் ஆகியவை முக்கியமான கோவில்களாக சித்தர்களின் பாடல்களில் குறிக்கப் பட்டிருக்கிறது.

சித்தர்கள்

இங்கே வாழ்ந்திருந்த சித்தர் பெருமக்களை பற்றி கணக்கிட்டால் அநேகமாய் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இந்த மலையோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கின்றன. பலர் இங்கே சமாதியடைந்திருக்கின்றனர்.இன்றும் பல சித்தர் பெருமக்கள் இங்கே வாழ்வதாகவும் நம்பப் படுகிறது.

தீர்த்தம்/ஆறுகள்

சந்திரதீர்த்தம், கவுண்டுண்யஆறு, சந்தனமாகாலிங்க தீர்த்தம், திருமஞ்சனப் பொய்கை, பொய்கை தீர்த்தம், பசுக்கிடைத்தீர்த்தம், குளிராட்டி பொய்கை, வற்றாப்பொய்கை, பாம்புக் கேணி, உதக சுனைகள் போன்றவை ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்களின் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவை தவிர வேறு பல தீர்த்தங்களைப் பற்றி குறிப்புகள் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

மரங்கள்/மூலிகைகள்

சதுரகிரி மலையில் மூங்கில், நாங்கில், கோங்கை, கொங்கு, சந்தனம், அகில், அசோக்கு, தேக்கு, வேங்கை, சுரபுன்னை போன்ற அனேக மரங்களும்,வேறெங்கும் இலகுவில் கிடைக்காத அழுகண்ணி, இருப்பவல் செடி, உதிரவேங்கை, உரோமவேங்கை, உரோமவிருட்சம், ஏறழிஞ்சி, கற்றாமரை, கணைஎருமைவிருட்சம், கருநொச்சி, கருநெல்லி, கருங்கொடிவேலி, செந்தாடுபாவை, கையாந்தகரை, கானற்பலா, சாயாவிருட்சம், செங்கொடி வேலி, செங்கடுக்காய், செந்நாயுருவி, செங்கற்றாளை, தில்லைவிருட்சம், சஞ்சீவிமூலிகை, சிவந்தஇலைக்கள்ளி, சுணங்கிவிருட்சம், சோதிவிருட்சம், முண்டகவிருட்சம், பஞ்சதரு, வெண்ணாவல், மஞ்சப்பூத்தவேளை, வெள்ளைப்புனல்முருங்கை, சோதிப்புல்லு, பவளத்துத்தி, பொற்றலைக்கரிப்பான், கருநாரத்தை, நாகதாளி, வனபிரம்மி, பேய்சுரை, தொழுகண்ணி, முப்பிரண்டை, நாகபடக்கற்றாளை, குருவரிக்கற்றாளை போன்ற பல காயகற்ப மூலிகைகளும், இவை தவிர விஷப் பூலாமரம், முகம் வீங்கிமரம், எரிமுகிமரம், விஷதேற்ராமரம், தும்புகச்செடி பேன்ற பல விஷ செடிகளும் இருக்கின்றனவாம். இவை மனிதர் உடலில் பட்டாலே உயிராபத்து விளைவிக்குமாம்.

பறவைகள்/விலங்குகள்

பறவைக் கீரி, பறவைப்பாம்பு, பறவைப்பூனை, பறவை ஓந்தி என்னும் விசித்திர வகை விலங்குகளும், அகண்ட பேரண்டமாகிய இருதலைப்பட்சிகளும், தீவிழுங்கும் பட்சியும், மதிபமிழ்தத்தையுண்ணும் சகோரப் பட்சியாகிய செம்போத்தும், இன்னும் பல பறவைகளும், கும்புகும்பாய் சஞ்சரிக்கும் அன்றியும், சிங்கம்,யாளி, புலி, கரடி கடுவாய் போன்ற மானிடர்க்கு துன்பம் விளைவிக்கும் மிருகங்களும், மான், மரை, மலைப்பசு, வரையாடு, காட்டெருமை போன்றசாந்த மிருகங்களும் மானிடர் கண்களுக்கு புலப்படாது மறைந்து ஒற்றுமையாய் வாழுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அனுபவ சித்தரின் அனுபவம்!

Author: தோழி / Labels: ,

தமிழர் திரு நாளாம் தைத் திங்கள் முதல் நாளில், நண்பர்கள் அனைவரின் வாழ்வில் நலமும்,வளமும் விழைய எல்லாம் வல்ல குருவருளை வேண்டி வணங்குகிறேன்.இந்த நாளில் நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதி கொள்வோம்.

இன்று வழக்கமான சித்தர் பெருமக்களின் பாடல்களைத் தவிர்த்து மாறுதலாய், ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து தெளிந்த ஓர் அனுபவ சித்தரின் பாடலை பகிர்ந்து கொள்கிறேன்.பாடலில் பொதிந்திருக்கும் அர்த்தம் நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கட்டும்.

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவிஞர் கண்ணதாசன்

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தைலக் கிணற்றை கண்டறியும் ரகசியம்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரியில் மறைவாக இருப்பதாய் கருதப் படும் தைலக் கிணறு பற்றி ஏராளமான கதைகள் உண்டு. இவற்றில் பல கதைகளை புனைவின் உச்சமாகவே கருதலாம்.நானும் கூட முந்தைய பதிவொன்றில் இந்த தைலக் கிணறு குறித்த ஒரு கதையினை பகிர்ந்திருக்கிறேன். அதனை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

பிலாவடி கருப்பண்ண சாமி கோவிலின் பின்னால் இருப்பதாக கூறப்படும் இந்த தைலக் கிணற்றை இதுவரை யாரும் கண்டறிந்து கூறியதாக தெரியவில்லை. இரசவாதம் செய்வதற்கு தேவையான மூலிகை குழம்பின் மிகுதி இந்த கிணற்றுக்குள் கொட்டப் பட்டு அதற்கு காவல் தெய்வங்களை சித்தர்கள் நியமித்ததாகவும், அந்த காவல் தெய்வங்கள் இந்த கிணற்றை சாமானியர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும் மட்டுமே சமாதானம் சொல்லப் படுகிறது. இன்றைய பதிவில் இது தொடர்பான சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

பல் வேறு சித்தர்களின் பாடல்களில் இந்த தைலக் கிணறு குறித்த தகவல்கள் காணப் பட்டாலும், போகர் அருளிய “போகர் ஜெனன சாகரம்” என்கிற நூலில் காணப்படும் தகவல் கொஞ்சம் வித்தியாசமானது. தைலக் கிணற்றின் அமைப்பு மற்றும் சூழலை விவரிக்கிறது பின்வரும் பாடல்...

"ஆமடா குகையொன்று வுள்ளேபோகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்பமீந்தார்
உயர்ந்ததொரு தயிலமெல்லா மங்கேயீந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
சென்றுபார் காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப் பாறையொன்று"
"ஆமென்ற பாறையிலே குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா மூடினேனே
மூனேன் கருப்பனையங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்க்கெல்லாம்
தெடினே னென்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து யிருக்குமிடஞ் செப்புமென்றேன்"

- போகர் -

பெரிய குகை, அதில் ஆயிரம் சித்தர்களுக்கு மேல் இருப்பார்கள். அங்கேதான் காலங்கிநாதர் தங்கி பல்வேறு கற்பங்களை சாப்பிட்டார். எனக்கும் கூட கொடுத்தார்.காலங்கிநாதர் அரிய பல தைல வகைகளை எனக்கு தந்தார். நானும் அங்கிருந்து சித்தியடைந்தேன் என்கிறார். பின்னர் கப்பல் போல இருக்கும் பெரிய பாறை இருக்கிறது. அந்த பாறையில் இருக்கும் ஒரு குழியில் இந்த அரிய தைலத்தை எல்லாம் போட்டு மூடினேன் என்கிறார்.இந்த குழிக்கு கருப்பனை காவல் வைத்திருக்கிறேன் என்கிறார். உண்மையான தேடல் உள்ளவர்கள் தெளிந்து இங்கே வந்தால் அந்த கிணற்றை காட்டச் சொல்லியே கருப்பனை காவலுக்கு வைத்தேன் என்கிறார் போகர்.

வெறுமனே கருப்பண்ண சாமி கோவிலின் பின் புறம் கிணற்றை தேடுவதை விட அந்த பகுதியில் ஆயிரம் பேர் தங்குமளவு பெரிய குகையும், அங்கேயோ அல்லது பக்கத்திலோ கப்பல் மாதிரியான பாறையும் இருக்கிறதா என தேடினால் இந்த கிணற்றை கண்டறிய வாய்ப்பு உள்ளது. இத்தனை சித்தர்கள் ஓரிடத்தில் கூடி என்ன செய்திருப்பார்கள், ஒருவேளை அந்த இடம் ஒரு ஆய்வுக் கூடமாகவோ அல்லது சித்தர்கள் தங்களின் கண்ட்றிதல்களை பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனை கூடமாகவோ இருந்திருக்கலாம். போகரின் வாக்குப் படி தூய உள்ளத்துடன் கருப்பன்ண சாமியை வணங்கி இந்த தேடலை தொடர்ந்தால் தைலக் கிணற்றின் ரகசியம் தெரிய வரலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரியில் மறைந்திருக்கும் சித்தர் சமாதிகள்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரியில் பொதிந்திருக்கும் தகவல்கள் இன்றும் தொடர்கிறது.....

கோரக்கர் பாடல்களைக் கொண்டு அங்கே வசித்த சித்தர்கள் பற்றியும்,அவர்தம் ஆச்சிரமங்கள்,குகைகள் பற்றிய விவரங்களைப் பார்த்தோம்.இவை தவிர மலையில் இருக்கும் கோவில்கள், அவற்றில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள், அரிய மூலிகைகள்,சுனைகள்,தைலக் கிணறு போன்ற விவரங்களையும் பார்த்தோம்.

இத்தனை சிறப்பான சித்தர்கள் இங்கே வாழ்ந்திருந்தாலும் அவர்களின் ஜீவசமாதிகள் தமிழகமெங்கும் இருப்பது குறித்து நண்பர் ஒருவர் கடந்த வாரத்தில் தனது சந்தேகத்தினை எழுப்பியிருந்தார்.நியாயமான இந்த கேள்விக்கான விடைகளைத் தேடி புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது கிடைத்த ஆச்சர்யமான தகவல்களை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் தனது “அகத்தியர் 12000” என்ற நூலில் கூறியுள்ள விவரங்கள் பின் வருமாறு...

"ஈயவே யின்னமொரு மார்க்கங்கூர்வேன்
யெழிலான சதுரகிரி மேற்கேயப்பா
சித்தான பெரியோர்தான் தெவரிடியப்பா
சிறப்பான சித்தர்பிரம முனிதானங்கே
விருப்பமுடன் சமாதிமுகம் கொண்டார்பாரே"

- அகத்தியர் -

அகதியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறுவதாக இந்த பாடல் அமைகிறது. சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் அழகு மிகுந்த சதுரகிரியின் மேற்கு பக்கத்தை விரும்பி தேர்ந்தெடுத்து சமாதியடைந்தனர் என்கிறார்.மேலும் யாரெல்லாம் இங்கே சமாதிய அடைந்திருக்கின்றனர் என்பதையும், அந்த சமாதிகளை எவ்வாறு தரிசிப்பது என்றும் இந்த நூலில் கூறியிருக்கிறார்.

மிக நிச்சயமாக எனக்கு இது புதிய தகவல்தான், சித்தர்கள் தொடர்பாய் நான் இது வரை வாசித்த எந்த ஒரு தனி நூலிலும் இத்தகைய செய்தியினை படிக்கவில்லை. இத்தனை முக்கியமான ஒரு தகவல் ஏன் ஆவணப் படுத்தப் படாமல் போயிற்று என்பதும் புரியவில்லை.

வாருங்கள் யாரெல்லாம் சதுரகிரியில் சமாதியடைந்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

"இருந்துமே பாம்பாட்டி சித்தர்தாமும்
எழிலுடனே வனேகநூல் செய்துகொண்டு
பொருந்தவே மரப்பொந்தில் சமாதியாகி"

- அகத்தியர் -

பமபாட்டிச்சித்தர் அநேக நூல்களைப் பாடிவிட்டு சதுரகிரியில் மேற்க்குப் பக்கம் இருக்கும் மரப் பொந்தொன்றில் சமாதியடைந்தார் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.

"சித்தான சித்துமுனி விடைக்காடார்
பத்தியுடன் பதங்கண்டு நேமம்பூண்டு
முத்தியுடன் சமாதிக்கு யேகவென்று
மூர்க்கமுடன் மலையோறி மைந்தா
வெல்லவே குத்துக்கல் அருகிலப்பா
இருக்கமது சமாதிமுகங் கொண்டாரே"

- அகத்தியர் -

இடைக்காட்டுச்சித்தர் சமாதியடைய வேண்டும் என்று சதுரகிரி மலை ஏறி குத்துக்கல் அருகில் சமாதியடந்தார் என்கிறார் அகதியர்.

"பாரப்பா திருமூல நாயன்றானும்
பார்க்கவே வயக்கால் மண்டபந்தான்
பாங்குடனே அதனருகில் பார்தாயானால்
பூர்க்கவே பிரணவத்தைக் கையிலேந்தி
புகழுடனே சமாதியேகி இருப்பாரங்கே"

- அகத்தியர் -

வாய்க்கால் மண்டபத்திற்க்கு அருகில் திருமூலரும் சமாதியடைந்ததாக அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!, இந்த நூலில் நான் பார்த்த வரையில் பதினோரு சித்தர்கள் சதுரகிரியில் சமாதியடைந்திருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி மூவரைப் பற்றிய தகவல்களோடு இன்று நிறைவு செய்கிறேன். மேலதிக தகவல்கள் சேகரித்துப் பின்னர் தொடராக எழுதினால் கூடுதல் விவரங்களை பகிர முடியும் என கருதுகிறேன்.

இந்த சமாதிகளை எப்படி கண்டறிந்து தரிசிப்பது என்பதையும் கூட அகத்தியர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

"யுத்தமனே சமாதிகாண மார்க்கஞ்சொல்வேன்
செயலான வகஸ்தியனார் சீடனென்றும்
ஒப்பமுடன் சமாதிமுகம் காணவென்றும்
மெப்புடனே கைதொழுது வேண்டுவாயே
வேண்டியே நிற்கையிலே உன்தமக்கு
பொங்கமுடன் சமாதியது தோற்றங்காணும்"

- அகத்தியர் -

தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்குச் சென்று,அகத்தியரின் சீடனான நான் சமாதிகளை தரிசிக்க வந்துள்ளேன் என்று கரம் கூப்பி வேண்டிக்கொள்ள சமாதி இருக்கும் இடம் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.

குருவருள் வாய்த்தவர்கள் முயன்றால் இந்த சமாதிகளை தரிசிக்கலாம்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


செய்த பாவங்களை செலவில்லாமல் தீர்த்திடும் வழி!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அத்தனை சிறப்பான காரண காரியங்கள் அந்த மலையெங்கும் நிறைந்தும் , மறைந்துமிருக்கிறது.அப்படியான ஒரு தகவலை இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

வினை,எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்.இதன் அடிப்படையில்தான் எல்லாமே இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை எதிர்கொள்கிறான்.இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்பநிலை” அடைவதே உயரிய சித்த நிலை எனப் படுகிறது.இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை,குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.

சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும் பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.அநேகமாய் எல்லா மதங்களிலும் இந்த வினைப்பயன் பற்றிய கூற்றுகளை முன்வைத்து அதை தீர்த்திடவும்,குறைத்திடவும் பல்வேறு உபாயங்களை கூறியிருக்கின்றன.இவை யாவும் செலவு பிடிப்பதும், நடை முறைக்கு சாத்தியமில்லாதவைகளாகவும் இருக்கின்றன.

கர்மவினை குறித்து சித்தர்கள் பல்வேறு விளக்கங்களையும்,உபாயங்களையும் கூறியிருந்தாலும், சதுரகிரி தகவல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த ஓர் தகவலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில் பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார்.

"பெருமையாம் கோரக்கர் குண்டா ஓரம்
பிறங்கும் ஒரு தீர்த்தமதில் நீராடி செய்து
அருமையாம் குண்டாநீர் அள்ளி உண்ண
செய்த பாவவினையெல்லாம் அகன்றுபோமே
ஒருமையாம் உள்ளமதில் கோரக்கர் தம்மை
உன்னியே துதிசெய்ய நல்வாழ்வுண்டகும்"

- காலங்கி நாதர் -

மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம். அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும் அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம் தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும் கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர்.

வாய்ப்பிருக்கிறவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அன்றே சொன்னார்!,சதுரகிரியின் இன்றைய நிலையை!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் வாழ்ந்த காலத்தே இருந்த சமூகத்தின் எண்ணப் போக்கில் இருந்து விலகியவர்களாகவும், தீர்க்கமான முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் இருந்தனர்.அவர்களின் தொலை நோக்குடன் கூடிய அவதானிப்புகளும், தெளிவுகளும் இன்றைக்கும் பொருந்துகின்றன.இதற்கு பல்வேறு ஆதார ஆவணங்களை அவர்தம் பாடல்களின் வழியே காட்டிட முடியும்.

எது எப்படியாக இருந்தாலும் சித்தர்கள் தங்களுக்கிடையே ஒரு ஆழமான பிணைப்புடன் கூடிய அமைப்பினை உருவாக்கி வைத்திருந்தனர் என்பது மட்டும் தெளிவு. ஒருவர் மற்றவரை அங்கீகரித்திருப்பதும், அவர்தம் புகழை உயர்த்திக் கூறியிருப்பதும் இதற்கு சான்றாக கொள்ளலாம்.சதுரகிரி மலையில் வாழ்ந்திருந்த சித்தர்கள் அனைவருமே மற்றவர்களைக் குறித்த உயர்வான கருத்தினையே கூறியிருப்பதன் மூலம் இதனை உணரலாம். அதே நேரத்தில் தங்களின் தேடல்களும், தெளிவுகளும் தங்களைத் தாண்டிய சமூகத்தினரின் கைகளில் சேர்வதை தவிர்த்திருப்பதையும் உணர முடிகிறது.

பேராசைக்காரர்கள், தீயவர்கள் கைகளில் இவை சேர்ந்திடக் கூடாது என பொதுவகைப் படுத்திக் கூறியிருந்தாலும் இதன் பின்னே ஆழமான வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக் கூடும். தங்களை அங்கீகரிக்காதவர்களிடம் தங்களின் தெளிவுகள் சேர்ந்திடக் கூடாது என்கிற தன்மையாகக் கூட இருக்கலாம். சதுரகிரி மலையில் இருக்கும் அற்புத மூலிகை வளங்களைப் பற்றி தங்கள் பாடல்களில் உரைத்திருக்கும் அதே வேளையில் எதிர் காலத்தில் இந்த மூலிகைகளைத் தேடி ஆட்கள் வருவார்கள் என்பதை உணர்ந்திருந்தார்கள். இதற்கு சான்றாய் அகத்தியரின் பாடல்கள் இரண்டினை இங்கே பகிர விரும்புகிறேன்.

அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்கிற நூலில் தனது மாணவரான புலத்த்தியருக்கு கூறுவதாக வரும் பாடல் வருமாறு..

"சித்தான சித்துமுனி சொரூபரப்பா
யின்னமுண்டு உரைப்போம் கேளு
முத்தான புலத்தியனே முடிமன்னா
மூவுலகில் என்றுமுண்டு சித்தர்வர்க்கம்
வெத்தியுள்ள சதுரகிரி வடபாகத்தில்
என்றுமிருப்பார் ரனேகம்பேர் நாதர்தாமும்
பத்தியுடன் நாதாக்கள் தன்னைக்காண
பாருலகில் வெகுமாண்பர் போவார்பாரே"

- அகத்தியர் -

"போவாரே அம்மலையின் அதிசயங்கள்
கோடான கோடிமூலி யனேகமுண்ண்டே
யனைத்தையுமேய ழித்திடவே முனைவர்
மானமுடன் வையகத்தில் மூலிவாழ
நலமுடனே வெகுகாலம் காக்கவேண்டி
நலமுடனே வெகுகால மிருந்துகொண்டு
கோடியாம் மாண்பருக்கு கண்ணில்காணா
குணமுடனே மறைத்தார்கள் நாதாக்கள்தானே"

- அகத்தியர் -

சித்த புருஷர்கள் அழிவில்லாதவர்கள், நிலையானவர்கள் அத்தகைய பெருமக்கள் பெருமையான சதுரகிரி மலையின் வட பாகத்தில் அவர்கள் என்றும் இருப்பார்கள். இவர்களை தரிசித்து அருள் பெற மக்கள் சதுரகிரிக்கு அதிகமாய் வரத் துவங்குவார்கள். அப்படிச் வரக் கூடிய மனிதர்கள் மலையில் இருக்கும் அதிசயமான இடங்களையும், அரிய மூலிகைகளையும் அழிக்கத் தலைப்படுவர் என்று கூறுகிறார்.

மக்கள் எத்தனை பேர் வந்து அழிக்க நினைத்தாலும், சித்தர்கள் இந்த பூவுலகின் நன்மையை கருத்தில் கொண்டு அரிய மூலிகைகளை இன்றும் இவர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைத்திருக்கின்றனர் என்கிறார். பாதுகாக்கும் அளவை மீறிய ஒரு சில மூலிகைகள் மட்டுமே மக்களின் பார்வையில் கிடைக்குமென்றும். மறைத்து வைக்கப் பட்டிருக்கும் மூலிகைகளை மக்கள் அணுக முடியாத இடங்களில் பத்திரமாக இருப்பதாயும் சொல்கிறார்.

இன்றைக்கு சதுரகிரியில் அகத்தியர் கூறிய நிலமைதான் நிதர்சனமாகி இருக்கிறது.பெருமளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளதன் விளைவாய் காடுகள் அழிக்கப் பட்டு,அரிய பல மூலிகைச் செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.எனினும் அகத்தியர் தன் நூலில் அருளியுள்ள படி ஆய்வுகள் மேற்கொண்டால் மறைந்திருக்கும் மூலிகைகளைப் பற்றி அறிய இயலுமென்றே கருதுகிறேன்.

இவ்வாறு மறைக்கப் பட்ட மூலிகைகளை கண்டறிவது பற்றியும் தனது பாடல்களில் அகத்தியர் அருளியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி அவற்றை இங்கே தவிர்க்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரியில் கோரக்கரை இன்றும் தரிசிக்கலாம்?

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையின் நீள,அகலத்தில் அமைந்திருக்கும் சித்தர்களின் இருப்பிடங்களையும் அவற்றிற்கு செல்லும் வழியினையும் கோரக்கரின் பாடல்களின் வழியே பார்த்தோம். இவரின் பாடல்களில் காணப்படும் சித்தர்களின் ஆச்சிரம விவரங்கள் மற்றும் விவரிப்புகளைப் பார்க்கும் போது அவை யாவும் செயல் பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனவே எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் கோரக்கர் விவரிக்கும் சித்தர்கள் அனைவரும் சம காலத்தவர்களாக என்கிற கேள்வியும் எழும்புகிறது.இதன் சாத்திய,அசாத்தியங்கள் விவாதத்திற்கும், மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.

காலத்தால் மிகவும் முந்தியவரும், மூத்தவருமான அகத்திய மாமுனிவரின் கும்பமலை குகையினைப் பற்றியும், அவரை தரிசிப்பதைப் பற்றியும் கோரக்கர் தனது பாடலில் குறிப்பிட்டிருந்ததை பார்த்தோம். அதே வகையில் அகத்திய மாமுனிவரும் கோரக்கரை சதுரகிரி மலையில் தரிசிப்பதைப் பற்றி அருளியிருக்கிறார் என்பது ஆச்சர்யமான தகவல்தானே! அகத்தியர் மட்டுமில்லை, காளங்கிநாதர் கூட கோரக்கரை சதுரகிரியில் தரிசிக்கும் வழியை கூறியிருக்கிறார்.


முதலில் அகத்தியர் தந்து “அகத்தியர்12000” என்ற நூலில் கோரக்கரை பற்றி அருளியதை பார்ப்போம்....

"பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா
பரிவான கோரக்கர் குகையொன்றுண்டு
பத்தியுடன் குகைதனிலே பார்க்கும்போது
யென்றுமே கருவானகோரக்கர் அங்கிருப்பார்
தெளிவான காட்சியது யார்காண்பார்
சிற்பரனே புண்ணியர்க்கு கிட்டும்தானே"

- அகத்தியர் -

பரிவான கோரக்கரின் குகை சதுரகிரியில் இருக்கிறது. என்றும் அந்தக் குகைக்குள் பார்த்தால் கோரக்கர் அங்கே இருப்பார்.தூய மனதுடன் புண்ணியர்களுக்கு அவரது தரிசனம் கிடைக்கும் என்கிறார்.

காலங்கிநாதர் தனது “காலங்கிநாதர் ஞானவித்து ரகசியம் புத்தகம்” என்ற நூலில் கோரக்கரின் இருப்பிடத்தையும்,தரிசனத்தையும் பின்வருமாறு கூறுகிறார்.

"பார்க்கவே கோரக்கர் குண்டாதோன்றும்
தேரப்பா கஞ்சவுடன் மூலி சேர்ததிற் கடைந்து
சித்தர் முனி ஒவ்வொருவருக்கும் ஈவார்
நேரப்பா அதனருகே குகைதான் உண்டு
யென்றும் நிலையாக சிவயோகம் செய்வாரங்கே
கோரப்பா கோரக்கர் தம்மைக் கண்டு
கொண்டவனே ஞானாமிர்தம் உண்டோந்தானே"

- காலங்கி நாதர் -

சதுரகிரி மலையில் கோரக்கர் கஞ்சாவுடன் மூலிகைகள் சேர்த்து அரைத்து சித்தர்களுக்கு கொடைத்த இடமான கோரக்கர் குண்டா இருக்கிறது. அதன் அருகில் அவரது குகையும் இருக்கிறது. அந்த குகையில் கோரக்கர் என்றும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.அவருடைய தரிசனம் பெருபவர்கள் ஞான அமிர்தத்தை உண்டவர்கள் ஆவர் என்கிறார்.

அகத்தியரும், காலங்கி நாதரும் கோரக்கரின் தரிசனம் என்றும் கிடைக்குமென அருளியிருப்பதை அவதானியுங்கள். தூய மனதுடன் அவரை வணங்கும் அனைவருக்கும் அவரது தரிசனம் என்றும் கிடைக்குமெனவும், அப்படியான தரிசனத்தை பெற்றவர்கள் ஞான அமிர்தத்தினை உண்ட பலனை அடைவார்கள் என்பதே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்திடும் செய்தி!

குருவருள் துனையுடன், தூய்மையான உள்ளத்துடன் ஆர்வமும்,அக்கறையும், தேடலும் உள்ள எவரும் இன்றும் கூட அந்த பெருமகனாரை தரிசிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

நாளைய பதிவில் இன்றைய சதுரகிரி பற்றி அன்றே சித்தர்கள் கூறிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி - மலைப் பயணம், நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலைப் பயணம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மலையின் நீள அகலங்களில் ஒருவர் எவ்வித தயக்கமுமில்லாது பயணிக்கும் வகையில் அமைந்திருக்கிறது கோரக்கரின் குறிப்புகள்.சித்தர் பெருமக்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகி இம்மாதிரியான இயற்கை சூழலில் தனித்துவமான ஒரு சமூகமாக வாழ்ந்திருக்க கூடிய சாத்தியங்களை இந்த பாடற் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. வாருங்கள் தன்வந்திரியின் ஆசிரமத்தில் இருந்து இன்றைய பயணத்தை கோரக்கரின் வழிகாட்டுதலில் தொடர்வோம்...

தன்வந்திரியின் ஆச்சிரமத்தின் வடக்கே வந்தால் கிழக்கிலிருந்து ஒரு பாதை வந்து சேரும்,அந்த பாதையின் தெற்கே வேறொரு பாதை இருக்கும் அதில் நடக்க வடக்கு புறமாய் ஒரு கானலை காணலாம். இதற்கு எமபுர கானல் என்று பெயர். இந்த கானலுக்கு தென்புறமாய் கிழக்கில் போகும் பாதை ஒன்று வரும். அதில் கூப்பிடு தூரம் நடக்க வாத மேடும் அதில் வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் இருக்குமென்கிறார். இங்கிருந்து அம்புவிடும் தூரம் வரை சதும்புத் தரை இருக்கிறது. அதற்கு தெற்கே வந்தால் குரு ராஜரிஷியின் வனமும் அதனுள் அவரது ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.

ராஜ ரிஷியின் ஆச்சிரமத்தின் நேர் வடக்கில் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதை ஒன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஒரு மண்மேடு எதிர்ப்படும் அதனருகில் அழகிய செடிகள் சூழ்ந்த வனமிருக்கும். அந்த வனத்தின் நடுவே கொங்கணவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார். ஆச்சிரமத்தின் கிழக்கே போனால் எல்லைக்கல் குட்டம் இருக்கிறது. இங்கிருந்து தெற்கே மூன்று நாளிகை நடக்க தபோவனம் எனப்படும் மாவூற்று வரும், அதன் வடக்கே சென்றால் உதயகிரி எல்லை வருமாம். அங்கே உதயகிரி சித்தர் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

இங்கிருந்து கீழ்பக்கமாய் இறங்கும் பாதைவழியே வர அரை நாளிகை பயணத்தில் மீண்டும் எல்லை குட்டத்திற்கு வந்து சேருமாம். இதன் வடக்கே பிருஞ்சக முனிவரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.ஆச்சிரமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கும் சதம்புத் தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். சஞ்சீவி மூலிகை சதம்புத் தரையில் மட்டுமே வளரும் இயல்புடையதெனெ தெரிகிறது.

இந்த சதம்புத் தரைக்கு மேல்ப்பக்கம் போகும் வழியில் அம்பு விடும் தூரம் சென்றால், ஒரு யானை படுத்திருப்பதை போல் பெரிய பாறை ஒன்று இருக்கும். அந்தக் தென்புறமாக அம்பு விடும் தூரம் நடந்தால் சரளைத்தரை இருக்கிறது.அதற்க்கு நேர் மேற்கில் கூப்பிடு தூரத்தில் மலையோடை இருக்கிறது,அந்த ஓடையினை கடந்து அம்புவிடும் தூரத்தில் யானைக் குட்டியைப் போல வெள்ளை பிள்ளையார் இருக்கிறார்.அருகில் போய் பார்த்தால் பாறை போலவும், தொலைவில் இருந்து பார்க்க பிள்ளையாராகவும் தெரிவார் என்கிறார் கோரக்கர்.

இங்கிருந்து மேற்கே ஒரு நாளிகை நடக்க வாதமேடு வரும்.இந்த வாத மேட்டில் தான் பதினெண்சித்தர்களும் சேர்ந்து ரசவாதம் செய்து பார்த்னர் என்கிறார். அதன் பொருட்டே இந்த இடம் வாதமேடு என அழைக்கப் படுகிறதாம்.இந்த இடத்தின் மகத்துவம் பற்றி தனியே தொடரின் நெடுகில் பதிகிறேன்.

வாதமேட்டின் மேற்கே அம்புவிடும் தூரத்தில் தத்துவ ஞானசித்தர் குகை இருக்கிறதாம்.அதன் வடக்கே அரை நாளிகை நடந்தால் சிறிய குட்டம் வரும், அதன் மேற்கே செல்லும் பாதையில் சென்றால் கன்னிமார் கோவில் வரும், அதன் மேற்கே கூப்பிடு தூரத்தில் மகாலிங்கர் சந்நிதி வருமென்கிறார். சந்நிதியின் நேர் வடக்கே போகும் பாதையில் ஒரு ஆறு இருக்கிறது, ஆற்றின் தென் புறமாய் இரண்டு பாதை பிரிந்து செல்லும், அதில் மேற்கே போனால் நாம் கிளம்பிய இடமான தாணிப்பாறைக்கு செல்லும். வடக்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை நடக்க குளிப்பட்டி பொய்கை இருக்கிறது.இதன் தெற்கே எல்லைக் குட்டம் இருக்கிறது.இதன் அருகில் பால் பட்டை மரமிருக்கிறதாம்.

பால் பட்டை மரத்திலிருந்து மேற்கே போகும் பாதையில் சென்றால் அம்பு விடும் தூரத்தில் திருக்கைப் பாறை இருக்கிறது.அதன் மேற்கே யாகோபுச்சித்தர் ஆச்சிரமம் இருக்கிற்து. ஆச்சிரமத்தின் மேற்க்கே போகும் பாதையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் கடுவெளிச்சித்தர் குகை இருக்கின்றது. இதனை தாண்டி நடந்தால் கருங்கானல் ஒன்று வரும் அதில் நுழையாது மேலே எற அரை நாளிகை பயணத்தில் கசிவுத் தரை இருக்கிறதாம்.

இந்தக் கசிவுத்தரைக்கு வடப்பக்கம் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் தேடிக் கானல் இருக்கிறது. அந்தக் கானலுக்கு கீழ்ப்பக்கம் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் அழுகண்ணிச் சித்தரின் குகை இருக்கிறது. இதன் தெற்கே கூப்பிடு தூரத்தில் சிவவாக்கியரின் குகை இருக்கிறது. இரண்டு சித்தர்களின் குகைகள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான் என்கிறார். இங்கிருந்து மேற்கே போனால் பிரமகிரி எல்கை என்று சதுரகிரிப் பயணத்தை நிறைவு செய்கிறார் கோரக்கர்.

இனி வரும் பதிவுகளில் சதுரகிரி மலையில் நிறைந்தும், மறைந்துமிருக்கும் தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி - ஆச்சிரமங்கள், சஞ்சீவி மூலிகை, கற்பகதரு!

Author: தோழி / Labels: ,

கோரக்கர் அருளிய 'கோரக்கர் பிரம்மஞான தரிசனம்', மற்றும் 'கோரக்கர் மலை வாகடம்' என்கிற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட சதுரகிரி மலைப் பயண வழிக் குறிப்புகள் இன்றும் தொடர்கிறது. சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களின் ஊடாக பொதிந்திருக்கும் தகவல்களை தனியே பிரித்தெடுத்து உரைநடையாக பதிந்து வருகிறேன். எனவே பாடல்களுடன் தகவல்களை பகிர்வதில் உள்ள சிரமத்தினை(தட்டச்சு செய்வது) புரிந்து கொள்ள வேண்டுகிறேன். எதிர்காலத்தில் சதுரகிரி பற்றிய ஆய்வு நூலொன்று எழுதிடும் திட்டமிருக்கிறது, அப்போது விரிவாக பாடல்களுடன் எழுதிட முயற்சிக்கிறேன்.

வாருங்கள், கோரக்கரின் வழிகாட்டுதலுடன் அகத்தியரின் கும்ப மலை குகையில் இருந்து பயணத்தை தொட்ர்வோம்...

குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க “காற்றாடி மேடை”வருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.

ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.

அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.

இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!. குருவருள் இருந்தால் இன்றைக்கும் கூட இவற்றை தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

சஞ்சீவி மூலிகையின் மேற்காக மஞ்சளூற்று இருக்கிறது. அந்த ஊற்றுக்கு வடபக்கம் அம்பு விடும் தூரத்தில் சதம்புத்தரை இருக்கிறதாம், அதன் கீழ்ப்புறம் கசிவுத்தரையில் அழகானந்தர் ஆச்சிரமம் இருக்கிறதாம். அங்கிருந்து நேர் கிழக்காய் வந்தால் மீண்டும் மகாலிங்கர் சந்நிதியில் வந்து சேரும் என்கிறார் கோரக்கர். இங்கிருந்து தெற்கே சென்றால் சன்னாசிவனம் வரும், அதன் தெற்கே போகும் பாதையில் ஒரு நாளிகை நடக்க ஒரு ஓடையும், சங்கிலிப் பாறையும் வருமாம்.

அதனை கடந்து கூப்பிடு தூரம் போனால் அநேக மரங்கள் சூழ பிரம்ம முனியின் ஆச்சிரமம் அமைந்திருக்கும் என்கிறார். ஆச்சிரமத்தின் தெற்குபக்கம் போகிற பாதையில் ஒரு நாளிகை மலை ஏற அதன் சரிவில் காளங்கிநாதரின் குகை எதிர்படும் என்கிறார். அந்த குகையின் சரிவில் அம்புவிடும் தூரத்தில் என்றும் வற்றாத தசவேதி உதகசுனை இருக்கிறதாம். தசவேதி உதகநீர் பற்றிய எனது முந்தைய பதிவினை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

காளங்கி நாதர் குகையிலிருந்து தெற்க்கு பக்கமாய் கூப்பிடு தூரத்தில் தபசு குகை வரும். அந்த குகையிலிருந்து வடக்குப் பக்கம் போகும் பாதையில் சென்றால் மீண்டும் மகாலிங்கர் சன்னிதிக்கே வரும், அதனால் அதை விடுத்து கிழக்குப் பக்கம் சென்றால் அரை நாளிகை தூரம் நடந்தால் கன்னிமார் கோவிலும், பளிங்கர் குடிசையும் வருமாம். அங்கிருந்து தெற்கே அரை நாளிகை தூரம் வந்தால் நந்தீசர் வனமும், அதனுள் அவர் ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.

ஆசிரமத்தின் வடக்கு பக்கமாய் போகும் பாதையில் செல்ல கிழக்கே இருந்து ஒரு பாதை வந்து சேருமாம், அந்த பாதை வழியே அரை நாளிகை நடக்க பளிங்கர் பாறையும் அதன் தெற்கே செல்ல அநேக மரம் செடிகொடிகள் சூழ தன்வந்திரியின் ஆச்சிரமம் இருக்கிறதென்கிறார்.

புசுண்டர்,உரோமரிஷி, யூகிமுனிவர், சுந்தரானந்தர், அழகானந்தர், காளங்கிநாதர், நந்தீசர், தன்வந்திரி ஆகியோரின் ஆச்சிரமங்களுக்கு செல்லும் வழியினை இன்று கோரக்கர் வாயிலாக தெரிந்து கொண்டோம். இந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு இன்றைக்கு கூட இந்த இடங்களை தேடிட முடியுமென கருதுகிறேன்.

ஆச்சர்யங்கள் நாளையும் தொடர்கிறது...!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி - தொடர்கிறது மலைப் பயணம்!

Author: தோழி / Labels: ,

தாணிப் பாறையிலிருந்து கிளம்பி அத்திரி மகரிஷி மற்றும் மச்சமுனிவரின் ஆசிரமங்களின் வழியே தனது ஆசிரமம் வரை நம்மை அழைத்து வந்த கோரக்கர், சதுரகிரி மலையில் வாசம் செய்கிற மற்ற பிற சித்தர்களின் ஆசிரமங்களுக்கு செல்லும் வழியை தெளிவாக கூறியிருக்கிறார். அவர் வழியில் பயணத்தை இன்றும் தொடர்வோம்.

கோரக்கரின் ஆசிரமத்திற்கு தெற்குப் பக்கமாய் அம்புவிடும் தூரத்தில் “மஞ்சள் பூத்தவளை” என்னும் மூலிகை இருக்கிறதாம்,அதன் மேற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அம்புவிடும் தூரத்தில் கசிவுத்தரை இருக்கிறது. இங்கிருந்து வடக்குப் பக்கம் போனால் மேடு ஒன்றும் அதனையொட்டி ஒரு ஓடையும் வரும் என்கிறார். இந்த ஓடைக்கு வடக்கே சமதளமான மண்தரையும் பக்கத்தில் பாறையும் இருக்குமாம்.

இந்த பாறையின் வடக்கே இருக்கும் ஓடையின் வடக்குப் பக்கத்தில் அம்புவிடும் தூரத்தில் அரிய மூலிகையான “அமுதவல்லிச் செடி” இருக்கும். இந்த செடிக்கு நேர்வடக்காய் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதையில் நடந்தால் எதிர் வரும் மேட்டில் இரட்டை லிங்கம் இருக்கும் என்கிறார். இந்த லிங்கத்துக்கு தென்கிழக்கு மூலையில் ஆற்றையொட்டி யாக்கோபு சித்தர் என அறியப்படும் இராமதேவரின் ஆசிரமம் இருக்கிறது. இங்கே “ரோம விருட்சமும்” அதன் பக்கத்தில் நாகபடக் கற்றாழையும் இருக்கிறது என்கிறார். இந்த இரண்டு பத்தியில் குறிப்பிடப் படும் மூலிகைகளை மனதில் கொள்ளுங்கள்,இவற்றின் மகத்துவத்தை இந்த தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.

இராம தேவரின் ஆசிரமத்தில் இருந்து வடக்கே நடந்தால் வரும் சமதளத்தின் கிழக்கே போனால் பசுக்கிடை வரும், அதைத் தாண்டினால் எக்காலத்திலும் வற்றாத நவ்வலூற்று சுனையும் அதனையொட்டி பாறையும் இருக்கிறது. அதில் பாம்புக் கேணி இருப்பதாக குறிப்பிடுகிறார். அதனைத் தாண்டி கிழக்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் வழுக்கைப் பாறையையும் அதற்கப்பால் இருக்கும் பச்சரிசி மேட்டையும் கடந்தால் தெக்கம் பண்ணைமலை வழி வருமாம்.

இந்த வழியே கிழக்குப் பக்கமாக அரை நாளிகை நடந்தால் சின்ன பசுக்கிடையும், ஒப்பில்லா சாயையும் இருக்கிறதாம். இதனைத் தாண்டி கிழக்கே செல்ல பலா மரமும், கருப்பண்ண சுவாமி கோவிலும் இருக்கும் என்கிறார். இந்த கருப்பண்ண சுவாமி கோவிலைப் பற்றி நான் முன்னரே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த கோவிலுக்கு பின்புறம்தான் தைலக் கிணறு இருக்கிறது. இரசவாதம் செய்ய பயன்படுத்திம் தைலம் இந்த கிணற்றில் நிரப்பப் பட்டிருப்பதாக கருதப் படுகிறது. கருப்பண்ண சுவாமியின் அருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த கிணற்றை அணுக முடியுமென்கின்றனர் இது பற்றிய பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.

சக்தி வாய்ந்த இந்த கோவிலை கடந்து போனால் ஆறு ஒன்று வரும், இந்த ஆற்றுக்குள்தான் பேச்சிப்பாறை இருக்கின்றதாம். இதன் வடக்குப் பக்கமிருக்கும் மேடேறினால் அங்கே துர்வாச ரிஷியின் ஆசிரமத்தை காணலாம் என்கிறார். இந்த ஆசிரமத்தின் கிழக்கே அம்புவிடும் தூரத்தில் வெள்ளைப் பாறையும், சந்தன மகாலிங்க சுவாமி கோவில் ஓடையும் இருக்கும். அதைக் கடந்து கிழக்கே பயணிக்க முச்சந்தியான பாதை ஒன்று வருமாம். இதில் தெற்கே போகும் பாதையில் சென்று மேடேறினால் சுந்தரர் கோவில் இருக்கிறது என்றும் அதை வணங்கி தெற்கே ஆற்றங்கரையோரமாய் கூப்பிடு தூரத்தில் மகாலிங்க கோவில் இருக்கிறது.

இதன் வடக்குப் பக்கம் கூப்பிடு தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அரை நாளிகை நடந்தால் பெரிய சுரங்கவழி ஒன்று இருக்கும் என்கிறார். இதில் நுழைந்து அரை நாளிகை நடக்க சந்தன மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது என்கிறார். இந்த கோவிலின் வடக்குப் பக்கத்தில் காளிகானலில் இருந்து நீரோடை வந்து விழுந்து கொண்டிருக்குமாம். அதில் நீராடிய பின்னரே சந்தன மகாலிங்க சுவாமியை வணங்க வேண்டும் என்கிரார்.

சிறப்பு மிக்க இந்த கோவிலில் மானிடர்கள் பூசை இல்லை என்றும் தேவரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் பூசைதான் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் என்ற தகவலையும் கோரக்கர் குறிப்பிடுகிறார். இந்த கோவிலின் தென்மேற்கு மூலையில் சட்டை முனியின் குகை இருக்கிறது. அந்த குகையின் தெற்கே கூப்பிடு தூரத்தில் வெண்நாவல் மரமும் அதன் இடது புறமிருக்கும் மண்மலையின் தெற்கே சமதளத்தில் வனபிரமி என்ற அரிய வகை மூலிகையும் வளர்ந்திருக்கும் என்கிறார்.

சட்டை முனி குகைக்கு நேர் கிழக்காக வரும் பாதையில் ஒரு நாளிகை தூரம் சென்றால், வடக்கே செல்லும் பாதையில் போய் சேரும் அதில் ஒரு நாளிகை நடக்க கும்ப மலை வரும் என்கிறார். இந்த கும்ப மலை அருகே இருக்கும் ஒரு பெரிய குகையில்தான் அகத்தியர் வாசம் செய்கிறார் என அகத்தியரின் வாசலுக்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கிறார் கோரக்கர்.

பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது, வாசிப்பின் சுவாரசியம் கருதி நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி - தொடரும் மலைப் பயணம்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் துவங்கும் மலைப் பயணம், மலையின் மேல் கோவில் கொண்டிருக்கும் சுந்தரமகாலிங்கர் சந்நிதியையும் தாண்டி மலையின் நீள அகலங்களில் பயணிக்கிறது.உடலில் வலுவும், உள்ளத்தில் உறுதியும் இருக்கும் எவரும் இன்று மலையில் எளிதாக சென்று வரலாம்.அதற்கான வசதி, வாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் மனித சஞ்சாரமே இல்லாத அடர்த்தியான காடுகளைக் கொண்ட இந்த மலையில்,பழக்கமில்லாதவர்கள் வழி தவறி தொலைந்து போய்விடும் அபாயம் இருந்திருக்கும். அதனைத் தவிர்க்கவே இம்மாதிரியான வழிக் குறிப்புகள் அருளப் பட்டிருக்க வேண்டும்.கோரக்கர் தனது சீடர்களுக்காகவும் அவர் வழி வந்தவர்களை மனதிற் கொண்டு இவற்றை அருளியிருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

நேற்றைய பதிவில் அத்தரி மகரிஷி ஆசிரம் வந்துவிட்ட நாம் இன்றும் கோரக்கரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மேலேறுவோம்.ஆசிரமத்திலிருந்து கிழக்காக இருக்கும் பாதையில் மேலேறி அரை நாளிகை நடந்தால் கோணவாசல் பாதை வரும், அதைத் தாண்டி மேடேறிப் போனால் பசுமிதிப் பாறையும், அந்தப் பாறைக்குக் கிழக்கே கணபதியின் உருவத்தை ஒத்த ஒரு பாறை இருக்குமாம்.அதை வணங்கி அதன் கிழக்குப் பக்கம் செல்லும் பாதையில் அரை நாளிகை நடந்தால் பாதையின் தெற்குப் பக்கத்தில் அம்பு விழும் தூரத்தில் அருட்சித்தர் மச்சமுனியின் ஆசிரமம் இருக்கிறது என்கிறார்.

மச்ச முனிவரின் ஆசிரமத்தின் தெற்குப் பக்கமாய் நடந்தால் கூப்பிடு தூரத்தில் வெள்ளை புனல் முருங்கை மரம் எதிர்படுமாம்,அதன் இடதுபக்கம் அம்புவிடும் தூரத்தில் சமதளமான பாறையை காணலாம்.அந்த பாறையின் தெற்குப் பக்கம் இருக்கும் ஓடையை தாண்டினால் அம்புவிடும் தூரத்தில் காவி தெரியும்,அதற்கு கீழ்பக்கம் பேய்ச்சுரை கொடி படந்திருக்கும் என்கிறார். இந்த கொடிக்கு தெற்குப் பக்கம் இருக்கும் பாதையில் நடந்தால் குருவரி கற்றாழை எதிர்படுமாம்,அதற்கு நேர் வடக்காய் சென்றால் கூப்பிடு தூரத்தில் கிழக்கே ஒரு பாதை தென்படும்,அதிலிருக்கும் மேட்டில் ஏறினால் சமதளமாக இருக்கும் என்கிறார்.அதில் அரை நாளிகை தூரம் நடந்து வநது தெற்குப் பக்கமாய் பார்த்தால் தனது ஆசிரமம் தெரியும் என்கிறார் கோரக்கர்.

கோரக்கர் தனது ஆசிரமத்தில் வசித்திருக்கவில்லை என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். ஆசிரமத்தின் நேர் வடக்கில் இருக்கும் ஆற்றில் இறங்கி தெற்குப் பக்கம் பார்த்தால் மலைச் சரிவில் தனது குகையை பார்க்கலாம் என்கிறார்.அதன் கிழக்கே ஆற்றின் நடுவில் கஞ்சா கடைந்த குண்டா இருக்கும் என்றும்,அதன் கிழக்கே வற்றாத பொய்கை ஒன்று இருக்குமாம்.எத்தனை ஆச்சர்யமான வழிகாட்டல்!!

இதுவரையிலான பயணத்தில் நமக்கு தெரிவது, அத்திரி மகரிஷி, மச்சமுனி,கோரக்கர் போன்ற பல சித்த பெருமக்கள் தங்களுக்கென தனித்தனியான அமைப்புகளை கொண்டிருந்திருக்கின்றனர்.இந்த ஆசிரமங்களில் அவர்களுடன் சீடர்கள் உடனிருந்திருக்க வேண்டும்.இவர்கள் அனைவரும் சமகாலத்தவர்களா அல்லது அவர்களின் வழி வந்தவர்கள் அந்தந்த ஆசிரமங்களை நிருவகித்து வந்தனரா என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது.

கூப்பிடு தூரம், அம்புவிழும் தூரம், நாளிகை நடைபயணம் என்பதான தூர அளவைகள், திசைகள், ஆங்காங்கே இருக்கும் பாறைகள்,சுனைகள்,ஆறுகள்,ஓடைகள் என்பதான அடையாளங்களை வைத்துக் கொண்டு நகரும் இந்த பயணத்தில் மேலும் சில சுவாரசியங்கள் காத்திருக்கின்றது.

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறுத்தி, நாளைய பதிவில் சுந்தரமகாலிங்கம் சந்நிதியை தேடி அடைவோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சதுரகிரி - மலைப் பயணம்!

Author: தோழி / Labels: ,

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.

காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.

கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

சதுரகிரி மலையினை அடைந்திட நான்கு வழிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று வழிகள் மிகவும் சிரமமானது என்றும், தெற்குபகுதியில் நீருள்ள் ஓடை ஒன்று ஆற்றுடன் இணைகிறது. இந்த இடத்திற்கு தோணிப் பாறை என்று பெயர். அந்த இடமே சதுரகிரியை அடைய இலகுவான நுழைவாயில் என்கிறார் காளங்கி நாதர். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிடப் பட்ட தோணிப்பாறை இன்று மருவி தாணிப்பாறையாகி இருக்கிறது.

இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...

தாணிப் பாறையில் இருந்து வடக்கு முகமாய் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் கருப்பண்ணசாமியை வணங்கி,அவர் அனுமதியோடு பயணத்தை துவங்க வேண்டுமாம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் “குதிரை குத்தி பாறை”யும், அதன் வடக்கு பக்கம் கூப்பிடு தூரத்தில் “படிவெட்டி பாறை” என்ற ஒன்று இருக்கிறதாம். இங்கிருந்து அம்பு விடும் தூரத்தில் காட்டாறு ஒன்றினை காணலாம் என்றும், அதன் வடக்குப் பக்கமாய் அரை நாளிகை நடக்க கவுண்டிண்ய ஆறு வரும் என்கிறார்.

இந்த ஆற்றின் மேற்குப் பக்கமாய் பத்தடி தூரம் நடந்தால் அத்தி ஊற்று இருக்கிறது என்றும், இந்த ஊற்றின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் பாறையில்தான் அத்திரி மகிரிஷி யாகம் செய்தார் எனவும், அதற்கு மேற்குப் பக்கத்தில் அவருடைய ஆசிரமம் இருந்தது என்கிறார் கோரக்கர்.

சித்தர்கள் கூறிய இந்த வழியினை ஆவணப் படுத்துவதன் மூலம் பல அரிய மூலிகைகளின் இருப்பிடத்தை கண்டறியும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.கோரக்கர் அருளிய இந்த பாதையில் மலையேறியவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து விவரங்களை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.

ஒரு புதிரை மெல்ல கட்டவிழ்ப்பதைப் போல எத்தனை துல்லியமான விவரனைகள், இன்றைக்கும் இந்த விவரங்களை வைத்துக் கொண்டு மலையேற முடியுமென்றே தோன்றுகிறது. அத்திரி மகிரிஷியின் ஆசிரமத்திற்கு அழைத்து வந்த கோரக்கர் அடுத்து நம்மை மச்சமுனியின் ஆசிரமத்திற்கு வழி கூறி அழைத்துச் செல்கிறார், அங்கிருந்து தனது ஆசிரமம் வந்து சேருவது பற்றிய விவரங்களை பதிவின் நீளம் கருதி நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆச்சர்ய பூமி - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:

சித்தர்கள் தங்களின் தேடல்களின் பொருட்டு வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகி காடுகள், மலைகள் என இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்திருந்தனர். எவரும் எளிதில் அணுகிட இயலாத தனிமையான சூழலை விரும்பியவர்களாக இருந்தனர் என்பதற்கான பல குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் சித்தர் பெருமக்கள் வாழ்ந்திருந்த மலைகளையும் அதன் சிறப்புகளையும் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். அந்த பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அந்த தொடரின் இறுதியில் சித்தர்களின் தலைமையகமெனக் கருதப்படும் ஒரு மலையினைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுவதாகக் கூறியிருந்தேன். அந்தவகையில் இந்த புத்தாண்டில் சித்தர்களின் அருட்பூமியாக விளங்குவதும் சிவன்மலை என்றும் சதுரகிரி என்றும் அழைக்கப்படும் ஆச்சர்ய பூமி பற்றி இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.சதுரகிரியின் அருமை பெருமைகளை விஸ்தாரமாக எழுதிக் கொண்டு போனால் மாதக் கணக்கில் நீளும். இந்த தொடரை எழுதிடும் முன்னர் எனது தனிப்பட்ட சில விமர்சனங்களை முன்வைத்திட விரும்புகிறேன். இவற்றை விமர்சனங்கள் என்பதை விட ஆதங்கம் என்று அழைத்தாலும் தகும். இந்த எண்ணங்களின் நீட்சியாகவே இந்த தொடரை எழுதிட நினைத்திருக்கிறேன்.

சதுரகிரி பற்றிப் பலரும் பல்வேறு ஊடகங்களில் தங்களின் அனுபவங்களை, பார்வைகளை ஆக்கங்களாய் பதிவு செய்திருக்கின்றனர். பெரும்பாலும் இத்தகைய ஆக்கங்கள், வர்த்தக நோக்கில் நூலின் விற்பனைத் தன்மையை மட்டும் முன்வைத்து எழுதப் பட்டவையாக இருக்கிறது. வாசிப்பாளரின் ஆர்வத்தையும், கவனிப்பினையும் ஈர்க்கும் நோக்கத்தில் சில ஆக்கங்கள் சதுரகிரி குறித்த மிகையான தோற்றத்தினை வலிந்து உருவாக்கிடுவதாக நினைக்கத் தூண்டுகிறது.

தொடர்ச்சியான இத்தகைய மிகைப் படுத்துதல் மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதைகளை முன்வைப்பதன் மூலம் சதுரகிரியை ஒரு மர்ம பூமியாகவும், அமானுஷ்ய மனிதர்களின் வசிப்பிடமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக மலையில் நிறைந்திருக்கும் இயற்கையின் அற்புதங்களை அறிவார்ந்த வகையில் அணுகிட இயலாத வகையில் ஒரு மனத் தடையினை உருவாக்குவதாகக் கருதுகிறேன்.

சதுரகிரியினை ஒரு மத அடையாளமாய் நிறுவிடுவதில் காட்டிடும் வேகத்தினை அங்கே வாழ்ந்த சித்தர் பெருமக்களின் அருமை பெருமைகளை ஆய்ந்தறிந்து மனித குலத்திற்கு பயனுள்ளதாக ஆக்குவதில் செலுத்தினால் புண்ணியமாய் போகும் என்பதே என்னுடைய ஆதங்கம்.

வலையுலகில் ஏராளமான அன்பர்கள் சதுரகிரிக்கு நேரடியாக சென்று வந்த தங்களின் அனுபவத்தை விரிவாகவும், விளக்கமாயும் படங்களுடன் பகிர்ந்திருப்பதை நீங்கள் காண முடியும். இத்தகைய ஆக்கங்கள் உள்ளதை உள்ளவாறும், கண்டதை கண்டவாறும் பதிந்திருப்பதை காணமுடியும். என் சகபதிவர்களின் இந்த நேர்மையான அணுகு முறையினை நான் பலமுறை பெருமையோடு நினைத்துப் பார்த்ததுண்டு. நானும் அவர்களின் வழியில் நின்று இத்தொடரை எழுதிட தீர்மானித்திருக்கிறேன். இதுவரையில் இலங்கையினைத் தாண்டி வெளியே செல்லும் வாய்ப்பு இல்லாவிடினும், என்னுடைய பாட்டனார்ரின் சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களில் சதுரகிரி மலையினை பற்றி தகவல் கொண்ட புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன.

சதுரகிரிமலை பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைத் தொட்ட விவரங்களை மட்டுமே இந்த தொடரில் முன்னெடுத்துச் சொல்ல தீர்மானித்திருக்கிறேன். நிச்சயமாக இதுவரை பலரும் அறிந்திடாத அல்லது பலரும் கேள்விப் படாத பல ஆச்சர்ய தகவல்களை இந்த தொடரில் நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

இதை வாசிக்கும் நீங்கள் இந்த பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் அறியத்தர வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அருளும், பொருளும் நல்கும் அரிய யந்திரம்

Author: தோழி / Labels: ,இந்த புத்தாண்டு நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் அருளும், பொருளும் நல்கும் யந்திரம் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த யந்திரம் கருவூராரால் தனது கருவூரார் மாந்திரீக காவியம் என்ற நூலில் அருளப் பட்டிருக்கிறது.தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முய்ற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த யந்திரம் உதவுமென்கிறார் கருவூரார்.

மேலே இருக்கும் படத்தில் இருக்கும் அறுங்கோனமும் அதனூடாக அமைந்திருக்கும் ஸ்ரீம் எனற எழுத்துக்களைக் கொண்ட எளிய யந்திரம்தான் இது. மையத்தில் பலன் வேண்டுவோரின் பெயரை பொறித்தால் இந்த யந்திரம் முழுமையடைந்து விடும். இந்த யந்திரத்தினை கீறும் முறையினை கருவூரார் பின்வருமாறு விளக்குகிறார்.

மூன்ற்ங்குல சதுரமான தங்கம் அல்லது வெள்ளி அல்லது செப்புத் தகடு இந்த யந்திரம் கீறிட உகந்தது.தகட்டில் யந்திரத்தை கீறிட செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து சிவப்பு நிற மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும்.

"ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மகா லட்சுமி சுவாஹா"

இவ்வாறூ தொடர்ந்து பதினோரு நாட்கள் இம்மாதிரி பூசை செய்து வந்தால் யந்திரம் உருவேற்றப் பட்டு சக்தி கொண்டதாக ஆகிவிடுமாம். இத்தகைய சக்தி வாய்ந்த யந்திரத்தினை வர்த்தகம் அல்லது தொழில் ஸ்தாபங்களில் வைத்து தினமும் காலையில் பூக்கள் தூவி மேலே சொன்ன மந்திரத்தினை மூன்று தடவைகள் மட்டும் கூறி வந்தால் அந்த இடத்தில் அருளும், பொருளும் பெருகும் என்கிறார் கருவூரார்.

மிகவும் எளிதான இந்த யந்திரத்தை பயன்படுத்தி பலனடைய எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கட்டும்.

மீண்டுமொரு முறை எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...